லேப்டாப் எனும் பொட்டி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: கிரைம்
கதைப்பதிவு: November 16, 2022
பார்வையிட்டோர்: 7,995 
 
 

நடு இரவை தாண்டி இரண்டு மணி நேரம் ஓடியிருக்கும், அந்த இருளில் “திக்”திக்” மனம் துடிக்க கையில் ஒரு பெட்டியை எடுத்து கொண்டு வேகமாக நடந்து கொண்டிருந்தான் மாரி.

அப்பா..இதை எடுக்க மாலையிலிருந்து காத்திருக்கிறான். “பாவி பயல்” இந்த பொட்டியை விரித்து வைத்து என்னனென்னவோ செய்து கொண்டிருக்கிறான். மூடி வைக்க காணோம்.

அவன் அறைக்கு நேர் எதிர்புறம் இருந்த பள்ளத்தில் படுத்து படுத்து இவனையே பார்த்து கொண்டிருந்ததில் கழுத்து வலிதான் வந்தது. அடச்சே போ என்று அந்த மண் தரையிலேயே தலை வைத்தவன் அரை மணி நேரத்தில் அவனையே மறந்து உறங்கி விட்டான்.

“சுள்ளென்று” எறும்பு ஒன்று தலைக்கு தலையணையாய் மடக்கி வைத்திருந்த கையை கடிக்க திடுக்கிட்டு விழித்தான். “அட கஷ்ட காலமே” திருட வந்து தூங்கி விட்டோமே, வெறும் தரையில் தலைவைத்தவன் எவ்வளவு சுகமாக கையை மடக்கி வைத்து தூக்கத்திற்கு போயிருக்கிறோம்.

விழித்து எழுந்தவனுக்கு உடம்பெல்லாம் வலித்தது. சே..மண் தரையில் படுத்ததால் அங்கங்கு பொடி பொடி கற்கள் உடலில் படிந்து ‘சுருக்’ ‘சுருக்கென’ வலித்தது. அதனையும் மறந்தவன் அவசரமாய் எதிரில் இருக்கும் அவனது அறையை நோட்டமிட்டான்.

அட கடவுளே அப்பொழுது கூட அந்த மனிதன் இந்த பெட்டியை திறந்து வைத்து ஏதேதோ செய்து கொண்டிருந்தான். அவனது முகத்தில் இந்த பெட்டியின் வெளிச்சம் அடித்து கொண்டிருந்ததை கூட இவனால் இங்கிருந்து பார்க்க முடிந்தது.

எவ்வளவு நேரம் தூங்கியிருப்போம்? மனதுக்குள் கணக்கு போட்டான். குறைந்தது இரண்டு மணி நேரம் தூங்கியிருக்கலாம், அப்படியானால் மணி பனிரெண்டுக்கு மேல் ஆகியிருக்கலாம்.

பத்து மணிக்கு வந்து பதுங்கி உட்கார்ந்தோம். மணியோ பனிரெண்டாகி விட்டது. இவன் வேலையை முடிப்பவனாக தெரியவில்லை. நமக்கோ உடம்பு முடியவில்லை. பேசாமல் எழுந்து போய் விடலாமா?

போகவும் மனசில்லை. கிட்டத்தட்ட ஐந்து மாதங்களாக நோட்டமிட்டு கொண்டிருக்கிறான்.

இந்த அறையை தாண்டித்தான் மாரி வீட்டுக்கு போவான். இராத்திரி ஆகி விடும், இவன் வீட்டுக்கு போகும் போது. அப்பொழுதெல்லாம் ஜன்னல் வழியாக பார்த்தால் இவன் ஜன்னல் அருகாமையில் உட்கார்ந்து இந்த பெட்டியை திறந்து ஏதே செய்து கொண்டிருப்பான்.

என்னதான் செய்கிறான் இந்த பையல்? ஒவ்வொரு முறையும் இப்படி எண்ணினாலும், சரி “படிச்ச பைய”, ஏதாவது பண்ணுவான், நினைத்துக்கொள்வான்.

ஒரு முறை இவன் “சோக்காளியிடம்” சொல்லிக்கொண்டிருந்தான் இந்த பையலை பற்றி. அவன்தான் இப்படி ஒரு ஐடியாவை கொடுத்தான். ‘மாப்பிள்ளை அந்த பொட்டியை இசுக்கினு”வந்துடு”. அவன் துடிச்சி போயிடுவான், அப்புறமா நான் போய் அவன் கிட்ட ‘ரேட்டு’ பேசி கண்டு பிடிச்சு கொடுக்கறதா சொல்லி திருப்பி கொடுத்துடலாம். என்ன சொல்றே?’

நமக்கு இன்னாத்துக்குபா அது, இப்படி சொல்லி விட்டாலும் ஆமா செஞ்சாதான் என்ன ? அந்த பைய இந்த பெட்டியவே சதா நோண்டிக்கிணு இருக்கான். நாம இரண்டு நாள் கொண்டு போய் பதுக்கி வச்சிகிட்டா ஆள் “அப்செட்” ஆகி கேட்டதை கொடுத்துடுவான். இது நல்ல ஐடியாவாத்தான் இருக்கு.

ஆனா போலீசுக்கு போயிட்டா?

அதுவும் கஷ்டம்தான், அப்படி போயிட்டான்னு தெரிஞ்சா உடனே அவன் ரூமுல கொண்டு போய் வச்சிடலாம். இப்படி எண்ணினானோ இல்லையோ, அந்த பெட்டியை கவர்ந்து செல்ல வேண்டும் எங்கிற எண்ணம் மட்டும் வேகமாய் வளர்ந்து விட்டது.

“அப்பாடி” எப்படியோ அந்த பொட்டியை மூடி விட்டான். பெரிய வெளிச்ச புள்ளி ஒன்று அமிழ்ந்தது போலிருந்தது.

ஒற்றை புள்ளியாய் எரிந்து கொண்டிருந்த விளக்கு ஒன்று மட்டும் “மினுக்” என எரிந்தது.

பள்ளத்தை விட்டு எழுந்தான். மெல்ல அடி எடுத்து அந்த் அறையை நோக்கி வந்தான்.

ஜன்னலை காற்றுக்காக சற்று திறந்தே வைத்திருந்தான், அறையில் தங்கியிருந்தவன்,.

அதை சற்று அகலமாய் திறந்து பெட்டி எங்கிருக்கிறது என்று பார்த்தான். கைக் கெட்டும் தூரத்திற்கு சற்று தள்ளித்தான் இருந்தது.

அதை இந்த பக்கம் இழுக்க எதாவது கிடைக்குமா என்று அந்த இருளுக்குள் அக்கம் பக்கம் தேடினான். அவனது அதிர்ஷ்டம், நீளமான கம்பி ஒன்று வேலியில் சொருகியிருந்தது.

மெல்ல அதை சிரமபட்டு உருவி எடுத்தான். ஜன்னல் கம்பி வழியாக அந்த கம்பியை விட்டு கொஞ்சம் கொஞ்சமாக அந்த பெட்டியை தன் பக்கம் தள்ளிக்கொண்டு வந்தான்.

“அப்பாடி”..வீட்டுக்குள் பொட்டியை கொண்டு வந்தவன் அசந்து அப்படியே உட்கார்ந்து விட்டான். சே..இந்த பொட்டியை களவாடரதுக்கு இம்மா நேரம் ஆயிடுச்சு, தனக்குள் முனங்கியபடி அதை எங்கு பத்திரப்படுத்தி வைக்கலாம், யோசித்து யோசித்து கடைசியில் குப்பை கூடை ஒன்றில் அதை கொண்டு போய் வைத்து அதன் மீது துணிகளை திணித்தான்.

அதன் பின் வந்து படுத்தவன் தான். காலை சுளீரென்று ஒரு அடி விழுக ஐயோ என்று விழித்தான்.

வாண்டு பையல் சுண்டு” ஒரு குச்சியை வைத்து கொண்டு “நைனா” எந்திரி ஆயா இப்படித்தான் என்னைய அடிச்சு எழுப்பும், சொல்லிக்கொண்டே மீண்டும் ஒரு விளாசு வீசினான்.

அட ‘நாதாறி பயலே’ தன் மகனை திட்டியபடி எழுந்தவன், “இதா கம்முனு இரு” மகனை அதட்டி விட்டு முகம் கை கால் கழுவ போனான்.

காலை பத்து மணி வாக்கில் ஒன்றும் தெரியாதவன் போல் அந்த் அறை பக்கம் வந்தவன் அதிர்ந்து போய் நின்றான்.

அறை இருந்த வீட்டை சுற்றி போலீஸ் நின்று கொண்டிருக்க அந்த பையனும் நின்று கொண்டிருந்தான்.

இவனுக்கு போலீசை கண்டதும் மனசுக்குள் பயம் வந்து உட்கார்ந்து கொண்டது. அட கடவுளே, இவன் அதுக்குள்ள போலீசுக்கு போயிட்டானா? கண்டு பிடிச்சுடுவாங்களா? மனம் பக் பக்கென துடிக்க ஒரு ஓரமாய் நின்று பயத்துடன் வேடிக்கை பார்த்தபடி நின்றான்.

இவனை போலவே வேடிக்கை பார்த்தபடி நிறைய பேர் நின்று கொண்டிருந்தனர். என்ன ஆச்சு? பக்கத்திலிருந்தவர் மற்றவரிடம் கேட்க,

போலீசுக்கு இந்த பையன் மேல சந்தேகமாம். அதுதான் அவன் வீடு பூரா சோதனை போட்டுட்டு இருக்காங்க.

நீண்ட நேர சோதனையில் போலீஸ் கடைசியில் “ஒன்றும் சிக்கவில்லை” என்று சொல்லி அங்கிருந்து போனது.

“அவனோட லேப் டாப்” கிடைக்கவே இல்லை. அதுலதான் எல்லா இரகசியமும் வச்சிருக்கான், ராஸ்கல் அதை எங்கியோ மறைச்சுட்டான். மத்தபடி ஒண்ணும் சிக்கவே இல்லை.’ காவலர்கள் தங்களுக்குள் பேசியபடி அங்கிருந்து சென்றபோது பேசிக்கொள்வது இவனுக்கு கேட்டது.

மாரியும் அவன் கூட்டாளியும் பேசிக் கொண்டிருந்தனர். “மாப்பிள்ளை” நமக்கு இன்னும் நல்ல வசதியா போச்சு, அவன் கிட்டே பேரம் பேச, நீ கவலை படாதே, இன்னைக்கு சாயங்காலம் அவன் கிட்டே பேசறேன்.

மாரிக்கு மனதுக்குள் பயம் இருந்தாலும் போலீஸ் வேறு தேடுதேப்பா, இப்ப நாம போன மாட்டிக்க மாட்டமா?

போலீஸ் தேடறதுனாலதான் நமக்கு ‘ரேட்’ ஜாஸ்தியா கிடைக்கும். நீ ஒண்ணும் கவலைப்படாதே, சொல்லி விட்டு சென்றான் மாரியின் சோக்காளி.

சரி ‘பொட்டி’ பத்திரமா இருக்கான்னு பார்க்கலாம், அந்த குப்பை தொட்டி அருகே சென்றவன் அதிர்ந்து போனான்.

ஏய் இங்க வச்சிருந்த குப்பை தொட்டி எங்கே? அதுக்குள்ள துணி எல்லாம் திணிச்சி வச்சிருந்தனே.

அதுக்கு ஏய்யா கூவுறே, உனக்கெதுக்கு அந்த கருமாதியெல்லாம். நேத்து குப்பை வண்டியில கொண்டு போய் கொட்டிட்டு வந்துட்டேன்.

ஐயோ..அயோ.. அதுக்குள்ள ஒரு பொட்டி வச்சிருந்தேண்டி, அதைய கூட பார்க்காம என்ன பொம்பளை நீ..வார்த்தையை விட்டான்.

இந்தா என்னா நினைச்சிகினு இருக்கே, அவன் மனைவி எதிர்த்து கேட்டது மில்லாமல் அவனை விட குரலை உயர்த்தி அடிப்பது போல் பாய்ந்து வர இவன் “அரண்டு பதுங்கி” குப்பை கொட்டுமிடத்துக்கு ஓடினான்.

கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் பிரமாண்டமான அந்த குப்பை கூளத்தை கிளறி கிளறி இவனும் குப்பையும் ஒரே நிறமாய் ஆனதுதான் மிச்சம். அந்த பொட்டி கிடைக்கவேயில்லை.

அலுத்து, சலித்து எப்படி இந்த அழுக்கை எல்லாம் கழுவுவேன்? என்ற கவலையும், “ஐயோ அந்த பொட்டியை கேட்டு அவன் வந்தால்..! இல்லை போலீஸ் வந்து கேட்டால்..! இரண்டுமில்லாமல் இவன் கூட்டாளி அவனிடம் பேரம் பேசி இதோ இப்பொழுது வந்து இவனிடம் நின்றால் இவன் என்ன சொல்ல போகிறான்?

குப்பையாக இவன் வீட்டில் போய் நிற்கவும் இவனின் கூட்டாளி அந்த பொட்டிக்கு சொந்தக்காரனையும் அழைத்து வந்து வாசலில் நிற்கவும் சரியாக இருந்தது.

நின்று கொண்டிருந்த இருவருக்கும் குப்பையாய் வந்திருப்பது மாரிதான் என்று தெரியாமல் திகைக்க, இவர்கள் இருவரையும் பார்த்து இவன் திகைப்பில் என்ன சொல்வது என்று நிற்க..

“நைனா” பையன் உள்ளிருந்து வெளியே வந்தான். அவன் கையில் அந்த பொட்டி.

ஐயோ என் “லேப் டாப்” அதற்கு உரிமையாளன் பாய்ந்து செல்ல, மாரி ஐயோ பெட்டி என்று அவனும் பாய, கூட்டாளி நாமும் பாய்வோமே, என்று சும்மாவேனும் அதன் மீது பாய…

பையன் போக்கு காட்டி அந்த பொட்டியை தூக்க முடியாமல் தூக்கி கொண்டு இதோ ஓடிக்கொண்டிருக்கிறான்.

இவர்களை நீங்கள் வழியில் பார்த்தீர்கள் என்றால் ஒதுங்கி கொள்ளுங்கள்.

பையன் அந்த பொட்டியை அவனோட நண்பனிடம் காட்ட எடுத்து கொண்டு ஓடிக் கொண்டிருக்கிறான்.

அவன் நண்பன் வேறு யாருமல்ல, “ஏட்டு ஏகாம்பரத்தின்” அருமந்திர பேரன். ஏட்டு கூட நேற்று இந்த “பொட்டிக்காக” அந்த அறையை சோதனை போட சென்றவர்தான்.

அதனால் “நீங்கள் நமக்கெதற்கு வம்பு என்று ஒதுங்கி என்ன நடக்கிறது அல்லது நடக்க போகிறது என்று மட்டும் வேடிக்கை பாருங்கள்”

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *