அந்திமக் கால ஆதரவு

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 24, 2016
பார்வையிட்டோர்: 10,841 
 
 

“”உங்க ரெண்டு பேருக்கும் வயசாகுது. வயசான காலத்திலே ரெண்டு பேரும் தனியா இருந்து ஏன் கஷ்டப்படுறீங்க? ஒருத்தருக்கு ஒரு பாதிப்புன்னா… இன்னொருத்தராலே கவனித்துப் பார்க்க முடியுமா? ஆகையாலே நாங்க சொல்றதைக் கேளுங்க” என அடிக்கடி எங்களது இரண்டு மகன்களும் வற்புறுத்திச் சொல்லுவார்கள்.

அந்திமக் கால ஆதரவு

எனக்கு வயது அறுபத்தெட்டு ஆகிறது. என் மனைவி சீதாவிற்கு அறுபத்தைந்து. இரண்டு மகன்களும் அமெரிக்காவில் சாஃப்ட்வேர் எஞ்சீனியராக வேலை பார்க்கிறார்கள். திருமணமாகி, குழந்தைகளுடன் அங்கேயே செட்டிலாகிவிட்டார்கள்.

அவர்கள் சொல்வதைக் கேட்க விருப்பமில்லாமல், “”தனியாகவே நாங்கள் இருவரும் இருந்துவிடுகிறோம்” என இதுவரை காலத்தைத் தள்ளினோம், ஆனால் இப்போது நோய், வயோதிகம் ஆகியவற்றின் பாதிப்பால் மகன்களின் முடிவிற்கு சம்மதம் தெரிவித்து

விட்டோம்.

அதற்குமுன் எங்களின் குலதெய்வத்தின் கோவிலுக்குப் போய்விட்டு வந்துவிட வேண்டும் என்ற எண்ணம் எங்களின் மனதில் வந்தது. அதன் பிறகு கோவிலுக்குப் போகும் பாக்கியம் கிடைக்குமோ என்னவோ என்ற நினைப்பால் கோவிலுக்குப் போய் வர முடிவு செய்தோம்.

வாலிப வயதில் தெய்வங்களைப் பற்றியோ, குல தெய்வத்தைப் பற்றியோ கெஞ்சம் கூட நினைத்துப் பார்த்ததில்லை. திருமணமாகி மனைவி, குழந்தைகள் என்று வந்து, வாழ்வில் பொறுப்பு, கடமை கூடிய பின் பிரச்னைகளுடன் போராடிய பொழுது, நம்மை அதிலிருந்து காப்பாற்ற, மீட்க தெய்வங்களை நம்ப ஆரம்பித்து, பக்தி மார்க்கத்தில் மணம் செல்ல ஆரம்பிக்கின்றது. பின் ஒவ்வொரு விஷயங்களுக்கும் படிப்பு விஷயமாக இருக்கட்டும், வேலைக்கு முயற்சி செய்யும் போதாகட்டும், திருமணம் செய்யும் போதாகட்டும் எந்தவொரு முக்கியமான விஷயமென்றாலும் குலதெய்வத்தின் கோவிலுக்குச் சென்று பிரார்த்தனை செய்து ஆரம்பிப்பது என்பது வழக்கமாகிவிடுகிறது.

கடைசியாக நாங்கள் குலதெய்வம் கோவிலுக்கு, எங்களது இரண்டாவது மகன் ஹரிபிரசாத் சாஃப்ட்வேர் எஞ்சீனியராக அமெரிக்கா செல்லும் போது வந்து அபிஷேகம் செய்து, பட்டுப் புடவை சாத்தி, அர்ச்சனை செய்தது. எங்களின் முதல் மகன் கௌதம் பிரசாத்தும் சாஃப்ட்வேர் எஞ்சீனியராக அமெரிக்கா சென்றபோதும் இதுபோல் செய்துவிட்டுத்தான் அனுப்பி வைத்தோம்.

எங்களது குலதெய்வம் எதுவென்று சொல்லவில்லையே… திரௌபதை அம்மன்தான் எங்களின் குலதெய்வம். அதன் கோவில், நான் பிறந்து, வளர்ந்து, படித்து ஆளான சொந்த ஊரிலேயேதான் இருக்கிறது. இப்போது நாங்கள் இருப்பது திருச்சியில். திருச்சியிலிருந்து எனது சொந்த ஊருக்குச் செல்ல மூன்று மணி நேரமாகும். இன்று எனது சொந்த ஊருக்குச் செல்ல முடிவுசெய்து நானும் என் மனைவி சீதாவும் கிளம்பினோம்.

விடியற்காலையிலேயே வீட்டைவிட்டுக் கிளம்பி திருச்சி சென்ட்ரல் பஸ் ஸ்டாண்டிற்கு வந்து ஹோட்டலில் காலை டிபனை முடித்து பஸ்ஸிற்கு வந்தோம். அன்று முகூர்த்த நாள் என்பதால் பஸ்ஸில் கூட்டம் அதிகமாக இருந்தது. கஷ்டப்பட்டு ஏறினோம். இரக்கக் குணமுள்ளவர்களின் கருணையால், இருவர் அவர்கள் அமர்ந்திருந்த இருக்கையை எங்களுக்குத் தந்துவிட்டு அவர்கள் நின்றுகொண்டு வந்தனர்.

எனக்கு சர்க்கரை வியாதி இருப்பதால் சிரமம் அதிகம். காலையில் டிபன் சாப்பிட்டுவிட்டு மாத்திரை சாப்பிட்டால், நான்கு மணி நேரங்கழித்து ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு குறைந்து மயக்கம், படபடப்பு வரும். அது மாதிரி சமயத்தில் உடனே சாப்பிட்டாக வேண்டும். அப்படி இல்லாவிட்டால் சிறிதளவு ஜீனியை வாயில் போட்டுத் தண்ணீர் குடிக்க வேண்டும். இதற்காகவே வெளியூர் செல்லும்போது சிறிய டப்பாவில் ஜீனியை எடுத்துச் செல்வது வழக்கம்.

என் மனைவி சீதாவிற்கு ஹை பிளட் பிரஷர். அடிக்கடி

மயக்கம் வரும். ஒரு மணி நேரம், இரண்டு மணி நேரம் சுய

நினைவு இல்லாமல் படுத்திருப்பாள். பிறகு மயக்கம் தெளிந்ததும் எழுந்து வீட்டு வேலைகளைப் பார்ப்பாள். அவளுக்கு ஒத்தாசையாக நானும் வேலை பார்ப்பேன். ஆகையால் அவளும் தவறாமல் மாத்திரைகள் சாப்பிட வேண்டும். இருவரும் ஒருவருக்கொருவர் ஆதரவாக கடைசி கால வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருக்கின்றோம்.

எங்கள் இருவருக்கும் உடல்நலக் குறைவு, இருப்பதாலும் இனி குலதெய்வத்தின் கோவிலுக்கு வரும் வாய்ப்பு கிடைக்கிறதோ? இல்லையோ? என்பதாலும் இப்பவே வந்து தரிசனம் பண்ணி வேண்டிக் கொண்டு சென்றுவிடுவோம் என புறப்பட்டுவிட்டோம். இந்த வயதிற்குமேல் எங்களுக்கு என்ன வேண்டுதல் இருக்கப் போகிறது? தாயே… எங்களை நல்லபடியா வாழவெச்சே. அதேபோல எங்களை நல்லபடியா அழைச்சுக்கோ. நடை உடை இல்லாமே மாதக் கணக்கிலே படுக்கையிலே போட்டு எங்களுக்கு நரக வேதனையைக் கொடுத்து கஷ்டப்படுத்தாதே, நல்லபடியா நாங்க இறப்பதற்கு அருள்புரி தெய்வமேன்னு வேண்டிக்கத்தான் போறோம்.

எங்கள் ஊருக்குள் நுழைந்த பஸ், வடசேரி முக்கத்தில் வந்து நின்றது. அந்த ஸ்டாப்பில் இறங்கினால் மிக அருகில்தான் கோவில் இருக்கிறது. ஆகவே அங்கேயே இறங்கினோம்.

முகத்தில் வியர்வை அதிகம் வழிந்ததால், மூக்குக்

கண்ணாடியைக் சுழற்றிவிட்டு மேல் துண்டால் முகத்தை நன்றாகத் துடைத்துவிட்டு மீண்டும் மூக்குக் கண்ணாடியை அணிந்துக் கொண்டு, “”எதுவும் கூல்ட்ரிங்க்ஸ் குடிக்கிறியா சீதா?” என்று கேட்டேன்.

“”வேண்டாங்க. கோவிலுக்குப் போயிட்டு அப்படியே ஹோட்டல்லே சாப்பிட்டுடுவோம், ” என்றாள்.

கோவிலுக்குச் செல்லும் வழியிலேயே மாலை, அர்ச்சனை சாமான்கள் வாங்கிக் கொண்டு சென்றோம்.

கோவிலுக்குள் சென்றதும் பூசாரி எங்களை அன்புடன் வரவேற்றார். அவருக்கு வயது எழுபத்தைந்து இருக்கும். நீண்ட காலமாக கோவிலில் பணிபுரிவதால் எங்களை நன்றாகத் தெரியும்.

“”வாங்க… நல்லாயிருக்கீங்களா?” – விசாரித்தார்.

“”சௌக்கியமா இருக்கோம்.”

“”கோவிலுக்கு வந்து ரொம்ப காலமாச்சு போலிருக்கே?” – கேட்டார்.

“”வயசாயிடிச்சுல்லே… திருச்சியிலேர்ந்து வந்துட்டு போறதுன்னா ரொம்ப சிரமம்… அதான்.”

பூசாரி அர்ச்சனையை ஆரம்பித்தார்.

மனமுருகி வேண்டிக் கொண்டோம்.

தேங்காய், பழம், பூ, விபூதி, குங்குமப் பிரசாதங்களைத் தட்டில் வைத்து எங்களிடம் தந்தார். அவற்றை வாங்கிக் கண்களில் ஒற்றி, நாங்கள் கொண்டு வந்திருந்த பையில் எடுத்து வைத்துக் கொண்டு, அர்ச்சனைத் தட்டில் நூறு ரூபாயை வைத்துத் தந்தேன். இனி இந்தக் கோவிலுக்கு வரப்போகிறோமோ? இல்லையோ? என்றெண்ணியே நூறு ரூபாயைக் கொடுத்தேன்.

அவர் முகத்தில் மகிழ்ச்சி பொங்க பணத்தை எடுத்துக் கொண்டு, “”úக்ஷமமா இருக்கணும். அடுத்த மாசம் கோவில் திருவிழா வருது. அவசியம் வரணும்” என்றார்.

“”பார்ப்போம்… அம்பாளோட சித்தம் எப்படியோ? அப்போ நாங்கக் கிளம்புறோம்”, எனச் சொல்லிவிட்டு கோவிலின் வெளிப்பிராகாரத்திற்கு வந்து அமர்ந்தோம்.

“”நமக்கு இப்பத்தான் கல்யாணமாகி இந்தக் கோவிலுக்கு வந்தா மாதிரி இருக்கு. ஆனா… முப்பத்தெட்டு வருஷம் ஓடிப்போச்சு!”. மலைப்புடன் சொன்னேன்.

“”நமக்கு தெய்வம் எந்தக் குறையும் வைக்கல. நல்லபடியா வாழ்ந்தோம். ரெண்டு ஆம்பளைப் பிள்ளைங்களும் பொறந்துச்சு. அவுங்களும் நல்லா படிச்சு… நல்ல வேலைக்குப் போய்க் குடும்பம் குட்டின்னு செட்டிலாயிட்டாங்க”.

“”ஆமாங்க. இனி… நம்ம காலந்தான் நல்லபடி முடியணும். சரி கிளம்புவோமா? உங்களுக்குப் பசி தாங்காது… ஹோட்டலுக்குப் போவோம்!” என்றாள் சீதா.

“”ஏன் சீதா… நாம வாழ்ந்த வீடு இங்கே பக்கத்திலேதானே இருக்கு. கடைசியா ஒரு தடவை பார்த்துட்டுப் போயிடுவோமா?” ஆசையுடன் கேட்டேன்.

“”ஆமாங்க. நானும் அதான் நினைத்தேன். சாப்பிட்டுட்டு அப்படியே போய்ப் பார்த்துட்டு வருவோம்.”

“”சீதா… அது நான் பொறந்து, வளர்ந்து, படிச்சு, கல்யாணமாகி வாழ்ந்து, குழந்தைங்க பெத்தவீடு. சொந்த வீடு. எங்க தாத்தா வாங்கின வீடு அது. ஏதோ சூழ்நிலை வீட்டை வித்துட்டு ஊரை விட்டே போயிட்டோம். அதுக்கப்புறம் நாம இருந்தது வாடகை வீடுதானே? சொந்த வீடுங்கிறதே இல்லாமே போயிடிச்சே. அதான் எனக்கு அந்த வீட்டைப் பார்க்கணும் போல ஆசையா இருக்கு. சாப்பிட்டுட்டுப் போய்ப் பார்ப்போம்”.

ஹோட்டலில் சாப்பிட்டு முடித்து வெளியில் வந்தோம். அருகில் தான் வீடு. நடக்கக் கூடிய தூரம்தான். மெதுவாக நடந்தோம். சொந்த ஊர் மண்ணில் காலார நடப்பதில் மனதிற்கு ஒருவித திருப்தியாகவும் சந்தோசமாகவும் இருந்தது.

வீடு இருக்கும் சவுக்கண்டித் தெருவில் நுழைந்தோம். அந்தக் காலத்திலேயே அது ஒரு வழிப்பாதை. ஆகையால் எல்லா ஊர்களிலிருந்தும் வரும் பஸ் அந்தத் தெரு வழியேதான் பஸ் ஸ்டாண்ட் செல்லும். ஆகவே தொடர்ந்து வாகனங்கள் வந்து கொண்டிருந்தன.

முன்பு வீடுகள் நிறைந்திருந்த தெரு இப்போது நிறையவே மாறி இருந்தது. கடைகள் அதிகம் வந்துவிட்டன. கடைகளுக்குகிடையே கொஞ்சம் வீடுகள் இருந்தன.

நாங்கள் வாழ்ந்த வீட்டை நெருங்கினோம்.

பழைய காலத்து மாடிவீடு. மாறாமல் அப்படியே இருந்தது. வீட்டு முகப்பின் இரண்டு திண்ணைகளும் இரண்டு கடைகளாய் மாற்றப்பட்டு இருந்தன. அந்தத் தெருவிலேயே எங்கள் வீடுதான் மாடி வீடு. ஆகையால் எங்கள் அம்மாவை “”மாடி வீட்டம்மா” என்று சொல்லித்தான் அந்தத் தெருவில் உள்ளவர்கள் அழைப்பார்கள். தெருக்காரர்கள் என்றாலும் சொந்தக்காரர்கள் போலதான் பழகினோம். அது போன்ற காலங்கள் இனி வரவே வராது.

வீட்டு வாசலின் முன் வந்து நின்றோம்.

இரண்டு கடைகளுக்கு நடுவே வீட்டிற்குள் செல்லும் பாதை இருந்தது.

“எப்படி அழைப்பது? அழைத்து என்ன சொல்வது?” என்கிற தயக்கம் மனதில்.

அப்போது வீட்டிற்குள்ளிருந்து ஐம்பத்தைந்து வயது மதிக்கத்தக்க பெண்மணி வெளியில் வந்தாள்.

“”அம்மா… இந்த வீட்டிலே நீங்கதான் இருக்கீங்களா?”

கேட்டேன்.

“”ஆமாம். நீங்க யாரு? உங்களுக்கு யார் வேணும்?” கேட்டாள் அந்த அம்மா.

“”இந்த வீடு ஒரு காலத்திலே எங்க சொந்தவீடு. எங்க தாத்தா வாங்கின வீடு. நான் இந்த வீட்டிலேதான் பொறந்து… வளர்ந்து… வாழ்ந்தேன். நாப்பத்தைஞ்சு வருஷம் இந்த வீட்லே வாழ்ந்திருக்கேன்.”

“”ஓ! அப்படியா! இப்போ என்ன வேணும் உங்களுக்கு?” பரிவுடன் கேட்டாள்.

“”இந்த ஊர்லேதான் எங்கள் குலதெய்வம் திரௌபதை அம்மன் கோவில் இருக்கு. அந்தக் கோவிலுக்கு வந்தோம். எத்தனையோ தடவை அந்தக் கோவிலுக்கு வந்திருக்கோம். சாமி கும்பிட்டுட்டுப் போயிருக்கோம். அப்பெல்லாம் இந்த வீட்டைப் பார்க்கணும்னு தோணலே. இனிமே இந்த ஊருக்கு வருவோமோ?

மாட்டமோ? அதான் கோவிலுக்கு வந்த எங்களுக்கு அப்படியே நாங்க வாழ்ந்த இந்த வீட்டையும் பார்க்கணும்னு ஆசை வந்திச்சு. அதான் வந்தோம். உள்ளே வந்து வீட்டைப் பார்க்கலாமா?”

“”தாராளமா வந்து பாருங்க. உள்ளே வாங்க ஐயா. வாங்கம்மா,” கனிவுடன் அழைத்தாள்.

உள்ளே சென்றோம்.

“”சாப்பிட்டீங்களா?” அக்கறையுடன் விசாரித்தாள்.

“”ஹோட்டல்ல சாப்பிட்டுதான் வர்றோம்.”

“”முதல்லே உட்காருங்க. காபி தர்றேன். குடிச்சிட்டு நிதானாமா வீட்டைச் சுத்திப் பாருங்க”, எனச் சொல்லியவள். ஃபேனை ஓடவிட்டாள்.

“”ஜீனி போடாமே கொடுங்கம்மா” என்றேன்.

“”இதோ வந்துடுறேன்”, எனச் சொல்லி சமையலறைக்குத் சென்றாள்.

ஃபேனின் காற்றும் அந்த அம்மாளின் கனிவான பேச்சும் மனதிற்கு ஆறுதலாக இருந்தன, பழைய

சொந்த வீட்டில் திரும்பவும் உட்கார வாய்ப்புக்

கிடைத்ததில் மனதிற்கு ரொம்பவும் சந்தோஷமாக இருந்தது.

சற்று நேரத்தில் காபியுடன் வந்து எங்கள் இருவருக்கும் தந்தாள்.

குடித்தோம்.

வீட்டிற்குள் எந்தவித மாற்றமுமில்லை.

“”இதோ இந்த அறைதான் நான் படிக்கிற காலத்திலே படிக்கிற அறையா இருந்துச்சு. கல்யாணத்துக்குப் பிறகு எங்களோட படுக்கை அறை. அந்த ரூம்தான் பூஜை அறை.”

“”இப்பவும் அதுதான் எங்களுக்கு பூஜையறை,” என்றாள்.

“”வீட்டை சொந்தமா வாங்கிட்டீங்களா?” கேட்டேன்.

“”ஆமாம். நாங்க வாங்கி பத்து வருஷமாகுது. எங்களுக்கு மூணு ஆம்பளைப் பிள்ளைங்க. மூணு பேருமே சென்னையிலேயே செட்டிலாயிட்டாங்க. நானும் என் வீட்டுக்காரர் மட்டுந்தான் இங்கே இருக்கோம். வயசான காலத்திலே தனியா ஏன் இவ்வளவு பெரிய வீட்லே இருக்கீங்க? பேசாமே வீட்டை வித்துட்டு எங்களோட வந்து நிம்மதியா, சந்தோஷமா இருங்கன்னு எங்க பிள்ளைங்க சொல்லிக்கிட்டே இருக்காங்க. இந்த வருஷத்திலேயே வித்துட்டு சென்னைக்கே போயிடலாமுன்னு இருக்கோம்,” பெருமையாய்ச் சொன்னாள் அந்த அம்மா.

“”அதாம்மா நல்லது. வயசான காலத்திலே தனிமை ரொம்ப கொடுமை. மூணு மகனுங்கன்னு சொல்றீங்க. மகன்… மருமக… பேரப்பிள்ளைங்களோட சேர்ந்து கடைசி காலத்தைக் கழிக்கிறதைத் தவிர வேற என்ன சந்தோசம் நம்ம வாழ்க்கையிலே இருக்கப் போகுது?

ஒவ்வொருத்தர் வீட்டுலேயும் ஒரு மாசம் இருந்தா பொழுது ஓடியே போயிடும். அதுதான் மனசுக்கு நிறைவா இருக்கும். கடமையெல்லாம் முடிஞ்சுப் போச்சு. இனிமே தனியா இருந்து எண்ண பண்ணப் போறோம்? வயசான காலத்திலே ஒருத்தர் முகத்தை ஒருத்தர் பார்த்துக்கிட்டு எப்படி இருக்கிறது? அது ரொம்ப கஷ்டம். டி.வி.யையும் எவ்வளவு நேரந்தான் பார்க்க முடியும்? பேசாமே பிள்ளைங்களோட போய் இருங்க. கடைசிகால வாழ்க்கையை மகன்… பேரக்குழந்தைகளோட சேர்ந்து சந்தோஷமா அனுபவிக்கிற பாக்கியம் எல்லாருக்கும் கிடைச்சிடாது. அந்தப் பாக்கியம் உங்களுக்குக் கிடைக்குதன்னா… நீங்க ரொம்பப் புண்ணியம் பண்ணவங்கன்னு அர்த்தம்.”

“”அதான்… பிள்ளைங்களோடவே போய் இருக்கலாமுன்னு இருக்கோம்.”

“”வீட்டைப் பார்க்கலாமா?”

முதலில் பெரிய கூடம். அதையடுத்து வலது பக்கம் சமையலறை. இடது பக்கம் விசாலமான இடம். இங்கு உட்கார்ந்துதான் சாப்பிடுவோம். அதையும் தாண்டிப் போனால் கொல்லைப்புறம்.

கொல்லை மிகவும் பெரியது. அங்கு சென்றோம். கூடவே அந்த அம்மாவும் வந்தாள்.

நான் வைத்த ஐந்து தென்னை மரங்கள் இப்போதும் நன்றாகக் காய்த்துக் கொண்டிருந்தன.

“” இந்தத் தென்னை மரமெல்லாம் நான் வெச்சதுதான்”, பெருமையாய் சொன்னேன். கடைசியில் பலா மரம் ஒன்று. பக்கத்திலேயே ஒட்டு மரம் ஒன்று. இன்னும் செழிப்பாக இருந்தன.

இடைப்பட்ட பகுதியில் அப்போது கனகாம்பரச் செடிகள் நிறைய இருக்கும். இப்போது இல்லை.

கொல்லையின் முன்புறத்தில் குளியல் அறை. குளியல் அறைக்கு வெளியே செவ்வக வடிவில் பெரிய நீர்த்தொட்டி. குழாயில் முனிஸிபாலிடி தண்ணீர் காலையும் மாலையும் வரும். குடிப்பதற்கு அவ்வளவு சுவையாக இருக்கும். தொட்டி நிறைய எப்போதும் தண்ணீர் இருக்கும். குடிக்க… குளிக்க… துணிகள் துவைப்பதற்கு எல்லாவற்றிற்குமே அந்தத் தண்ணீரைத்தான் பயன்படுத்துவோம். இப்போதும் அப்படித்தான் இருக்கிறது.

கொல்லையின் கடைசியில் இரண்டு கழிவறைகள்.

இவற்றையெல்லாம் பார்க்க… பார்க்க… அந்தக் கால நினைவுகள் மனதிற்குள் வந்து நெஞ்சு கனத்தது.

அந்தக் காலங்கள் எவ்வளவு இனிமையானவை! எவ்வளவு சந்தோஷமானவை!

சொந்தவீடு என்கிற நினைப்பே எவ்வளவு பெருமையாகவும் கௌரவமாகவும் இருக்கும்! இன்று அதையெல்லாம் இழந்துவிட்டு நிற்கிறோமே என்கிற ஆதங்கம், வேதனை மனதை அரித்தது.

இழந்த அந்த நாட்களை எண்ணி மனதில் வருத்தமும் ஏக்கமும் வந்தன. அந்த வசந்தகாலங்கள் இனி திரும்ப வரப் போவதில்லையே.

“”உள்ளே வந்து உட்காருங்க”, அழைத்தாள் அந்த அம்மா.

வீட்டிற்குள் வந்து அமர்ந்தோம்.

“”இந்த வீட்டை ஏன் வித்துட்டீங்க?” கேட்டாள்.

“”பையனுங்க திருச்சி எஞ்சினீயரிங் காலேஜிலே படிக்க வேண்டி இருந்தது. ஹாஸ்ட்டல்லே தங்கிப் படிக்கிறது அவ்வளவு சரியா வராதுன்னு நாங்களும் அங்கேயே போயிடலாமுன்னு முடிவெடுத்தோம். நான் இங்கே மெடிக்கல் ஷாப் வெச்சு நடத்திக்கிட்டு இருந்தேன். டாக்டர்களே கிளினிக் உள்ளே மெடிக்கல் ஷாப் வெச்சுட்டதாலே எனக்கு பிஸினஸ் சரியா இல்லே. கடனும் இருந்துச்சு. பிள்ளைங்க படிப்பு செலவுக்கும் பணம் தேவைப்பட்டது. அதான் வீட்டை வித்து கடனை அடைச்சிட்டு திருச்சிக்கே போயிட்டோம். அங்கே போயும் மெடிக்கல் ஷாப்தான் ஆரம்பிச்சேன். அங்கே ஓரளவு நல்லா நடந்துச்சு”.

“”எவ்வளவுக்கு வித்திங்க?”

“”இருபது லட்சத்துக்கு வித்தோம்.”

“”நாங்க முப்பது லட்சத்துக்கு வாங்கினோம்”, என்றாள் அவள்.

“”இந்த ஊர்தான் நல்ல பிஸினஸ் செண்டராச்சே. விலை ஏறத்தானே செய்யும்”

“”உங்களுக்கு எத்தனைப் பிள்ளைங்க?” கேட்டாள் அந்த அம்மா.

“”ரெண்டு பையனுங்க”

“”அவுங்க என்னப் பண்றாங்க?”

“”ரெண்டு பேருமே பி.இ.கம்ப்யூட்டர் எஞ்சினீயரிங் முடிச்சிட்டு அமெரிக்காவுல இருக்காங்க”.

“” இப்போ நீங்க ரெண்டு பேரும் தனியாதான் இருக்கீங்களா?”

“”ஆமாம்.”

“”வயசான காலத்திலே எப்படி நீங்க தனியா இருக்க முடியும்? ஒருத்தருக்கு ஒண்ணுன்னா… இன்னொருத்தராலே பார்க்கிறது சிரமமாச்சே?”

“” கஷ்டந்தான்”

“”பையனுங்க என்ன சொல்றாங்க?”

“”அவுங்க சொன்னதுக்கு நாங்க இதுவரைக்கும் சம்மதிக்கலே. நாங்க தனியா இருந்து பார்த்துக்கிறோம்னு சொல்லிக்கிட்டு இருந்தோம். ஆனா… இப்போ… முடியலேங்கிற நிலைமைக்கு வந்த பிறகு அவுங்க சொன்னதுக்கு சம்மதம் சொல்றதைத் தவிர வேற வழியே இல்லேன்னு ஒத்துக்கிட்டோம். வயசாக வயசாக உடம்பு ஒத்துழைக்க மாட்டேங்குதே. அவுங்க பேச்சைக் கேட்கிறதை தவிர வேற வழியே இல்லேங்கிறதாலே இந்த முடிவுக்கு வந்துட்டோம்”.

“”அதான் ரொம்ப நல்லது. எப்போ அமெரிக்காவுக்குப் போகப் போறீங்க?” கேட்டாள்.

“”அமெரிக்காவுக்கா?”

“”நீங்கதானே சொன்னீங்க. பையனுங்க ரொம்ப நாளா சொல்லிக்கிட்டே இருக்காங்க. நாங்கதான் சம்மதிக்கலே. இப்போதான் சம்மதிச்சோம்னு.”

“”நாங்க போகப் போறது அமெரிக்காவுக்கு இல்லை.”

“”அப்புறம்?”

“”முதியோர் இல்லத்துக்குப் போறோம்”.

“”என்னது! முதியோர் இல்லத்துக்கா!” அதிர்ச்சியுடன் கேட்டாள் அந்தப் பெண்மணி.

“”ஆமாம்மா. முதியோர் இல்லத்துக்குதான் போகப் போறோம். காலா காலத்திலே சாவு வராமே உயிரோட இருக்கிற வயசானவங்களுக்கு அந்திம கால ஆதரவு தரப் போறது இனிமே முதியோர் இல்லந்தாம்மா.”

“”அடப்பாவமே!”

“”சரிம்மா… நாங்கக் கிளம்புறோம்” மனம் கலங்கச் சொல்லிவிட்டு மனைவியின் கையைப் பிடித்துக் கொண்டு வீட்டைவிட்டு வெளியேறி தெருவில் இறங்கினேன்.

– பட்டுக்கோட்டை ராஜேஷ் (மார்ச் 2014)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *