கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 14, 2022
பார்வையிட்டோர்: 4,645 
 

திண்ணையில் உட்கார்ந்திருந்த கருப்புசாமி, பெரிய சிக்கலில் மாட்டிக்கொண்டது போல முகம் வாடிப் போய் தலையைத் தொங்கப் போட்டுக் கொண்டு தரையையே பார்த்தவாறு உட்கார்ந்திருந்தான். அவனுக்கு மூன்றடி தூரம் தள்ளி அருகாலுக்குப் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டிருந்த செல்லம்மாள் கருப்புசாமியையே பார்த்தவாறு இருந்தாள். அவன் வாயைத் திறப்பது மாதிரியோ இவளைப் பார்ப்பது மாதிரியோ தெரியவில்லை. கடைசியில் செல்லம்மாள்தான் பேசினாள்.

“பெரிய பயலெ செத்தே கொண்டாந்து காட்டிட்டுப் போயன்; புள்ளெ கண்ணுலியே நிக்குறாப்லெ இருக்கு. ஒம் பொண்டாட்டி புள்ளிவுளெ ஆயிச்சிக்கிட்டுவந்து இங்க ரெண்டுநாள் இருக்கச் சொல்லென். புள்ளுவுளுக்குக் கூப்புடுற மாரியா பேரூ வச்சியிருக்கிற, சுரேஷ் மகேஷ்ன்னுகிட்டு.”

“அனுப்புறன்”

“என்னாத்தெ அனுப்புன? புள்ளிவோ இங்க வந்து வல்லிசா ஒரு வருசம் ஆவப்போவுது. இந்த வருசப் பொங்கத் தீவாளிக்குக்கூடவல்லெ.”

“லீவ் இருந்தாத்தான அனுப்புறதுக்கு?”

“ஒனக்குத்தான் வருசம் முன்னூத்தி அறுவது நாளும் மூச்சுவுட முடியாத அளவுக்கு வேலெ. புள்ளிவுளுக்குமா லீவ் இல்லெ” என்று கேட்ட செல்லமாளுக்கு லேசாகக் கண்கள் கலங்கின. திடீரென்று அவளுடைய முகம் சிவந்தது. “நீ இந்த ஊட்டுலெதான் பொறந்தங்கிறத மறந்துப்புடாத ஒம் புள்ளிவுளுக்கு இந்த ஊரு தண்ணீய குடிச்சா சளி புடிச்சிக்கும். இந்த ஊட்டுலெ படுத்தா கொசி கடிச்சி ஒம் புள்ளிவோ செத்துப்போயிடும். இல்லியா? எனக்கு என்னா ஆனாலும் ஒனக்கு சம்மதம். அப்படித்தான. நானும் ரெண்டு புள்ளெய பெத்து வளத்தவதாண்டா.”

