அறிவியல் அதிசயம், ஆனால்…

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: January 28, 2024
பார்வையிட்டோர்: 6,672 
 
 

“நல்லா இருக்கியா கணேசா? உன் வீட்டுக்குப் போய் இருந்தேன்.நீ இங்கே உன் தோட்டத்தில் இருப்பதாக உன் மனைவி சொன்னாள்.நேரா இங்கே,வந்துட்டேன்பா” என்ற மென்மையான குரலுடன் நடந்து வந்த நபரை சற்று ஏற்ற இறக்கத்துடன் பார்த்தான்,சொட்டு நீர்ப்பாசனக்குழாய்களை நேராக நகர்த்திக்கொண்டிருந்த, கணேசன்.

“நீங்க, நீ….ராமச்சந்திரன்தானே? அய்யோ, பாத்து எவ்வளவு வருஷம் ஆச்சு? ஒரு பத்து வருஷத்துக்கு மேலிருக்கும்னு நினைக்கிறேன்! இல்லேயா” என்று அருகில் இருந்த நீர்த்தொட்டியில் கை கழுவிக்கொண்டே சந்தோஷமாய் பேசினான் கணேசன்.

“ஆமாம்பா, அதே உன் நெருங்கிய, பள்ளிக்கூட நண்பன்தான்பா நான்! பத்து இல்லே எட்டு வருஷம்! நானும் எவ்வளவோ முயற்சி செய்து வரமுடியாமல் போய்விட்டது. இந்த வருஷ ஆரம்பத்திலேயே சரியா திட்டம் போட்டு, நானும் நீயும் பிறந்து வளர்ந்த இந்த மணலூர் கிராமத்துக்கு வந்து சேந்துட்டேன். பக்கத்தில் உள்ள திருக்குளத்தூர் டவுன் ஓட்டல் ஒன்றில் ரூம் எடுத்திருக்கிறேன். ஒரு வாரகாலம் தங்கப்போறேன்பா.. உனக்குக் கொஞ்சம் தொல்லை தரப்போறேன். உனக்கு ஆட்சேபணை உண்டா?” என்று கணேசன் கையை அழுத்திப்பிடித்தவாறு, விசாலமான சிரிப்போடு கேட்டான் ராமச்சந்திரன்.

அவன் கையை உதறிவிட்டு, கணேசன் அவனைக் கட்டிப்பிடித்துக் கொண்டான். “வாடா என் நணபா.. இந்தநாளும் வருமான்னு எத்தனை தடவை வேண்டியிருப்பேன், தெரியுமா?நீ ஒரு வாரம் என்ன எத்தனை நாள் வேணும்னாலும் தங்கலாம் என் வீட்ல. ஆனால் முதல்ல வீட்டுக்குப்போய் ஏதாவது சாப்பிட்டபின்னே, திருக்குளத்தூர் ஓட்டல் ரூமைக்காலி செஞ்சிட்டு வரலாம்.” உற்சாகமாகச்சொன்னான் கணேசன்.

இருவரும் கணேசனின் டிவிஎஸ் வண்டியில் வீடு சென்றனர். “நான் ஒரு காபி கொடுக்கறதுக்குள்ள கிளம்பி உங்களை பாக்க வந்துட்டாரு பையை வச்சுட்டு”என்று குறை சொன்னாள் அபிராமி கணேசனின் மனைவி. ராமச்சந்திரன் பற்றியும், இவர்களிருவரின் நட்பு பற்றியும் நிறைய சொல்லியிருக்கிறான் கணேசன் அபிராமியிடம்.

கல்யாணத்திற்குப்பின் மூன்று முறை வெவ்வேறு நிகழ்ச்சிகளில் பார்த்திருக்கிறாள். நான்காவது முறை ராமச்சந்திரனை, அவன் தன் பையன் வைபவ், மருமகள் விலாசினியுடன், பேரன் வித்யுத்திற்கு மணலூர் அருகில் உள்ள குலதெய்வக்கோவிலில் முடியிறக்க வந்தபோது பார்த்தாள். ராமச்சந்திரன் கணேசன் வீட்டிற்கு வந்து தங்கி அவர்கள் உதவியின் மூலம் சென்றான்.

கணேசனின் பையன் கார்த்திக்கிற்கு ஆறு வருடங்கள் முன் திருமணம் நடந்தபோது ராமச்சந்திரனால் வர இயலவில்லை.

கார்த்திக்கின் மனைவி ஜெயந்தி திருச்சியில் பிறந்து வளர்ந்தவள்! அவள் தன் கல்லூரிப் படிப்பை முடித்தவுடன், சில புதிய கலைகள் கற்க முயற்சி செய்தாள்; அதில் ஒன்று வாழை நார் மூலம் சிறிய தட்டுகள், பைகள், கூடைகள் செய்வதும் ஆகும்! மணமாகி இந்த மணலூர் கிராமத்திற்கு வந்தபின், ஒரு நாள் தோட்டத்திற்குப் போனவள் அங்கிருந்து நார்களைக் கொண்டு வந்து அதன் மூலம் தான் கற்றவைகளைச் செய்து காட்டி, கணவர் வீட்டாரை அசத்தினாள்! அதைப் பார்த்த கணேசனும், கார்த்திக்கும் வாரத்தில் இரண்டு நாட்கள் சில உதவியாளர்களை வைத்துக்கொண்டு, தங்கள் தோட்டம், மற்றவர்களின் தோட்டம் மூலம் கிடைக்கும் நார்களைக்கொண்டு, அவளால் முடிந்தவைகளைச் செய்யச்சொல்லி, சிறிய அளவில் அருகில் இருக்கும் நகரில் சந்தைப்படுத்தினர்! மருமகளால் கிடைத்த இந்த மாற்றத்தினால் கணேசனும், அபிராமியும் மிகவும் பெருமை கொண்டனர்!

கணேசனின் ஒரே மகன் கார்த்திக், தனது இளநிலை பட்டதாரி படிப்பைக்கல்லூரியில் முடித்துவிட்டு, தங்கள் தோட்டப்பராமறிப்பில் ஈடுபட்டான். அதே நேரத்தில், அஞ்சல் வழிக்கல்வி மூலம் நிர்வாக மேலாண்மைக்கல்வியை படித்து முடித்தான். தனக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் தோட்டத்தில் மாறுதல்கள், முன்னேற்றங்கள் கொண்டுவர முயற்சிகள் செய்தான்.

இதற்கிடையே, மணலூரிலிருந்து பதினைந்து கிலோமீட்டர் தொலைவிலுள்ள இரண்டாம் நிலை நகரில் தொடங்கிய கைபேசித் தொழிற்சாலையில், உதவி நிர்வாக மேலாளராக வேலை கிடைத்தது! அதனால் அவன் காலையில நேரம் கிடைக்கும்போதும், வாரக்கடைசிகளிலும்,ஞாயிறுகளிலும், தோட்ட வேலைகளில் கவனம் செலுத்தினான். அப்படி ஏற்பட்டதுதான், மூலிகை வளர்ப்பு!கிட்டத்தட்ட ஆறு அல்லது ஏழு வகை மூலிகைகளை வளர்த்து அதை நகரத்தில் இருக்கும், பெரிய மருந்து தயாரிப்பு தொழிற்சாலை நேரடிக்கொள்முதல் செய்ய ஒப்பந்தம் மூலம் ஏற்பாடு செய்தான். அதற்காக,அவன் பலமுறை விவசாயச்சாதனை புரிந்தவர்களைச் சநதித்தும், சில மூலிகை வளர்ப்புப் பயிற்சி வகுப்புகளுக்கும் சென்று, அங்கு அறிந்தவைகளை நடைமுறைப்படுத்தினான். இணையதளத்தின் உதவியுடன் பல மூலிகை வளர்ப்பு வல்லுநர்களையும் தொடர்பு கொண்டு சீரான வழிகளை நன்றாக தெரிந்து கொண்டு, அவர்கள் தோட்டத்தின் மண்ணுக்கேற்ற வகையில் தேர்ந்த மூலிகைகளைப் பயிரிட்டு வந்தான். இதனால் மிக விரைவில் பலனைக்கண்டார்கள் கணேசனின் குடும்பத்தார். ஒவ்வொரு முறையும, தான் புரிந்து கொண்டவைகளைத் தன் அப்பாவுடன் தினமும் கலந்தாலோசித்து, கணேசனின் பழைய முறைகளையும் சிறிது மாற்றி அமைத்து, இச்செயலில் கணேசனுக்கும் ஆர்வம் உண்டாகும்படி செய்தான் கார்த்திக்.

“இதாம்பா ராமு, இன்னிவரக்கும் உள்ள எங்கவீட்டு நிலைமை.அப்பப்ப நீ வீடியோ பேச்சில கூப்டும்போது எல்லாத்தையும் சொல்லிருக்க மாட்டேன். அதான் இப்ப விலாவாரியா சொன்னேன்” கணேசன் பேசி முடித்தான்.

“எல்லாம் சரிதான்டா, ஆனா கணேசா, வீடே அமைதியா இருக்கு, உன் பையன், பேரன், மருமகள் எல்லோரும் எங்க போய்ட்டாங்க? கூப்டுடா எல்லாரையும்” என்றபடி தன் பையிலிருந்து “கார்த்திக்குக்கு லேடஸ்ட் டேப்லட், உன் மருமகள் ஜெயந்திக்கு பெர்ப்ஃயூம், உன் பேரன் அருணுக்கு சின்னதா ஒரு பிரேஸ்லட், டாய்ஸ்” பேசியபடியே வரிசையாக அடுக்கிவைத்தான் ராமச்சந்திரன் தான் வாங்கி வந்தவைகளை.

“இவ்வளவெல்லாம் எதுக்குடா ராமு, நீ வந்ததே ஒரு கிப்ஃட் மாதிரிதான் எங்களுக்கு” கணேசன் உணர்ச்சியுடன் கூறினான். “இருடா, இன்னும் பாரு அபிராமிக்கு கெட்டில் ,உனக்கு ஸ்டீல் பிளாஸ்க். சத்தம் போடாம, அவங்களைக்கூப்டப்பா. ஏன் எங்கேயாவது போயிருக்காங்களா?” பழம் நிறைந்த பைகளை எடுத்து வைத்துக்கொண்டு ராமச்சந்திரன் கேட்டான்.

கணேசன் சொல்வதற்குள், காபி கொண்டு வந்திருந்த அபிராமி முந்திக்கொண்டாள். “கார்த்திக் ஜெயந்தியை அவங்க திருச்சி வீட்டுக்கு அழைச்சிட்டுப் போயிருக்கான் அண்ணா, சனி, ஞாயிறு லீவுதானே, அதான் அருணையும் கூடவே கூட்டிட்டு போயிருக்கான்!” தொடர்ந்து “அண்ணா, ஜெயந்திக்கு இதான், மாதம்; கூடிய சீக்கிரம் நானும் இவரும் இன்னொரு தடவை பாட்டி, தாத்தா ஆயிடுவோம் அண்ணா” என்றாள் புன்னகையுடன்!

