அவகிட்ட பேசாதே…!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 4, 2020
பார்வையிட்டோர்: 4,038 
 
 

தவளைத் தன் வாயால் கெடும் என்பதைக் கேள்விப்பட்டிருக்கீங்களா,,?

‘அட ! பார்த்துதான் இருக்கீங்களா…? !

பார்க்கலை..! கேள்விப்படலைன்னா…. இதை படிங்க… புரியும்…!

‘என் ஆத்துக்காரியும் நானும் மாச சம்பளம் எடுக்கும் வேலையாளுங்க. அவளுக்கொரு இடத்துல வேலை. எனக்கொரு இடத்துல வேலை.

வீட்டிலேர்ந்து ரெண்டு பேரும் ஒன்னா ஸ்கூ ட்டர்ல கிளம்பி அவளைக் கொண்டு போய் ஒரு பேருந்து நிறுத்தத்துல இறக்கி விட்டுவிட்டு நான் அப்படியே என் வேலை இடத்துக்குப் போயிடுவேன்.

மாலை அலுவகம் விட்டு வரும்போது என் மனைவி …. அதே பேருந்து நிலையத்தில் காத்திருப்பாள். அழைச்சு வருவேன் . இது தினப்படிப் பழக்கம்.

‘ஒரு நாள் பாருங்க என் வீட்டுக்காரியைப் பேருந்து நிறுத்தத்தில் இறக்கி விட்டேன்.

பக்கத்துல… நல்ல எடுப்பு, துடிப்பா… பவானி. ! – எனக்குத் திக்குன்னுச்சு.!

பாவி ! படுபாவி என் நிலைமை புரியாம… நான் பார்த்ததும் சிநேகமா சிரிச்சா.

எனக்குப் பக்குன்னு வயித்தைக் கலக்கிடுச்சி.

சட்டுன்னு சுதாரிச்சு….. பார்த்தும் பார்க்காதது போல படக்குன்னு கிளம்பி விறுக்குன்னு போய்ட்டேன்.

இது அன்னையோட போயிடும்ன்னு நினைச்சா… மறுநாளும் மறுநாளும் பவானி அங்கே நின்னா… !

சரி. இவ வீடு மாறி வந்துட்டாள் . பேருந்துக்கு நிக்கிறாள்.! – புரிஞ்சிப் போச்சு.!!

என் வீட்டுக்காரியை இங்கே நிக்க வச்சா வில்லங்கம்ன்னு அவளை அவ அலுவலகத்துக்கு கொண்டு விட்டுட்டு என் அலுவலகத்துக்குப் போகலாம்னு நினைச்சா… ஏன் இந்த மாற்றம்ன்னு என் மனைவி குடைவாள். இதுக்குப் பதில் சொல்ல முடியாது.எதுவும் ஒன்னும் பெரிசா நடந்துடாதுன்னு பழக்கத்தை மாத்தலை.

நான்காம் நாள் நான் என் மனைவியை அங்கே இறக்கி விட்டதும்தான் தாமதம்…பவானி அவளைப் பார்த்து சிரிச்சா.

எனக்கு அப்பவே தலை கிர்ருன்னுச்சி.

‘இது சரி இல்லையே…!’ – நினைச்சி…. என் மனைவியிடம் விசயத்தைச் சொல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் உள்ளுக்குள்ளேயே தவியாய்த் தவிச்சேன்.

மறுநாள் மனுநாள் நான் இறக்கி விட்டதுமே… அறிமுகம் ரெண்டு பேரும் பேச ஆரம்பிச்சாங்க.

எனக்கு அதுக்கு மேல தாங்க முடியல.

இதுக்கு மேல் இவுங்க சிநேகத்தை வளரவிட்டா நமக்கு ஆபத்து ! – ன்னு நினைச்சி…. வீட்டுக்கு வந்ததுமே… பேச்சை ஆரம்பிச்சேன்.

“பேருந்து நிறுத்தத்துல யாரவ.. பழக்கமா…?” தொட்டேன்.

“யாரைச் சொல்றீங்க…” – புரியாமல் பார்த்தாள் .

“சிகப்பா, உசரமா…. கண்ணுகூட கொஞ்சம் பெரிசா, அழகா…”- என்னையறியாமலேயே இந்த வார்த்தை வாயில வந்துடுச்சு. நாக்கைக் கடிச்சிக்கிட்டேன்.

நல்லவேளை. என் பத்தினி இதைக் கவனிக்கலை.

“ஓ…. பவானியைச் சொல்றீங்களா…?” கேட்டாள்.

“பேர் பவானியோ தாவணியோ…அவள்தான் !” சொன்னேன்.

“அவள் பவானிதான். சிநேகிதி !” சொன்னாள்.

என் உள்ளுக்குள் லேசா உதறல் வந்தது.

“எப்போதிருந்து சிநேகம்..?’ ‘

“ஒரு இருபத்தி அஞ்சு வருசத்துக்கு முன்னாடி இருந்து பழக்கம்.”

‘அப்படியா..???….’- மனசுக்குள் அலறல் வந்தது.

“எப்படி..”

“நாங்க ரெண்டு பேரும் ஒரே ஊரு…”

‘ஐயையோ..!!….’அலறல் வந்தது. அடக்கிக்கொண்டேன்.

“இப்போ எங்கே இருக்கா..?’ ‘

“அங்கேதான். பேருந்து நிறுத்தத்துக்குப் பக்கத்துல..”

“எங்கே வேலை..?’ ‘

“ஏதோ ஒரு தனியார் கம்பெனியில வேலை. பாவம்…”

“ஏன்… என்ன…?’ ‘

“எனக்கு முன்னாடி இவளுக்குத் திருமணம் முடிஞ்சிடுச்சி. ரெண்டு வருசம் குடித்தனம் செய்துவிட்டு ஓடிட்டானாம்… பாவி.”

“ஏன்..??…”

“அவனுக்குத் திருமணத்துக்கு முன்னாடியே யாரோடோயே தொடுப்பாம். திருட்டுப் பயல். இவளை நிர்க்கதியாய் விட்டுட்டு அவளே கதின்னு ஓடிட்டானாம்.”

“அடப் பாவமே…!!” நானும் ஒப்புக்கு உச் கொட்டினேன்.

“பாவம் ! எத்தினி நாளைக்குத்தான் புகுந்த வீட்ல சம்பளமில்லாத வேலைக்காரியை இருக்க முடியும்..? பொறந்த வீட்டுக்கு வந்துட்டா. இங்கே அப்பா இறந்துட்டார். தாய்க்கும் மகளுக்கும் வருமானத்துக்கு வழி இல்லே. இங்கே வந்து ஏதோ… தனியார் கம்பெனியில குறைஞ்ச சம்பளத்துக்கு வேலையாய் இருந்து ரெண்டு பேரும் வயித்தைக் கழுவுறாங்களாம்..!’ ‘

இதில் கொஞ்சம் உண்மை. கொஞ்சம் பொய் !

“இதெல்லாம் அவளே உன்கிட்ட சொன்னாளா..?…”

“ஆமா…”

நான் இப்போதுதான் விசயத்திற்கு வந்தேன்.

“ஆளையும், அவள் ஆடம்பரத்தையும் பார்த்தா குறை கூலிக்கு வேலை செய்யிறவள் மாதிரி தெரியல..”சொன்னேன்.

“அவ சின்ன வயசிலிருந்தே அப்படித்தாங்க. தன் அழகுக்குத் தகுந்த மாதிரி நல்லா நறுவிசா உடுத்துவாள்.”

இவளுக்கு எப்படி புரிய வைக்க…?

“சரி.. சரி. இனிமே அவகிட்ட பேச்சு வேணாம்..”

“ஏன்..?’ ‘

“அவளோடு பேச்சு வைச்சுக்கிட்டா போறவன் வர்றவனெல்லாம் உன்னையும் ஒரு மாதிரியா பார்ப்பான்.”

“என்ன சொல்றீங்க..?”

“அவள் ஒரு மாதிரி..!”

“புரியல…”

“பலாவானவள் !”

“அப்படியா..?” அலறினாள்.

“ஆமாம்…!’ ‘

“ஐயையோ..! என்கிட்டே ஏன் இதை மொதல்லேயே சொல்லலை. பழையப் பழக்கத்துல அவளோட நான் இத்தினி நாள் பேசினேன். எத்தனைப் பேர் என்னை எப்படிப் பார்த்தானுங்களோ..? ஐயோ ! உடம்பு கூசுதே… !” என்றவள் டக்கென்று என்னை ஒரு மாதிரியாகப் பார்த்து…

“அவ இப்படின்னு உங்களுக்கு எப்படித் தெரியும்..?’ ‘

சடக்கென்று எனக்குள் மிரட்சி.

“என் நண்பன் ஒருத்தன் சொன்னான். !”

“பொய் ! அவள் முதல் நாள் என்னைக் கவனிக்காமல் உங்களை பார்த்து சிரிக்கும் போது… என் பழக்கத்தாலதான் சிரிக்கிறாளான்னு நினைச்சேன். இல்லே.. ! விசயம் புரிஞ்சி போச்சு. நீங்கதான் அவளை அழைச்சுப் போய் நண்பர் மேல பழியைப் போடுறீங்க.?… ஐயோ ! ஐயோ… ! நீங்க இப்படிப்பட்ட ஆள்னு தெரியாம மோசம் போய்ட்டேனே…!” ஒப்பாரியை ஆரம்பித்தாள்.

இப்பப் புரியுதா..? தவளையும் தன் வாயால் கெடும்ன்னு !!

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *