நான்கு கால் உலகம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: கிரைம்
கதைப்பதிவு: December 31, 2016
பார்வையிட்டோர்: 24,054 
 

திருவல்லிக்கேணி காவல் நிலையம்.

ஒரு மாதத்திற்கு முன்னர் நள்ளிரவில் சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானம் அருகே ஒரு பெரியவரை யாரோ மர்மநபர் ஒருவன் அரிவாளால் வெட்டி கொலைச் செய்துவிட்டான். அவனை பற்றிய முக்கிய தகவல் கிடைக்கப்பெற்ற போலீசார், சில தடயங்களை வைத்து மும்முரமான ஆலோசனையில் ஈடுப்பட்டிருந்தார்கள். காவல் நிலையம் அருகே நடைப்பெற்ற இந்த படுகொலையால் பலதரப்பட்ட கட்சிகளிடமிருந்தும் அரசிடமிருந்தும் மிகுந்த கண்டனத்தை பெற்றமையால் ஒருவிதமான நெருக்கடி மனநிலையோடு இருந்தார் இன்ஸ்பெக்டர். அந்த நேரம் பார்த்து சந்துரு காவல் நிலைய வாசலில் தனது பைக்கை நிறுத்தி, சைடு ஸ்டாண்ட் போட்டு ஒருவித பரபரப்பு மனநிலையுடன் காவல் நிலையத்திற்குள் நுழைந்தான்.

காவலர் ஒருவரிடம் சந்துரு ஒரு தமிழ் வணக்கம் வைத்து “கம்பளைண்ட் ஒன்னு பண்ணனும் சார். யாரை பார்க்கனும்? “

” ரைட்டர் இருக்காரு.. அவர்கிட்ட எழுதி கொடுக்கனும்.. கொஞ்ச நேரம் வெயிட் பண்ணுங்க . ஐயாவோட முக்கியமான டிஸ்கெஷன் பண்ணிட்டு இருக்காங்க ”

”ஓ.. சரி சரி பரவாயில்ல சார்.. இதோ இங்க நிற்கிறேன்”

வரவேற்பறை சுவற்றில் சாய்ந்து நின்றான். நேரம் கடந்தது. அரைமணி நேரமாகியிருக்கும். ஒரே இடத்தில் நின்றுகொண்டதால் சந்துருக்கு கால்வலி எடுத்தது.. திரும்பவும் காவலரிடம் சென்று “ அங்கிருக்கிற சேர் எடுத்து இங்க போட்டு உட்கார்ந்துக்கலாமா சார்? “ இன்ஸ்பெக்டர் பேசிக்கொண்டிருக்கும் அறை நுழைவாயிலருகே இருக்கும் நாற்காலியை கைகாட்டினான் சந்துரு.

“ அட..ஏன் தம்பி.. கொஞ்ச நேரம் நிக்க முடியாதா உங்களுக்கு ?. அங்க போயி சேர் எடுக்கப்போனா.. இன்ஸ்பெக்டர் என்னான்னு கேட்டு கோவபடனுமா? ஏற்கனவே ரொம்ப டென்ஷன்ல இருக்காரு.வெயிட் பண்ணுங்க.. இல்லைன்னா டீ கீ எதாவது குடிச்சிட்டு ஆறமர வாங்க.”

சிறிது நேரம் கழித்து. தலைமை காவலர் வெளியே வந்தார். அவரை பார்த்து சந்துரு, வணக்கம் சொல்ல, அவரின் கவனப் பார்வைக்கு உள்ளானான். “ சொல்லுங்க என்ன விஷயமா வந்து இருக்கிங்க.. என்னய்யா இவருகிட்ட என்ன கேஸூன்னு விசாரிச்சியா?” காவலர் வெங்கட்டை நோக்கினார்.

வெங்கட் பதில் சொல்வதற்கு முன் அவசரப்பட்டு பதில் சொல்ல ஆரம்பித்தான் சந்துரு.

“சார்.. என் கூட இருந்த பூஜா ஒரு மாசமா காணோம்.அது….. “

“ ஓ மிஸ்ஸிங் கேஸா.?. அந்த பொண்ணுக்கு வயசு என்ன ? “

” ஒரு வருஷமா என்கூடத்தான் இருந்துச்சி. அது பொண்ணு இல்ல சார். அது.. ஆண்.. பூஜாங்கிற… “

“ வயசு கேட்டா கூட இருந்துச்சின்னு சொல்ற..பொம்பள புள்ள பேர ஆம்பளைக்கு இருக்கு.. என்னய்யா லூசுதனமா இருக்கு.. போ.. உள்ள ரைட்டர் இருப்பாரு.. என்னான்னு புரியுறமாதிரி எழுதி கொடு..” தலைமை காவலர் ஏதோ அவசரத்தில் மேற்கொண்டு எதையும் கேட்கதயாராக இல்லை.

உள்ளே சென்றான்.. பெரிய அறை. அதில் வலது புறம் ஓரமாக இன்ஸ்பெக்டருக்கு என இருக்கும் ஓர் அறைக்கு அருகில் ..தெற்கு திசை பார்த்திருக்கும் மேஜைக்கு பின்னிருக்கும் நாற்காலியில் அமர்ந்திருந்தார் ரைட்டர் முருகன். சந்துருவுக்கு முன் வந்திருந்த ஒருவரிடம் புகார்களை கேட்டு எழுதி வாங்கிக்கொண்டிருந்தார்.

கொஞ்சம் பருமனான உடல்வாகுடன்.. ஜீன்ஸ் பேண்ட், காட்டன் ஒயிட் சர்ட், அழகாக தலைமுடி வாரியிருந்தாலும் சற்று களைந்த கேசத்துடன்,டிப் டாப்பாக இருக்கும் சந்துருவை ஏறெடுத்து பார்த்தார் முருகன்.

” ம்ம் சொல்லுங்க எங்கிருந்து வர்றீங்க? “

“ பிக் ஸ்டிரீட்ல இந்து ஸ்கூல் கிட்ட இருக்கிற அபார்ட்மெண்ட்ல வாடகைக்கு இருக்கேன் சார். “

” சரி.. உங்க பேரு என்ன ? என்ன பிரச்சினை? “

“ என் பேரு சந்துரு. பிரச்சினை என்னான்னா என் கூட இருந்த பூஜா ஒரு மாசமா வீட்டுக்கு வரல சார். பூஜான்னா…..”

“ பூஜா உங்களுக்கு யாரு.. என்ன வயசு…? “

“ பெஸ்ட் ப்ரெண்ட் சார்..வயசு சரியா தெரியல “

“ ஓ சரி.. நீங்க என்ன வேலயில இருக்கிங்க ? “

“ ரைட்டர் சார் “

“ ஓ ரைட்டரா நீங்க ?.. எந்த ஸ்டேசன்ல சார்.?.என்ன ஊர் நீங்க ? “

“ அய்யோ சார் நான் அந்த ரைட்டர் இல்ல . நான் ரைட்டர்.. எழுத்தாளர். கதை கவிதைலாம் எழுதுவேன்..”

“ ஓ அப்படியா ? உங்க பேர நான் கேள்விப்பட்டது இல்லயே.. எத்தன புக்ஸ் எழுதி இருக்கீங்க? “

“ புக்லாம் இன்னும் பப்ளிஷ் ஆகல சார். இப்போதைக்கு பேஸ்புக்ல ஒரு பேஜ் கிரியேட் செய்து எழுதிட்டு இருக்கேன். “

“ அடங்கப்பா.. ஏன் பாஸ்.. பேஸ்புக்ல எழுதுறவன்லாம் எழுத்தாளருன்னு சொல்ல ஆரம்பிச்சிட்டிங்களா. உங்கள மாதிரியான ஆளுங்கனால தான் எங்களுக்கு ரொம்ப ப்ரெஷர் ஆகுது. எல்லாமே தெரிஞ்ச மாதிரி ஆ.ஊன்னா எதையாவது எழுதி கிளப்பி விடுற குரூப்ப சேர்ந்தவரா நீங்க?.இப்போலாம் பத்திரிக்கைகாரங்கள விட . உங்கள மாதிரி சோசியல் மீடியா போராளிங்க தான் எங்களுக்கு தலவலியே..! “

“ இல்ல இல்ல தப்பா புரிஞ்சி இருக்கிங்க. சமூகத்தை , சமூக கோபங்களை, சமுதாய சீரழிவுகளை அக்கறையோடு எழுத தெரிஞ்ச எல்லாரும் எழுத்தாளர்கள் தான் சார். வார இதழ்கள்ல என் கதையெல்லாம் வந்திருக்கு .”

” சரி தொலையுது..மேட்டருக்கு வாங்க .. பூஜா எப்படியிருப்பாங்க.? அங்க அடையாளம் . கடைசியா பார்க்கும் போது என்ன கலர் டிரஸ் போட்டிருந்தாங்க எல்லாத்தையும் இந்த பேப்பர்ல எழுதி கொடுங்க”

“ அய்ய சார்.. பூஜா டிரஸ்லாம் போடாது. “

“ என்னபா சொல்றீங்க. டிரஸ் போடாதா……..!!! “

“ஆமா சார்… பூஜா…பூனை சார். நான் பூனையை பூஜான்னு தான் கூப்பிடுவேன்.”

“ ஏம்பா தம்பி.. நல்லாதானே இருக்க நீ ? ஒடம்புக்கு ஒன்னும் இல்லியே. முதல்லயே பூனை காணாம போச்சின்னு சொல்றதுக்கு என்ன.. பூனை நாய் பன்னி கழுதைலாம் கண்டுபிடிக்க நாங்க என்ன இங்க வெட்டியா ம..ர புடுங்கிட்டு இருக்கோமுன்னு நினைச்சியா ? ” முருகன் ரைட்டர் கோபமடைய ஆரம்பித்தார்.

சந்துருவும் பதிலுக்கு எரிச்சலை காண்பிக்க ஆரம்பித்தான். “ சார்.. ஆரம்பத்திலிருந்தே நான் பூஜா பூனைன்னு சொல்ல வரதுக்குள்ள நீங்க அடுத்தடுத்த கேள்விக்கு தாவுறீங்க. நீங்க விசாரணை பண்றது சரியில்ல சார். இவ்வளவு நேரம் நிக்கிறேன். என்னை உக்கார்ந்து பேச கூட நீங்க சொல்லாம.. பேஸ்புக் போராளி , தலவலி அதுஇதுன்னு என்னை நக்கல் அடிச்சிட்டு இருக்கிங்க.என்ன சார் நா ஒன்னும் தெரியாத வெறும்பயன்னு நினைச்சிங்களா.?. ஐ யம் எ ரைட்டர்.எழுத்தாளர். எல்லா விசயமும் எனக்கு தெரியும்.

சந்துரு சத்தம் போட்டு பேசியதால் இன்ஸ்பெக்டர் தயாளன் “ என்ன சத்தம் அங்க. யாரு சார் நீங்க ? இங்க வாங்க? “

இன்ஸ்பெக்டர் மேஜையருகே சென்றான் சந்துரு.” சார் என் பேரு சந்துரு. பிக் ஸ்ட்ரீட்ல இருக்கேன். பேச்சிலர். ரைட்டர். என் கூட இருந்த பூஜாங்கிற பூனை காணல சார். அத பத்தி கம்பளைண்ட் பண்ண வந்தேன். ஆனா.. அதெல்லாம் கண்டுபிடிக்க முடியாதுன்னு சொல்றார் ரைட்டர். “

“ ம்ம்ம் மிஸ்டர் சந்துரு.. முதல்ல உக்காருங்க. பதட்ட படாதீங்க. நான் சொல்றது கேளுங்க. வீட்டு வளர்ப்பு பிராணிகளைலாம் கண்டுப்பிடிக்க எங்களுக்கு நேரமில்ல.மனுஷங்க காணாம போனாலே சிரமப்பட்டுதான் கண்டுபிடிக்க வேண்டியதா இருக்கு. ஒன்னு செய்றீங்களா ? “

“ சொல்லுங்க சார்.”

“ பேப்பர்ல உங்க பூஜாவோட போட்டோ போட்டு.. கண்டுபிடிச்சி தரவங்களுக்கு சன்மானம் தருவதா விளம்பரம் கொடுங்க. கிடைக்க சான்ஸ் இருக்கு. பூனைனா காணாம போகும் .. திரும்ப வரும்.. எதுக்கும் கொஞ்ச நாள் வெயிட் பண்ணி பாருங்க. போலீஸ்காரங்க பூனையை தேடி அலைஞ்சா நல்லாவா சார் இருக்கும் ? . சரியா..? “

“ சரிங்க சார். ஆனா.. “

“ ப்ப்ப்ச் மிஸ்டர் சந்துரு… உங்களுக்கே தெரியும்.. சிட்டியில நடந்த மர்டர் கேஸ்ல தீவிரமா இருக்கோம். சோ, இந்த மாதிரிலாம் யூஸ்லெஸ் கேஸ் கொண்டுவந்து நீங்க எங்களுக்கு டிஸ்டர்ப் பண்ணாம, ஹெல்ப் செய்றீங்களா.. ? “

“ என்ன சார் யூஸ்லெஸ்.. நாயும் பூனை மாதிரி ஒரு செல்ல பிராணிதான். அந்த நாய் தான் உங்களுக்கு பல கேஸ்ல உதவி செய்யுது. யூஸ்லெஸ்ன்னு சொல்லி போலீஸ் நாய் இல்லாம ஒரு கிரிமினலையாவது கண்டுபிடிங்க பார்க்கலாம். யூஸ்லெஸ் கேஸ்ன்னு நீங்க எப்படி சொல்ல முடியும் ? விலங்கு நலவாரியச் சட்டத்தின் படி.. உங்ககிட்ட நான் புகார் கொடுக்க முடியும் தானே. என் பூஜா ஒரு மாசமா காணாம போயிருக்கு. அதுக்கு என்ன ஆச்சின்னு தெரியல. சிக்கன் லெக்பீஸ்ன்னு சொல்லி காக்கா லெக் பீஸ் சமைச்சி கொடுக்கும் ஹோட்டல்காரங்க என் பூஜாவை திருடியிருந்தா..??!! அய்யோ ! நினைக்கவே முடியல.ஆமா சார்.. மிருகவதை தடுப்புச் சட்டமுன்னு ஒன்னு இருக்கே. அதுபடி நான் புகார் கொடுக்கிறேன். அது என்ன பிரிவு. என்ன பாகமுன்னு நீங்க தான் கேஸ் பைல் பண்ணனும். பண்ணுங்க சார். என் பூஜா யாராவது திருடிட்டு போயிட்டாங்களோன்னு டவுட்டா இருக்கு. கண்டுப்பிடிச்சுதான் ஆகணும். மனுஷங்கள விட மிருகங்கள் ரொம்ப அன்பானது சார். என் அன்பான உறவு காணாம போயிருக்கு. கண்டுப்பிடிச்சு தாங்க. ப்ளீஸ்..ப்ளீஸ்… நீங்க என் புகாரை ஏத்துக்கலைன்னா ………………….. ! “

“ ஹலோ மிஸ்டர் சந்துரு. நிறுத்துறீங்களா…? என் கிட்ட ரூல்ஸ் பேசாதீங்க. ரூல்ஸ் படி போனா.. முதல்ல உங்களதான் சந்தேக கேஸ்ல பிடிச்சி உள்ள போடணும். பூனையை நீங்க கொன்னுட்டிங்கன்னு அதே அனிமல் வெல்பேர் ஆக்ட்படி நடவடிக்கை எடுத்திடுவேன். மைண்ட் இட்..! முதல்ல பூனை வளர்க்க நீங்க லைசென்ஸ் வாங்கி இருக்கிங்களா? ரொம்ப பேசாம அமைதியா போனா உங்களுக்கு நல்லது. சொல்லிட்டேன் “

“ காட்டு விலங்குகள் வளர்க்கதான் தான் லைசென்ஸ் இருக்கு. நாய்,பூனை, கோழி, ஆடுக்குலாம் இருக்கான்னு தெரியல இருந்தாலும் நம்ம நாட்டுல அது கட்டாயமில்ல. ம்ம்ம் மனிதர்கள் பற்றி புகார் கொடுக்க வந்தாலே அலட்சியமா இருப்பிங்க. இல்லன்னா இலஞ்சம் கேட்பீங்க. கேவலம் பூனைக்கா கருணை காட்டுவீங்க. நம்பி வந்தேன்பாருங்க ..என்னை எதலாயும் அடிக்கலாம். “

அதிகாரமிக்கவர்களிடம் எப்போதுமே மனிதர்கள் மீதே பரிதாபமும் அனுதாபமும் கருணையும் இருக்காது எனும் போது செல்லப் பிராணி காணாமல் போனதற்கா அக்கறை காட்டுவார்கள்.

பூஜாவின் பிரிவில் சந்துரு மிகுந்த மனமுடைந்தே போனான்.பூஜா இல்லாத தன் வீட்டுக்கு செல்ல விரும்பாமல் மெரீனா கடற்கரையிடம் ஆறுதல் வாங்கச் சென்றான்.

கடலலையை தொட்டுப்பிடித்து துள்ளி துள்ளி விளையாடும் ஒரு குட்டி பாப்பா.. பூஜாவின் விளையாட்டுதனத்தை நினைவூட்டியது. மனம் வாட்டியது. பூஜா பற்றிய நினைவலைகளில் மிதக்க ஆரம்பித்தான் சந்துரு.

பூஜாபூனை… கருப்பு சாம்பல் வெள்ளை நிறங்கள் கலந்த கலவையிலிருக்கும் அழகு குட்டிச்செல்லமாக அன்றொரு நாள் கைவிடப்பட்ட சென்னை சென்ட்ரல் ஜெயிலிருந்து வழிதவறி திருவல்லிக்கேணி பெரிய தெருவிலுள்ள இந்து பள்ளிக்கூடத்திற்கு அருகேயுள்ள அடுக்குமாடி குடியிருப்புக்குள் புகுந்தது. அது புகுந்த நேரம் சில எலிகள் உணவாக கிடைக்க, அங்கேயே நிரந்தரமாக தங்க ஆரம்பித்தது. ஆனால் அது தொடர்ந்து வேட்டையாடி பசியாற விடவில்லை அடுக்குமாடி வாசிகளின் உயர்ரக நாய்கள். பூனையை கண்டாலே குரைப்பதும்,துரத்துவமாய் இருந்தன. நாய்களால் எலி கிடைப்பது பெரும் சிரமாக போனாலும் அந்த இடத்தை விட்டு வேறிடத்திற்கு செல்ல அதற்கு இஷ்டமில்லை. கீழ்தளத்தில் இருந்தால்தானே நாய்கள் துரத்துமென.. ஐந்தாவது தளத்திலிருக்கும் சந்துரு வசிக்கும் அறைக்குள் புகுந்து தன்னை பாதுகாத்துக் கொள்வது வழக்கமாக்கிக் கொண்டது.

சந்துரு..! தனிமைவாதி. திருமணம் செய்துக்கொள்ள விரும்பமால்..செய்துக்கொள்ள முடியாத வெறுப்பினால் பேச்சிலாராகவே வாழ்ந்துக் கொண்டிருக்கும் ஓர் அறிமுக நிலை எழுத்தாளன்.அவனுக்கென இருந்த தொழில் நஷ்டமடைந்துவிட்டதாலும் மேற்கொண்டு எதையும் செய்ய இஷ்டமில்லாமல், பொருளாதாரத்திற்காக மாதம் சில நாட்கள் வீட்டிலிருந்தே மென் பொருள் நிறுவனத்திற்கு பணியாற்றுவான். என்றாலும் எழுத்து அவனுக்கு முக்கிய தொழிலாக வாய்க்கப்பெற்றது. சினிமாவில் கதாசிரியர், வசனகர்த்தா ஆகவேண்டுமென்பது அவனது அடிமன தாகம். எழுத்து தொழில் பெருமளவு வருமானத்தை கொடுக்காவிட்டாலும் திருப்தியை கொடுத்தது. சமூக கோபங்களை, பங்களிப்பை செய்யக்கூடிய ஒரு துறையாக இலக்கியம் இருக்குமென நம்பிக்கை .

மிகுந்த பசியோடிருந்த பூனை சந்துருவின் சமையலைறையில் ஒருநாள் பால் குக்கரை கவிழ்த்து குடித்துவிட்டது. சத்தம் கேட்டு போய் பார்த்த சந்துருவுக்கு ஏனோ பூஜா மீது கோபம் வரவே இல்லை பூனையின் அழகில் மயங்கி விட்டானோ என்னவோ ? சந்துருவின் கருணைப் பார்வையை புரிந்துக்கொண்டதாக . பூனைக்குட்டியும் தன் சாம்பல்விழிகளை ஸ்லோமோஷினில் இமை சிறகடித்து பார்க்க, பார்வையிலிருந்த பூனை பாஷையை புரிந்துக்கொண்டவன் போல, பூனை பாசத்திற்கு ஏங்குகிறதோ என நினைத்துக்கொண்டான். ஒரு மனிதனை தனக்கு பாதுகாவலனாக நினைத்தால் விழிகளில் மிக மிக மெதுவாக இமைத்துடித்து பாசத்தை அன்பை உணர்த்தும் பூனைகள்.

“ ஹேய்.. குட்டி..! யாரு நீங்க. எங்கிருந்து வந்தீங்க ? “ பூனையின் பஞ்சு ரோமங்களை தடவிக்கொடுத்தான்.அது மெலிதாக “ மியாவ்” என குரல் எழுப்பியது.

“ரொம்ப குட்டியா இருக்கிங்களே. உங்க அம்மா உன்னை அனாதையா விட்டுட்டாங்களா ? “

“மியாவ் “ பரிதாபமாய் மியாவ் சத்தமிட,

அந்த பூனையை வாரி தன் நெஞ்சில் அணைத்துக்கொண்டான்.

“உங்களுக்கு பேரு வைக்கலாமா? ” பூனை வாலை ஆட்டியது.

” உனக்கு பேரு…கிட்டி ? புசிகேட்..? “ வேண்டாம் என்பது போல அவனது விரலை மெலிதாக கடித்தது.

” வேண்டாமா. பில் கிளிண்டன் பூனையோட பேரு சாக்ஸ் ? சாக்ஸ்.. ஒகேவா? “ மியாவ் என சத்தமிட்டது.

“ ஓ.வேண்டாமா.. பூனை உனக்கு….. பூஜான்னு பேரு வைக்கலாமா? “வாலை ஆட்டி மகிழ்ச்சி தெரிவிக்க.. அன்றிலிருந்து பூஜா சந்துருவின் பெஸ்ட் ஃப்ரெண்ட் என்றானாது. அது செய்யும் குட்டி குட்டி குறும்புகள் எல்லாம அவனது இரசனையானது. கதை எதாவது லேப்டாப்பில் டைப் செய்துக்கொண்டிருந்தால், பூஜா மிக சரியாக எண்டர் பொத்தானை அமுக்கி அமுக்கி விளையாடும்.

“ டார்லிங் வேண்டாம். உன் ஃப்ரெண்ட் நான் பெரிய ஆளு ஆகணுமா வேண்டாமா “ பொய்யாக கோபமிடுவான்.

கோபத்தை புரிந்துக்கொண்டு, அவனது காலை உரசி உரசி ராசியாக்க முயற்சிக்கும் பூஜா.

” இங்கு பாரு பூஜா குட்டி.. பக்கத்துவீட்டு ஆண்டி வீட்டுக்கலாம் போககூடாது. உன்னை பார்த்தா அவங்க மூஞ்சிசுளிக்கிறாங்க. அபார்ட்மெண்ட் மனுஷங்க சக மனுஷங்கிட்டயே முகம் கொடுத்து பேசமாட்டாங்க. நம்ம கூடலாம் பேசுவாங்களான்னு நீ யோசிக்கனும். சரியா.? பாரதி போல மீசை உனக்கு இல்லாட்டியும் உனக்கும் மீசை இருக்கு அதுனால நீயும் ரெளத்ரம் பழகு..! அப்புறம், காலையிலேயே கீழ எறங்கி குறுக்கும் நெடுக்குமா ஒடகூடாது. சகுனம் பாக்குற ஆளுங்க நிறைய இருப்பாங்க.பாவம் பொழிச்சி போகட்டுமுன்னு நாம விட்டுடலாம். ஒகே வா ..டீல் ? “ என சந்துரு உயர்த்திய கட்டை விரலை தன் மென் பாதங்களால் தொட்டு ஏற்றுக்கொண்டது.

கிட்டதட்ட 10,000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே மனிதர்கள் பூனையை வீட்டுப்பிராணியாக, செல்லப்பிராணியாக வளர்க்க ஆரம்பித்து.. சக குடும்ப உறுப்பினர்கள் போல பாவித்து வந்திருந்தனர். போப் xvi பெனிடிக் பூனையை தனது சகோதரன் போலவே வளர்த்துள்ளார் , வீட்டு விலங்குகளில் தன்னை எப்போதும் சுத்தமாக வைத்துக்கொள்ளும் இனம் பூனைகள் மட்டுமே. இவ்வளவு அற்புதமான பூனையினமான பூஜா வந்திலிருந்து சந்துருவின் வெறுமையுணர்வு மாறி புத்துணர்வுப் பெற்று மிளிர ஆரம்பித்தான். மகிழ்ச்சியின் சிறகுமுளைத்து அவனது வாழ்வு வானில் வசீகரப் பறவை பறக்க ஆரம்பித்த்து.

பூஜாவுக்கென தனி போர்வை, மெத்தையென அன்போடு கவனிக்கத் தொடங்கினான். காலநிலைக்கு ஏற்ப விசேஷமான உணவுகள், தினமும் இரண்டு லிட்டர் பசும் பால்.. தினமும் மீன்கள் அவ்வப்போது உயர் ரக இறால்கள் என ராஜ உபசரிப்பு தான் பூஜாவுக்கு. என்றாலும், வேட்டையாடி உணவு உண்ணும் அதன் குணத்திற்காக அவ்வப்போது இரவுவேளைகளில் கலங்கரை விளக்கம் வரை கூட சென்று எலிகளை வேட்டையாடும் . சில நாட்கள் அதற்கு செமத்தியான எலி விருந்து கிடைத்த்துண்டு. சில நாட்கள் எதுவும் கிடைக்காமல் ஏமாற்றத்துடன் வீடு திரும்பியதுண்டு விடியற்காலை சரியாக ஆறு மணிக்கு முன்பாக வீடு வந்துவிடும் பூஜாவின் முகத்தில் தான் முழிப்பான் சந்துரு. தனக்கென யாருமில்லாத போல தனிமையாய் உணர்ந்தவனுக்கு யாவுமாகமே மாறியது பூஜா.

அவ்வப்போது வெளியே செல்லும்போதெல்லாம் தனது பைக் பெட்ரோல் டேங்க் மேல் பூஜாவை அமரவைத்து அழைத்துச் செல்வதுண்டு . சில சமயம் அவனது தோளில் ஏறி அமர்ந்தவாறு பயணிக்கும். மெரீனா கடற்கரையில் அவனோடு ஜாக்கிங் செல்லும். இணைபிரியா ஜோடிகளாக சந்துருவும் பூஜாவும் வாழத்துவங்கிய போதுதான். பக்கத்து தெருவில் ஒரு பெண் பூனை வந்தது. மனிதர்களைப் போலவே பூனைக்கும் கலவிக் கொள்ளும் ஆசை இருக்குமல்லவா.

ஒருநாள், சந்துரு.. மிக மும்முரமாக எதையோ எழுதிக்கொண்டிருக்க, ஒரு குழந்தை அழக்குரல் போல ஒரு சத்தம் கேட்டது. திடுக்கிட்டு எழுந்து தனது படுக்கையறைக்கு சென்று பார்த்தால்.. பூஜாவை நோக்கி , ஜன்னலுக்கு வெளியே நிற்கும் பக்கத்து தெரு பெண் பூனை அழைத்தது. பூனையின் கலவிக்கான அழைப்புக்குரல் குழந்தையின் மெல்லிய அழக்குரலாக இருக்குமென அப்போதான் புரிந்துக்கொண்டான்.

“என்ன சார் உங்க ஆளா….? “ பூஜா அந்த காமமோகத்திலும் “ மியாவ் “வெட்க ஒலி எழுப்பி ஆமோதித்தது.

” சரி சரி நடத்துங்க நடத்துங்க “ சந்துரு சொன்ன மறுநொடியில் பூஜாவும் அந்த பெண்பூனையும் எங்கு சென்றதோ தெரியவில்லை. மறுநாள் காலையில்தான் வந்தது. சந்துரு அப்போது மெத்தையில் தூங்கிக்கொண்டிருக்க ஜன்னல் கம்பியின் சிறிய இடைவெளியில் உடலை சுருக்கி நெருக்கி உள் நுழைந்து அவனுக்கு அருகிலே படுத்துக்கொண்டது.

மிக நீண்ட நேரமாக சந்துரு எழுந்திருக்கவில்லை என்பதை உணர்ந்து.. அவனது முகத்தில் தனது நாவினால் தடவி தடவி பார்த்தது. ஆனால் சந்துருவிடம் எந்த ஒரு சலனமும் இல்லை. அவனது நெஞ்சிலேறி, சில நிமிடம் படுத்துப் பார்த்தது. அவன் இருதயம் துடிக்கிறதென உணர்ந்து சற்று மகிழ்ந்தாலும், அவன் எழுந்திருக்காமல் இருப்பது அதற்கு அச்சத்தை ஏற்படுத்தியது. அந்த படுக்கையறையில் இடமும் வலமும் மியாவ் மியாவ் என அபாயக்குரல் எழுப்பியவாறு கத்தியது. சந்துரு எழுந்திருக்கவே இல்லை. சந்துருவின் காலருகே அமர்ந்து அவனது கால் கட்டைவிரலை கடித்தும். சத்தமிட்டும் பார்த்தது. சந்துருவிடம் எந்த அசைவும் எற்படவில்லை. பூஜாவின் விழிகளில் கண்ணீர் சுரக்க ஆரம்பித்தப்போது….

“ ஹே… ஹே ஏப்ரல் பூல்.. ஏப்ரல் பூல்” தீடிரென எழுந்து சத்தமிட்ட சந்துருவின் குரல் கேட்டு… அவன் மீது பாய்ந்து தன் பற்களினால் மெலிதாக கடித்து தனது ஏமாற்றத்தின் கோபத்தை தீர்த்துக்கொண்டது பூஜா

பூஜா ஒரு செல்லப்பிராணி என்பதும் சந்துரு ஒரு மனிதயினம் என்பதும் இங்கு ஒன்றாகிப்போனது. அன்பு என்று ஒன்று உண்டானால் உயிர்கள் யாவுமே நமது தோழர்களே அல்லவா ?

பூஜாவின் ஜோடிப்பூனையான பக்கத்து தெரு பூனைக்கும் பெயர் வைத்தாகிவிட்டது. தில்ரூபா..!

சில நேரங்களில் மனிதர்களை போலதான் விலங்கினமும். பெண் மீதான போதையில் பெரிய சண்டைகள் நிகழ்த்திக்கொள்ளும். ஆசைப்படுவது கிடைக்காவிட்டால் கொலை செய்யவும் தயங்காது விலங்குகள்.. மனிதர்களை போலவே.

தில்ரூபாவுடன் பூஜா உறவாடுவது மற்றொரு தெரு பூனைக்கு பொறாமை உண்டாக்கிவிட்டது. என்றாவது ஒரு நாள் பூஜா தெருவிற்கு வரும்போது பிடித்து கடித்து சண்டையிட வேண்டுமென கொலைவெறியில் சுற்றிக்கொண்டிருந்தது.

அவ்வாறே ஒரு நாள் மாட்டிக்கொண்டது பூஜா.அந்த தெரு பூனையோ உருவத்தில் பெரியது. பூஜாவோ சின்ன உருவம். மாட்டிக்கொண்டாலும் புலியின் உறுமல் சத்தமிட்டு வீரத்தோடு வென்றது. ஆனால், பூஜாவின் தேகத்தில் படுகாயங்கள்.

படுகாயத்தோடு அமைதியாக வந்து கட்டிலுக்கு கிழே அசந்து உறங்கியது. நண்பர் ஒருவரை சந்தித்து விட்ட வீடு திரும்பிய சந்துரு.. “என்னாச்சி பூஜாக்கு ?… எப்போதும் நான் வந்தா காலைச் சுற்றி சுற்றி உரசுமே .இன்னிக்கு சத்தமே இல்ல. பூஜா.. பூஜா…பூஜ்..பூஜ்….” செல்லமாக பூஜ் எனவும் அழைப்பான் சந்துரு.

”பூஜா டார்லிங்.கோழிகால்.. மீன்வறுவலாம் வாங்கி வந்திருக்கேன்.. வாவா.. உனக்கு செம விருந்து இன்னிக்கு.. “ பூஜா அடிவாங்கிய வலியில் அசந்து தூங்கிவிட்டது. சந்துருவின் குரல் அதன் செவியில் எட்டவில்லை. பொதுவாக மனிதனை விட பூனைகள் சிறந்த கேட்கும் திறனைக் கொண்டுள்ளதுடன் அவற்றால் பரந்த அளவிலான மீடிறன் கொண்ட ஒலிகளையும் கேட்க முடியும். இவற்றால் மனிதன், நாய் என்பவற்றை விட உயர் சுருதியினாலான ஒலிகளைத் தெளிவாகக் கேட்க முடியும்.ஆனால் இன்று பூஜாவினால் சந்துருவின் குரலை உள்வாங்க முடியா அளவிற்கு அசந்திருந்தது.

ஓவ்வொரு அறையாக தேடிய சந்துரு.. கட்டிலுக்கு அடியில் இரத்தம் சொட்ட சொட்ட பூஜா தூங்கிக்கொண்டிருப்பது பார்த்தவனுக்கு தூக்கிவாரி போட்டது. “ ஐய்யோ குட்டிம்மா என்னடா ஆச்சு.. பூஜாகுட்டி.. பூஜ்… என் பூஜ்க்கு என்னாச்சி.என்னடா ஆச்சு.. உடம்பு பூரா ரத்தம் ” கையிலேந்தி அழ ஆரம்பித்தான். பிராணிகளுக்கு என்ன மாதிரியான சிகிச்சை அளிக்க வேண்டுமென தெரியாவிட்டாலும் ஒரு பஞ்சை எடுத்து பூஜாவின் மேனியிலிருந்த இரத்தங்களை துடைத்தெடுத்து.. தேங்காய் எண்ணெயோடு சிறிது மஞ்சள் கலந்து காயத்திற்கு மருந்தாக தடவியப்போது, மஞ்சளால் உண்டான எரிச்சலில் பூஜா மெலிதாக “ மியாவ் “ என பரிதாபமாக ஏதோ பேசியது. “ பூஜா டார்லிங் என்னடா.. என்ன ஆச்சி ? “ ”மியாயாயாவ் ”என நீண்ட ஒலியில் என அழகை போல சத்தமிட்டு அதன் பாஷையில் சொல்லிக்கொண்டிருந்தது.

ஆபத்திலிருந்து மீண்டிருக்கிறது. பலத்த சக்தியை இழந்து இருக்கிறது பூஜா என உணர்ந்தவன், சமையலறையில் பால் எடுத்து கின்னத்தில் ஊற்றி பூஜாவின் வாயில் ஸ்பூன் மூலம் கொஞ்சம் கொஞ்சமாக ஊட்டிவிட்டான் அதன் பிறகுதான் பூஜா இயல்பான ஆரோக்கியத்திற்கு திரும்பியது .இதன் பிறகு, மிக உஷாராக கால்நடை மருத்துவரிடம் கேட்டறிந்து தேவையான மருந்துகளும் வாங்கி வைத்துக்கொண்டான் சந்துரு.

பூனையினம் தனது வளர்ப்பாளரிடம் மிகுந்த நெருக்கமான பாசத்தை எதிர்பார்க்கும். பாசத்தை கொடுக்கும். மனித மொழி தெரியாவிட்டாலும் புரியக்கூடிய தன்மை உடையது பூனையினம். சந்துருவின் கருணையுள்ளத்தால் பூஜா என்றுமே அவனை விட்டு பிரியப்போவதில்லை என்றே உறுதியான ஒரு நாளில்…. எப்போதும் போல இரவு எலி மாமிச வேட்டைக்கு சென்றததுதான் திரும்பவே இல்லை.

சந்துரு ஓரிரு நாட்கள் பொறுத்து பார்த்தான். தில்ரூபாவுடன் உல்லாசம் சென்றிருக்குமென மூடத்தனமாக நம்பிக்கொண்டிருக்க.. தில்ரூபாவும் பூஜாவை தேடி சந்துரு வீட்டிற்கு வந்து தேடியது.

“ தில்ரூபா கூடயும் போகல. அப்போ நம்ம பூஜா…? “ சந்துருவுக்கு பயம் அதிகரித்துப் போனது. தெரு பூனை எதாவது சண்டைப்போட்டு காயப்படுத்தி இருக்குமோ?. இல்ல, நாய் எதாவது துரத்தி எங்கயாவது ஓடியிருக்குமா.. வழி தெரியாமா எங்கயாவது அலையுதா என் டார்லிங்? “

அடுக்குமாடி குடியிருப்புக்கு பாதுகாவலாராக இருக்கும் பெரியவரிடம்”ஐயா என் பூனை பூஜா பத்து நாளா காணல. நாயிங்க கிட்ட மாட்டியிருக்குமோன்னு சந்தேகமா இருக்கு? எங்கயாவது பார்த்தா சொல்லுங்கய்யா “

“ அட்டா தம்பி.. நாய்கிட்டலாம் பூனைங்க லேசுல மாட்டாது பா. பூனை வளர்க்கிற ஒனக்கு தெரியாதா என்ன ? பூனைங்க அப்போ அப்போ காணாம போகும். ஆனா திரும்ப வந்திடும் . கவலைவிடுங்க.”பாதுகாவலரின் சொற்களில் ஆறுதல் அடைந்தாலும் .. மனம் ஏற்றுக்கொள்ள முடியாமல் தவியாய் தவித்தான். ஒரு மாதமாகியும் பூஜா திரும்ப வராத போதுதான்.. எதற்கும் புகார் கொடுக்கலாமென காவல் நிலையத்திற்கு சென்றிருந்தான்.

மெரீனாவில் சற்றுநேரம் ஆறுதலை தேடிக்கொண்டு.. மீண்டும் தனது அடுக்குமாடி இல்லத்திற்கு திரும்பியப்போது சேப்பாக்கம் இரயில் நிலைய பாலத்திற்கு அடியில் ஒடிக்கொண்டிருக்கும் சாக்கடையருகே அங்குவாழும் குடிசைவாசிகள் மூக்கைப் பொத்தியவாறு கூடியிருந்தனர். கூட்டத்தின் சலசலப்பு புலம்பல்களை கவனித்த சந்துரு சாக்கடையருகே சென்று என்ன விசயம் என்று கேட்க அங்கிருந்த ஒருவர் “ கருப்பு கலர்ல இருக்குப்பாருங்க லெதர் பேக்..அது சாக்கடையில கிடந்திருக்கு. எப்போதும் போல் இல்லாம நாத்தமடிக்குதுன்னு கார்ப்பரேஷன்ல சொல்லிட்டு இருந்தோம். இப்பதான் வந்து எடுத்தாங்க. .ரொம்ப நாளா ஊறி போயிருக்கும் போல, பொண நாத்தமடிக்குது. சந்தேகப்பட்டு… போலீஸ்க்கும் சொல்லியிருக்கோம்.. வந்துட்டு இருக்காங்க.”

சந்துருவுக்கு ஒருவிதமான சந்தேகத்தில் “ பேக்குள்ள பூஜாவாக இருக்குமோ ? “ என பயத்தில் நடுக்கம் ஏற்பட்டுவிட்டது. சாக்கடைக்கு அருகிலிருந்த லெதர் கருப்பு பேக்குக்கு அருகே சென்று எடுக்க முயன்றப்போது இன்ஸ்பெக்டர் தயாளன் அவசரமாக அவனை தடுத்தார். ”அத தொடாதீங்க. நாங்க பார்க்கிறோம்.. அந்த பக்கமா ஒரமா போங்க சார் .”

தடவியியல் நிபுணர்கள் அந்த கருப்பு லெதர் பேக்கை திறக்க.திறக்க. சந்துருவின் இருதயம் நொடிக்கு நூறு முறை துடிக்க ஆரம்பித்தது.

லெதர் பேக்கிற்கு உள்ளே புகைப்படத்துடன் ஒரு வங்கி கணக்கு புத்தகத்தை முதலில் எடுத்தார் தடவியியல் நிபுணர். இன்ஸ்பெக்டர் அதை பரிசோதித்து…”…இது போன மாசம் கொலை செய்யப்பட்ட அந்த பெரியவரோட பாஸ் புக்… … இன்னும் உள்ள என்ன என்ன இருக்கு பாருங்க ? “

“சார்………… ப்பூ..ப்பூ பூனை ஒன்னு செத்துகிடக்கு அதான் நாத்தமடிக்குது ?”

“என்னது பூனையா “ இன்ஸ்பெக்டர் ஷாக் ஆகிறார்.

“என்னது பூ…பூ….பூனையா ? “ சந்துரு ஷாக் ஆகிறான். கண்ணீர் முட்டிமோதி வெளியேறியது. கூட்டத்தை முட்டிமோதி எட்டி பார்த்து..

” அய்யோ.. இன்ஸ்பெக்டர்..இதுதான் ..இது..இதுதான் என் பூஜா. காணாம போனதா சொன்னேன்ல இந்த என் செல்லம் தான் சார்…. இதுல எப்படி.. பேக்ல எப்படி….பூனைதானே கேவலமே பேசினிங்களே சார். இப்ப பாருங்க.. என் உயிர் போயிடுச்சி..” சந்துரு இதயமுடைந்து குரல் உடைந்து அழ ஆரம்பிக்க..இன்ஸ்பெக்டர் தயாளன்

“ மிஸ்டர் சந்துரு…. கூல்…கூல்.. என்னான்னு விசாரிப்போம்…. இருங்க .. இருங்க…. “

சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானம் அருகே பெரியவர் குமரேசன் ஒரு மாதத்திற்கு முன்பு நள்ளிரவில் காரில் வந்துக்கொண்டிருக்கும் போது பூஜா பூனை அங்கு உலாவிக்கொண்டிருந்தது. தன் செல்ல மகள் கேட்ட கருப்பு வெள்ளை பூனையாகவே பூஜாவும் இருப்பதால் அதை பிடித்து பணக்கட்டுகள் இருக்கும் கருப்பு லெதர் பேக்கில் வைத்து பூட்டியிருக்கிறார். அப்போது அவரை பின் தொடர்ந்து வந்த மர்ம் ஆசாமி ஒருவர்… லெதர் பேக்கை களவாட முயல.. குமரேசன் செய்தவறியாது ஓடி.. பாலத்தின் அருகே ஓடும் சாக்கடையில் பேக்கை தூக்கி வீசியிருக்கிறார். பேக் வீசப்பட்டதை அறியாத அந்த மர்ம நபர் கோபத்தில் அவரை வெட்டி சாய்த்திருக்கிறான். அந்த மர்ம நபர்.. குமரேசனின் உதவியாளர் என்பது ஏற்கனவே இன்ஸ்பெக்டரின் விசாரணையில் தெரிய வந்திருக்கிறது. சாக்கடைக்குள் பாதியளவு மூழ்கியதால் பூட்டப்பட்ட லெதர் பேக்கிலிருந்து பூஜாவினால் வெளியேற முடியாமல்..மூச்சுத் திணறி மரணமடைந்தாக சந்துருவிடம் பின்னொருநாளில் காவல் துறையிடமிருந்து தெரிவிக்கப்பட்டது.

சில நாட்கள் கழித்து,

ஒரு தூய நண்பனை இழந்து வாடுவதைப் போல மிகுந்த துயரத்திலிருந்த சந்துருவுக்கு தில்ரூபா பத்து அழகா பூஜாக்களை பெற்றேடுத்து அதில் மூன்றை மட்டும் அவனது படுக்கையறையில் விட்டுச்சென்றது. பூஜாக்களின் செல்ல சேட்டைகளால் நிறைந்த வசந்தமான இல்லத்தில் எழுத்தாளர் சந்துரு எழுதிக்கொண்டிருக்கிறார் நாவல். நாவலின் தலைப்பு ”அன்பென்பது செல்லப் பிராணிகளாலானது “.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *