அனிதாவின் தீபாவளி ரிலீஸ்!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: November 11, 2023
பார்வையிட்டோர்: 1,801 
 
 

அனிதா அண்ணாந்து பார்த்துக் கொண்டிருந்தாள். ராஜ் போன திசையை மட்டும்!

அன்று அம்மாசியுடன் திரும்பிச் சென்றவன்தான்! மீண்டும் அனிதாவுடன் தொடர்பு எல்லைக்கு அப்பால் நின்று கொண்டிருந்தான். அலைக் கற்றைகள் 2G/3G/4G/5G என்று மன்றாடிய தருணம்.

‘அனிதா கூப்பிடுறாடா ! ‘ அம்மாசி என்னதான் கெஞ்சினாலும், ராஜ் மனசிறங்கி கண்டுகொள்ளவில்லை.

‘டேய்! பாவம்டா! அவளுக்கு நீதான் கதி. விட்டுடாதே!’ இது அம்மாசி.

ராஜுக்கு அருவருப்பாயிருந்தது. ‘போடா! அவளுக்கு காதலின் மதிப்பு புரியவேண்டும்! அன்றுதான் இந்த ராஜ் அவள் வாசலைப் பார்ப்பான்.’

‘ராஜ்! அனிதா என்னுடன் பேசினாள்! நீ அவசியம் அவளைப் பார்க்க வேண்டும் என்றாள். தீபாவளிக்கு மேல் பார்க்க முடியாதாம்!’

‘வாட் நான்சென்ஸ்! வேண்டாம்! அவள் என்னை எதற்கு பார்க்க வேண்டும்? நான் யார் அவளுக்கு? அந்த நடிகன் கும்பல் பத்தாதா?’

‘இல்லடா! அவளுக்கு தீபாவளி ரிலீஸ் இருக்காம்!’

‘நான் என்ன போஸ்டர் ஒட்டணுமா? நீ வேணும்னா ஜொள்ளு விடு! ஒட்டு.’

‘இது வேற ரிலீஸ் டா’ அம்மாசி விளக்கினான். ராஜுக்குப் புரிந்தது போலத் தோன்றியது.

‘என்னடா புதுக்கதை?’

‘ஆமாண்டா! அவளுக்கு இப்ப பிரசவ டைம்! அவன் திரும்பிப் பார்க்கவே இல்லை! உன்னைத்தான் எதிர்பார்த்துகிட்டு இருக்கா! வாடகை அரவணைப்பு! ‘

ராஜ் மனம் இளகத் தொடங்கியது. சே! பாவம்! இன்னும் என்ன மிஞ்சியிருக்கு அவளிடம்?’

‘பாவம் இந்தப் பெண்கள் ! எல்லாருக்கும் இதே நிலைதானா?’ இந்த மாதிரி ஆண்களை நிர்தாட்சண்யமாக அறுக்க வேண்டும்!

‘அது சரிதான்! இவள் ஏன் ஒப்படைத்தாள்?’- தனி ஆவர்த்தனம்!

‘ஓகே! நான் என்ன செய்யலாம் என் அன்புக்குரியவளுக்கு?’

மீண்டும் பறந்தான் அனிதாவிடம்.

‘என்னை மன்னித்து விடுங்கள்’! அனிதா மீண்டும் கண்களால் கெஞ்சினாள்.

‘அனிதா! நான் வார்த்தைக்குக் கட்டுப்பட்டவன்! நீ என்னிடம் கேட்கவே வேண்டாம்! நீ என்னுடையவள். உன் சகல நலமும் என்னுடையதே!

பிரசவ ஆசுபத்திரி!

‘ஏம்பா ! யாரு இந்தம்மாவோட கணவன்?’

பாரம் பில் பண்ணி கையெழுத்து போடணும். இப்ப சிசேரியன் பண்ணனும். பெல்விக் போன் குறுகலா இருக்கு. குழந்தை தலை பெருசா இருக்கு. ரொம்ப ரிஸ்க் எடுக்கணும். வேற வழி இல்லை.

ராஜ் அனிதாவைப் பார்த்தான். நீ என் கணவன்தானே! என்பதுபோல அவனைப் பார்த்தாள் அவள்.

அடிக்கடி கண்களால் கெஞ்சினாள்.

‘ ராஜ்! உன்னிடம் எனக்கு முக்கியம்– ஒரு கிஸ் மற்றும் ஒரு ஹக் தான் எனக்கு செக்ஸில் விருப்பம் கிடயவே கிடையாது!’

அது சரி! இது எப்படி?- ராஜுக்கு விளங்கவே இல்லை.

ராஜ் ஆசுபத்திரி ‘ரிஸ்க் பாரம்’ ல் கையெழுத்து போட்டான்- கணவன் என்று.

இரண்டு மூன்று நாட்கள் கடந்தன! கை எழுத்து குழந்தை வடிவம் பெற!

‘மிஸ்டர் ராஜ் ! கங்கிராட்ஸ்!’ ஆண் குழந்தை பிறந்திருக்கு!’ லேபர் அறையிலிருந்த்து ஒரு ஸ்மார்ட் நர்ஸ் வெளிப்பட்டாள். தொடர்ந்து அழகான டாக்டர் ஸுஜயா மேனன்!

‘ரொம்ப ரிஸ்க் எடுத்திட்டோம்! இவரை நல்ல முறையில் கவனித்துக் கொள்ள வேண்டும். ரொம்ப அனிமிக்காக இருக்காங்க. மனசுல வேற ஏதோ கவலை போல!

ஸுஜயா அடுக்கிக் கொண்டே போனார்.

‘அவரைப் பார்க்கலாமா?’ ராஜ் துடித்தான் அனிதாவைப் பார்க்க!

‘டிரஸ்ஸிங்க் முடியட்டும்! அப்பறம்தான் பார்க்க முடியும்’ நர்ஸ் புன்னகையில் ராஜின் கவனம் செல்லவில்லை.

கொஞ்சம் கண்ணயர்ந்தான்.

மீண்டும் கண் விழிக்க நேருகையில் அவனைச் சுற்றி யார் யாரோ நின்று கொண்டிருந்தார்கள்.

நிசப்தம் திடீரென்று சப்தமாக மாறி விட்டிருந்தது.

ஆரவாரம்! மலர்க் கொத்துக்கள்! பரிசுப் பொருட்கள்- எல்லாம்.

அலங்கோலமாக இருந்த அனிதா இப்போது அளவளாவிக் கொண்டிருந்தாள்.- பிரஸ் மீட்!

பிறந்த குழந்தைக்கு உடனே ஸ்டார் வேல்யூ!

‘என் கணவர் எனக்கு எப்போதும் எனக்குள்ளேயே இருக்கிறார். எத்தனை வேலை இருந்தாலும், அவர் எனக்கு பிரசவ காலத்தில் உறுதுணையாக வந்து நின்ற வேகம் எங்கள் காதலை உறுதிப் படுத்துகிறது.’

‘ஹீ ஈஸ் மை கிரேட் கிஃப்ட்’ அனிதா உணர்ச்சி வசப்பட்டாள்.

அருகில் நின்று அவள் தலையைக் கோதிக் கொண்டு நின்றான் சூப்பர் ஸ்டார் பரசு!

‘சார்! கணவர் பாரத்தில் நீங்கள்தானே கை எழுத்துப் போட்டீங்க?’ விவரம் தெரியாத ஸ்மார்ட் நர்ஸ் ராஜிடம் கேட்ட வேகம் காற்றில் கரைந்தது.

‘என்ன ராஜ் இதெல்லாம்? அழகான டாக்டர் ஸுஜயா மேனன் ஒன்றும் புரியாமல் வினவினார்.

எல்லாம் புரிந்த அம்மாசி, விக்கிரமனை மீண்டும் உசுப்பி விட்ட வேதாளம் போல, ‘வா ராஜ்! அடுத்த சவாரி காத்திருக்கு! விருகம்பாக்கம் போகணுமாம்!’

அனிதாவை மீண்டும் ஆழமாகப் பார்த்துவிட்டு, ராஜ் அம்மாசியை நோக்கித் திரும்பினான், கையிலிருந்த சாக்லெட்டை நர்ஸிடம் கொடுத்துவிட்டு.

அடுத்த சவாரி புறப்பட்டது!

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *