சடம் வெறித்த இருளிலே, ஒரு சாந்தி யுகம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 27, 2023
பார்வையிட்டோர்: 3,465 
 

இருட்டு. ஒரே இருட்டு. வாழ்வு மாயமான அந்தகார, இருட்டினுள் அடைபட்டு சிறைப்பட்டிருக்கிற அம்மாவின் முகம், தூரத்தில் களை இழந்து வெறிச்சோடித் தெரிந்தது. இப்போது அவள் அழுகிறாள் என்பதை மாத்திரமே மாதவியால், ஊகிக்க முடிந்தது. இப்படி அழ வைத்தே, குளிர்காய்கிற அற்ப மனிதர் பற்றி, வேதமா சொல்ல முடியும்? வேதம் சொல்கிற நேரமா இது?, இதை சித்தியிடம் தான் போய்க் கேட வேண்டும். யார் இந்த சித்தி? தடம் புரண்டு போன வாழ்க்கையிலே, வேறு எதுவும் அவளுக்கு மிஞ்சவில்லை, வேதத்தைத்தவிர.

அம்மாவுக்கும் இதே கதை தான். அன்பு வழிபாடற்று, வக்கிர புத்தி கொண்டு அலைகிற, மனிதர்களுக்கெல்லாம், ஒரு முன்னுதாரணமாகவே இன்று அவள் கண் முன்னே, ஒரு நிதர்ஸன சாட்சி மனிதனாக சித்ரவதை செய்தே பழக்கப்பட்ட அப்பாவின் கொடூர முகம். அம்மாவை ஏன் அவர் அடிக்க வேண்டும்? இதற்கு ஆயிரம் காரணங்கள் இருக்கலாம். அம்மாவை அவருக்குப் பிடிக்காமல் போனது முதற் காரணம். ஏன் பிடிக்கவில்லை? அவருக்கு இணையாக ஒரு ராஜ இளவரசன் போல் இருக்கிற, அவர் முன் அம்மாவின் அழகு தூசுக்கு சமானம் என்று கூட, அவர் நினைத்திருக்கலாம். மேலும் வீட்டு வேலையே தெரியாத அசடு. பட்டிக்காடு, அவள் திருமணமான சமயத்தில், யாரோ சொல்லி, அவர் அறிந்து கொண்ட உண்மை இது. இவ்வளவும் தெரிந்து கொண்ட, பிறகு, அம்மாவைச் சிம்மாசனத்தில் ஏற்றி வைத்து அவளுக்குப் பாத பூஜை செய்ய வழிபட, அவருக்கென்ன பைத்தியமா பிடித்திருக்கிறது?

பைத்தியம் அம்மாதான் அவள் போன்ற அப்பாவிப் பெண்களுக்கும் இது பொருந்தும். இப்போது அவள் அழுகிறாள் என்பதைக் கூட அறிய விடாமல் ரேடியோ அலறுகிற சப்தம் தான், அதிர்வலைகளாக, வந்து, காதை நொறுக்கிறது. இந்தக் களேபரத்தால், சமயலறையும் தூங்கி வழிகிறது. ஒன்றும் ஓடாமல், சமைக்க மனம் வராமல்; தங்கை சாந்தி கூட, முகம் களையிழந்து அடுக்களை வாசலில், நின்று கொண்டிருப்பது தெரிந்தது. அம்மாவுக்கு சமைக்க வருமா வராதா என்பது ஓர் அற்ப விடயம். அவளுக்கு சமையல் கலை அறவே வராது என்று, அப்பாவுக்கு யாரோ கோள் மூட்டி விட்டார்களாம். அதனால் அவள் சமயறைக்குள் போனால், அரிசி அளந்து கொடுக்க காய்கறிகள் அளவாய் எடுத்துக் கொடுக்க, அவரே பின்னால் வந்து விடுகிறார். அவ்வளவு கருமி! அவர் வைத்திருக்கிற காசுக்கு இதற்கு ஒரு வேலைக்லாரியே வைக்கலாம். இப்போது பெண்களும் வளர்ந்து விட்டார்கள் இரு பெண் பிள்ளைகள் மாத்திரம் தான் அவருக்கு. அம்மாவோடு கூடினதெல்லாம், இப்படி பிள்ளைகள் பெற்றுப் போட மாத்திரமே. அம்மாவின் உணர்ச்சி மனம் அவருக்கு ஒரு பொருட்டல்ல. இப்படி இருள் வெறித்த வாழ்க்கையில் சமையலும், புறம் போக்குத் தான். இப்படியொரு தீனத்தை விழுக்காட்டை, இருட்டைச் சந்தித்தே, மனம் நொந்து கிடக்கிற அவர்களுக்கு, அந்தப் பெண் பிள்ளைகளுக்கு, பசியும் பட்டினியும் பழகின ஒன்று தான். இப்படி பிரமை வெறித்தே, நாடகள் கழிகின்றன.

எந்த கிறுக்கன் எழுதி வைத்தான்? அவன் எழுதி வைத்தது போலில்லாமல், பெண்ணடிமைத் தனம் என்பது, எத்துணை கொடூரமான விடயம். இதில் கற்பு ஒரு கேடு. காட்சி மயக்கம். கனவு தான் வாழ்க்கை. அதற்காகவா அம்மாவின் இன்றைய விழுக்காடு?மன அலைச்சலும் அழுகையும்.. அவள் அழுவது கூட வெளியே கேட்க முடியாமல். என்னவொரு குரூர சிந்தனை. அப்பாவிற்கு மாதவிக்கு மனம் வலித்தது. அப்பா ஒரு பணப் பிசாசு. அதைக் கற்றையாக எண்ணி பீரோவில் அடுக்கி வைத்து அழகு பார்க்கிற, அவர் முன், மனிதம் சரிந்து கிடக்கிறதே,! வட்டிக் கடை வைத்தே உயிர் பிழைக்கிற அவருக்கு மனிதம் என்பதே மறு துருவம் தான். மனிதத்தை சல்லடை போட்டுத் தான், தேடிக் கண்டு பிடிக்க வேண்டு,ம். கடவுளும் பொய். காட்சியும் பொய். இங்கு மெய்யாக இருப்பது அம்மாவின், உறிஞ்சிக் குடிக்கப்படும் வெறும் நிழல் மட்டும் தான். தட்டிக் கேட்க ஆளில்லாமல், அவள் சரிந்து கிடக்கிறாளே! இந்தச் சரிவுக்கு அப்பா மட்டும் காரணமில்லை. இந்த சமூகமும் தான், அவளின் இந்த நிலைக்கான காரணம்.

மாதவிக்கு வயது பதினேழாகிறது. .அவள் கண் முன்னால் தான் இந்தக், கொடூரம், வெறித்த காட்சி !கொலைக் களம் தான் வாழ்க்கையா என்று மாதவி மயங்கினாள். துக்கித்தான். நானும் பெண் தான். எனக்கும் இப்படி நடந்தால் யாருக்காக இனி அழுவது? எனக்கா அம்மாவுக்காகவா? வாழ்க்கை நெடுஞ்சாலையில் இப்படி பிணங்களையே சந்திக்க நேருமா.? அம்மா இப்போது வெறும் நடைப் பிணம் தான். அவளுக்கு எந்த ஆசையும் வரக் கூடாது. .அப்படி வர நேர்ந்தால்? நினைக்கவே பயமாக இருக்கிறது. அப்பா கத்தியுடனல்லவா ஓடி வருவார்.. அவரை யாரால் தடுக்க முடியும்? பெண்களின் அடிமை வாழ்வில், இது சர்வ சாதாரணம். அம்மாவின் அழுகை சரித்திரமாகாத ஒன்று. சத்தியம் கூட இங்கு எடுபடாது.

மாதவிக்கு அழுகை முட்டிக் கொண்டு வந்தது.. கண்கள் வெறித்தன. காட்சியும் வெறித்தது.. இப்போது இருள் நின்று விட்டது.. ரேடியோ அலறல் கூடக் கேட்கவில்லை. அம்மாவுக்கு என்னவாயிற்று,? போய்ப் பார்க்கக் கூடப் பயமாக இருந்தது. அவள் நெஞ்சம் பொலிவிழந்து நின்று கொண்டிருந்தாள். ஒரே இருள். சூனியம். துக்க விழுக்காடு என்றால், இது தான் வாழ்க்கையா? அப்பா வரும் போது கேட்கலாமென்று அவள் நினைக்கும் போதே, அதோ, சூரிய வெளிச்சத்தில் பளிச்சிட்ட படி சோதி மயமாக, அவர் முகம், தூரத்தில் தோன்றியது, அவரை அப்படி பார்த்தவுடன், அவளுக்கு முதன் முதலாக உள்ளே எரிமலை வெடித்தது.

இந்த ஒளியை பார்த்து உலகம் வழிவிடலாம் வணங்கலாம் ஆனால் எனக்கு அப்பாவைப் பார்த்துக் கையெடுத்துக் கும்பிடத் தோன்றவில்லையே.! அவரின் ராச்சியத்தின் கீழ், அம்மா நரகப் படுகுழிக்குள் மட்டுமல்ல, அடிமைச் சிறைக்குள்ளும் தான் அகப்பட்டு அவள் செத்துக் கொண்டிருக்க, உண்மையில் எனக்கு ஒரு வாழ்வு தேவை தானா? சித்தி மாதிரி பொறுமை காத்து வேதம் கற்றுக் கொள்கிற ஆள் நானில்லை.யே. அவள் கண் முன்னே திடீரென்று, பிரகாசமான ஒரு முகம் தெரிந்தது. கண்களில் நீர் கோர்க்க அவள் நிமிர்ந்து பார்த்தாள். அதோ! சுட்டெரிக்கிற சூரியன், நெருப்பு அப்பாவின் அழகு, அதீத களையோடு மின்னிற்று. அழகு இருந்து என்ன பயன்? அன்பு இல்லையே. அது இல்லாமல் போனால் என்ன நடக்கும் என்பதற்கு அம்மாவின் இருண்ட யுகமே சாட்சியாகும்.

அழகைப் பற்றி முதன் முதலாக அவளுக்கே கோபம் வந்தது. இதை எடுத்துரைத்து அப்பாவிடம் நீதி கேட்க, அவள் ஆவேசம் கொண்டாள். அவர் சுற்றும் எதிர்பாராத விதமாக, அவள் திடீரென்று குரலை உயர்த்தவே அவர் முகம் குழம்பி வெறிக்க, அவளை நிமிர்ந்து பார்த்தார். குரல் சூடேறி, அப்போது அவள் அவரைக் கேட்டாள்.

அப்பா! எனக்கு இதுக்குப் ன்பதில் வேணும். அம்மாவை என்ன செய்து விட்டு வாறியள்?

நானென்ன செய்யிறது எல்லாம் வழக்கம் போலை தான்.

அதென்ன வழக்கம்? அன்பு வழிபாடா? ஆளுமை பெருக்கமா? இதிலை இரண்டிலை ஒன்றுக்குத் தான் எனக்குப் பதில் வேணும். எது? சொல்லுங்கோ அப்பா.

இதென்ன புதிசாய் கேக்கிறாய்? கொம்மா சரியாய் இருந்தால் நான் ஏன் அடிக்கப் போறன்?

பசப்பதேங்கோ. அம்மா எதிலை சரியில்லை?

இதையெல்லாம் நீ ஏன் கேக்கிறாய்? அந்தளவுக்கு வளர்ந்திட்டுதே உன் புத்தி?

ஓமப்பா! எனக்குத் தெரிய வேணும் உண்மை. அம்மா மாதிரி நான் அசடல்ல. அவவைப் போட்டு உடைக்கிற மாதிரி., எனக்கும் நிகழ்ந்தால் நான் எங்கை போய் முட்டிக் கொள்ளுறது?நீதி கேட்டு. நான் படியேறத்தான் முடியுமா? சொல்லுங்கோவப்பா! எனக்கு இதையெல்லாம் பார்த்த, பிறகு என்னையும் கடைந்து எடுக்கவல்ல, கழுவிலேற்ற ஒருவன் வந்தால் நான் நாசமாய் போய் விடுவனேயப்பா என்று அழுகை குமிறி அவள் கேட்க, அதறுகுப் பதில் சொல்ல வாய் வராமல் மெளனம் காத்தார் அவர்.

தொடர்ந்து அவளே சொல்லலானாள். அப்பா! கல்யாணமென்பது பரஸ்பரம் அன்பு வராமல் போனால், தோலுரிந்து கிடக்க வேண்டுயது தான். எனக்கு இந்த நிலை வரக்கூடாது என்று தான் இப்ப நான் நினைக்கிறன். அம்மாவைப் பார்த்து இந்தப் பாடம் கூடப் படிக்காவிட்டால், குடிமுழுகிப் போவதொன்றே சாஸ்வதமாகிறது. அப்படி குடி மூழ்கிப்ப் போனால், ஆருக்கு நட்டம்? நான் வெறும் நடைப் பிணமாய், நட்டாற்றில் விடப்படும் அவலம் எனக்குத் தேவை தானா? இதை விடுத்து வேதம் சொல்லில் கொண்டே நான் தபஸ் இயற்றலாம் பிளீஸ்! உங்களைக் கையெடுத்துக் கும்பிட்டுக் கெஞ்சிக் கேக்கிறன். என்னை விட்டிடுங்கோ? அவள் பேசி முடித்து விட்டு தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்ட போது, இருள் மூடி மங்கலான வெளிச்சத்தில், அவர் முகம் மட்டுமே தெரிந்தது. வாழ்ந்து காட்டுகிற ஒரு பெரியோனாக தன்னால் வாழ, முடியாமல் போனதையிட்டு, அவர் மனம் வருந்தி அழ வேண்டுமென்ற ஞானம் கூட வராமல், ஜடம் வெறித்த அந்த இருளில், அவர் முகம் கூட அவளுக்கு இப்போது மறந்து போனது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *