அந்தி
கடற்கரையில் இருள் கவிந்துவிட்டது. எல்லையற்ற கருநீல நீர்ப்பரப்பின் மேல் தரங்கப் பாய்கள் சுருண்டு சுருண்டு கரையைத் தொட்டுத் திரும்பிக் கொண்டிருந்தன. ரொட்டி, பட்டாணி விற்றுக் கொண்டிருந்த இரண்டொரு சிறுவர்களும் கடையைக் கட்டிக் கொண்டு போய்விட்டனர். பீச் ரோடிலிருந்து மெரீனா சாலையில் திரும்பும் கார்களின் விளக்கொளி இடையிடையே இருள் மூட்டத்தை ஊடுருவியது. கடற்கரை விளக்குகள் எரிந்து கொண்டுதான் இருந்தன. விளக்குக்கு அப்பால் தொலைவில் தள்ளி உட்கார்ந்திருந்தேன்.
கடல், அலை, ஓசை, இருள், நான் எல்லோரும் இருந்தோம். நிம்மதி, அமைதி, ஒளி, எல்லாம் இல்லை.
அடி மாலா! நீ என் வாழ்வில் ஏனடி குறுக்கிட்டாய்? எவ்வளவு வேகமாகக் குறுக்கிட்டாயோ அவ்வளவு வேகமாகப் போய்விட்டாயே! இரக்கமில்லாமல் தூண்டில்காரன் கரையில் இழுத்துப் போடும் மீன் போல என்னை இழுத்தெறிந்து விட்டு நீ எங்கே போனாய் ? போவதுதான் போனாய்! இந்த முடவன்கூட வர முடியாத இடத்துக்கு ஏன் போனாய்? எல்லாம் இறுகிப் போன கல்லாயிருந்தவனை நீ வந்து மலர் ஆக்கினாய்! போகிற போக்கில் அந்த மலரை ஏன் நெருப்பில் போட்டாய்?
ஆசையே இல்லாதவனுக்கு ஆசையை எதற்காக உண்டாக்கினாய்? ஐயோ, நீ பெண் இல்லையடி! சிரிப்பும் கும்மாளமுமாகத் திரியும் வெறும் யுவதி இல்லையடி திரிபுராந்தகனை ஆட்டி வைத்த ஆதி பரையின் மூல அணுவின் கோடானு கோடி பின்னங்களில் நீயும் ஒரு பின்னமா?
என்னைச் சோதிக்க வந்தாயா? என் நாதத்தைச் சோதிக்க வந்தாயா? அல்லது உன்னையே சோதித்துக் கொள்ளத்தான் வந்தாயா? எதற்காக வந்தாய்? ஏன் போய் விட்டாய்?
இந்த மூடவனோடு விளையாடவந்தாய் விளையாட்டு முடிந்தது போய்விட்டாய். போனதுதான் போனாய், உன்னைப் பற்றிய நினைவுகளையும் கொண்டு போயிருக்கக்கூடாதா? அவற்றை ஏன் என்னிடம் விட்டுவிட்டுப் போனாய்?
உதயம்
வாடின பூவின் மணத்தைப் போல இப்போதும் அந்தப் பழைய நினைவுகளை மங்கலாக எண்ணிப் பார்க்கிறேன். நீ வந்தது, வாழ்ந்தது, போனது எல்லாம் இன்னும் பசுமையாக நினைவிருக்கின்றன.
ஐப்பசி மாதத்தில் ஒருநாள் காலை நேரம். வெளியே மழை பிசுபிசுவென்று தூறிக் கொண்டிருந்தது. வீணையை எடுத்து வைத்து என்னை மறந்த லயிப்பில் ஒன்றிச் சாதகம் செய்து கொண்டிருந்தேன். அப்போதுதான் என் நண்பரும் அந்தப் புதிய மனிதரும் என்னைத் தேடி வந்தார்கள். முழங்கைக்குக் கீழே முடமாயிருந்த இடது கையை மேல் துண்டால் மறைத்துக் கொண்டு அவர்களை வரவேற்றேன்.
“சார்! இவருடைய மருமகள் ஒரு பெண் இருக்கிறாள். தாயாரும் கிடையாது, தகப்பனாரும் கிடையாது; இவர்தான் வைத்துக் காப்பாற்றிக் கொண்டிருக்கிறார். ஹைஸ்கூல் படிப்பு வரை படித்திருக்கிறாள். நல்ல சங்கீத ஞானமும் லயமான, சாரீரமும் இருக்கின்றன. நீங்கள் மனம் வைத்துக் கொஞ்சம் சங்கீத ஞானத்தை விருத்தி பண்ணிவிட்டால்…”
“நான் பெண்கள் யாருக்கும் சொல்லிக் கொடுக்கிற வழக்கமில்லையே!… இப்பொழுது வரவர டியூஷன்களையே குறைத்துக் கொண்டுவிட்டேன். தற்சமயம் யாருக்குமே சொல்லிக் கொடுக்கவில்லை.”
அந்தப் புதிய மனிதருக்குப் பதில் கூறுவதுபோல் என் நண்பரைப் பார்த்துக் கூறினேன் நான்.
“இல்லை! நீங்கள் அப்படிக் கண்டிப்பாக மாட்டேன் என்று சொல்லிவிடக் கூடாது. இப்படி ஏதாவது ஒரு வழியில் அந்தப் பெண் முன்னுக்கு வந்தால்தான் உண்டு. இவரும் அவ்வளவாக வசதி நிறைந்த ஆள் இல்லை. இவருக்கே மூன்று பெண்கள் கலியாணத்துக்குக் காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் மருமகள் கலியாணத்தைக் கவனிக்க இவரால் எங்கே முடியப் போகிறது?”
“அதற்கு நான் என்ன செய்யலாம்?”
“இல்லை! ஒரு திக்கற்ற பெண்ணுக்குச் செய்யும் நல்ல உபகாரமாக இதை நீங்கள் கருத வேண்டும்.”
“நீங்கள் சொல்கிறது எனக்குப் புரிகிறது ஐயா! என்னிடம் சங்கீதம் படித்துக்கொண்டு போனால் அந்தப் பெண் கச்சேரி செய்து வாரிக் குவித்து விடுவாள் என்ற எண்ணமா உங்களுக்கு?”
“அப்படியெல்லாம் ஒன்றும் தவறாக நினைத்துக்கொள்ளக்கூடாது. இதில் ஆர்வ மிருக்கிறது. படித்து முன்னுக்கு வரட்டுமே என்றுதான்… நீங்கள் என்னுடைய தாட்சண்ணியத்திற்காகவாவது இந்தப் பெண் விஷயத்தில் கொஞ்சம் அக்கறை காட்ட வேண்டும்.”
என் நண்பர் குழைந்தார். குரல் மட்டுமல்ல, முகமும் குழைந்து கெஞ்சுகிற பாவனையில் நின்றது.
“ஏதோ சங்கீதம் உண்டு; நான் உண்டென்று தனிக் கட்டையாய்க் காலம் தள்ளிக் கொண்டு வருகின்றேன். என் தலையில் கொண்டு வந்து சுமையைக் கட்டுகிறேன் என்கிறாயே!”
“சுமையில்லை, ரகு! அந்தப் பெண் பாடிக் கேட்டால் நீயே பிரமித்துப் போவாய். ‘மாட்டேன்’ என்றே சொல்லத் தோன்றாது உனக்கு.”
“என்னவோ அப்பா! உன் சிபாரிசைத் தட்டுவதற்குத் தயங்க வேண்டியிருக்கிறது… இன்னொரு விஷயம்! எனக்கு மூடி மறைத்துச் சொல்லத் தெரியாது!”
“என்ன? சொல்லேன்…”
“நான் தனி ஆள். கட்டைப் பிரம்மச்சாரி. ஒரு வயது வந்த பெண் என்னிடம் சங்கீதம் படிக்க வந்து போகிறாள் என்றால் அக்கம் பக்கத்தில் நாலு பேர் நாலு விதமாகப் பேசுவார்கள். அதற்காகத்தான் பெண்கள் டியூஷனை இதுவரை நான் ஏற்றுக்கொண்டதே இல்லை!”
“நமக்கு உறுதியும் நல்லெண்ணத்தினால் வைரம் பாய்ந்த மனமும் இருக்கும்போது அக்கம் பக்கத்தார் பேசுவதைப் பற்றி என்ன கவலை?”
“எனக்குக் கவலை இல்லை. நான் கை நொண்டி, சங்கீதம் ஒன்றைத் தவிர வாழ்க்கையில் வேறெல்லாவற்றையும் வெறுத்தவன்.”
“எனக்கும் அப்படித்தான்! உங்களை நான் பரிபூரணமாக நம்புகிறேன். எப்படியாவது அந்தப் பெண்ணின் கலாஞானத்தை விருத்தி செய்துவிடுங்கள்.” நண்பருடன் வந்திருந்தவர் (அதாவது உன் மாமா) கூறினார்.
“பெண்ணின் பெயர்?”
“மாலா…”
“வயது என்ன இருக்கும்?”
“இந்த மார்கழிக்குப் பதினாறு முடியப் போகிறது.”
“கீர்த்தனைகள் – சில்லறைப் பாட்டுக்கள் – ஏதாவது மனப்பாடம் உண்டா ?”
“ஏதோ கொஞ்சம் படித்திருக்கிறாள்.”
“நல்லது! சாயங்காலம் ராகுகாலத்திற்கு முன்பாகக் கூட்டிக் கொண்டு வாருங்கள்! பரீட்சித்துப் பார்த்து விட்டுச் சொல்கிறேன்.”
“கண்டிப்பாக ஏற்றுக்கொள்ள வேண்டும். அவளுக்கு நீங்கள் தான் கதி. சாயங்காலம் ஐந்து மணிக்கு மேல் அழைத்துக் கொண்டு வருகிறோம்.”
“வாருங்கள்! பார்க்கலாம்…”
நண்பரும் வந்தவரும் விடைபெற்றுக்கொண்டு சென்றனர். நான் வீணையை எடுத்து உறை போட்டு மூடி வைத்துவிட்டுக் குளிக்கச் சென்றேன். வாழ்நாளிலேயே இதுவரை அடைந்திராத புதிய அனுபவம் ஒன்று என்னை நோக்கி வந்து கொண்டிருப்பதுபோல எனக்குள் ஒரு கலவரம். மனத்தில் எண்ணங்களின் அலை மோதல்.
ஒளி
மாலை ஐந்தேகால் மணி. மழை மூட்டமாக இருந்ததனால் உள்ளே பொய் இருட்டுப் படர்ந்திருந்தது. விளக்குகளைப் போட்டேன். வாசனை ஊதுபத்திகள் நாலைந்தை எடுத்து ஸ்டாண்டில் கொளுத்தி வைத்தேன். விளக்கொளியில் சுருள் சுருளாக எழுந்த ஊதுபத்தியின் புகை வளையங்கள் ‘கமகம்’ வென்று சுகந்தத்தைப் பரப்பின.
உறையைக் கழற்றிவிட்டு வீணையை ஜமுக்காளத்தில் எடுத்து வைத்துக் கொண்டு உட்கார்ந்தேன்.
அப்போது அந்த இனிய நேரத்தில் நீ உன் மாமாவோடு அங்கே வந்தாய். உங்களோடு என் நண்பரும் வந்திருந்தார். முதல் முதலாக உன்னைப் பார்த்தபோதே நீ என்னைக் கவர்ந்துவிட்டாய். அழகும் இனிமையும் நிறைந்த ராகங்களெல்லாம் ஒரு பெண் வடிவு பெற்று எனக்கு முன் நிற்பதுபோல் தோன்றினாய் நீ. கரு வண்டுகளைப் போன்ற உன்னுடைய அந்தக் கண்கள், தந்தத்தில் செதுக்கிப் பொருத்தினது போன்ற நாசி, ரோஜா மொட்டுக்களைப் போன்ற இதழ்கள், தவள சந்திரன் போன்ற வட்டவடிவமான முகம், கரு கருவென்று கீறி விட்டாற் போன்ற புருவங்கள்; அவற்றின் இடையே கருஞ்சாந்துப் பொட்டு!
அடி மாலா! நீ பெண்ணாகவா எனக்கு முன் வந்து நின்றாய்? சங்கீதக் கலையின் அதி தேவதையைப் போல அல்லவா வந்து நின்றாய்!
“அம்மா, மாலா! இவர்தான் உனக்குக் குரு. இவருக்கு நமஸ்காரம் பண்ணு.” உன் மாமா கூறினார். தாமரைப் பூவோடு கூடிய வஞ்சிக் கொடி ஒன்று குனிந்து நமஸ்காரம் செய்வதுபோல நீ எனக்கு நமஸ்காரம் செய்தாய்.
என் இடது கையை மறைத்துக் கொண்டிருந்த அங்கவஸ்திரம் நழுவியது. அந்த ஊனம் உன் கண்ணில் பட்டுவிடக்கூடாதே என்பதற்காக அவசர அவசரமாக அதை அங்கவஸ்திரத்துக்குள் மறைத்துக் கொண்டேன்.
நீ அன்று நீலமேகத்தின் நிறத்தில் ஒரு வாயில் புடவையைக் கட்டிக் கொண்டிருந்தாய். கருநாகமாகப் பின்னித் தொங்கவிட்டிருந்த ஜடையின் உச்சியில் மல்லிகைப் பூச்சரத்தை அள்ளிச் சொருகியிருந்தாய்.
உன் மாமாவும் என் நண்பரும் முன்பே ஜமுக்காளத்தில் உட்கார்ந்து கொண்டு விட்டனர். நீ மட்டும் மரியாதையை நினைத்தோ என்னவோ, அடக்க ஒடுக்கமாகக் குனிந்த தலை நிமிராமல் நின்று கொண்டிருந்தாய்.
“உட்கார்ந்து கொள்!..” மெல்லிய குரலில் சொன்னேன். நீ உடனே ஜமுக்காளத்தில் உட்கார்ந்து கொண்டாய். எனக்கு முன் வீணை; வீணைக்கு முன் நீ!
மாலா! நீ அப்போது எப்படி உட்கார்ந்து கொண்டிருந்தாய் தெரியுமா? நவராத்தியின் போது கோயிலில் அம்மனின் தங்கச்சிலைக்கு அலங்காரம் செய்து வைப்பார்களே தெரியுமா? அதேபோல – ஆனால் உயிருள்ள ஒரு தெய்வச் சிலையாக அழகெல்லாம் திரண்ட பிம்பமாய் நீ எனக்கு முன் உட்கார்ந்து கொண்டிருந்தாய் எனக்கு அப்படியே உன்னைப் பார்த்துக் கொண்டிருக்க வேண்டும் என்று ஆசை ஆனால் உன் மாமா இருந்தார்; என் நண்பர் இருந்தார். ஆசையை வெட்கம் அடித்துவிட்டது. துணிவு பதுங்கிக் கொண்டது.
“தமிழ்க் கீர்த்தனம் தெரிந்தால் ஏதாவது ஒன்று பாடு, பார்ப்போம்!” உன்னை நேரடியாக ஏறிட்டுப் பார்க்கத் துணிவில்லை. எங்கோ பார்த்துக் கொண்டு தான் இப்படிச் சொன்னேன். நீ கொஞ்சம் யோசித்தாய் போலிருக்கிறது. நான் வீணையை உன் பக்கமாக நகர்த்தினேன்.
உன் மாதுளை மொட்டுப் போன்ற விரல்கள் வீணைத் தந்தியின் மேல் படிந்தன. “நமக்கினி நம பயமேது? – தில்லை நடராஜன் இருக்கும் போது..”
நந்தனார் சரித்திரக் கீர்த்தனை உன் கண்டத்திலிருந்து கணீரென எழுந்தது. வீணையின் ஒத்துழைப்பு அபாரம்! நீ பாடினாய், இல்லை; அமுதத்தை வர்ஷித்தாய்.
சதைப் பிண்டமாகிய சாதாரணத் தொண்டையிலிருந்து பிறந்த வெறும் குரலா அது? அமுதம், குயில், தேன், பால், கற்கண்டு, எல்லாமாகிய கலப்பின் இனிமைக் கிளர்ச்சி அல்லவா அது?
மாலா! அன்றைக்கு அந்த ஒளி மங்கிய மாலை நேரத்தில் ஜடப்பொருளான எனது வீணையின் தந்திகளை மட்டுமா நீ வருடினாய்? அல்ல! உன் எதிரே கல்லாய், சிலையாய், உணர்வை எல்லாம் பறி கொடுத்து வீற்றிருந்த என் இதயத்தின் அணு அணுவான மெல்லிய நரம்புகளையெல்லாம் அல்லவா மீட்டினாய்?
“என்ன சார்? இவள் சாரீரம் எப்படி?” உன் மாமாவின் குரல் என்னை இந்த உலகிற்குக் கொண்டு வந்து சேர்த்தது. நீ பாடி நிறுத்தியிருந்தாய். அலர்ந்த ரோஜாவின் நிலையில் பனித்துளிகளைப் போல் உனது செம்பொன் நிறமான முகமண்டலத்தில் முத்து முத்தாக வியர்வைத் துளிகள் அரும்பியிருந்தன. உனது மாமாவின் கேள்விக்கு நான் கூறப்போகும் பதிலை அறிந்து கொள்ளும் ஆர்வத்தால் உன் விழிகள் குனிந்த நிலை நிமிராமலே என் முகத்தை ஒருக்கொளித்துப் பார்த்தன.
“சாரீரமா? இது சாதாரண சாரீரமில்லை. தெய்வீக சாரீரம்! இவளுக்குச் சொல்லிக் கொடுக்காவிட்டால் அந்தப் பாவம் ஏழேழு ஜன்மத்துக்கு என்னைச் சும்மா விடாது.” இப்படிச் சொல்லிவிட்டு ஜாடையாக உன் முகத்தைப் பார்த்தேன் நான். இருப்பிடம் தெரியாமல் மணக்கும் மனோரஞ்சிதப் பூவின் மணத்தைப் போல உதடுகள் அசையாத நுணுக்கமான நாணங்கலந்த புன்னகை ஒன்று இதழ்களிடையே நெளிவதைக் கண்டேன். அதே சமயத்தில், கயல்மீன்களைப் போல பாலைப் பூசி நடுவே கருமணி பதித்தாற்போல், நெஞ்சை அள்ளும் உனது நயனங்களை எனது நயனங்களால் துழாவினேன்.
உன் விழிகளில், விழிகளின் மையமான கரு மணிகளில், கருமணிகளின் நுண்ணொளியில் – அந்த நுண்ணொளியின் பொருளில், பொருள் வரம்புக்கு உட்படாத ஒரு மெல்லிய உணர்வு கிளர்ந்து கொண்டிருந்தது. அது எனக்கு மட்டும் புரிந்தது.
இப்போது மீண்டும் என் தோள் துண்டு நழுவியது! கவனக்குறைவாக இருந்துவிட்டேன். அந்த நொண்டிக்கை…. அதை நீ பார்த்துவிட்டாய்… தவறு… நீ பார்க்கும்படியான ஒரு சந்தர்ப்பத்தை என் அஜாக்கிரதையினால் ஏற்படுத்திக் கொடுத்துவிட்டேன்.
நீ பார்க்கவிடக்கூடாது என்று எதை ஜாக்கிரதைப்படுத்தினேனோ அதையே பார்த்துவிட்டாய்! என்னுடைய இந்த ஊனம் உன்னிடம் பயத்தையும், பரிதாபத்தையும் ஒரே சமயத்தில் உண்டாக்கியிருக்கிறது என்பதை உன் விழிகளின் சலனத்திலிருந்து நான் புரிந்து கொண்டேன். என்னுள் ஒரே குமுறல்; நீ என்னைப் பற்றி என்ன நினைக்கிறாயோ என்ற கொந்தளிப்பு இனம் புரியாத ஏக்கம். நான் ஒரு முடவன்! ஐயோ நான் ஏன் முடவனானேன்?…
“அப்போ … நாளைக்கு முதல் தேதி. நாளையிலிருந்து டியூஷனைத் தொடங்கிவிட்டால் கணக்காக இருக்கும்.” உன் மாமா மீண்டும் குறுக்கிட்டார்.
“ஆகா! அப்படியே செய்வோம். நாளைக்கு இதே வேளைக்கு அனுப்பிவிடுங்கள். உங்களிடம் வீணை இருந்தால் கொடுத்து அனுப்புங்கள்; இல்லையானால் அதற்காக இப்போது பணம் செலவழித்து வாங்க வேண்டாம். இருக்கிறது. இதை வைத்துப் பார்த்துக் கொள்ளலாம் ” நான் மறுமொழி கூறினேன். உன் மாமா எழுந்தார்.
“வாம்மா, போகலாம். குருவுக்கு நமஸ்காரம் பண்ணிவிட்டு எழுந்திரு.” உன் மாமா உன்னை அழைத்தார். மேல் துண்டின் மறைவிலிருந்த என் நொண்டிக் கை வெட வெட’ என்று புறாவின் சிறகுகள் குளிரில் உதறுவது போல நடுங்கின.
நீ எழுந்திருந்தாய். நமஸ்காரம் செய்தாய். நமஸ்காரம் செய்வதற்காகக் குனியும் போது உன் கண்கள் என்னிடம் – எனது முகத்தில் எதையோ தேடின!
அப்புறம்? அப்புறம் என்ன? நீயும் உன் மாமாவும் நண்பரும் விடைபெற்றுக் கொண்டு போய்விட்டீர்கள்.
சாயை
சாயை! எதனுடைய சாயை? காலத்தின் சாயை! எண்ணங்களின் சாயை! காலத்திலும் எண்ணத்திலும் குழம்பி உன்னை நானும் என்னை நீயும் புரிந்து கொண்டோமே; அந்த மனோரம்மியமான உணர்வின் சாயை!
ஒன்றா? இரண்டா ? ஒன்பது மாதங்கள்! நீ என்னிடம் படிக்க வந்து முக்கால் வருஷம் ஆகிவிட்டது. ஆகா! இந்த நாட்கள், இந்த வாரங்கள், இந்த மாதங்கள், இவைகள் யாரைத் தேடி ஓடுகின்றன? இவைகளுக்கு ஏன் இவ்வளவு வேகம்? எதற்காக இந்தக் கொள்ளை போகிற அவசரம்?
பழகப் பழக எண்ணங்கள் நெருங்கி விடுகின்றன. பயம் குறைந்து விடுகிறது. வெட்கம், நாணம் சங்கோஜம், எல்லாம் மாறிவிடுகின்றன. ஆரம்பத்தில் எந்த இடது கையின் ‘ஊனம்’ உனக்குத் தெரியக்கூடாதென்று மறைத்தேனோ, அந்த நொண்டிக் கையை மேல் துண்டால் மறைப்பதையே விட்டுவிட்டேன். முழுப் பூசணிக்காயைச் சோற்றில் மறைக்கமுடியுமா? மறைத்துதான் ஆகப் போவதென்ன?
என்னிடம் நாதம் இருக்கிறது. அதிசயமான சங்கீதக் கலையை உபாசித்து வருகிறேன். அதைக் கற்றுக்கொள்வதற்காகத்தானே நீ வந்தாய்? என் கைகளும் கால்களும் சாமுத்திரிகா லட்சணத்தோடு இருக்க வேண்டுமென்பதைப் பரிசோதிப்பதற்காக நீ வரவில்லையே? இப்போதெல்லாம் மேல் துண்டே போட்டுக் கொள்ளாமல் திறந்த மார்போடுதான் பாட்டுச் சொல்லிக் கொடுக்கிறேன். இடது கை ஊனம் ; முழங்கைக்குக் கீழே ஒன்றுமில்லாத சூன்யம்; சூம்பிப் போன நீண்ட வெள்ளரிக்காய் மாதிரி; அதை நீ சதா பார்ப்பது போலவும், பார்க்காதது போலவும் நேரடியாகவும் மறைமுகமாகவும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறாய்! அதுவும் எனக்குத் தெரியும்!
நான் அதைப் பற்றிக் கவலைப்படுவதில்லை. உன்னைப் பற்றிக் கவலைப் பட்டிருக்கிறேன். உன் அழகை நினைத்து ஏங்கியிருக்கிறேன். பொய்யில்லை. உண்மையாகத்தான். உன் இனிய குரலை நினைத்து, அந்தக் குரலுக்குக் கலை வரம்பு கட்டிக் கொடுக்கும் குருவாக நான் அமைந்ததை எண்ணி, உள்ளூறப் பெருமிதப் பட்டிருக்கிறேன். இதெல்லாம் வாஸ்தவம்.
ஆனால், மாலா! நீ ஒரு அழகான யுவதி. நான்…நான்… நான்? அழகு முகத்தில் மட்டும் இருப்பதானால் உன்னைப் போலவே அழகன் தான்! கை முடமான அழகன்! கை முடமானவனை யாராவது அழகனென்று ஒப்புக்கொள்வார்களா?
எப்படித்தான் எனக்கு அவ்வளவு துணிவு வந்ததோ? ஸ்வரங்களை வரிசைப்படுத்தி எழுதிக் கொள்வதற்காகவும் புதிய பாட்டுக்களைக் குறித்துக் கொள்வதற்காகவும் நீ ஒரு கனத்த நோட்டுப்புத்தகம் கொண்டு வருவாய். அன்று மறந்து போய் அந்த நோட்டுப் புத்தகத்தை என் அறையிலேயே விட்டு விட்டுப் போய்விட்டாய்.
என் உள்ளத்தின் ஊமைக் கனவுகள், அனுராகச் சிந்தனைகள் இவைகளுக்கெல்லாம் அன்றைக்கு ஏன்தான் அவ்வளவு வெறி பிடித்தனவோ? அந்த நோட்டுப் புத்தகத்தை எடுத்தேன்! என் நெஞ்சத்தின் குமுறல்களை எல்லாம் எழுத்தாக்கினேன். மறுநாள் வழக்கம்போல நீ வந்தாய் பாடம் முடிந்தது. நீ வீட்டிற்குப் போகும்போது ஒன்றும் தெரியாதவனைப் போல நடித்துக் கொண்டு என் ஆசைகளையெல்லாம் கொட்டி மெழுகியிருக்கும் அந்த நோட்டுப் புத்தகத்தை உன்னிடம் கொடுத்தேன்.
“மாலா! நேற்று இதை மறந்து போய் வைத்து விட்டுப் போய் விட்டாயே? இந்தா! இதில் கடைசிப் பக்கத்தில் புதிய பாட்டு’ ஒன்று எழுதியிருக்கிறேன். வீட்டுக்குப் போனதும் தனியாக உட்கார்ந்த பிரித்துப் பார்…”
“ஆகட்டும் சார்! பார்க்கிறேன்…”
“அவசியம் பார் மாலா! மறந்துவிடாதே…”
“கட்டாயம் பார்க்கிறேன் சார்! வீட்டுக்குப் போனவுடன் பார்க்கிறேன்.” என் நெஞ்சு படக் படக் கென்று அடித்துக்கொண்டது. அது ஏனோ? நீ சிரித்த முகத்தோடு விடைபெற்றுக் கொண்டு போனாய்! உன் மாமா பார்த்துவிட்டால்?… அல்லது உன் மாமாவின் பெண்கள் யாராவது பார்த்துவிட்டால்….? ஐயையோ! நான் ஏன் அப்படிச் செய்தேன்? என் மனம் பதைபதைத்தது. அதன்பின் அன்று இரவு முழுவதும் எனக்கு உறக்கமே இல்லை. என்னென்னவோ பயங்கரமான கற்பனைகள் ! என்னென்னவோ பதைப்புகள்! என்னென்னவோ நடுக்கங்கள்!
மறுநாள் மாலை. அன்று வெள்ளிக்கிழமை. வழக்கமாக நீ வருகின்ற நேரமும் கடந்து அதற்கு மேலும் ஆகிவிட்டது. நீ வரவில்லை. என் மனத்தில் மெல்ல நடுக்கம் தலைகாட்டியது. அசட்டுத்தனமாக நான் எழுதிய கடிதத்தின் விளைவு என்ன ஆயிற்றோ? உன் வீட்டில் என்ன கலவரத்தை உண்டாக்கிவிட்டதோ? உன் மாமாவும் மாமியும் மற்றவர்களும் என்னென்ன பழிகளைச் சொல்லி உன் முகத்தில் இடிக்கிறார்களோ? நேரம் ஆக ஆக நான் பொறுக்க முடியாத வேதனைக்கு ஆளானேன்.
மாலை ஆறரை மணிக்கு மேலும் ஆகிவிட்டது. நான் சற்றும் எதிர்பாராதவிதமாக உன் மாமாவும் என் நண்பரும் பரபரப்பாக உள்ளே நுழைந்தார்கள். உண்மையாகவே சொல்கிறேன். அப்போது அவர்கள் வரவு என் அடிவயிற்றில் புளியைக் கரைத்தது. உடம்பில் உதறலெடுத்துவிட்டது.
நல்லவேளை! அப்படி ஒன்றும் மானக்கேடாக நடந்துவிடவில்லை. என் நண்பர் தான் முதலில் பேச்சை ஆரம்பித்தார்.
“சார்! இன்றைக்கு வெள்ளிக்கிழமை. நல்ல நாளாக இருக்கிறது. உங்கள் ஜாதகம் இவருக்கு வேண்டுமாம். கொடுக்கிறீர்களா?”
எனக்கு என் காதுகளையே நம்ப முடியவில்லை. தூக்கிவாரிப் போட்டது. கனவா? நனவா? எதுவென்றே புரியவில்லை.
“ஜாதகமா?.. எதற்கு?…”
என் நண்பர் கண் இமைகளை மூடித் திறந்து குறும்புத்தனமாகச் சிரித்தார். “என்ன சார்? ஒன்றும் தெரியாதவரைப் போலக் கேட்கிறீர்களே?” “இல்லை! இல்லை! என்னை விட்டுவிடுங்கள். நான் ஏதோ அசட்டுத்தனமாக அப்படி எழுதியிட்டேன். மாலாவின் அழகுக்கு நான் சற்றும் பொருத்தமே இல்லை. நான் முடவன்!” – நான் வாய்விட்டு அழாத குறையாக அலறினேன். கதறினேன். ஆனால் உன் மாமாவோ என் நண்பரோ அந்த அலறலையும், கதறலையும் இலட்சியமே செய்யவில்லை.
“நீங்கள் விட்டுவிடத் தயாராக இருக்கலாம். ஆனால் அந்தப் பெண் மாலா உங்களை விடத் தயாராயில்லையே? உங்கள் கலைக்கு அடிமையாக இருந்தவள், இப்போது உங்கள் வாழ்க்கைக்கும் அடிமையாக விரும்புகிறாள்.”
“அவள் இளம் பெண்; சிறியவள், அறியாதவள். நானும் ஏதோ வெறியில் தத்துப்பித்தென்று எழுதி அவள் மனத்தில் ஆசைக் கனலை மூட்டியிருப்பேன். என்னை மன்னித்துவிடுங்கள். அவளுக்கு ஏற்றவனே இல்லை நான்.”
என் பேச்சை யாருமே கேட்கவில்லை. இறுதியில் நான்தான் தோற்றேன். என் ஜாதகத்தை உன் மாமாவிடம் கொடுத்தேன். மறுநாளும் நீ பாட்டுக்கு வரவில்லை. நம்முடைய அந்தக் கல்யாணம் நடக்கின்றவரை வரவே இல்லை!
வீட்டுக்கே வரப்போகிறவள்; பாட்டுக்கு வராவிட்டால் என்ன என்று பேசாமல் இருந்துவிட்டேன். என் மனத்தோடு எண்ணங்களும் கனவுகளும் சேர்ந்து துடித்திருக்கும். ஏன்? ஏங்கக்கூட ஏங்கியிருக்கலாம்!
கனவா? வேடிக்கையா? அல்லது என்றோ மலர்ந்து வாடிப்போன வெறும் கற்பனையா? அந்தக் கலியாணம் – ‘நீயும்’ ‘நானும்’ ‘நாமாக’ மாறி, உன்னையும் என்னையும் பிணைத்த அந்தத் தாம்பத்ய உறவு மெய்யாகவே வடபழநியில் முருகன் திருமுன் நடந்துவிட்டது.
“ஏழையானால் என்ன? தாலி கட்டுவதற்கும் இன்னொரு ஏழை இந்தப் பரந்த உலகத்தில் கிடைக்காமலா போய்விட்டான்? ரதி மாதிரிப் பெண்ணை வளர்த்து இப்படி ஒரு நொண்டியாய்ப் போனவனுக்கா கொடுப்பார்கள்?”
“யார் கொடுத்தார்கள்? அந்தப் பெண்தான் அவனைத் தவிர வேறு யாரையும் பண்ணிக்கமாட்டேன் என்று பிடிவாதம் பிடித்ததாம்.”
“பாடிப் பாடிப் பாட்டுச் சொல்லிக் கொடுக்கிற சாக்கில் அந்த நொண்டி அவளை அப்படி மயக்கிவிட்டான் போலிருக்கிறதே! அதனால்தான் இப்படி நடந்திருக்கிறது.”
ஊர் உலகத்தில் உனக்கும் எனக்கும் நடந்த திருமணத்தைப் பற்றி என்னென்னவோ பேசினார்கள். இந்த உலகத்தில் பேசுகிற வாய்களுக்கும், கேட்கிற காதுகளுக்கும் வியவஸ்தை என்று ஏதாவது இருந்தால்தானே?
நீ என் வீட்டுக்கு விளக்கேற்று வந்தாய இருளை மட்டுமா போனா என் இதயத்தைப் பற்றுள்ளதாக மாற்றினாய்! பாசமுள்ளதாக மலர்த்தினாய்! உன்னோடு உன் அன்பு வந்தது. உன் அன்போடு உன் அழகு வந்தது. உன் அழகோடு இனிய பண்பும் வந்தது. நான் கை நொண்டி என்பதையே மறக்கச் செய்துவிட்டாய். என்னை, என்னுடையதை, எனக்கு என்பதையெல்லாம் இழந்து கிடந்தவனை, நம்மை, நம்முடையதை, நமக்கு என்றெண்னி வாழவைத்தாய். மாலா! நீ பெண்ணல்ல! பெண் தெய்வம்.
இருள் உன் வயிற்றில் ஆலிலை போன்ற அந்த மணி உதரத்தில் நம்முடைய அன்பின் உரு எட்டு மாத வளர்ச்சியை எட்டியிருந்தது. இன்னும் சில மாதங்கள் கழிந்தால் உனக்கும், எனக்கும் முறையே நீயும் நானுமே பரஸ்பரம் குழந்தையாக இருந்த நிலை மாறி, மூன்றாவது உயிர் ஒன்று குழந்தையாகப் பிறந்துவிடும்.
அன்பு, காதல், பிரேமை – எத்தனை ஆயிரம் நளினமான சொற்களால் வாழ்க்கையை வர்ணித்தால் என்ன? இரண்டு உயிர்கள் சேர்ந்து மூன்றாவது உயிரை சிருஷ்டிப்பதுதான் வாழ்க்கை! சிருஷ்டியும் மனித ஜாதிக்கு ஏற்படுகின்ற பயங்கரமான நோய்களில் ஒன்றுதானா? சிருஷ்டியில் உயிர்கள் தோன்றுவதைப் போலவே உயிர்கள் தவறவும் செய்கின்றனவே?
அது உனக்கு நிறை மாதம். அடிக்கடி வந்து உன்னைப் பரிசோதித்துக் கொண்டிருந்த லேடி டாக்டர் இரண்டு வாரம், பத்து நாள், ஐந்தே நாட்கள் என்று தவணை போட்டுக் கொண்டிருந்தாள். அன்று வேலூரில் ஒரு கல்யாணம் கச்சேரிக்கு அழைத்திருந்தார்கள். நிலைமையைச் சொல்லி மறுத்தேன். மிகவும் வேண்டியவர்கள். கட்டாயப்படுத்தினார்கள். தாட்சணியம் இருந்து தொலைக்கிறதே! என்ன செய்யலாம்? கச்சேரிக்குப் போனேன்.
இரவு ஒன்பதரை மணி; கலியாண வீட்டுப் பந்தலே காணாமல் கூட்டம் கூடியிருந்தது. கச்சேரி நடந்து கொண்டிருந்தது. பாடத் தொடங்கினால் நான் என்னை மறந்துவிடுவது வழக்கம்.
மெல்ல ஒருவர் மேடையேறி வந்தார். காதருகே பதறிய குரலில் முணுமுணுத்தார். “சார், உங்களுக்கு ஒரு தந்தி! இதோ!… எதற்கும் பிரித்துப் பார்த்துவிடுங்கள்…”
நான் தந்தியைப் பிரித்தேன். “மாலாவுக்கு அபாயம். உடனே புறப்படுக” இதயம் பதறியது. கச்சேரி அரைகுறையில் அலங்கோலமாக முடிந்தது.
மணிக்கு முப்பது மைல் வேகத்தில் காரை ஓட்டச் சொன்னேன். உள்ளம்? அது நான் சொல்லாமலே அவ்வளவு வேகத்தில் ஓடியது. சென்னையை அடையும் போது மணி ஒன்றாகிவிட்டது.
அடையாறு பிரசவ ஆஸ்பத்திரி. நான் உள்ளே வந்தேன். ஒரு நர்ஸ் எதிர்ப்பட்டாள்.
“நீங்கள் யார்?”
நான் விவரங்களைக் கூறினேன்.
“அந்த அம்மாள் காலமாயிட்டாங்களே. பதினொன்றரை மணிக்கே அவங்க மாமா வந்து பிரேதத்தை வாங்கிக்கிட்டுப் போயிட்டாங்களே…”
“குழந்தை …?”
“வயிற்றிலேயே இறந்து போய்த்தான்…”
என்னைச் சுற்றிலும் ஒரே இருள்! கோவென்று கதறினேன். கார் என்னைச் சுமந்து கொண்டு அடையாற்றின் ஒரு கோடிக்கு ஓடியது.
அங்கே..? என் உள்ளங் கவர்ந்த பொன்னுடல் நெருப்பாகிப் புகையாகி எரிந்து கொண்டிருந்தது! அடி நாசகாரி! நீ எரிந்து கொண்டிருந்தாய். என் இதயத்தையும் எரிய வைத்துவிட்டு எரிந்து கொண்டிருந்தாய்.
தொலைவில் அலைப்பட்ட கடலுக்கு மேல் ஏதோ ஒரு கப்பல் துறைமுகத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தது. கடற்கரை இருளின் நடுவே தட்டுத்தடுமாறி எழுந்து நடக்கிறேன். அங்கே கடலின் அலைகள். அலைகளின் மேல் கப்பல். கப்பலின் மேல் மனிதர்கள். இங்கே என் இதயக் கடலில் எண்ண அலைகள் ! அடி மாலா! அதன் மேல் நீங்காது மிதப்பவள் யார் தெரியுமா? நீதானடி! நான் கை முடவனாக மட்டும் இருந்தேன். இதயத்தையும் முடமாக்கிவிட்டுப் போய்விட்டாய்! அடி மாலா!
(கலாவல்லி , ஜனவரி – 1, 1957)