அருண், கார்த்திக்கின் நாலரை வயதுப் பையன். மிகவும் சுறு,சுறுப்பும், சுட்டித்தனமும் நிறைந்தவன். அருகில் இருக்கும் சிறிய நகரின் பள்ளி ஒன்றில் யூ.கே.ஜி வகுப்பில் படிக்கிறான். பள்ளியின் வண்டி கிராமம் வரை வந்தாலும்,அவனைப் பள்ளி கொண்டுவிட்டு அழைத்து வந்து,அவன் படிப்பு மீதான பொறுப்புகளை ஜெயந்தி குறைகளில்லாமல் கவனிக்கிறாள். அவன் கேட்கும் கேள்விகளுக்கெல்லாம் பதில் கூறி, அவனுக்குப் பல்வேறு கதைகள், விடுகதைகள்,சிரிப்புத் துணுக்குகள் இவைகளெல்லாம் சொல்லி, அதிக அளவில் தொலைக்காட்சி பார்க்காமலும், அதே நேரத்தில் மற்ற ஆற்றல்களுக்கும் நேரம் எடுத்துக்கொள்ளும் அளவிற்கு அவனை சீராய் வளர்த்திருந்தாள்!

“அருணும், கார்த்திக்கும் இன்னைக்கு சாயந்திரமே வந்துடுவாங்க! ஜெயந்திதான் பிரசவம் வரைக்கும் அங்கே இருந்துட்டு வரட்டும், இங்கேய விட அங்க ரொம்ப வசதியாவும், ஆஸ்பத்திரி உதவியெல்லாம் ஏற்பாடு செய்ய உடனே முடியும்னுட்டு நான்தான் சொல்லி அவங்களை அனுப்பி வச்சேன், ராமு; கார்த்திக், ஜெயந்தி ரெண்டு பேருமே அத ஒத்துகிட்டாங்க… ஆனால், என் பேரன் வந்தவுடனே, நீ ஓடிடுவே பாரு..அவன் கேட்கிற கேள்விக்கு பதில் சொல்லி மாளாது ராமு உன்னால்..” சிரித்துக்கொண்டே கணேசன் சொன்னான்.

“அவன் வரட்டும்பா, நீ என்கிட்ட விட்டிடு. நான் இங்கே தங்கும் வரை என் பொறுப்பில் பாத்துக்கறேன். நீ கவலைப்படாதே கணேசா” ராமச்சந்திரன் மகிழ்ச்சியுடன் கூறினான்.

“மணி பன்னிரண்டு ஆகப்போகுதுப்பா. நீ ஏதாவது சாப்பிட்டியா? அபி, நீ சமைச்சிட்டியா, ரொம்ப நாள் கழிச்சு ராமு வந்திருக்கான். அவனுக்கு எலுமிச்சை ரசம் ரொம்ப பிடிக்கும். இப்ப நீ செய்ய முடியுமா? ஏண்டா, ராமு இன்னும் அந்த வழக்கம் இருக்கா? நாம ஸ்கூல் படிக்கும்போது, ஒருநாள் உங்க வீட்ல அத செய்யலன்னு, உங்க தோட்டத்திலேர்ந்து எலுமிச்சை பறித்து வந்து எங்க அம்மாகிட்ட கொடுத்து, அவங்களை ரசம் செய்யச் சொல்லி வீட்டுக்கு எடுத்துட்டுப் போனியே, ஞாபகம் இருக்கா?” கணேசன் பழைய நினைவுகளை சந்தோஷமாக உணர்ச்சி பொங்க சொன்னான் கணேசன்.

“டேய், அதே ராமுதான் இப்பவும். அந்த நாளின் நினைவுகளும், நம்ம, ஸ்கூல் லைப்ஃ எல்லாம் மறக்குமாடா? அந்த சக்திதான் மனசை இன்னிக்கு வரை லேசாக வச்சிருக்குடா” ராமு அவன் கைகளைப் பிடித்தபடி பதிலளித்தான்.

“அண்ணா, நாங்க ரெண்டு பேர்தானேன்னு இன்னிக்குன்னு பாதது குழம்பு வைக்கல. கருவேப்பிலத் தொகையல் செஞ்சிருக்கேன். அப்பளம் சுட்டுக்கலாம்னு இருந்துட்டேன். இப்ப இன்னும் அரை மணிக்குள்ள ஒரு காய், கீரை, உங்களுக்குப்பிடிச்ச எலுமிச்சை ரசத்தையும் செஞ்சுடுவேன். நீங்க ரெண்டு பேரும் வெகுநாள் கழிச்சு சந்திச்சதால பேசிட்டே இருங்க. தயார் செஞ்சுட்டு கூப்பிடறேன்” அபிராமி படபடவெனச் சொல்லிவிட்டு சமையலறைப்பக்கம் நகர்ந்தாள்.

ராமச்சந்திரன் அவளைத் தடுத்து, “அபிராமி,நீ செஞ்சு வச்சதே எனக்குப்போதும். உனக்கு முடிஞ்சா ரசம் மட்டும் வை. சுட்ட அப்பளமெல்லாம் நான் சாப்ட்டு ரொம்ப வருஷங்கள் ஆயிடுச்சு. அதுவே இருக்கட்டும். போதும்” என்றான்.

“அபி, உன்னால் என்ன முடியுமோ அதெல்லாம் செய். அவன் சாப்டுவான். நீ காலேல என்ன சாப்டே ராமு” கணேசன் கேட்டான்.

“நான் திருக்குளத்தூர் ஓட்டலில் இட்லி, வடை சாப்டேம்பா.அப்புறம் உங்க வீட்டுக்கு வர முடிவு செஞ்சு பழங்கள வாங்கினேன். பாத்தியா,பேச்சு வாக்கில இதை மறந்துட்டேன்னு ஒரு சிறிய பெட்டியை அவனிடம் நீட்டினான்.”

“என்னடா இது” என்று அதைப்பிரித்தபடியே கணேசன் கேட்க, அதனுள் ஒரு புது மாடல் கைபேசி இருந்தது தெரிந்தது. “எனக்கெதுக்குடா இதெல்லாம்” என்ற கணேசனிடம் ராமு சொன்னான்.”உனக்குத் தேவையில்லாத போது அபிராமிகிட்ட கொடு. நான் அங்கிருந்து வீடியோ அழைப்பில கூப்டறேன். நிறய பேசலாம் நம்ம எல்லோரும்” என்றான்.

“சரி, ராமு, எனக்கும் காலேல சாப்டது இப்ப பசிக்கல.ஒண்ணு செய்வோம். ரெண்டு பேரும் திருக்குளத்தூர் போய் நீ தங்கியிருக்கும் ஓட்டல் ரூமக்காலி செஞ்சுட்டு வருவோம்.மொத்தமா போகவர முக்கால் மணி நேரந்தான் ஆகும். வந்து சாப்டலாம். என்ன?”கணேசன் கேட்டதற்கு சம்மதித்தான் ராமச்சந்திரன்.

“அதேதான் நானும் நினச்சேன். உடனே போய் அத செஞ்சுட்டு வாங்க. எல்லாம் ரெடியாயிடும் நிம்மதியா சாப்டலாம்” அபிராமி சொன்னாள்.

அடுத்த இருபதாவது நிமிடத்தில் அவர்கள் திருக்குளத்தூரில் உள்ள, ராமச்சந்திரன் அறை எடுத்திருந்த, சபரி ஓட்டலில்,வரவேற்பு முன் நின்று பில் தொகையை செலுத்தி அறையைக் காலி செய்து விட்டிருந்தனர். சரி பார்த்துக் கொண்டிருந்தனர்.

ஓட்டலில் இருந்து வெளியே வந்தவுடன், பக்கத்தில் இருந்த ஒரு “பேன்ஸி ஸ்டோர்” என்ற கடையில் நுழைந்தவன், வெளியில் வரும்போது, இரண்டு விதமான பந்துகளுடனும், கலர் பென்சில்கள், ஓவியம் வரையும் நோட்டுப்புத்தகங்களுடன் வெளியே வந்தான்.

“கடைக்குள் போகிறாய், ஏதோ உனக்கு சோப்பு, பேஸ்ட் வாங்கப் போறயோன்னு நினைச்சா, இது என்னடா, யாருக்கு?” கணேசன் ஆச்சரியமாகக் கேட்டான். “எல்லாம் அருணுக்குத்தான்” என்றபடியே வண்டி அருகில் சென்றான், ராமச்சந்திரன்.

இருவரும் வீட்டுக்குத் திரும்பி வருவதற்குள் அபிராமி அவர்களுக்காக இலை போட்டு வைத்திருந்தாள். எலுமிச்சை ரசம், கீரை மட்டுமல்லாது, சுட்ட அப்பளத்துடன், பருப்புப்பாயசமும் செய்திருந்தாள் அவள்.

இருவரும் பழைய நிகழ்ச்சிகளைப் பேசிக்கொண்டே, சாப்பிட்டனர். “அண்ணா, சங்கோஜப்படாம சாப்டுங்க, நம்ப வீட்டுல ஒருத்தர் நீங்க,வெளி மனுஷர்னு நெனச்சிக்காதீங்க” அபிராமி உபசரித்தாள். “அதெல்லாம் நான் வெக்கப்படமாட்டேன் அபிராமி, நீயும் நாங்க போய்ட்டு வரத்துக்குள்ள இவ்வளவும் செஞ்சு அமக்களப்படுத்திட்டியே, அருமையா இருக்கு எல்லாமே. இதெல்லாம் நான் சாப்டு பலவருஷங்கள் ஆச்சுடா கணேசா” ராமு ருசித்து சாப்பிட்டுக்கொண்டே பேசினான்.

சாப்பாடு முடிந்ததும் கணேசன் கொடுத்த வெற்றிலைப்பாக்கை மென்று கொண்டே சொன்னான் ராமச்சந்திரன்.”கணேசா, நான் இங்கேயே பக்கத்தில் ஏதாவது வீடு வாங்கிக்கொண்டு உங்களருகே வந்துடலாம்னு பாக்கறேன். நீ என்ன சொல்றே?” ஆச்சரியப்பட்ட கணேசன், “என்னடா,பிரச்னையா, ஏதாவது உனக்கும் வைபவுக்கும்?அவன் நல்ல பையனாச்சேப்பா!எனக்கு நீ இங்கே வர்றத்தில எந்த ஆட்சேபணையும் இல்ல. அந்தக் காலத்ல உங்க அப்பா எனக்கு செஞ்ச உதவிக்கு, கடைசிவரைக்கும் உனக்கு உறுதுணையா நான் இருந்தா அதுவே ஒரு சின்ன கைமாறா நினப்பேன். என்னோட இன்னோரு கொல்லை இருக்கு, சும்மாதான் வச்சிருக்கேன்.ஒரு ஓரத்தில ஒரு மாமரமும், ரெண்டு மூங்கில் புதரும் இருக்கு! முன் பக்கத்ல நீ வீட்டைக்கட்டிக்கலாம். அதனால அதப்பத்திக் கவலைப்படாதே. சரி அப்றமா பேசிக்கலாம். இப்ப கொஞ்சம் ரெஸ்ட் எடு., நானும் கொஞ்சம் கண்ணசர்றேன். மூணு மணிக்கு மேல பேசலாம்” எனச்சொல்லி ஒரு ஜமக்காளத்தையும், தலையணையையும் ராமுவிடம் கொடுத்தான் கணேசன்.

ராமுவும் சம்மதித்து, அந்த வீட்டின் அழகான திண்ணையில், வேப்பமரக்காற்று வீசும் சுகத்தில் கண்ணயர்ந்தான்.

ராமச்சந்திரனும் மணலூர்வாசிதான். அவன் வீடு அடுத்த தெருவில் இருக்கும் நரசிம்மர் கோவிலை ஒட்டி இருந்தது. கணேசனும்,ராமச்சந்திரனும் திருக்குளத்தூர் பள்ளியில் படித்தனர். இருவரும் எப்போதும் சேர்ந்தே இருப்பார்கள் பெரும்பாலும். ராமுவின் தந்தைக்கு நிலம் அதிகமில்லாவிடினும், பெரிய தோட்டங்கள் இரண்டு இருந்தன. அக்காலத்திலேயே புதுமையான வழிகளில், வெவ்வேறு காய்கறி, பழவகைகள், பூந்தோட்டங்கள் இவைகளை திறமையாக அமைத்து, அதனை அப்போதே பெரிய நகர வியாபாரிகள் நல்லவிலை கொடுத்து வாங்குமளவிற்கு பிரபலப்படுத்தியிருந்தார் அவர் நண்பர்கள் மூலம்! அதனால் அவருக்குப் பணப்பற்றாக்குறை இருந்ததில்லை. தெரிந்தவர்களுக்கு சிறிய அளவில் வட்டிக்குப் பணம் கொடுத்து, வாங்கியும் செய்து வந்தார். கணேசனின் தந்தை அவருக்கு நெருங்கிய நண்பர். அவர்களுக்கு எப்போது ஏதாவது நிதியுதவி, மற்றத்தேவைகள் ஏற்படும்போது, முதலில் உதவிடுவார் ராமச்சந்திரனின் தந்தை. அதற்காக எந்த வட்டியையும் வாங்கிக்கொள்ள மாட்டார்.

பள்ளிக்கல்வி முடிந்ததும், இருவரும் திருச்சியில் உள்ள கல்லூரியில் சேர்ந்தனர். அப்போதெல்லாம் பியூசிக்குப் பின்தான் பட்டப்படிப்பு. இருவரும் பியூசி முடித்தவுடன், இளங்கலை அறிவியல் சேர்ந்தனர். துரதிர்ஷ்ட வசமாக, கணேசனின் அப்பா, மாரடைப்பினால் இறந்து போக, செய்வதறியாது திகைத்து, சோகத்தில் ஆழ்ந்த கணேசனை ஆசுவாசப்படுத்தி, அவனுக்குப் பெரிதும் உதவியாக இருந்தது, ராமச்சந்திரனின் அப்பா. அவன் அப்பா வைத்திருந்த கடன்களைத்திருப்பித் தர, பணஉதவி செய்தார். அவர் என்ன சொல்லியும் கேட்காமல் கணேசன் கல்லூரிப்படிப்பை நிறுத்தி விட்டான். “நீங்கள் நிறையச் செஞ்சுட்டிங்க அய்யா, அம்மாவுக்குத் தனியா இருக்க தைரியம் பத்தாது. அதனால் இருக்கும் நிலத்தில் விவசாயம் செஞ்சு, தோட்டத்தையும் உங்களைப் போல பராமரிக்கலாம்னு முடிவு செஞ்சுட்டேன். முதல் தடவை முதலீட்டுக்குப் பணம் கொடுத்திங்கன்னா, ஒழுங்கா பாடுபட்டு திருப்பித்தந்துடுவேன்” என்று சொன்ன கணேசனின் தன்னம்பிக்கையைப் பார்த்து அவனை ஆதரித்தார் ராமுவின் அப்பா. கணேசனும் சொன்னபடி நடந்து கொண்டான்.

அதே நேரத்தில், ராமச்சந்திரன் பெரிய மேலாண்மைகள் எல்லாம் படித்துவிட்டு, நல்லவேலையில் அமரந்து, சென்னை, பெங்களூர்,மும்பை என்று இருப்பிடங்களை மாற்றியதால், மணலூருக்கு அவன் வருகையும், கணேசனுடன் நேரம் செலவழிப்பதும் குறைவாயிற்று. ராமச்சந்திரனுக்கு முதலில் திருமணம் ஆகியது. அவன் மனைவி கலா மும்பையில் பிறந்து வளர்ந்தவள். ஆகையால், ராமச்சந்திரனுக்கும், பதவி உயர்வுடன் அங்கேயே வீடு வாங்கி வசிக்க ஆரம்பித்து விட்டான். இரண்டு வருடங்களில் கணேசனுக்கும் திருமணம் நடந்தது.அதற்கு வந்திருந்த ராமச்சந்திரன் போகும்போது, தன் தந்தையின் மரணத்தையும், பத்தே நாட்களில் தன் தாயின் இறப்பையும் சந்தித்து, மிகவும் துக்கத்துடன் திரும்பினான். அதற்குப்பின் அவன் மணலூர் வருவது மிகவும் அரிதாயிற்று.ஏதாவது தெரியவேண்டுமெனில் கணேசனைக்கூப்பிடுவான்.அவன் அப்படித்தான் கணேசன் மூலம் தங்கள் வீடு,தோட்டங்களை விற்று, அந்தப் பணத்தை அவன் வங்கியில் செலுத்தியதும் கணேசன்தான்! அதன் பின் ஒரு முறை, கணேசனின் அம்மாவின் மறைவின் தகவல் வந்த போது, அவனிடம் பேசினான்.

ராமச்சந்திரன், தான் பணிபுரியும் தனியார் நிறுவனத்திலிருந்து, ஓய்வு வயதிற்கு முன்னதாகவே வெளியே வந்துவிட்டான். தனக்குத் தெரிந்த நிறுவனங்களுக்கு சிறப்பு ஆலோசகர் பணியை பகுதி நேரத்தில் செய்து வந்தான். தன் மகனை மும்பைக்குப்பின் வெளிநாட்டில் படிக்க வைத்தான். தற்போது வைபவ் அமெரிக்காவில் மிகப்பெரிய நிறுவனத்தில், நல்ல பதவியில் இருக்கிறான். விலாசினியுடன் மணமாகி வைபவுக்கு பத்து வருடங்களுக்கு மேல்ஆகிவிட்டது. ஒன்பது வயதில் வித்யுத் என்ற மகனும், மூன்றரை வயதில் தன்யா என்ற மகளும் இருக்கிறார்கள். வித்யுத், விலாசினி இருவருமேஅமெரிக்கக் குடியுரிமை பெற்றவர்கள்.

திடீரென ஒருநாள், ராமச்சந்திரனின் மனைவி கலாவின் காலமும் முடிந்தது. அவளுக்கு ஏற்பட்ட வைரஸ் காய்ச்சலை குணப்படுத்தியும்,அவளை மிகவும் பலவீனமடையச் செய்து காலன் பறித்துக்கொண்டான் அவளை ஐம்பதிற்குள்.

ராமச்சந்திரன் தன் மகனுடன் அமெரிக்கா, இங்கே மும்பையில் என்று காலம் கழித்து வந்தான். கலா மறைந்ததும், அவன் ஞானி போல் ஆகிவிட்டான். எங்காவது மலைப்பாங்கான சிறிய ஊர்களில், பல நேரங்களில் சென்று வரும் பழக்கம் கொண்டிருந்தவனை, வைபவ் கட்டாயப் படுத்தி அமெரிக்காவில் அதிக வருடங்கள் தன்னுடன் இருக்கும்படி அழைத்துச் சென்றான். ஆனால், கணேசன் குடும்பத்தினர் பற்றி, தன் கிராம வாழ்க்கை பற்றி, மற்ற பழைய நிகழ்ச்சிகள் பற்றி வைபவ், விலாசினியுடன் மட்டுமல்ல, குழந்தைகளிடமும் நிறைய முறை சொல்லியிருக்கிறான். வீடியோவில் அழைத்து அறிமுகப்படுத்திப் பேசியும் இருக்கிறார்கள். கார்த்திக்கும் ஜெயந்தியும், வைபவ் குடும்பத்துடன் கைபேசிமூலம் தொடர்பில் உள்ளனர்.

“பாம்பே தாத்தா, ரொம்ப தேங்க்ஸ் நீங்க எனக்கு இதெல்லாம் வாங்கிக் கொடுத்ததுக்கு, எழுந்திருங்க, நான் வரஞ்ச படத்த காட்டறேன்” அருணின் சத்தம் கேட்டு எழுந்தான் ராமு.

“டேய், தூங்கறவங்கள தொல்லை செய்யாதடா, இங்க வா” என அதட்டியபடி கார்த்திக் வந்தான் ராமு அருகில்.

“அதனால ஒண்ணுமில்ல, நானே ரொம்ப நேரம் தூங்கிட்டனேன்னு நினச்சிருந்தேன். நல்லவேளை அருண் எழுப்பினது நல்லதாப் போச்சு கார்த்திக். மணி நாலாயிடுச்சே, நீ எப்ப வந்தே? நல்லாஇருக்கியா?” எனக் கேட்டுவிட்டுஅருணிடம் திரும்பி “எங்கே காமி, நீ வரஞ்சதை” என்று கன்னத்தில் செல்லமாகத் தட்டி சொன்னான்.

அருண் தான் வரைந்த நோட்டுப்புத்தகங்களை எடுத்து வரச்சென்றபோது, ” நான் நல்லாருக்கேன் பெரியப்பா! நீங்க ஒரு மெஸெஜ் அனுப்பிருந்திங்கன்னா, நான் அடுத்தவாரம் திருச்சிக்கு போயிருப்பேன். வைபவ் மத்தவங்க எல்லாம் எப்படி இருக்காங்க” எனக்கேட்டான் ராமுவிடம்.அவனை கார்த்திக் பெரியப்பா என்றுதான் கூப்பிடுவான்.

“எல்லாரும் ஓகேப்பா! நான் ரெண்டு,மூணு நாள்இங்கதான் இருக்கப்போறேன். கணேசன் சொன்னானா?” ராமு கார்த்திக்கிடம் கேட்டான்.

“அப்பா சொன்னாரு. எத்தனை நாள் வேணுமோ இருங்க. ஆனால் அருண்கிட்ட மாட்டினிங்க, ரொம்பத் தொல்லையாயிடும் உங்களுக்கு.முன்னாடியே சொல்லிடடேன்” எனச் சிரித்தபடியே கூறினான்.

“என்னப்பா, நீயும் கணேசனும் அருணைக் காட்டி பயமுறுத்தறீங்க! நான் பாத்துக்கறேன்அவனை” என்று சொல்லி, அங்கே ஓடி வந்த அருணை பக்கத்தில் உட்கார வைத்து “இதான் நீ வரஞ்சதா நல்லா இருக்கே” எனப்பாராட்ட, அருண் விமானம் பற்றியும், அமெரிக்கா பற்றியும், கடல்,கப்பல் பற்றியும் நிறைய கேள்விகள் கேட்க ராமச்சந்திரன் அலுக்காமல் பதில் சொன்னான்.

அன்றிரவு, அருண் ராமச்சந்திரன் அருகில்தான் தூங்கினான். அதற்குமுன் அவனுக்கு ராமச்சந்திரன் கதைகள் சொன்னான்.

அடுத்த இரண்டு நாட்களும் அருண் “பாம்பே தாத்தா, பாம்பே தாத்தா” என்று ராமச்சந்திரனை விட்டு நகரவில்லை.

திங்களும், செவ்வாயும் அருணைப் பள்ளியில் விட்டுஅழைத்து வந்தது ராமச்சந்திரன்தான். ஜெயந்திக்காக வைத்திருந்த ஸ்கூட்டியை ராமச்சந்திரனிடம் “அங்கிருக்கும் வரை பயன்படுத்திக்கோ” எனக் கணேசன் கொடுத்திருந்தான்.

புதன் கிழமை கிளம்பியவனை, அருண் அடம் பிடித்து வெள்ளிக்கிழமைக்கு ஊருக்குப் புறப்பட சம்மதிக்கச் செய்தான்.

மறுநாள் திண்ணையில் கணேசனும், ராமச்சந்திரனும் மாலை வேளையில் பேசிக்கொண்டிருந்தனர். அருண் ஓடிவந்து “பாம்பே தாத்தா, நம்ப தாத்தா அந்தக்கடைல புது சாக்லேட் வந்திருக்கு நான் வாங்கணும். காசு கொடுங்க” என்றான். ராமச்சந்திரன் உடனே ரூபாயை அவனிடம் கொடுத்தான்

கொஞ்ச நேரம் சென்றபின் “பலூன் வாங்கிட்டு வரேன்.ஊதித் தருவீங்களா?” என்றான் இருவரிடம்.”சரி” என்றான் ராமச்சந்திரன்.

இவர்கள் வேறு ஏதோ தங்களின் ஆசிரியர்கள் எப்படி இருந்தனர், அந்த பள்ளியின் இப்போது எப்படி இருக்கிறது என்பது பற்றிச் சுவாரசியமாக பேசிக்கொண்டிருந்த போது,வேகமாக வந்த அருண், “என் பென்சில் சரியில்ல, வேற வாங்கணும். அட்டப்பூச்சின்னா என்ன? எப்படி இருக்கும்? எங்க இருக்கும்? வவ்வால் நல்ல பறவையா? பூரானுக்கு இங்கிலீஷ்ல என்ன சொல்றது?” என்று ஏதாவது ராமச்சந்திரனைக் கேட்டுக்கொண்டேஇருந்தான்.

“டேய், சும்மா இருக்கப்போறியா இல்லியா? அந்த தாத்தாவை இப்பவே ஊருக்குப் போகச்சொல்லிடுவேன்,நீ இந்த மாதிரி தொல்லை கொடுத்தா!ரொம்ப மோசமா இருக்கு.அவ்வளவு என்ன அவசரம்? நாளைக்கு கேட்டுக்கோ போ, இப்பவே எல்லாம் சொல்லித்தான் ஆகணுமா? நீ ரொம்பத் தொந்தரவு கொடுக்க ஆரம்பிச்சிட்டே!” என்று சத்தமௌ போட்ட கணேசன், அருணை கோபமாகப் பார்த்தான்.

அருண் அதை சிறிதும் எதிர் பாராததால், அதிர்ச்சியில் கண்களில் நீர் முட்டியது.

ராமச்சந்திரன் அருணைத் தன்னிடம் அழைத்துக் கொண்டு அவன் கன்னத்தைத் தொட்டுச் சொன்னான். “நீ உள்ளே போய் இன்னொரு படம் வரைஞ்சு வை. நான் வந்து பாத்துட்டு மத்ததெல்லாத்தையும் சொல்றேன்” என்றவுடன் அருண் புன்னகையுடன் ஓடினான்.

“கணேசா, சொல்றேனேன்னு தப்பா எடுத்துக்காதே! இந்த சின்னஞ்சிறுசுகளின் அப்பாவித்தனமான கேள்விகளுக்கும், சந்தேகங்களுக்கும் பதில் சொல்றதுல இருக்கும் ஆனந்தம் இருக்கே, அது எங்க போனாலும் கிடைக்காதுப்பா!

அவனுக்கு அதைக் கேக்கணும்னு தோணுதே, அதுக்கே பாராட்டணுண்டா! அன்பா வந்து என் கிட்ட ஒட்டிகிட்டு, ரொம்பநாள் பழகினவன் மாதிரி கேக்கறான், பேசறான், எங்கூட தூங்கறான். இதெல்லாம் காசு கொடுத்து வாங்கமுடியுமா? குழந்தேங்களோட அன்பும்,பாசமும் தானா வரணும்பா! நீ நிச்சயமா கொடுத்து வச்சவன்டா, இந்த மாதிரி பையன், பேரனெல்லாம் அமைஞ்சதுக்கு!

அமெரிக்காவில என் பேரனோட பேசவே எனக்கு அவன் நேரம் ஒதுக்கணும். ஏன்னா அவன் மொபைல்ல பிஸி,டேப்லட்ல பிஸி, டி.வில பிஸி…கதை படிக்கணுமா, கிண்டில் இருக்கு, ஏதாவது விஷயம் தெரிஞ்சிக்கணுமா, கூகில்ல போய்ப் பாத்துக்கறேன்பான். டேய் வித்யுத் நானும் நீயும் நாளைக்கு வாக்கிங் போகலாம்னா, எனக்கு ஸ்கேட்டிங் பழகப்போகணும்னு போயிடுவான். இதப் பாரு பஞ்சதந்திரக்கதை புக்குன்னு கொடுத்தா, அதெல்லாம் வேண்டாம் தாத்தா, நான் டவுன்லோடு பண்ணிக்கிறேன்பான்!

இன்னிக்கு உனக்கு தாத்தா ஸ்டோரி சொல்வாருன்னு அவன் அம்மா சொன்னா, வேண்டாம்மா, நீ புக் படிப்பே, அதில மான்ஸ்டர் ஸ்டோரியெல்லாம் இருக்கும். ஆனா தாத்தா சொல்ற கதைல அதெல்லாம் வரல. அதனால நீயே படிம்பான்.

என் பேத்தி தன்யா, நாலு வயசே ஆகல, அதுவும் இவனப்போலதான்! வைபவ், விலாசினியைச் சொல்லிக்குத்தமில்ல, அவங்க ரெண்டுபேருக்கும் டைம் சரியா இருக்கு. ரெண்டு பேரும் எங்கிட்ட வந்து, அதப்பத்தி ஒர்ரி பண்ணாதீங்கப்பா, எல்லாப் பசங்களும் இப்படித்தான் இருக்காங்க இந்த நாள்ல! மொபைல், லேப்டாப், டேப்லட், கிண்டில் எல்லாம் ஒண்ணா சேந்து நம்மகிட்டேருந்து இவங்களை ரொம்ப தூரத்துக்கு அழைச்சிட்டுப் போயிருச்சுப்பா! அப்படிம்பாங்க! நானும் எவ்வளவோ தடவை அந்த ரெண்டு குழந்தங்களோட உக்காந்து சேந்து சாப்டணும்னு முயற்சி செஞ்சு பாத்துட்டேன்! ஆனா அது நடக்கலடா, கணேசா!

உன் வீட்லயும் மொபைல், மத்த வசதிகளும் இருக்கு. ஆனா உன் பேரன் அதுலயே உக்காரல. உன்னையும், அபிராமியையும் இல்லாட்னா அவன் அம்மா ஜெயந்தியயும் சுத்தி சுத்தி வரான் பாருடா, அங்கதாண்டா நாம உண்மையான அன்பு நெறஞ்ச வாழ்க்கையப் பாக்கறோம்பா!

அதுக்கும் மேல, என்னைத் தனக்கு நெருக்கமாக்கொண்டு, என்கிட்டயும் ஒட்டும்போது, எவ்வளவு சந்தோஷமா இருக்கு தெரியுமா, எனக்கு?

கணேசா, அறிவியல் நெறய அதிசயங்கள உலகத்துக்கு கொடுத்திருக்கு! கால மாற்றம் ஏற்படத்தான் செய்யும். ஆனா மனுஷங்களோட அடிப்படை குணத்தையே மாற்றிவிட்டு, தெரிஞ்சவங்களையே அந்நியப்படுத்தற அளவுக்கு இருக்கும் மாறுதலை ஒத்துக்க முடியல என்னால! சின்ன வயசில குழந்தங்களுக்கு நடமாடும் போன் தேவையில்ல! நடமாடும் தாத்தா, பாட்டி, அம்மா,அப்பாதான் தேவைங்கறத எந்த ஜனங்கள் புரிஞ்சுக்கறாங்களோ அங்கதான், மன அழுத்தம், மன நோய் இதெல்லாம் வராத இடமா இருக்குண்டா கணேசா! இதெல்லாம் அங்க இல்ல! பணம், வசதி மட்டுமே போதுமா மன அமைதிக்கு?

அதனால, உன் பேரன் என்ன வேணுமோ, என்னக்கேக்கட்டும்..நான் பதில் சொல்றேன். நான் இருக்கற வரை அவனப் பாத்துக்கறேன். இது எனக்குப் பிடிச்ச தொந்தரவுன்னு வச்சுக்கோ!”

ராமச்சந்திரன் உணர்ச்சி பொங்க, கண்களில் துளிர்த்த ஈரத்தை அடக்கிக்கொண்டு ஒரே மூச்சில் பேசியதைக் கேட்ட கணேசன் அவனைக் கட்டியணைத்துக்கொண்டான்.

“ராமு, நீ எங்கயும் போகவேண்டாம். இங்கயே இருடா, அருணை உன் பேரனா நினச்சுக்கோ, பாத்துக்கோ” நா தழு தழுக்க கணேசன் சொன்னான்.

இதையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்த, அபிராமியும் கணேசன் கூறியதை ஆமோதித்தாள்.

ராமச்சந்திரன் “நான் இப்ப போய்ட்டு இன்னும் மூணே மாசத்தில வர்றேன். நீ அதுக்குள்ள எனக்கு வீடு கட்ற வழியப்பாரு” என்று கூறி, “அருண், வரைஞ்சுட்டியா? பாக்க வரலாமா?” என்றபடி உள்ளே சென்றான்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *