அப்பா எங்கே போகிறாய்….???

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 25, 2020
பார்வையிட்டோர்: 3,848 
 
 

“கனகா ….அப்பா இரண்டு நாளா ஆத்துக்கு வரல்லடி…. மனசு கிடந்து அல்லாடறது… எல்லாம் என்னோடே தலையெழுத்து…!!!!!”

“என்னடா… கொஞ்ச நாளா ஒழுங்கா அடங்கி ஒடுங்கி இருக்காரேன்னு மனுஷன்னு நெனச்சேன்… மறுபடி வேதாளம் முருங்க மரத்ல ஏறியாச்சா …”

“கனகா…. அப்பிடி சொல்லாதடி…. இந்த தடவ என்னவோ நடக்கப்போறதுன்னு மனசு சொல்றது….. முடிஞ்சா ஒரு எட்டு வந்துட்டுப் போயேன்….”

“அம்மா…நீ எதுக்கு இப்படி கிடந்து துடிக்கிற….என்னமோ புதுசா கல்யாணமான பொண்டாட்டிய விட்டுட்டு புருஷன் காணமப் போன மாதிரி…! விடும்மா….தன்னால வருவார்…புவனாக்கு நாளைக்கு கணக்கு பரீட்சை…என்னால திடீர்னெல்லாம் கெளம்பி வர முடியாது…அண்ணா நகர்லேந்து திருவான்மியூர் என்ன கிட்டவா இருக்கு…ஆமா…மணி எங்க தொலஞ்சான்?”

“இவர் போனதுக்கு மணிய ஏன் திட்ற ..? அவன் ஆபீசு வேலையா பம்பாய் போய் மூணு நாளாச்சு…”

“சரி… எனக்கு வேலையிருக்கு.. இவர் ஆபீசிலேர்ந்து வர நேரமாச்சு… இன்னும் ஒரு டிபனும் பண்ணல..போன வை…”

கோமதிக்கு வேர்த்துக் கொட்டியது..புடவைத் தலைப்பை எடுத்து முகத்தை அழுத்தி துடைத்துக் கொண்டாள்…

சமையலறைக்குப் போய் ஒரு டம்ளர் ஜலத்தை எடுத்து மடக் மடக்கென்று குடித்தப்புறம் கொஞ்சம் மூச்சு வந்தது…!!!

“ஹரி…. எங்கடா இருக்க…”

“ஆபீசிலேர்ந்து இப்பத்தான் கெளம்பிண்டிருக்கேன் அம்மா…சொல்லு…”

“அப்பாவ மறுபடியும் இரண்டு நாளாக காணம்டா …”

“சே….இதுதானா …என்னமோன்னு பயந்துட்டேன்….

நல்லதாப்போச்சுன்னு விடுவியா..என்னமோ துக்கம் கொண்டாடிண்டு…!!”

“ஹரி….. என்னப்பா இப்படி பேசற…அப்பாக்கு வயசு என்னாறதுன்னு உனக்கு நெனப்பு..??? இந்த ஐப்பசி வந்தா எழுபத்தி இரண்டு. …”

“அதேதான் நானும் கேக்கறேன்….

எழுபத்திரண்டு வயசில என்ன கண்ராவி இது…

ஓடி ஓடிப் போயிண்டு….

எல்லாம் நீ குடுக்கிற எடம்… முதல் தடவ திரும்பி வந்த போதே நீ ஆத்தில சேத்திருக்கக் கூடாது…

மனுஷனுக்கு உடம்பெல்லாம் திமிர்…

அம்மா அக்கடான்னு நிம்மதியா இரு…”

போன் கட்டானது…

கோமதிக்கு இப்போது லேசாக தன் மேலேயே சந்தேகம் எழுந்தது..

தான்தான் ரொம்ப இடம் குடுத்து விட்டோமோ… பசங்க சொல்ற மாதிரி வீட்ல சேத்திருக்கக் கூடாதோ …?? அவளால் முடியுமா அது ….??

ஒரு தடவயா ….. இரண்டு தடவயா…????

இதோட எண்ணி ஆறு தடவை… இரண்டு மாசம்… பதினைந்து நாள்…. ஒரு மாசம்….

ஒரு தடவை மூணு மாசம் கூட இருக்கும்…. நினைச்சுப் பார்க்கவே அவமானமாயிருக்கு…..

விவேக் ஒருத்தன் தான் பாக்கி…அவங்கிட்ட சொல்ல கோமதிக்கு பயம்.நல்லவேளை சுமதிதான் போனை எடுத்தாள்..

“என்னம்மா …திடீர்னு… உடம்புக்கு ஒண்ணுமில்லையே….”

“எனக்கு என்ன கேடு …?? நான் நன்னாதான் இருக்கேன்… அப்பாவ இரண்டு நாளாக காணல சுமதி….!!!”

“என்னம்மா….போறதுக்கு முன்னாடி ஏதாவது சண்ட கிண்ட …”

“சுமதி… உனக்கு தெரியாதா …? அப்பா என்னிக்கு எங்கூட சண்ட போட்டிருக்கா …? போட்டா கூட தேவலாம்….. இப்படி அமுக்கு மாதிரி இருந்துண்டு…”

“அம்மா…இப்படி இந்த வயசில எங்கதாம்மா போவார்… ஏதாவது ஒண்ணு கிடக்க ஒண்ணு ஆனா …??”

“சுமதி…நீ ஒத்திதாண்டி என்ன புரிஞ்சிண்டிருக்க… விவேக் இருக்கானா…??”

“அம்மா… அவர் கிட்ட சொல்லி பிரயோஜனமேயில்ல…போன தடவையே சொல்லிட்டார்…அப்பா பத்தி பேசறதானா எங்கிட்ட தயவுசெய்து பேசவேண்டாம்னு அம்மா கிட்ட சொல்லிவைன்னுட்டார்…அவருக்கு அப்பான்னு பேரச்சொன்னாலே ஆத்திரமா வருது…மணி என்ன பண்றான்…கொஞ்சம் தேடிப் பாக்க சொல்றதுதானே….!!!”

“அவன் வேல விஷயமா பம்பாய் போயிருக்கான்.. வர மூணு நாளாகும்….”

“பாவம்…அம்மா..தனியா உங்கள விட்டுட்டு…. அப்பா பண்றது சரியாப் படல…”

அப்பா அப்பிடி என்னதான் செய்தார்….??

***

ராமச்சந்திரன் சுபாவமாகவே நிறைய பேசுபவர் இல்லை.. கோமதி அவரைக் கல்யாணம் பண்ணும்போது அவர் ஒரு கம்பெனியில் அக்கவுன்டன்ட்டாக வேலைபார்த்தார்…

மாயவரத்தை பூர்வீகமாகக் கொண்ட சாதாரண குடும்பம்…

அவருக்கும் கோமதிக்கும் பன்னிரண்டு வயசு வித்தியாசம்…. ஆளும் பார்க்க சுமார் தான்…..

கோமதி சென்னையில் பிரபல வக்கீல் மகாதேவனின் ஒரே செல்ல மகள்… நல்ல அழகி…..

எப்படி பார்த்தாலும் ஏணி வைத்தாலும் எட்டாத சம்பந்தம்……

ஆரம்பத்தில் கோமதி சிலசமயம் அடிக்கடி மௌனமாகி விடுவாள்…எதையோ நினைத்துக் கொண்டு….

ஒரு வேளை தன்னைப் பிடிக்கவில்லையோ என்று ராமச்சந்திரன் நினைத்ததுண்டு….

“கோமதி…. என்ன உனக்குப் பிடிச்சு தானே கல்யாணம் பண்ணிண்ட…”

“என்ன கேள்வி இது…??”

“அதுக்கில்ல…. உனக்கு பதினெட்டு வயசு தானே ஆறது….எனக்கு முப்பதாறதே… ஏன் ஒத்துண்ட….???”

“எனக்கு உங்கள பார்த்ததுமே பிடிச்சிருந்தது…. அப்பா உங்களைப் பத்தி விசாரிச்சதுல நீங்க நல்ல ஆசார அனுஷ்டான குடும்பத்திலேர்ந்து வந்தவர்…கோல்ட் மெடலிஸ்ட்னு கேள்விப்பட்டார்…ஆமா… உங்களுக்கு என்னப் பத்தி என்ன தெரியும்…???”

“நான் எதையும் விசாரிக்கல….உன்னோட கல்மிஷமில்லாத இந்த முகத்த வாழ்க்க பூரா பாத்திண்டிருக்கணும்னு தோணித்து…..சரின்னுட்டேன்…

ஆமா…. எதுக்கு இப்போ கண்கலங்கற…”

“ஒண்ணுமில்ல…. வாழ்நாள் முழுசும் இந்த சந்தோஷம் நீடிக்குமான்னு நினைச்சுப் பாத்தேன்…”

ராமச்சந்திரன் கோமதியின் அப்பா ஆபீசில் சேர்ந்து விட்டார்.. அவரிடம் வேலை பார்த்துக் கொண்டே வக்கீல் படிப்பையும் முடித்தார்….

கனகா….. ஹரி…. விவேக்….மணி ….நாலு குழந்தைகள்…. எல்லாம் இரண்டு வருஷ இடைவெளி விட்டு…

மணிக்கு ஆறு வயசிருக்கும்…. அப்போதுதான் முதல் முதலில் ராமச்சந்திரன் ஒருநாள் காணாமல் போனார்…..

இரண்டு நாளாச்சு… ஒரு வாரமாச்சு…. ஆள் வரவேயில்லை….குழந்தைகளை வைத்துக்கொண்டு திண்டாடிப் போனாள் கோமதி….

மணி ‘ அப்பா எங்கம்மான்னு ‘ அனத்த ஆரம்பித்தான்.. கனகாவுக்கு எப்பவுமே வாய் ஜாஸ்தி…

“எங்க போனார் இந்த அப்பா…. ஜாலியா தான் மட்டும் பிக்னிக் போயிட்டாரா ….???”

ஹரி கொஞ்சம் அழுதான்.அவன் அம்மா பிள்ளை..

விவேக் தான் தவித்துப் போனான். அப்பா மேல் அத்தனை உயிர்…

விவேக்கும் அவரும் நண்பர்கள் மாதிரி பழகுவார்கள்… அவனுடன் செஸ் விளையாடுவார்….

இருவரும் சொடுக்கு , கிராஸ்வொர்ட் புதிர் என்று நேரம் போவது தெரியாமல் பொழுது போக்குவார்கள்….

பித்துப் பிடித்த மாதிரி இருந்தான்…

அப்போது மகாதேவன் இருந்தார்….

“கோமதி… கொஞ்சம் பொறுமையா இருப்போம்…சில சமயம் நாப்பது நாப்பத்தஞ்சு வயசுகளில் சில பேர் இந்த மாதிரி கொஞ்ச நாள் வீட்டைவிட்டு போவதுண்டு….

சம்சார சாகரத்திலேந்து ஒரு சின்ன விடுமுறை …

அவ்வளவுதான்… ரொம்ப சீரியஸா எடுத்துக்காதே…”

சொல்லிவிட்டாரே தவிர அவர் தவித்துப் போனார்…

‘ ஏதாவது வம்பு தும்பில் மாட்டிக் கொண்டிருப்பாரோ…?? சாது மனுஷனாச்சே..!!’

அகிலாண்டம்தான் மாப்பிள்ளையை வறுத்து எடுத்து விட்டாள்..

“ஒண்ணும் தெரியாத அப்பாவி மாதிரி நடிச்சுண்டு என்ன வேல பண்ணியிருக்கா பாருங்கோ…

பாவம்..குழந்த…நாலு பேரையும் வச்சிண்டு தவிக்கறா…கேப்பார் கேள்விக்கெல்லாம் பதில் சொல்லிண்டு….. மானம் போறது…”

சரியாக பதினைந்து நாள் கழித்து வந்து சேர்ந்தார்…ஒன்றுமே நடக்காத மாதிரி….

மகாதேவன் ஒன்றும் கேட்கவில்லை..

அகிலாண்டம் சும்மா இருப்பாளா …??

“மாப்பிள.. இப்படி சொல்லாம கொள்ளாம எங்க போயிட்டீங்க .??நாலு குழந்தைங்க இருக்கேன்னு கொஞ்சம் கூட கவலப்படாம…??”

கோமதி தனியாய் இருக்கும் போது அழுது புலம்பி விட்டாள்.

“நா ஏதாவது குற வச்சேனா…வேற ஏதாவது….நா கேக்கல…மத்தவா என் காதுபட பேசும் போது எங்கேயாவது ஓடிப்போலாம்னு…அப்பாவும் போய் … அம்மாவும் போய் ….குழந்தைகள் தவிக்கப்போறதேன்னுதான்…..”

“கோமதி..நீ பெரிய பெரிய பேச்செல்லாம் பேசாத… குடும்ப மானம் போற மாதிரியான எந்தகாரியத்தையும் நான் மனசார கூட நினக்க மாட்டேன்.

என்ன நம்பு… இதுக்கு மேல என்ன எதுவும் கேக்காத….”

மகாதேவனுக்கு நடுவில் ஒரு சின்ன ஹார்ட் அட்டாக்……

எல்லாம் கோமதியைப் பத்தின கவலைதான்..

ஆபீஸ் பொறுப்பு முழுசையும் ராமச்சந்திரனின் ஒப்படைத்து விட்டார்.அப்படியாவது வேறு எதிலும் கவனம் போகாது என்று நினைத்தார் போலும்….!!!!

ராமச்சந்திரனுக்கு வக்கீல் தொழிலில் ஆர்வம் அவ்வளவு இல்லாவிட்டாலும் மாமனார் கட்டிக் காத்த பெயருக்கு பங்கம் வராமல் பார்த்துக் கொண்டார்.

அகிலாண்டம் தினம் ஒரு வியாதி பேரைச் சொல்லிக் கொண்டு பாதி நாள் படுக்கை தான்.. மனதில் ஏதோ கவலை அவளையும் அரித்தது…

ஒரு ஏழெட்டு மாசம் போயிருக்கும்…. கோவிலுக்குப் போய் விட்டு வருவதாய் சொன்னவர் வரவேயில்லை…

ஒரு வாரம் பார்க்கலாம் என்று பேசாமலிருந்தார்கள்… ஒரு மாசமாச்சு…

மணியைத்தவிர வேறு யாரும் அப்பாவைத் தேடவில்லை..

ஹரிக்கு எப்பவுமே அப்பாவைக் கண்டால் பிடிக்காது… அவர் விவேக்கிடம் பாரபட்சமாக இருப்பதாய்த் தோணும்..

விவேக் அளவுக்குத் தான் புத்திசாலி இல்லை என்ற தாழ்வு மனப்பான்மை வேறு…

அதனால் அம்மாவிடம் தான் அதிகம் ஒட்டிக் கொள்வான். ஒரு விதத்தில் அப்பா போனது அவனுக்கு பிடித்திருந்தது என்று சொல்லலாம்…..

விவேக் தான் தினம் ராத்திரி யாருக்கும் தெரியாமல் அழுதான்…

இந்த தடவை அவர் திரும்பி வந்தபோது மகாதேவன் போய்ச்சேர்ந்திருந்தார். மாஸிவ் ஹார்ட் அட்டாக்…!!!!

ஒரு வாரம் கோமதி முகம் கொடுத்தும் பேசவில்லை….

ஆனால் அவருக்கு மூன்று வேளையும் சமைத்துப் போட்டு மற்ற காரியங்களையும் குறை வைக்காமல் பார்த்துக் கொண்டாள்…

“கோமதி….என்னால உங்க எல்லாருக்கும் எத்தனை கஷ்டம்…??? அப்பா கூட மனக்குறையோடதான் போயிருக்கணும்….”

“ஆமா…. இவ்வளவு தெரிஞ்சவருக்கு எதுக்கு குடும்பத்த விட்டுட்டு போறோம்னு மட்டும் சொல்லத் தெரியாதாக்கும்..???”

“கோமதி…உனக்கு சொல்லாம இருக்கவே முடியாது…. ஒரு நாள் சொல்லியே தீரணும் ….என்னிக்கு வேள வரும்னுதான்….”

ராமச்சந்திரன் வீட்டைவிட்டு போவதும் வருவதும் சகஜமாகிவிட்டது…

ஆனால் இந்த விஷயம் அக்கம் பக்கம் இருப்பவர்களின் வாய்க்கு மெல்லும் அவலானது….

கோமதி வெளியில் போவதே குறைந்து விட்டது…அகிலாண்டத்தின் புலம்பல் வேறு….

நாற்பத்தைந்து வயதில் ஆரம்பித்த வழக்கம் எழுபதிலும் தொடர்ந்தால்…..

“கோமதி…. உங்கிட்ட ஒண்ணு சொல்லணும்….போன வாரம் எங்காத்தில இவர் கல்கத்தா போயிருந்தாரா….

அப்போ உங்காத்துக்காரர் மாதிரியே ஒருத்தர் ஒரு பெங்காலிக்காரியோட கார்ல போயிண்டிருந்தாராம்…

ஆனா கார் வேகமாக போனதால நிச்சயமா தெரியல…”

“ஹைதராபாத்தில கனகாவோட அப்பா மாதிரி ஒருத்தர் ஒரு பையனோட கடைத்தெருவில நடந்து போனதா எம்பொண்ணு சொல்றா….”

நடுவில் துப்பறிந்து சொல்பவர்களுக்கும் பஞ்சமில்லை….

எப்படியோ கோமதி இந்த முப்பது வருஷத்தைப் பல்லைக் கடித்துக் கொண்டு தள்ளி விட்டாள்..

“கோமதி….நாம பண்ணின பாவத்துக்கு உண்டான பலன அனுபவிக்கத்தானே வேணும்”என்று புலம்பிக் கொண்டே அகிலாண்டமும் போய்ச்சேர்ந்தாள்.

கனகா … ஹரி… விவேக்.. அவர்களுடைய பிரச்சனைகளில் அப்பாவை சுத்தமாக மறந்திருந்தார்கள்.

அம்மாவிடமிருந்து அவ்வப்போது வரும் போன் கால்கள் தான் அப்பா என்று ஒருத்தர் இருப்பதேயே ஞாபகப்படுத்தும்…

மணி மட்டும் முப்பத்திரண்டு வயதாகியும் கல்யாணம் வேண்டாமென்று அம்மா..அப்பா..கூட திருவான்மியூரில் தங்கி விட்டான்..

கோமதி எதிர் பார்த்தபடியே ஒரு நாள் நடந்தது. காலை ஏழு மணி இருக்கும்… வாசலில் வந்து நின்ற auto விலிருந்து இருவர் கைத்தாங்கலாய் ராமச்சந்திரனை அணைத்தபடி இறங்கினார்கள்.. பதறிப் போனாள் கோமதி…

“என்னங்க…. என்னாச்சு…”

“பயப்படாதீங்கம்மா… இவர் உங்களுக்கு தெரிஞ்சவர் தானே …”

“என் புருஷன்ப்பா..”

“முதல்ல உள்ள கூட்டிட்டு போய் படுக்க வையுங்க…. எல்லாம் விவரமாய் சொல்றோம்….”

பெங்களூரு .. சென்னை விரைவுவண்டடியில் முதல் நாள் ஏறியவர் வழியில் நெஞ்சு வலி என்று துடித்து விட்டார்.சிறிது நேரத்தில் சரியானாலும் மயக்கமாய் படுத்து விட்டார்.

நல்லவேளையாய் சட்டைப்பையில் பர்சில் அட்ரஸ் எழுதியிருந்தால் ரயில்வே அதிகாரிகள் துணையுடன் வீட்டுக்கு அனுப்பி இருக்கிறார்கள்…

“சுமதி ….. அப்பா வந்துட்டார்மா….ஆனா நான் நினச்சபடிதான் ….”

மேற்கொண்டு கோமதியால் பேசமுடியவில்லை…

மணி உடனே டாக்டரிடம் கூட்டிக்கொண்டு போனான்…

“ஸ்டோரோக்கிலேர்ந்து இந்த தடவை தப்பிச்சிட்டாரு..

ரத்தக் குழாயில நிறையவே அடப்பு.. … பைபாஸ் அவசியமா பண்ணனும்…ஆனா உடம்பு ரொம்பவே வீக்கா இருக்கு. எல்லா டெஸ்ட்டும் எடுக்கணும்.. டிலே பண்ணாம அட்மிட் ஆயிருங்க….”

ஒரு நாள் ஓய்வுக்கப்புறம் ராமச்சந்திரன் பழையபடி ஆகிவிட்டார்..

சுமதியைத் தவிர யாரும் எப்படி இருக்கார்னு கூட விசாரிக்காதது கோமதியை துக்கத்தில் ஆழ்த்தியது….

ராமச்சந்திரன் அதையெல்லாம் பத்தி கவலைப் பட்டதாய் தெரியவில்லை…

“ஏங்க…. இப்பவே டாக்டர் சொல்லி ஒரு வாரமாச்சு…எப்போ போய் அட்மிட் ஆகப் போறீங்க…”

“கோமதி…நானே இது விஷயமா உங்கிட்ட பேசணும்னு இருந்தேன்.. டாக்டர் கிட்ட போறதுக்கு முன்னால் சில முக்கியமான விஷயங்கள பேசி ஒரு முடிவுக்கு வரணும்..

ஒரு வேள எனக்கு ஏதாவது ஒண்ணு ஆச்சுன்னா….???”

கோமதிக்கு வயிற்றில் புளியைக் கரைத்தது..என்ன சொல்லப் போறாரோ….???

ராமச்சந்திரன் சொல்ல ஆரம்பித்தார்…

கோமதி…நா சொல்லப்போவது நிச்சயம் உனக்கு அதிர்ச்சியான விஷயம்…

மனச திடப்படுத்திக்கோ..

பொறுமையா கேளு… எனக்கே எப்படி சொல்றதுன்னு தயக்கமா இருக்கு…. கூடிய மட்டும் நடுவுல ஏதும் கேக்காத….முடிச்சப்புறம் எல்லா சந்தேகத்துக்கும் பதில் சொல்றேன்….

***

நாம மயிலாப்பூர்ல உங்க அப்பாவீட்ல இருந்த சமயம்.

நான் முதல் முதல்ல வீட்ட விட்டு போறதுக்கு ஒரு வாரம் முன்னாடி…

உங்கம்மா பேருக்கு ஒரு ரிஜிஸ்டர் தபால் வந்தது…அப்போ நீங்க யாரும் வீட்ல இல்ல..ஏதோ ஒரு கல்யாணத்துக்கு போயிருந்தேள் ..

ஆஃபீஸ் அட்ரெஸுக்கு வந்திருந்ததால் பேர் சரியா பாக்காம பிரிச்சுட்டேன்.

“அன்புள்ள அகிலாண்டேஸ்வரி அவர்களுக்கு…”

பேரப்பாத்ததும் மூடிவச்சிடலாம்னுதான்……. நினச்சேன்….

ஆனா….. ரிஜிஸ்டர் ஆச்சே … ஏதாவது அவசர செய்தியாய் இருந்தா….!

பெங்களூருவிலிருக்கும் ஒரு அனாதை இல்லத்திலிருந்து வந்திருந்தது..

“நீங்கள் ஸ்பான்சர் செய்யும் சிறுவன் பதினாறு வயதை அடைந்து விட்டதால் நீங்கள் கேட்டுக் கொண்டபடி உங்களுக்கு கடிதம் அனுப்பியிருக்கிறோம்….

நேரில் வந்தால் அவனுடைய எதிர்காலம் பற்றி முடிவெடுக்கலாம்…. கடவுள் உங்களை ஆசீர்வதிப்பாராக…!!!

கடிதத்தின் கீழே முழு விலாசமும் , போன் நம்பரும் இருந்தது…”

கோமதிக்கு தலை சுற்றியது…

“இருங்க….என்னமோ செய்யறது…”

“கோமதி….முதல்லயே சொன்னேனே….பதட்டப்படாமல் கேளு……..

எனக்கு ஒண்ணுமே புரியல…பரவாயில்லையே… மாமியாருக்கு அனாதைக் குழந்தைகளுக்கு உதவி செய்யற நல்ல மனசு இருக்கேன்னுதான் முதல்ல தோணித்து…

ஆனா வக்கீல் மூளையில்லையா…. இதில் வேறு ஏதோ விஷயம் இருக்கவேண்டுமென்று எச்சரித்தது…

நாமே அந்த அட்ரஸ்ல போய்ப் பார்த்தால் என்னன்னு தோணித்து…

நீங்களெல்லாம் ஊர்லேந்து வந்ததும் நான் யார் கிட்டயும் சொல்லாம கிளம்பிட்டேன்…

பங்களூரில ஊர விட்டுத் தள்ளி இரண்டு ஏக்கர்ல அழகான பூந்தோட்டத்துக்கு நடுவில இருந்தது அந்த அனாதை இல்லம்…

கன்னியாஸ்திரிகள் நடத்தும் நிறுவனம் என்று தெரிஞ்சுது..

என்னை உள்ள விடவே முதல்ல அனுமதிக்கல. எல்லா முக்கிய டாக்குமென்டெல்லாம் கையோட கொண்டு போனதால் முதல்வர நேர்ல பாக்க முடிஞ்சது..

அரவிந்தைக் கூப்பிட்டு அனுப்பினார்..

பாத்ததும் ஒரு நிமிஷம் என்னை மறந்து அப்படியே நின்னுட்டேன்..

அந்த கல்மிஷமில்லாத முகம்… ஏற்கனவே பரிச்சியமான முக ஜாடை…. தினம் தினம் பாத்துண்டே இருக்கும் முகம்… பதினாறு வயதிலும் பால் வடியும் முகம்…!!!!!!

“அரவிந்த்…. இவர்தான் உன்னோட கார்டியன் மிஸ்டர் ராமச்சந்திரன்…”

“ஹலோ அங்கிள் ”

“நீங்க கொஞ்ச நேரம் பேசிட்டு வாங்க… அவனுடைய எதிர்காலத்தைப் பற்றி தீர்மானம் எடுக்கவேண்டிய நேரம் வந்தாச்சு……..”

அரவிந்த் அதிகம் பேசவேயில்லை. கொஞ்சம் நெர்வசாக இருந்தான்.பத்து நிமிஷம் பாதி மௌனத்தில்…

அவன் இதுக்கு மேல அங்கே தங்கமுடியாதுன்னும் நான்தான் கூட்டிக் கொண்டு போகணும்னும் சிஸ்டர் சொன்னதும் என்ன பண்றதுன்னு கொஞ்சம் தயக்கமா இருந்தது.

உங்க அம்மா நல்ல புத்திசாலி.அவன் பேர்ல இருபது லட்சம் டெபாசிட் பண்ணியிருந்தா…

உங்கம்மாவுக்கு வேண்டிய பையன் என்பதைத் தவிர வேறு எந்த தகவலையும் தர மறுத்துட்டா….”

“போதும்…நிறுத்துங்கோ…. அரவிந்த்… அரவிந்த்…!!!எங்க அவன்…. ??அவன ஏன் கூட்டிண்டு வரல…??? தயவுசெய்து …எனக்கு அவன உடனே பாக்கணும்…!!! உங்களுக்கு எல்லாம் தெரியும்…. சொல்லுங்கோ….”

“கோமதி… எனக்கு தெரியும்… உன்னால தாங்க முடியாது…ஆனா சத்தியமா எனக்கு வேற ஒண்ணுமே தெரியாது…ஆனா அரவிந்த் நம்ப குடும்பத்ல ஒருத்தன் என்கிற உண்மையை புரிஞ்சுக்க முடியாத அளவுக்கு முட்டாளில்ல…”

கோமதியால் அதற்கு மேல் கேட்க முடியவில்லை.

“கோமதி…நீ ரொம்பவே இடிஞ்சு போயிருக்க.. இன்னிக்கு பேசாம ரெஸ்ட் எடுத்துக்கோ…மீதிய நாளக்கி சொல்றேன்.. எதுவானாலும் என் மேல நம்பிக்க வை…..”

“இல்லங்க … எப்படி எனக்கு தூக்கம் வரும்… நான் சொல்றத இப்போ நீங்க கேக்கணும்…அதுக்கப்புறம் மீதி கதைய சொல்லுங்கோ….”

பதினாலு வயது கோமதி அப்பா ஆபீஸ்ல அட்டெண்டராகச் சேர்ந்த நாடார் கிறிஸ்தவ பையன் ஆன்டனியின் புத்திசாலித்தனத்தை கண்டு அவன் மேல் ஆசைப் பட்டதும்,

அப்பாவுக்கு தெரிந்து அவர் அவனை ஊரை விட்டு விரட்டியதும்,

அதற்குள் காரியங்கள் கைமீறிப் போய் அவள் மூன்று மாதம் ஆன்ட்டனியின் குழந்தையை சுமந்து கொண்டிருக்கிறோம் என்பது கூடத் தெரியாமல் மன அழுத்தத்துக்கு ஆளானதும் ….

மூச்சு விடாமல் சொல்லி முடித்தாள் கோமதி….

ஆண்டாள் மனமுடைந்து போனாலும் தைரியத்தை இழக்கவில்லை…

தங்கையின் பிரசவத்துக்கு உதவி பண்ண பங்களூர் போய் நாலைந்து மாதம் இருக்கப் போவதாகவும் , கோமதியையும் கூட கூட்டிக்கொண்டு போகப் போவதாயும் சொல்லிவிட்டு கிளம்பி விட்டாள்….

கோமதியை ஒரு கான்வென்ட்டில் சேர்த்து விட்டு , தான் தங்கை வீட்டில் இருந்து கொண்டாள் .

அரவிந்தை கோமதி கண்ணில் கூட காட்டவில்லை.அவனை அவர்களுடைய அனாதை இல்லத்தில் சேர்த்து விட்டு , வேண்டிய எல்லா ஏற்பாடுகளையும் செய்து விட்டு கோமதியைக் கூட்டிக்கொண்டு வந்துவிட்டாள் ஆண்டாள்.

குழந்தையை யாரோ தத்து எடுத்துக் கொண்டு விட்டார்கள் என்றும், அந்த சம்பவத்தை அடியோடு மறந்து விட வேண்டுமென்றும் கோமதியிடம் கண்டித்து சொல்லி விட்டாள்.

குழந்தைக்குப் பெயர் அரவிந்த் என்பது மட்டும் கோமதிக்கு தெரியும்…

ஒரு வருஷம் மன அழுத்தத்தில் இருந்த கோமதியை ஒரு வழியாக கல்யாணத்திற்கு சம்மதிக்க வைத்தாள்.

“நீங்க ஒரு தடவ சொன்னது ஞாபகம் இருக்கா….? ‘ குடும்ப மானம் போற மாதிரி எதுவும் செய்யமாட்டேன் …னு’ …..

ஆனா நாந்தான் குடும்ப மானத்தை காத்தில பறக்கவிட்டுட்டேன்….

என்னால உங்களுக்கு எத்தன அவப்பேர் …!!!”

“கோமதி…அறியாத வயசுல நீ பண்ணினது தப்பா இருந்தாலும் என்னப் பொறுத்த வர மன்னிக்க முடியாத குத்தமா நினைக்கல..!!”

“ஆனா…உங்கள ஏமாத்தி கல்யாணம் பண்ணிண்டது ….. எவ்வளவு பெரிய பாவம்….

அதைவிட பாவம் குழந்தைகள் உங்கள உதாசீனப் படுத்தறது…..

இப்போ அரவிந்த் என்ன பண்றான்… எங்க இருக்கான்…?”

“கோமதி… அரவிந்த் அப்படியே உன் ஜாடை…அனாத ஆசிரமத்தில வளர்ந்ததால் மனசு ரொம்பவே பாதிச்சிருக்கு…

அவன் கல்லூரில சேந்து பிலாசஃபி முடிச்சிருக்கான்.

ஒரு தனியார் நிறுவனத்தில வேல பாக்கறான்… ஆனாலும் அப்பப்போ வெறிபிடித்தவன் மாதிரி தன்னை இழந்து விடுவான் .

தனியா ஒரு வீடு எடுத்து பாத்துக்க நல்ல ஆளை ஏற்பாடு பண்ணியிருக்கேன்..

என்னை அப்பான்னு தான் கூப்பிடறான். நான் போனவுடனே அமைதியாய் விடுவான்…”

“என்னை கூட்டிண்டு போங்கோ….நா எல்லா உண்மையும் பசங்க கிட்ட சொல்லப்போறேன்….

அவனை வீட்டுக்கு அழச்சுண்டு வந்துடலாம் ..இனி உங்கள யாரும் தப்பா பாக்க விடமாட்டேன்….”

“கோமதி… நானும் முதல்ல அப்பிடித்தான் நெனச்சேன் !! ஒரு வேளை அரவிந்தை கூட்டிண்டு வந்தா எல்லார் முன்னாலையும் உம்பையன்னு ஒத்துப்பியா ….”

கோமதி ஒரு நிமிஷம் ஒன்றும் பேசவில்லை.

“உண்மை சுடும் கோமதி.. வீட்டை விட்டுப் போறேங்கிற ஒரே காரணத்துக்காக என்னையே நம்ப குழந்தைங்க ஒதுக்கி வச்சுட்டாங்க….

சரி ….மத்தவங்கள விடு..இத்தன பழகற விவேக் ஒரு நாள் என்ன கூப்பிட்டு ‘ அப்பா… உங்களுக்கு என்ன பிரச்சினை …?? எதுனால இப்படி பண்றீங்கன்னு கேட்டிருந்தாக் கூட ஆறுதலா இருந்திருக்கும்.

ஆனா எல்லாரும் ‘ அப்பா சரியில்லைன்னு’
முடிவெடுத்தப்புறம் நான் சொல்ல என்ன இருக்கு….??

ஏற்கனவே நான் நிறைய காயப்பட்டாச்சு…

எல்லோரும் உன்னை அனுதாபத்தோட பாக்கறாங்க.. பாவம் அம்மான்னு….

உம்மேல பாசத்த பொழியறாங்க ..நீ உண்மைய சொன்னா என்னாகும்…

உம்மேல வெறுப்பு வரும்… நான் இத்தன நாள் அனுபவிச்ச வேதனய நீ அனுபவிக்க வேண்டி வரும்….

அது என் மனச மேலும் புண் படுத்துமேயொழிய நான் இதுநாள் பட்ட காயத்துக்கு மருந்து போடுமா….?.”

“பின்ன அரவிந்த நாம கூட்டிண்டே வர முடியாதா ..??”

“கோமதி … அவன் இருக்கும் இடத்திலேயே இருக்கட்டும்…இத்தன நாள் அப்பா மட்டும் தான் இருக்கான்னு நினச்சிண்டிருந்தான்…இனிமே இரண்டு பேரும் சேர்ந்தே போவோம்… அவனுக்கு அம்மாவும் கிடச்சுட்டாதா எத்தனை சந்தோஷப்படுவான்….”

“நீங்க ஏன் இத்தனை நல்லவரா இருக்கேள்….??”

***

“கனகா….! நானும் அப்பாவும் பத்து நாள் ஊர்ல இருக்க மாட்டோம்…மணி ஏதாவது கேட்டான்னா பாத்துக்கோ….”

“என்னம்மா…அதிசயமா இருக்கு…உங்காத்துக்காரர் உன்ன விட்டுட்டு ஜாலியா ஊர் சுத்திட்டு வருவார்….

இப்போ என்ன திடீர் கரிசனம்…. எப்படியோ .. கடைசி காலத்திலயாவது புத்தி வந்ததே..
சந்தோஷம்….. போய்ட்டு வாங்கோ…”

“ஹரி… அப்பாவும் நானும் பத்து நாள் வெளில போறோம்…”

“அம்மா…மழதான் கொட்டப்போறது…. பாத்து போங்கோ…வழில எங்கயாவது கழட்டி விட்டுட்டு போகப்போறார்….”

“அம்மா…. எனக்கு எவ்வளவு சந்தோஷமா இருக்கு தெரியுமா..???

உங்களோட பொறுமைக்கெல்லாம் ஒரு விடிவு காலம் பொறந்தாச்சு…. அடிக்கடி இந்த மாதிரி போய்ட்டு வாங்கோ….”

சுமதியின் வாக்கு பலிக்கட்டும்… அடிக்கடி அரவிந்தை பார்க்க யோகம் கிடைக்கட்டும்….

சென்னை…. பெங்களூரு… எக்ஸ்பிரஸ்.

“கோமதி…படபடப்பா இருக்கா…? பசங்க என்ன சொல்றாங்க…?

எப்பவும் போல் எனக்கு அர்ச்சன தானா..?”

“விடுங்கோ…. அப்பா…. அப்பான்னு..உங்களுக்காக ஒருத்தன் காத்திண்டிருக்கானே..உங்க பசங்கோளோட அன்பு உங்களுக்கு கிடைக்க விடாம நான் பண்ணின பாவத்துக்கு பிராயச்சித்தமாக உங்களுக்கு இன்னொரு பையன் கிடச்சிருக்கான்னு நினச்சு என்னை நானே சமாதானப் படுத்திக்கிறேன்…”

“ஆமா .. கோமதி…சில சமயம் ஒண்ணை அடைய இன்னொண்ணை இழக்கத்தான் வேண்டியிருக்கு இல்லையா……???

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *