அழுகை ஒரு வரம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 24, 2015
பார்வையிட்டோர்: 9,911 
 

மாமியை ஒரு பெண் முதலாளி, என்ற கணக்கில் மலர் நன்றாகவே அறிந்தி வைத்திருந்தாள் மாமி அவள் தகப்பனின் சொந்தச் சகோதரி தான் அப்பாவுடன் கூடிப் பிறந்த உடன் பிறப்பு என்றாலும், அவர் மாதிரி உத்தம குண இயல்புகளைக் கொண்ட, எல்லோரையும் நேசிக்கத் தெரிந்த மேலான பழுதற்ற அன்பு மனமென்பது அவளைப் பொறுத்த வரை நீரில் எழுத்துத்தான்.

இன்னும் சொல்லப் போனால் அப்பாவின் இரத்தமா அவளும் என்று கேட்கத் தோன்றுகிற மூர்க்கமான திரிபுபட்ட நடத்தைக் கோளாறுகளின் முழு வடிவமுமாக அவள் தன்னை வெளிப்படுத்திக் கொள்ள நேர்ந்த அந்தத் தருணங்கள் குறித்து மலருக்கு உள்ளூரத் தாங்கவொண்ணா மன வருத்தம் தான் பல சந்தர்ப்பங்களில் அவளைத் தவிர்க்கவும் முடிவதில்லை நெருங்கிய உறவாக இருப்பதால் அப்பாவுக்கு ஆலோசனை கூறவும் அம்மாவை வழி நடத்தவும் அவள் வீட்டிற்கு வந்து போக வேண்டிய தேவை மிக அதிகமாகவே இருந்தது

யாரிடமும் இந்த உரிமையை அவள் கேட்டுப் பெற்றதாக ஞாபகமில்லை நேரில் அவளைப் பார்த்தாலே குலை நடுங்கும்.அதிலும் பிள்ளை பெற்றுத் தெளியாத, இராட்சத குணம் அவளுக்கு அவள் மாதிரியில்லை மாமா அவளிடம் வாய் பொத்தி அடங்கும் பரம சாது அவர். ஒரு பி ஏ பட்டதாரி ஆசிரியர் அவர் வகுப்பில் அவர் குரல் எழுகிறதோ இல்லையோ வீட்டில் மாமியின் குரல் தான் பல அதிர்வுகளோடு கேட்கும் நிலை அவள் முன்னால் ஒரு சொல் கூட அவர் வாய் திறந்து பேசி மலர் ஒரு நாளும் கேட்டதில்லை

இந்தக் குரல்கள் இருக்கட்டும் ஒரு பிறவிச் சாபம் மாதிரி அவள் தொடர்பான கறை குடிக்கும் உறவின் நிழல் அப்பாவுக்கு மகளாகப் பிறந்து விட்ட பாவம் இதையெல்லாம் அனுபவிக்கும்படி ஒரு கொடூர தலை எழுத்து .அவள் உயிர் தரித்து உலாவும் வரை அது மாறாது என்று பட்டது

இந்த இலட்சணத்தில் கோவில் தொண்டு செய்வதாக ஒரு பாவனை .அவள் எப்படியோ? அவர்கள் ஊரான ஏழாலையைப் பொறுத்த வரை நிறைந்த கோவில் தரிசனமே அதன் தனிச்சிறப்பு அதுவும் அவர்கள் வீட்டிற்குப் பக்கத்திலேயே ஒரு பிள்ளையார் கோவில் அதற்குத் தர்மகர்த்தாவாக அவளின் தம்பி வேறு இருக்கிறார் அவரும் நன்கு கற்றுத் தேறிய ஒரு கல்லூரி அதிபர். சிறந்த பக்திமான் ஞானப்பழம் தினமும் அக் கோவிலில் பூசை வழிபாடு இரு வேளையிலும் தவறாது நிகழும். நாயன்மார் நால்வரையும் பிரதிஷ்டை செய்திருப்பதால் அவர்கள் குரு பூசை தினங்கள் அதி விமரிசையாகக் கொண்டாடப்படும் மதியம் அன்னதானத்திற்காக, மடப்பள்ளியில் சமையல் அமர்க்களமாக நடைபெறும். சமையல் பரிசாரர்களை வழி நடத்தும் முகமாக மாமி அங்கு அதிகார தோரணையுடன் வலம் வந்து கொண்டிருப்பது கண் கொள்ளாக் காட்சியாக இருக்கும். அவளின் இந்தப் பிரசன்னம் மாலை வரை நீடிக்கும் வந்த அடியார்களுக்குக் கொடுத்தது போக மிகுதியை வாங்கிப் போக வெளியே ஒரு கூட்டம் அலை மோதும் போது மாமி அவர்கள் மீது சீறிச் சினந்து வசைமாரி பொழிவது கேட்கச் சகிக்காமல் சின்ன வயதில் மலர் வெகுவாகக் கதி கலங்கிப் போன தருணங்களுமுண்டு

பெரியவளான பின் அதுவும் நின்று விட்டது எனினும் மாமியின் அலை மட்டும் ஓயவில்லை அது ஒரு மட்டுப்படுத்த முடியாத சங்கமம் அப்பாவின் உறவென்பதால் கத்தி கொண்டு கழுத்தறுத்தாலும் கேட்க நாதியில்லாத நிலைமை தான் அவளின் வாய் நீளம் அத்தகையது அவளுக்கு அம்மா என்றால் பெரிய இளக்காரம் காலால் மிதித்துத் துவம்சம் செய்யாத குறை தான். எந்நேரமும் கரித்துக் கொட்டுகிற நிலைமை தான். பிள்ளைகளையும் அவள் விட்டு வைப்பதில்லை அம்மாவின் பெண் பிள்ளைகளைக் கண்ணில் காட்டவே இயலாது அதிலும் மலரைச் சுத்தமாகப் பிடிக்காது அதற்குக் காரணம் மலரின் யாரையும் அழ வைக்க விரும்பாத மென்மையான,சுபாவம் தான்

அதனால் மாமி பார்த்துப் பார்த்து எறிகிற எறிகணைகளெல்லாம் அவள் மீது தான் சுடு சரமாய் வந்து விழும். ஒரு நாள் அவள் கேட்டாள்
“நீ பொம்பிளைப் பிள்லையல்லே?”என்ன எப்பவும் கதை படிச்சுக் கொண்டிருக்கிறாய்? வீட்டு வேலை பழகினால் தான் நீ உருப்படுவாய்” கொம்மாவைப் பார் என்ரை தம்பி பெண்சாதி மாதிரி, ஒரு செய் காரியமும் தெரியாது. நீயாவது செய்காரியக்காரியாய் லட்சணமாய் இரு”
அதற்கு மலர் சற்றுச் சூடாகவே கேட்டாள்”
“நிறுத்துங்கோ மாமி அம்மாவுக்கு செய்காரியம் தெரியுதோ இல்லையோ வீட்டிற்கு ஆர் வந்தாலும் வயிறு நிரம்பச் சாப்பாடு போட்டு அனுப்பத் தெரிஞ்சிருக்கே. சித்தி அப்படியே? எல்லாத்தையும் பொத்திப் பொத்தி வைக்கிற அவையளின்ரை கருமிக் குணத்தை நீங்கள் தான் மெச்ச வேணும் போகிற வழிக்கு துணையாய் வரப் போறது உதுவல்ல அம்மா நம்புகிறாளே அந்த வழி தான் அது தான் என்னையும் ஈடேற்றுமெண்டு படுகுது “
“போதும் “வாயை மூடடி எல்லாம் எனக்குத் தெரியும்
ஓ!எல்லாம் தெரிந்த பெரிய மனிஷியே இப்ப நான் சொல்லுறன் காற்று ஆர் பக்கம் அடிக்கப் போகுதென்று போகப் போக உனக்கு நல்லாய் விளங்கும் இருந்து பார்” இதை நான் சொல்லேலை ஆன்மாவே வெளிச்சமான என் மனம் சொல்லுது”

மாமியின் கடைசி காலம். வீழ்ந்தது அவளின் அகந்தை மனம். எல்லாம் ஒழிந்து நடுத் தெருக் கதாநாயகியாய், அவள் சீரழிஞ்சு கிடந்த போது தூக்கிக் கொண்டாடிய ஒரு உறவும் ஒட்டாமல் போனது ஏன்? இது பற்றி மலரின் மனதைக் குழப்பும் ஆயிரம் கேள்விப் பொறிகள். தன்னந்தனியாகத் துணக்கு ஆளின்றி அனாதையாய் அவள் உயிர் விட்ட போது மலரும் கூடவே இருந்தாள். இருள். கும்மிருட்டு. மறு நாள் தான் அவள் பிணத்தைக் கொண்டு போய்த் தீ மூட்டுவதாக ஏற்பாடு. மலருடன் கூடவே சித்தப்பாவும் சித்தியும் இருந்தார்கள்

வீட்டில் மயான அமைதி. இரவு ஒன்பது மணியிருக்கும். வேலிக்கு வெளியே பேய் கூவுகிற மாதிரி யாரோ கூவினார்கள் .கேட்டுப் பழகிய ஒரு பெண் குரல் தான் மலருக்குப் புரிந்து விட்டது அது அவளின் சித்தப்பா மகளான சுவேதாவின் குரல் தான். நல்ல கெட்டிக்காரியென்று மாமி அவளைத் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுவாள்/ வீட்டிலே ஒப்பாரி ஒலி கேட்காததால் தான், அவள் இப்படித் தொண்டை கிழியக் கூவுகிறாளோ, தெரியவில்லை மறு நாள் அவள் மாமியின் செத்த வீடு காண வரும் போது இது பற்றிக் கேட்க வேண்டுமென்று மலர் நினைத்துக் கொண்டிருந்தாள்

மறு நாள் காலை மாமியின் பிணத்தருகே ,உணர்வு பூர்வமான துக்க வெளிப்பாடு எதுவுமின்றி அவள் கல்லாய்ச் சமைந்து அமர்ந்திருக்கையில் ஓங்கிய குரலெடுத்து யாரோ ஒப்பாரி வைத்து அழும் குரல் கேட்கவே திடுக்கிட்டு அவள் நிமிர்ந்து பார்க்கும் போது சுவேதாவின் முகம் தெரிந்தது அவள் என்ன சொல்லி அழுகிறாள்? மாமி பற்றி வேதம் கூறுகிற நிலைமையா அவளுக்கு?

அதற்கு மாறாக ஒரு சாத்தானைப் பற்றிய கசப்பான உண்மையையே அவள் கூறுவதாகப்பட்டது
“ மாமி உங்களுக்காக அழ ஒருவர் கூட இல்லையே ஏன் இந்த நிலைமை சொல்லுங்கோ மாமி வாயைத் திறந்து பேசுங்கோ”
இதற்குப் பதில் சொல்ல வேஎண்டிய தார்மீகக் கடமை தனக்கிருப்பதாக மலர் மிகவும் ஆவேசமாக நினைவு கூர்ந்தாள்.அவளை ஆறுதல்படுத்தித் தனிமையான ஓர் இடத்திற்கு அவளை அழைத்து வந்த பின், அவளின் தோள் மீது கை போட்டுச் சத்தியாவேசமாய்க் குரலில் சூடேறிக் கேட்டாள்.

“சொல்லு சுவேதா ராத்திரி வேலிக்கு வெளியே இந்தச் சத்தம் போட்டியே ஒரு பேய் கூவுகிற மாதிரி அதைக் கேட்டு நான் குலை நடுங்கிப் போனேன். இப்ப நீ கேட்டியே, ஒரு கேள்வி. அதுக்குப் பதில் சொல்லாட்டால் எனக்குத் தலையே வெடிச்சிடும் போல இருக்கு. அப்படி வரக் கூடிய அழுகையெல்லாம் நீ சொல்லி மாமிக்கு வராதெண்டு நான் நம்புறன் . அது தானாய் வந்தால் தான் மாமிக்குப் பெருமை. அது ஒரு வரம் மாதிரி அவவின் காலடியிலை வந்து நிக்கும். .இது நடக்கேலையே அது தான் ஏனென்று நான் சொல்லி நீ கேக்க வேண்டியிருக்கு. அதையும் சொல்லி விடுறன். பிறரை அழ வைச்சால் இப்படித் தான் நடக்கும். நமக்காகக் கடைசி நேரத்தில் உலகம் அழ வேணுமென்றால் மாமி மாதிரி வாழ்ந்தால் அது முடியுமோ? சொல்லு சுவேதா. அப்படி வரக் கூடிய அழுகை ஒரு உன்னதமான வரம் மாதிரி. கேட்டுப் பெறுவதல்ல அது. தானாய் வந்தால் தான் பெருமை இதைச் சம்பாதிக்க முடியாமல் போன கேவலம் இந்த மாமிக்காக ஒரு சொட்டுக் கண்ணீர் கூட வடிக்க என்னாலை முடியேலையென்றால் அதற்கான காரணம் இப்ப உனக்குப் புரிஞ்சிருக்குமெண்டு நான் நம்புறன் .என்ன சொல்லுறாய்?”

“போதும் மலர் எனக்கு எல்லாம் விளங்குது இனி மாமிக்காக நான் அழ மாட்டன் “

“உன்னை அழ வேண்டாமெறு நான் சொல்லேலை. உனக்கு மாமி மேலே அதிக பட்ச அன்பு , இருந்தால் நல்லாய் அழு. அதுக்காக என்னையோ அவ காலில் தூக்கிப் போட்டு மிதிச்சு மனசை ரணகளமாக்கித் துவம்சம் செய்த இந்த உலகத்தையோ அழச் சொல்லி நீ கேக்க முன் வந்தியே. அதைத் தான் என்னாலை ஜீரணிக்க முடியாமல் மிகவும் கவலையாக இருக்கு . ஒரு சாத்தானுக்காகத் தொண்டை வரண்டு அழுகிற நிலைமையிலை நான் இல்லை. அன்பு நெறியைக் கற்றுத் தேறி வாழ்க்கையை வேதமாகக் கொண்டாடுபவர்களுக்காக மட்டுமே, என் கண்ணீர் அஞ்சலி. அது ஒரு வரமாக அவர்களைப் போய்ச் சேரும்”

அதைக் கேட்ட பிறகு அங்கு கால் தரித்து நிற்பதைக் கூட விரும்பாமல் சுவேதா பின் புறக் கதவு வழியாக நழுவி ஓடும் போது அவளின் நிழல் வந்து மாமியை மூடுவதாய் மலர் மனதில் பொறி தட்டிற்று இப்படி நிழல்
வந்து மூடுவதற்கே கதியாகி இறந்து கிடக்கும் மாமியை நினைக்க வெறும் பரிதாபம் தான் மிஞ்சியது

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *