அப்பாவை போல நானும்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 17, 2019
பார்வையிட்டோர்: 6,318 
 
 

அப்பாவை போலத்தான் நானும் இருக்கிறேனோ? என் மனதுக்குள் இந்த கேள்வி இடை விடாமல் வந்து கொண்டே இருக்கிறது. உருவத்தில் ஒற்றுமை என்பது எல்லோருக்கும் தெரிந்த விசயம், ஆனால் நான் அவரை சில காரியங்களுக்கு சண்டையிட்டிருக்கிறேன்,கேலி செய்திருக்கிறேன்,அன்று நான் கேலி செய்தவைகளை இப்பொழுது நானும் செய்து கொண்டிருக்கிறேன் என்பது என் மனதுக்கு தெரிகிறது.

ஒரு விசயம் அப்பா அப்பொழுது தனி மரமாய் குடும்பத்தை தாங்கிக்கொண்டிருந்தார்.

தனி மரமென்றால் அவர் குடும்பத்து உறுப்பினர்கள் ஒருவரும் உயிருடன் இல்லை,இவர் மட்டுமே ஒற்றை கொம்பாய் இருந்தார். அம்மா வீட்டிலே ஏழெட்டு பெண் பிள்ளைகள், ஒவ்வொருவராய் தாட்டி விடவே அவர்களுக்கு மிகுந்த பிரயாசையாய் இருந்தது. அப்பொழுதெல்லாம், அரசாங்க உத்தியோகமென்றாலும் மாத வருமானம் என்பது மிக குறைவுதான்,ஐந்து குழந்தைகள், சுற்றிலும் கடன் வாங்கியிருப்பார். அந்த வயதிலேயே கடன கொடுத்தவர்கள் வீட்டுக்குள் வருவதை வெறுத்த நான் அப்பாவிடம் இதற்காக பல முறை சண்டையிட்டிருக்கிறேன். எதுக்குப்பா கடன் வாங்குறே? இந்த கேள்விக்கு பதில் சிறு புன்னகையாக வெளீவரும்.எனக்கு ஆத்திரமாக வரும், அந்த ஒரு வேளை சாப்பாட்டுக்கு நான் சாப்பிட போக மாட்டேன். காரணம் கடன் வாங்கி செய்த சாப்பாட்டை நான் சாப்பிடக்கூடாது என்ற வறட்டு பிடிவாதம்தான்.ஆனால் மறு வேளை இரு மடங்காக சாப்பிட்டு விடுவேன் என்பது வேறு விசயம். அப்பொழுது இது கடன் வாங்கி செய்த சாப்பாடு என்பது மறந்து விடும்.

இன்று சில நேரங்களில் என் பெண் எதுக்குப்பா கடன் வாங்குறே என்று கேட்கும் போது அன்று அப்பாவிடம் நான் கேட்ட கேள்விதான் ஞாபகம் வருகிறது. அதை விட வேடிக்கை,அதே புன்னகையைத்தான் இப்பொழுது என் பெண்ணுக்கும் நான் தருகிறேன். சிரிப்புத்தான் வருகிறது.

அப்பொழுதெல்லாம் கடன் என்பது பண்ட மாற்ற முறையில் கூட நிகழும். பக்கத்து வீட்டில் இரண்டு ஸ்பூன் காப்பித்தூளில் ஆரம்பித்து அரிசி வரை கடன் வாங்கி கொள்ளலாம், கொடுத்து கொள்ளலாம்.அம்மா இதில் மிகுந்த சாமார்த்தியசாலி, அப்பாவின் வருமானம் என்பது மாதம் பதினைந்துக்குள் சோர்ந்து சுருண்டு விடும். அதற்கப்புறம் மளிகை நோட்டு கணக்குகளில் தான் குடும்பம் நடக்கும். மளிகைக்கடைக்காரரும், ஒரு மாதம் சிரித்தபடியே கணக்கு நோட்டில் எழுதி மளிகை சாமான்களை கொடுப்பார், மாத முதல் வாரத்தில் முழுவதும் இல்லாவிட்டாலும் பாதிக்கு மேல் கணக்கு அடைத்தால்தான் அடுத்த மாதம் சாமான்கள் கிடைக்கும்.

வீட்டில் தடித்தடியாய் நாங்கள் மூன்று ஆண் பிள்ளைகள் இருந்தாலும், கடன் கணக்கு நோட்டை எடுக்க்துக்கொண்டு மளிகை சாமான்களை வாங்கி வர விரும்ப மாட்டோம்.

காரணம் மளிகை கடைக்காரரின் முகச் சுழிப்புத்தான். எங்களை கேட்டு சலித்துவிட்ட அம்மா பாவம் அவர் வேலை விட்டு வந்தவுடன் அவரையே அனுப்புவார்கள். அப்பொழுது கூட அவர் முகம் சலித்துக்கொண்டதாக எனக்கு நினைவிலில்லை.அவரே கடைக்கு பையை எடுத்து செல்வார். சில நேரங்களில் வெறும் பையைக்கூட கொண்டு வந்ததுண்டு.அப்பொழுது அவர் முகம் எப்படி இருந்த்து என்று எனக்கு ஞாபகம் இல்லை. இருந்தாலும், இன்று மளிகை கடன் தீர்க்காததால் மளிகை தரமுடியாது என்று திருப்பி அனுப்பா விட்டாலும், கெளரவமாய் பைனான்ஸ் நடத்துபவர்களிடம் வாங்கிய கடனுக்கு, அவர்கள் பேசும் தோரணைகளும், விரட்டுதல்களும், அப்பாவை பற்றி அடிக்கடி ஞாபகப்படுத்தும்.

பத்தாவது முடித்து சான்றிதழ்கள் வாங்க என் பள்ளிக்கு வந்த அப்பா கையில் ஒரு பைசா பணமில்லாமல், மதியம் சாப்பிடாமல் இருந்திருக்கிறார். எனக்கு கட்டிக்கொடுத்த சாப்பாட்டை நண்பர்களுடன் சாப்பிட்டு விட்டேன், அப்பொழுது கூட அப்பா நீ சாப்பிட்டாயா? என்று கேட்டதாக எனக்கு ஞாபகமில்லை. சான்றிதழ்கள் வாங்கவும், மற்ற வேலைகள் முடிக்கவும் மாலை ஆறு மணி ஆகியிருந்தாலும் வா நடந்து போய் விடலாம் என்று சொன்னது முப்பது வருடங்கள் கடந்தும் என் மனதில் இன்னும் அந்த ஞாபகம் இருக்கிறது. காரணம் நாங்கள் நடந்து வீடு செல்ல இருபது மைல் போக வேண்டும், அது மட்டுமல்ல, அடர்ந்த காட்டு பகுதி அது. எந்த தைரியத்தில் அப்படி சொன்னார் என்று எனக்கு தெரியவில்லை. நான் அன்று அவரிடம் அப்படி பேசியிருக்க கூடாது, இப்பொழுது நினைத்து என்ன பயன்? கூட படிக்கும் நண்பனிடம் அவன் பெற்றோர்களிடம் பேசி கடைசி பஸ்ஸுக்கு பணம் பெற்று வீடு போய் சேர்ந்தோம் என்பது தனிக்கதை.

இந்த நிகழ்ச்சி மூலம் நானும் கடன் வாங்க ஆரம்பித்து விட்டேன் என்று கூட வைத்துக்கொள்ளலாம்.

எப்படியோ மூத்தவனுக்கு பதினெட்டு வயசில் கோயமுத்தூரில் இருந்த ஒரு கம்பெனியில் சேர்த்து விட, ஒரு சுமை குறைந்ததில் அவருக்கு கொஞ்சம் நிம்மதி இருந்திருக்க வேண்டும். ஆனால் பணி செய்யும் போது சிறு விபத்தால் ஈ.எஸ்.ஐ. மருத்துவமனையில் மூன்று மாதங்கள் அவனுடனே இருந்து கவனித்து கொண்டது, அவனுக்கு கொடுத்த உணவிலேயே இவரும் சமாளித்து கொண்டது, அதன் பின் அவனை அங்கேயே வேலையை தொடர வைக்க மிகுந்த சிரமப்பட்டது இப்பொழுது ஞாபகத்திற்கு வருகிறது.

பணம் என்பது எப்பொழுதும் பற்றாக்குறையாக இருந்ததால் உடல் நிலையை பற்றி அப்பாவும், சரி அம்மாவும் சரி பெரிய அளவில் கவலைப்பட்டுக்கொள்ளவில்லை.சில உபாதைகளுக்கு அரசு மருத்துவ சிகிச்சைகளே, போதுமானவைகளாக இருந்தன. இதனால் மருத்துவத்துக்காக கடன் ஏறியதாக ஞாபகமில்லை.

கடைசியில் நானும் பிரிந்து வேலை ஒன்றை தேடி நகரத்துக்குள் வரவும், கடைசி பெண்ணாய் பிறந்தவள், இரகசியமாய் அருகில் இருந்த ஒருவருடன் திருமணம் செய்து கொண்டதை கேள்விப்பட்டு மனம் வெறுத்து அப்பாவையும், அம்மாவையும் பார்க்க கூட போக முடியாமல் இருந்தேன்.

இதில் மிகப்பெரிய ஆச்சர்யம் அவர் அம்மாவின் மேல் காட்டிய பற்று, நாங்கள் எவ்வளவுதான் அம்மாவைப்பற்றி குற்றங்கள் வாசித்தாலும், தன் மனைவியை பத்திரமாய் பார்த்துக்கொள்வதில் கவனமாய் இருந்தார். அப்பொழுது எனக்கு அது ஆத்திரமாய் வந்தாலும், இப்பொழுது என் குழந்தைகள் அம்மாவை பற்றி குற்றங்கள் வாசித்தாலும், அன்று அப்பா செய்ததைத்தான் செய்கிறேன்.காரணம் இப்பொழுது புரிகிறது,வருடங்கள் செல்ல, செல்ல நானும் என் குழந்தைகளும், எல்லா காரியங்களுக்கும் பெண்ணை சார்ந்து விடுகிறோம்.

நம்முடைய உடைகளில் இருந்து உணவுகள் வரை நிர்ணயிப்பவள் பெண்ணாகி விடுகிறாள்.

இது ஒரு விதத்தில் நமக்கு பாதுகாப்பு என்றாலும், அவள் இல்லாவிட்டால் !..நினைக்கும் போதே பயம் வந்து விடுகிறது.

“சடக்கென பிரேக்” பிடித்து சோமாறி குறுக்க வர்றாம் பாரு சொல்லிக்கொண்டே ஆட்டோவை ஒடித்து திருப்பிய டிரைவர் அடுத்த சந்தா சார்? கேட்டவுடன்தான் நான் தன்னிலை உணர்ந்தேன், ஆட்டோவில் ஏறி உட்கார்ந்த்தை கூட மறந்து இவ்வளவு நேரம் அப்பாவை பற்றியே சிந்தித்திருக்கிறேன்.

ஆமாப்பா அடுத்த கட்டுத்தான், வண்டி வீட்டு வாசலில் நிற்கவும், என் மனைவி, குழந்தைகளும் முகத்தில் அழுகை வெடிக்க நின்று கொண்டிருக்க, யாரையும் கவனிக்காமல் உள்ளே நுழைந்த நான் கண்டது “அப்பாவின் உடல் நெடுஞ்சாண் கிடையாக படுக்க வைக்கப்பட்டு இருக்க, அருகில். அம்மா சோகமாய் உட்கார்ந்திருந்தாள்.

அடுத்து செய்யப்போகும் செலவுகளுக்காக யாரிடம் கேட்க வேண்டும் என்ற மன நிலையில், என் பின்னாலே வந்து கொண்டிருந்த மனைவியை பார்த்தேன்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *