கொல் அவனை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: கிரைம்
கதைப்பதிவு: January 7, 2012
பார்வையிட்டோர்: 12,896 
 
 

கதை ஆசிரியர்: எஸ்.பிரகாஷ்.

“சார்  ஒரு தம் அடிச்சுக்கட்டுமா?“ கேட்டதும் எதிரில்  அமர்ந்திருந்தவன் பாக்கெட்டிலிருந்த சிகெரெட்டை எடுத்துக் கொடுத்தான். ஆழமாக புகையை இழுத்தவன் சப்தமாகச் சிரித்ததன் காரணம் புரியாமல் அவன் விழித்தான்.  “அப்போ 13 வயசு இருக்கும் சார் எனக்கு, என்னோட ஸ்கூல்ல படிச்ச பொண்ண ஒரு வாத்தியாரு கை வெச்சுட்டாரு. பாவம் அவருக்கு என்ன பிரச்சினையோ தெரியல. ஆனா அந்தப் பொண்ணு அழுதுனே வந்தப்ப எனக்கு தாங்கல. தெரிஞ்ச பொண்ணு வேற. என்ன பன்றது கோவத்த அடக்க முடியாம வந்த ஆத்திரத்துல அந்தாள் ஒக்கார்ற சேர்ல பெரிய ஆணிய வெச்சுட்டேன். அது தெரியாம ஒக்காந்த அவன் ஐயோனு கத்தினு ஓடினப்போ கூட படிக்கிற பசங்கல்லாம் விழுந்து விழுந்து சிரிச்சாங்க. பாடம் சொல்லிக் குடுக்கற வாத்தியார தெய்வமா நெனைக்கற காலம் சார் அது.  அத்தோட எனக்கு படிக்கற ஆசை அடியோட விட்டு போச்சு“ நீளமாக புகையை விட்டபடி அவன் கூறினான்.

“ஊருக்குள்ள எங்கப்பாவுக்கு பெரிய பேரு சார். நேர்மையான ஆள்னா சுத்துப்பட்டு எட்டு ஊருல  அவரத்தான் கை காட்டுவாங்க. தழைய தழைய வேட்டி கட்டிட்டு சும்மா சினிமால வார நாட்டாமை மாதிரி ஜம்முனு இருப்பாப்ல. படிப்பேறாம வீட்ல இருந்த நான் ஊர் பசங்களோட சேந்து சுத்திட்டிருந்தப்போ, பக்கத்து ஊருல இருந்த ஒரு பொம்பளை பத்தி பசங்க சொன்னாங்க. சும்மா  ரோஜா கணக்கா இருப்பா. ஒரு நாளைக்கு போய்ப் பாக்கலாம்னு இருந்தேன். அதுக்குள்ள ஊர்ல நம்ப பசங்களுக்கும் வேற ஜாதி பசங்களுக்கும் தகராறாகி, நம்ப பய ஒருத்தன வீடு  பூந்து அடிச்சிட்டாங்க. பிரச்சினை என்னன்னா நம்ப பயலோட தம்பியும் அந்த ஜாதிப் பயலோட தங்கச்சியும் ஒன்னா படிச்சதுல லவ் பண்ணிட்டாங்களாம். கடுப்பாகி பதிலுக்கு வெட்ட கிளம்புன பசங்கள தடுத்து நிறுத்தி, நம்ம பயலோட தம்பியையும் அந்த பொண்ணயும் எஸ்கேப் பண்ணி டவுன்லருந்த நம்மாள் ஒருத்தன் வீட்ல தங்க வெச்சுட்டேன். பொண்ணக் கடத்துன கேஸ்ல விசாரிக்க வந்த ஏட்டு நம்பளப் புடிச்சி ஜெயில்ல போட்டுட்டான். வீட்லருந்த பொம்பளைங்கல்லாம் அழுது ஒரே ரகளை பண்ணிட்டாங்க சார். ஜெயில்ல போய் ரெண்டு நாள் உக்காந்து யோசிச்சப்பதான், இதெல்லாம் நமக்கு தேவையா? யார் வீட்டுப் பிரச்சினைக்கோ நாம வந்து இங்க இருக்கணுமான்னு ஒரே கொழப்பமா போச்சு”. அவனையே அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தவனிடம் தொடர்ந்து பேசியவன்,

“ஒரு நாள் வீட்லருந்து காலைல வெளிய போன எங்கப்பன, அந்த ஜாதிப் பயலுக வெட்டிக் கெணத்துல போட்டுட்டாங்கன்னு தெரிஞ்சி ஓடிப் போய் பாத்தா, நாட்டாமை மாறி இருந்த எங்கப்பன் கொத்துப் புரோட்டா மாதிரி துணில கெடந்தான் சார். விடு விடுன்னு அரிவாள தூக்கிட்டுப் போய் எங்கப்பன கொன்ன பயலுவல்ல ஒருத்தன பிடிச்சி ஆத்திரம் தீர வெட்டித் தீத்தேன். மத்த ஆளுங்கள தேடிப் போனப்பதான், ரோஜா மாதிரின்னு சொன்னேன் பாருங்க, அந்த பொம்பளை ஓடியாந்து, ‘ஐயா சாமி என்னாலதான்யா உங்கப்பன் செத்தான். அவன கொல்லச் சொல்லி ஆளுங்கள ஏவுனதே உங்கப்பனோட பங்காளி தான்யா. இவங்கள கொன்னு நீ பாவத்த தேடிக்காதே’ன்னு சொல்லி அழுதது.”

“என்ன பண்ணுவேன் சார் நான். எங்கப்பனுக்கும் பங்காளிக்கும் சொத்து விஷயமா பல வருஷப் பகை. இதுல இந்தப் பொம்பளைக்காக ரெண்டு பேரும் மோதிக்கிட்டு இருந்திருக்கானுங்க. பாவம் சார் எங்கம்மா, ஊட்டுப் படியத் தாண்டி வெளிய வராது. இந்தப் பொம்பளைக்காக எங்கப்பனக் கொன்னவன் எங்க ஊர் பிரசிடெண்ட் வேற. அதுக்குள்ள கொலைக் கேசுல நம்பளப் புடிச்சி ஒரு வருஷம் உள்ள போட்டுட்டாங்க. வெளிய வந்த எனக்கும், எங்கப்பனக் கொன்ன பங்காளிக்கும் பகை வளந்து, அடிதடி, வெட்டுக்குத்து, அரசியல், அப்படி இப்படின்னு பெரிசா வளந்துட்டேன். ஆனா ஒன்னு சார், நம்பள நம்பி வந்தவங்கள கை விட்டதில்ல. நம்ப ஜாதிய சேந்த பலபேரு அரசியல்ல வளர நம்பள பயன் படுத்திக் கிட்டாங்க. கைம்மாறா அந்தப் பங்காளியப் போட்டுத் தள்ளற மாதிரி அவன டம்மியாக்கித் தந்தாங்க. பின்னாடி ஒரு நாள் அவனயும் போட்டுத் தள்ளிக் கிணத்துலப் போட்டேன். அதுக்கப்புறம் ஏன் செய்யறேன்னே தெரியாம பல தப்புங்க. பணப்புழக்கம், பொம்பள சகவாசம், ஜாதி பாசம், பதவி சுகம்னு பல தெனாவுட்டுல வளந்துட்டேன். கிட்ட வாங்களேன், உங்க ஆளுங்க உள்பட மாவட்டத்துலயே நம்ப கிட்ட காசு, பணம், தண்ணி, பொம்பள பாக்காத ஒரு அதிகாரி இல்ல. நம்பள பாத்தாலே சும்மா ஈன்னு.. இளிச்சி, பம்முவானுங்க. ஏன் நம்ப ஜாதில பெருசா இருக்காரே அந்த அரசியல் புள்ளி, அந்த சாமியாரு.. அவனுங்களுக்கு கூட எதுனா வேணும்னா நம்ப கிட்டதான் வருவானுங்க. மனசு தாங்கல.. ஒரு குவார்ட்டர் அடிச்சுக்கட்டுமா சார்?” குத்திட்டு அமர்ந்து அமைதியாக அவனையே பார்த்துக் கொண்டிருந்த அவன் முடியாதென தலையாட்டினான்.

“யாருகிட்டயும் கெஞ்சி எனக்குப் பழக்கமில்ல சார். நம்ப பொறப்பும், வளர்ப்பும் அப்படி. என்னிக்காவது ஒரு நாள் நானும் மத்தவங்கள மாதிரி நிம்மதியாச் சாப்பிட்டு, தூங்கி.. இப்படி என்னன்னெவோ கனவு. ஊஹூம் நமக்கு கொடுப்பனை இல்லை. அப்படியே வளந்து மத்தவங்க மாதிரி ஒரு எம்.எல்.ஏ., மந்திரின்னு வளந்துடலாம்னு நினைச்சிட்டிருந்தேன். முடியாம போச்சு. அந்தளவுக்கு நமக்கு சூது தெரியல. தெரியாமதான் கேக்கிறேன், நான் செஞ்சதுல என்ன தப்பு சார். பெரியவங்க என்ன சார் சொல்லியிருக்காங்க ? நீயா வம்புக்கு போகாத, வந்த வம்ப விடாத. துணிச்சலா இரு. நாலு பேருக்கு உதவுன்னுதானே. இது வரை நான் விருப்பமில்லாத எந்தப் பொண்ணயும் தொட்டதில்ல. நம்பி வந்தவங்கள கை விட்டதில்ல சார்.”

தொடர்ந்து பேசினான், “ நம்மாளுதானே நீ, நீயே சொல்லு சார் பாக்கலாம், சொந்த மகளா பாக்க வேண்டிய பள்ளிக்கூட பொண்ண தப்பாப் பாத்த வாத்தியாரு தப்பா ? நான் தப்பா ? எங்கப்பனக் கொன்னவன பதிலுக்குக் கொன்னது என் தப்பா? அரசியல்ல வளரணும், பெரியாளாகணும், நம்ம ஜாதி ஆளுங்கள காப்பாத்தணும்னு நெனச்சது தப்பா ? ” எனக் கேட்டு விட்டு அடக்க முடியாமல் அழுதவனை நேராகப் பார்க்காமல் எழுந்த அவன் தூர நின்று கொண்டிருந்தவனிடம் சென்று அதைக் கொடுத்தான்.

வயலில் மேய்ந்துகொண்டிருந்த பசு உடல் அதிர்ந்து நிமிர்ந்து பார்த்த போதே, படீரென கேட்ட வெடி சப்தத்தால் மரத்தில் குஞ்சுக்களுடன் கொஞ்சிக் கொண்டிருந்த பறவைகள் அலறிப் பறந்தன. வெடி மருந்தின் வாசனையில் தோட்டாக்கள் துளைத்த அவனது உடலைத் தூக்கி உள்ளே போட்ட காவலர்களுடன் அந்தப் போலீஸ் ஜுப் சாலையில் புழுதி பறக்க விரைந்தது..

நன்றி: வல்லமை.காம் (சிறுகதைத் தொகுப்பு), அக்டோபர் 2011, எஸ்.பிரகாஷ், எழுத்தாளர்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *