அழகு தந்த வரம்!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 1, 2024
பார்வையிட்டோர்: 2,448 
 
 

தன்னுடைய அழகுக்கேற்ப மாப்பிள்ளை அமைய வேண்டும் என்பதில் மிகவும் பிடிவாதமாக இருந்தாள் மேனகை. பெயருக்கேற்ற அழகி தான். எடுப்பான மூக்கு, பல்வரிசை, அகலமான நெற்றி, நீண்ட கழுத்து, காந்தக்கண்கள், சிற்றிடை, மெலிந்த தேகம், சரியான உயரம் என  பிரம்மனின் படைப்பில் சாமுத்திரிகா லட்சணத்தை ஒரு சேர கொண்டிருப்பவள் தான். ஆனால் படிப்பு  ஏறாமல் பத்தாம் வகுப்பு முடித்த பின் வீட்டின் பஞ்சம் போக்க தினமும் முன்னூறு ரூபாய் கூலிக்கு பஞ்சு மில்லுக்கு வேலைக்குப்போகிறவள். 

ஒரு வாரம் பகலில் வேலை, ஒரு வாரம் இரவில் வேலை. பகலில் வேலை செய்தால் இரவில் தூங்குவதும், இரவில் வேலை செய்தால் பகலில் தூங்குவதும், வாரமானால் வரும் கூலிப்பணத்தை தாயிடம் கொண்டு வந்து ஒப்படைப்பதும் என வேலை, தூக்கம் தவிர வேறு எதுவும் சிந்தனை செய்ய நேரம் இல்லாதவளாய் காலம் கடத்தி வந்தாள்.

உள்ளூரிலேயே தாயின் தோழியின் மகன் நேசு நிறம் கருப்பாக இருந்தாலும் சொன்ன சொல் தட்டமாட்டான். வரதட்சணையும் கொடுக்க வேண்டியதில்லை. அரசாங்க வேலை. அன்னத்துக்கு பஞ்சம் இருக்காது. அவனுக்கே திருமணம் செய்து வைத்து விட்டால் தனக்கு உடல் நிலை சரியில்லாமல் போனாலோ, வேலை அதிகமிருந்தாலோ உடனே பக்கத்தில் இருந்தால் மகளை அழைத்துக்கொள்ள முடியும் என்கிற யோசனை பெற்ற தாய் வசந்திக்கு.

தந்தையோ ஒரு படி மேலே போய் வயது அதிகமிருந்தாலும் வசதியில் அதிகமான உறவினர் விந்தனுக்கு இரண்டாவது தாரமாக தன் மகளைக்கொடுத்து விட்டால் குடிப்பதற்கும், குடித்தனம் நடத்துவதற்கும் தேவைப்படும் போது பணம் வாங்கிக்கொள்ள முடியும் எனும் சுயநலத்தில் வீட்டில் தினமும் மனைவியிடம் சண்டையிட்டு வற்புறுத்தல்.

மேனகையின் தம்பி ரவிக்கு இன்னொரு கவலை. தனது காதலி ரணியின் அண்ணன் ராசுவுக்கு அக்காவைத்திருமணம் செய்து கொடுத்து விட்டால் அவளது வீட்டிற்கு போவதை யாரும் தடுக்க மாட்டார்கள், திருமணம் செய்வதிலும் எதிர்ப்பு வராது எனும் யோசனை. அதனால் அடிக்கடி ராசுவின் பெருமையை அக்காவிடம் பேசிக்கொண்டே அவளை சம்மதிக்க வைக்க முயன்று கொண்டிருந்தான்.

மேனகையின் மாமன் சுந்தரன் வெளியூரில் ஒருவரிடம் வாங்கிய கடனை அடைக்க முடியாமல் வீட்டை விற்கும் நிலையில் தன் சகோதரி மகள் மேனகையை கடன் கொடுத்தவருக்கு இருபது வருடம் வித்தியாசம் இருந்தாலும் கட்டிக்கொடுக்க சம்மதிக்க வைத்து விட்டால் கடனை முழுவதுமாகக்கட்ட வேண்டி இருக்காது எனும் சலுகை கடன் கொடுத்தவரிடமிருந்து தெரிவிக்கப்பட்டதால் அதற்கான வேலைகளில் சகோதரி வீட்டிற்கு அடிக்கடி வந்து போவதாக நடித்துக்கொண்டிருந்தார்.

இந்த நிலையில் மேனகை வேலைக்கு சென்றுகொண்டிருக்கும் மில் அதிபரின் மகனான தன் சகோதரன் ரஞ்சனுக்கு ஏழைப்பெண் மேனகையை திருமணம் செய்து  வைத்துவிட்டால் சொத்து பிரிப்பதில் பிரச்சினை வராது. ஏழைக்குடும்பத்திலிருந்து வந்தவள் என்பதால் கொடுப்பதை வாங்குவதில் எதிர்ப்பு இருக்காது. மேனகை அழகாக இருப்பதால் அவள் கூறுவதை சகோதரன் ஏற்றுக்கொள்வான் எனும் சூழ்ச்சியை மனதில் வைத்துக்கொண்டு தன்னுடன் வெளியில் அவளை காரில் அழைத்துச்செல்வதும், உடைகளை வாங்கித்தருவதும் என தனது விருப்பத்துக்கு கட்டுப்பட வைக்க தயாராகி வந்தாள் வைதேகி.

தன்னைச்சுற்றிலும் தன்னைப்பயன்படுத்த தயாராகி வந்தவர்களின் சதி வலையில் சிக்காமலும், தான் நினைப்பதை, தான் விரும்புவதை நிறைவேற்றத் தயாராகியிருந்தாள் மேனகை.

“செத்துப்போன மிருகத்தோட சதையைத்திங்கிற பறவைகள் வட்டமடிக்கிற மாதிரி என்னை வெச்சு பல பேரு அவங்க சுயநலத்துக்கு பயன்படுத்தப்பார்க்கறாங்க. இதுல என்னோட விருப்பம்னு எதையும் என்னைப்பெத்தவங்களே கேட்க மாட்டீங்கறாங்க‌” தன் மனம் கவர்ந்த உடன் வேலை செய்யும் உத்தமனிடம் மலைக்கோவிலில் அமர்ந்தவாறு தன் ஆதங்கத்தைக்கூறினாள் மேனகை.

அவள் பேசுவதைக்கேட்பதை விட அவளது அழகில் மதி மயங்கியவாறு பஞ்சபூதங்களில் கண்கள் மட்டும் இயங்க அனுமதி கொடுத்தவனாய் ஜடம் போல் அமர்ந்து முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தவனின் முகத்துக்கு முன் கையை ஆட்டி சகஜ நிலைக்கு கொண்டு வந்தாள் மேனகை.

“எந்த உலகத்துல இருக்கீங்க?”

“சொர்க்கலோகத்தில்…”

“இந்திர லோகத்து மேனகையோ என நினைத்தீர்களா…?”

“ஆம். அதிலென்ன சந்தேகம். உலக அழகிப்போட்டியில் கலந்திருந்தால் நீ தான் உலக அழகி”

“அழகு மட்டுமே ஒரு பெண்ணுக்கு நல்ல வாழ்க்கையை கொடுப்பதில்லையே….?”

“எதை வைத்து சொல்லுகிறாய்?”

“நீங்களும் அழகு, நானும் அழகு. இருந்தென்ன செய்வது? காலம் முழுவதும் பஞ்சு மில்லில் கூலி வேலைக்குச்சென்றே வாழ வேண்டுமே?”

“மில்லுக்கு முதலாளியாக முடியாதா?”

“இந்த ஜென்மத்தில் நடக்காத காரியம்”

“இப்பொழுதே சாத்தியமானால்…?”

“சத்தியமாகவா?”

” சத்தியம் எதற்கு? நிஜம்தானே….”

“பகல் கனவா…?”

“எல்லாம் நினைவில், நிஜத்தில் தான். நான் சம்பானி மில்லின் முதலாளியின் ஒரே வாரிசு…”

இதைக்கேட்டவுடன் மயக்கமே வரும் போல் இருந்தது மேனகைக்கு. ‘தான் வேலை பார்க்கும் மில்லை விட நூறு மடங்கு பெரிய மில். அங்கே வேலை கேட்டு கிடைக்காமல் தான் இந்த சிறிய மில்லில் வேலைக்கு சேர்ந்தாள். அந்த மில்லே தனக்கு சொந்தமாகப்போகிறதா….?’ தன்னைக்கிள்ளிப்பார்த்துக்கொண்டாள்.

“நீ என்னோட மில்லில் வேலைக்கு விண்ணப்பித்ததைப்பார்த்தேன். எனது மேனேஜரை வைத்து உனக்கு வேலை இல்லை என சொல்லச்சொன்னேன். அப்போது தான் நீ உன்னுடைய பகுதியில் உள்ள மில்லுக்கு வேலைக்குச்செல்வாய். என்னை யாரென தெரியாததால் நானும் உன்னுடன் வேலையில் சேர்ந்து உன்னுடன் நட்பாகலாம் என திட்டம் தீட்டினேன். காரணம் உன்னுடைய அழகில் நான் நீ வேலை கேட்க வந்த அன்றே உள் அறையிலிருந்து பார்த்து மயங்கிப்போனேன். இந்தப்பெண்ணைத்தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என உறுதியான முடிவெடுத்து நீ வேலைக்கு சேர்ந்த மில்லில் ஒரு வேலைக்காரனாக வேலைக்கு சேர்ந்தேன். உனக்கும் என்னைப்பிடித்துப்போனதால் எனது வேலை ஈசியானது” என உத்தமன் சொல்லச்சொல்ல அவன் இவளது அழகில் மயங்கி பேசாமல் இருந்தது போல, மேனகையும் அவன் பேசுவதை கண்சிமிட்டாமல் மனம் மயங்கிய நிலையில் நடப்பதெல்லாம் கடவுள் கொடுத்த வரம் என நினைத்தவாறு உத்தமனையே பார்த்து பூரித்துக்கொண்டிருந்தாள்.

Print Friendly, PDF & Email
ஆசிரியர் குறிப்பு: கோவை மாவட்டம் அன்னூரில் 1998 முதல் ஜோதிடம்,எண்கணிதம்,வாஸ்து ஆலோசனைகள் சொல்லி வருகிறார். அடிப்படையில் இவர் விவசாய குடும்பத்தைச்சேர்ந்தவர். தந்தையார் பெயர் ரங்கசாமி கவுண்டர் . தாயார் பெயர் ராமாத்தாள். பூர்வீகம் அன்னூர் அருகே உள்ள கரியாக்கவுண்டனூர். சிறுவயதிலேயே தந்தை காலமானதன் காரணமாக,படிப்பு தடை பட்டுப்போனதால்,பின்னர் சென்னை பல்கலைக்கழகத்தின் தொலைதூர கல்வி மூலமாக இளங்கலை வரலாறு தமிழ் வழியில் பயின்றுள்ளார். தாய் 2020ல் காலமாகி விட்டார். மனைவி டிப்ளமோ…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *