அற்பவிஷயம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: July 12, 2023
பார்வையிட்டோர்: 2,280 
 

(1966ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

மணி பத்து, பத்தரை இருக்கலாம். சீனுவின் வீட்டுத் திண்ணையில் மேளக்காரன் மங்களம் பாடிக்கொண்டிருந்தான். 

உள்ளே ஹாரத்தி எடுத்து மணையை விட்டு எழுந்த சீனுவின் குழந்தையை ஒருவர் கையிலிருந்து ஒருவர் வாங்கி கொஞ்சிக் குலாவிக் கொண்டிருந்தார்கள். 

சீனுவின் மனைவி, ஸ்திரீகள் எல்லோருக்கும் தாம்பூலம் கொடுத்துக் கொண்டே வந்தாள். 

“ஏண்டீ கௌரி, கடைசி வரைக்கும் வல்லே பாத்தியா; உங்காத்தவா யாரும்?” என்று அன்னக் குரலில் ரொம்ப அக்கறையோடு விசாரித்தாள் ஒருத்தி. 

அவ்வளவுதான், கௌரியின் மனத்துக் குள்ளேயே கொந்தளித்துக் கொண்டிருந்த உணர்ச்சி ‘புஸ்’ என்று சீறி யெழுந்து விட்டது! 

திடீரென்று அவள் கண்கள் ‘மளமள’ வென்று நீரைப் பெருக்கின. கண்ணீரால் குரல் கம்ம, “என்னமோ எது நமக்குச் சவரணையா நடக்கக் கொடுத்துவச்சிருந்தோம்; இது இல்லாதே போச்சு? பிடுங்கல்படுகிற ஜென்மத்திற்குப் பட்டுக்கொண்டேதானிருக்கணும் – இது ஒண்ணே வச்சுக் கோ! இல்லாட்டா. அவ்வளவு நிச்சயமா சொல்லிட்டுப் போன தாயார் ஏன் வராதே இருக்கா, சித்தே சொல்லு?” என்று சொல்லி விம்மினாள். 

“என்னமோடி அவாளுக்கு அங்கே என்ன அசௌகரியமோ அதாருகண்டா? இல்லாட்டா வராதே இருப்பாளா என்ன; இங்கத்திய சந்த மெல்லாம் தெரிஞ்சு கிடக்கறப்போ?” 

“ஆமா, தெரிஞ்சு இவ பாழாப் போகல்லியா! வரத்தான் முடியல்லெ, ஒரு நூறோ, ஐம்பதோ பணத்தை வீசி எறிஞ்சுடப் படாது இவா மூஞ்சிலே-நாய்க்கு ரொட்டி எறியற மாதிரி?” 

“இவ ஒருத்தி எனக்கு! பணம் தான் பிரதானமோ? பச்சுணு பெரிய சுமங்கலி. பந்தல்லெ நின்னு ஆரத்தி சுத்த இல்லாத போச்சு-” 

“ஆமா, பெரிய சுமங்கலி வந்து ஆரத்தி எடுக்கல் லியேன்னுதான் இங்கே ரொம்பக் குறை-சீருன்னா முக்கியம் எனக்கு ?” 

“அதைச் சொல்லு முன்னாடி! சீரு சீரு-சீர்ரதுதான்! தெரியுமே, இப்ப இல்லாட்டி கொழந்தையெ வாசிக்க வைக்கணும், அப்போ சேத்து வச்சுச் செஞ்சிட்டுப் போறாள், என்ன மோசம்? வேலையைப் பாரு – என்னமோ இதுக்குப் பிரமாதப்படுத்தறே அழுது புழிஞ்சிண்டு. கண்ணெத் துடைச்சுக்கோடி அசடே, நல்ல நாளுங் கிழமையுமா – அழகாயிருக்குப் போ?” 

இவைகளையெல்லாம் கேட்டுக் கொண்டே சீனுவின் தமக்கை மீனாக்ஷ பக்கத்து அறையில் உட்கார்ந்திருந்தாள். 

அதை முன்பே கவனித்தும் திரம்ப இரகசியம் போலச் சின்ன குரலில் -ஆனால், மீனாrயின் காதில் படும்படியாகப் பேசிய பின்பு சாவகாசமாக ‘இந்த அறையில் மீனாக்ஷு இருக்கிறாள் இருக்கிறாள்’ என்று ஜாடை காண்பித்தாள் சாவித்திரி, கௌரி மிகவும் அடங்கிய குரலில், “இருக் கட்டுமே, இருக்கிறது எனக்கும் தெரியும், சொல்லணும்னு தான் வயிற்றெரிச்சல் தீர!” என்றாள் 

“நீயும் ஒண்ணும் லேசுப்பட்டவ இல்லே, ஆமா !” என்றாள் சாவித்திரி முண முண வென்ற குரலில். 

ஆத்திரத்தின் நடுவில் ஒரு சிரிப்பும் பிறந்தது கௌரி யின் முகத்தில். 

அதற்குள்,”அம்மாமி நாழியாச்சு எனக்கு, ஆத்துக்குப் போகணும்; வெத்திலை பாக்குக் கொடுங்கோ” என்று ஒரு சிறு பெண் அவளை நெருங்கினாள். 

“ஏண்டி கௌரீ உங்க நாத்தனாரை எங்கே காணும் ? சொல்லிண்டு போகலாமின்னு தேடறேன் காணுமே?” என்றாள் சாவித்திரி நல்ல குரலில். 

“கொல்லைப் பக்கம் போயிருப்பா-சமையல் கட்டுலே போய்ப் பார்” என்றாள் கௌரியும் அவளுக்குச் சரியாக. 

இந்த வார்த்தைகளும் மீனாக்ஷியின் செவிகளில் விழாம லில்லை. தான் அங்கு இருப்பது தெரிந்தும் கூட இம்மாதிரி ஒரு மனமறிந்த வஞ்சக நடிப்பைக் காண அவள் மனம் எங்கெங்கோ சென்று எதை எல்லாமோ சிந்தித்துப் பார்க்க லாயிற்று! 

தன் குழந்தையை மடியில் வளர்த்திக் கொண்டு சிந் தித்தபடியே தன்னை மறந்தாள் மீனாக்ஷி. 

அம்மா, பாயஸத்துக்கு ஜவ்வரிசி, ஜீனி, முந்திரிப் பருப்பு – ஏலக்கா…” என்று சொல்லிக்கொண்டே அங்கே தோன்றினான் பரிசாரகன். 

அவன் குரல் கேட்டு நினைவடைந்தவளாக, குழந்தையை’ எடுத்துக் கீழே உட்கார்த்தி விட்டு, எழுந்து அவனுக்கு வேண்டியதை எடுத்துக் கொண்டிருந்தாள் மீனாக்ஷி. 

அவளுடைய குரல் கேட்டு அங்கு வந்த சாவித்திரி, “எங்கே யெல்லாம் – கடைசிக்கட்டு வரைக்கும் போய்த் தேடிண்டுவரேன் உங்களை – இங்கேயா இருக்கிய ! ஆத்துக்குப் போய்ட்டு வரட்டுமா?” என்று பவ்யமாகக் கேட்டாள். 

“மணி பதினொண்ணாகப் போறது, இலை போடப் போரு, போறதென்ன, வரதென்னடீ ? இரு எல்லாம் சாப்பிட்டு விட்டுப் போகலாம்-” என்றாள் மீனாக்ஷி. 

“இல்லெக்கா, நான் போய்ட்டே வந்துடறேன்-இங்கே காத்துண்டிருக்கறத்தை ஆத்துக்குப் போனா ஏதாவது காரியமாவது ஆகும்…” 

“ஆமா, காரியம் எங்கே ஓடிப்போறது? கௌரியோட சித்தைநாழி பேசிண்டிரேன், நிமிஷமாபுருஷா சாப்பிட்டான தும் சாப்பிட, ஆத்துக்குப் போக! என்ன இப்போ!” 

இதைச் சொல்லிக் கொண்டே சாவித்திரியின் முகத்தைக் கூர்மையாகக் கவனித்தாள் மீனாக்ஷி. எனக்கும் தெரியும் உங்கள் வேலைத்தனமெல்லாம் என்ற பாவனையாக! 

சாவித்திரியின் முகம் சுண்டிப் போய்விட்டது. ஆனால் அவள் வாயடைத்துப்போய் நின்றாளில்லை. சமத்காரமாகத் தன்னைச் சமாளித்துக் கொண்டு, “நன்னாயிருக்குக் கௌரி யோடே பேசற சமயம் நொடிக்கு நூறுதரம் அகமுடையான் அவளைக் கூப்பிட்டுக்கிண்டே இருக்கான்-” என்றாள். 

“அவன் கிடக்கான், மகா பெரிய மனுஷன் பாரு;-போடி கிடக்கு வேலைக்காரிகளா” என்று ஸ்வாதீனமாக-ஆனால் – சுருக்கென்று சொல்லி விட்டு, அவசரக் காரியமாக அங்கிருந்து போய்விட்டாள் மீனாக்ஷி. 


அன்று பகலில் சாஸ்திரோக்தமாகப் புரோகிதர்கள் பிராம்மண,சுமங்கலிகள் சாப்பாடாகி விட்டது. 

இரவு தான் ஆபீஸ் நண்பர்களுக்கென்று டின்னர் ஏற்பாடு செய்திருந்தான் சீனு. 

அந்த ஆர்ப்பாட்டங்கள் நடந்து முடிய நிசி நேரம் சமீபித்து விட்டது. 

வாசலிலிருந்து கொல்லைக் கோடி வரையில் பாத்திரமும், பண்டமும் இரைந்து கிடந்தன. 

கடைசிக்கட்டில், வேலைக்காரிகள் தேய்த்து வைத்திருந்த பாத்திரங்களை அலம்பிக் கொண்டிருந்தாள் மீனா. 

“ஏனக்கா, இதுக்கெல்லாம் இப்போ என்ன அவசரம் இராக்கண் முழிச்சிண்டு ?” 

“எப்ப இருந்தாலும் ஆகவேண்டியது தானே ?” 

“போது விடிஞ்சு ஆகலாமே இதெல்லாம்? இன்னும் நீ வேறே படுக்கை போடப்பார்க்காதே.” 

“கௌரி போட்டுட்டாளோ ?” என்றாள் சட்டென்று. 

“ஆமாம், சனியன் போது, விடிந்தால்….” 

“என்னமோ பூஞ்சை உடம்பு – சித்த அலைஞ்சது ஆகல்லே. அது இருக்கட்டும்; சீனு, இப்போதைக்கி இதை விட்டு உன்னை மாத்தமாட்டாளேடா?” 

“ஏன், என்ன விஷயம்?” என்று ஆவலோடு கேட்டான் சீனு. 

“ஒண்ணுமில்லே, இன்னும் கொஞ்சநாள் இங்கேயே இருந்தயானால் நிச்சயமா குடித்தனம் இரண்டுதான்-” என்று, அன்று பகலில் நடந்த கதையைச் சொல்லிவிட்டு…. “வீடு இரண்டுபட்டால் கூத்தாடிக்கு எளிது என்று சொல்லுவா, அப்படிப்போல கௌரிக்கு இன்னும் இதெல்லாம் தெரியக் காணோம். நாற்பது வயசுக்காரியை இந்தக் குட்டிகள் அப்படியே முழுங்கிடப் பாக்கறா! குடித்தனம் யாரோடது?” என்றாள் 

“இந்தப் பொம்மனாட்டிகளுக்குப் போதே போகாதா அக்கா, பிறத்தியார் பேச்சைப் பேசாவிட்டால்?” 

“அது கிடக்கு சனி, ஏதோ பெரியவாளுடைய புண்ணியம், ஒரு துளி ஞான மிருக்கக் கண்டு காலம் தள்ளிக் கொண்டு வறேன்! ஏதோ தலைச்சன் குழந்தை – அதுவும் புள்ளைக் குழந்தையா இருக்கே, புடவை, வேஷ்டி வாங்காதே என்ன ஆயுஷ்ஹோமம்னு வாங்கிண்டு வான்னேன் உன்னை. பணம் முடை எனக்குமட்டும் தெரியாதா – நாளைக்கு வரும் பணம்-காரியம் வருமோ? நான் சகஜமா நினைச்சுச் செஞ்ச காரியம் அவளுக்குக் குத்தமா பட்டுப் போச்சு! அவா பிறந்தாத்தவா செய்ய வரல்லேன்னு அதை நான் செஞ்சி, இடிச்சுக் காமிக்கறாப்பலே பண்ணி விட்டேனாம்!” 

“சொன்னாளா அவ அப்படி?” 

“சொல்லணுமா, அவ்வளவு சூசனை இல்லாத போச்சா எனக்கு ? மூஞ்சி சொல்றதே மனசுலே இருக்கறதை ? அது போயிட்டுப் போறது. இது அற்ப விஷயம். நாளைக்கு இது பெரிய இடியா சம்பவிக்காதே, நாம் ஜாக்கிறதையா இருக்கணும் சீனு.” 

சீனு இடி இடி என்று சிரித்தான்! 

பிறகு சாவதானமாக, “அக்கா, நீ கெட்டிக்காரி. ஆனால், இதைவிட்டுப் போய்ட்டால் சரியாகிவிடும் என்கிறாய்பார்; அது தான் இல்லை! உலகம் பூரா ஒரே-ஸ்திரீ மயம் ஜகத், விஷமம் மயம் ஜகத், வம்பு மயம் ஜகத்துத்தான்! ஏதோ நம் வீடு சத்தமில்லாதே இருந்ததென்று சந்தோஷப்பட்டேன். ஆரம்பமாகி விட்டதா? சந்தோஷம்! குழந்தையின் ஆண்டு நிறைவு, இன்னிக்கு – நினைவிலே மாறாதபடி இருக்கும் எனக்கு இது ” என்றான். 

அவன் நினைவு ‘கிர்’ரென்று சுழல ஆரம்பித்தது அன்றே!

– உயிரின் அழைப்பு, முதற்பதிப்பு: 1966, சாரதி பிரசுரம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *