திண்டுக்கல் அருகே வெட்டிக் கொல்லப்பட்ட ரவுடியின் ஆதரவாளரும் கொல்லப்பட்டார்….. நேற்று அதிகாலை……..
சீத மகனா? என்னத்தா சொல்றே?
அவந்தான் மச்சினி! கணேசன். கடசிப் பய. இப்பந்தான் செயபால் கடைல நின்னு, சண்டியர்ட்ட வேல பாக்க பையன் சொல்லீட்ருந்தான்.
கோவக்காரந்தான். ஆனா, போட்டுத் தள்ளியிருக்க மாட்டான்த்தா. சும்மா ரெண்டு
அட! கிறுக்கு மூதேவி! என்னத்துக்குத் தான் இந்தக் காரியம் பண்ணுனானோ? சீதைக்கு, பெத்த வயிறு பத்தி எரியுமே……
இந்தப் பாட்டுப் பதியுத கட என்னிக்கு தெருவுக்குள்ள நொழைஞ்சதோ, அன்னைலருந்து தெருவுக்கே சனியம் புடிச்சிட்டுது.
பட்டாசலில் படுத்திருந்த எனக்கு அம்மாவுடன் பேசிக் கொண்டிருந்த குரல், எலத்தூராவோடதுனு கண்டுபிடிக்க முடிஞ்சது. ரெண்டு பேரும் தெக்கருந்து இங்க வந்து வாக்கப்பட்டதால, பேச்சுல தின்னவேலி வாடையும் கொஞ்சம் அடிக்கும்.
கேசட் புழக்கத்துக்கு வந்ததும், வேணுங்கிற பாட்டைப் பதிஞ்சு குடுக்குற கடைகளும் ஊருக்குள்ள புளுத்துப் போச்சு. எங்க தெருவுலயும் ஒரு மியூசிக்கல்ஸ் கடை புதுசா வந்திச்சு. அதுக்கு முதல் போட்டது நாலு பேர். சேது மாமாவும் ஒரு முதல் போட்டதுனால, அங்கேயே உக்காந்திருப்பாரு. அந்தப் பக்கம் போனாலே, வாடா மாப்ள!னு கூப்ட்டு உக்கார வச்சிட்டு இருக்கவுக டீ குடிக்கப் போயிருவாரு. பொழுது போகலைன்னா, ஜல்லு, ஜல்லுனு ஸ்டீரியோல பாட்டுக் கேக்கதுக்குன்னே அங்க போய் உக்காந்திருப்பேன். எழவு, எந்தப் பாட்டை அங்கன கேட்டாலும், நல்லா இருந்து தொலையும்.
அங்க வர்ற ஆளு தான் மாரியப்பன். எப்பயாச்சும் வந்திட்டிருந்தவன், வர வர தெனைக்கும் வர ஆரம்பிச்சுட்டான். அப்பறம் தான், எங்க தெருவுல இருந்த லெச்சுமிப் புள்ளயக் கூட்டிக்கிட்டுப் போறத வாடியாங்கேட்டுக்கிட்டப் பாத்தேன், தெப்பத்து எறக்கத்துல பாத்தேன்னு தெருவுக்குள்ள ஒரே பேச்சா இருந்துச்சு.
காலையில் பட்டறைப் பக்கம் போயிருந்தப்போ, மணியாசாரி தான் விசயத்தை சொன்னாரு. ஒங்க தெருக்காரன், மாரியப்பனக் குத்துனான்ல! உள்ள புடிச்சு போட்டுட்டாங்கடா.
எதுக்குண்ணே குத்துனான்?
லெச்சுமிப் புள்ளய ரெண்டு பயலுவலும் நோங்கிக்கிட்டிருந்தானுக. அது மாரியப்பன் பக்கம் சாஞ்சிருச்சு. இந்த விசயத்த மனசுல வச்சு, ரெண்டு பேரும் கொஞ்ச நாளா, எங்கணக்குள்ள பாத்தாலும், உர்ரு… உர்ருன்னே சுத்திட்டிருந்திருக்கானுக. நேத்து ரெண்டாவது ஆட்டத்துக்கு, அந்தப் புள்ளயக் கூட்டீட்டு போகயில கணேசன் பாத்துட்டான். அங்கனக்குள்ளயே ரெண்டு பேரும் மல்லுக் கட்டுனதுல, கணேசன் இடுப்புலருந்து கத்திய எடுத்து மாரியப்பனக் குத்திட்டான். கொடலு துண்டா வெளிய வந்திருச்சு. அப்புடியே மாரியப்பன் கை வண்டி மேல தல குப்புற சாஞ்சிட்டான். அதுக்கப்புறமும் கணேசன் பக்கத்துல கெடந்த கல்ல எடுத்து நடுமுதுகுல போட்டுட்டு ஓடிப் போயிட்டான். லெச்சுமிப் புள்ளய அவங்கூட்டீட்டு சுத்துனா, இவனுக்கு என்ன? பொத்திக்கிட்டு இவன் பாட்டுல இவஞ்சோலிக்கழுதயப் பாத்துட்டுப் போறத விட்டுட்டு, இதெல்லாம் தேவையா?
கணேசன்ட்ட எப்பமும், ஒரு கத்தி இருக்கும். எங்கிட்டயும் ஒருமட்டம் காமிச்சிருக்கான். முக்காவாசிப் பயலுக ஊருக்குள்ள அப்படித் தான் ஆளுக்கொண்ணை வச்சுக்கிட்டு சுத்திட்டிருப்பானுக. அதே போல கணேசனும் தோல் உறை போட்ட ஒரு கத்தியை இடுப்புல சொருகியிருப்பான். அத வச்சி வயித்துல குத்தி ஒரு சுத்து சுத்தி வெளியே இழுத்தோம்னா, உள்ளருக்க எல்லாத்தையும் வெளிய இழுத்துட்டு வந்திரும். அதுக்குண்ணே கத்தி மொனை கூர் வைக்காம லேசா சுழிச்சமானைக்கு மாதிரி இருக்கும்.
உள்ள போன கணேசன கொல்ல நாளா வெளிய வரக்காணோம். மாரியப்பன் பொழச்சி, லச்சுமியவே கட்டிக்கிட்டான். ஆனா, குறுக்கு ஒடிஞ்சத ஒண்ணும் பண்ண முடியல. குனிய, நிமிர, கழுத்தைத் திருப்ப முடியாது.
போன சீசனப்ப, குத்தாலம் அருவிக்கரைல கணேசனப் பாத்தப்போ, ஊருக்குள்ள இனி வரமுடியாது மண்டையா. மாரியப்பனோட அண்ணன் எப்படா போட்டுத் தள்ளுவோம்னு காத்துக் கெடக்கான். அதனால, எதுக்கு திரும்ப பிரச்சனைனு, செயில்ல பழக்கமான ஒரு அண்ணாச்சிக்கு கையாளா திண்டுக்கல்லுக்கிட்ட இருக்கேன். பேச்சுவாக்கில், கைல தொங்க விட்டிருந்த ஈரத்துண்டை தோள்ல போட்டதுக்கப்புறம் தான், ஈர வேட்டியில் சொருகியிருந்த கத்தியோட தோலுறை கண்ல தட்டுப்பட்டுச்சு. ஒரு மட்டம் உள்ள போய்ட்டு வந்திட்டா, வாழ்க்கையே அம்புட்டுத் தான்னு சொல்லிட்டு திரும்பிப் பாக்காமப் போய்ட்டான்.
ரவுடியின் ஆதரவாளர் கணேசன் (36) என்பவரும் வெட்டிக் கொல்லப்பட்டார். இது தனிப்பட்ட விரோதம் காரணமாக நடந்த கொலை என்றும், இரு தினங்களுக்கு முன் திண்டுக்கல் அருகே வெட்டிக் கொல்லப்பட்ட, ரவுடியின் கொலைக்கும், இதற்கும் தொடர்பு இல்லை என்றும் போலீசார் தெரிவித்தனர்.
– 15 பெப்ரவரி 2012