மன்னிப்பு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: கிரைம்
கதைப்பதிவு: October 15, 2012
பார்வையிட்டோர்: 13,241 
 

திரிலோகசந்தர் பார்வதி தம்பதிகளின் ஒரே மகனாகிய ரமணி என்னும் நான், சுய நினைவோட எழுதின கடிதம்:

நான் தற்கொலை செய்ய முடிவு செஞ்சிருக்கேன். அதுக்குக் காரணம் இருக்குதுங்க. என் உயிர் நண்பன் ராஜூவின் மனைவியைக் கொலை செஞ்சது நான் தான். அந்தக் குற்றத்தோட சுமை தாள முடியாம தற்கொலை செய்துக்கறதா முடிவு செஞ்சிருக்கேன்.

என் நண்பனுக்கு நான் செஞ்ச துரோகம் மட்டுமில்லே, ஒரு அப்பாவிப் பெண்ணோட வாழ்க்கையை அவசரமா முடிச்சுட்ட வருத்தமும் குற்ற மனப்பான்மையும் என்னை தினம் வாட்டி எடுக்குது.

இதைப் படிக்கும் போலீசாருக்கும் என் சுற்றத்தாருக்கும், குறிப்பா என் அருமை நண்பன் ராஜூவுக்கும் என் முடிவுக்கான காரணங்களை விவரிக்கக் கடமைப்பட்டிருக்கேன்.

இப்ப வேணும்னுன்னா அப்படித் தோணுதே தவிர, கொலை செய்யுறதுக்கு முன்னாலே ராஜூவின் மனைவி அப்படியொண்ணும் அப்பாவியா தெரியலிங்க. ராஜூவோட திருமணத்துக்குப் பின்னால எங்க நட்பில் விரிசல் ஏற்படலையின்னாலும் நெருக்கம் குறையத் தொடங்கிடுச்சு. எங்கே அழிஞ்சு போயிடுமோ என்கிற அச்சமும் உண்டாயிடுச்சு. அந்த அச்சம் தான் என்னைக் கொலைகாரனா மாத்திச்சு. இது புரியணுமுன்னா எங்க நட்பின் ஆழத்தை நீங்க புரிஞ்சுக்கணும்.

நானும் ராஜூவும் குட்டிப் பிள்ளைங்களா இருந்தப்பவே நெருக்கம். பக்கத்து பக்கத்து வீட்டுல இருந்தோம். ஒரே வகுப்புல படிச்சோம். ஒண்ணா ஸ்கூலுக்குப் போவோம்; விளையாடுவோம். அந்த நாளை நினைச்சுப் பாத்தாலே நெஞ்செல்லாம் கனக்குது.

தெருவோரமா இருந்த மரைக்காயர் வீட்டு வேப்பமரத்தடியில் நானும் அவனும் மாவுமில் குருமூர்த்தியும் பேந்தா கோலி விளையாடுவோம். அப்துல்காதர் செட்டோட சேர்ந்து கில்லி விளையாடுவோம். குருமூர்த்தி என்னைக் கிண்டல் செய்யுறப்பல்லாம் ராஜூ எனக்கு வக்காலத்து வாங்குவான். அதே போல ராஜூவை யாராவது எதுனா சொன்னா எனக்குப் பொறுக்காது. உடனே சண்டை போடுவேன்.

ராஜூவுக்காக நிறைய அடியும் உதையும் கூட வாங்கியிருக்கேன். ஒரு முறை தெரசா பெண்கள் போர்டிங்க் பள்ளியின் குளியலறை சுவத்துல ஒரு சின்ன ஓட்டை போட்டு உள்ளாற பள்ளிக்கூடப் பெண்களும் கிறுஸ்துவ சன்னியாசினிகளும் குளிக்குறதை அரையிருட்டில பார்த்துக்கிட்டிருந்தப்ப மதர் சுப்ரீம் வந்துட்டாங்க. அவங்க வர்றதைப் பார்த்து குருமூர்த்தியும் மத்தவங்களும் ஒசைப்படாம ஓடிட்டாங்க. ராஜூ மாட்டிக்கிட்டான். அந்தச் சுவத்துல ஓட்டை போட்டு அவனை வலுக்கட்டாயப்படுத்தியது நான்தான்னு பழியை ஏத்துக்கிட்டு அந்த வருசம் பூரா கன்னிமேரி கோவில் தரையையும் பெஞ்சுகளையும் தினமும் சுத்தம் செஞ்சேன். எல்லாம் ராஜூவுக்காக.

ப்ளஸ்டூ சேர்ந்த புதுசுல முதல் முதலா சிகரெட் பிடிச்சுப் பாத்தோம். இழுக்கத் தெரியாமல் இழுத்து, விடாம இருமிக்கிட்டிருந்த என்னை உக்கார வச்சு ஆசுவாசப்படுத்தி வீட்டுக்கு அழைத்து வந்தவன் ராஜூ தான். செத்துட்டன்னே நெனச்சேன்.

ப்ளஸ்டூ முடிச்சு இரண்டு பேருமே எஞ்சினியரிங் கல்லூரியில சேந்து படிச்சோம். அடையாறு ஆஸ்டல்லே ஒரே ரூம்ல தங்கினோம். ஒரு தடவை காந்தி மண்டபம் போனப்ப அங்கே ஒரு ரகசிய நிழலில் நானும் ராஜூவும் முதல் முதலாக ஒரு பெண்ணோட திறந்த மார்பகத்தைத் தொட்டுப் பார்த்தோம். எங்களை அழைச்சுக்கிட்டுப் போன ராபர்ட் அதுக்கே பத்து ரூபாய் பிடுங்கிக்கிட்டு ஓடிட்டான். தொட்டுத் தடவிக்கிட்டிருக்கோம், திடீர்னு போலீஸ் விசில் கேட்டு ஆடிப்போயிட்டோம். அந்தப் பொம்பளை ஒரே ஓட்டமா காணாமப் போயிட்டா. நானும் ராஜூவும் அங்கிருந்து ஓடி ராஜ்பவன் தாண்டி கிங் இன்ஸ்டிட்யூட் வரை விடாம ஓடியாந்தம்னா பாருங்க.

கல்லூரி முடிச்சு எனக்கு மவுன்ட் ரோடுல வேலை கெடச்சு நான் சேந்தேன். ராஜூவுக்கு இன்னும் வேலை கிடைக்கலை. இருந்தாலும் நாங்க ரெண்டு பேரும் ஒண்ணாத்தான் இருந்தோம். என்னோட வாடகை ரூம்ல என்னோட சம்பளத்துல தான் அவன் காலந்தள்ளினான். அவன் என் கூட இருந்ததுல எனக்குத் திருப்தி தான். அவன் கூட எதுனா பாரமா இருக்கேனானு கேப்பான், எனக்கு கெட்ட கோவம் வந்து திட்டியிருக்கேன். என்னவோ தெரியலை அவனுக்கு வேலை கிடைக்கவேயில்லை.

சும்மா வீட்டுல இருக்குறது பிடிக்காம எங்கனா சுத்துவான். திடீர்னு ஒரு நாள் கவிதை எழுத ஆரம்பிச்சான். நல்லா இருக்குனு சொன்னேன். நண்பனாச்சே, ஆதரவா எதுனா சொல்ல வேண்டாமானு சொல்லலீங்க. உண்மையிலயே அருமையா எழுதியிருந்தான். அவனோட முதல் கவிதை இன்னும் நினைவிருக்கு. தூக்கிக்கிட்டா கை வலிக்குது, கீழே விட்டா மனசு வலிக்குதுனு ஒரு அம்மா தன் குழந்தையைப் பத்தி சொல்லுற மாதிரி ஒரு கவிதை.

அப்புறம் அடிக்கடி பீச்சுக்குப் போய் உக்காந்து எழுத ஆரம்பிச்சான். அப்படி ஒரு நாள் எழுதிக்கிட்டிருந்தப்ப விமலாவைச் சந்திச்சான். விமலாவோட அப்பா ஒரு சினிமா தயாரிப்பாளர். விமலாவோட பழகத் தொடங்கினான். அந்தப் பழக்கம் விமலாவோட அப்பாவுக்குத் தெரிஞ்சு போய் விவகாரமாயிடுச்சு. வேலையத்த பயலுக்கு காதலானு அவரு அடியாளுங்களை விட்டு மிரட்டினாரு. நான் தான் அவங்க கிட்டே சமரசமெல்லாம் செஞ்சு ஒரு வழியா வீட்டு மாப்பிள்ளையா இருக்கட்டுமுன்னு கல்யாணம் செஞ்சு வச்சேன்.

ராஜூவுக்கு அடிச்ச அதிர்ஷ்டம் பாருங்க, கல்யாணம் முடிஞ்ச அடுத்த வாரமே விமலாவோட அப்பா செத்துட்டாரு. அத்தனை சொத்தும் விமலாவுக்கு வந்து சேந்து, ரெண்டு பேரும் சந்தோசமா இருந்தாங்க. அப்பா போன அதிர்ச்சியிலே விமலா ரொம்ப நொந்து போயிடுச்சுன்னாலும் ராஜூ மேலே ரொம்ப காதலா இருந்துச்சு.

அதே நேரம், ராஜூவோட கவிதைங்க பிரபலமாகத் தொடங்கிடிச்சு. சினிமாவுக்கும் பத்திரிகைங்களுக்கும் எழுத ஆரம்பிச்சான். விஜய் படங்கள்ள கூட அவன் எழுதின பாட்டு வந்திருக்கு, அவன் பேமசானதுல எனக்கும் பெருமை.

எல்லாம் நல்லாத்தான் இருந்துச்சு.

திடீர்னு ஒரு நாள் எனக்கு வேலை போயிடுச்சு. வேலை பாக்குறப்ப எனக்கு வலிப்பு வந்து ஒரே சிக்கலாயிடுச்சு. வலிப்பைக் காரணம் காட்ட முடியாம வேற எதுவோ சொல்லி என்னை வேலையிலந்து எடுத்துட்டாங்க. நாலஞ்சு மாசம் வேலை தேடி அலஞ்சேன். ஒண்ணும் கெடக்கலே. ஒரு தடவை இன்டர்வ்யூ போதே வலிப்பு வந்திடுச்சு. என் நிலைமை மோசமாயிட்டு வர்றதைப் பாத்து என் அருமை நண்பன் ராஜூ என்னை வீட்டோட இருக்கும்படி சொன்னான். விமலாவும் எங்க நட்பை மதிச்சு எப்பவும் இனிமையா நடந்துகிட்டா.

நாளாக ஆக எல்லாம் மாறத் தொடங்கிடுச்சு. ராஜூ என்னைக் கவனிக்கறதுக்கு ஒரு ஆயாவை வேலைக்கு வச்சான். சினிமால ரொம்ப பிசியாயிட்டான். ஒரு பத்திரிகை வேற வாங்கி நடத்த ஆரம்பிச்சான். விமலாவோட அடிக்கடி வெளியூர் போகத் தொடங்கினான். விமலா கூட சேந்துக்கிட்டு என்னைக் கொஞ்சம் மரியாதை குறைவா பேசத் தொடங்கினான். கேட்டப்ப என் மேல கோவப்பட்டு அனுசரிச்சுக்கிட்டு போ அப்படின்னு ரொம்ப துச்சமா சொல்லிட்டான். அன்னைக்கு என்ன தோணிச்சோ தெரியலிங்க “ராஜூ இதுக்குப் பலனை அனுபவிக்கத் தான் போறே”னு ஏதோ சொல்லிட்டேன்.

ராஜூ ஸ்டூடியோவுக்குப் போயிருந்தான். அன்னைக்கு ராத்திரி தான் விமலாவைக் கழுத்தை நெறிச்சுக் கொன்னேன். அவளோட பேசிக்கிட்டிருந்தப்ப வலிப்பு வந்ததாகவும், அவ கழுத்தைப் பிடிக்கப் போய் என்னை மறந்த வலிப்பு வேகத்துல நெறிச்சுட்டதாகவும் டாக்டருங்களும் போலீசும் கோர்ட்டும் ஒத்துக்கிட்டதால, அவளோட மரணத்தை ஒரு விபத்தா ஏத்துக்கிட்டு கேசை முடிச்சுட்டாங்க.

இதனால ராஜூவுக்கு அத்தனை சொத்தும் சேந்து பணக்காரனாயிட்டான். என்னை ஒழுங்கா கவனிப்பான்னு நெனச்சேன். ஆனா பாருங்க அவன் மனசு ஒடிஞ்சு போயி சோகமாயிட்டான். என்னையும் ஒதுக்க முடியலே. விமலாவையும் மறக்க முடியலே. அவன் பைத்தியக்காரனாயிட்டான். இதைப் பாத்துக்கிட்டு என்னால சும்மா இருக்க முடியலிங்க.

என்னோட வலிப்பைப் பயன்படுத்தி விமலாவைக் கொன்னதும், ராஜூ கிட்டேயிருந்து அதை மறைச்சு வச்சதும் தப்புனு இப்ப தோணுது. என்னையே என்னால மன்னிக்க முடியல. விமலா, ராஜூ: தயவுசெஞ்சு என்னை மன்னிப்பிங்களா?

அதான் தற்கொலை செய்துக்க முடிவு செஞ்சேன். என் மரணத்துக்கு நான் தான் காரணம்.

இப்படிக்கு
ரமணி

என்று எழுதிக் கவனமாகக் கையெழுத்திட்டான் ராஜூ. கையுறையைக் கழற்றாமல் கடிதத்தையும் கைத்துப்பாக்கியையும் எடுத்துக் கொண்டு நிதானமாக ரமணியின் அறைக்குச் சென்றான்.

– 2010/05/05

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *