(இதற்கு முந்தைய ‘பீடி’ கதையைப் படித்தபின் இதைப் படித்தால் புரிதல் எளிது)
மச்சக்காளையும் கதிரேசனும் சில நொடிகளுக்கு ஒருத்தரை ஒருத்தர் விசித்திரமான மெளனத்தோடு நோக்கிக் கொண்டிருந்தார்கள்.
மச்சக்காளை மட்டும் எதோ மாதிரியான சந்தேகத்தோடு மகனைப் பார்த்தார். பின் “உன்னை வாங்கிட்டு வரச்சொல்லாம வேற யாரை வாங்கச் சொல்ற?” என்று கனத்த குரலில் கேட்டார்.
கதிரேசன் அவரையே பார்த்தானே தவிர பதில் எதுவும் சொல்லவில்லை. கோபத்தில் அவனுக்கு மூச்சு வாங்கியது.
“பதில் சொல்லாம சும்மா நின்னா என்னாலே அர்த்தம்? நீதானே வீட்ல பெரியவன். உன்னை வாங்கச் சொல்லாம உன் தம்பியை கடைக்கு அனுப்பவா, இல்லை உன் ரெண்டு தங்கச்சிகளை அனுப்பவா?”
மச்சக்காளை இப்படிக் கேட்டதற்கும் கதிரேசன் பதில் சொல்லாமல் சும்மாதான் நின்றான். மச்சக்காளைக்கு உடனே கோபம் வந்துவிட்டது.
“எலேய், நான் கேக்கிறதுக்கு ஒழுங்கா வாயைத்திறந்து பதில் சொல்லணும். தெரிஞ்சுதா? சும்மா உலக்கை மாதிரி நின்னுட்டு இருந்தா எனக்குத் தோதுப்படாது, தெரிஞ்சிக்க…” மச்சக்காளை மிரட்டுகிற தொனியில் சொன்னார்.
அதனால் கதிரேசன் உடனே அவருக்குப் பதில் சொன்னான். “தம்பி முருகேசனை பீடி வாங்க அனுப்புங்கன்னு நான் சொல்ல மாட்டேன். என்னை அனுப்பாதீங்க. யாரை அனுப்பணுமோ அதை நீங்கதான் முடிவு பண்ணிக்கணும்.”
மச்சக்காளை ஊஞ்சலில் இருந்து கீழே இறங்கிவிட்டார்.
“என்னலே பெரிய கலெக்டர் மவன் போல பேசறே? பன்னிரண்டு வயது பொடிக் கழுதை நீ… கொஞ்சம் விட்டா உன் அம்மாவை அனுப்பி பீடி வாங்கிட்டு வரச்சொல்லுடான்னு சொல்லுவேபோல இருக்கே…” கோபம் கொப்புளித்தது.
:நீ கப்சிப்னு வாயை மூடிட்டு நிக்கற அழகைப் பார்த்தா, பெத்தவ பீடி வாங்கிட்டு வந்து குடுத்தா குறைஞ்சி போயிடுவாளோன்னு கேக்காம கேக்கிற மாதிரி இருக்கு…”
கதிரேசனுக்கு எரிச்சல் வந்தது. ஆனாலும் என்ன சொல்வதென்று தெரியாமல் மெளனமாகவே நின்றான்.
‘என்னுடைய ஆத்திரத்தைக் கிளப்பாதே. பீடி வாங்கறதுக்கு உன்னை அனுப்புவேன், இல்லேன்னா எழவு நான் போவேன்! தெரியுதா? வேற யாரையும் அதுக்கு அனுப்பமாட்டேன். தம்பியை பீடி வாங்கிட்டு வர அனுப்பினா அது எனக்குத் தாண்டா மூதி கேவலம்.”
கதிரேசன் அப்பாவை அர்த்தத்துடன் பார்த்துவிட்டு அவனுடையை மிக முக்கியமான அந்தக் கேள்வியைக் கேட்டான்.
“அப்ப என்னை அனுப்பினா உங்களுக்கு கேவலம் இல்லையா? அவமானம் இல்லையா? ஆனா பீடியை வாங்கிட்டு வர்ற வேலையைச் செய்யறதுக்கு எனக்கு ரொம்ப அவமானமா இருக்கு. அதுக்காகவே அந்த வேலையை என்னைச் செய்யச் சொல்லாம இருக்கீங்களா.. ப்ளீஸ்.”
கதிரேசனின் இந்தப் பதிலில் மச்சக்காளைக்குள் மிக ஆதாரமான இழை ஒன்று சரேலென அறுந்து துண்டிக்கப்பட்டு விட்டது. ஏதோ ஒன்றைத் தவிர அனைத்துத் தளமும் அவருக்கும் கதிரேசனுக்கும் இடையே தகர்ந்து காலியாகிப் போனாற் போலிருந்தது. வேண்டாத விருந்தாளியைப் பார்ப்பதுபோல மச்சக்காளை மகனைப் பார்த்தார்.
விருந்தாளி வேண்டாதவர் என்பதற்காக அவரை வீட்டை விட்டு வெளியில் போகச்சொல்வதும் முடியாத காரியம்! மச்சக்காளை வாழ்க்கையின் புத்தம் புதிய வெளியில் பீடி பிடிக்காமல் நின்று கொண்டிருந்தார்! புதிருடன் மகனையே பார்த்தார். மகன் பிஞ்சில் பழுத்து விட்டானென்று அவருக்குத் தோன்றியது.
மச்சக்காளையைப் பொறுத்தவரை எதுவாக இருந்தாலும் சரி; அது பிஞ்சில் பழுத்து விடக்கூடாது! அப்படிப் பழுத்துவிட்டால் அது அவருக்குச் சரிப்படாது…!
அவிழப் பார்த்த வேட்டியை தூக்கி இறுகக் கட்டிக்கொண்டே உள்ளே மையமாகத் திரும்பி பெண்டாட்டி கோமதியைக் கூப்பிட்டார்.
“எட்டி கோமு, இங்கே கொஞ்சம் வந்திட்டுப் போளா…”
இப்படி ஒரு மோசமான குரலை அவள் புருஷனிடமிருந்து அவளின் அனுபவத்தில் கேட்டதில்லை. அதனால் ‘போட்டது போட்டபடி’ கோமதி அப்படியே ஓடி வந்தாள். கூடத்தில் அப்பாவும் பிள்ளையும் பரிச்சயம் இல்லாத இரண்டு அந்நியர்கள் போல் நின்று கொண்டிருந்தார்கள். கதிரேசனைத் திரும்பிக்கூட பார்க்காமல் மச்சக்காளை பெண்டாட்டியிடம் யோசித்து யோசித்து, நீட்டி நீட்டி ராமாயணம் போல் சொல்லி முடித்த மிகப் பல சங்கதிகளின் கதைச் சுருக்கம் யாதெனில்:
இனிமேல் அவருக்கும் கதிரேசனுக்கும் இடையே எந்த ஒரு ‘எழவும்’ கிடையாது! ஒருநாளும் அவர் அவனிடம் எந்த ஒரு சின்னவேலை ‘எழவும்’ சொல்லப்போவது கிடையாது! எல்லா ‘எழவும்’ மச்சக்காளையே பார்த்துக்கொள்வார். எவனுடைய தயவும் தேவையில்லை அவருக்கு! இனி அவருடைய உடம்பில் உசிர் இருக்கும்வரை கதிரேசன் பயலிடம் அவர் எந்தச் ஜோலியும் வைத்துக் கொள்ளப்போவதில்லை. பேச்சு வார்த்தையும் வைத்துக் கொள்ளப் போவதில்லை.
பிள்ளைகளைப் பெற்றுக் கொள்வது – பெற்றவர்கள் சொல்கிற வேலை எல்லாவற்றையும் மறு பேச்சுப் பேசாமல் செய்வதற்கும்தான்! சொன்ன வேலையை செய்ய முடியாதென்றால், அப்புறம் யாரும் எதுவும் செய்ய முடியாது! அவரவர் எழவை அவரவரே பார்த்துக்கொண்டு போய்ச்சேர வேண்டியதுதான்…!! ஆனால் ஒரு விஷயம்! இப்படியெல்லாம் சொன்னாலும் கதிரேசன் எப்போதும்போல இந்த வீட்டில் இருக்கலாம். பிடித்ததைச் செய்யலாம். பிடிக்காததை விட்டு விடலாம்!
விருப்பப்பட்டதைச் சாப்பிட்டு விருப்பம்போல் இருந்து கொள்ளலாம்! வீட்டில் எப்போதும்போல அவனுக்கு எல்லா உரிமையும் உண்டு. மச்சக்காளையிடம் மட்டும் எந்தத் தொடர்பும் அவனுக்கு இருக்க முடியாதென்றால் இருக்க முடியாதுதான்…! ‘அப்பா’ சொன்னால் சொன்னதுதான். இனிமேல் மச்சக்காளை யாரோ; கதிரேசன் யாரோ..!
மச்சக்காளையின் இந்த நீண்ட ராமாயணத்தின் ஒவ்வொரு வரியும் கதிரேசனுக்கு ஒவ்வொருவித விடுதலை உணர்வை வரிசையாக தந்துகொண்டே இருந்தது. ஒவ்வொரு சங்கிலியாய் உடைத்துக்கொண்டே வந்தது. அந்த வீட்டில் அவனுக்கு உரிமை இருக்கிறதோ இல்லையோ, அதைப்பற்றி அவனுக்குக் கவலையும் இல்லை. பயமும் இல்லை.
கழிப்பறையிலும் பீடி பிடிக்கும் மனிதனின் உறவு இனி கிடையாது; அந்த மனிதனுடன் பேச்சும் கிடையாது என்பதே போதுமானதாக இருந்தது அவனுக்கு. பீடி வாங்கிக் கொடுக்கிற வேலையில் இருந்து மட்டும் சுதந்திரம் என்பது இல்லை; கதிரேசனுக்கு ஓசி பேப்பர் வாங்குகிற வேலையில் இருந்தும் விடுதலை கிடைத்துவிட்டது.
அவன் பாட்டிற்கு வீட்டிற்குள் ஓசை அற்ற தாவரமாக வாழ்ந்தும் வளர்ந்தும் கொண்டிருந்தான்.
கதிரேசனின் இந்த அமைதியான வாழ்க்கையையும், வளர்ச்சியையும் பார்த்து மச்சக்காளைதான் சிறிது திகைப்புக்கும் பயத்துக்கும் உள்ளாகிப் போயிருந்தார். அவர் சொன்ன ராமாயண கதையின் ஒவ்வொரு வரியும் அந்த நிமிஷத்தில் உண்மைதான். அதே நேரத்தில் கொஞ்சம் கொஞ்சம் அது பொய்யும்தான்! ராமாயணத்தின் சில வரிகள் கதிரேசனுக்கு அதிர்ச்சி வைத்தியம் என்ற கணக்கில் சொல்லப்பட்டவை!! ஆனால் அது கதிரேசனுக்கு நிஜமான வைத்தியமாகிவிட்டது!
மச்சக்காளைக்கு அதுவே அதிர்ச்சி வைத்தியமாகிவிட்டது. அந்த அதிர்ச்சியில் இருந்துதான் அவரால் மீளவே முடியவில்லை! கொஞ்ச நாள் போனால் அவனாகவே போய் அவருக்கு பீடி வாங்கி வந்துவிடுவான் என்று மச்சக்காளை கணக்குப்போட்டு வைத்திருந்தார்.
கணக்குச் சரியாக இருக்க இதென்ன வட்டிக் கணக்கா? அவரின் கணக்கு தப்பாகிவிட்டது! கதிரேசனின் மனம் மாறுவதாகத் தெரியவில்லை. மச்சக்காளையே நடந்ததையெல்லாம் மறந்துவிட்டவர் மாதிரி ‘போலே, போய் பீடியை வாங்கிக் குடுத்திட்டுப் போலே’ என்று சொல்லிவிடலாமா என்ற விளிம்பு நிலைக்கு கிட்டத்தட்ட வந்துவிட்டார்!
ஆனால் சட்டென்று அவ்வளவு சுலபமாக சுயகெளரவத்தை விட்டுக் கொடுத்துவிட முடியவில்லையே… அவர் ஒன்றும் கதிரேசனின் தம்பி கிடையாதே! அவனுடைய தகப்பன் ஆயிற்றே! ஆனாலும் தகப்பனின் பாய்ச்சல் எதுவும் மகனிடம் பலிக்கவில்லை. அது மச்சக்காளையின் பயத்தை வட்டிபோல குட்டிபோட வைத்துக் கொண்டிருந்தது! இந்த வயதிலேயே எந்த மாதிரியான வளர்ச்சியைக் காட்டுவானோ என்ற பயமும் திகைப்பும் மச்சக்காளைக்குள் மெளனமாக வளர்ந்து கொண்டிருந்தது.
இது தற்போதைய மச்சக்காளையின் கதை. அவருடைய பெண்டாட்டி கோமதியின் கதையில் பயமும் திகைப்பும் இன்னும் பல மடங்கு ஜாஸ்தி!!