கு(கொ)லை விழும் நேரம்

2
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: கிரைம்
கதைப்பதிவு: July 21, 2019
பார்வையிட்டோர்: 39,700 
 
 

பாலையூர் போலீஸ் ஸ்டேசனா? சார்!

சீக்கிரமா வாங்க, இங்க பூட்டின வீட்டுத் தோட்டத்திலே ஒருத்தன் விழுந்து கிடக்கின்றான். என்ன, ஏது, யாருனு தெரியலை என்று அன்றைய சூரியோதயத்தை ஆரம்பித்து வைத்தனர் , வளர்ந்து வரும் பகுதியான கவி நகர் குடியிருப்பு வாசிகள்.

ஆய்வாளர் வேற லீவுல இருக்கார், உதவி ஆய்வாளர் சங்கர் கிட்டே சொல்லிடுவோம் என அவரிடம் தகவலை கொடுத்தார் நிலைய எழுத்தர் .
உதவி ஆய்வாளர் ரொம்ப துடிப்பான , முரடான தோற்றமும், பணியில் நிறைய ஆர்வமுள்ளவர் சங்கர்.

சம்பவ இடத்திற்கு, அடுத்த பத்து நிமிடத்தில் வந்து சேர்ந்தார்.உதவிஆய்வாளர் சங்கர்.

யார்பா முதலில் பார்த்தது சொன்னது?
நான்தான் சார், பக்கத்து வீட்டில் இருக்கேன்.

இது யார் வீடு?

சபேசன்ஐயா வீடு.

எங்கே அவர்?

அவர் எப்போதும் இங்கே இருக்கிறதில்லை. தன் மகள் வீடு இங்கே பக்கத்திலே வடகரையிலே இருக்கு , அங்கே போய்ட்டு போய்ட்டு வருவார். வீடே இரண்டு நாட்களாக பூட்டித்தான் இருக்கு என்றார்.

அவர் நம்பர் இருக்கா? கொடுங்க,

பேசினார்,உடனே பாலையூர் வீட்டிற்கு வரனும் என்று.

வந்தார், கேட் திறக்கப்பட்டு சடலத்தின் அருகே சென்றனர்,

கட்டம் போட்ட கைலி, கிழிந்த பனியன், முறுக்கிய மீசை, இடுப்பில் சொருகி இருந்த கத்தியைப் பார்த்ததும் திருடன் மாதிரி தோற்றம் இருந்தது. ஆங்காங்கே தென்னைமட்டை, பன்னாடைகள், குரும்பைகள் , தேக்கிலைச் சருகுகள், மாவிலைகள், தேங்காய்கள், மாங்காய்கள் எனச் சிதறி போர்களமாக கிடந்தவைகளே பறைசாற்றின, அதிக புழக்கம் இல்லை என்று.

கிட்டே நெருங்கிப் பார்த்தபோது, ஒரு ரத்தக் காயம் கூட இல்லை. கண்ணைப் பார்த்தார் நீலம் பூக்கவில்லை, வாயில் நுரையோ இல்லை. ஆகையால் விஷம் ஏறி இருக்க வாய்பில்லை. இறப்புக்கு என்ன காரணமாக இருக்கும். அருகே ஒரு உருட்டுக் கட்டை இருந்தது, அதை உதவி ஆய்வாளர் மனத்தில் ஏற்றிக்கொண்டார்.

பார்வை சபேசன் மீது திரும்பியது. நீங்க எப்போ கடைசியா வந்தீங்க, எப்போ போனீர்கள்?

நேற்று, தான் காலை வந்ததாகவும் மாலை போனதாகவும் சொன்னார்.

எதுக்காக வந்தீங்க? என்றார்.

அடிக்கடி வருவதாகவும்,ஒரு நாள் பொழுது இருந்து விட்டு சொல்வதாகவும் தெரிவித்தார்.

சடலம் மார்ச்சுவரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

உதவி ஆய்வாளர் தனித்தனியாக பகுதி மக்களிடம் விசாரித்ததில்
சபேசன் தனியே வசிப்பதும், ஒரு மனநோயாளி போல் மரங்களோடு தனியே நின்று பேசிக்கொண்டு இருப்பதை நாங்களே நிறையத் தடவை பார்த்து இருப்பதாகவும் சொன்னார்கள்.

சந்தேகக் கண்ணோடு சபேசனைப் பார்த்து, சரி நீங்கள் நிலையம் வந்து எழுதிக் கொடுத்துவிட்டுப் போங்கள் என்று சொல்லிவிட்டு அந்த உருட்டுக்கட்டையை மறக்காமல் ஆய்விற்காக எடுத்துச்செல்ல,
அனைவரும் கலைந்துச் சென்றனர்.

காவல் நிலையத்தில்,

அந்த பயோமெட்டிக் மெஷின் எடுத்துட்டுப் போயி அரசு மருத்துவமனையில் உள்ள சடலத்தின் ரேகை எடுத்துப் பாருங்கள், அவன் அட்ரஸ் ஏதாவது கிடைக்குதா?அவன் யாருனு தெரியட்டும்,

இந்த உருட்டுக்கட்டைதான் கொலைக்கான ஆயுதமாக இருக்கலாம், பத்திரமாக வையுங்க, சபேசன் வந்தா எழுதி வாங்கிக்கிட்டு உட்கார வையுங்க, ஆய்வாளர் வரட்டும் முதல் தகவல் அறிக்கை
போட்டுக்கலாம் என அறிவுரை கூறிவிட்டு தனது இல்லம் சென்றார் உதவி ஆய்வாளர்.

கைரேகை முடிவுகள் வந்து இருந்தன. அவன் பழைய மோட்டார் திருடன் எனவும் அடிக்கடி மோட்டார் மட்டுமே திருடி விற்கும் ‘பம்ப் பக்கிரி’ என்ற அடைமொழி கொண்ட திருடன் எனவும் நிறைய வழக்குகள் இந்த நிலையத்தில் இருந்து தண்டனைப் பெற்றவன் எனவும், இவர் வீட்டில் முன்னேயே திருடி தண்டனைப் பெற்றுள்ளான், ஆகையால் சபேசன் செய்திருக்க வாய்ப்பு இருப்பது பழைய ஆவணங்களின் மூலம் சங்கருக்கு தெரிய வந்தது.

அவனை நீங்கத்தான் அடிச்சு கொலை செய்து இருக்கனும்னு நிறைய ஆதாரங்கள் இருக்கு அதைப் பற்றி என்ன சொல்றீங்க என மிரட்டினார்.

நான் செய்யலீங்க, நான் வீட்டிற்கு வந்ததும், மரங்களுக்கு நீர் விட்டேன் , தென்னைக்கு கல் உப்பு வைத்துவிட்டு, சிறிது நேரம் இருந்து விட்டு கிளம்பி விட்டேன். வேறு ஒன்றும் தெரியாது என்று கூறினார்.

ஆய்வாளரும் தன் பங்குக்கு விசாரித்து பார்த்தார்.இவர் சொல்றதைப் பார்த்தா உண்மையாகத்தான் இருக்கும் போலத் தெரியுது சங்கர்.

அங்கென்ன சத்தமா இருக்கு?

தேங்காய் பறிக்க ஆள் வந்து இருக்கான் சார்!

சத்தம் போடத பறிக்கச் சொல்லுங்க!

இவர் மேலே உங்க சந்தேகம் என்ன? பட்டியலா சொல்லுங்க! என்றார்.

சார், விசாரித்ததில் , சபேசன் ஒரு மன நோயாளி.
வீட்டிற்கு அன்று வந்து இருக்கிறார்.
பக்கிரி ஏதோ பலமான ஆயுத்த்தால் தாக்கியதில் இறந்ததாக பிணவறைத் தகவலும் சொல்லுது. அவர் கைரேகையும் அந்த கட்டையில் உள்ளதற்கும் ஒத்துப் போகிறது.
முக்கியமானது ஒன்று , ஏற்கனவே இவன் அவர் வீட்டில் மோட்டார் திருடி தண்டனைப் பெற்று இருக்கிறான், அதற்கான புகார்கள் இவர் கைப்பட எழுதியது ரெக்கார்டுல இருக்கு. கொலைக்கான மோட்டிவ் கிளியரா இருக்கு! வேற என்ன எவிடன்ஸ் வேண்டும். சார்.

இருவரும் பேசியபடி கொல்லைப் பக்கம் வந்து இருக்க,

சார்! தள்ளி நில்லுங்கள், தலையிலே தேங்காய் விழுந்திடப் போகுது என்ற குரல் வரவே இருவரும் ஒதுங்கி நின்றனர்.

சார், அப்பப்ப இந்த மட்டைப் பன்னாடைகளை கழிக்கனும்,

அப்பத்தான் காய் சுரந்து காய்க்கும், இல்லாட்டி,
யார் தலையிலாவது காய் விழுந்திடும், விழுந்தா உயிர் கூடப் போகும் ,

முடிகிற போதெல்லாம் கல்உப்பு வாங்கிப் போடுங்க, முக்கியமாக தண்ணீர் விடுங்க சார், பறிச்சாக்க பங்கு போடறதிலேதான் அக்கறையா இருக்கீங்க! இதுவும் ஒரு உசிருதானே சார்.
என்று சொல்லிக்கொண்டே இறங்கினான்.

இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.
நிரபாராதி ஒருவர் தண்டிக்கப்பட்டு விடக் கூடாது என்று நினைத்து அவரை விடுவிக்கும் முடிவை எடுத்தனர்.

திருடப் போன இடத்தில் மறைந்து இருந்தபோது தேங்காய் தலையில் விழுந்து விபத்து, என முதல் தகவலறிக்கை எழுதப்பட்டு சபேசனை விடுவித்தனர்.

சபேசன் வீட்டிற்குச் சென்று தென்னை மரத்திடம் நின்று,

ரொம்ப நன்றி! என் அன்புத் தென்னை மரமே! அவர்களுக்கு இப்படியும் நடந்து இருக்கலாம் என உணர்த்தியதற்கு!

அவன் மோட்டார் திருடன் என்று தெரிந்து லேசாதான் அடிச்சேன், அதிலே மயங்கிட்டேன், ஆனால் பதட்டத்திலே கட்டையை அப்படியே போட்டு விட்டுப் போயிட்டேன் என்று தென்னையிடம் கூறினார்.

நானும் உங்க உப்பைத் திண்ணவன்தானே,
ஏதோ என்னால் முடிந்தது என்று கூறுவது போல் இருந்தது தென்னை மர ஓலைகளின் மர்மமான அசைவுகள்.

பா.அய்யாசாமி தந்தை பெயர்: கி.பாலசுப்ரமணியன். பிறந்த ஊர்: சீர்காழி. நான் 15/10/1969 ஆம் ஆண்டு சீர்காழி எனும் ஊரிலே பிறந்தவன் என்னுடைய இளங்கலை இயற்பியல் படிப்பினை பூம்புகார் பேரவைக் கல்லூரியிலே 1989 ஆம் ஆண்டு முடித்து , தற்போது முதுகலை தமிழ் படித்துக்கொண்டு இருக்கின்றேன். தில்லி, உத்தர் பிரதேஷ் ,சென்னை என பல இடங்களில் பணிபுரிந்து தற்போது மயிலாடுதுறையிலே வசித்துக் கொண்டு இருக்கின்றேன்.2015 ஆம் ஆண்டு முதல் என்னை ரோட்டரியில்…மேலும் படிக்க...

2 thoughts on “கு(கொ)லை விழும் நேரம்

  1. அய்யா கதை நல்லா இருக்கு நன்றி , ஒரு சின்ன சந்தேகம்! பிணத்தின்மேல கட்டைல அடிச்ச இடம்மும் தேங்காய் விழுந்த இடமும் ஒண்ணா அய்யா ……
    நன்றி ….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *