அக்கறைகள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 23, 2013
பார்வையிட்டோர்: 9,319 
 
 

சென்னையில் ஒண்டுக் குடித்தன வீடுகளைப் பார்த்திருக்கிறீர்களா? முப்பது நாப்பது வருடங்களுக்கு முன்பு இருந்தது , அவை இப்போது வழக்கொழிந்து போனவையாயிற்றே என்று நீங்கள் நினைத்தால் , ஒன்று நீங்கள் சென்னைக்கு வந்தறியாதவர்களாக இருக்க வேண்டும் , இல்லை கஷ்டப்படும் ஜீவன்களின் இயக்கங்கள் தெரியாத , ஏழை மனிதர்களையே பார்த்திராத பெரும் செல்வந்தர்களாயிருக்க வேண்டும்.

நான் சொல்ல வந்தது வளவு வீடுகள் , ஸ்டோர் வீடு , என்று பல பெயர்களால் பல மாவட்டங்களில் குறிக்கப் படும் ஒண்டுக் குடித்தன வீடுகள் பற்றி. மயிலாப்பூரிலும் , திருவல்லிக்கேணிப் பகுதிகளிலும் இத்தகைய வீடுகளைக் அதிகம் காணாலாம். நம் கதையின் மையம் மயிலாப்பூரில் இருக்கும் ஒரு அத்தைகைய வீடு.

வழக்கம் போல மூணாவது வீட்டிலிருந்து சத்தம் காதைப் பிளந்தது. இது எல்லோருக்கும் பழகிய சமாசாரம் தான். அங்கு குடியிருக்கும் மன்னாரும் , அவன் மனைவியும் தான் அப்படிச் சண்டை போடுவது. அலை ஓய்ந்தாலும் ஓயும் அவர்கள் சண்டை ஒரு நாள் கூட ஓய்ந்ததில்லை. மன்னாரு ஒரு மளிகைக் கடையில் வேலை செய்கிறான். கடை முடிந்து கொஞ்சம் மப்பு ஏற்றிக் கொண்டு அவன் வர வேண்டியது தான். அதற்காகவே காத்திருந்தது போல் அவன் மனைவி ஆரம்பித்து விடுவாள்.

“நாசமாப் போறவனே இன்னிக்கும் குடிச்சிட்டு வந்துட்டியா?”

“ஒம் மூஞ்சைப் பாக்கப் பிடிக்காமத்தாண்டி தினோமும் குடிக்கறேன் .. கெட்ட வார்த்தை! திங்க என்ன வெச்சுருக்கே? ”

இப்படி ஆரம்பிக்கும் அவர்கள் வார்த்தையாடல்கள் , நீண்டு கொண்டே போய் இருவரின் வம்சாவழியையும் சந்திக்கு இழுத்து , ஒருவர் மேல் ஒருவர் பாத்திரங்களை விட்டெறிந்து , யாராவது ஒருவருக்கு ரத்தக் காயம் ஏற்படும் வரை நிற்காது. இத்தனைக் களேபரத்திற்கும் பக்கத்து வீட்டில் இருப்பவர்கள் எட்டிக் கூடப் பார்க்க மாட்டார்கள். அவர்களுக்குத் தெரியும். தாங்கள் இதில் புகுந்தால் அடி தங்களுக்கும் விழ வாய்ப்பிருக்கிறது என்று. மேலும் காலையில் எல்லாம் சரியாகப் போய்விடும். மறுபடி மறு நாள் ஆரம்பிக்கும். இதெல்லாம் ஒரு விஷயமா? புருஷன் பொண்டாட்டி என்றால் அப்படித்தான்.

முதலில் வீட்டின் அமைப்பை உங்களுக்குச் சொல்லியாக வேண்டும். ஒரு நீண்ட வராண்டா அல்லது தாழ்வாரம். அதன் ஒரு புறத்தில் வரிசையாய் நான்கு வீடுகள். மறுபுறம் உயர்ந்த சுவர் இருக்கும். அது அனேகமாக மூன்று நாலு பேர் குடியிருக்கும் ஒரு பெரிய பங்களாவின் சுற்றுச் சுவராக இருக்கலாம். வீடுகள் என்றா சொன்னேன்? தப்புத் தப்பு? அறைகள். அவ்வளவுதான். சமைப்பது , டிவி பார்ப்பது, காய் நறுக்குவது, சண்டை போடுவது , என எல்லாமே அந்த பத்துக்குப் பத்து அறைக்குள் தான். தாழ்வாரத்தின் கடைசியில் குளியலறையும் , கழிப்பறையும் இருக்கும். அது அனைவருக்கும் பொது. தவிர ஒரு அடி பம்பு. வீட்டுத் தண்ணீர்த் தேவைகளுக்கு அந்த பம்பு தான் எல்லாருக்கும்.

சமயத்தில் அந்த பம்பில் வரும் தண்ணீரில் கழிவு நீரும் கலந்து விடும். அப்போதெல்லாம் பக்கத்துத் தெருவில் உள்ள பம்பில் போய்த் தண்ணீர் பிடித்து வர வேண்டும். அந்த ஏரியா மக்கள் புகார் செய்து , ஆறு மாதத்திலோ ஒரு வருடத்திற்குள்ளோ சரியாகும். அது வரை நடை தான் ! தண்ணீர் சுமத்தல் தான். இவற்றையெல்லாம் காலவழுவமைதியில் சகித்துக் கொள்ள பழகி விட்டார்கள் கீழ்த் தட்டு இந்திய மக்கள்.

இத்தனை வசதிகள் இருக்கும் காரணத்தால் இங்கு வாடகையும் கொஞ்சம் அதிகம். குடியிருப்பவர்கள் அனேகமாக கீழ்த்தட்டு மக்கள் தான். அதோ அந்த முதல் வீட்டில் குடியிருப்பது ஒரு பாய். சாயங்காலம் ஆனால் சாம்பிராணிப் புகை போடக் கிளம்பி விடுவார் அது தான் அவர் தொழில். திரும்பி வருவதற்கு இரவு பத்தும் ஆகலாம் , அதற்கு மேலும் ஆகலாம். அவர் வீட்டில் நிற்காமல் அடுப்பெரிய அவர் என்னென்ன சாகசங்கள் செய்கிறார் என்பது அவருக்கு மட்டுமே தெரிந்த ரகசியம்.அவருக்கும் அவர் மனைவிக்கும் கருணை காரணம் அல்லா குழந்தைகளைக் கொடுக்கவில்லை. வீடு திரும்பியதும் அந்தத் தாழ்வாரத்தில் ஓய்வாக உட்கார்ந்து கொள்வார். பக்கத்து வீட்டாரின் சண்டையோ , இருளோ , பாயம்மாவின் குரலோ எதுவும் அவரை அசைக்காது. எப்போது வீட்டுக்குள் சென்று படுக்கிறார் என்று யாருக்கும் தெரியாது.

இரண்டாவது வீட்டில் ஒரு ஆயா , தன் 5 வயதுப் பேரனோடு இருக்கிறாள். சாப்பிடும் இலை தைப்பது அவள் வேலை. கொஞ்சம் பூவும் கட்டுவாள். கடை வாசல்களை பெருக்கித் தெளித்துக் கோலம் போடுவாள். இப்படி கிடைத்த எல்லா வேலைகளையும் செய்து தான் பேரனைப் படிக்க வைக்கப் போகிறாள்.

மூன்றாவது வீடு உங்களுக்கு ஏற்கனவே அறிமுகமான வீடு. நாலாவது வீட்டில் இருப்பது ஒரு அம்மாவும் மகனும். மகன் எல்லாருக்கும் எடுபிடி வேலைகள் செய்வான். தாய் போன வருடம் வரை வீட்டு வேலைகள் செய்து கொண்டிருந்தாள். இப்போதெல்லாம் அவளால் எதுவும் முடிவதில்லை. அவளுக்கு வயிற்றில் கான்சர் என்று டாக்டர்கள் சொல்லி விட்டார்கள். அப்படியென்றால் என்ன என்பதே தெரியாததால் மேற்கொண்டு சிகிச்சை பற்றி யாரும் கவலைப் படவில்லை. ஒரே பாட்டில் பணக்காரனாகவோ , இல்லை வேறு வழிகளில் திடீர்ப் பணம் செய்யவோ இதென்ன தமிழ் சினிமாவா? நிஜ வாழ்க்கை அல்லவா? ஆனால் மகன் வேலை இல்லாத நேரங்களில் தன் தாயின் அருகிலேயே தான் இருப்பான். கூடிய சீக்கிரம் விடை பெறப் போகும் தாயுடன் எவ்வளவு நேரம் முடியுமோ அவ்வளவு நேரம் செலவழிப்பது என்பது அவன் நோக்கமாக இருக்கலாம்.

