அப்பாவின் சினேகிதி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 17, 2016
பார்வையிட்டோர்: 10,643 
 
 

லண்டனிலிருந்து விமானம் புறப்படக் கொஞ்ச நேரம் இருக்கும்போதுதான் அவள் வந்தாள். தனது கையில் போர்டிங்கார்ட்டை வைத்துக்கொண்டு,தான் இருக்கவேண்டிய இடத்தைத் தேடினாள். அவசரப் பட்டு வந்ததால் அவளது சுவாசம் அதிகமாகவிருந்தது. நீல நிறத்தில் சிவப்புக் கரை போட்ட ஷிபோன் சேலை அவள் உடலைத் தழுவிக் கிடந்தது.

பத்து வருடங்களின் பின்னும் அவள் பருவம் குலையாத பெண்மை குங்குமப் பொட்டுடன் கொலு வந்தது. அவள் ஒரு ஓவியை.அவளே ஒரு ஓவியமாய் அருகில் வந்தாள்.

விமானப் பணிப்பெண் அவள் கொண்டுவந்திருந்த பெட்டியை வாங்கி,பிரயாணிகளின் இருப்பிடத்திற்கு மேலேயுள்ள சாமான்கள் வைக்குமிடத்தில் வைப்பதற்கு உதவி செய்தாள்.

அவள் என்னருகில் வந்து உட்கார்ந்தாள். .ஜன்னலுக்குப் பக்கத்தில் இருக்க வேண்டியவள் அவள்.ஆனாலும் நான் விமானத்துக்குள்ப் போய்க் கொஞ்ச நேரமாகியும் அந்த இடத்துக்கு யாரும் வராதபடியால்,யாரோ ஒரு பிரயாணி தனது பிரயாணத்தை ரத்து செய்திருக்கலாம் என்று நினைத்துக்கொண்டு,ஜன்னல் பக்க இடத்தை நான் ஆக்கிரமித்திருந்தேன். இடம் கிடைத்தால் மடம் பிடுங்கும் சுயநலக்குணம்!

நான் தர்மசங்கடப்பட்டேன்

எனது தர்மசங்கடத்தை அவள் அவதானித்திருக்கவேண்டும்,’பரவாயில்லை, நீங்கள் அந்த இடத்திலேயே இருக்கலாம்’அவள் குரலும் அவளின் குலையாத இளமைப் பருவம்போல் கணிரென்றிருந்தது.அவள் படைத்த ஓவியங்களை எனது தந்தையார் என்னிடம் காட்டியது ஞாபகம் வருகிறது.குழந்தைகளும் பெண்களும் அவளது ஸ்பெசியாலிட்டி. அவள் என் முகத்தைப் பார்த்து என்னுடன் பேசியபோது அவள் முகத்தில் ஏதோ ஒரு கேள்வி வந்து மறைந்ததை என்னால் கவனிக்காமலிருக்க முடியவில்லை. அப்போது. அவளின் முகம் சலனமற்ற குழந்தைத்தனத்தைத் தாண்டி சட்டென்று எங்கேயோ தடுக்கி விழுந்த பாவம் அவள் முகத்திற் தெரிந்தது.

நான் ஒரு சைக்கோலஜிஸ்ட்,உடம்பின் நெழிவு சுழிவுகளின்,கண்களின் அசைவின்,உதடுகளின் முறுவலில் ஒரு மனிதனின் உள்ளுணர்வை என்னால்ப் புரிந்து கொள்ள முடியும் என்பது அவளுக்குத் தெரியாமலிருக்கலாம்.

எனது தந்தைக்கும் எனக்கும்,வயதில் மட்டுமல்ல,பல தரப்பட்ட பழக்க வழக்கங்கள், மனவோட்டங்களிலும் பெரிய மாற்றமுண்டு என்பதையும் அவள் அறியாள். என்னைக் கண்டதும் அவள் சிந்தனையிற் சம்மட்டியாக வந்து விழுந்த கேள்வி என்னவாகவிருக்கும் என்றும் எனக்குத் தெரியும்.

‘உங்களை எங்கேயோ பார்த்த ஞாபகம்’ என்று அவள் சொன்னபோது அவள் பார்வை தடுமாறியதை,நான் தெரிந்துகொண்டதாகக் காட்டிக் கொள்ளவில்லை. அவள் எனது கண்களுக்குள் புகுந்த நாள் இன்றும் எனது நினைவிலிருக்கிறது.

பத்துவருடங்களுக்குமுன் அவள் எனது அப்பாவின் காரில் வந்து எங்கள் வீட்டுக்கு வந்திறங்கியதை,நான் எங்கள் வீட்டு மேல் மாடியிலுள்ள ஜன்னல்வழியாகப் பார்த்தேன். அவளுக்கும் அப்பாவக்கும்,அவர் ஒரு பத்திரிகையாளர்,அவள் ஒரு ஓவியை என்பதற்கப்பால் உள்ள உறவின் நெருக்கம் அன்றும் எனக்குத் தெரியாது,இன்றும் புரியாது.

அன்று,அவள் எங்கள் வீட்டுக்கு வரத் தயங்கியதையும்,அவளுக்கு ஆறுதலாக அப்பா ஏதோ சொல்வதையும் ஒரு இனிமையான மாலை நேரத்தில் ஜன்னல் வழியாக மிகவும் ரசித்தேன். ஓரு பத்திரிகையாளனுக்கும், ஒரு ஓவியைக்குமுள்ள ஒரு வெற்றுறவாக அவர்களின் உறவு எனக்குப் புலப் படவில்லை.

எனது தந்தை ஒரு பிரபல பத்திரிகையாளன். அவருடன் எத்தனையோ ‘சினேகிதி’கள் எங்கள் வீட்டுக்கு வந்திருக்கிறார்கள். அம்மா கோயில் குளமென்று திரிபவள், அவள் சில வேளைகளில் வீட்டில் இல்லாதபோதும் அப்பாவைத் தேடி எத்தனையோ,எழுத்தாளர்கள்,கலைஞர்கள்,ஓவியர்கள், பாடகர்கள்,நடிகர்கள் என்று பல பேர் வருவார்கள். அதில் ஆண்பெண்கள் என்ற வித்தியாசம் இருக்காது. அம்மா இருக்கும்போது வருபவர்களுக்கு காப்பியோ, தேனிரோ போட்டுக் கொடுப்பாள்.

அவர்கள் போனதும் அம்மா வந்து போன பெண்களைப் பற்றி விசாரிப்பாள்.கல்யாண உறவுகளுக்குள் ஒருத்தரை ஒருத்தர் வேவு பார்க்கும் கேள்விகள் அவை. அப்பாவைப் பார்க்க வந்த பெண்கள், கல்யாணமானவர்களா, பிள்ளை குட்டியுள்ளவர்களா, என்ற பல விசாரணைகள் நடக்கும்.

அப்பா ஒரு திறமையான நடிகன். ஓரு பிரபல பத்திரிகையாளனுக்குள்ள அத்தனை குணாம்சங்களும் அவருக்கிருந்தன.எவரையும் தன் கவர்ச்சியான சிரிப்பாலும்,கணிரென்ற பேச்சாலும்.வசிகரிக்கும் எனது தகப்பன், அட்டியலுக்கும்,பட்டுச்சேலைக்கும் தன் வாழ்நாளில் பெரும் பகுதியைச் செலவிடும்,என் தாய்க்கு எந்த விதத்தில் பொருத்தமானவர் என்பது எனக்குத் தெரியாது.

அம்மா கேட்கும் கேள்விகளுக்கு அவரின் மறுமொழிகளில் உண்மையுண்டோ என்னவோ அல்லது அவை உண்மையானவை என்று தன்னைத் தானே திருப்திப் படுத்திக் கொள்வாளோ தெரியாது அவள் அடங்கி விடுவாள்.

மிக மிகச் சம்பிரதாயக் கோட்பாடுகளைக் கடைப் பிடிக்கும் குடும்பங்களிலிருந்த வந்த எனது பெற்றோர் காலாகாலமாகக் கடைப் பிடிக்கப்பட்டுவரும் சடங்குகளின் ஆளுமையான பிடிப்புக்களால் இணைக்கப் பட்டவர்களாகவிருக்கலாம்.

‘உங்களுக்கு சிவப்பு வைன் வேண்டுமா,வெள்ளை வைன் வேண்டுமா?’ விமானப் பணிப் பெண் தனது நித்திய கல்யாணிச் சிரிப்புடன் எங்கள் அருகில் நிற்கிறாள்.

லண்டனிருந்து விமானம் புறப்பட்டு இருபது நிமிடங்கள் இருக்கலாம். நான் எப்போதோ இந்தியாவின் தென் முனைக்குப் போய்விட்டேன். சென்னை நகரின்; ஒரு தென்றல் தவழ்ந்த பின்னேரம் என் நினைவை வருடியது.

என் அருகிலிருந்துகொண்டு என் நினைவைக் கிளறிய ஓவியை தனக்குப் பழச் சாறு கொடுத்தாற் போதும் என்கிறாள்.அப்படித்தான் அன்று ஒரு நாள் எனது அம்மாவிடமும் கேட்டாள்.

‘என் காப்பி,தேனிர் எடுக்கமாட்டிர்களா?’ அம்மாவின் விசாரணையது.

‘ தேவையில்லாமல் எதையும் எடுப்பது கிடையாது. பழரசம் இல்லாவிட்டால் கொஞ்சம் தண்ணீர் போதும்’ அவளின் மறுமொழியது

‘ஏன் வைன் பிடிக்காதா, அல்லது ஏதும் ஸ்ரோங்காக…’விமானப் பெண் தனது பேச்சைத் தொடர்வதை இவள் இடை மறிக்கிறாள்.

‘பழரசம் இருந்தால் நல்லது, இல்லா விட்டாலும் லண்டனிலிருந்து பாரிசுக்குப் போய்ச் சேரும் ஒரு மணித்தியாலத்திற்கிடையில், எனக்கு நா வரண்டு எனது இரத்தோட்டம் பழுதடைந்து விடாது’ அவள் குறும்பாகச் சொல்கிறாள்.

அவளின் இனிமையான குரலில் இசை தவழ்கிறது. உடலின் அலங்காரத்தில் கலைத் தன்மை மிளிர்கிறது.அவள் கழுத்தில் தாலியில்லை. கையில் மோதிரமில்லை.

நான் எனது பார்வையை விமானத்தின் ஜன்னலுக்கப்பால்ப் பதிக்கிறேன். மேகங்களுடன் விளையாடிக்கொண்டு விமானம் பறந்து கொண்டிருக்கிறது.எங்களுக்குப் பின்னாலிருந்தவர் இருமுகிறார். விமானம் புறப்பட்ட நேரத்திலிருந்து இரண்டொருதரம் இருமி விட்டார்.

விமானத்தின் ஜன்னலுக்கப்பால், மேகம் மறைக்காத நேரங்களில், தென்கிழக்கு இங்கிலாந்தின் தரைப் பகுதியின் அழகிய காட்சிகள் ஓவியனின் கலைப் படைப்புக்களாக் கண்களைக் கவர்கின்றன. தேம்ஸ் நதி ஒரு பெரிய நாகம்போல்,வளைந்து நெழிந்து தலை விரித்தாடும் பெருநாகமாகக் கடலில் விழுகிறது.

நான் எனது பார்வையை ஜன்னலிலிருந்து திருப்பியபோது அவள் ஏதோ ஒரு பத்திரிகையை எடுப்பது தெரிகிறது. லண்டனிலிருந்து வருகிறாள் ஏதோ ஆங்கில மகஸீனாகவிருக்கலாம். எனது கடைக்கணகள் அவளின் பக்கம் கள்ளமாகத் திரும்பியபோது,என் நெஞ்சில் நெருஞ்சி முள் குத்திய வலி வந்தமாதிரியிருந்தது.

எனது தந்தை ஆசிரியராகவிருக்கும் தமிழ்ப் பத்திரிகை அவள் கைகளிற் தவழ்கிறது.

அப்பா இந்தியாவை எந்த நாட்டுக்கும் போகாதவர். இவள் இந்தியைவைப் பிரிந்து பல்லாண்டகளாக அமெரிக்காவில் வாழ்பவள். தமிழிற் பற்றுள்ள ஒரு இந்தியத் தமிழ்ப் பெண். இவள் இந்தியா வந்திருந்தபோது, இவள் ஒரு ஓவியை என்ற பரிமாணத்தில் இவள் சந்தித்த பல பத்திரிகையாளர்களில் எனது தந்தையும் ஒருத்தராகவிருக்கலாம். எனது தந்தையின் சந்திப்பும் அப்படித்தான் கிடைத்திருக்கும். வீட்டுக்கு வந்திருந்தபோது தான் ஒரு ஓவியை என்ற அம்மாவுக்குச் சொன்னாள்.

‘பாரிஸிலில் வாழ்கிறீர்களா?’ நான் சட்டென்று அவளைக் கேட்டது அவளுக்கு ஆச்சரியம் வந்திருக்கவேண்டும்.

‘என்ன கேட்டிர்கள்?’ அவள் தனது புருவத்தை உயர்த்தி என்னைக் கேட்கிறாள்.அவள் பார்வை எனது முகத்தை ஆராய்கிறது.

எனது கண்கள் எனது தகப்பனின் கண்கள் போன்றவை என்று எனது தாத்தா அடிக்கடி சொல்வார். அவளை நான் கண்டது பத்து வருடங்களுக்கு முன். பத்து வருட முதிர்ச்;சி என் முகபாவத்திருக்கலாம். அவள் பார்வை என் கண்களுக்குள் எதையோ தேடி சுரங்கம் தோண்டின.

‘என்ன கேட்டீர்கள்?’ அவள் இன்னொருதரம் கேட்கிறாள்.அவளின் இதழ்கள் அழகானவை.

அவள் முன்பின் தெரியாத ஒரு இளைஞன் அவளிடம் கேட்ட கேள்வியால் தடுமாறுகிறாளா?

‘நீங்கள் பாரிசில் வாழ்பவரா என்று கேட்டேன்’ நான் கேட்ட கேள்வியை இன்னொரு தரம் கேட்கிறேன்.

‘ ஓ..இல்லை இல்லை.. ஒரு சினேகிதரைப் பார்க்கப் போகிறேன்’

அப்பாவைப் போல இன்னொரு சினேகிதரா?

அவள் இன்னொரு தரம் என்னைக் கூர்ந்து பார்த்தாள்.அப்பாவைத் தேடுகிறாளா? அவரின் சாயல் என்னிடமிருக்கலாம் ஆனால் அவரைப் போல எனக்கு மீசை கிடையாது

பத்து வருடங்களுக்கு முன் நான் ஒரு கூச்சம் பிடித்த, மீசை வைத்துக் கொள்ளாத பதினெட்டு இளம் வயது வாலிபன். இப்போது ஓரளவு ‘முதிர்ச்சி’யான வாலிபன்.அப்பாவுக்கு மீசையுண்டு. அவரின் மீசைக்கும் முகத்திற்கும், ஒரு தலைப் பாகை வைத்தால் பாரதியார் மாதிரியிருப்பார்.

நான் லண்டனுக்குப் படிக்க வந்தபின்,இந்தியாவிலிருந்து வளர்த்துக்கொண்டு வந்த எனது மீசையை எடுக்கவேண்டி வந்தது. அதற்குக் காரணம், என்னுடன் படித்த ஒரு ஆங்கிலப் பெண்ணாகும்.

‘ஏன் பெரும்பாலான இந்தியர்கள் மீசை வைத்துக் கொள்கிறார்கள்? அது மிகவும் கட்டாயமான உங்கள் தேசிய அடையாளமா’ என்று அவள் கேட்டது காரணமாகவிருக்கலாம்.

எங்கள் தேசியத் தலைவர்களான நேரு, காந்தித் தாத்தா போன்றவர்கள் மீசை வைத்திருக்கவில்லையே!

எனது ஆங்கிலச் சனேகிதியின் மீசை பற்றிய கேள்விகளும் விளக்கங்களும் அவ்வப்போது தொடர்ந்தன. ஹிட்லரின், சதாம் ஹூசேயினின் மீசைகள் அவளுக்க ஞாபகம் வருகிறதோ தெரியாது.

‘ இங்கிலாந்தின் தேசியத் தலைவராகக் கருதப் படும் வின்ஸ்டன் சேர்ச்சிலுக்கு மீசை கிடையாது. பிரான்சின் பிரபல்ய வீரன் நெப்போலியனுக்கு மீசை கிடையாது உலக மகாவீரன் அலஸ்ஸாண்டருக்கு மீசை கிடையாது. உலகப் பேரழகி கிளியோபாத்pராவின் காதலர்களான மார்க் அன்டனிக்கும்,ஜூலியஸ் சீசருக்கு மீசை கிடையாது. இங்கிலாந்து மகாராணியின் கணவர் கோமகன் பிலிப்புக்கோ,இங்கிலாந்து இளவரசர் சார்ள்சுக்கோ மீசை கிடையாது.இன்றைய ஹொலிவுட் நடிகர்கள் பலருக்கு மிசை கிடையாது, நீ மட்டும் விடாப் பிடியாக மீசை வைத்திருக்கிறாய்’ எனது சினேகிதி இரண்டு கிளாஸ் வைன் எடுத்ததும் ‘மீசை’ செமினார் வைக்கத் தொடங்கி விடுவாள்.

நான் கட்டாயமான காரணங்களுக்காக மீசை வைத்துக் கொள்ளவில்லை. ஆனால் எனது தகப்பன் உட்படப் பலர் மிகவும் ஆசையாகயாக மீசை வைத்திருந்தார்கள்.அதனால் நானம் மீசை வளர்த்துக்கொண்டேன்.

நான் லண்டனுக்கு வந்தபோது ஜோன் மேயர் பிரித்தானிய பிரதமராகவிருந்தார். அவருக்கோ அல்லது அவரது மந்திரி சபையிலிருந்த பல மந்திரிகளுக்கோ மீசை கிடையாது. எங்களுடன் படித்த பெரும்பாலான ஆங்கில இளைஞர்கள் மீசை வைத்திருக்கவில்லை.

எனது ஆங்கிலச் சினேகிதி எனது மீசை பற்றிக் கேட்ட அன்றிரவு எனது மீசையைத் தொடர்ந்து வைத்துக் கொள்வதா என்ற கேள்வி எழுந்தது. அன்றிரவு ஆசை தீர எனது மீசையைத் தடவிக் கொண்டேன். இருபத்தி இரண்டு வயது இளமையை-ஆண்மையைப் பறைசாற்றும் எனது மீசையை அன்புடன் தடவிக் கொடுத்தேன்.

மனோதத்துவ நிபுணரான சிக்மண்ட் ப்ராய்ட் இந்த ‘மீசை’ விடயம் பற்றி என்ன கருத்துக்கள் வைத்திருப்பார் என்று யோசித்தேன். செக்ஸ் பற்றி நிறையக் கருத்துக்களைச் சொன்ன ப்ராய்ட ஏன் மீசை பற்றி,அதிலும் இந்திய மீசை பற்றி ஏதும் சொல்லவில்லை என்று குறும்புத்தனமாக ஒரு வினாடிகள்; சிந்தித்தேன்.

அடுத்த நாள் யுனிவர்சிட்டிக்குப் போனபோது எனது மராட்டிய நண்பன் மேலும் கீழும் (என் முகத்தை); பார்த்தான். அவன் கட்டபொம்மன் மீசை வைத்திருப்பவன்.

எனது மீசையை மறைத்து வைத்துவிட்டேன் அல்லது மறந்து விட்டு வந்து விட்டேன் என்பதுபோல் அவன் பார்வையில் பலகேள்விகள் என்னையுறுத்தின.

‘யு லுக் நைஸ்’ என்றாள் எனது ஆங்கிலச் சனேகிதி.அதைக் கேட்டதும், எனது மராட்டிய நண்பனின் முகத்தில்,நான் மறைத்து வைத்து விட்ட எதையோ கண்டுபிடித்துவிட்ட குறும்புத்தனம்.

அன்று பின்னேரம் ஸ்ருடன்ட்ஸ் பாரில் அவனைச் சந்தித்தபோது,’ ஏன் உனது மீசை எடுத்தாய்? முத்தங்களுக்கு இடைஞ்சல் என்று அலிஸன் (அதுதான் எனது ஆங்கிலச் சினேகிதியின் பெயர்) சொன்னாளா’? என்று கிண்டல் செய்தான். அலிஸனை முத்தமிடுமளவுக்கு எங்களுக்குள் நெருங்கிய உறவு ஒன்றுமில்லை என்று நான் சொன்னதை அவன் நம்பினானோ இல்லையோ தெரியாது.

என் மீசையின் சரித்திரம் அத்துடன் முடிந்து விட்டது.

‘உங்களை எங்கேயோ பார்த்ததுபோலிக்கிறது’ அவள் மெல்லிய புன்முறுவலுடன் சொன்னாள். மீசையுடன் நானிருந்தால் கிட்டத்தட்ட அப்பா மாதிரியிருப்பதை இவள் கண்டு பிடித்திருப்பாள். இவளுக்கும் அப்பாவுக்கும் நெருங்கிய தொடர்பு இருந்திருக்குமா?

‘ஒருத்தரைப்போல் ஏழுபேர் உலகத்தில் பல இடங்களில் இருப்பதாகச் சொல்வார்கள்.’ நான் எதோ சொல்லி மழுப்பினேன்.

‘எனக்குத் தெரிந்த ஒரு நண்பரை நீங்கள் ஞாபகப் படுத்தினீர்கள்’ அவள் குரலில் சாடையான சோகம்.

லண்டனிலிருந்து பாரிசுக்குப் பறந்துகொண்டிருக்கும் விமானத்தில் சந்தித்துக்கொண்ட பிரயாணிகள் இப்படி பேசிக்கொள்வது அசாதாரணமாகப் பட்டாலும் ,பெரும்பாலான மனிதர்கள் அந்நியர்களிடம் தங்கள் உள்ளக் கிடக்கைகளை உண்மையுடன் கொட்டித் தீர்ப்;பதுமுண்டு என்பதும் எனக்குத் தெரியாமலில்லை.

‘அப்படியா?’ நான் தர்ம சங்கடப்பட்டேன்.இவள் ஒரு ஓவியை,தனக்குப் பிடித்த உருவங்களுக்கு நித்திய வாழ்க்கையைக் கொடுப்பவள்.. அப்பாவை ஓவியத்தைக் கான்வசிலோ அல்லது கடதாசியிலோ அவள் வர்ணம் போட்டிருக்கலாம்.

அம்மா ஒரு நாள் சத்தம் போட்டதுபோல்,’அவள் உங்களது வழமையான சினேகிதிகளில் ஒருத்தியாகத் தெரியவில்லை.’

அப்பா அதற்கு என்ன பதில் சொன்னார் என்பது எனக்கு ஞாபகமில்லை.அம்மாவுக்குக் கோபம் வந்தால், தான் முற்பிறவியில் செய்த பாவம்தான் அபபாவுக்கு மனைவியாகக் கொண்டு வந்திருக்கிறது என்று விம்முவாள்.

அதன் பின்னணியிலுள்ள பன்முக அர்த்தங்களைப் புரியாத வயது எனக்கு.எனது சிந்தனை முழுதும்,அன்று அப்பா எனக்கு வாங்கித்தந்த ரவி சங்கரின் சித்தார் இசையுடன் இணைந்திருந்தது. அதற்கு இரண்டு நாட்களுக்கு முன், அமெரிக்காவிலிருந்து வந்திருக்கும் ஒரு ஓவியையைத் தன் பத்திரிகைக்குப் பேட்டி காணப்போவதாகச் சொல்லியிருந்தார்.

அம்மா இட்டலியும் தோசையும் செய்வதிற் கவனமாகவிருந்தாள்.அவர் சொல்லிக் கொண்டிருந்தததை அவள் பெரிதாக எடுக்கவில்லை என்பதன் எதிரொலி அடுத்த சில நாட்களில் வெளிப்பட்டது.

அமெரிக்க ஓவியை எப்போது சென்னைக்கு வந்தாள் எத்தனைதரம் அப்பாவைச் சந்தித்தாள் என்று தெரியாது.

சாடையான மழைத்துளியில் நிலம் நனைந்து சிலிர்க்கும்போது ஒரு மணம் வருமே அது தெரியுமா? அந்த மணத்தை நான் ரசிப்பேன். அப்படியான ஒரு நாளில் மாலைப் பொழுதில் அவள் வந்தாள்.

‘ரகு நான் கடைக்குப் போயிட்டு வரேன்’

அம்மா கதவைச் சாத்துவது கேட்டது. மேல் மாடியில் ஏதோ படித்தபடி தூங்கி விழுந்து கொண்டிருந்த நான் தெருவில் கார் வரும் சத்தம் கேட்டு ஜன்னல்வழியாக எட்டிப் பார்த்தேன்.

‘அவளுக்குத் தேவையாணது உணவு,அவனுக்குத் தேவையானது உடம்பு.இதுதான் பெரும்பாலான கல்யாணங்கள்.’ இப்படி ஒரு காலத்தில எழுதிய அப்பாவின் முகத்தில் அசாதாரணமான ஒரு அழகிய புன்னகை; நடையில் அவரிடம் காணும் வழக்கமான கம்பீரத்துக்கப்பால் ஒரு கவர்ச்சி. கல்யாணச் சிறைக்குள் தவித்தபோது ஒரு இடைவெளி சுதந்திரம் கிடைத்தபின் துடித்தெழந்து ஓடும் ஒரு குழந்தைத்தனமான துள்ளல்.

அவருக்குப் பின்னால் அவள் வந்த கொண்டிருந்தாள்.அப்பாவின் வழக்கமான சினேகிதிகளில் ஒருத்தியாய் அவள் தெரியவில்லை. இருவரின் பார்வைகளும் ஏழு ஜன்ம நெருக்கத்தில் பிணைந்திருந்தது.நீல நிறச்சேலையும்,சிவப்பச் சட்டையும் அணிந்த பெண்.அவளின் காலடிகள் மயிலின் எழில் நடையை ஞாபகப் படுத்தின.

அப்போது அம்மா வீட்டில் இல்லை. இருந்திருந்தால், வந்தவள் அமெரிக்காவைச் சேர்ந்தவள் என்ற தெரிந்ததும், அமெரிக்காவில் அட்டியல் மலிவாகக் கிடைக்குமா என்ற விசாரித்திருக்கலாம்.

‘ரகு’ அப்பா கதவைத்திறக்கும்போது என்னைக் கூப்பிடுவது கேட்டது.

தயங்கியபடி கீழே வந்தேன். வரும்போது, படிகளில் மறைந்து நின்று கொஞ்ச நேரம் அவர்களை அவதானித்தேன்.அப்பா அவளைப் பார்த்த பார்வை என் இதயத்தை ஏதோ செய்தது.

இத்தனை காதலை இருசோடிக்கண்கள் வெளிப்படுத்தும் என்ற அன்றுதான் கண்டு கொண்டேன். எனது அப்பாவும் அன்பான தம்பதிகள் என்று நினைத்திருந்தேன்.அந்த நினைவுக்கப்பால், ஏதோ ஒரு தேடலுக்குப் பதில் கிடைத்த நிறைவு அப்பாவின் முகத்திற் தெரிந்தது.

அப்பா என்னை வழக்கம்போல் வந்திருந்த ‘விசிட்டருக்கு’ அறிமுகம் செய்து வைத்தார். நானும் வழக்கம்போல் சங்கோஜத்துடன்,’ஹலோ’ சொல்லி விட்டு மறைந்து விட்டேன்.

ஆனால் அவள் முகத்தை என்னால் ஒரு நாளும் மறக்க முடியவில்லை.

‘நீங்கள் இந்தியரா?’ அவள் இன்று,லண்டனுக்கும் பாரிசுக்கும் இடையில் பறக்கும் விமானத்தில் என்னருகில் இருந்து கேட்கிறாள்.

‘ உம் உம், இந்தியப் பெற்றோருக்கு இங்கிலாந்திற் பிறந்தேன்….’ அப்பட்டமான பொய் சொல்கிறேன்.

உண்மையைச் சொன்னால் ‘இந்தியாவில் உனது இடமெது, எனது தாய் தகப்பன் பெயர் என்னவென்று கேட்பாளோ என்ற பயம்.

‘பாரிஸில் ஹொலிடேயா?’ அவள் ஏதோ கேட்கவேண்டும் என்பதற்காக என்னைக் கேட்டாள் போலும்.

‘இல்லை..நான் ஒரு சைக்கோலஜிஸ்ட்,பாரிசில் நடக்கும் ஒரு செமினாருக்கப்போகிறேன்’

‘ஓ..எதைப் பற்றி?’ அவள் ஏனோ தானோவென்ற பாவனையில் கேட்கிறாள்.

‘ இடிபஸ் கொம்ப்லக்ஸ் பற்றி ஒரு இன்டரெஸ்டிங்கான செமினார்’ அவள் முகத்தை இறுக்கமாகப் பார்த்துக் கொண்டு சொல்கிறேன்.அவளுக்கு நான் சொல்வது ஒரு துளியும் புரியவில்லை என்பது அவள் தனது புருவத்தையுயர்த்தியதிலிருந்து தெரிகிறது.

‘ப்ராய்டின் ஒரு தியறி பற்றியது. ஓரு தாய்க்கும் மகனுக்கும்,தகப்பனுக்கும் மகளுக்குமுள்ள உறவு பற்றிய ப்ராய்டின் தியறியைப் பற்றிய செமினார்’ நான் விளக்குகிறேன். அவள் மௌனம்.அவளுக்கு நான் சொல்லியது ஒன்றும்; புரியவில்லையாக்கும்

தந்தையைக் கொலை செய்துவிட்டுத் தாயைத் திருமணம் செய்த இடிபஸ் பற்றி இந்த ஓவியையைக்குத் தெரியாதாக்கும்!.அதுவும் நல்லது.

சார்ல்ஸ் டி கால் விமான நிலையத்தில் விமானம் பதிந்தது.

பாரிஸ் வந்து விட்டது. இந்த உலகின் காதலர்களின் நகரம்!

அவள் மனதில் ஏதோ நினைவு தட்டியிருக்கவேண்டும்.

‘உங்களைப் பார்த்ததும் யாரோ ஞாபகம் வந்தது.’அவள் மெல்ல முணுமுணுத்தாள். அவள் எழும்பி நின்று தனது பொருட்களை எடுக்கத் தொடங்கினாள். அவள் பெருமூச்சு சாடையாகக் கேட்டது.

‘உங்களையழைக்க யாரும் விமான நிலையத்துக்கு வராவிட்டால் பாரிஸ நகர் வரைக்கும் நீங்கள் என்னுடன் வரலாம்..என்னையழைக்க எனது நண்பன் வருகிறான்.

அவளுடன் கொஞ்ச நேரம் இங்கிருந்து பேசவேண்டும் என்று சட்டெனறுற வந்த எனது மனவேட்கை எனக்குப் புரியாமலிருக்கிறது,இடிபஸ் என் நினைவிற் தட்டினான்..

‘தாங்க் யு..எனது நண்பர்கள் என்னை வந்து கூட்டிக்கொண்டுபோவார்கள்’

அவள் அவசரமாகச் சொல்கிறாள். என்னுடனிருக்கும் ஒவ்வொரு நிமிடமும் அவள் நினைவுகள் அலைபாய்கிறது என்பதை ஒரு சைக்கோலஜிஸ்டால் கண்டு பிடிக்க முடியாதா?

‘நான் ஒரு டாக்டராகப் படிக்கப் போகிறேன்’

பதினைந்து வயதில் நான் இப்படிச் சொன்னபோது அம்மா பூரித்து விட்டாள். தன்னைப்போல ஒரு பத்திரிகையாளனாகிக் கஷ்டப் படவேண்டாம் என்ற அப்பா எத்தனையோதரம் சொல்லியிருக்கிறார்.

பத்திரிகையாளர்கள் பல தரப்பட்ட மனிதர்களையும் முக்கியமாகப் பெண்களையும் சந்தித்து சங்கடப் படுவது காரணமாகவிருக்கலாம்.இருபது வயதில் நான் லண்டனுக்கு வர அப்பாவின் சகோதரர்கள் உதவி செய்தார்கள்.

லண்டனில் பல அனுபவங்கள். பலதரமான விரிவான விளக்கங்கள் நான் டாக்டராகவில்லை. ஓரு சைக்கோலஜிஸ்ட்டாக வரப்போகிறேன் என்று சொன்னதும், வீட்டிலிருந்து நூற்றுக்கணக்கான புத்திமதிக் கடிதங்கள் வந்து குவிந்தன.

இப்போது எனக்கு வயது இருபத்தியெட்டு. ஆஸ்திரிய நாட்டில் வியன்னா நகரில்,மத்தியதாப் பெண்களைவைத்துக்கொண்டு ப்ராய்ட் செய்த சில மனோ தத்துவப் பரிசோதனைகளை இந்தியக் கண்ணோட்டத்தில் அவதானித்து விளக்கம் தேடுகிறேன்.

அம்மா எனக்குப் பெண்பார்க்கிறாள். இப்போதைக்கு வேண்டாம் என்று தட்டிக் கழிக்கிறேன். அவள் தன்னைப்போல ஒரு பெண்ணைத்தான் எனக்குப் பார்ப்பாள் என்ற தெரியும். தகப்பன்மார் தங்களைப்போல் ஒரு ஆணைத் தங்கள் மகளுக்குக் கல்யாணம் பேசுவதபோல் தாய்மாரும் செய்கிறார்கள்.

சுழன்று வரும் ப்ராய்ட் தியறிகள்!!

நான் அம்மாவுக்காக வாழ முடியாது. அப்பாவாகவும் போலியாக வாழமுடியாது. கல்யாணத்துககுள் ‘காவாலித’தனம் செய்யமுடியாது. ஓரு ஓவியையிடம் மனதைப் பறிகொடுத்துவிட்டு கலங்க முடியாது.

என்னையுணரும் ஒரு பெண் எனக்கு வேண்டும்.

‘சாத்திரத்தின்படி எல்லாப் பொருத்தங்களும் சரிவந்த ஒரு சம்பந்தம்; வந்திருக்கிறது’ அம்மாவின் கடைசிக் கடிதம் அது.

‘அப்பாவுக்கம் உனக்கும்தான் எல்லாப் பொருத்தங்களும் சரியாயிருந்ததே,அப்படியானால் அவர் ஏன்..இந்த நடமாடும் கலையழகின் காலடியில் விழுந்தார்?’ அம்மாவிடம் கேட்கவேண்டும் போலிருந்தது.

அப்பாவின் சினேகிதியின் நிழல் விமான நிலையத்திருந்து மறைகிறது.ஆனால் அப்பாவின் கண்களில் ஆயிர வருடத் தொடர்பைக் கொடுத்த அவள் போல ஒரு பெண்ணை நான் தேடப்போகிறேன்.

– இந்தியா டு டேய் பிரசுரம் (2000)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *