அழியாச் சுடர்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 12, 2023
பார்வையிட்டோர்: 781 
 
 

(1980ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

இருள் திரை மெதுவாக அழிந்து கொண்டிருக்கிறது. உதயத்தின் மலர்ச்சி. 

வேகமாக வந்து கொண்டிருந்த புகைவண்டி புகையிரத நிலையத்தில் நிற்கின்றது. 

பிரயாணிகள் முண்டியடித்துக் கொண்டு இறங்குகின்றார்கள். 

நானும் இறங்குகின்றேன். 

எனக்குக் களைப்பு; சோர்வு. 

இரண்டாயிரம் மைல்களுக்கு அதிகமான தூரம். தொடர்ந்து மூன்று இரவுகளும் இரண்டு பகல்களும் புகையிரதப் பிரயாணம். அலுப்பிருக்காதா? 

நித்திரை வெறி வேறு. 

வீடு போய்ச் சேர வேண்டும் என்ற அவசரம். 

உடலில் புதுத் தெம்பு. 

பஸ்ஸைப் பிடிப்பதற்குப் பிரயாணிகளின் நாயோட்டம். 

நானும் அவர்களில் ஒருவன். 

இடிபட்டுக் கொண்டு ஒரு மாதிரி பஸ்ஸில் ஏறுகின்றேன். 

பஸ் புறப்பட்டால் தானே. 

பிரயாணிகள் ஏறிக் கொண்டே இருக்கிறார்கள். 

எனக்கு எரிச்சல். 

பஸ் நகருகின்றது. 

நகரத்தினூடாக பஸ் முக்கி, முனகிக் கொண்டு செல்கின்றது. 

நகரம் கோழித் தூக்கத்தில். 

எனது கிராமத்தை நோக்கி பஸ் சென்று கொண்டிருக்கின்றது. 

எப்பொழுதுதான் இந்தப் பஸ் எனது ஊர் போய்ச் சேரப் போகிறதோ? 

என் உள்ளத்தில் தவிப்பு. 

என் அன்பு ஆச்சி, அப்பு, தங்கச்சி, நண்பர்களைப் பார்க்க வேண்டுமென்ற பேராவல். 

நீண்ட காலமாக அடக்கி வைத்திருந்த ஆவலல்லவா?

ஆச்சி இப்பொழுது முற்றம் பெருக்கிக் கொண்டிருப்பா.

அப்பு தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருப்பார்.

தங்கச்சி வீட்டு வேலைகளைச் செய்து கொண்டிருப்பாள்.

என் வரவை அவர்கள் எதிர்பார்த்திருக்கமாட்டார்கள்.

அவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்த வேண்டும் என்றொரு ஆசை எனக்கு. 

என்னைக் கண்டதும் ஆச்சி மகிழ்ச்சியில் பொங்கிப் பூரிப்பா. 

தங்கச்சி ஆனந்தத்தில் துள்ளிக் குதிப்பாள். 

அயல் வீடுகளின் சிறுவர்கள் என்னைச் சூழ்ந்து கொண்டு ஆர்ப்பரிப்பார்கள். 

“நீ ஒரு கடுதாசி எழுதிப் போட்டு வரக்கூடாதோடா?” ஆச்சி என்னைச் செல்லமாகக் கண்டிப்பா. 

அவர்களுக்கு என்மேல் எவ்வளவு நம்பிக்கை. 

ஆச்சி, என்னை நீ பெற்று வளர்ப்பதற்கு எவ்வளவு கஷ்டப் பட்டிருப்பாய்? எத்தனை நாட்கள் பட்டினி கிடந்திருப்பாய்? எவ்வளவு துன்பங்களை நீ மெளனமாக அனுபவித்திருப்பாய்? என் நிமித்தம் ஊரவர்களிடம் அளவிலா ஏச்சுப் பேச்சுக்களை அவதூறுகளைக் கேட்டு உனது உள்ளம் ஊமையாய் ரத்தக் கண்ணீர் வடித்திருக்கும் என்பது எனக்குத் தெரியும். 

உலகில் விசாலமானது சமுத்திரம் தான் என்பார்கள். அந்தச் சமுத்திரத்தையும் விட ஏன் இந்தப் பிரபஞ்சத்தையும் விட விசாலமானது தாயுள்ளம். 

ஒரு சிறு துண்டு நிலத்தை வைத்துக் கொண்டு, என்னை வளர்த்து, உள்ளூரில் படிப்பித்தது போதாதென்று, வெளி நாட்டிற்கு அனுப்பி உயர்படிப்புப் படிப்பிக்க அப்பு நீ எவ்வளவு இன்னல் பட்டிருப்பாய் என்பதை உணராதவன் அல்ல நான். எத்தனை பேரிடம் கடன் பட்டிருப்பாய்? உன் உழைப்பின் பெரும் பகுதி நீ எனக்காகப் பட்ட கடனுக்கு வட்டியாகத் தாரை வார்த்ததை நான் அறிவேன். 

நீங்கள் எனக்காகச் செய்த பரித்தியாகங்களை என்னால் கற்பனை செய்துகூடப் பார்க்க முடியாது. 

“தோட்டம் செய்யிறவன்ரை மகனுக்கு படிப்பென்ன படிப்பு? தோட்டம் கிண்டுறதுக்கோ?” 

சிலர் கேலி பண்ணினார்கள். 

“சும்மா உவன்ரை படிப்புக்கு வீணாய் காசை நாச மாக்காமை, அவனை மறிச்சு தோட்ட வேலையைப் பழக்கு, அல்லது சுருட்டு சுத்துறதுக்கு அனுப்பு”. 

வேறு சிலர் அப்புவுக்கு புத்திமதி கூறினர். 

தோட்டக்காரர்களின் பிள்ளைகளும், தொழிலாளர்களின் பிள்ளைகளும் படிப்பது பெரிய மனிதர்களுக்கு விருப்பமில்லை. 

நாங்கள் படித்து நாலும் தெரிந்துவிட்டால் எங்கள் தோள்களில் அவர்கள் ஏறியிருந்து சவாரி விடேலாது, எங்கடை உழைப்பை உறிஞ்சேலாது என்ற பயம் அவர்களுக்கு. 

“வெளி நாட்டுக்கு படிக்கப் போற உன்ரை மகன் படிப்பை முடிக்க மாட்டான்…. அவன் ஊருக்குத் திரும்பி வரவும் மாட்டான் எண்டு அவன்ரை சாதக பலன் சொல்லுது”. 

எனது சாதகத்தைப் பார்த்த சாத்திரி கந்தப்பா ஆச்சிக்குக் கூறினார். 

சாத்திரங்களையும் சமயங்களையும் ஆயுதமாகப் பாவித்து, உழைக்கிற எங்களை முட்டாள்களாக்கி, எங்கடை உழைப்பைச் சுரண்டி சுக சீவியம் நடத்திக் கொண்டிருக்கின்றது சுரண்டல் வர்க்கம். 

“அவன் அங்கே போய் கட்சி வேலைதானே செய்வான். எங்கை படிக்கப் போறான்” என்றனர் சிலர். 

“பரம்பரையாய் படிச்சவங்களுக்கெல்லோ படிப்பு. அப்பிடிப் பட்டவைதான் அரசியலுக்கும் லாயக்கு. உவங்களாலையும் உவங்கடை கூலிக்காரற்ரை கட்சியாலும் என்னத்தை சாதிக் கேலும்? கொஞ்ச நாளைக்கு சும்மா கத்திப்போட்டுக் கிடக்க வேண்டியதுதான்” என்று ஒரு பிரமுகர் முஸ்தாய்ப்பு வைத்தார். 

வங்காள ஆசிரியர்கள் தமது உரிமைகளுக்காக வேலை நிறுத்தத்தில் குதிக்கின்றனர். 

பொலிசார். ஊர்வலமாய் செல்கின்ற ஆசிரியர்களைக் காட்டுமிராண்டித்தனமாகத் தாக்குகின்றனர். 

லட்சக்கணக்கான தொழிலாளர்கள், விவசாயிகள் மாணவர்கள், பொது மக்கள், கல்கத்தா நகரின் பிரதான. வீதியில் ஆக்ரோஷமாகக் கோஷம் எழுப்பிய வண்ணம் சென்று கொண்டிருக்கிறார்கள். அவர்களில் நானும் ஒருவனாய் செல்கின்றேன். 

பொலிசார் எம்மீது பாய்ந்து நர வேட்டையாடத் தொடங்குகின்றனர். 

குண்டாந்தடிகளின் சுழற்சி. 

கண்ணீர்ப் புகை. 

துப்பாக்கிச் சனியன்களின் குரைப்பு. 

மக்களின் பச்சை ரத்தம் வீதியில் ஓடுகின்றது. நரபலி. 

வங்க மக்களின் பேரெழுச்சி. 

மக்களின் வெற்றி. 

வங்காளத் தொழிலாள, விவசாய, மாணவ இயக்கங் களிலும் அவைகளின் போராட்டங்களிலும் பங்கு பற்ற நான் கொடுத்து வைத்தவன். 

இவ்வியக்கங்களும் போராட்டங்களும் எனக்கு அனுபவங்களைத் தந்து வர்க்கபோதத்தையூட்டின. 

இளமையில் அனுபவமும் முதிர்ச்சியுமற்ற எனது நடவடிக் கைகளால் எமது ஊரவர்களின் பெரும் எதிர்ப்புகளையும் வீண் தொல்லைகளையும் உங்களுக்கு நான் தேடித் தந்துள்ளேன். ச்சி, இதனால் நீங்கள் எவ்வளவு துன்பமடைந்திருப்பீர்கள்? இனி நீங்கள் அஞ்ச வேண்டியதில்லை. 

தீவிர அரசியலில் ஈடுபட்டிருந்தாலும் ஆச்சி, உங்கள் ஆசைகளை நான் நிராசையாக்கிவிடவில்லை. 

வெற்றியுடன் தான் உங்கள் மகன் திரும்பி வந்து கொண்டிருக்கின்றான். 

எனது பரீட்சை முடிவு வரும் பொழுது இதை நீங்கள் அறிவீர்கள். 

அப்போது நீங்கள் தலை நிமிர்ந்து நிற்பீர்கள். 

பஸ் தோட்டங்களினூடாகச் செல்லும் வீதியில் ஓடிக் கொண்டிருக்கின்றது. 

இடைக்கிடை நீரிறைக்கும் இயந்திரங்களின் இரைச்சல். அப்புவுடன் நான் பின்துலா மிதித்துக் கொண்டிருக்கின்றேன். 

காலைச் சூரியன் தலையை உயர்த்தி பனங்கூடலுக்கு மேலால் எட்டிப் பார்த்துக் கொண்டிருக்கின்றான். 

தூரத்தில் புல் வெளிக்கு அப்பால், பனங்கூடலின் தொங்கலில் ஆச்சி தலையில் கடகத்தைச் சுமந்தபடியே வந்து கொண்டிருக்கின்றா. 

கடகத்திற்குள் எனது புத்தகங்கள், உடுப்பு, சாப்பாடு. ஆச்சி எமது கிணற்றடிக்கு வருகின்றா. 

தண்ணீர் பாய்ந்து கொண்டிருக்கும் வாய்க்காலில் நான் குளிக்கின்றேன். 

பழைய சோறு, குரக்கன் பிட்டு, மரவள்ளிக் கிழங்குக்கறி, தயிர் எல்லாவற்றையும் குழைத்து உருண்டையாக்கி ஆச்சி எனக்குத் தருகின்றா. 

சாப்பிட்டு விட்டு, மூன்று மைல்களுக்கு அப்பாலுள்ள அயலூர் பாடசாலைக்கு நான் ஓட்டமும் நடையுமாகச் செல்கின்றேன். 

பஸ் எனது கிராமத்திற்குள் நுழைகின்றது. நிலம் வெளித்துச் சிரிக்கின்றது. வீதியின் இரு மருங்கிலும் செழித்து வளர்ந்த பச்சைப் பசேலென்ற வாழைகள் நிரையிட்டு நிற்கின்றன. 

உருண்டு திரண்ட காய்களுடன் வாழைக் குலைகள் வீதியின் பக்கமாகத் தலை சாய்ந்து நிற்கின்றன. 

அவை என்னை வாழ்த்தி வரவேற்கவா அப்படி நிற்கின்றன?

வாழைக் குலைக்குப் பெயர் பெற்றது எனது ஊர். 

வீதியின் கிழக்குப் பக்கமாக விரிந்து பரந்த பச்சைப் பசேலென்ற நெல் வயல்கள். 

வயல்களின் தொங்கலில் கண்ணுக்கெட்டிய தூரத்தில் புல்வெளி. 

புல்வெளியின் தொங்கலில் நீலக்கோடு கீறியது போல் உப்பாறு. 

உப்பாற்றை முத்தமிட்டுக் கொண்டிருக்கும் நீல வானத்தின் அடிவயிறு சிவந்திருக்கின்றது. 

காகங்கள் கூட்டங் கூட்டமாக கிழக்கு நோக்கிப் பறந்து கொண்டிருக்கின்றன. 

பஸ் கந்தசாமி கோவிலடியில் நிற்கின்றது. 

ஆவலுடன் நான் பஸ்ஸிலிருந்து இறங்குகின்றேன்.

உதயத்தின் இளம் தென்றல் என் உடலில் தவழ்கின்றது.

எனது ஊரின் மண்ணில் கால் வைத்ததும் என் உடலில் புல்லரிப்பு. 

நிமிர்ந்து பார்க்கின்றேன். 

எனக்கு எதிரில் பழைய சிறு கட்டிடம் இருந்த இடத்தில் மூன்று மாடி யூனியன் கட்டிடம் கம்பீரமாக நிற்கின்றது.

எனக்கு பேராச்சரியம், மகிழ்ச்சி. 

அம்மான் கதிரவேலு தனது தேநீர்க் கடையைத் திறந்து கொண்டிருக்கின்றார். 

“பொடியா, இப்பதான் வாறியோ? எப்பிடி சுகம்?” வாஞ்சையுடன் குசலம் விசாரிக்கின்றார். 

“நல்ல சுகம் அம்மான், உங்கள் பாடெப்பிடி?”

“மோசமில்லை. ஆனால் எங்கடை உழைப்பை உறிஞ்சிற வங்கள், எங்களை முன்னேற விட்டால்தானே”? 

“எங்களுக்கும் காலம் வரும் அம்மான்.”

“படிப்பெல்லாம் முடிஞ்சுதோ? சோதினை எடுத்தனீயே? எப்பிடி?” 

“நல்லாய் செய்திருக்கிறன்”. 

“பாஸ் பண்ணுவன் எண்டு நினைக்கிறன்”. 

“உங்களைப் போல ஆக்கள்தான், காலுக்கை கிடந்து மிதிபடுகிற எங்களுக்கு கை குடுத்துத் தூக்கிவிட வேணும்”. 

“நீங்கள் ஒண்டுக்கும் யோசிக்க வேண்டாம் அம்மான். எதிர்காலம் எங்களுக்குத்தான்.” 

“களைச்சுப் போய் வாறாய். பொட்டியை இஞ்சை வைச்சிட்டுப் போ. என்ரை மூத்த பெடியன் தண்ணி அள்ளப் போட்டான். அவன் வந்த உடனை சயிக்கிளிலே பெட்டியை குடுத்து அனுப்பி விடுகிறன்”. 

“அது பாரமில்லை அம்மான். உங்களுக்கு ஏன் வீண் சிரமம். நான் கொண்டு போவன்”. 

“சரி வேளைக்குப் போய் களைப்பாறு. பிறகு சந்திப்பம்.”

அம்மான் தனது வேலையிலீடுபடுகின்றார். 

நான் வீடு நோக்கி நடந்து கொண்டிருக்கின்றேன். கண்ணுக்கெட்டிய தூரத்தில் கறுப்பும் வெள்ளையும் கலந்த மறை நாய் ஒன்று ஓடி வருகின்றது. 

எங்கடை வீமன். 

கிட்ட வந்ததும் வாலைக் ஆட்டிக் கொண்டு இருகால் களையும் உயர்த்தி என் மேல் பாய்ந்து எனது கைகளை நக்குகின்றது. 

அது இங்கே ஏன் வந்தது? 

நான் வருவேன் எண்டு அதற்கு எப்படித் தெரியும்? 

அதை நான் அன்புடன் தடவிக் கொடுத்துவிட்டு என்னை விடுவிக்கின்றேன். 

தனது முன்னங் கால்களால் எனது கால்களைக் கட்டிப் பிடித்துக் கொண்டு முனங்கிவிட்டு அது திரும்பி வேகமாக ஓடி மறைகின்றது. 

வீடு நோக்கி நான் ஆவலுடன் வேகமாக நடக்கின்றேன். சில நிமிடங்களின் பின் வீமன் என்னை நோக்கி ஓடி வருகின்றது. 

அது எனது வீட்டிற்குச் சென்றிருக்க வேண்டும். 

நான் வருகிறேன் எண்டு ஆச்சிக்கு உணர்த்தவா அது எனது வீட்டிற்கு ஓடியது…? 

ஓடிவந்து தனது கால்களால் எனது கால்களைக் கட்டிப் பிடித்து முனங்கிவிட்டு திரும்பவும் எனது வீடு நோக்கி அது ஓடுகின்றது. 

அது போவதும் வருவதுமாக ஓடிக்கொண்டிருக்கின்றது. செல்லர் அண்ணர் றோட்டு முடக்கால் திரும்பி என் எதிரே வந்து கொண்டிருக்கின்றார். 

அவர் எங்கோ பயணம் போகப் புறப்பட்டு வருவது போலத் தெரிகின்றது. 

“இண்டைக்கு நீ வாறாய் எண்டு எங்களுக்குத் தெரியாதே. ஏன் ஒரு காயிதம் போட்டிட்டு வந்திருக்கலாமே?” 

“உங்களுக்கேன் வீண் தொல்லை தருவான் எண்டு தானண்ணை நான் எழுதேல்லை”. 

நான் பயணத்தால் வரும் வேளைகளில் செல்ல ரண்ணராக்கள் புகையிரத நிலையத்திற்கு வருவது வழக்கம்.

இம்முறை நான் அவர்களுக்கு ஏன் வீண் சிரமம் கொடுப்பா னென்றுதான் எழுதவில்லை. 

“இதென்ன பெரிய கரைச்சலோ, சரி அது போகட்டும் இஞ்சை தா பெட்டியை . நான் கொண்டாந்து தாறன்.” 

“வேண்டாமண்ணை, கொஞ்சத் தூரம் தானே. நான் சமாளிப்பன். நீ வெளிக்கிட்ட பயணத்துக்கு போட்டு வா.”

“அப்ப சரி. உன்ரை ஆச்சிக்கும் சாடையாய் சுவமில்லை. அவவாலை…” 

“என்னண்ணை. ஆச்சிக்கு சுவமில்லையோ? என்ன வருத்தம்?” 

“விழுந்து போனா….! காலிலை நோ. இப்ப கொஞ்சம் சுகம். ஆனால்….” 

“வாறனண்ணை, பிறகு சந்திப்பம்’ 

கூறிக் கொண்டு நான் வேகமாக நடக்கின்றேன். 

எனக்கு ஓடவேண்டும் போலிருக்கிறது. கையில் பெட்டி வேறு. 

இயலு மட்டும் வேகமாகச் செல்கின்றேன்.

“ஆச்சி” 

கூப்பிட்டுக் கொண்டு படலையைத் திறக்கின்றேன். திண்ணையில் ஆச்சி படுத்துக் கொண்டிருக்கின்றா. 

படுத்திருந்த அவ்வினுடைய சீலையைக் கௌவிப் பிடித்து இழுத்து விட்டு வீமன் என்னை நோக்கி ஓடி வருகின்றது.

எனது காலை அது கட்டிப்பிடித்துக் கொண்டு முனகுகிறது.

“காலை விடடா வீமன்”

அதை அதட்டுகின்றேன். 

“ஆச்சி….” 

உரக்கக் கூப்பிட்டபடியே செல்கின்றேன். 

ஆச்சி ஆவலுடன் தலையை உயர்த்திப் பார்க்கின்றா. 

எழும்ப அவ முயல்கின்றா. முடியவில்லை.

எனக்கு அதிர்ச்சி. 

கையில் இருந்த பெட்டி விழுகின்றது.

“ஆச்சி….”

அலறிக் கொண்டு ஓடுகின்றேன். 

ஆச்சி படுத்திருந்தபடியே எனது முதுகை அன்புடன் தடவிக் கொடுக்கின்றா. 

எனது ஆத்மா ஓலமிட்டு அலறுகின்றது. 

என்னால் வாய் திறக்க முடியவில்லை. 

நான் ஆச்சியை வெறித்துப் பார்த்தபடியே இருக்கின்றேன்.

கண்ணீர் என் பார்வையை மறைக்கின்றது. 

ஆச்சியும் வாய் திறக்கவில்லை. 

அவவினுடைய கண்களில் அருவி பாய்கின்றது. 

மெளனம். 

எவ்வளவு நேரம்தான் அப்படியிருந்தோமோ? 

“அண்ணை” 

தண்ணீர் வாளியுடன் வந்த தங்கச்சி ஆச்சரியத்துடன் சத்தம் போடுகின்றாள். 

நான் அவளை நோக்குகின்றேன். 

அவளால் வாய் திறக்க முடியவில்லை. 

அவள் பொருமுகின்றாள். 

அயலவர்கள் வந்து சூழ்கின்றார்கள். 

சிறுவர்கள் குதூகலத்தில் ஆர்ப்பரிக்கின்றார்கள். 

“ஆச்சிக்கு இப்படி நடக்குமெண்டு நாங்கள் நினைச்சிருக்கேல்லை. என்ன செய்யிறது.. நடந்து போச்சு…” 

கவலையுடன் கூறுகிறார் சின்னத்தம்பி அண்ணர்.

“என்ன நடந்தது? எனக்கு ஏன் எழுதவில்லை?” ஆத்திரத்துடன் கேட்கின்றேன். 

“அவ சூத்திரம் வளைக்கேக்கை கிறுதி வந்து விழுந்து போனா. நாரிப்பூட்டு விலகிட்டுது. முழங்கை எலும்பும் முறிஞ்சு போச்சு….” 

“எப்ப விழுந்தவ?” 

“தைப்பொங்கலண்டு……” தங்கச்சி தயங்கியபடியே கூறுகின்றாள். 

“இவ்வளவு காலமாய் எனக்கேன் எழுதேல்லை? நான் செத்துப்போனேன் எண்டு நினைச்சியளோ?” 

நான் சீறுகின்றேன். 

“ஆச்சிதான் எழுதவேண்டாம் எண்டு சொன்னவ…”

“ஏன்?” 

“உனக்கு எழுதினால் நீ படிப்பை விட்டிட்டு உடனை வந்திடுவியாம். சோதினையும் எடுக்க மாட்டியாம். உன்ரை படிப்புக் குழம்பிப் போம் எண்டு உனக்கு அறிவிக்க வேண்டா மெண்டு சத்தியம் செய்து போட்டா. “

செல்லம்மா அக்கா சொன்னா. 

“ஆச்சியிலும் பார்க்க எனக்கு படிப்பு பெரிசோ?” 

“நீயல்லோ அப்பிடிச் சொல்லுகிறாய். தன்னை வருத்தம் பார்க்க வாறவையிட்டை தன்ரை வருத்தத்தைப் பற்றி அவ ஒண்டும் சொல்லேல்லை. உனக்கு எழுதிப் போட வேண்டா மெண்டுதான் மண்டாடிச் சொல்லிக் கொண்டிருந்தா.” 

சரோ கூறுகின்றாள். 

“இப்ப எவ்வளவோ சுவம். அப்ப நீ அவவைப் பார்த்தி யெண்டால்….” 

“ஏன்?” 

“பெரியாஸ்பத்திரிக்குக் கொண்டுபோன அண்டே ஒப்பரேஷன் செய்ய முந்தி உனக்கு எழுத வேண்டாமெண்டு சத்தியம் பண்ணிப் போட்டா.”

“பிறகு?” 

“ஒப்பரேஷன் முடிஞ்சு ஒன்பது நாளாய் அறிவு கெட்டுப் போச்சு. மூச்சில்லாமல் கிடந்தா. நாங்களும் நல்லாய் பயந்திட்டம். 

“ஆனா நாங்கள் உனக்கு என்னண்டு எழுத?” 

“இடைக்கிடை அறிவு வரேக்கை என்ரை பிள்ளைக்கு மாத்திரம் எழுதிப் போடாதையுங்கோ. அவன்ரை படிப்புக் குழம்பிப்போம். எனக்கு ஒண்டும் நடவாது. நீங்கள் ஒண்டுக்கும் பயப்பட வேண்டாம், எண்டு அடிக்கடி சொல்லுவா”. 

“இரண்டு முறை ஒப்பரேஷன் நடந்தது. அப்பெல்லாம் அறிவு வரேக்கை இதைத்தான் திருப்பித் திருப்பிச் சொல்லிக் கொண்டிருந்தா. 

“அப்ப அவவின்ரை காலைப் பார்த்தா யானையின்ரை கால் மாதிரி வீங்கிப் போய் இருந்துது. இப்ப நல்லாய் வீக்கம் வத்திட்டுது. ஆனால் அவ்வாலை நடக்கத்தான் ஏலாது.”

செல்லம்மா அக்காவின் குரல் தளதளக்கின்றது.

“ஆச்சி, இப்பிடியேனணை செய்தனி? உன்ரை உயிருக்கு ஏதாவது நடந்திருந்தால் நான்….” 

“அட பயித்தியக்காறா, இப்பென்ன நடந்து போச்சு? நான் செத்திட்டனே? என்ரை இடது காலும் கையும்தான் ஏலாது. ஆனா வலது கைகால் இருக்குத்தானே.”

அவவினுடைய குரலில் எவ்வளவு தன்னம்பிக்கை, மன உறுதி. 

“ஆனால் உன்னாலை நடக்கேலாமல் போச்சுதேயணை”

“அதெல்லாம் சரி வரும்…… நீ பயப்படாதை. உடுப்பை மாத்திப்போட்டு குளிச்சிட்டு வா.”

நான் அவவைப் பார்த்தபடியே அசையாமல் இருக்கின்றேன். 

“எட முட்டாளே, இரண்டு தடவை என்னட்டை இயமன் வந்தான்.என்னை அவனாலை ஒண்டு செய்யேலாமல் போச்சு. திரும்பிப் போட்டான். இனி நீ ஒண்டுக்கும் பயப்படாதை. இன்னும் நான் கனகாலமிருப்பன். என்ரை பேரப் பிள்ளையளுக்குக் கலியாணம் கட்டி வைச்சிட்டுத் தான் நான் கண்ணை மூடுவன்.” 

சிரித்துக் கொண்டு கூறுகின்றா. 

எதிர்காலத்தில் அவவிற்கிருக்கும் நம்பிக்கையைப் பார்க்க எனக்கு வியப்பாக இருக்கின்றது. 

நான் அவவினுடைய காலைத் தடவிக்கொண்டே இருக்கிறேன். 

“போடா, போய் குளிச்சிட்டு வா. புள்ளை அந்தப் பழஞ் சோறு, குரக்கன் புட்டு, மரவள்ளிக் கிழங்குக்கறி, தயிர் எல்லாத்தையும் எடுத்து வை. நான் கொண்ணைக்கு குழைச்சு உறுட்டிக் குடுக்க. 

எனக்கு ஆச்சரியம். 

“நான் வருவன் எண்டு உங்களுக்கு எப்பிடியணை தெரியும்? குரக்கன் புட்டு அவிச்சு அதோடை பழஞ்சோறும் வைக்க.” 

“கன நாளாய் குரக்கன் புட்டு அவிக்கேலை. நீ இண்டைக்கு வருவாய் எண்டு ஏதோ என்ரை மனம் நேற்றுச் சொல்லிச்சு. அதுதான் குரக்கன் புட்டும் அவிச்சு அதோடை பழஞ் சோற்றையும் வைச்சிருக்கிறம்”. மனப்பூரிப்புடன் கூறுகின்றா ஆச்சி. 

“றயிலாலை வந்த களை…. வெய்யிலும் ஏறப்போகுது. எழும்பு மோனை. போய் குளிச்சிட்டு சாப்பிடு”. 

செல்லம்மா அக்கா என்னை அருட்டுகின்றா. 

“மோனை நான் மறந்து போனன். முந்த நாள் பின்னேரம். யாழ்ப்பாணத்திலிருந்து உன்ரை சோமனாக்கள் வந்தாங்கள்”.

ஆச்சி கூறுகின்றா. 

“என்ன சொன்னவையணை…?” 

“வாற மாதம் மேதின ஊர்வலமும் கூட்டமும் நடத்தப் போகினமாம். அதுக்கு ஆயத்தங்கள் செய்ய வேணுமாம். நீ எப்ப வருவாய் எண்டு விசாரிச்சினை.” 

“நீங்கள் என்ன சொன்னியள்?” 

“நீ வந்த உடனை கட்டாயம் அனுப்பி விடுகிறம் எண்டம்.”

“நான் இண்டைக்குப் பின்னேரம் போய் அவையளைச் சந்திக்கலாமெண்டு யோசிக்கிறன்”. 

கூறிக்கொண்டு அவவைக் கேள்விக் குறியுடன் பார்க்கின்றேன். 

அவவினுடைய முகத்தில் சிந்தனையலை. 

“என்னணை ஆச்சி நான் பின்னேரம் போகட்டே?”

“இனி உன்னை ஏன்ரா நாங்கள் மறிக்கப்போறம்?”

நான் அவவின் கண்களை நோக்குகின்றேன். 

என் ஆச்சியின் கண்களில் தியாகச் சுடர் ஜுவாலித்துக் கொண்டிருக்கின்றது. 

நான புதிய நம்பிக்கையுடன் நடந்து கொண்டிருக்கின்றேன்.

– 1980, வேட்கை (சிறுகதைகள்), முதற் பதிப்பு: 2000, பூபாலசிங்கம் பதிப்பகம், கொழும்பு.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *