புகை தந்த மயக்கத்தில் திமிறிச் சரிந்தன எலிகள். மூன்று நாள் அடைமழை தாங்கும் நிலவொளிக்கு பயந்து இதமான சூட்டில் தன் வளைகளின் நீளத்தை விஸ்தரிக்க எத்தனித்த பொழுதில்தான் இரண்டு பக்கங்களிலிருந்தும் புகை. தப்பிக்க நினைத்த பக்கங்களிலெல்லாம் செம்மண் பூசி மெழுகி இருந்தது. கூர்மையாகிப் போயிருந்த முகமும், விஷமேறிய பற்களும் மண்ணின் பலத்தில் சிதிலமடைந்தது. திட்டமிடப்பட்ட தாக்குதலில் தப்பிக்க வழியில்லை. கிழக்குப் பக்க வளைமீது கவிழ்த்து வைக்கப்பட்ட மண்சட்டியில் கங்கு வெறித்தனத்தோடு புகைந்து கொண்டிருந்தது. தேடித்தேடி மற்ற வளைகள் செம்மண் பூசலால் அடைந்து போயிருந்தது. உடைந்த சட்டியில் புதைந்திருந்த வன்மம் நிறைந்த வாய், வெற்று வெளியிலிருந்து காற்றைச் சட்டிக்குள் புகுத்தி புகைபரப்பிக் கொண்டிருந்த கொலைவெறியில் இருந்து தப்பிக்க முடியாமல் திமிறிச் சரிந்த ராஜ எலியை, வெளியே கொண்டு வந்து காலில் சங்கிலி பிணைத்து, இரண்டு கைகளும் பின்பக்கமாக அழுக்கேறிய வேட்டியால் பிணையப்பட்டு, அசைவற்று கிடந்த பச்சை இருளனை ரெட்டை மாட்டு வண்டியிலேற்றி, கூட்டு மொளையில் இழுத்துக்கட்டி இருந்தார்கள். உடன் வண்டியிலிருந்தவர்களின் முகங்களும், பின்னால் நடந்தவர் களின் முகங்களும் மரணத்தால் வெளிறிப் போயிருந்தது. உடம்பின் நடுக்கத்தில் கால்கள் பின்னி மாடுகள் அசைவின்றி நின்றிருந்தன. மரணத்தால் பயமேறிப் போயிருந்த ஆட்கள் அதே வெறியோடு வால்களைக் கவ்வி மாடுகளை விரட்டினார்கள். செய்தி காற்றில் அலைந்து மலைக்குன்றுகளின் இடை வெளிகளில் நுழைந்து ஊரெங்கும் பரவியது.
வெளியே வர பயந்த மக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கி ஊரை அமைதியாக்கியிருந்தனர். கிடைகளில் நிலவிய அமைதி, மொத்த ஆடுகளும் மரணித்த சந்தேகத்தைக் கோனார்களுக்கு அவ்வப்போது உருவாக்கியும், பயந்து மிரண்ட அதன் கண்கள் அவைகளின் இருப்பையும் மாறி மாறி சொல்லிக் கொண்டிருந்தது. அந்த இரவு வன்மம் நிறைந்ததாயிருந்தது. பச்சை இருளனின் முழிப்பிற்கு எதிர் நிற்க வலுவற்றுப் போயிருந்தது ஊர். குரலறுந்த கறுப்பு நாய்கூட கூரைவீட்டுச் சந்தில் அசைவற்று படுத்திருந்தது. அதையும் மீறி அதன் மேலும், கீழும் அசைந்த வயிறு பார்த்த எவரையும் பயமுறுத்தியது.
நீண்ட யோசனைக்குப் பின்பே பண்டாரியார், ஜமீன் கடடிடத்தின் வாசலில் அடர்ந்திருந்த மகுட மரத்தில் கட்டச் சொன்னார். மயக்கத்திலிருந்த பச்சை இருளன் குபீரெனத் தாக்கிய மகிழம்பூக்களின் வாசனையில் கண்விழித்தான். நிதானிக்க சில நாழிகைகளே போதுமானதாய் இருந்தது. கறுப்பேறி வளைந்த நூக்க மர நாற்காலியில் சாய்ந்திருந்த பண்டாரியார், அவன் முழிப்பில் அச்சப்பட்டு நாற்காலி நுனிக்கு வந்திருந்தார். சுற்றிலும் நின்றிருந்த ஆட்கள் அவன் முக அசைவுகளிலேயே புதைந்திருந்தனர்.
எவர் கண்ணும் தவறியும் பச்சை இருளனின் பக்கம் திரும்பாமல் இருந்தது. பண்டாரியாரின் பிள்ளைகள் மட்டுமே பயமற்று இருந்தனர். குன்றுகளுக்குள் அமைக்கப்பட்டிருந்த தன் வம்ச வழி அரண்மனை, சுற்றிலும் காவலிருந்த அடிமைப் பறையன்கள், அப்பாவின் கண் அசைவிற்கு நின்ற ஊர், தோட்டு, கம்பத்தம் எல்லாமும் அவர்களுக்கு உரமேற்றி இருந்தன. கேள்விப்பட்டிருந்த பச்சை இருளனின் இரவுகள் பயமேற்றி இருந்தாலும் இப்போது முற்றிலும் வேறுமாதிரியான ஆட்களாகி அவனை வேடிக்கைப் பொருளாக்க எத்தனித்தார்கள். நிதானமற்று போயிருந்த கண்களில் ஒவ்வொருவனாகக் கொண்டு வந்து கொண்டிருந்தான் அவன். அந்தப் பார்வைக்கு பயந்து, நின்ற இடத்திலேயே புதர்களில் பதுங்கினார்கள். எல்லோருக்கும் தெரிந்திருந்தது, அவன் உறுமி உதறும் ஒரே உதறலில் உயிருக்குப் பயந்து ஓடப்போகும் பெருநரிகளும், மூர்க்கத்தால் உருவேறியிருந்த துஷ்டமிருகங்களும் அவன் உடம்புக்குள்ளேயே படுத்திருக்கிறது என்பது.
மௌனம் அதுவாகவே உடைந்தது. சகடை வண்டியை இழுத்து வர நாலைந்து ஒட்டர்கள் ஓடினார்கள். ஒருவரும் ஒரு வார்த்தையும் பேசாமல் வண்டியின் மேல், சுற்றிலும் கம்பிப் பூண் போட்ட இரும்புக் கூண்டை ஏற்றினார்கள். கண்களில் நெருப்புத் துளிகள் உருள, பெரும் மூர்க்கத்தோடு படுத்திருந்த பெருநரி எழுந்து உள்ளுக்குள்ளேயே நடமாட ஆரம்பித்தது. பண்டாரியாரின் பெரும் கத்தலுக்கு சகல பணிவோடும் எதிரில் நின்றான் கட்டைய இருளன். நரியற்று இருந்த வேறு கூண்டு மகுடமரத்தை ஒட்டி நிறுத்தப்பட்டது. இறுகி இருந்த கட்டை அவிழ்க்க முடியாமல் கட்டைய இருளனின் கைகள் நடுங்கின. அவன் பார்வை மகுடமரத்து வேர் வரை போயிருந்தது. அடி திம்மையளவிற்கு நீண்டிருந்த பச்சை இருளனின் தொடைகளைச் சந்திக்கவும் திராணியற்று இருந்தான். திமிராமல், முரண்டு பிடிக்காமல் அவமானப்பட்டிருந்த அவனைக் கூண்டுக்குள் இழுத்துப் பூட்டவே முன்னிரவு முழுக்கத் தேவையாய் இருந்தது. தலை கூண்டுக்குள் நுழையும்போது கம்பிகளுக்கிடையே ஜமீன் மாடியிலிருந்து ஒளிர்ந்த பச்சை மரகத வெளிச்சம் பட்டு கண்கூசினான். சுற்றிலும் இருந்தவர்கள் வெளிச்சப் பிரக்ஞையற்று இருந்ததையும் அவன் கவனித்தான்.
ஜமீனுக்குள் அடைபட்டிருந்த பச்சை மரகத லிங்கத்தைப் பற்றிய செய்தியை ஊர் தேக்கி வைத்திருந்தது தெரியும் அவனுக்கு. யாராலும் நெருங்க முடியாத அதன் வெளிச்சம் அவனைக் கதிகலங்க வைத்திருக்கிறது. அதை நகர்த்திவிடத் துடித்த பொழுதுகளை, கேள்விப்பட்டிருந்த கதைகள் தடுத்திருந்தன. ஊரும் உலகமும் நெருங்க முடியாத தூரத்திலும், பாதுகாப்பிலும், அழகிலும் உறைந்து போயிருந்த பச்சை மரகத வெளிச்சம் அவனை ஒன்றுமில்லாதவனாக்கி இருந்தது. பெண் ஸ்பரிசம் படாமல் முறுக்கேறியிருந்த உடம்பு லகுவாகிக் கொண்டிருந்தது.
கம்பிக் கதவுகள் சாத்தி இரும்புப் பூண் இழுத்து பூட்டப்பட்ட போதும் அசைவற்று இருந்தான். ஆள் கூண்டின் தரையில் கால் ஊன்றி, எழுந்து நின்று அசைகிற அளவுக்கு அனுக்குமலை தச்சனால் மெருகேறி இருந்தது நரிப்பூண். அன்றைய பின் இரவு முழுக்க நின்று அசையாமல் ஜமீன் வீட்டின் மேல்மாடியில் ஒளிர்ந்த வெளிச்சத்தையே தேடிக் கொண்டிருந்தான் பச்சை இருளன்.
பயத்தில் உறைந்திருந்த ஊரை, பெரிய தொந்தாலியின் தமுக்கு சத்தம் எழுப்பிவிட்டது. ஐப்பசிக் குளிரில் சில்லிட்டிருந்த உடம்புகளில் ஆர்வமும், பயமும் பரவ வீட்டின் வெளியே வராமல் உள்ளுக்குள்ளேயே மறைந்து, மறைந்து தெருவை கவனித்தார்கள்.
தொந்தாலியின் தமுக்குச் சத்தத்தினூடே சகடை வண்டி கட்டைய இருளன் வகையறாக்களால் மெல்ல அசைந்து வந்து கொண்டிருந்தது. பெரும் சத்தத்தில் பெருநரி கூண்டுக்குள் குதிகாலம்போட்டு, எட்டி நடை நடந்து, கம்பிகளில் மோதி காயம் பட்டுக் கொண்டது. எதன் மீதும் பற்றற்றவனாய், ஆனால் கண்கள் எதற்கோ ஏங்குபவை போலக் கூண்டுக்கு வெளியே நின்ற பச்சை இருளனின் முழு உருவம், பெருநரியைப் பயமுறுத்தி உடனேயே கூண்டுக்குள்ளேயே படுக்க வைத்தது.
தெருத்தெருவாய் சகடை வண்டி இழுபட, பேச்சற்று நின்று கொண்டிருந்தான். மண்ணில் ஊனப்பட்ட விதைகளின் பாதி முளைப்பாய், மர ஜன்னல்களில் பாதிப்பாதி கண்கள் முளைத்தும், மறைந்தும் அவனுக்குப் போக்குக் காட்டிக் கொண்டிருந்தன. அந்த ஊர் சுற்றலின் அவமானம் அவனுக்கு இல்லாமல் இருந்தது. சகடை வண்டி கூண்டில் அடைபட்ட நிமிடத்தில் அந்த வெளிச்சம் மட்டும் தென்படாமல் போயிருந்தால், இந்த கூண்டும், பெரு நரியும், இழுத்துக் கொண்டிருக்கிற கட்டைய இருளனின் வம்சமும் இன்னேரம் அற்றுப் போயிருந்திருக்கும்.
எதிர்பாராமல் தெருவில் எதிர்ப்பட்ட சில பெண்கள், திகிலடைந்து கையெடுத்துக் கும்பிட்டார்கள். மறைந்து பார்ப்பதில் தான் பெரும்பாலோர் ஆர்வப்பட்டனர். அவன் தெருக்களையும், அதன் பகல் நேரத்துத் தன்மைகளையும், வீட்டோடு ஒட்டியிருந்த படப்புகளையும் பார்த்தபடி பின்னால் திரும்பினான்.
எந்த வீட்டு ஆட்டுப் படப்பிலும் கைவிட்டு, மென்னி திருகி, கழுத்தில் தூக்கி போட்ட வெள்ளாட்டு கிடாய்களும், செட்டியார் வீடுகளில் ஓட்டைப் பிரித்து இறங்கி அற்றுக் கொண்டுபோன நகைகளும், ஜமீன் களஞ்சியத்தில் நுழைந்து வாரிக் கொண்டு வந்த தானியங்களும், எல்லாவற்றிக்கும் மேலாக கோட்டாங்கல் குன்றும் நினைவில் முட்டியது.
இரவின் எந்த நாழிகையிலும் அவன் வரவை எதிர்ப்பார்த்துக் காத்திருக்கும் கோட்டாங்கல் குன்று. அவன் பாத அசைவுகளில் மேலும் இறுகும் பாறை, அவன் வாரிக் கொண்டு வரும் எதையும் இழுத்து தன்னுள்ளே வைத்துக் கொண்டு, ஒன்றும் தெரியாமல் மூச்சுவிட்டுக் கொண்டிருக்கும். கோட்டாங்கல்லின் அடிப்பாறை சந்தில் எந்த இரவிலும் கண்ணில் நெருப்புருள ஒன்றிரண்டு பெரு நரிகள் படுத்திருக்கும். அதுதான் இவனுக்குக் காவல். இதுவரை எந்த சீவனையும் கோட்டாங்கல் குன்றை எட்டிக்கூடப் பார்க்கவிடாமல் வைத்திருந்தது. ஊர் எப்போதும் கோட்டாங் கல்லையும், அதன் உள்ளே இருந்த பச்சை இருளனின் தனி ஜமீனையும், யாரும் நெருங்க முடியாத அதன் வலிமையையும் பேசியதாகவே எப்போதும் தூங்கும்.
இனி எப்படி கோட்டாங்கல் முகத்தில் முழிப்பேன் என்ற அவமானம் மட்டும்தான் இப்போது அவனிடம் இருந்தது. தன் பாதம் பட்டு உருகி தன்னையே இழுத்துக் கொள்ளுமா கோட்டாங்கல் பாறை? தன் தோல்வியின்மீது பாய்ந்து தன்னைக் குதறி எடுக்கப்போகும் பெருநரிகளுக்குப் பயந்தான். கோட்டாங்கல்லின் அடியில் தான் போட்டு வைத்திருக்கும் நகைகள், தானியங்கள், கிடாய்கள் எல்லாவற்றையும் அந்த விநாடியே விட்டுவிட்டு ஜமீன்மாடியில் ஒளிர்ந்த அந்த வெளிச்சத்தில் அடைக்கலம் தேடினான்.
வெயில் ஏறிக் கொண்டிருந்தது. கட்டைய இருளன் சோர்ந்து போயிருந்தான். மாரியம்மன் கோவில் அரச மரத்தடியில் நின்றது சகடை வண்டி. கோயில் மேடையில் சப்பணம் போட்டு உட்கார்ந்து நீராகாரம் அருந்தினார்கள் கட்டையன் வகையறாக்கள்.
பச்சை இருளன் கைச்சைகைக் காட்டிக் கட்டையனை அழைத்தான். திறந்து விட்ட மடை மாதிரி ஓடி நின்றான் அவன்,
“யார் அவ? “
இதற்காகவே காத்திருந்தவன் போல, மாடுகள் தெறித்து விடப்பட்டிருக்கும் சகடை வண்டியின் நுகத்தடியின் மேல் ஏறி நின்று முதன் முதலில் பச்சை இருளனின் முகம் பார்த்து சொன்னான் கட்டைய இருளன்.
“தொரையின் ஒரே தங்கச்சி.”
ஒளிரும் அந்த மரகத வெளிச்சம் மீறி, பெரும் துக்கம் சூழ, அவள் அழகில் தினம் தினம் அவளே இறுக, துருவேறிய காலம் உதிர, ஒரு ஆணின் தீண்டலுக்கான பல நீண்ட வருடங்களின் காத்திருத்தல் அது.
தெருத்தெருவாய் சகடை வண்டி உருண்டதையோ, பெரும் சோர்வோடு மாடுகள் ஜமீன் குன்றில் ஏறியதையோ, மீண்டும் மகுட மரத்தின் அடியிலேயே சகடை வண்டியிலிருந்து இறக்கப்பட்ட கூண்டுகளில் ஒன்றில் தான் அடைபட்டு நிற்பதையோ, அவன் மறந்திருந்தான். நேர் எதிரே சாத்தப்பட்டிருந்த ஜன்னலை மீறி வெளியே பரவியிருந்த வெளிச்சத்தில் மயங்கி இருந்தான்.
இரண்டாம் ஜாமம் முடிந்த அடுத்த நிமிஷம், எட்டி எதிர் கூண்டு பெருநரியின் வாயைப் பிடித்திழுத்து அதில் திக்கு முக்காடி, மல்லுக்கட்டி, நிற்க இடம் கொடுக்காமல் அதன் நாற்றமடித்த பற்களைக் கம்பிகளில் தேய்த்துத்தேய்த்து ரத்தக்களறியாக்கி, மூன்றாம் சாமத்தில் அவனும் பெருநரியும் வெளியேறினார்கள். அந்தப் பின்னிரவில் திடுக்கிட்டெழுந்த அனுக்கமலை தச்சன் உத்திரத்தில் தொங்கினான்.
திரும்பிப் பார்க்கவும் திராணியற்று, பாறைகளின் இடைவெளியில் மறைந்தது பற்களிழந்த, வாய்கிழிந்த பெருநரி.
நிரம்பி இருந்த சிங்காரக்குளப் படிக்கட்டுகளில் இறங்கினான். நாள் முழுவதும் வழிந்திருந்த வியர்வை நாற்றம் போக முகம் கழுவினான். எழுந்து திரும்பும்போது பலாக்காய்கள் முகத்தில் மோத, கோட்டாங்கல்லுக்கு எதிர் திசை நோக்கி, வடக்குக் கரையில் பெரும் நடை நடந்தான் மரகதலிங்கத்தின் பெருஒளி ஒன்று தன்னைப் பின்தொடர்வதை அறியாதவனாக.
நிரம்பலில் ததும்பிய ஏரியில் இறங்கி நடந்தான். எதிரில் பெரும் மைதானத்தில் அங்கங்கே நின்றிருந்த பாறைக் குன்றுகளுக்கும் அவன் பாதங்களின் அசைவுகள் தெரிந்திருந்தது. விஷத்தைக் கொடுக்குகளின் முனையில் தேக்கியிருந்த மொணப்பா ஏரியில் தேளி மீன்கள் கால்களில்பட உதறிவிட்டு நடந்தான். ஒரு தேளியும் அவன் உடம்பில் ஒரு சிறு கீறல்போட தைரியமற்று இருந்தது.
இடையனுக்கும், பச்சை இருளனுக்கும் நடுவில் நிறைந்திருந்த ஆடுகள் அசைவற்று நிற்க, பேரழகோடு நகர்ந்த அந்த பச்சைவெளிச்சம் பாறைகளால் இறுகியிருந்த குன்றுக்குள் நுழைந்து திரும்பி பச்சை இருளனை மட்டும் கைநீட்டி அழைத்தது.
இடையனும் ஆடுகளும் நின்ற இடங்களிலேயே கற்களாய் சமைந்து நிரந்தர சாட்சிகளாகிப் போனார்கள். யாரும் எட்டிப் பார்க்க முடியாத இடங்களில், கோட்டாங்கல்லுக்கு அப்புறம், அந்த ஊரில் பொறையாத்தம்மன் குன்றும் சேர்ந்தது.