அன்றும் வழக்கம் போல மூன்றாவது வீட்டில் சத்தம்.

“கஷ்டப்பட்டு வேலை செஞ்சிகினு வர்றேனே! எனக்கு வயிறு நெறயா சோறு போட்டா என்னடி ……..?”

“நீ வாங்கிகினு வர்ற சம்பளத்துக்கு உன்க்கு நெதம் கறி சோறு போடுறேன். குடிகார நாயி நீ ?

“ஏம்மே! கட்டின புருஷனை நாயி பேயின்றல்ல. ஒனக்கு தெனாவட்டுடி இரு உன்னை என்ன பண்றேன் பாருடி …….”

“கிளிச்சே! …………. என்னயா பண்ணிப்பிடுவே? கிட்ட வந்தே கையை ஒட்ச்சி அடுப்புல வெச்சிடுவேன்”

‘”ஆ! என்னையாடி சொன்னே பரதேசி ப்பன்னாடை ……., …………….. ”

வாய்ச்சண்டை முடிந்து கைச் சண்டை ஆரம்பித்து. சோற்றுப்பானையை தூக்கி அடிக்க வர அவள் குழம்புச் சட்டியைத் தூக்கினாள். நல்லவேளை இருவரும் அந்தப் பாத்திரங்களை விட்டு விட்டு வேறு காலிப் பாத்திரங்களைப் பிடித்துக் கொண்டனர். இடி இடித்து மழை பெய்வது போல் வாய்ச் சண்டையும் , கைச் சண்டையும் மாறி மாறி க் கேட்டது.

என்றைக்கும் இல்லாத திருநாளாக பாய் இவர்கள் சண்டையத் தடுத்தார். “சே என்ன மனுஷங்கப்பா? பக்கத்து வீட்டுல ஒரு குழந்தை காணாமப் போயிருக்கு அதை தேட உதவி பண்றதை விட்டுட்டு இப்படி அடிச்சுக்கறீங்களே?” என்றார்.

விஷயம் வெளியில் வந்தது. ஆயாவின் பேரனைக் காணவில்லை. சாயங்காலம் ஆறு மணிக்கு மிட்டாய் வாங்கக் காசு வாங்கிக் கொண்டு போனவனை இன்னும் காணோம். இப்போது அரை மணி முந்தி தான் ஆயா சீரியல் பார்த்து விட்டு பேரனுக்குச் சாப்பாடு போடத் தேடியபோது அவனைக் காணவில்லை. அக்கம் பக்கத்துக் கடைகளில் விசாரித்தாயிற்று. எங்கும் இல்லை.

ஆயா ஒப்பாரி வைக்க ஆரம்பித்து விட்டாள். எப்படியெல்லாம் அந்த தாய் தகப்பனில்லாத பிள்ளையை வளர்த்தாள் , என்று கூறி விவரமாக அழுது கொண்டிருந்தாள். அவளைச் சுற்றிச் சிறு கூட்டம்.

மன்னாரின் மனைவி சொன்னாள். “தே நம்ம சண்ட தெனிக்கும் தான் இருக்கு, ஆம்புளையா லெச்சணமா அந்தப் பையனப் போய்த் தேடுய்யா , பாவம்! பையன் எங்க இருக்கானோ எப்படித் தவிக்கறானோ” என்று சொல்லி விட்டு மூக்கைச்சிந்தினாள். மன்னாருக்கு வீரம் வந்து விட்டது. “எம்மே வரும்போது பையனோட வரேன் பாரும்மே! என்னை என்ன நெனச்சே? உன் புருசன் மத்தவங்களுக்கு எல்பு பண்றவன்மே” என்று முண்டாசு கட்டிக் கொண்டு புறப்படான். அவனுக்கு கையை சொடக்குப் போட்டு திருஷ்டி கழித்து அனுப்பி வைத்தாள் அவன் மனைவி.

வயதான பாயும் கூட தன்னுடைய இடத்தை விட்டு விட்டு நகர்ந்து அந்தப் பையனைத் தேடப் புகுந்தார். பாயம்மா வெளியில் வந்து வேடிக்கைப் பார்த்தாள். ஆயா திரும்பத் திரும்ப சொன்னதையே சொல்லிக் கொண்டிருந்தது. ஆறு மணிக்குச் சாக்லேட் வாங்கக் காசு குடுத்து அனுப்பினேன் பையனை இன்னும் காணோம் என்று. போலீசில் சொல்லலாமா? என்று எழுந்த யோசனை உடனே நிராகரிக்கப் பட்டது.

அதற்கு நிறையக் காரணங்கள் உண்டு. முக்கியமான காரணம் போலீசுக்குக் கொட்டிக் கொடுக்கக் கையில் காசில்லை என்பதே. யாரேனும் கடத்திப் போயிருப்பார்கள் என்று ஒரு குரல் கேட்டது. ஆயா உடனே ஆரம்பித்து விட்டாள். ” ஐயோ என்பேரனக் கடத்திக் கொண்டு கண்ணை நோண்டி . கையைக் கால ஒடச்சு பிச்சை எடுக்க விட்டுருவானோ! நான் என்ன செய்வேன்..” .

வயிற்று வலி அம்மாவின் மகனும் வந்து விட்டான். “பாவம் குழந்தை! இந்தப் பொல்லாத உலகத்தில் எங்கே எப்படியெல்லாம் கஷ்டப் படுகிறதோ! நீ போய்த் தேடு! என்று அந்த அம்மாள் தன் மகனை அனுப்பினாராம்.

யார் வந்து என்ன? என் பேரன் வரல்லையே என்று அழுதாள் ஆயா.

திடீரென்று பாயம்மாவின் குரல் . “அதோ வீட்டுக்குள்ளேருந்து வரானே ஆயா உங்க பேரன்” என்று கேட்டது. தூக்கி வாரிப் போட்டது போல் நிமிர்ந்தனர் அனைவரும். ஆம்! உண்மையாகவே பையன் ஆயாவின் வீட்டுக்குள்ளிருந்து தான் வந்து கொண்டிருந்தான்.

அனைவரும் பாய்ந்து சென்று அவனைப் பிடிக்கவே என்னவோ ஏதோவென்று பயந்து போனவன் ஆயாவின் பின்னால் ஒளிந்து கொண்டான். நல்ல வார்த்தை பேசி அவனிடம் கேட்டபோது சாக்லேட் வாங்கிச் சாப்பிட்டு விட்டு வந்ததாகவும் , அவனுக்குத் தூக்கமாக வந்ததால் தூங்கிவிட்டதாகவும் , இப்போது தான் எழுந்து வந்ததாகவும் தெரிவித்தான். தூக்கத்தில் உருண்டு துணி மூட்டைகளுக்கு அடியில் போய் விட்டதால் ஆயாவுக்குக் கண் தெரியவில்லை என்ற முடிவுக்கு வந்தார்கள்.

ஆயா பேரனோடு வீட்டுக்குப் போய்க் கதவைச் சாத்திக் கொண்டாள். பாய் மீண்டும் தன் இடத்தில் உட்கார்ந்து கொண்டார். மகன் , அம்மாவின் கட்டிலருகில் சென்று விட்டான்.

மன்னாரு எங்கு தேடியும் குழந்தையைக் காணோம் என்ற செய்தியோடு வந்தான். அவன் மீண்டும் குடித்திருப்பதை அவன் மனைவி கண்டு பிடித்து விட்டாள்.

” அடேய்! தே…………….! திரும்பியும் குடிச்சியா? நீ நாசமாப் போக? உன்னை மாரியாத்தா கேக்க மாட்டாளா?”

“அடியேய்! என் காசுல குடிச்சேண்டி! நாயே! ”

மீண்டும் பாத்திரங்கள் உருள ஆரம்பித்தன. அதை வழக்கம் போல யாரும் லட்சியம் செய்யவில்லை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *