கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: September 28, 2023
பார்வையிட்டோர்: 2,831 
 
 

 “அம்மா வீட்டுக்குப் போ…!”

ருத்ரதாண்டவமாடி, வாய்க்கு வந்தபடிக் கூச்சலிட்ட ஆனந்தன், தன் மனைவியின் மீது முடிவாக வீசியச் சொற்றொடர்.

அமிலம் தோய்த்த ஆனந்தனின் வார்த்தைகள்  அகிலாவின் செவியை தீய்த்துக் கொண்டே உள்ளே இறங்கின.

அதிர்ச்சியில் உரைந்தாள் அகிலா.

குடும்பத்திற்குக் குடும்பம், பல்வேறுப் பரிமாணங்களில் வித்தியாசப்படும் கொள்வினைகளையும் , கொடுப்பினைகளையும் பற்றிக் கிஞ்சித்தும் நினைத்தவளில்லை அகிலா;

எவரோடும், எதனோடும் தன் வாழ்வை ஒப்பிட்டவளில்லை;

தன் கணவன், தன் குடும்ப வளர்ச்சி மட்டுமேக் குறிக்கோளாய், யக்ஞம் போன்றுக் குடித்தனம் நடத்துகிற கர்ம யோகி அவள்;

 ‘என்னைப் போய் ‘அம்மா வீட்டுக்குப் போ’ன்னு சொல்லிட்டாரே…!’; ஆற்றாமையில் குமைந்தாள்.

துக்கம் துக்கமாக வந்தது;

‘ச்ச்சே…!’

மனசு விட்டுப்போனது;

விரக்திவசப்பட்டாள்;

விசனப்பட்டாள்.

எல்லா தம்பதியர்களையும் போல எதனையோ முறை  இவர்களுக்குள் கருத்து வேறுபாடும், சண்டையும் வந்திருக்கிறது, இயல்பாய்ச் சமாதானமும் ஆகித்தான் இருக்கிறது.

 “அறிவிருக்கா?;

காமன் சென்ஸே கிடையாதா?;

இது கூடவாத் தெரியாது?;”  

இப்படியெல்லாம் பலமுறைக் கடுப்படித்திருக்கிறான் ஆனந்தன்.

வார்த்தைகளால் நோகடித்திருக்கிறான்.

அப்போதெல்லாம், குடும்பம் ஒன்றேக் குறிக்கோளாய் அர்ப்பணிப்புடன் உழைக்கும் அகிலாவுக்குச் சிறிது வருத்தம் வரும்தான்;

ஆனால், தன் செயலில் இருந்தப் பிழையை அனுசரித்து, அதற்கானத் தண்டணையாகவும், தவறைத் திருத்திக்கொள்ளக் கிடைத்த வாய்ப்பாகவும் எடுத்துக்கொண்டு, அந்தச் சொற்களை ஏற்றுக் கடந்துவிடுவாள்.

இதற்கு முன் ஒரு போதும் இப்படிச் சொன்னதில்லை.

ஆனால் இன்றோ?, கோபம் எல்லை மீறிவிட்டது.

வார்த்தைகள்  தடித்துவிட்டன.

அதிகபட்சமாக, ‘உன் இருப்பேத் தேவையில்லை!’ என்கிற விதமாய்ப் பேசிவிட்டான்.

 ‘அயர்ன் செய்தபோதுச் சட்டைப் பித்தான் இருக்கிறதா? என்று பார்த்திருக்கவேண்டும்தான்;

கவனக்குறைவாக இருந்ததுத் தவறுதான் என்றே வைத்துக் கொண்டாலும், அதற்காக ‘அம்மா வீட்டுக்குப் போ’ என்று அறுத்துக் கட்டுவது எந்த விதத்தில் ஞாயம்?’

எண்ணி எண்ணி மருகினாள் அகிலா.

மனது வாங்கியப் பலமானச் சம்மட்டி அடியில், அகிலாவின் புத்தி விழித்துக் கொண்டது.

நொறுங்கல்களின் ஒட்டு மொத்தப் பரிமாணமும் ஒன்றிணைந்தது;

அதன் வெளிப்பாடாய் வெடித்து வெளி வந்ததுத் துக்கம்;

கீழுதட்டை இறுகக் கடித்துக் கொண்டாள்;

மீறி வந்தக் கேவலை அடக்கி, அமுக்கி விழுங்கினாள்.

‘இந்த அளவுக்குக் கடுமையாகப் பேசியது இதுவே முதல் முறை.

இனி தன் வாழ்நாளில் இப்படிப் பேசக்கூடாது அவர்;

முளையிலேயே கிள்ளி எறிந்து விட வேண்டும்.’

ஒரு முடிவுக்கு வந்தாள் அகிலா.

ஆனந்தன் கோபக்காரன்தான்.

கொடுமைக்காரன் இல்லை.

வாய் தவறி வந்துவிட்ட வார்த்தைகள்தான்.

இருந்தாலும், கொட்டிய வார்த்தையை அள்ள முடியாதே!

தவித்தான்.

‘அவள் ஏதாவது பேசி எதிர் வாதம் செய்தால் எப்படியாவதுச் சமாளித்துவிடலாம்!’

தீவிரமாய் அதை எதிர்பார்த்தான் ஆனந்தன்.

அகிலாவின் ஆழ்ந்த மௌனம் அவன் எதிர்ப்பார்ப்பை உடைத்து, ஏமாற்றத்தைத் தந்தது.

அகிலாவுக்கு இன்று ஆனந்தன் மீதுக் கோபம் வரவில்லை. வருத்தம் வந்துவிட்டது.

ஒரு வார்த்தைக்கூட எதிர்த்துப் பேசவில்லை;

வாதிக்கவில்லை;

 உள்ளுக்குள்ளேயே மருகினாள்.

‘வாய்த் திறந்தால் நாக்குத் தழுதழுத்துவிடும்;

வைராக்யம் காலாவதியாகிவிடும்!’  

புத்தியில் உரைக்கத் தன்னைக் கட்டுப் படுத்திக் கொண்டாள்.

படுக்கை அறைக்குச் சென்றாள்.

பீரோவைத் திறந்தாள்.

துணி மணிகள் சிலவற்றை எடுத்துச் சுருட்டிப் பையில் வைத்தாள்.

பிரயாணப் பையோடு ஹால் கடந்து வாசல் நோக்கிப் போனாள்.

 ‘மௌனத்தை நாமே உடைத்துவிடுவோமா?’

ஒரு கணம் தோன்றியது ஆனந்தனுக்கு.

குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுத்தது.

அதே சமயம், இறங்கி வரும் துணிவும் அவனிடம் இல்லை.

‘அடுத்து என்ன செய்வது?’

அறியாமல் தவித்தான்.

பிரயாணப் பையை  வாயிற்படியருகில் வைத்தாள் அகிலா.

திரும்பி உள்ளே வந்தாள்.

டைனிங் ஹால் சென்றாள்.

“சுமங்கலி, வெறும் வயித்தோட வீட்டை விட்டுப் போனா வீடு வௌங்காது…!”

ஆனந்தன் காதில் விழுமாறு, உரத்து முணுமுணுத்தாள்.

இருவர் சாப்பாட்டுத் தட்டுகளையும் கொண்டு வந்து வைத்தாள்.

“தட்டு போட்ருக்கேன்!”

பொத்தாம் பொதுவாய்க் குரல் கொடுத்தாள்.

ஒரு சில மணித்துளிகள் அவன் வருகைக்காகக் காத்தும் இருந்தாள்.

‘அவள் மௌனம் கலைந்தால், அனைத்தையும் சரியாக்கிவிடலாம்!’ என்று சற்று முன் எதிர்பார்த்தானல்லவா  ஆனந்தன்?

அதையும் தாண்டி, அவளே இறங்கி வந்து அவனோடு சேர்ந்து சாப்பிடவே தயாராக இருக்கிறாள் அகிலா.

ஆனால், ஆனந்தனின் தன் முனைப்பு அவனைத் தழுவிக்கொண்டது.

முறுக்கிக்கொண்டான்.

அவளோடு உண்பதைத் தவிர்த்தான்.

ஆனந்தன் தன்னோடு சேர்ந்து சாப்பிட விரும்பவில்லை என்பதை உறுதி செய்துகொண்டாள்.

இன்னொரு முறை வலிந்து அழைத்திருந்தால் வந்திருப்பான்தான். ஏனோ அதைச் செய்யவில்லை அகிலா.

எடுத்துப் போட்டுக் கொண்டுச் சாப்பிட்டாள்.

சமையல் மணம் கம்மென்று எங்கும் பரவியது.

தட்டு அலம்பினாள்.

தட்டு மாட்டியில் செருகினாள்.

சாப்பிட்ட இடத்தில் நீர் தெளித்தாள்.

மாப் போட்டுத் துடைத்தாள்.

முந்தானையால் முகம் துடைத்துக் கொண்டாள்.

 “பசிக்கும்போது சாப்ட்டுக்கலாம்!”

அவன் காதில் விழுமாறு பலமாகச் சொன்னாள்.

வாசற்படியருகில் வைத்திருந்தப் பையை கையில் எடுப்பதற்கு முன் ஆனந்தன் காதில் விழுமாறுக் குரல் உயர்த்திச் சொன்னாள்.

பையை எடுத்துக்கொண்டாள்.

தன் வார்த்தைச் சூட்டைத் தாங்க முடியாமல் அகிலா தப்பி ஓடுவதைப் போல உணர்ந்தான் ஆனந்தன்.

இப்படிப் படியிறங்கி விடுவாள் என்பதைச் சற்றும் எதிர்பார்க்கவில்லை அவன் .

குற்ற உணர்வு மேலிட்டது அவனுக்கு

‘கடுமையாய்ப் பேசியபோதும் தட்டும் தண்ணீரும் வைத்துச் சாப்பிட அழைத்தாளே!

முறையாக நன்னயம் செய்துவிட்ட அகிலாவின் கண்களைச் சந்திக்கவேக் கூச்சமாக இருந்தது அவனுக்கு.

‘வழக்கம்போலச் சூழ்நிலையின் இறுக்கத்தைத் தளர்த்தி, உடன்படிக்கை செய்து கொள்ளும் நோக்குடன்தான் அகிலா சாப்பாட்டுக்கு அழைத்திருப்பாளோ?.

‘அந்த வாய்ப்பை அலட்சியம் செய்துவிட்டோமே.!’

இப்போது வருந்தினான்.

அகிலா,  ’உதட்டிலிருந்து வந்ததுதான்;

உள்ளத்திலிருந்து வந்ததல்ல;

என்பதைக் ‘கையும் மெய்யுமாய் அவளிடமே வெளிப்படுத்திவிட்டால் என்ன?’

ஒரு கணம், ஒரே ஒரு கணம்தான் மின்னல் போல வந்து போனது அப்படி ஒரு எண்ணம்.

பாழாய்ப் போன தன்முனைப்பு இம்முறையும் குறுக்கே விழுந்துத் தடுத்துவிட்டது.

பையோடு வாயிற்படி தாண்டிப் படியிறங்கினாள்.

போர்ட்டிகோவின் இடது பக்கம் வந்தாள்.

செருப்பு ஸ்டாண்டிலிருந்துச் செருப்பை எடுத்துக் கீழே போட்டு அங்கிருந்த துணியால் துடைத்தாள்.

காலில் மாட்டிக்கொண்டாள்; 

போர்டிகோக் கடந்து நடந்தாள்;

வாசல் கிரில் கேட் திறந்தாள்.

‘இப்போது நினைத்தால்கூடச் சரி செய்துவிடலாம்.’;

வளரவிடக்கூடாது;

சமாதானப் படுத்தி உள்ளிழுக்க வேண்டும்;

இரண்டாவது வாய்ப்பையாவதுத் தக்கவைத்துக்கொள்ளவேண்டும்;

ஆனந்தனின் மனசு கூவியது.

‘மனசு’ உணர்ச்சிகள் சம்பந்தப்பட்டது. அப்போதையச் சூழலுக்குத் தேவையான முடிவைத்தான் அது எடுக்கும்.

‘புத்தி’ குறுக்கிட்டது.

‘புத்தி’ எப்போதுமே உணர்ச்சி வசப்படாது. முடிவெடுத்தலில் சாதக பாதங்களை ஆராய்ந்து, அனுபவ அறிவோடு ஒப்பிட்டு முடிவுக்கு வரும்.

புத்தி முன் வந்ததும், மனசுப் பின் வாங்கியது.

பிரச்சனையின் தீவிரத்தைத் துருவி ஆய்ந்ததுப் புத்தி.

நடந்துபோனச் சம்பவங்களுக்கு ஞாயம் கற்பித்தது.

கேட் மூடினாள்.

கிரில்லின் இடைவெளி வழியாகக் கை விட்டு உள் பக்கமாகத் தாழ் போட்டாள்.

“கதவை உள்ளேப் பூட்டிக்கலாம்!”

ஆனந்தனுக்கு, உரத்துக் குரல் கொடுத்தாள் அகிலா.

துணுக்குற்றான்.

சந்துக் குத்தல் வீடு என்பதால், வாசல் சுவரில் பதிக்கப்பட்ட குட்டியான விநாயகர் சிலையை வணங்கினாள்.

நடையைக் கட்டினாள்.

’’என்ன திமிர் அவளுக்கு…?’

அகங்காரத்தால் அரற்றினான்.

அவன் ஆணாதிக்க மனப்பான்மைத் தீவிரமடைந்தது.

அகிலா தெருவில் நடப்பதை வக்ரத்துடன் பார்த்தான்.

‘போனாப் போகட்டுமே!;

படியிறங்கிட்டால்ல!;

‘எப்படியும் திரும்பி வந்துத்தானே ஆகணும்!;

எத்தினி நாள் இருந்துடமுடியும் அம்மாவோட?;

அவள் அம்மா மானஸ்தி. ஒரு நிமிஷம் கூட அவளைத் தன்னோடு இருக்க விட மாட்டாள்;

“போடீ புருஷன் வீட்டுக்கு…!”

என்று விரட்டிவிடுவாள்;

பூமராங் போல போன வேகத்தில் அகிலா திரும்புவாள்;

திரும்பி வரட்டும்;

அப்போ இருக்கு அவளுக்கு…’

கருவினான்.

புத்தி பேதலித்தது .

பழி வாங்கும் எண்ணத்தையும், வைராக்கியத்தையும் மனதில் ஏற்றி, இறுக்கியது.

வீட்டுக்கு வீடு வாசல்படி.

சண்டை சச்சரவு இல்லாத குடும்பமும் உண்டோ…?

கல்யாணபின் ஆறு மாதங்கள் அமைதியாக ஓடின.

நகரத்தில் ‘பேச்சிலர் அறை’யைக் காலி செய்துவிட்டு, தனி வீடு பார்த்துத் தனிக்குடித்தனம் வைத்தார்கள்.

இந்த ஒண்ணரை வருடத் தனிக்குடித்தனத்தில், பலமுறை சண்டை போடுவதும் சேர்வதும் இயல்பாகவே நடந்தது.

வழக்கம்போல இன்றும், பைசாவுக்குப் பொறாத விஷயத்தில்தான் தொடங்கியது வாக்குவாதம்.

ஆனந்தனின் நாக்கில் சனி இருந்திருக்க வேண்டும்.

கோபத்தில் பேச்சு கட்டுப்பாடில்லாமல் வந்துவிட்டது.

‘கோபம்’ பேசத் தொடங்கியதும் ‘அறிவு’ வாய்ப் பொத்திக்கொண்டது.

வார்த்தைகளின் தடிப்பு, கட்டுக்கு அடங்காமல் போனபோது, தன் சுயக் கட்டுப்பாட்டை இழந்துவிட்டான் ஆனந்தன்.

“அம்மா வீட்டுக்குப் போ!”

அவனை மீறித் தெரித்துவிட்டது – என்பதுதான் உண்மை.

எதிரில் அகிலா இல்லாத போது தன்னுள் நோக்கிதான் ஆனந்தன்.

‘தப்புத்தான்;

வாய்தவறிச் சொன்னாலும் தப்புதான்;

தன் பக்க உறவுகளையெல்லாம் விட்டுவிட்டுக் கணவனே எல்லாம் என்று வந்து முழுமையாய்த் தன்னை அனுசரித்து, அர்ப்பணிப்பாய் வாழ்கிற ஒரு பெண்ணை ‘அம்மா வீட்டுக்குப் போ’ என்று விரட்டுவது ஒரு ஆணுக்கு அழகே அல்லவே;

ஆண்மையற்ற அருவருப்பான செயலல்லவா அது;

ஒரு வேளை என் உள்ளத்தின் அடி ஆழத்தில் இந்த வக்ரம் இருந்திருக்குமோ…?;

உள்ளத்தில் இருந்தால்தானே. உதட்டில் அது பிரதிபலிக்கும்…;’

கழிவிரக்கத்தில் கலங்கினான் ஆனந்தன்.

வழக்கம்போல, அகிலா வக்கணையாய்ச் சமைத்திருந்தாள்.

சாப்பாட்டு மேஜையில் நேர்த்தியாய் மூடி வைத்திருந்த ஐட்டங்கள் கண்ணில் பட்டன.

அதை எடுத்துச் சாப்பிடுவதைத் தவிர்த்தான் ஆனந்தன்.

வலுக்கட்டாயமாய் வாசல் கதவைப் பூட்டிக்கொண்டுத் தெருவில் இறங்கினான்.

மங்கள விலாஸ் ஓட்டலில் பசியாறினான்.

“அவர் ரொம்பக் கோபக்காரராண்டீ!”

பெண் பிடித்துவிட்டதாக அவர்கள் வீட்டிலிருந்து தகவல் வந்தபோது ஆனந்தனைப் பற்றிக் கேள்விப்பட்டதை அகிலாவிடம் ஆதங்கத்துடன் சொன்னாள் அம்மா.

உயிரோடு இருந்தவரை, நாள் தவறாமல், ஏதாவது சாக்கிட்டு, முடியைக் கொத்தாய்ப் பிடித்து, அடித்துப் புரட்டும் தன் கோபக்காரப் புருஷனை ஆனந்தனோடு ஒப்பிட்டுப் பார்த்திருப்பாளோ என்னவோ!

அம்மாவின் கண்களில் கண்ணீர் துளிர்த்தது.

கூடத்தில் மாட்டியிருந்த அப்பாவின் போட்டோவைத் தீர்க்கமாய்ப் பார்த்தாள் அகிலா.

‘அப்பாவை விடவா, ஆனந்தன் கோபம் பெருசா இருந்துடப் போவுது?’

அம்மாவிடம் கேட்பதைப் போல இருந்தது அகிலாவின் பார்வை.

காரணமே இல்லாமல் அம்மாவிடமோ, சில சமயம் அகிலாவிடமோ, கோபப்படுவதும், சம்பந்தா சம்பந்தமில்லாமல் கத்துவதும், முடியைக் கொத்தாய்ப் பிடித்து அடிப்பதும், கரண்டியைப் பழுக்க வைத்துச் சூடு போடுவதுமாக அழிச்சாட்டியம் செய்த அப்பாவோடு இருபது வருஷங்கள் தள்ளிய அகிலாவுக்கு, ‘ஆனந்தன் ஆத்திரக்காரன்!’ என்பது ஒரு பெரியக் குறையாகத் தெரியவில்லை.

கேரக்டர் தெரிந்துத் திருமணம் செய்துகொண்டதால் மிக மிக எச்சரிக்கையாகக் குடித்தனம் நடத்தினாள் அகிலா.

இருவர் மட்டும் நடத்தும் தனிக் குடித்தனத்தில் அப்படி ஒன்றும் பெரிதாகச் சிக்கல் இல்லை.

அவ்வப்போது ஆபீஸ் பிரச்சனைகளை மனதில் வைத்துக்கொண்டு ஏதாவதுச் சத்தம் போடுவான் ஆனந்தன்.

கண்டுக் கொள்ளாமல் விட்டுவிடுவாள்.

எடுத்ததை எடுத்த இடத்தில் வைக்கவில்லை என்றுச் சில நாட்களில் சண்டை வரும். எரிந்து எரிந்து விழுவான்.

திருத்திக் கொண்டாள்.

துணி துவைத்தல், அயர்ன் செய்தல், ஒட்டடை அடித்தல்…, என்று வீட்டு வேலைகளைச் செய்வதிலும், தன் முழு கவனத்தையும் செலுத்தினாள்.

 விதவிதமாகச் சமையல் செய்வதிலும் தன்னை அர்ப்பணிப்புணர்வுடன் ஈடுபடுத்திக் கொண்டாள்.

வீட்டைத் துடைத்து வைத்தக் கண்ணாடிப் போல் ‘பளிச்’ என்று வைத்திருப்பாள் அகிலா .

கிளி கொஞ்சும்.

அன்று சலூனுக்குச் சென்றுவிட்டுத் தாமதமாய் வந்தான் ஆனந்தன்.

குளிப்பதற்குத் தாமதமானது.

முதல் தாமதம் முற்றிலும் தாமதமாய் ஆகிப்போனது.

அவசர அவசரமாக, அயர்ன் செய்தச் சட்டையைப் பிரித்து உடுத்தினான்.

மேலிருந்த முதல் பித்தான் போட்டான்.

அடுத்தடுத்தப் பித்தானுக்கு விரல்கள் அலைப்பாய்ந்தன.

ஏற்கெனவேத் தாமதமாகிவிட்டப் பரபரப்பில் இருந்த ஆனந்தனுக்கு, ‘சட்டையில் அடுத்தடுத்த இரண்டு பித்தான்களும் இல்லை!’, என்பதுத் தெரியவரக் கோபம் தலைக்கேறிவிட்டது.

கோபம் பாபம் சண்டாளமல்லவா!

ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டல்லவா!

தாறுமாறாய்ப் பேசிவிட்டான்.

“ஸாரி…! ஸாரி…! அயர்ன் பண்ணும்போது பட்டன் உடைஞ்சதைப் பார்க்கலை. இனிமே எச்சரிக்கையா இருக்கேன்…!”

பயத்தோடும், பணிவோடும் சொல்லியபடியே,  வேறு ஒரு சட்டையைக் கொண்டுவந்து அவன் முன் நீட்டினாள் அகிலா.

ஆத்திரம் தலைக்கேறிய ஆனந்தன் காதுகளில் , அகிலாச் சொன்ன எதுவுமே ஏறவில்லை.

செல்போன் அழுத்தினான்.

அலுவலகத்துக்கு விடுப்புச் சொன்னான்.

‘அகிலாக் கொடுத்த மாற்றுச் சட்டையைப் போட்டுக் கொண்டு அலுவலகம் போயிருந்தால் கூட இந்த சண்டை, வெளிநடப்பு எல்லாம் தவிர்க்கப் பட்டிருக்குமோ…?’

வழக்கம்போல தாமதமாய் ஜனித்தது ஞானம்.

 ‘மாமியார்காரியிடமிருந்து எந்த நேரத்திலும் போன் வரும்!’

எதிர்பார்த்துக் காத்திருந்தான் ஆனந்தன்.

வந்தால் என்ன பேச வேண்டும், எப்படிப் பேச வேண்டும்  என்பதையும் ஒத்திகை பார்த்து வைத்திருந்தான்.

அவன் எதிர்பார்ப்பு முற்றிலும் ஏமாற்றமானது.

மறுநாளும் சரி, அதற்கு மறு நாளும் சரி. அகிலாவும் திரும்பவில்லை. மாமியாரிடமிருந்து ஃபோனும் வரவில்லை.

எதுவும் இருக்கும்போது அதன் மதிப்புத் தெரியாதல்லவா…!

தனிமையில் கிடந்த இரண்டரை நாட்களும் தனக்குள் பார்த்துக்கொண்டான் ஆனந்தன்.

தன் குறை தனக்கேத் தெரிய, தன்முனைப்பைப் தகர்த்தெரிந்தான்.

‘மாமியாருக்குக் ஃபோன் போட்டுப் பேசி, அகிலாவை வரவழைப்போம்…!’

முடிவெடுத்தான் ஆனந்தன்.

ஆனந்தன் செல் ஃபோனைக் கையில் எடுத்தபோது ரிங் டோன் ஒலித்தது.

எடுத்துப் பார்த்தான்.

அம்மாவின் நம்பர்.

‘அம்மா எதற்காகப் போன் செய்கிறாள்;

இங்கு நடந்த விஷயம் யார் மூலமாவது கேள்விப்பட்டிருப்பாளோ…?’

“ம்ஹூம்..! தெரிந்திருக்க வாய்ப்பில்லை…?;

வழக்கமாக நலம் விசாரிக்கத்தான் செய்திருப்பாள்…!’

சமாதானம் செய்து கொண்டான்.

‘என்னிடம் பேசியபின் வழக்கமாக அகிலாவிடம் பேச வேண்டும் என்பாளே..?;

இவன் எண்ணங்களுக்கெல்லாம் பக்க வாத்தியம் போல அந்த ரிங்டோன் விடாமல் ஒலித்துக்கொண்டு இருந்தது.

போன் எடுத்துப் பேசினால் சிக்கலாகிவிடும். எல்லா விவரங்களையும் சொல்லவேண்டி வரும்;

விளையாட்டாய் இரண்டு நாட்கள் ஓடிவிட்டன;

இது வரைக்கும் சொல்லாமல் இருந்ததே தப்புதான்;

நடந்த விபரங்களைச் நேரில் போய் அம்மாவிடம் சொல்வதுதான் சிலாக்கியம்.’

அம்மா வீட்டுக்குப் போக முடிவெடுத்தான்.

‘ரிங் டோன்’ அடங்கும் வரைக் காத்திருந்தான்.

‘ஸ்விட்ச் ஆஃப்’ செய்தான்.

வண்டியை ஸ்ட்டார்ட் செய்தான்.

வீட்டு வாசலிலேயே காய்கறி வாங்கிக் கொண்டிருந்தாள் அம்மா.

“வா ஆனந்தா!”

வாய் நிறைய அழைத்தாள்.

“ஏண்டா! அகிலாவை அம்மா வீட்டுக்குப் போ’னு அனுப்பி வெச்சிட்டே, உனக்கு மட்டும் அங்கே என்னடா வேலை?”

இயல்பாகக் கேட்டாள் அம்மா.

ஆனந்தன் துணுக்குற்றான்.

“வாங்கோ!”

என்றாள் வீட்டுக்குள்ளிலிருந்து வந்த அகிலா.

– இலக்கிய பீடம் நடத்திய சிறுகதைப் போட்டியில் (2023) சிறப்புப் பரிசு பெற்ற சிறுகதை

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *