விக்னேஷ் அலுவலக வேலையில் மூழ்கி இருந்தான்.
செல் ஒலித்தது.
என்ன உமா?
எனக்கு காலையிலே இருந்து தலைவலிங்க லேசா ஃபீவரும் இருக்கு. சீக்கிரம் வந்தீங்கன்னா டாக்டர்கிட்டே போகலாம்.
என்ன உமா ஆபிஸ்லே ஆடிட்டிங் நடக்குது. நம்ம டாக்டர்தானே, நீ மட்டும் போய் வா.
ஒரு மணி நேரம் கழித்து மீண்டும் செல் ஒலித்தது. இம்முறை உமா அல்ல, அவன் அம்மா!
என்னடா விக்கி, நல்லா இருக்கியா! உமா எப்படி இருக்கா?
நல்லா இருக்கேம்மா, நீ எப்படிம்மா இருக்கே? அப்பா சரியா மருந்து சாப்பிடுறாரா?
ம்…சாப்பிடுறாரு…அது சரி, விக்கி என்னடா ஆச்சு உனக்கு? கரகரன்னு பேசறே, தொண்டை சரி இல்லையா?
ரெண்டு நாளைக்கு முன்னாடி மழையில நனைஞ்சிட்டேம்மா’ என்று அம்மாவுக்கு பதில் சொன்னவன், ‘திண்டிவனத்திலிருக்கும் என் அம்மாவுக்கு என் குரல் மாற்றம் தெரிகிறது. திருவான்மியூரிலிக்கும் என் மனைவிக்குத் தெரியலையே..! என்று எண்ணினான்!
– சு.மணிவண்ணன் (ஜனவரி 2012)