கருணைக்காக..!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: கிரைம்
கதைப்பதிவு: April 6, 2020
பார்வையிட்டோர்: 19,331 
 
 

இருட்டில் ஒதுக்குப்புறமாக நின்ற லாரியில் ஓட்டுநர் சாமிக்கண்ணு வயசு 40 ஏறி கிளம்பியதும் …. அவசர அவசரமாக ஓடி வந்த உதவியாளர் மதி வயசு 25 தாவி ஏறி…

” என்னண்ணே..! வண்டியை அதுக்குள்ளே கிளப்பிட்டீங்க…? ” கேட்டுக்கொண்டே அருகில் அமர்ந்தான்.

” வேலை முடிஞ்சிபோச்சில்ல. நேரா நேரத்தோட போக வேண்டாமா..? அடுத்த வேலை கும்பகோணத்துல சரக்கு ஏத்தி சென்னைக்குப் போகனும். சரி சரி கதவை நல்லா அடிச்சி சாத்து. ” என்ற சாமிக்கண்ணு அடுத்ததாக….

” ஏன்டா மதி ! அயிட்டம் எப்படி இருந்துச்சி…? ” விகல்பமாகக் கண்ணடித்துக் கேட்டு முதல் கியர் போட்டு லாரியைக் கிளப்பினார்.

” போங்கண்ணே..! ” மதி பட்டென்று கதவை அடித்துச் சாத்தி நாணப்பட்டு நெளிந்தான்.

” சும்மா வெட்கப்படாம சொல்லுடா…? ” இவனை ஓரக்கண்ணால் பார்த்து கேட்டு லாரியை சாலையில் ஏற்றி லாவகமாக ஓட்டினார்.

” புதுசுண்ணே. ரொம்ப கூச்சப்பட்டுச்சு. படாசோக்கா இருந்தது. ஆனா.. நீதான் என்னவோ உன்கிட்ட மட்டும் படுத்துக்கிற பத்தினியாய் நெனைச்சி அந்த மாமூல் கிராக்கியாண்டயே போய் படுத்துப் பணத்தைக் கொடுக்கிறே ?! ..” ஆதங்கப்பட்டான்.

” அது என்னமோத் தெரியலேடா மதி . அவகிட்டப் போனாத்தான் திருப்தியா இருக்கு. சாப்பிடறது தெருவோரக் கடையா இருந்தாலும் இன்ன இடத்துல சாப்பிட்டாத்தான் மனசுக்கு நிறைவா இருக்கிற மாதிரி அவகிட்ட ஒரு இது. நான் பெங்களூரு பக்கம் லாரியை விட்டா … இவளைத் தவிர வேறெவளையும் தேட மாட்டேன், தொடமாட்டேன். அவளை எனக்கு ரொம்ப புடிச்சி போச்சுடா மதி.” சாமிக்கண்ணு வார்த்தை. குரலில் ரொம்ப லயிப்பு, ரசிப்பு இருந்தது.

” சரி. அத உடு. நான்தான் கால்கட்டுப் போடாத வயசுப்புள்ள, பிரம்மச்சாரி. இப்படி மேயுறது சரி, நியாயம். நீ கலியாணம் கட்டி பொண்டாட்டி குத்துக்கல்லாட்டம் இருக்க… வயசுக்கு வந்த பொண்ணும் வீட்ல இருக்கும்போது இப்படி நடந்துக்கிறது தப்பில்லையா..? ” கேட்டான்.

” தப்புதான்.! ஆனா…ஊட்டுக்குப் போனா…..பொஞ்சாதி , வயசுக்கு வந்த பொண்ணு இருக்கான்னு கட்டினவ கூச்சப்படுறா. அதுவும் சரிதானே….?! நாம வண்டியில ஏறி நாலைஞ்சி நாள் விடாம ராப்பகல் பார்க்காம போனா… உடம்பு ரொம்ப சூடாகிடுது. குறைக்க இதைத்தவிர வேற வழி…? ”

” என்னமோ போ…” என்று விட்டேத்தியாக சொன்ன மதி…. ” அண்ணே..! மணி ரெண்டுக்கு மேல ஆவுது. தூக்கம் கண்ணை சுத்துறாப்போல இருக்கு. பார்த்து மெதுவா ஒட்டு….” – எச்சரித்தான்.

” தத்தேரி! ஒருமணி நேரம் குசாலா இருந்துட்டு இப்போ தூக்கம் வருதுன்னு சொல்றீயே நியாயமா…? என்ன…. ஆளு உன்னை ரொம்ப கசக்கிப் பிழிஞ்சுட்டாளா..? உடம்பு அசதி தூக்கம் வருது…? ” என்றவர் இடது கையை ஸ்டேரிங்கிலிருந்து எடுத்து மேல் சட்டைப் பாக்கெட்டில் கையை விட்டு ஒரு பீடியை எடுத்து நீட்டி…

” இந்தா..! இதை நாலு வலி வலி. தூக்கம் பறந்துடும். ” சொன்னார்.

” வேணாம்ண்ணே..! அதெ புடிச்சா ஒரே இருமலா வருது.”’ என்றவன் சாலையைப் பார்த்து திடுக்கிட்டு…

” அண்ணே…! அதோ பார். நமக்கு முன்னால….. இந்த நடு ராத்திரில ஒரு பைக் கஸ்மாலம் நடு ரோட்ல தெனாவட்டாப் போகுது..” திட்டினான்.

சாமிக்கண்ணு பீடியை பையில் போட்டுக்கொண்டு ஹாரன் அடித்தார் .

அவன் அதை சட்டை செய்யவில்லை.

” என்னண்ணே ! ஹாரன் சத்தம் கேட்டும் பய நகராம நாடு தெனாவட்டாப் போறான்..?! ”

” ராவாச்சில்லே..?! பயத்துல பய அப்படிப் போறான். ” சிரித்தார்.

” சும்மா ஜோக்கடிக்காதீங்கண்ணே . இப்போ டூ வீலர்ல போறவனெல்லாம் நடுரோட்லதான் போறானுங்க. பேமானிங்க..” திட்டினான்.

” திட்டாதேடா மதி. அப்படிப் போனாத்தான் அவனுக்குப் பாதுகாப்பு. !” சொல்லிக் கொண்டே அவனை முந்தி சென்றார் சாமிக்கண்ணு.

” என்னண்ணே.. புதுசா சொல்றீங்க;;? ”

” அவன் நடு ரோட்ல போனாத்தான்…. அவன் பின்னால வர்ற நாம அவனுக்காக கொஞ்சம் ஒதுங்குவோம். நாம நெருங்கினதும் அவன் ரோட்டோரமா ஒதுங்கி தாராளமா போவான்.”

விழுந்தாலும் ஆள் வண்டியில் அடிபட மாட்டான் ! – மதிக்குப் புரிந்தது.

” அதுவும் நல்ல ஐடியாதாண்ணே. ” தலையாட்டினான்.

” ஏன்டா மதி ! நீ எந்த இடத்துல சரக்கு வாங்கினே. இன்னும் தெளிய மாட்டேங்குது …”

” வழக்கமா எப்போதும் வாங்குற இடத்திலேதாண்ணே வாங்கினேன். கலக்கலை கொஞ்சம் அதிகமா கலந்துட்டானோ…?! ” என்றான்.

” என்ன எழவோ போ. போதை கண்ணை மறைக்குது…” என்ற சாமிக்கண்ணு …

” நீ கொஞ்ச தூரம் ஓட்டுறீயா..? நான் கொஞ்ச நேரம் கண்ணை மூடி வர்றேன். களைப்பா இருக்கு. ” சொன்னார்.

” வாணாம்ண்ணே ! நானே அரைகுறை. ரோடு வேற மோசமா இருக்கு. நீயே உடு. விடிஞ்சதும் நான் உடுறேன். ” சொன்னான்.

” சரி ! ” என்ற சாமிக்கண்ணு… இரண்டு கிலோ மீட்டர் சென்றதும்….கண்ணைக் கசக்கிக்கொண்டு பார்த்து….

” மதி ! வண்டியில இடது பக்க முகப்பு விளக்கு எரியலையா..? ” – கேட்டார்.

” எரிஞ்சிச்சே..!! ”

” ரோட்டைப்பார்த்துச் சொல்லு..? ”

சாலையில் விழும் முகப்பு விளக்கு வெளிச்சத்தை உற்றுப் பார்த்து கவனித்த மதி…. ” ஆமாண்ணே ! நிப்பாட்டுறியா..? தட்டிப்பார்க்குறேன்..” என்றான்.

” வாணாம் வாணாம்..! ரோடுதான் வெறிச்சின்னு இருக்கே. பார்த்துக்கிடலாம்… ”

” எதுக்கும் ஜாக்கிரதையா போ அண்ணே! ”

” அது கிடக்கு கழுதை. நம்ப முதலாளிக்கு என்ன சொன்னாலும் காதில் ஏற மாட்டேங்குது. வண்டி சம்பாதிக்கணும். செலவு செய்யக்கூடாது. ! இதுதான் அந்த ஆள் கொள்கை. தாயேளி ! ” திட்டினார்.

சாலை திடீரென்று நன்றாக இருப்பதைக் கவனித்த மதி…

” அண்ணே ! ரோடு நல்லா இருக்கு. நான் ஓட்டுறேன். ” சொன்னான்.

” வாணாம்ப்பா. ஒரு முகப்பு விளக்கு எரியல. இறங்கிப் பார்க்கலாம்ன்னாலும் இந்த அத்துவானக் காட்டுல என்னத்தைப் பார்க்குறது..?….. நீ அடக்கிக்கிட்டுத் தூங்கு”

” சரி. நீ கவனமா ஓட்டு. நம்ம ஒத்த விளக்கு வெளிச்சத்தைப் பார்த்து எதிர்க்க வர்றவன்.. ரெண்டு சக்கர வாகனம் வருதுன்னு நெனைச்சி… மோதிடப் போறான்…!! ” சொன்னான்.

” எல்லாம் எனக்குத் தெரியும். நீ பேசாம வா…” என்று அடக்கிய சாமிக்கண்ணு ஆக்சிலேட்டரை இன்னும் கொஞ்சம் அழுத்தினார்.

ஸ்பீடா மீட்டர் 80த் தொட்டது.

முன் பக்க சாலையைப் பார்த்துக் கொண்டு வந்த மதி…

” அண்ணே….! எதிர்க்க அதோ பாருங்க. ஒத்த விளக்கு. நம்மளாட்டம் எந்த சாவு கிராக்கியாவது வந்து தொலைக்கப் போவுது. எதுக்கும் பார்த்து ஒட்டு..” சொன்னான்.

எதிரே வரும் வெளிச்சம் அருகில் வர…

” என்னாண்ணே..! எதிர்க்க வர்ற வண்டி நம்மைவிட வேகமா வர்றான் போலிருக்கு. ! ?? கண்ணை மூடி கண்ணைத் தொறக்குறதுக்குள்ள இங்கே வந்துட்டான்..!! நீ இடது பக்கம் ஒதுக்கி ஒட்டு. ரொம்ப ஒதுக்கி ஒட்டாதே. சாலையை அகலப்படுத்துறதுக்குப் பள்ளம் வெட்டி வைச்சிருக்கானுங்க..” என்று சொன்ன அடுத்த நிமிடம்….

எதிரே வந்த பைக்காரன்… எதிரே வருவதும் பைக்தானென்கிற நினைப்பில் வர…. அருகில் வந்ததும் லாரி கனரக வாகனம் என்பதை உணர்ந்து சுதாரிப்பதற்குள்….

” டமார்..!!….” ஒரு சின்ன சப்தத்துடன் அது நடந்து விட்டது.

கிறீச்ச்…! பத்தடி தூரத்தில் சடன் பிரேக்கில் லாரியை நிறுத்தினார் சாமிக்கண்ணு.

” டேய் ! நம்ப வண்டியில உரசிட்டானுங்க. இறங்கி ஓடிப் போய் பாரு..” – சாமிக்கண்ணு பதைபதைத்தார்.

வண்டியில் வண்டி மோதியது தெரியும். உருண்டது தெரியும். கண் முன்னேயே விபத்து.

மதிக்கு மனதில் பயம் கவ்வியது.

” அண்ணே..! ரோட்ல யாருமில்லே. பார்க்க வேணாம் போங்க…” – எப்படியாவது இடத்தை விட்டு நகர்ந்தால் போதும் தப்பித்துக் கொள்ளலாம் ! ‘ நினைப்பில் கத்தினான்.

” அடசட் ! போய்ப் பாருடா…? ” அதட்டினார்.

அதற்குமேல் மறுப்பு சொல்லாமல் பதற்றத்துடன் இறங்கி லாரிக்குப் பின்னால் ஓடினான் மதி.

ஓடியவன் அதிவேகத்தில் திரும்பி வந்து …

” அண்ணே …! மோசம் போய்ட்டோம். அவனுங்க வந்த வண்டி சாலையோரத்தில் கிடக்கு. ஒருத்தன் மூளை எகிறிப்போய் நடு ரோட்ல கிடக்கான். இன்னொருத்தனுக்கு நம்ப வண்டி ஏறி ரெண்டு காலும் இடுப்புக்குக் கீழே கூழாப்போய் வண்டிக்குப் பின்னால துடிச்சிக்கிட்டு கிடக்கான். ” முகம் வெளிறி சொன்னான்.

சாமிக்கண்ணு எதிர் பார்க்கவில்லை. ஆளுக்குத் தூக்கிவாரிப்போட்டது.

” மதி ! நம்ப வண்டியில விபத்து நடந்த அடையாளம் ஏதும் தெரியுதா…? ”

கேட்டார்.

” ஏண்ணே …?! ”

” பாருடா…”

லாரியை ஒரு சுற்று சுற்றிவிட்டு வந்த மதி…

” அண்ணே …! அவன் வண்டி பம்பர்… நம்ப வண்டியில லேசா உரசி இருக்கும் போலிருக்கு. வேகத்துல தடுமாறி விழுந்திருக்கானுங்க. அவனுங்க நம்ப வண்டியில மோதினத்துக்கான அடையாளம் இல்லே. ஆனா… பின் சக்கரத்துலதான் சொத சொதன்னு ரத்தம் இருக்கு.” பார்த்ததைச் சொன்னான்.

” ஒரு ஆளு போய்ட்டானா…? நல்லாத் தெரியுமா…? ”

” ஐயோ ! அதை ஏன் கேட்குறீங்க. கபாலம் பொளந்து ஆள் காலி. ரத்தமும் சதையுமாய் நிலா வெளிச்சத்துல பார்க்கவே பயங்கரமா இருக்கு…”

” இன்னொரு ஆள்..? ”

” முழங்காலுக்குக் கீழே காணோம். துடிச்சிக்கிட்டு கிடக்கான். அநேகமா… இந்நேரம் மயக்கமானாலும் ஆகி இருப்பான். ! ” மதி குரலிலும் உடலிலும் நடுக்கம் தெரிந்தது.

அடுத்த வினாடி சாமிக்கண்ணு தன் இருக்கையை விட்டு இறங்கி ஓடிப்போய் பார்த்தார்.

அவர் பின்னாலேயே மதியும் ஓடினான்.

அவர்கள் நடு சாலையில் கிடந்தார்கள். அவர்கள் வந்த இரு சக்கர வாகனம்… சாலை ஓரமாகக் கிடந்தது.

மதி சொன்னது போல் ஓவருவன் தலை திறந்து கிடந்தான். மூளை எங்கே போனதென்று தெரியவில்லை.

இன்னொருவன் இரண்டு கால்களும் கூழாகிக் கிடந்தான். மற்றப்படி வேறு அடிகள் இல்லை.

அசையாமல் கிடந்த அவன் அருகிலே அமர்ந்து கே மூக்கில் கை வைத்துப் பார்த்தார் சாமிக்கண்ணு.

மூச்சு வந்து கொண்டிருந்தது.

உயிருக்கு ஆபத்தில்லை. !! ஆள் மயக்கமாகக் கிடக்கிறான் ! – புரிந்தது.

நிலா வெளிச்சத்தில் ஒரு நிமிடம் அவனையே கண் இமைக்காமல் பார்த்தார். பின் எழுந்து விடு விடுவென்று வந்து லாரியில் ஏறினார்.

பின்னாலேயே வந்த மதியிடம்….

” சீக்கிரம் ஏறு ..” என்றார்.

அடுத்த வினாடி அவன் தாவி ஏறி தன் இருக்கையில் அமர்ந்தான்.

நிறுத்தி இருந்த லாரியை உயிர்ப்பித்தார் சாமிக்கண்ணு.

” அண்ணே….! ஒரு நிமிசம் தாமதிக்காதீங்க. வேண்டிய வேகமா விடுங்க. இருபது கிலோ மீட்டர்ல ஆறு வரும். அதுல இறக்கி வண்டியைக் கழுவிக்கிட்டு நாம நம்ப இடத்துக்குப் போகலாம். தப்பிச்சுடலாம். ” சொன்னான்.

” ஸ்…ஸ்…. ” என்ற சாமிக்கண்ணு ரிவர்ஸ் கியர் போட்டு பின்னால் பார்த்தார்.

” என்னன்னே செய்யப் போறீங்க…? ” மதி கிலியாய்க் கேட்டான்.

” ……………….”

லாரி மெல்ல பின்னால் போக….

திகிலடைந்த மதியும்…. இவர் என்ன செய்யப் போகிறார் ? நினைப்பில் பின்னால் பார்க்க….

” ஐயோ ! என்னண்ணே உயிராய் இருக்கிற அந்த ஆளை குறி வைச்சி வண்டியை விடுறீங்க.??! என்னண்ணே செய்யப் போறீங்க..? ஐயோ ! ஐயோ ! சக்கரத்தை ஏத்தி அவனையும் கூழாக்கிட்டீங்களே..!! ” கதறி அலறினான்.

லாரி கால் கூழாகிப் போனவனை கூழாக்கிவிட்டு நின்றது.

மதி பேயறைந்தவன் போல் திகிலாய் அமர்ந்திருக்க…. சாமிக்கண்ணு நிதானமாக லாரியைக் கிளப்பி ஓட்டினார்.

” அண்ணே..! கொஞ்சம்கூட ஈவு இரக்கமில்லாம இப்புடி அநியாயமாக குற்றுயிரும் கொலையுருமாய்க் கிடக்கிறவனைக் கொன்னுட்டீங்களே..!?… கொலைகாரன் நீங்க. அநியாயம், அக்கிரமம்…” அடுக்கினான்.

சாமிக்கண்ணு லாரியை நிதானமாக இயக்கிக்கொண்டே….

” முடிச்சிட்டீயா மதி..? ” – எந்தவித பதற்றம், பதைபதைப்பு இல்லாமல் கேட்டார்.

” சொல்லுங்கண்ணே..! இப்படி அநியாயம் செய்துட்டு வர்றீங்களே…நியாயமா…?” கமறினான்.

” நியாயம் மதி…..”

” என்னண்ணே சொல்றீங்க.?! ” அவரைத் திகிலாய்ப் பார்த்தான்.

” ஆமாம்டா.!! ரெண்டு காலும் போனவன் பொழைச்சுப்பான் மதி. வழக்கு வாய்தான்னு வண்டி இன்சூரன்ஸ்காரன் விபத்து காப்பீட்டு தொகை கொடுப்பான். அதுமட்டுமில்லாம நம்ம முதலாளியும் நஷ்டஈடு கொடுப்பார். லட்சக்கணக்கில் பணம் வந்தாலும் அவன் வாழ்க்கை நரகம்டா மதி. பூமி, குடும்பத்துக்குப் பாரம். உடல், மனசால ரொம்ப உபத்திரவம். லாரி ஏத்தின நம்பளைச் சாகிறவரை சபிச்சு சாவான். அவன் வெயில்ல விழுந்த புழுவாய் வாழ் நாள் முழுக்க துடிப்பான். அந்த வேதனை வேணாம்ன்னுதான் அவனை நான் ஒரேயடியாய்க் கொன்னுட்டேன். என்னைப் பொறுத்தவரை இது கருணைக் கொலை. இதை நீதிமன்றம் ஏத்துக்கிட்டாலும் ஏத்துக்காம போய் தண்டனை கொடுத்தாலும் அனுபவிக்கத் தயார். சரணடையப்போறேன். ” என்று சொல்லியபடியே சாமிக்கண்ணு அருகிலுள்ள காவல் நிலையத்தை நோக்கி லாரியை ஓட்டினார்.!!

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *