அப்பாவின் தோழி….!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 4, 2018
பார்வையிட்டோர்: 5,255 
 

பூங்காவில் அந்த முகத்தை எதிர்பாராமல் பார்த்ததில் எனக்கு வியப்பு திகைப்பு. அந்த முகமும் என்னைப் பார்த்து சுதாரித்து பின் மலர்ந்து என்னை நோக்கி வந்தது. ரொம்ப களையான முகம்.

இவள் என் அப்பாவின் தோழி. தலையில் கொஞ்சம் நரை. கண்களின் கீழ் கரு வளையம். கொஞ்சம்கூட பூசாமல் அதே மெலிந்த தேகம்.. தலை நரைக்கு மை பூசிவிட்டால் முப்பது ஆண்டுகளுக்கு முன் பார்த்த அதே அம்பிகா.

நாங்கள் ஒருத்தரை ஒருத்தர் நெருங்குவதற்குள் என் நினைவுகள் பின்னோக்கிச் சென்றது.

நானும் தம்பியும் நான்காம் வகுப்பு இரண்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் போது இந்த அம்பிகாவும் அவள் கணவர் கதிர்வேலாயுதமும் அடுத்தத்தெரு. அதில் முதல் வீடு. நாங்கள் பள்ளிக்கூடம் போய் திரும்பினாலும் அப்பா அம்மா வெளியே போய் வருவதென்றாலும் இவர்கள் வீட்டைக் கடந்துதான் செல்ல வேண்டும்.

எங்கள் அப்பா அன்பரசன் கல்லூரி விரிவுரையாளர். அம்மா நாகவள்ளி தனியார் கம்பெனி ஒன்றில் எழுத்தர். அம்மா, அப்பா, நான், தம்பியெல்லாம் வீட்டைவிட்டு காலை ஒன்பது மணிக்குக் கிளம்பிவிட்டால் மாலைதான் வீடு திரும்புவோம். அப்பாவும் அம்மாவும் ஆளுக்கொரு வண்டியில் புறப்பட்டுப் போவார்கள். நானும் தம்பியும் சைக்கிள். அப்பா அம்மா வரும்வரை நானும் தம்பியும் அம்பிகா வீட்டில் அடைக்கலம். அங்கு சும்மா இல்லாமல் அம்பிகா அத்தையிடம் டியூசன் படிப்போம். அப்பாவும் அம்மாவும் ஆளுக்கொரு சாவி வைத்திருப்பார்கள். எவர் முதலில் வந்தாலும் ‘‘அத்தை! பை பை டாடா.‘‘ கிளம்பிவிடுவோம்.

நாங்கள் இந்த வீட்டிற்கு குடி வந்ததே அம்பிகா முயற்சியால்தானாம். அப்பாவும் அம்பிகாவும் ஒரே ஊர். பால்யகால சினேகிதர்கள். ஒன்றாகப் படித்தவர்கள். அம்பிகாவிற்கு முதலில் திருமணம். அடுத்துதான் அப்பா. முதலில் வேலை. அதன்பிறகு திருமணம்;, நாங்கள். சென்னையிலிருந்து திருச்சிக்கு பதவி உயர்வில் மாற்றம் வரும்போது அப்பாவிற்கு அம்பிகாவின் நினைவு வர.. கடிதம் எழுதி அப்புறம் தொலை பேசியில் தொடர்பு கொண்டு…. அவளும் அவள் கணவரும்தான் இந்த வீடு பார்த்து முடித்தார்கள். சாமான் சட்டுகளோடு லாரியில் வந்த எங்களைக் குடியமர்த்தினார்கள். அப்படித்தான் எங்களுக்குப் பழக்கம் நெருக்கம். அம்பிகாவின் கணவர் பெரிய வியாபாரி. திருச்சி உச்சிப் பிள்ளையார் கோயிலின் கீழ் பெரிய கடை. வீடு இருப்பது சண்முகாபுரம். அம்பிகா அத்தைக்கும் கணவருக்கும் குழந்தைகள் இல்லாததால் எங்கள் மீது அவர்களுக்கு ரொம்ப அன்பு, ஆசை.

இந்த அம்பிகாவும் அவள் கணவரும் முதன் முதலில் அறிமுகமாகும் போது அம்மாதான் அம்பிகாவை அத்தையென்றும் அவள் கணவரை மாமா என்று அழைக்குமாறு எனக்கும் என் தம்பிக்கும் சொன்னாள்.

பெண்கள் ரொம்ப குயயுக்திக்காரர்கள். தம்பதிகளோடு ஆண் பெண் யார் பழகினாலும் சரி குழந்தைகளுக்கு அவர் அத்தை, மாமா உறவு. காரணம்…. ஆண் பழகினால் அவனால் தனக்கு பாதகம் வரக்கூடாது. மறந்தும் தன்னைத் தவறாகப் பார்க்கக்கூடாது, பழகக்கூடாது என்பதற்காக தனக்கு சகோதரன் முறைவைத்து குழந்தைகளை அவனை மாமா என்று அழைக்கச் சொல்லி அவனைத் தனக்குச் சகோதரனாகவே ஆக்கி தங்களுக்குப் பாதுகாப்பு தேடிக் கொள்வார்கள். பெண்கள் என்றால் அவள் தன் வாழ்வில் குறுக்கிடக்கூடாது, கணவனைப் பகிர்ந்து கொள்ளக்கூடாது என்பதற்காக அவளை அவனுக்குச் சகோதரியாக்கி தனக்கு நாத்தியாக்கி குழந்தைகளுக்கு அத்தையாக அறிமுகப்படுத்திவிடுவார்கள். இப்படித்தான் குழந்தைகளுக்கு உறவு இல்லாத உறவாய் நிறைய மாமா, அத்தைகள்.

அப்பாவிற்கு அம்பிகாவோடு பேசப்பிடிக்கும். அவள் வீட்டில் போய் உட்கார்ந்து மணிக்கணக்காய்ப் பேசுவார். அம்மாவும் ஆரம்பத்தில் அவளோடு ஆவலாய்ப் பேசினாள். பின் வேலை விட்டு வந்ததும் களைப்பு மீண்டும் வீட்டு வேலை…..காரணமாக ஒதுங்கினாள். அது அப்படித்தான் என்று நினைத்தோம். ஆனால் அது அது இல்லை வேறு. முதல் ஒரு மாதத்திற்குப் பிறகு அப்பா அம்பிகா வீட்டிற்குப் போய் வந்தார்;, அவளோடு பேசினார் என்றாலே அம்மாவின் முகத்தில் மாறுதல்;, கடுகடுப்பு. அது மட்டுமா வாயும் முணுமுணுக்கும். இதற்கான உச்சக்கட்டமும் ஒருநாள் வந்தது.

அன்றைக்கு அம்பிகா வீட்டில் வெகு நேரம் டியூசன் படித்தோம். வேலை விட்டு வந்த அப்பா இறங்கி அத்தையோடு கொஞ்சநேரம் பேசி இருந்து விட்டு எங்களை அழைத்து வந்தார். நாங்கள் வீட்டில் நுழைந்த அடுத்த விநாடி அம்மா இறுக்கமாக ‘‘ நீங்க நாளையிலேர்ந்து அந்த வீட்டுக்குப் போக வேணாம். இங்கே பக்கத்து வீட்டுக்கு வந்துடுங்க.‘‘ சொன்னாள்.

‘‘ஏன் ?‘‘ அப்பா திடுக்கிட்டவராய் ஏறிட்டார்.

‘‘அது அவுங்கவுங்க மனசுக்குத் தெரியும்.!‘‘

‘‘புதிர்போடாம சொல்லு ?‘‘

‘‘உங்க நடப்பு சரி இல்லே.‘‘

‘‘நாகு…! ‘‘ அதிர்ந்தார்.

‘‘நடிக்காதீங்க. அவளுக்கும் உங்களுக்கும்….‘‘

அம்மா முடிக்காமலேயே அப்பா ஆடிப்போனார். ஆளை அடிக்கும் ஆத்திரம் அறைக்குள் சென்றார். அவருக்குள் ஒரு நல்லப் பழக்கம். கணவன் மனைவிக்குள் என்ன சண்டை சச்சரவென்றாலும் குழந்தைகள் முன் அதாவது எங்கள் முன் நிகழ்த்தமாட்டார். அடக்கி…. இல்லாத சமயத்தில் தொடர்வார். காரணம் குழந்தைகள் மனம் பாதிக்கக்கூடாதென்கிற நல்லெண்ணம்.

இரவு பத்து மணிக்கு மேல் தம்பி தூங்கிவிட்டான். நானும் தூங்கிவிட்டேன் நினைப்பில் அப்பா இருட்டின் மெல்லிய வெளிச்சத்தில் ‘‘அபாண்டம் சொல்றே நாகு‘‘ என்றார் அம்மாவிடம் மென்மையாக.

‘‘இல்லே. உங்க நடப்பு, போக்குவரத்து, கூத்து எல்லாத்தையும் பார்த்துதான் சொல்றேன் !‘‘

‘‘இது வீண் கற்பனை, சந்தேகம்.‘‘

‘‘அப்படியே இருக்கட்டும். பையன்கள் அங்கே போக வேணாம்.‘‘

‘‘படிப்பு கெடும். படிப்பு மட்டுமா….நாம வர்றவரை பாதுகாப்பு ?‘‘

‘‘அடுத்த வீட்டுப் பொண்ணு நல்லா சொல்லிக்குடுக்குது. பக்கம் பாதுகாப்பும் உண்டு.‘‘

‘‘இப்படி திடீர்ன்னு நிறுத்துறது அம்பிகா மனசுல வருத்தத்தை ஏற்படுத்தும்.‘‘

‘‘உங்களுக்கு சிரமம் வேணாம். எங்களுக்குப் புள்ளைங்க பக்கத்து வீடு வந்தா ரொம்ப வசதின்னு நான் பக்குவமா சொல்லி கழட்றேன்.‘‘

‘‘இப்படியெல்லாம் பேசி கழட்டனுமா ?‘‘

‘‘களை இருந்தா எடுத்துத்தான் ஆகனும்.‘‘

‘‘நட்பைக் கொச்சைப் படுத்தறே,‘‘

‘‘ஆணுக்கும் பெண்ணுக்கும் நட்பே கெடையாது. தொட்டுக்கத் தொடங்கும் போர்வை‘‘

‘‘படிச்சி வேலைப் பார்க்குறவ பேச்சா நீ பேசலை.‘‘

‘‘நமக்குள்ளே எதுக்கு வாக்குவாதம். எனக்கு அவகிட்ட நீங்க பேசுறது, பழகுறது புடிக்கலை. வேணாம்ங்கும்போது விட்டுவேண்டியதுதானே !‘‘

‘‘விடுறதுக்கு இது ஒன்னும் நேத்திக்கு இன்னைக்குப் பழக்கம் இல்லே நாகு. அம்பிகா அவ புருசன் செய்த ஒத்தாசையினால்தான் நாம நல்ல வீட்டுல குறைஞ்ச வாடகையில இருக்கோம்.‘‘

‘‘ஆக நாங்க அன்னையிலேர்ந்து பழக்கம் வைச்சிருக்கோம். இன்னைக்கும் அதே மாதிரி பழக்கம் வைக்கனும் விடுன்னு சொல்றீங்க ?‘‘

‘‘வார்த்தைக்கு வார்த்தை குத்தம் எடுத்தா நான் எப்படி பேசுறது ?‘‘

‘‘நான் தப்புப் பண்ணிட்டேங்க. உங்க பழக்கம் விடவே இல்லை. வெளியூருக்கு வேலையாய்ப் போறேன் போறேன்னு திருச்சிக்கு வந்திருக்கீங்க. என் அப்பா வேலையில உள்ள மாப்பிள்ளைன்னதும் சரியாய் விசாரிக்காம விழுந்துட்டாரு. நானும் சரின்னு தலையாட்டிட்டேன்.‘‘ அம்மா விசும்ப அப்பாவிடமிருந்து பேச்சே இல்லை.

மறுநாள் காலையிலேயே அம்மா ‘‘சுந்தர் ! சுரேஷ் ! இன்னையிலேர்ந்து நீங்க அத்தை வீட்டுக்குப் போகாம பக்கத்து வீட்டுக்கு வந்து டியூசன் படிங்க. நான் அந்த அக்காக்கிட்ட சொல்லி இருக்கேன்.‘‘ கறாராக சொன்னாள்.

‘‘வந்து நாகு…‘‘ அப்பா ஏதோ சொல்ல வாயெடுத்தார்.

‘‘நீங்க என்ன சொல்ல வர்றீங்கன்னு எனக்குத் தெரியும். நாம ராத்திரியே பேசி முடிச்சாச்சு. என் முடிவுல மாத்தமில்லே..‘‘

‘எவ்வளவு முரண்டு !‘ அப்பா தலை தொங்கியது.

அன்று மாலை நாங்கள் அம்பிகா அத்தை வீட்டைத் தாண்டி வர முடியவில்லை. அழுகையாய் வந்தது. கஷ்டப்பட்டு வந்தோம். இங்கே எங்களுக்குப் படிக்கப் பிடிக்கவில்லை.
அன்றிலிருந்து அப்பா அத்தை வீட்டிற்குப் பக்கம் தலை வைத்துப் படுக்கவில்லை. ஏன் அந்த பாதையை விடுத்து வேறு வழியாக அலுவலகம் சென்றார், வந்தார். எங்களுக்குத்தான் வேறு வழியில்லாமல் இப்படியே வந்தோம்.

நாங்கள் அந்த வீட்டிற்குப் போகாததனால் அத்தை முகத்தை ஒளியில்லை. அப்பாவையும் காணாததால் முகம் களையிழந்து போயிற்று. அப்பாவும் ஏதோ பறிகொடுத்தவர் போலிருந்தார். தாக்கம்….. அம்மாவிடமும் அதிகம் பேசவில்லை.

குடும்பமே சூனியம் பிடித்தது போல சோகம் பிடித்து சவலையாய் இருந்தது,

பாதுகாப்பாய் இருந்ததோடு அத்தை எங்களைப் படிப்பு மட்டுமா சொல்லிக் கொடுத்தாள் ? பாசம் நேசமும் வைத்;தாள். சரியாய் நாலு மணிக்கு வாசலுக்கு வந்து எங்கள் வருகைக்காக வழி மேல் விழி வைத்துக் காத்திருப்பாள். சைக்கிளை விட்டு இறங்கியதும் இருவர் தோளிலும் ஆளுக்கொரு கை போட்டு அன்பாய் அரவணைப்பாய் வீட்டிற்குள் அழைத்துச் செல்வாள். உள்ளே பசிக்கு பஜ்ஜியோ பகோடாவோ இருக்கும். அத்தையைப் போல் அந்த மாமாவும் எங்கள் மேல் பாசத்தைப் பொழிந்தார். எல்லாம் கொஞ்ச காலம். அம்மாவின் சந்தேக நெருப்பு எல்லாவற்றையும் பாழ் படுத்தி விட்டது,

‘‘பாவி ! என் குடும்பத்தைக் கெடுத்தாள்.‘‘ அப்பாவின் விலகளைத் தாங்க முடியாமல் அப்பா கேட்க…. வாய்விட்டே அம்மா முணகினாள்.

ஒருநாள் அத்தை வீடு பூட்டி இருந்தது. மறு நாளும் மறுநாளும் அப்படியே. அத்தையும் மாமாவும் வெளியூருக்குப் போயிருக்கிறார்கள் என்றே நினைத்தோம். மறுநாள் அந்த வீட்டைக் கடந்து வருவதற்கு முன் இன்னொரு வீட்டு வாசலில் நின்ற ஒருத்தி ‘‘யேய் ! இங்கே வா‘‘ எங்களை அழைத்தாள்.

‘‘என்ன ?‘‘ தம்பி இறங்க.. அருகில் கொண்டு சைக்கிளை நிறுத்தினேன்.

‘‘ஏன் நீங்க இங்கே வரலை ?‘‘ கேட்டாள்.

‘‘வீட்டாண்டாயே படிக்கிறோம் !‘‘

‘‘உங்களுக்கும் இந்த வீட்டுக்கும் சண்டையா ?‘‘

‘‘இல்லியே !‘‘

‘‘அம்மா பேச வேணாம்ன்னு சொல்லிட்டாங்களா ?‘‘

‘ஆமாம் ‘ சொல்ல வாய் வந்தது. ‘‘இல்லை‘‘ சொன்னேன்.

‘‘உங்க அப்பா ஊர்ல இல்லியா ? இந்தப் பக்கமே காணோம் ?‘‘

‘‘…………………..‘‘

‘‘உங்களால அம்பிகா அத்தை வீட்டையே வித்துட்டு வெளியூர்; போய்ட்டாங்க.‘‘

‘எங்கே ?‘‘

‘‘தெரியலை.‘‘
‘‘மாமா கடை ?‘‘

‘‘அதையும் வித்தாச்சு.‘‘

அம்மா எங்களைக் கடந்து போனாள். எங்கள் கெட்ட நேரம் இன்று நேரத்தோடு வீட்டிற்குச் சென்றாள்.

வீட்டில் நுழைந்ததுமே ‘‘அந்த சிறுக்கிக்கிட்ட உங்களுக்கு என்னடா பேச்சு ?‘‘ காய்ந்தாள்.

நடந்ததைச் சொன்னோம்.

‘‘ஓகோ ! இங்கே விசயம் எடுத்து அங்கே அனுப்புறாளா ? இவதான் தூதா ?‘‘ பல்லைக் கடித்தாள்.

அப்பாவிடம் அந்த சோகம் அப்படியே இருந்தது. அப்பாவும் அம்மாவும் உடைந்த கண்ணாடியாகிவிட்டார்கள்.

‘‘சிறுக்கி ! இருந்தும் கெடுத்து இல்லாமையும் கெடுத்துட்டா..‘‘ கொதிப்புத் தாங்காமல் அம்மா ஒரு நாள் ராத்திரி ஒப்பாரியே வைத்தாள். அம்மா அப்படி அர்த்த ராத்திரியில் அழுது நான் பார்த்ததே இல்லை.

அடுத்து காலச்சக்கரங்கள் சுழல……இதோ அம்பிகா.

‘‘நீ…நீ…..நீங்க சுந்தர்தானே ?‘‘

‘‘ஆமாம் அத்தே ?‘‘

‘‘பாவி ! நீ என்னைச் சரியாய்க் கண்டுபிடிச்சுட்டே. என்ன பண்றே, எப்படி இருக்கே ?‘‘

‘‘படிச்சு முடிச்சுட்டு இங்கே வேலையில இருக்கேன் அத்தே. கலியாணம் ஆயிடுச்சு. ரெண்டு வயசுல ஒரு பையன் இருக்கான்.‘‘

‘‘பேரனா ?! நீங்க வராம போனதும் நான் ரொம்ப தவிச்சுப் போனேன். தத்தெடுக்கிறதுன்னு முடிவுக்கு வந்து ஆணாய் வளர்க்கிறதைவிட பொண்ணாய் வளர்ப்போம்ன்னு எடுத்து அதைக் கட்டிக்குடுத்து ஒரு குட்டிப் பையன் இருக்கான்.‘‘

‘‘நீங்க இந்த ஊர்ல இருக்குறீங்களா ?‘‘

‘‘ஆமாம். தம்பி எப்படி இருக்கான் ?‘‘

‘‘அவனும் படிச்சு முடிச்சுட்டு பெங்களுர்ல வேலையாய் இருக்கான். போன வருசம் அவனுக்கும் கலியாணம் முடிச்சாச்சு.‘‘

‘‘சந்தோசம.; அப்பா இருக்காரா ?‘‘

‘‘இல்லே. உள்ளுக்குள்ளே வருத்தம். கொஞ்சநாளையில செத்துப் போயிட்டார்;.‘‘ என் தொண்டை கரகரத்தது.

‘‘அட..! ‘‘ அம்பிகா அதிர்ச்சியின் உச்சத்துக்குப் போனாள். வினாடி நேரத்தில் கண்கள் கலங்க… இரண்டு சொட்டுகளும் நிலத்தில் விழுந்தது, துடைத்துக் கொண்டாள்.

‘‘நீங்க இங்கே இனி வரமாட்டீங்கன்னு உங்க அம்மா வந்து சொன்னதும்…..ஏதோ பிரச்சனை ? குழம்பினேன். அடுத்து உன் அப்பா அலுவலகத்திலேர்ந்து போன் பண்ணி விசயம் சொன்னார். நாம ஒருத்தர் முகத்துல ஒருத்தர் முழிக்கிறதுகூட நாகவள்ளிக்கு எரிச்சலை உண்டு பண்ணும். அந்த அளவுக்கு அவ நம்ம நட்புப்புரியாம சந்தேகமே உருவாய் இருக்காள். எனக்கும் உன்னைப் பார்த்து பேசாம வந்தா மனசு துடிக்கும். நான் வழியை மாத்திக்கிறேன். மனைவி சந்தேகம் சரியானதும் நாம சந்திக்கலாம். சொன்னார். நம்மாள ஒரு குடும்பத்துல குழப்பம் வேணாம்ன்னு அப்பவே முடிவெடுத்தேன். உங்களைப் பார்க்க முடியாத ஏக்கம், வெளியிட முடியாத நட்பு, பாசத்தையெல்லாம் எங்கேயாவது கொட்டினால்தான்பைத்தியம் பிடிக்ககாமல் நான் சரியாவேன்னு மனசுல பட்டுது. முடிவு ?,,,,, அந்த ஊரையேக் காலி பண்ணினோம். உடனே இங்கே வந்து ஒரு அனாதை ஆசிரமம் போய் பெண் குழந்தையைத் தத்தெடுத்து முடிச்சபிறகுதான் எனக்குள்ளே இருந்த கொதிப்பு, ஆவேசம். அடங்கிச்சு.‘‘ நிறுத்தினாள்.
கேட்க எனக்கு வருத்தமாக இருந்தது.

சிறிது நேர மௌனத்திற்குப் பின்…‘‘அம்மா இருக்காங்களா ?‘‘அம்பிகா தொடர்ந்தாள்.

‘‘இருக்காங்க‘‘ என்றேன்.

‘‘பார்க்க ஆசை. ஆனா… அவுங்க இன்னும் எதிரியாய் விரோதியாய் நெனைக்கலாம். ஒரு நல்ல நட்புக்கு ஆண் பெண் பேதமில்லே தெரியுமா ! புரிஞ்சுக்காதவங்க நாகவள்ளி. நான் வர்றேன். தம்பியையும் கேட்டதாய்ச் சொல்லு.‘‘ நகர்ந்தாள்.

‘என்ன ஒரு உயர்ந்த உள்ளம் நட்பு !‘ நான் கனத்த மனதுடன் வீட்டிற்கு வந்தேன்.

‘‘அந்த சிறுக்கி ! சண்டாளி ! என் வாழ்க்கையைக் கெடுத்துட்டா, கெடுத்தாள்‘‘ அப்பா இருக்கும் போதே சந்தேகம் முற்றி கொஞ்சமாய் மனநலம் பாதிக்கப்பட்ட அம்மா இப்போது முழுவதுமாய் முற்றி அறைக்குள் கிடந்து அதையே முணகிக்கொண்டிருக்கிறாள்.

இதை அம்பிகா அத்தையிடம் நான் சொல்லவில்லை. சொன்னால் வருத்தப்படுவாள். பாவம் அப்பாவின் தோழி !

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *