கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 5, 2022
பார்வையிட்டோர்: 2,321 
 
 

(1967 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ஆவணி மாதத்து முதலாவது முகூர்த்த நாளிற் கனகசுந்தரம் என்ற சுந்தரத்திற்கு மணவினை முற்றியது . அந்தக் கிராமத்தைப் பொறுத்தவரையில் அது ‘மாலை தாழ்சென்னி வயிர மணித் தூணத்து நீலவிதானத்து நித்திலப் பூம்பந்தர்க்கீழ்’ நடந்தேறிய சிலப்பதிகாரத் திருமணந்தான். ஏனென்றால் அந்தக் கிராமத்திலேயே சுந்தரம் ஒருவன் தான் கொழும்பிலே பெரிய உத்தியோக மாக இருந்தான்.

இரண்டு வாரங்களின் பின் அவன் தன் மனைவியைப் பரிய நேரிட்டது.

அப்பிரிவைப் பொருள் வயிற் பிரிவு என்று சங்க இலச்கியக் காரணங் கற்பிக்க அவ்வூரிலே பண்டிதர்கள் இல்லை.

இருப்பினும் அந்தக் காரணத்தைக் கற்பிக்க அவர்களால் முடியாது. ஏனென்றால் ‘உடன்போக்கிற்கு’ அவர் மனைவிக்கு விருப்பமாகவே இருந்தது. ‘தேன் மயங்கு பாலினும் அவர் நாட்டுக் கூவற்கீழ் மானுண் டெஞ்சிய கலிழி நீர் இனிய’ என்று சொல்லிய ஐங்குறு நூற்றுக் காதலி போலக் கொழும்பு மாநகரிற் சொட்டிக் கொண்டிருக்கும் குழாய் நீர் தன் கிராமத்துப் ‘புள்ளணிந்த ஏரி’ நீரைவிட இனியது என்று புதுமணப் பெண் என்ற அந்த நிலையிலும் பெருமையாகச் சொல்லிக் கொள்ள நாணமாக இருக்கவில்லை. ஆயின் என்ன செய்வது? உடன்போக்கு நிகழ்த்துவதற்கு சுந்தரத்திற்குக் கொழும்பிலே ஒரு ‘கோழிக்கூடு’ தானும் கிடைக்கவில்லை. இந்த நிலையிற் சௌந்தரியை விட்டுத் தனிமையாகவே கொழும்புக்குச் செல்ல வேண்டி யிருந்தது.

இரண்டு மாதங்கள் ஆகிவிட்டன.

இயந்திர கதியில் இயங்கும் கந்தோர்க் கெடுபிடியில் பகற்போது கழிய, மாலை மலரும் நோயை வீடு தேடி அலைவதில் மழுங்கடித்து, அந்த அலைச்சலிற் கட்டிலில் வந்து விழுந்தால் அடித்துப் போட்ட பாம்புதான்! ஆயின் அதிகாலையிலேயே விழிப்பு வந்துவிடும். இருநூறு மைல்களுக்கப்பால் தன்னையே நினைத்து ஏங்கிக் கொண்டிருக்கும் புது மனைவியின் சௌந்தர்ய முகம் அவன் நினைவுகளில் நெளிந்து…….

ஆஹா! அந்த நினைவுகளில் ஏக்கமும் விரக்தியும் கலந்திருப்பினும் எத்தனை சுகம்!

கூம்பிய இதழ்கள் அவிழ்வது போலக் காலை மலருகையில், புலரிக் காலத்தின் இதமான குளுமையிற் துயில் கொள்ளவும் முடியாமல், ஆனால் அவ்வறையிற் தன்னோடு வதியும் மற்றவர்களுக்கு இடைஞ்சலாக எழுந்து நடமாடவும் முடியாமற் படுக்கையில், ‘அறி துயிலிற்’ கிடந்தபடியே நினைவுகளை நீள விடுவதிற்தான் எத்தனை சுகம்! வாலிப வெள்ளத்தின் உணர்ச்சிச் சுழிப்பிற் பிணைக்கப்பட்ட தெப்பக்கட்டைகளாய் இரண்டு வாரங்கள் மிதந்து சுகித்த மெய்யுணர்வுகளை விட, இந்தச் சொர்ப்பனா சுகத்தில் எத்தனை கிறக்கம்!

அந்தப் போதை தெளிவடையுமுன், அடுத்த படுக்கையில் இருப்பவர் எழுந்ததும் சுந்தரமும் எழுந்திருந்து கடிதம் எழுதுவான். அது நித்திய கருமம். அடுத்த ஜனவரி பிறக்கமட்டும் தனக்கு ஒரு நாட்கூட லீவு இல்லை என்ற ஆதங்கம் கடிதங்களில் ஊடுபாவாக ஓடும். அதைவிட மற்றையதெல்லாம் பித்தர் சொன்னவும் பேதையர் சொன்னவும்… நமக்கேன்?

கடிதத்தை முடித்த பின்னர் மீண்டும் கந்தோர்வீடுதேடல்- வரட்சி. ஏக்கம். அலைச்சல்- நித்திரைசொர்ப்ப னம்…

ஊரிலே மாரிக்காலம் தொடங்கிவிட்டது. பிள்ளை யார் கோயிலின் தலைவாயிலில் அணிவகுத்து நின்ற கொன்றை மரங்கள் பொன்சொரியத் தொடங்கிவிட்டன. அத்தனை கார்த்திகைக் கொடிகளும் எங்கிருந்துதான் பீறிக்கொண்டு கிளம்பினவோ, கிட்ட இருப்பனவற்றை யெல்லாம் தழுவிக் கொண்டு சடைத்து, விரல் விரல் களாய்த், தீக்கொழுந்துகளாய்ப் பூத்து ‘செங்காந்தள்’ என எந்தப் பண்டிதராலும் அழைக்கப்படாமலேயே கருகி வீழ்ந்து கொண்டிருந்தன. கொத்துக் கொத்தாய்த் தோரணங் கட்டியது போலத் தொங்கும். மஞ்சள் வண்ண வாகை மலர்களிற் பொன்வண்டுகள் அணைய, அம்மரங்களின் கீழே நிலத்தோடு ஒட்டிச் சடைத்துக் கிடந்த தும்பை மலர்களில் வண்ணாத்திப் பூச்சிகள் மேய்ந்த ன….

வேலையற்ற பகற்பொழுதுகளும் நீண்ட இரவுகளும்… வானம் கண்ணீர் வடித்தது சௌந்தரிக்காகவோ?

கடிதத்தைத் தபாற் பெட்டியிற் போட்டுவிட்டு பவானிலே இடியப்பத்திற்காகக் காத்துக்கொண்டிருந்த இடைநேரத்தில் சுந்தரம் தன் நாட்குறிப்பைப் புரட்டி னான். கடைசிப் பக்கத்திற்கு முந்திய இதழில் அவன் லீவு விபரங்கள் இருந்தன. ஏதோ ஒரு நம்பிக்கையில் லீவு நாட்களைக் கூட்டிக்கொண்டு வந்தான சுந்தரம். க கவீனலீவு இருபது நாட்களும் சரி. ஆனாற் சமயோசித விடுதலை…? சுந்தரம் கூட்டினான்.

மீண்டும்…. இருபதே நாட்கள் தான். இன்னும் ஒருநாள் இருக்கிறதே…

பரிசாரகப் பையன் இடியப்பம் கொண்டு வந்து வைக்கிறான். சுந்தரம் மீண்டும் டயரியைப் பார்க்கிறான்.

அன்று காலைச் சாப்பாடு சாப்பிட்டதாகச் சுந்தரத் திற்கு நினைவு இல்லை. ஆயினும் ஐயர் அவன் கணக்கிற் பற்று எழுதிக் கொண்டார்.

கந்தோருக்கு விரைந்தான். கந்தோரிலே லீவு விபரங்களை ஒருதடவைக்கு இருதடவை ‘செக்’ பண்ணிப் பார்த்தபோது இன்னமும் ஒருநாள் லீவு இருக்கவே இருந்தது.

ஜனவரிக்கு இன்னமும் இரண்டு வாரங்கள் இருக் கின்றன. அதற்குள் இந்த ஒருநாள் லீவை ஏன் வீணாக்க வேண்டும்?

‘அடுத்த போயாவிற்கு வருகிறேன்’ என்று, அன்று தன் இரண்டாவது கடிதத்தை எழுதினான் சுந்தரம்.

இடையிலே நந்தியாக நின்ற ஒரு நாளில் சுந்தரம் வீடுதேடி அலையவில்லை. காலையில் அனுபவிக்கும் நினைவின்பத்தை அன்றைய இரவு முழுவதுமே அனுபவித்தான்.

குழல் விளக்குகளின் ஒளிப் பிரவாகத்திற் பகட்டிக் கொண்டிருந்த கோட்டைப் புகையிரதஸ்தானத்தின் முத லாம் மேடையில் நின்ற புகையிரதம், கூவென்று நீளக்குர லெடுத்துக் கூவிவிட்டுத் ‘தமிழ்கூறும் நல்லுலகை’ நோக்கித் தன் நீண்ட பயணத்தைத் தொடங்கிற்று. தன்னை வழிய னுப்ப வந்த தன் விடுதி நண்பர்களுக்குக் கைகளை ஆட்டி விடை கொடுத்தனுப்பிய சுந்தரம், தன் இருக்கையில் அமர்ந்து கொண்டு ‘கிட்பேக்’கைத் திறந்து பார்த்தான். அதற்குள்ளே சௌந்தரத்திற்கென்று வாங்கிய கைத்தறிச் சேலை பத்திரமாக இருந்தது. பையை மூடிவைத்து விட்டுச் சுந்தரம் சிகரட் பற்றவைத்துக் கொண்டான். வண்டி ஓடிக்கொண்டிருந்தது.

வண்டி மருதானையைத் தாண்டுமுன்பே சுந்தரம் ஊருக்குப் போய்விட்டான்.

இரண்டு வாரங்களாகச் சௌந்தரத்தோடு சுகித்த ஒவ்வொரு கணமும் ஒவ்வொருயுகமாய்…

யுகமே கணமாய், கணமே யுகமாய்… – நினைவுக் கொடிகளைப் படீரென்று அறுத்தெரியும் குலுக்கோடு வண்டி நின்றது.

எது ஸ்ரேசன் பொல்காவலையா?” “இல்லை . மிரிகம, என்றார் சகபிரயாணி. “இங்கு நிற்கிறதில்லையே” “ஒரு மாதமாக இங்கேயும் நிற்கிறது” புனுகு பூனையின் குறுகுறுப்போடு பாத்ரூமூக்குச் சென்றவன் மீண்டும் வந்து தன் பெட்டிக்கு அப்பாலும் நடக்கிறான்

போசன சாலை. சிலர் சாப்பிடுகிறார்கள், சிலர் குடிக்கிறார்கள். சுந்தரத்திற்கு ஏதாவது செய்ய வேண்டும் போல ஒரு குறுகுறுப்பு.

ஒரு – ஜின் வாங்கிக் குடிக்கிறான. புது அனுபவம். நன்றாகவே இருக்கிறது!

ரயில் ஓடிக்கொண்டேயிருக்கிறது. அடுத்த ‘ஜின்’ தலையை என்னவோ செய்கிறது. தள்ளாடிக் கொண்டு தன் இருப்பிடத்திற்கு வந்தவனுக்கு உலகமே தெரியவில்லை .

அதிகாலையிற் புகையிரதம் திருக்கோண மலையை அடைந்தபோது சகபிரயாணி அவனை எழுப்பிவிட வேண்டியிருந்தது.

வாடகை மோட்டாரிற் துறைமுகப் பாலத்திற்கு வந்தபோதும் நன்றாக விடியவில்லை. தெருவிளக்குகள் அழுது வடிந்து, நட்சத்திரங்களே அற்ற மாரிக்கால இருளை விரட்டியடிக்க முனைந்து கொண்டிருந்தன. சில்லென்று ஊதும் வாடைக் கடுவலில் பட்டினம் முழு வதுமே விறைத்து விட்ட பான்மையில் முடங்கிக் கிடந்தது.

ஆறரை மணிக்குத்தான் முதற் படகு. சுந்தரத்திற்கு அலுப்பாகவும் எரிச்சலாகவும் இருந்தது. இருநூறு மைல்களை இலேசாகத் தாண்டியாகி விட்டது. ஆனால் மோட்டார்ப் படகில் போகவேண்டிய இந்த எட்டு மைல்களும்…?

மூதூர் ஜெற்றியிலே கார் இருக்குமோ? மைத்துனன் சங்கரன் சைக்கிளோடு காத்து நிற்பானோ?

துறை முகத்தினுள்ளே அணிவகுத்து நின்ற கட்பல் களில் பகட்டி மினுக்கும் காந்தவிளக்குச் சரங்கள், கடலில் இருந்து முளைத்தெழுந்த மதிற்சுவர் போன்ற மலை களினால் அரண் செய்யப்பட்டு நிற்கும் வனப்பு மக்க துறைமுகம், அம்மலையரண்களுக்கு அப்பால் மாவலி யின் செம்புலப் பெயல் நீர், கொட்டியாபுரக்குடாவின் கருநீலக் கடலில் சங்கமிக்கையில் ஏற்படும் வண்ணக் கலப்பு.

முன்பெல்லாம் பெருமையாக நினைத்துக்கொண்ட எல்லாமே வெறுப்பாய் எரிச்சலாய்…

கிழக்கு வெளுக்கையில் தேநீர்க் கடைக்காரன் கடையைத் திறந்தான்.

சுந்தரம் கோப்பி குடித்துச் சிகரட்டையும் பற்ற வைத்துக் கொண்டான்.

துறைமுகப் பாலத்து மணிக்கூடு ஓடாமலே நிற் கிறதா?

சுந்தரம் செய்வதறியாது பேப்பருக்காக அலைந்தான். காலைப் பத்திரிகையை வாங்கிக்கொண்டு வருகையில் துறைமுகம் கலகலப்படைந்து விட்டது.

சில்லென்று ஊதும் வாடையைக் கிழித்துக்கொண்டு மோட்டார்ப் படகு சென்றது. ஆனாலும் அது அங்குலம் அங்குலமாக நகர்வதுபோல இருந்தது சுந்தரத்திற்கு.

அலைகள் முத்தமிடும் மலை மதிளைத் தாண்டித் துறைமுகத்துக்கு வெளியே வந்ததும், அதோ ஊர் கண்ணுக்குத் தெரிகிறது. மகாவலித் தேவி தன் கணவனைத் தழுவி முயங்குமிடம் அதோ கலங்கலாய்….

வாடைக்காற்று ஊதிக் கொண்டேயிருக்கிறது. துறை முகத்தினுள்ளைவிட, வங்காளப் பெருவெளியில் ஓவென்ற இரைச்சலோடு சண்டமாருதமாய் வீசுகையில் தென்னை உயரத்திற்குக் கடல் அலைகள் எழுந்து பதிந்து மோட்டார்ப் படகைத் தாலாட்டியும் ஏற்றிக் கொண்டும் இருக்கிறது. வினாடிகள் நகருகின்றன. அதோ ஊர். ஆனால் இந்தப் படகு எங்கே போகிறது?

ஆட்டத்தையும் குலுக்கலையும் தவிர்ப்பதற்காசுக் ‘கடலோடி’யான வல்வெட்டித் துறைத் ‘தண்டயல்’, காற்றோடு இணைந்து, அது கிளப்பும் பேரலைகளின்:

பக்கவாட்டில், கழைக் கூத்தாடியின் கமனத்தோடு படகைச் செலுத்துவது சுந்தரத்திற்குப் பழக்கப் படாததா?

ஆயினும் அவனுக்குப் பொறுக்கவில்லை. அவசரம்! “ஏன் தண்டேல் சுத்தி வளைக்கிறீங்க. குறுக்கால வச்சிப் பிடியுங்களன்”

வாடைக் கடல் கிளாக்கர். “ஒருகால், அரைமணி பிந்தினாலும் பரவாயில்லை. கொஞ்சம் மேல போய்ச் சாச்சி விட்டா ஆட்டம் அலைச்சல் இல்லாமப் போகலாம்.”

சுந்தரம் செய்வதறியாமற் பத்திரிகையை எடுத்துப் படிக்கிறான். இல்லைப்படிக்க முயல்கிறான். அதிலே என்னதான் இருக்கிறது? சிகரட் பற்ற வைக்க வேண்டும் என்ற உணர்வு! நெருப்புப் பெட்டி இல்லை.

பக்கத்திற் தன்னை மறந்து மாத சஞ்சிகை ஒன்றிற் புதைந்திருந்தவரிடம் பவ்வியமாகத் தீப்பெட்டி கேட்கிறான்.

அவர் சஞ்சிகையை விரித்தபடியே நெருப்புப் பெட்டியை எடுக்கிறார்.

அச்சஞ்சிகையிலே கன்னத்தில் கையூன்றியபடி ஒரு பெண், சௌந்தரத்தைப் போல. அடுத்த பக்கத்தில் பாய் புரவித் தேர் ஒன்று அதனடியிற் பெரிய எழுத்துக்களில் எழுதப்பட்டிருந்தது.

நூல் நவின்ற தேர்ப்பாக நொவ்விதாச் சென்றிடுக
தேன் நவின்ற கானத்தெழில் நோக்கி-தான் நவின்ற
கற்புத்தாள் போர்த்துக் கவுள் மிசைக் கையூன்றி
நிற்பள் நிலையுணர்க நாம்
– ஐந்திணை ஐம்பது

சுந்தரம் சிகரட் பற்ற வைக்கையில் அவன் இதழ்க் கடைகளில் குறு நகை நெளிந்தது. அந்தப் பழைய வெண்பாக்காரன் அவனைக் கேலி பண்ணுகிறானா?

– பாடும் மீன் ’67

– ஒரு காவியம் நிறைவு பெறுகின்றது (ஐம்பது சிறுகதைகள்), முதற் பதிப்பு ஒக்டோபர் 1996, மித்ர வெளியீடு, சென்னை

Print Friendly, PDF & Email
வ. அ. இராசரத்தினம் (சூன் 5, 1925 - பெப்ரவரி 22, 2001) புகழ் பெற்ற ஈழத்து சிறுகதை, நாவல் எழுத்தாளர். சுருக்கமாக வ. அ. என அறியப்படுபவர். ஈழநாகன், கீழக்கரை தேவநேயப் பாவாணர், வியாகேச தேசிகர் என்னும் பல புனைபெயர்களிலும் எழுதியுள்ளார். திருகோணமலை மாவட்டம், மூதூரைப் பிறப்பிடமாக கொண்ட இவரின் பெற்றோர் வஸ்தியாம்பிள்ளை, அந்தோனியா. தாமரைவில் றோமன் கத்தோலிக்கப் பாடசாலையிலும் பின்னர் மூதூர் புனித அந்தோனியார் பாடசாலையிலும் கல்வி…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *