பெண் மனம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: August 2, 2022
பார்வையிட்டோர்: 4,185 
 

(1944ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

சுந்தாப் பாட்டி சொன்னாள்: “படிக்கப் படிக்க ஆண்களுக்கு அறிவு அதிகமாகிறது. படிக்கப் படிக்கப் பெண்களுக்கு அன்பு அதிகமாகிறது.”

“அதெப்படி?” என்று நான் கேட்டேன்.

“அதெப்படி என்று கேட்பதில் லாபமில்லை . அது அப்படித் தான்; ஈசுவர சிருஷ்டியே அப்படித்தான். தவிரவும் ஆண்களுக்கு அறிவு அதிகரிக்க அதிகரிக்க, மனம் கல்லாகிவிடுகிறது. அவர்கள் சாதாரண வாழ்க்கையிலிருந்து விலகி நிற்க ஆரம் பித்து விடுகிறார்கள். மனது முற்றித் திடம்பட்டு அசைக்க முடியாததாகி விடுகிறது. யோகிகளும் ஞானிகளும்…”

“பெண்கள் விஷயத்தில்?”

“பெண்களின் விஷயமே வேறு; இதற்கு முற்றிலும் மாறானது. அவர்களுடைய மனோபாவம் உண்மையிலேயே நேர்மாறானது. அவர்களுடைய மனம் படிப்பினாலும் அறிவினாலும் கனிகிறது. சுபாவமாகவே மென்மையான அவர்களுடைய உள்ளம் கல்வியினாலும் அறிவினாலும் அதிகமாக மென்மையடைந்து விடுகிறது. சுபாவமாகவே அவர்களுக்குள்ள அன்பு உணர்ச்சி அதிகரிக்கிறது” என்றாள் பாட்டி.

“அறிவு அதிகரிப்பதால் மனது முற்றுவது நல்லதா? அல்லது அன்பு கனிவது நல்லதா?”

“யார் சொல்ல முடியும்?” என்றாள் சுந்தாப்பாட்டி. ”உலகத்தின் கஷ்ட நிஷ்டூரங்களை எல்லாம் பார்க்கும் போது அறிவு முற்றி மனம் இறுகிக் கல்லாகப்போய், முனியாகவோ, யோகி யாகவோ ஜடமாக இருப்பவனே மேல் என்று தோன்றுகிறது. ஒவ்வொரு சமயம் அன்புக்கு ஈடானது வேறு எதுவும் இல்லை என்றும் தோன்றுகிறது. அன்பை ஆதர்சமாகக் கொண்டு வாழ்க்கையில் எவ்வளவு கஷ்டநிஷ்டூரமும் படலாம் என்று தோன்றுகிறது.

சிறிது நேரம் மௌனமாக இருந்துவிட்டுச் சுந்தாப்பாட்டி சொன்னாள்: “பெண்கள் கல்வி, அறிவு என்றால் இந்தக் காலத்தில் காலேஜில் படித்துப் பட்டம் பெறும் பெண்களைச் சொல்லவில்லை நான். அவர்களுடைய விஷயங்கள் முற்றிலும் இயற்கைக்கு விரோதமானவை; முழுவதும் கோணலானவை. எனக்கு அவர்களைப் பற்றி அவ்வளவாக ஒன்றும் தெரியாது. தெரிந்த மட்டும் சொன்னாலும் என் புது மாட்டுப்பெண் என்னிடம் கோபித்துக் கொண்டு சண்டைக்கு வந்து விடுவாள். அதனால் நான் அவர்களைப்பற்றி எதுவுமே சொல்லாமல் இருந்து விடுகிறேன்.”

“நீ சொல்லுகிறபடி கல்வி, அறிவு என்பதற்கு அர்த்தம்தான் என்ன?” என்று நான் கேட்டேன்.

“மகாபாரதம், ராமாயணம் போன்ற நூல்களை வாசிப்ப தற்கும், புரிந்து கொள்ளுவதற்கும் போதிய எழுத்து வாசனை; நமது நாட்டுச் சரித்திரங்கள், புராணங்கள் இவற்றைப் படித்திருக்க வேண்டும். சங்கீதமும் கொஞ்சம் வேண்டும்; குரல் நன்றாயிரா விட்டாலும் பாதகமில்லை; ராகபாவங்கள் தெரிந்திருந்தால் போதும். பூத்தொடுப்பது, கோலம் போடுவது போன்ற அலங்காரமான விஷயங்களும் தெரியவேண்டும். எல்லாவற்றையும் விட தெய்வ பக்தி மிகவும் அவசியம்; பாட்டு கோலம் அலங்காரம் எல்லாம் தெய்வத்தை ஒட்டிப் படிந்திருந்தால்தான் உண்மையிலேயே அழகுள்ளவையாக இருக்க முடியும். தெய்வத்துக்கு அடுத்த படியாகப் பெண் என்றால் கணவனிடமும் வீட்டுக் காரியங்களிலும் ஈடுபாடு இருக்க வேண்டும்” என்றாள் பாட்டி.

“பேஷ்! லக்ஷிய மாட்டுப் பெண்ணை நீ சிருஷ்டித்துக் கொண்டு விட்டாய்!” என்றேன் நான்.

“எனக்கில்லாத குணங்களை எல்லாம் அடுக்கிக் கொண்டே போனால் லக்ஷிய மாட்டுப்பெண் சிருஷ்டியாகி விடுகிறாள்” என்று சுந்தாப்பாட்டியின் புது மாட்டுப் பெண்ணான ராஜி (என் மனைவி) சொன்னாள்.

சுந்தாப்பாட்டி இதைக் காதில் வாங்கவேயில்லை. அவள் சொன்னாள் –

நம்மூரிலே வெகு நாளைக்கு முன் சுப்பா தீக்ஷிதர், சுப்பா தீக்ஷிதர் என்று ஒரு பெரியவர் இருந்தார். அவர் வேத சாஸ்திரங்களை எல்லாம் நன்கு பாராயணம் பண்ணியவர். தர்மம் நியாயம் எல்லாவற்றையும் நன்கு படித்து அறிந்தவர். ஆனால் இந்த அறிவு அவருடைய பொருளீட்டும் சக்திக்குக் குறுக்கே நிற்கவில்லை. வட்டிக்கு மேல் வட்டி வாங்கி லேவாதேவி செய்தும், அல் அயலுடன் அடாபிடியாகச் சண்டை செய்து வழக்காடியும், கொள்ளை லாபத்துக்கு ஊரார் நிலங்களைக் குத்தகை எடுத்தும், குடியானவர்களுக்கும் குத்தகைக்காரர்களுக்கும் நியாயப்படி உள்ளதைக் கொடுக்காமல் மோசடி செய்தும் சுப்பா தீக்ஷிதர் ஏராளமான ஆஸ்தி சேர்த்து விட்டார்.

இந்த ஆஸ்திக்கு வாரிசாக அவருக்கு நான்கு பிள்ளைகள் இருந்தார்கள். அவர்களில் மூத்தவர் சுப்பா தீக்ஷிதரின் மூத்த மனைவி வயிற்றில் பிறந்தவர். அவருக்கும் அவருடைய தகப்பனாருக்கும் என்றுமே பிடிக்காது. நாராயண தீக்ஷிதர் என்ற இந்த மூத்த பிள்ளை பரம சாது. பணக்காரத் தகப்பனுக்குப் பிறந்தும் ஏழையாகவே அவர் தம்முடைய குசேலக் குடும்பத்துடன் இதே ஊரில் வேறு வீட்டில் தனியாகக் குடித்தனம் செய்து வந்தார். சுப்பா தீக்ஷிதர் சுயார்ஜிதமான தம் ஆஸ்தியில் சிறிதுகூடத் தம் மூத்த பிள்ளைக்குக் கொடுக்கமாட்டார் என்பது ஊர் அறிந்த ரகசியமாக இருந்தது. உண்மையில் சுப்பா தீக்ஷிதர் தம் ஆஸ்திகளைத் தம் மற்ற மூன்று பிள்ளைகளுக்கும் சரிசமமாகப் பங்கிட்டு உயில் எழுதி வைத்திருந்தார் என்றுகூட ஊரில் சொல்லிக் கொண்டார்கள்.

சுப்பா தீக்ஷிதருக்கு இளையாளாக வந்து வாய்த்திருந்த லட்சுமி யை உண்மையிலேயே மகாலட்சுமி என்றுதான் சொல்லவேண்டும். அவள் உத்தமி. ஆனால் கணவன் செய்யும் காரியங்களுக்கு எதிர் நின்று தடுக்கும் சக்தி இல்லாதவள். தன்னுடைய மாற்றாள் பிள்ளை ஒதுங்கி வசிப்பது அவளுக்குப் பிடிக்கவில்லை . ஊரார் அதுபற்றி வம்பளக்கிறார்கள் என்பது மட்டுமல்ல; உண்மையிலேயே அவர்களும் தன்னுடன் வசிக்கவேண்டும் என்று அவளுக்கு ஆசை. ஆனால் அவள் என்ன செய்ய முடியும்? அந்தப் பிள்ளையும் தகப்பனும் அகஸ்மாத்தாக தெருவில் சந்திக்க நேர்ந்துவிட்டால் கூட நெருப்புப் பொறி பறக்க ஆரம்பித்துவிடுமே! வேறு ஒன்றும் செய்ய மாட்டாமல் லட்சுமி அம்மாள் ரகசியத்தில் தன் மாற்றாள் பிள்ளைக்கும் அவர் குடும்பத்துக்கும் தன்னால் ஆனதை எல்லாம் செய்து வந்தாள். அடிக்கடி கணவன் அறியாமல் அவர்கள் வீட்டுக்குச் சென்று வருவாள்; சமயம் நேரும்போது சாமான்கள் கொடுத்து உதவுவாள். பணம் காசு கொடுத்து உதவ அவளிடம் ஒன்றும் கிடையாது.

தன் கணவன் உயிரோடுள்ள வரையில் இழைத்த அக்கிரமங்கள் போதாதென்று இறந்த பிறகும் மூத்தாள் பிள்ளைக்கு அநீதி செய்ய முயலுகிறாரே என்று லட்சுமிக்கு மிகவும் வருத்தம். தம் மூத்த பிள்ளையை ஒதுக்கிவிட்டு மற்ற மூவருக்கும் தம் ஆஸ்தியைச் சரிசமமாகப் பங்கிட்டு அவர் உயில் எழுதியபோது அவள் தன்னால் ஆனவரையில் ஆக்ஷேபித்துப் பார்த்தாள். தர்ம நியாய சாஸ்திரங்களில் புலியான சுப்பா தீக்ஷிதர் அவள் பேச்சைக் காதில் வாங்கவே இல்லை.

உயில் எழுதி முடிந்து ரிஜிஸ்டர் ஆகப்போகும் தருணம் சுப்பா தீக்ஷிதர் தலையை வலிக்கிறது என்று படுத்தார். இரண்டு நாள் பேச்சு மூச்சு இல்லாமல் கிடந்தார். மூன்றாம் நாள் எதிர்பாராத விதமாக இறந்தும் போய்விட்டார்.

பாகப் பிரிவினை செய்ய வேண்டி வந்தபோது எல்லோருமாக சுப்பா தீக்ஷிதருடைய உயிலைத் தேடினார்கள். அது அகப்படவே இல்லை. அது எழுதிய அன்றே எங்கேயோ மறைந்து விட்டது. உயில் அகப்படாததால் ஆஸ்தியில் சரியான பங்கு நாராயண தீக்ஷிதருக்கும் கிடைத்து விட்டது. அதை லட்சுமியின் தயவு என்று அவர் அங்கீகரித்து ஏற்றுக் கொண்டார்.

உண்மையிலேயே அது லட்சுமி அம்மாளின் தயவுதான் என்பது பதினைந்து வருஷங்களுக்குப் பிறகு தான் தெரிந்தது. லட்சுமி அம்மாள் எச்சிப் பாட்டியாகிக் கணவன் இறந்து பதினைந்து வருஷங்களுக்கப்புறம், அதாவது போன வருஷம்தான், இறந்து போனாள். அவள் வீட்டில் எங்கேயாவது பவுனும் வெள்ளியுமாக ஒளித்து வைத்திருப்பாள் என்று அவருடைய பிள்ளைகளும் பேரன் பேத்திமார்களுமாக வீடெல்லாம் தேடினார்கள். காமரா உள்ளில் ஒரு முழுக்கல்லைப் போர்த்தெடுத்துப் பாதியாக உடைத்துப் பொறுக்கி வைத்திருந்த இடத்தில் ஏற்பட்டிருந்த வங்கில் ஒரு முழுப் பவுனும், ஏழெட்டு ரூபாய்களும், ஒரு மஞ்சள் சரடும், பழுப்பேறிய ஒரு கடிதமும் இருந்தன. இவைதான் எச்சிப்பாட்டி என்கிற லட்சுமி அம்மாள் விட்டுப்போன ஆஸ்தி.

பழுப்பேறிய அந்தக் கடிதம்தான் சுப்பா தீக்ஷிதரின் உயில். அது பல இடங்களில் செல்லரித்துக் கிடந்தது.

அவள் உயிருடன் இருந்தபோது போற்றியது போலவே நாராயண தீக்ஷிதரும் அவருடைய மனைவியும் குழந்தை குட்டிகளும் லட்சுமி அம்மாளை அவள் இறந்த பின்னும் தெய்வமாகவே போற்றுகிறார்கள்.

“எதிராளாத்து எச்சிப்பாட்டி கதையா இது?” என்றாள் சரோஜா, பாட்டியின் மடியில் வீற்றிருந்த படியே.

சிறிது நேரம் மௌனமாக இருந்துவிட்டு சரோஜா சொன்னாள்: “நெஜம்மாவே அந்தப் பாட்டி நல்லவள் தான்; இல்லையா? நேக்குத் தெரியுமே!” என்று தன் சொந்த குறுகிய அனுபவத்தைக் கொண்டு அவள் சொன்னாள்.

சுந்தாப் பாட்டியின் கண்கள் கலங்கியிருந்தன. எச்சிப் பாட்டியும் சுந்தாப் பாட்டியும் வெகு காலமாகவே தோழிகள் என்பது குழந்தைக்கு எப்படித் தெரியும்?

– 1943, க.நா.சு. சிறுகதைகள்

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *