சபரிமலைக்குப் போவதற்கு மாலை போட்டிருந்தான் பீட்டர். அது எனக்கு
வினோதமாக இருந்தது.
விபூதியிட்டு கழுத்திலே கருப்புத் துண்டு சுற்றிக் கொண்டு செருப்பு போடாமல் இருந்தான். பீட்டர் எங்கள் வங்கியின் அட்டண்டர். குழந்தைக்கு ஜுரம் வந்தால் தர்காவுக்குப் போய் தண்ணீர் தெளித்துக் கொண்டு வருகிற பழக்கமும் அவனுக்கு இருந்தது. அவனுடைய சர்வமத நல்லிணக்கத்தைக் கண்டு பூரிக்க முடியாதபடி அவனுடைய செருப்பு போடாத கால் என் கவனம் பற்றிக் கொண்டது.
எனக்கு மாணிக்கம் ஞாபகத்துக்கு வந்துவிட்டான். வாழ்நாள் முழுதும் ஒரு கேள்விக்குறியாக மனதில் தங்கிவிட்டவன். திருமணத்தன்று காசியாத்திரை செல்லும் சடங்கின்போதும்கூட மாணிக்கம் நினைவுக்கு வந்துவிட்டுப் போனதுகூட கல்யாணமாகி இருபத்தெட்டு ஆண்டுகள் ஆனபின்பும் மறக்கவில்லை. சரண்யாவின் தம்பி என் கால்களைக் கழுவி மஞ்சள், குங்குமமிட்டு புதுச் செருப்பை மாட்டிவிட்டு கையில் குடையைக் கொடுத்தான். செருப்பை மாட்டிய தருணத்தில் மூளையில் ஏதோ ஒரு பகுதியில் மின்னல் போல மின்னிவிட்டுப் போனான். இப்போது பீட்டரைப் பார்த்தபோது மின்னியது போல.
மாணிக்கத்துக்குப் பள்ளிக்குப் பக்கத்திலேயே வீடு. ஆனால் அவன் என்னுடன்
பள்ளிக்குச் செல்லவேண்டும் என்பதற்காக இரண்டு கிலோமீட்டர் தள்ளியிருந்த என் வீட்டுக்கு வருவான். என்னை வந்து அழைத்துக் கொண்டு அவன் வீட்டுக்குப் பக்கத்தில் இருந்த பள்ளிக்கூடத்துக்குச் செல்வான். மாலையிலும் என்னை வீட்டில் வந்து விட்டுவிட்டுப் போவான். அவ்வளவு பிரியமா என்ற கேள்வி இன்னேரம் உங்கள் மனதில் தோன்றியிருக்கும். என் மீது அவனுக்குப் பிரியம் இருந்தது உண்மைதான். அவனுடைய இந்தச் சுற்றுப் பயணத்துக்கு வேறொரு முக்கியமான காரணம் இருந்தது, என் செருப்பு.
முதல் முறை வீட்டுக்கு வந்து அழைத்துச் செல்ல ஆரம்பித்தபோதே செருப்பு போட்டு நடப்பவர்கள் பாதங்கள் மெத்தென்று இருக்கும் என்று பேசிக் கொண்டு வந்தான். தனக்கும் செருப்பு போட்டுக் கொண்டு நடந்து செல்வதில் மிகுந்த ஆர்வம் இருப்பதாகச் சொன்னான். அவனுடைய அபிப்ராயத்தை அவன் சொல்லிக் கொண்டுவருகிறான் என்பதாகத்தான் என் பிஞ்சு மனம் அப்போது நினைத்திருக்கக் கூடும். அன்றைய தினம் என் காலில் இருந்த செருப்பையும் அவனுடைய வெறும்காலையும் திரும்பத் திரும்ப ஒப்பிட்டுவிட்டு வேறொன்றும் சொல்லாமல் போய்விட்டான்.
அது அவனுடைய ஆசையோ அபிப்ராயமோ இல்லை; விண்ணப்பம். இரண்டாவது நாளில்
மாணிக்கம் நன்றாகப் புரிகிறமாதிரியே சொன்னான்: “உன் செருப்பைத் தாடா. எனக்கு செருப்பு போட்டு நடக்கணும்னு ரொம்ப ஆசைடா”
அதுவரை என்னிடம் யாரும் செருப்பை கடனாகக் கேட்டதில்லை. ஒரு நான்காம் வகுப்பு மாணவனிடம் வேறு எந்தக் கடனைத்தான் கேட்டிருக்கப் போகிறார்கள்?
ஞாபகத்தில் அது ஒருவேளை முதல் கடனாகவும் இருக்கலாம். யாராவது கடன் கேட்டால் இப்போதும் தவிர்க்க முடியாமல் தவிப்பதுபோலவே அப்போதும் தவித்துப் போனேன். மாணிக்கத்தின் கண்களில் நான் ஒரு பரிதாபத்தை உணர்ந்திருக்க வேண்டும். நட்ட நடு மார்க்கெட் சாலையில் செருப்பைக் கழற்றிவிட்டு தரையில் நின்றேன். அது சொத சொதவென ஈரமான தரையாக இருந்தது.
ஆரம்பத்தில் காலை வைக்கக் கூச்சமாக இருந்தது. மாணிக்கம் கொஞ்ச தூரம் செருப்பு போட்டு நடந்துவிட்டு செருப்பைத் தந்துவிடுவான் என்று எதிர்பார்த்தேன்.
பள்ளிக்கு அருகே வந்த பிறகு தந்துவிடுவான் என்று மனதைத் தேற்றிக் கொண்டேன். அவன் தரவில்லை. உள்ளே நுழைந்ததும் பிரேயருக்கு கிரவுண்டுக்குப் போக வேண்டும். அப்போதும் தரவில்லை. மீண்டும் வகுப்பில் வந்து அமர்ந்தபோதும் தரவில்லை.
எப்போது தரப்போகிறான் என்ற யோசனை படிப்பில் சிந்தனையைச் செலுத்தவிடாமல் இம்சிக்க ஆரம்பித்துவிட்டது.
இடையில் ரீஸஸ் பெல் அடித்தபோதும் மத்தியானம் சாப்பாட்டு மணி அடித்தபோதும் அவன் செருப்பு சரசரக்க என் முன்னால் நடந்து கொண்டே இருந்தான்.
என்றுமில்லாத அளவுக்கு நடப்பது மாதிரி இருந்தது. எனக்கு செருப்பைத் திருப்பிக் கேட்பதில் அப்படி என்ன தயக்கமோ.. அவனையே பார்த்துக் கொண்டிருந்தேனே ஒழிய திருப்பிக் கேட்கவில்லை. எப்போதாவது நான் அவனையே கவனிக்கிற எண்ணம் மோலோங்கிவிட்டால் ஒருதரம் திரும்பிப் பார்த்து ஒரு புன்னகையைச் சிந்துவான். செருப்பு உன்னுடையதுதான்.. எனக்கு ஞாபகம் இருக்கிறது என்ற அர்த்தம் அதில் புதைந்திருக்கும்.
மாலை வீட்டுக்குப் போவதற்கான நீண்ட மணியும் அடித்தாகிவிட்டது. அப்போது அவன் நிச்சயம் தந்துவிடுவான் என்று எதிர்பார்த்தேன். அவன் கண்டு கொள்ளவே இல்லை. செருப்பை அணிந்து கொண்டிருப்பதில் அவனுக்கு இருக்கும் ஆசையெல்லாம் தீரும் வரை அவன் அதைத் தரமாட்டானோ என்ற பயம் கவ்வியது நினைவிருக்கிறது.
வீட்டுக்குப் போய் செருப்புக்கு என்ன பதில் சொல்வது என்ற அச்சமும் இப்படி ஏமாந்துவிட்டோமே என்ற தன்னிரக்கமும் உலுக்க ஆரம்பித்துவிட்டது.
மாணிக்கம் என்னுடன் என் செருப்பைப் போட்டுக் கொண்டு என் வீடு வரை வந்தான். வீட்டுக்குப் பத்தடி தூரம் இருக்கும்போது தெரு ஓரத்தில் செருப்பைக் கழற்றிவிட்டு அதை என்னை அணிந்து கொள்ளுமாறு சைகையில் சொன்னான். இப்படி ஒருவர் செருப்பை இன்னொருவர் மாற்றிக் கொள்வது வெட்கப்படும்படியாக இருந்தது. நான் அவசரமாக செருப்பைப் போட்டுக் கொண்டேன்.
ஒருவித நிம்மதி மனதில் குடியேறியது. செருப்பு மிகவும் சூடாகவும் பிசுபிசுப்பாகவும் இருந்தது. கைக்கு கிடைத்த திருப்தியில் வீட்டை நோக்கி ஓடினேன்.
மறுநாள் காலை பள்ளிக்குப் புறப்படும்போது மாணிக்கம் வந்தபோதே தயக்கம், பயம், லீவு போட்டுவிடலாம் போன்ற மன உணர்வு எல்லாம் சேர்ந்து கொண்டது.
மாணிக்கம் வழக்கத்துக்கு மாறாக உற்சாகமாக இருந்தான். அவன் பார்வை சுவர் ஒரம் கிடந்த செருப்பின் மீதே இருந்தது.
தினமும் மாணிக்கம் என்னை அழைத்துச் செல்ல வீட்டுக்கு வர ஆரம்பித்தான். தினமும் என் செருப்பின் மீதுதான் அவன் சவாரி செய்தான். எதற்காகவோ அவனுக்குத் தரமறுப்பதில் எனக்கு தயக்கம் இருந்தது. மறுக்க இயலாதவாறு அவன் என்னைக் கேட்டிருப்பான் என்று நினைக்கிறேன்.
மார்க்கெட் சாலை வந்ததும் செருப்பை வாங்கிக் கொள்வான். அன்று முழுதும் அவனே போட்டிருப்பான். மாலையில் திருப்பித் தந்துவிடுவான். தெருவில் பிள்ளையார் கோவிலைப் பார்த்தால் நடந்தபடியே புத்தி போட்டுக் கொள்வதுமாதிரி மார்க்கெட் சாலை வந்ததும் செருப்பை கழற்றிவிடுவது வழக்கமாகிவிட்டது. ஒவ்வொரு முறை செருப்பை அணியும்போதும் “ரொம்ப ஆசைடா” என்பான். பக்கத்துவீட்டு மாமா நெய் தோசையும் துவையலும் சாப்பிடும்போது கண்களில் வெளிப்படுத்தும் பிறவிப் பயனை மாணிக்கத்தின் ஆர்வத்தில் கண்டதை இப்போது ஒப்பிட்டுப் பார்க்கிறேன்.
வீட்டில் அடம்பிடித்து வாங்கிய செருப்பை இப்படி ஒருவன் அனுபவித்துக் கொண்டிருப்பதை என் பிஞ்சு நெஞ்சம் எப்படித்தான் தாங்கிக் கொண்டதோ?
கார்த்திகேயன் “உன் செருப்பைக் கேட்டு வாங்குடா’ என்று ஆவேசப்பட்டான். அவனுக்கு நான் படும்பாடு நன்றாகத் தெரிந்திருந்தது.
“எப்படி கேக்கறதுன்னு தெரியலை”
“நான் கேட்டு வாங்கித் தரட்டா?”
“வேணாம்.. வேணாம்.. இருக்கட்டும்”
கார்த்திகேயன் ஒரு லூஸýபையனா இவன் என்பதாக என்னைப் பார்த்தான்.
இப்படியாக இது தினசரி நிகழ்ச்சியாகிவிட்டது.
ஒருவாரம் போனதும் நான் துணிச்சலாக “நீ ஏன் உனக்கு ஒரு செருப்பு வாங்கிக் கொள்ளக்கூடாது?” எனக் கேட்டேன்.
“நானா?” இப்படி கேட்டுவிட்டு, கொஞ்ச தூரம் மெüனமாக வந்தான். என் கேள்வியில் ஏதோ பிழை இருந்துவிட்டது போல நானும் பேசாமல் நடந்துவந்தேன்.
“எனக்கு அப்பா இல்லைடா. அம்மாதான் வீட்டு வேலை செஞ்சி காப்பாத்தறாங்க. இதையெல்லாம் வாங்கித் தரமாட்டாங்க” தெரு முடிவுக்கு வந்ததும் இப்படி முடித்தான்.
நாங்கள் குடியிருந்த வீட்டில் எல்லா பையன்களுக்குமே அப்பா இருந்தார்கள்.
அம்மா மட்டும் உள்ள வீட்டை நான் அறியாதவனாக இருந்தேன். மாணிக்கம் இதைச் சொன்னபோது வருத்தப்படவும்கூட தெரியவில்லை. செருப்பை அவனே அணிந்து வரட்டும் என்று விட்டுவிட்டேன்.
அதன் பிறகு அந்தச் செருப்பு, என் பாத அழுத்தத்துக்குப் பொருந்தாத இடத்தில் குழியாகி யாருடைய டவுசரையோ போட்டுக் கொண்டிருப்பது மாதிரி ஆகிவிட்ட நேரத்தில் அவன் வேறு வீட்டுக்கு மாறிப் போய்விட்டான்.
பள்ளிக்கூடமும் மாறிவிட்டான். இருந்தாலும் செருப்புப் பள்ளம் ஆறாத வடுவாக எனக்குள் தங்கிவிட்டது.
பரதன் பாதரட்சையைக் காட்டுக்கு வந்து பெற்றுச் சென்றுவிட்டான் என்ற போது ராமன் காட்டில் செருப்பில்லாமல் எப்படி அவதிப்பட்டிருப்பான் என ஒரு பட்டிமன்ற பேச்சாளர் சிரிப்பு மூட்டிக் கொண்டிருந்தார். அப்போதும் மாணிக்கம் உருவில் பரதன் தோன்றி மறைந்தான்.
மாணிக்கம் ஏறத்தாழ இரண்டு வருஷம் என் செருப்பின் மீது இருந்தான் என்பதோடு அவன் நினைவு செருப்போடு சேர்ந்து போனதற்கு இன்னொரு காரணமும் இருந்தது.
அதன் பிறகு அவனைப் பல வருடங்களுக்குப் பார்க்கவேயில்லை. குடும்பத்தோடு படம் பார்க்கப் போயிருந்தபோது தியேட்டரில் அவனைப் பார்க்க முடிந்தது. அவனும் அவனுடைய மனைவி, குழந்தையுடன் வந்திருந்தான்.
அவனுடைய குழந்தை செருப்பு போட்டிருக்கிறதா என்று அவசரமாகப் பார்த்தேன். என் வன்மத்தை அவன் உணர்ந்து கொள்வானோவென சட்டென்று சுதாரித்ததை அவன்
பார்த்துவிட்டான்.
“எப்படி போகுது லைஃப்?” இயல்பாக பேச்சைத் துவங்கினேன். ஆனால் அது செயற்கையாக இருந்தது.
“செருப்பு கம்பெனில சூப்பர்வைஸரா வேலை பாக்கறேன். ஜெயிலுக்குப் போய் வந்ததில அந்தத் தொழிலையாவது ஒழுங்கா கத்துக்குனு வந்தேன்”
“ஜெயிலுக்கா?” பதறியபடி கேட்டேன். அவன் மெதுவாக தெரிவித்ததை என்னையும் அறியாமல் போட்டு உடைத்துவிட்டேன். என்னுடைய நண்பர்களில் உறவினர்களில்
யாருமே ஜெயிலுக்குப் போய் வந்தவர்கள் இல்லை. ஜெயிலை பஸ்ஸில் போகும் போது
பார்த்ததோடு சரி. அவனை புதிய ஜீவராசி போல எதிர் கொள்ளும் பிரமிப்பு என்னிடம் இருந்தது.
“நிஜமாவே தெரியாதா?” என்னை ஊடுருவிப் பார்த்தான். எனக்கு உண்மையிலேயே தெரிந்திருக்கவில்லை என தெரிந்து கொண்டான்.
“சரி நம்பர் குடு. போன்ல சொல்றேன்”
அவன் சொன்னது எனக்கு ஒரு காட்சியாக பதிவாகியிருந்தது.
துணைப்பாடப் புத்தகத்தை மறந்து வைத்துவிட்டிருந்ததால் அன்றைக்கு மத்தியானம் புத்தகத்தை எடுத்துச் செல்ல வீட்டுக்கு வந்திருக்கிறான் மாணிக்கம்.
வீட்டு வாசலில் ஒரு ஜோடி செருப்பு இருந்திருக்கிறது. அது ஆண்கள் அணியும் செருப்பு. கதவு தாழிடப்பட்டிருந்தது. வாசலிலேயே உட்கார்ந்திருக்கிறான் மாணிக்கம். கொஞ்ச நேரத்தில் கதவு திறந்து கொண்டு கணேச மேஸ்திரி வெளியே வந்தார். பையனைப் பார்த்ததும் தடுமாற்றம். அவசரமாக செருப்பை மாட்டிக் கொண்டு குனிந்த தலை நிமிராமல் வேகமாகப் போய்விட்டார்.
மாணிக்கம் வீட்டுக்குள் போனான். அங்கே அவன் அம்மா.. அவளும் இவனை எதிர்பார்க்காமல் தடுமாறினாள். ஆறாம் வகுப்பு படிக்கும் பையனாக இருந்தாலும் அவனுக்கு இதில் இருக்கும் தவறு புரிந்திருக்கும் என்பதை உணர்ந்திருந்தாள்.எதுவும் பேசாமல் டி.வி.க்குப் பக்கத்தில் குத்துக்காலிட்டு அமர்ந்து தலையைமுட்டிக்காலுக்கு மேல் சாய்த்துக் கொண்டு குலுங்கி அழ ஆரம்பித்திருக்கிறாள். மாணிக்கம் வேறு எதுவும் விசாரிக்க வேண்டிய அவசியம் இருக்கவில்லை.
அடுப்புக்கு மேலே பாத்திரங்கள் வைக்கும் ஸ்டாண்டில் காய்கறி நறுக்கும் கத்தி பளபளத்துக்கொண்டிருந்தது. அதை உறுதியாகப் பிடித்துக் கொண்டான்.
அம்மா தலை கவிழ்ந்து அழுது கொண்டிருந்தாள். கத்தியை கழுத்துக்குக் கீழே சொருகி தீவிரமாக ஒரு இழுப்பு இழுத்தான். குபுக்கென ரத்தம் பீச்சியடித்தது. தலை மட்டும் முட்டிக்காலில் இருந்து நழுவி தொங்கியது.
அந்த நேரத்தில் அம்மாவின் முகத்தில் வலியைவிட அதிர்ச்சிதான் அதிகமாகத் தெரிந்ததாக மாணிக்கம் சொன்னான்.
சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் செருப்பு தைக்கக் கற்றுக் கொண்டு வெளியே வந்ததும் ஜெயிலரின் ஆதரவில் செருப்பு கம்பெனி வேலையில் சேர்ந்ததாகவும் சொன்னான்.
அதே கம்பெனியில் வேலை பார்த்த பெண்ணையே திருமணம் செய்து கொண்டு வாழ்க்கை
ஓடிக் கொண்டிருக்கிறது என்றான்.
எல்லோரிடமும் சொல்வது போல உடனே “ஃபேமலியோட ஒரு தரம் வீட்டுக்கு வாடா’ என்று அழைக்க யோசனையாக இருந்தது. அவன் எதை எதிர்பார்க்காமல் மேற்கொண்டு பேசிக் கொண்டு போனான்.
கடைசியாக அவன் சொன்னான்: “ஜெயில்ல இருந்து வந்ததும் கணேச மேஸ்திரி என்னை பார்க்கறதுக்கு வந்தாரு. “உங்க அம்மாவும் நானும் கல்யாணம் பண்ணிக்கிறதா இருந்தோம். பையன் என்ன சொல்வானோன்னு பூங்காவனத்துக்கு யோசனை. நானே கூப்புட்டுப் பேசிப் பாக்கறேன்னு சொல்லியிருந்தேன்… அன்னைக்குத்தான் இந்தமாரி ஆய்டுச்சி’ன்னு சொன்னாரு.” மாணிக்கம் அதற்கு மேல் பேச முடியாமல் அழுதான்.
நான் ரிஸீவரை காதில் வைத்துக் கொண்டு அவன் மீண்டும் பேசும் வரை பொறுமையாக
இருந்தேன்.
“அம்மாவுக்கு ஒரு ஒடம்பும் மனசும் இருந்தது தெரியாம போச்சுடா.. அந்த வயசுல தெரியல. இந்த வயசுல தெரியுது.”
“ஒவ்வொரு வயசுல ஒவ்வொரு பாடம். பத்தாங்கிளாஸ் பாடத்தை ரெண்டாங்கிளாஸ்ல படிக்க முடியுமா? கவலைப்படாதே மனச சந்தோஷமா வெச்சிக்கோ” என்றேன்.
“இந்தமாதிரி அவசரப்பட்டு எவ்வளவு தப்பு பண்ணிட்டமோன்னு இருக்குடா… நீ ரொம்ப பொறுமைசாலிடா” சிறிய கனைப்புக்குப் பிறகு பெருமையாகச் சொன்னான்.
– கல்கி தீபாவளி மலர் 2011
சூப்பர் ஸ்டோரி. இல்லாரும் படிக்கவேண்டிய ஒரு சிறு கடை
ஒரு சிறு கோபம் ஒரு பெரிய தண்டனை. கடைசியில் மாற்றத்துடன் சுப முடிவு.