கருப்புசாமி, செல்லம்மாளை முறைத்துப் பார்த்தான். லேசாகப் பல்லைக் கடித்தான். பிறகு தலையைத் தொங்கப்போட்டுக் கொண்டான். அவனையே வைத்த கண் வாங்காமல் பார்த்தாள் செல்லம்மாள். அப்போது வாசலில் கூட்டமாக நான்கு ஐந்து பன்றிகள் வந்து தலையை முகர்ந்து பார்க்க ஆரம்பித்தன. “சு..சூ” என்று சொல்லி சத்தம் போட்டுப் பன்றிகளை விரட்டினாள். பன்றிகள் செல்லம்மாள் போட்ட சத்தத்திற்கு அசைந்து கொடுக்காததால், “இந்த சாண்டெ குடிச்சவன் ஊருலெ இதுவோ தொல்லதான் பெரும் தொல்லெ கொள்ளெ நோவு வந்து ஒண்ணும் சாவ மாட்டேங்குது பாரன்” என்று சொல்லி திட்டிக் கொண்டே எழுந்து வந்து பன்றிகளை விரட்டிவிட்டாள். கொஞ்சம் நேரம் வாசலில் நின்று தெருவில் ஆள் நடமாட்டம் இருக்கிறதா என்று பார்த்தாள். “என்னா வெயிலு அடிக்குது” என்று சொல்லிக்கொண்டே வந்து முன்பு உட்கார்ந்திருந்த இடத்திலேயே உட்கார்ந்து கொண்டாள். “நம்ப எதில் ஊட்டுக்காரனோட புள்ளெ செத்தப்ப எயவு வச்சியும் நீ வந்து தலெய காட்டுலன்னு மனக்கொறப் பட்டுக்கிட்டான். எதிரு ஊட்டுலெ நடக்குற நல்லது கெட்டதுக்கே போவலன்னா, அப்புறம் எப்படி ஒருத்தர் மூஞ்சியிலெ ஒருத்தர் மூச்சிக்கிறது? காசி பணம் “வா”ன்னா வரும், “போ”ன்னா போவும். மக்க மனுச அப்பிடியா? இந்தூர்ல நம்பளுக்குன்னு நாலு பேரு வாணாமா?” என்று சொன்னவள் கடுப்புடன் “ஒம் மாமியா ஊட்டு சனங்களே போதுமின்னு இருக்கியா? ஆனவங்களோ, ஆவாதவங்களோ சொன்ன மொறமக்கிப் போயி தலெய காட்டுறதுதானெ மருவாத கோடி கோடியா பணமிருந்தாலும்கூட வராது தம்பி” என்று அவள் சொன்னதைக் காதில் வாங்கதவன் மாதிரி கைக்குட்டையால் புறக்கழுத்தைத் துடைக்க ஆரம்பித்தான்.

வலது காலின் பெருவிரல் நகத்திலிருந்த அழுக்கை எடுத்தவாறே விசும்பலான குரலில், “ஒங்கப்பனாலயும் சரி, ஒங்கப்பன் ஊட்டுச் சனங்களாலயும் சரி, எந்தக் காலத்திலியும் வா, வாத்த ஆதரவு கூட எனக்கு இருந்தது இல்லெ. இப்ப பெத்த புள்ளெயாலயும் இல்லன்னு ஆயிப்போச்சி. நடக்க முடியாத காலத்திலியும் நானே ஒயச்சி நானே திங்குறன்” என்று சொன்ன செல்லம்மாளுக்குக் கண்கள் கலங்கின. முந்தாணையால் கண்களைத் துடைத்துக் கொண்டாள். இரண்டு மூன்று முறை மூக்கை உறிஞ்சினாள்.

“பேசாம அங்க வந்து இரு” என்றான் கருப்புசாமி.

என்னாத்தெ வந்து இருக்கிறது? என்ற ஒறவுலெ இருக்கிறது? விடிஞ்சதும் பல்லெ விளக்கிக்கிட்டுப்போனா வெளக்கு வச்ச பெறவு தான் நீ வருவ. நேரா நேரத்துக்கு ஒம் பொண்டாட்டி சோத்தக் கொண்டாந்து எங்கிட்டெ நாயிக்கி வைக்கிறாப்ல வச்சிட்டுப் போயி மொடங்கிக்குவா. எங்கிட்டெ பேசுனா அவளோட அந்துசி கொறஞ்சிடும் பாரு. நாள் முயிக்க தனியா காட்டுல குந்தி கெடக்குறாப்ல கெடக்கணும். இங்க இருந்தாலும் நாலு எடத்துக்குப் போனமா, நாலு பேர பாத்தமா, நாலு வாத்தெ வடிச்சமான்னு பொயிது போவும்.”

“நான் அவளெ கேக்குறன்.”

“என்னாத்தெ கேட்டெ? உள்பாவாடெ ஒண்ணு வாங்கியான்னு ஒங்கிட்டெ சொல்லி வருசம் ஒண்ணாச்சு. உடுத்துன துணிக்கி மாத்துத் துணி இல்லாம கெடக்குறன். பள்ளிக் கூடத்திலெ பொட்டெ புள்ளிவுளுக்குக் கொடுத்த பாவாடெயில் ஒண்ணு வாங்கித்தான் கட்டிக்கிட்டு கெடக்குறன்.

“நேரமாச்சு நாள் கௌம்பட்டுமா?”

“நீ ஏயாவது படிக்கிறப்ப மரத்திலிருந்து கீய வியிந்து பீச்ச கையி ஒடஞ்சிப்போச்சி. ஒன்னெத் தூக்கிகிட்டு நான் ஊர் ஊரா அலஞ்ச அலச்ச இருக்கே. அது அந்த ஆண்டவனுக்குக் கூட பொறுக்காதுடா. கை கூடி வராணுமேன்னு ராத்தூக்கமில்லாம, பவ தூக்கமில்லாம ஆறு மாசம் கெடந்தான் தம்பி” என்று சொல்லும்போதே செல்லம்மாளுக்கு அழுகை வந்துவிட்டது. அவள் அழ ஆரம்பித்ததும் கருப்புசாமிக்கு அந்த இடத்தில் உட்கார முடியாமல் போய் விட்டது. சங்கடமாக உணர்ந்தவன் மாதிரி கிளம்பிவிடலாம் என்று நினைத்தாள். ஏதோ சொல்ல வாய் எடுத்தவன், ஒன்றும் சொல்லாமல் தலையைக் கவிழ்த்துக்கொண்டு உள்ளங்கைகளில் இருந்த ரேகைகளைப் பார்க்க ஆரம்பித்தான். அழுகையினூடே. “இந்த வருச திருநாவுக்குக்கூட நீவல்லெ. இன்னிக்குக்கூட ஒம் பொண்டாட்டி ஊட்டு சொந்தக்காரங்க சாவுங்கிறதாலெ வந்த” என்று சொன்னாள்.

“எங்க முடியுது”

“இப்ப எப்பிடி முடியும்? நான் சாவுற அன்னிக்காச்சும் வர முடியுமான்னு பாரு. “கருப்புசாமி வெடுக்கென்று தலையைத் தூக்கிக் கோபமாக செல்லம்மாளைப் பார்த்தான். அவள் அவனைப் பார்க்காமல் சளியைச் சிந்தித் தரையில் தேய்த்தாள். அப்போது தெருவில் போய்க் கொண்டிருந்த மூக்கன், கருப்புசாமியைப் பார்த்ததும் விசாரிக்க ஆரம்பித்தான்.

“எப்ப கருப்புசாமி வந்த? சாவுக்கு வந்தியா? ஒம் பொண்டாட்டி புள்ளெயெல்லாம் எப்பிடி இருக்கு? வயசான காலத்திலெ ஒங்கம்மாவ தனியாவுட்டு வச்சியிருக்கியே. அது இன்னம் எம்மாம் காலத்துக்குத் தான் பாடுபட்டு சாப்புடும்? என்று மூக்கன் தொணதொணவென்று பேச ஆரம்பித்ததும், செல்வம்மாள் தான் இடைமறித்து, “அவன் பாக்காம வேற யாரு பாக்கப்போறா? வெயிலுல நிக்குறியே மாமா? வெயில் தார வாயன் பேசிக்கிட்டிருக்கலாம். தம்பி இன்னிக்கி ஊர்லதான் இருக்கப் போறான்” என்று சொல்லி மூக்கனைத் தொடர்ந்து பேசவிடாமல் அனுப்பிவைத்தவள் “உள்ளார வந்து குந்துடா தம்பி. தெருவுலெ போறவங்க வற்வங்களுக்கெல்லாம் பதிலு சொல்லி மாளாது. ஒருத்தங்க கண்ணு மாரி இருக்காது. அப்பறம் காச்ச தலவலின்னு வந்துடும். அந்தக் காலத்திலிருந்தே ஒனக்கு நோவு தாங்காத ஒடம்பு” என்று சொல்லி, அவள் எவ்வளவோ கட்டாயப்படுத்தியும், கருப்புசாமி உட்கார்ந்த இடத்தை விட்டு நகரவில்லை.

“நான் போறன்” என்று சொன்னான் கருப்புசாமி.

“புளி ரெண்டு உருண்ட தரன் எடுத்துகிட்டு போ” என்று சொன்ன செல்லம்மாள் எழுந்து வீட்டுக்குள் போய் அடுக்குப் பானைகளை இறக்கி உருண்டை உருண்டையாக உருட்டி வைத்திருந்த புளியை எடுத்துவந்து ஒரு பையிக்குள் போட்டு அவனிடம் கொடுத்தாள். உட்காரப்போனவள், “மொச்ச பயிறு ஒர படி ஆவும். இங்க யாரு இருக்கா திங்க. எடுத்துக்கிட்டுப்போயி புள்ளிவோகிட்டெ கொடுக்குறியா?” என்று கேட்டவள், அவன் என்ன சொல்கிறான் என்பதைக் கூடக் கேட்காமல் மீண்டும் வீட்டுக்குள் போய் அடுக்குப் பானைகளை இறக்கி, மொச்சைப் பயிரை கொண்டுவந்து அவனிடம் கொடுத்தாள். முன்பு போலவே உட்கார்ந்து அவனிடம் பேச ஆரம்பித்தவள், சட்டென்று நினைவுக்கு வந்தது மாதிரி, “நம்ப ஊரு ஏரியிலெ மீனு புடிக்கப் போனப்ப ரெண்டு கொயம்புக்கு ஆவுறாப்லெ மீனு ஆப்புட்டுது. ஒருத்திக்காகப் போயி மீனுகொயம்பு வைக்கிறதான்னு காயப் போட்டுட்டன். கருவாடுன்னா புளிச்சிப்போன சோத்துலெ உப்புப்போடாமகூட திங்கறவனாச்சே நீ! ஒனக்குன்னு வத்த போட்டு வச்சியிருக்கன் எடுத்தாரட்டுமா?” என்றாள்.

“சரி”

சின்னப்பிள்ளை மாதிரி வேகமாக எழுந்து வீட்டுக்குள் போனவள், அடுக்குப்பானைகளை இறக்கி சவ்வுத்தாள் காகிதத்தில் முட்டணமாகக் கட்டி வைத்திருந்த கருவாட்டை எடுத்துவந்து கருப்புசாமி வைத்திருந்த பைக்குள் செருகிவைத்தாள்.

“விசியமிருந்தா ஆள் வுடு, வரென்” என்று சொல்லிவிட்டு எழுந்த கருப்புசாமியிடம், “அக்காவ ஒரு எட்டுப்போயி பாத்துட்டு வாடா தம்பி” என்று சொன்ன செல்லம்மாளுக்கு லேசாகக் கண்கள் கலங்கின.

“பாக்குறன்”

“படிச்சன் படிச்சன்’னு சொல்லிக்கிட்டு திரியிற பயலுக்கு எம் பொண்ணெ கொடுக்கமாட்டன்னு சொன்ன ஒங்க மாமனாரு ஊட்டுச் சனங்க இப்ப ஒனக்கு ரொம்ப வேண்டப்பட்டவங்களாயிட்டாங்க! யாரப் பார்த்துப் பொறுக்கிப் பயன்னு சொன்ன? என்னிக்கிருந்தாலும் எந் தம்பி கவுருமண்டு வேலெக்கிப் போவத் தான் போறான். ராசாமாரி கால ஆட்டிக்கிட்ட சாப்புடத்தான் போறான், அதெப் பாத்துட்டு இந்த ஊரு பயலுவோ மூக்குமேல வெரல வக்கிறத நான் பாக்கத்தான் போறன்னு சொல்லி ஊடேறிப் போயி சண்டெப் போட்ட ஒத்தெ அக்காக்காரிய பாக்கெ ஒனக்கு மனமில்லெ. கோயி குஞ்சிய தூக்கிப் பறாந்துக்கு எற கொடுத்துட்டு நாலு புள்ளிவுளெ வச்சிக் கிட்டு நாலு புள்ளிவுளெ வச்சிக் கிட்டு அவ படுற தவுசியப் பாத்து ஊரு சனங்களே வாயுருவிப்போவுது. எங்கிட்டெ என்னா இருக்கு கொடுக்கிறதுக்கு?” என்று சொன்னவளுக்கு அதற்குமேல் பேச முடியவில்லை. அழ ஆரம்பித்து விட்டாள். இடையில் “கால கள, அந்திக் களன்னு வெட்டி அவதான் ஒன்னெ படிக்கவச்சது” என்று சொன்னாள்.

“போயிப் பாக்குறன்”

“செடிய வச்சி தண்ணீ ஊத்துனவங்களெ மறந்துப்புட்டு, பூத்தத பறிக்க வந்தவங்களெ நல்லவங்கின்னு நெனக்கிறது, செய்யுறதுதான ஒலக நடொமொற.”

“போறன், போறன்.”

“என்னாத் போனெ? மூணு வருசமாத்தான் போற? கண்ணாலம் கட்டிப் போனாலும் புருசங்காரன் கண்ண மறச்சி, வருவாத் தோறும் ஒனக்கு அவ கையிலெ உள்ளத, “இந்தாடா தம்பின்னு” ஒனக்குக் கொடுக்கலெ? இன்னிக்கு அவ பீத்த மொறமாப் போயிட்டா இல்லெ. நம்ப ஊட்டுக்கு அவ ஒரு பொண்ணு. அவ கண்ணுத்தண்ணீ வுட்டா ஒன்னெ அப்பிடியே கேட்டுடும்” என்று சொன்னவளுக்கு அழுகை வந்துவிட்டது. அழுகையினூடே, “ஒனக்கு ஒங்க மாமனாரு ஊட்டுச் சனங்களெ பாக்குறதுக்கேதான் நேரம் பத்தாது” என்று சொன்னாள்.

“செத்தெ பேசாம இருக்கியா? இந்தச் சனியனுக்குத்தான் இங்க வரதில்லெ” என்று சொல்லி கருப்புசாமி, செல்லம்மாளை முறைத்தான். அதே அளவுக்கு அவளும் திரும்பி முறைத்தாள். “நீ வேலெக்கிப் போறதுக்கு மின்னாடி, இன்ட்ரிக்கிப் போவணுமின்னு சொன்னப்ப, இந்த ஊருல நம்பள நம்பி நூறு ரூவா கொடுக்க ஆளு இருந்துச்சா? கடன் கேட்டு நான் யாருயாரு காலு எல்லாம் வியிந்தன்னு ஒனக்குத் தெரியுமில்லெ. நைய்யா பைசா பெரலை. வேற வய்யி இல்லாத, “புள்ளெயோட வேலெயவிட செத்துப் போனவன் கட்டுன தாலி பெருசா”ன்னு சொல்லித் தாலிய அடவு வச்சித்தான் அன்னிக்கி ஒன்னெ அனுப்புனன். ஒங்கப்பன் ஊட்டுப் பொருளுன்னு அது ஒண்ணுதான் எங்கிட்டெ இருந்துச்சி”.

“இதயே எத்தினி தடவ சொல்லுவ? இந்தச் சனியனுக்குத்தான் ஊருக்கு வரதே இல்ல.”

“எல்லாம் நடந்த கதெதானே! பொய்யாச் சொல்லுறன். பெத்தவ ஒணணு நெனச்சா புள்ளெ ஒண்ணு நெனக்கிதுன்னு சும்மா சொல்லுல தம்பி. எனக்கு எயிவது வயசாச்சி. இன்னம் களவெட்டித்தான் சோறுதிங்கிறன்.”

“என்னா மசுருல நடந்த கதெ” என்று சொல்லி கருப்புசாமி கத்த ஆரம்பிக்கும்போத ராஜீ வந்தான். நீ வந்தன்னு சொன்னாங்க, அதான் பாத்துட்டுப் போவலா மின்னுதான் வந்தன்.” என்று சொன்னவனை முகத்திலடிப்பது மாதிரி “நீ போயி ரோட்டுல நில்லு ராஜீ. நான் வரன், அங்கப் பேசிக்கலாம்” என்று சொல்லி ராஜீயைப் போகச் சொன்னான். திகைத்துப்போன ராஜீ மறுபேச்சுப் பேசாமல் திரும்பிப் போனான்.

“அவனும்தான் புள்ளென்னு இருக்கான். ஒத்தயா மூணு அக்கா தங்கச்சிவுள ஒரு கொற இல்லாம சீர் செனத்தின்னு செஞ்சி கட்டிக் கொடுத்தான். மூணு பேரும் வந்தா இன்னிக்கும் நல்லத கெட்டத பாக்குறான். பெத்தத் தாயி தவப்பன குந்தவச்சி சோறபோடுறான்” என்று ராஜீயைப் பற்றி செல்லம்மாள் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, விர்ரென்று பையை எடுத்துக்கொண்டு கிளம்பி விட்டான் கருப்புசாமி. “காரு வர நேரம் இருக்கும்போதே யாண்டா தம்பி பறக்குறவன்?” என்று கேட்டவள் “இரு வரன்” என்று சொல்லிவிட்டு வீட்டுக்குள் போனாள். பழைய பெட்டியில் எதையோ தேடி எடுத்துக் கொண்டு வந்தவள். நூறு ரூபாய் நோட்டு இரண்டை அவனிடம் கொடுத்தாள். பணத்தை வாங்கிக் கொள்ளாமல் வீறாப்பாக அவளிடமே திரிப்புத்தர முயன்றான். கட்டாயப்படுத்தி அவனுடைய கையில் பணத்தைத் திணித்து விட்டவள், சாதாரணமாக, ஒருகோண மூஞ்சிக் குட்டியவித்தன். “இந்தா தரன், அந்தா தரன்” ன்னு சொல்லி ஒரு மாசம் இயிக்கப்போட்டு நேத்துத்தான் பணத்தெ கொண்டாந்து கொடுத்தானுவோ. பணத்தெ வச்சிக்கிட்டு நான் என்னாப் பண்ணப் போறன்? இத வச்சி ஒம்மவளுக்கு என் நெனவா ஒரு காலு கொலுசி எடுத்துப்போடு” என்று சொல்லிவிட்டு அவனிடமிருந்து கைப்பையைக் கட்டாயப்படுத்தி வாங்கிக் கொண்டு வீட்டைச் சாத்திவிட்டு “வாடா தம்பி, காரு ஓடிப்போயிடும்” என்று சொல்லி முன்னே நடக்க ஆரம்பித்தாள்.

ஏதோ சொல்ல வாயெடுத்த செல்லம்மாளிடம், “பேசாமவாம்மா” என்று கருப்புசாமி சொன்னதைக் காதில் வாங்காதவள் மாதிரி சொன்னாள்: “பொண்டாட்டின்னு ஒங்கப்பங்காரன்கிட்டெ தாலி கட்டிக்க வந்த நாளுல இருந்து ஒங்கக் கூட்டத்திலெ இந்த வாத்தத்தான் நான் கண்டன். என்னோட ஆவி போனாத்தான் ஒனக்கு நல்லது கெட்டது தெரியும் தம்பி. எனக்கு நீ முந்தியா, ஒனக்கு நான் முந்தியா? ஒன்னெ நம்பியாடா நான் பொறந்தென். போடா.”

நன்றி: தீராநதி

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *