கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: கிரைம்
கதைப்பதிவு: May 7, 2012
பார்வையிட்டோர்: 12,008 
 

ரத்தம். தொட்டால் கையில் ஒட்டிக்கொள்ளும் விதத்தில் நிஜமான ரத்தம். படுக்கை விரிப்பின் வெள¤ர்நீல வண்ணம் செக்கச்செவேலென்று மாறியிருக்கிறது. டேவிட் உற்றுப்பார்த்தான். லிஸா ரத்தத்தின் கண்போல் படுக்கையில் சுருண்டிருக்கிறாள். அவள் நெஞ்சிலிருந்து ஊற்றுக்கண் போல் ரத்தம் பொங்குகிறது. டேவிட்டுக்குத் தலைவலி நெற்றிப்பொட்டில் மின்னல் வரிகளாய்ப் பெருகுகிறது. ரத்தத்திற்கு வாசனை உண்டா. மூச்சுக் காற்றைச் சிறைப்படுத்தி நாசியை வலுவாகத் தாக்குகிறது ஒரு வாசனை. காலடியில் நிலம் நகரக் கண்ணை மூடி உட்கார்ந்தால் சற்று ஆறுதல் கிடைக்கும்போலிருக்கிறது. கண்ணுக்குள் புதைமணலாய்க் குழையும் இருளில் ஒரு குரல் அப்போது முளைக்கும் செடிபோல மெல்ல உயருகிறது. மனதுக்கு இதமாக இருக்கும் அந்த அழைப்பு ஏதோவொரு விதத்தில் நெருக்கடியையும் ஏற்படுத்த, டேவிட் உடலை ஒடுக்கிப் படுக்கையின் ஓரத்தில் தன்னைச் சுருக்கிக்கொள்ளுகிறான்.

டேவிட்!

டேவிட்! என்ன . . . ஏன் இங்கே படுத்திருக்கிறாய்.. உடம்புக்கு என்ன…?

டேவிட்டின் கன்னத்தில் குளுமையான ஸ்பரிசம். படுக்கையறை ஜன்னல் திரை வடித்து உள்ளனுப்பிய மெல்லிய வெளிச்சம் லிஸாவின் முகத்தில் பளப்பளப்பைக் கூட்டியது. வெயிலை ஏற்றுக் காற்றில் அலையும் சோளக்கதிர்களாய் அவளின் மென்மஞ்சள் கூந்தல் அலைவுகொண்டது. டேவிட் தலையைத் திருப்பிப் படுக்கையைப் பார்த்தான். விரிப்பு நேர்த்தியாகப் படுக்கையின் பரப்பை மூடியிருந்தது. மேகங்களற்ற இளநீல வானத்தின் முகத்தைப் போலப் படுக்கை இருந்தது.

டேவிட், நான் உனக்காக கராஜில் காத்துக்கொண்டிருந்தேன். நாம் போக வேண்டாமா. ஒன்றும் சொல்லாமல் நீ இங்கே வந்து படுத்தால் என்ன?

முகத்தை வருடும் அவள் கைவிரல்களை டேவிட் கெட்டியாகப் பிடித்துக்கொண்டான். பயமாக இருக்கிறது லிஸா. கண்ணுக்கு முன்னே பிணங்கள் தோன்றுகின்றன. படுக்கையில். அலுவலக ஆவண அறைகளில். கழிப்பறைகளில். போக்குவரத்து சிவப்பு சிக்னல் பச்சையாக மாறுவதற்குக் காத்திருக்கும்போது அருகிலிருக்கும் வாகனங்களுக்குள். பூங்கா மர நிழல்களில். ஒரேயரு கணத்தில் வெளி சட்டென மாறிப் பிணத்தின் தோற்றம் மிதந்து என் கண் முன்னால் வந்துவிடுகிறது. ஒரே கணத்தில் அது மறைந்து நிதர்சன உலகம் மலர்ந்துவிடுகிறது. ஒரு காலை இந்த உலகிலும் இன்னொரு காலை எலும்புக்கூடுகள் உறைந்திருக்கும் நிழலுலகத்திலும் வைத்து நான் நடந்து எங்கே போய்க்கொண்டிருக்கிறேன்?

டேவிட், ஏன் பேசாமல் இருக்கிறாய்?

லிஸா, எனக்குத் திடீரெனத் தலை வலிக்கிறது. நீ மட்டும் போய்விட்டு வருகிறாயா என்று கேட்டான் டேவிட்.

டேவிட், லிஸா இருவரும் தங்களுடைய நண்பரொருவருடைய வீட்டுக்கு மதிய உணவுக்காகப் போக வேண்டியிருந்தது.

வெறும் தலைவலிதானா?

லிஸா என்று அவளுடைய கைவிரல்களைப் பற்றி முத்தமிட்டான் டேவிட்.

நான் சிறிது நேரம் இளைப்பாறினால் சரியாகிவிடும். நீ போய்விட்டு வா. ஹென்றியிடம் நான் போனில் பேசிக்கொள்கிறேன்.

டேவிட் முன்னறையில் வந்து டி.வி. முன் அமர்ந்திருந்தான். லிஸா கிளம்பிப் போயாயிற்று. வீட்டுக்குள் கண்ணுக்கு இதமான இருள் அங்கங்கே சேர்ந்திருந்தது. ஒரு நெருக்கடியின் தற்காலிக முடிவுக்குப் பிறகு, வீடு விடும் பெருமூச்சினால் எல்லாத் திரைச்சீலைகளும் அசைவதாய் டேவிட் நினைத்துக்கொண்டான். ஆளுயர ஜன்னல் வழி தெரிந்தது கோடையின் இளமதியப் பொழுது. இன்னும் கோடைக்காலம் முழுமையாகத்தன் இருப்பை உணர்த்த ஆரம்பிக்கவில்லை. வெளியேறும் வசந்தகாலத்தின் கால் தடங்கள் பதிந்திருக்கும் வீட்டுத் தோட்டத்தில் பரந்திருக்கும் ஒளி மென்மையான சருமத்தை அணிந்திருந்தது. சீராக வெட்டப்பட்டிருந்த புல்வெளியில் ஜொலிக்கும் பசுமை புல்வெள¤க்குள் அளவற்றதாய்த் தினம் இறங்கும் நீரின் மகத்துவத்தை அறிவித்தது. புத்தம் புது ரோஜாக்கள் புல்வெள¤யின் இருபக்கத்திலும் வரிசையாகப் பூத்திருந்தன. தேன்சிட்டு ஒன்று அவ்வப்போது செடிகளுக்கிடையில் வெயிலை வெட்டும் மின்னலைப் போலப் பறந்துகொண்டிருந்தது. எந்தச் செடிக்குப்போவது என்ற குழப்பத்தில் சில நேரம் புல்வெளியின் மீது அந்தரத்தில் ஊசிமுனை சிறகுகள் துடிக்க யோகத்தில் கிடந்தது. எப்பொழுதாவது ஒரு நீலத்தும்பி புல்வெளிமீது எல்லாத் திசைகளிலும் ஒரே சமயத்தில் போய்க்கொண்டிருந்தது.

டேவிட் தொலைக்காட்சியில் சானல்களை வரிசையாக மாற்றிக்கொண்டிருந்தான். அவனுடைய இதயத்துக்குள் அழுத்தம் குறையாமலிருந்தது. ஒரு ஆசுவாசமான காட்சி தன்னை மறக்க டித்துக்கொள்ளும் வகையில் வருமா என்று தேடினான். எது வும் அவன் கவனத்தை ஈர்ப்பதுபோலத் தெரியவில்லை. சினிமா, விளையாட்டு, மதிய நேரத் தொலைக்காட்சித் தொடர்கள், செய்திகள் என ஒரே விதமாக மீண்டும் மீண்டும் வந்தன. சானல் வரிசையில் இறுதி எண்ணுக்கு வந்துவிட்டான். நூற்றுக்கணக்கான சானல்கள் செயற்கைக்கோள் மூலமாக அவன் தொலைக்காட்சிப் பெட்டிக்குள் விழுந்துகொண்டேயிருக்கின்றன. காட்சியற்று வெறும் வெளிச்சக் கோடுகள் செதில் செதிலாய்த் திரையை வெட்டிக்கொண்டிருந்தன. தகரப் பரப்பில் விழும் மழைபோல ஒரு சத்தம் தொடர்ந்து எழுந்தது. டேவிட் அதையே உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தான். அடுத்த சானலுக்குப் போக மிகவும் அயற்சியாக இருந்தது. எதுவும் செய்யவிரும்பாதவனாக ஆகியிருந்தான். சிறிது நேரத்தில் தொலைக்காட்சித் திரையில் அடுத்தடுத்து வந்த வெளிச்சக் கோடுகள் முற்றிலுமாக அழிக்கப்பட்டுக் கரும் திரை படர்ந்தது. சத்தமும் நின்றது. ஒரு மனிதன் தோன்றினான். அவன் டேவிட்டையே உற்றுப் பார்த்தான். அவனுடைய தோற்றத்திலிருந்து அரபு நாட்டைச் சேர்ந்தவனாக இருக்கக்கூடும் என்று அனுமானித்தான். அந்த மனிதன் பேச ஆரம்பித்தான்:

இங்கே பாருங்கள். என் கைகள் எப்படி நடுங்குகின்றன.

அவன் கையை உயர்த்திக் காட்டினான். மேலும் கீழுமாய் அவை ஆடின. சில கணங்களுக்குப் பிறகு அவன் கைகளை மார்புக்குக் குறுக்காகக் கட்டிக் கொண்டான்.

யாரையும் சுட்டிக்காட்ட முடியவில்லை. யார் தவறு செய்கிறார்கள், யார் நீதியின் பக்கம் நிற்கிறார்கள் என்பது எனக்குத் தெளிவாகத் தெரியவில்லை. ஆனால், அது இப்போது முக்கியமல்ல. நான் இன்று உயிரிழக்கத் தயாராய் இருந்தேன். ஒரு தயக்கம்கூட இருக்கவில்லை. மிகவும் விரும்பியே அந்தச் செயலை மேற்கொண்டேன். ஓர் உன்னதக் காரியத்துக்காக உயிரைக் கொடுப்பது வீரமான விஷயம். அப்படி ஒரு செயலைப் புரிந்தால் உயிர் பிரிந்த அடுத்த கணத்தில் சுவர்க்கத்தின் கதவுகள் படாரென்று திறந்துகொள்ளும். அது ஒரு முனை. இன்னொரு முனையில் இந்தச் சூழலின் உக்கிரத்தை எதிர்கொள்ளத் திராணியற்று உயிரை நீத்துவிடும் கோழைத்தனம். நான் அந்தக் கணத்தில் கோழையாகத்தான் இருந்தேன் என்பதை வெட்கமின்றி ஒப்புக்கொள்கிறேன்.

அவன் டேவிட்டின் வயதையத்தவனாக இருக்கலாம். ஆனால் காலத்தின் பாதங்கள் படியாதவொரு தோற்றத்தையும் கொண்டிருந்தான். அவன் குரலில் எந்த விதமான எதிர்பார்ப்பும் இல்லை. ஒப்புக்கொள்ளும் தன்மையும் இதற்குமேல் வேறு ஒன்றும் இல்லை என்ற தொனியும் இருந்தது.

நான் அந்த டீக் கடையின் வாசலில் விழுந்திருந்தேன். அதன் இரும்பு ஷட்டர் மேல் முகத்தை அழுத்திச் சாய்ந்திருந்தேன். தலைக்கு மேலே கைகளைப் பிணைத்திருந்தேன். எந்தக் கணமும் ஒரு தோட்டா என் தலையின் பின்னால் ஒரு கண்ணைத் திறந்து என் மூளையைக் கொட்டிவிடும் என்று காத்திருந்தேன். உண்மையில் நான் அந்தக் கணத்தில் அந்தத் தோட்டாவை மிகவும் விரும்பினேன். என் இன்னல்களை யெல்லாம் ஒரு சிதறலில் அழித்துவிடும் சக்தி அதில் இருந்தது. ஆனால், அந்தக் கணம் முடிவற்று நீண்டது. எனக்குப் பின்னாலிருந்த கூட்டத்திலிருந்து ஆவேசமான குரல்கள் எழும்பிக்கொண்டிருந்தன. எந்த இடத்தில் அடித்தால் எனக்கு அதிகம் வலிக்கும் என்று ஒவ்வொருவனுக்கும் வெவ்வேறு அபிப்பிராயங்கள் இருந்தன. தங்கள் அபிப்பிராயமே சரியானது என்பதை நிரூபிக்க முனைந்த சிலர் ஒன்றும் பேசாமல் என்னைப் பின்னாலிருந்து தாக்கினார்கள். என் தொடைகளில் துப்பாக்கியின் கட்டையால் அடிக்கப்பட்டேன். நான் வெட்கமின்றி அழுதேன். என்னை விட்டுவிடும்படி கோரும் இறைஞ்சல்களாக அதை எடுத்துக்கொண்ட அவர்கள் மீண்டும் மீண்டும் வெவ்வேறு இடங்களில் அடித்தார்கள். அவர்களுக்குப் புரியவில்லை. என்னுடைய விருப்பமெல்லாம் நான் கொல்லப்பட வேண்டும் என்பதே.

இரண்டு வாரங்களாக வெளியில் போக முடியவில்லை. வீரிட்டுப் பறக்கும் விமானச் சத்தங்கள் தொடர்ந்து கேட்டுக்கொண்டிருந்தன. குண்டுகள் நகரமெங்கும் இறங்கிக்கொண்டிருந்தன. தெருவில் டாங்குகள் உருண்டு போகையில் வீட்டுக்குள் அதிர்வுகள் உருவாயின. எங்கோ கதவுகள் தட்டப்படும் சத்தம் சதா கேட்டுக்கொண்டேயிருந்தது. இந்தப் போர் ஒரு வருடத்துக்கு முன்பே முடிவுபெற்றுவிட்டதாக அறிவிக்கப்பட்டது.

வெற்றிபெற்றவர்கள் சதுக்கத்தில் சிலைகளை உடைத்து வானில் துப்பாக்கியால் சுட்டபடி கொண்டாடியபோது, நானும் அங்கே குடித்துக் கூத்தாடியிருக்கிறேன். ஆனால் இந்த ஒரு வருடத்தில் எத்தனை அநியாயங்கள் நிகழ்ந்துவிட்டன. எத்தனை உயிர்கள் தினசரி பலியாகிக்கொண்டிருக்கின்றன. மிகுந்த அலுப்பாக இருக்கிறது. இப்போது யார் யாருடன் சண்டை போடுகிறார்கள் என்று தெரியவில்லை. ஊரடங்கு தொடர்ந்து ஒவ்வொரு நாளாக நீடித்துக் கொண்டிருக்கிறது. என்னுடைய இன அடையாளம் மிகுந்த தொந்தரவு தரக்கூடிய ஒன்றாக மாறிவிட்டதாகச் சொல்கிறார்கள். என்னுடைய மனைவி மற்ற இனத்தைச் சேர்ந்தவள். அவளுடைய இனத்தாரும் என்னுடைய இனத்தாரும் ஒருவரை ஒருவர் வெட்டிக் கொல்கிறார்கள். என்னுடைய மைத்துனன், என் மனைவியின் தம்பி, ஒரு நாள் பட்டப்பகலில் துணிச்சந்தையில் கார் வெடி குண்டு வெடித்ததில் இறந்தான். என்னுடைய தாய்மாமன் வீட்டுக்குள்ளேயே செத்துக்கிடந்தான். அவன் நெற்றிப் பொட்டு நடுவில் தோட்டா துளை. இன்னமும் எத்தனையோ மரணங்கள் நிகழ்ந்தபடியே இருக்கின்றன. வெளிநாட்டுக்கு அகதியாகத் தப்பிச் செல்வதுதான் ஒரே வழியாகத் தென்படுகிறது. அதற்கும் ஆயிரம் போட்டிகள். பணத்தின் தேவை கையை மீறியதாக இருக்கிறது. நான் வேலைசெய்துவந்த அருங்காட்சியகம் எப்போதோ சூறையாடப்பட்டுவிட்டது. மூன்று மாதமாக மூடப்பட்டுக் கிடக்கிறது. இருக்கும் சேமிப்பு கரைந்து கொண்டே வருகிறது. இந்தச் சமயத்தில்தான் என்னுடைய பெண், அவள் சிறுமி, பதினொரு வயதுதான், சிரிக்கும்பொழுது அழகாக நீண்டு விரியும் கண்களைக் கொண்டவள், அலறத் தொடங்கினாள். அவள் பள்ளிக்கூடம் போய் நாளாயிற்று. வீட்டுக்குள்ளேயே பெரும்பாலும் அடைந்து கிடந்தவள், திடீரென்று வீல்வீலென்று தூக்கத்தில் கத்தத் தொடங்கினாள். முதலில் கெட்ட கனவென்று விட்டுவிட்டோம். மெதுவாக அவளுடைய கத்தல் பகலிலும் கேட்க ஆரம்பித்தது. கண்களை மூடிக்கொண்டு கத்துவாள்.

ஏனென்று கேட்டால் உற்றுப் பார்ப்பாள். அவளுடைய சிறு இதயம் படபடவெனத் துடிப்பதை அப்போது உணர முடியும். பதில் பேசாது எங்கேயோ வெறித்துப் பார்ப்பாள். அவளுக்குப் பேய் பிடித்திருக்கலாமென நாங்கள் சந்தேகப்பட்டோம். வீட்டைச் சுற்றி எத்தனையோ பிணங்கள் விழுந்துகொண்டிருக்கும்பொழுது எத்தனை பேய்கள் எங்களைச் சுற்றி அலைந்து கொண்டிருக்க வேண்டும். சற்று நேரம் அசைவின்றி அவள் தூங்கும்பொழுது அவள் முகத்தையே உற்றுப் பார்த்துக்கொண்டிருப்பேன். எப்போதும் நிழலொன்று அவள் முகத்தை மூடியிருப்பதுபோல் தோன்றும். அவள் தூங்கும்போது அவள் முகத்தைப் பார்ப்பது எனக்கு மிகவும் பிடித்த ஒன்றாயிருந்தது முன்பு. வசீகரமான ஒளி அதில் வீசுவதுபோலத் தோன்றும். இப்போது அவளைப் பார்க்கவே எனக்குப் பயமாக இருந்தது. பக்கத்து வீட்டுக் கிழவி இரவில் வந்து ரகசியமாகக் காதில் உரசிப்போனாள். இவளுக்கு நிச்சயம் பேய்தான் பிடித்திருக்கிறது. எனக்கு அவள் கைகளைப் பிடித்துக் கொண்டால் உடம்பெல்லாம் நடுங்குகிறது. என்னுடைய கணவன் சிறிது காலம் இப்படிக் கிடந்திருக்கிறான். இவளைக் கூட்டிக்கொண்டு வெளியே போக வேண்டாம். எனக்குத் தெரிந்த மந்திரிப்பவர் ஒருவரிடம் சொல்லி அனுப்புகிறேன் என்றாள்.

மறுநாள் பொழுதடங்கும் முன் வயதான ஒருவர் வீட்டுக்கு வந்தார். அவரைக் கோவிலில் பார்த்திருப்பது ஞாபகத்துக்கு வந்தது. அவர் எங்களிடம் எதுவும் பேசவில்லை முதலில். நேராக என் பெண்ணைக் கைப்பற்றி இழுத்துக் கண்ணோடு கண் வைத்துப் பார்த்தார். சதா முனகிக்கொண்டிருக்கும் வாயுடன் அவர் அவளைத் தன் மடிமேல் சரித்துக்கொண்டார். அவருடைய கையில் ஒரு குப்பியும் வண்ண வண்ண இறகுகளாலான விசிறியும் இருந்தது. முதலில் அவள் முகத்தின் மேலும் உடலின் மேலும் அந்த விசிறியால் தடவிக்கொடுத்தார். என்னுடைய செல்ல மகள் எந்தச் சத்தமும் போடாது ஒடுங்கிக் கிடந்தாள் அவர் மடியில். என்னுடைய மனைவி தன் கண்ணை மூடிக்கொண்டு விசும்பியபடி கூடத்தின் மூலையில் அமர்ந்திருந்தாள். அவ்வப்போது அவர் என் மகளின் உடலின் மேல் அந்தக் குப்பியிலிருந்து எதையோ தெளித்தார். பிறகு குனிந்து அவள் முகத்தின் மீது வாயைக் குவித்து ஊதினார். அவள் அப்படியே சுருண்டு கிடந்தாள். அவர் கிளம்புவதற்கு முன் என்னை அழைத்து “உன்னுடைய மகள் பிணங்களையே எங்கும் பார்க்கிறாள், அதனால் தான் இப்படி நடந்துகொள்ளுகிறாள். அவள் கண்முன் ஏதேனும் அசம்பாவிதம் நடந்ததா?” என்று கேட்டார். அவருடைய தாடிக்குள் ஒளிந்திருந்த உதடுகள் அசைந்து எழுப்பிய இந்தக் கேள்வியின் முன் நான் தடுமாறிப்போனேன். “நேரிடையாக ஒன்றும் நிகழவில்லை என்றே நினைக்கிறேன். ஆனால் ஒரு மாதமாக வெளியிலிருந்து ஏகப்பட்ட சத்தம்.. எங்கும் போக முடியாது . . .” என்று குழறலாய்ப் பதிலளித்தேன். அதற்கு அவர் “அவள் மீண்டும் மீண்டும் உங்களிருவரையே பிணங்களாகப் பார்க்கிறாள். அவளுக்கு நீங்கள் தைரியம் சொல்ல வேண்டும். முடிந்தால் ஒருமுறை வெளியே கூட்டிப்போய் வாருங்கள். நான் மீண்டும் இன்னொரு நாள் வந்து பார்க்கிறேன்.” என்று சொல்லிவிட்டுப் போனார்.

அவள் முகத்தில் கரிய நிழல் படிந்திருந்தது. இந்த உலகத்தில் தன் இடம் புரியாமல் தவிக்கும் ஒரு சிறு பெண்ணாக அவள் நின்றாள். நான் அவளிடம் ஓங்கி உத்தரவாதமாக எந்தச் சக்தியாலும் தகர்க்க முடியாத நிச்சயத்துடன் “நான் உன்னை விட்டுவிட்டு இறக்க மாட்டேன்” என்று கூறவே விரும்பினேன். ஆனால் என்னால் முடியவில்லை. அவளுக்கும் எனக்கும் நடுவில் ஒரு நிழல் விழுந்திருந்தது. அந்த நிழலின் இரு கரைகளில் நின்ற எங்களால் அதைக் கடக்க முடியவில்லை. என் மனைவி மண்டியிட்டுப் பிரார்த்தனை செய்யத் தொடங்கியிருந்தாள். கசக்கி எறியப்பட்ட துணிமூட்டையைப் போல அவள் தரையில் கிடந்தாள்.

அன்றிரவு என்னுடைய பெண் விடாது கத்தினாள். எத்தனையோ விதமாக அவளை ஆசுவாசப்படுத்தியும் அவள் கண்களைத் திறக்க மாட்டேன் என அடம் பிடித்தாள். கண்களைத் திறந்தால் வாய் அலறத் தொடங்கும். பயங்கரங்கள் நடக்கும் வெளியுலகைவிட, வீடு இன்னும் பயங்கரமான பிரதேசமாக மாறியிருந்தது. நான் அங்கிருந்து தப்பிக்கவே விரும்பினேன். இந்தப் போர் தொடங்குவதற்கு முன் எங்களுக்கு வாய்த்திருந்த வாழ்க்கைக்காக, அது எத்தனை அசௌகரியங்களையும் அநீதிகளையும் கொண்டிருந்திருந்தாலும், மனம் ஏங்கித் துக்கித்தது. இப்போது வாசல் கதவு தட்டப்பட்டு நீ யார்? எந்த இனத்தைச் சேர்ந்தவன் என்று துப்பாக்கிக் கும்பல் கேட்கும்பொழுது எந்தப் பதில் சரியானது, எந்தப் பதில் உயிரைக் காப்பாற்றும் எனத் தெரியாமல் தவிக்கும் நிலை. இதுவரை, கடவுள் புண்ணியத்தில் கதவுகள் தட்டப்படவில்லை. ஆனால், அது தட்டப்படும் நிச்சயத்தை மனம் சதா உருவாக்கி அலைக்கழித்துக் கொண்டிருக்கிறது. அவையெல்லாவற்றுக்கும் மேலாக இவளின் அலறல்! திடீரென என் மனைவி ஓவெனக் கத்தினாள். அவளுடைய கையில் நான் தற்காப்புக்காக வைத்திருந்த கைத்துப்பாக்கி இருந்தது. அதை அழுதபடியே என் பெண்ணின் முகத்திற்கெதிரே நீட்டினாள். இதோ இந்தப் பேயை நான் சுட்டுக் கொல்கிறேன். இதுதானே என்னைப் பிணமாக மாற்றப்போகிறது. அதையே நான் ஒழித்து விடுகிறேன் என்று துப்பாக்கியை வீசி வீசிக் கத்தினாள். அவள் கண்கள் பைத்தியம் பிடித்தவளின் கண்களைப் போல விரிந்திருந்தன. மின் வெளிச்சம் எப்போதோ துண்டிக்கப்பட்டிருந்தது. மெழுகுவர்த்தி சுடர் லேசான காற்றில் என் மனைவியின் முகத்தில் அசைந்து முகத்தை விகாரப்படுத்தியது. நான் மிகவும் சோர்ந்திருந்தேன். சேர்ந்தாற் போல மூன்றிரவுகளாகத் தூக்கம் இல்லை. இமைகள் அவ்வப்போது தாழ, என் பெண்ணின் அலறலில் விழிப்புற்று அதிர்ந்தபடியிருந்தேன். முதலில் என் கண்ணெதிரே நிகழ்ந்துகொண்டிருப்பதை ஏதோ ஒரு திரையில் பார்ப்பது போலவே இருந்தது. ஒரு பார்வையாளனின் ஆர்வத்தில் அடுத்து என்ன நடக்கப் போகிறது என்று எதிர்பார்த்துக் காத்திருந்தேன். சில வினாடிகளுக்குப் பிறகே நிலைமையின் தீவிரம் என்னைத் தாக்கியது. துப்பாக்கியை என் மகளுக்கு நேராகக் காட்டியபடி என் மனைவி ஏதேதோ உளறிக்கொண்டிருந்தாள், முகத்தில் கண்ணீருடன். என் மனைவியின் மீது பாய்ந்தேன், என்ன மடத்தனம், என்ன பைத்தியக் காரத்தனம், கீழே போடு அது தோட்டாக்கள் நிரம்பியது என்று கத்தியபடி. அவள் என்னை எதிர்த்தாள், கையை மடக்காமல், கீழே துப்பாக்கியைப் போடாமல்.

என் பெண் கண்களை இறுக மூடிக்கொண்டு அலறத் தொடங்கினாள். அடுத்த சில கணங்களில் என்ன நடந்தது என்பதை என்னால் தெளிவாகச் சொல்ல முடியாது. ஒரு வாசத்தை, ஒரு ஸ்பரிசத்தை அந்தக் கணமும் என் உடல் தெளிவாக உணர்ந்துகொண்டது. நானும் என் மனைவியும் புரண்டதில், அவள் உடலின் வாசனையில் தொடுகையில் உள்ளுக்குள் ஒரு கிளர்ச்சி மொட்டுவிட்டதை என் உள்ளுணர்வு கண்ணோரத்தில் கவனித்ததும் ஞாபகத்திலிருக்கிறது. நான் அவளுடைய எதிர்ப்புச் சக்தியைக் கண்டு ஒரு கணம் மலைத்துப் போய்ப் பிறகு முரட்டுத்தனமாக அவள் கைகளிலிருந்து துப்பாக்கியைப் பிடுங்குகையில் துப்பாக்கி வெடித்தது. யாருடைய கையில் துப்பாக்கியின் விசை இருந்தது என்பதெல்லாம் தெளிவாகச் சொல்ல முடியாது. ஏதோ ஒரு கணத்தில் தலை சுற்றினாற் போன்ற மனநிலையில் நிகழ்ந்துவிட்டது. என்னுடைய மகள் ரத்த வெள்ளத்தில் கிடந்தாள். எல்லாமே தெளிவற்றதாய்க் கசங்கலாயிருந்த தருணத்தில் கண்ணாடிக்குப் பின்னால் நிகழும் காட்சியின் மௌனம் என்னைச் சுற்றியிருந்தது. அந்தச் சிறு அறையில் நான் ஒரு பார்வையாளனாய் நின்றபோது என் கண்ணில் எங்கும் பிணங்களே தெரிந்தன. என் மகள்மீது என் மனைவி விழுந்திருந்தாள்.

அவளுக்கு அந்தக் கணத்தில் உயிர் இருந்ததா என்று சொல்லத் தெரியவில்லை. உயிர் இருந்திருந்தாலும் இனி அவள் பிணம்தானே? அந்த இரு உடலையும் ரத்தம் ஒரு பாலமாக இணைத்திருந்தது. நான் வெளியே ஓடினேன். எத்தனை அபாயங்கள் நகரத்துக்குள் இருந்தாலும் அதைப் பற்றி ஒரு துளிக்கூட நினைப்பின்றி வெளியே ஓடினேன். பாலைக்காற்று வெம்மையாக என்னைத் தாக்கியது. வானத்தில் மேகங்கள் பற்றியெரியும் கட்டடங்களிலிருந்து சுருண்டெழும் புகைபோல அடர்ந்திருந்தன. நிலவு அந்த இரவில்கூடத் தன் வெளிச்சத்தைத் தணித்துக்கொள்ளவில்லை. நான் தெருக்களின் நடுவே ஓடினேன். ஆங்காங்கே போராளிகளுடன் அமெரிக்க ராணுவம் மோதும் சத்தங்களும் வெடிகுண்டுகளின் வெளிச்சச் சிதறல்களும் கேட்ட படியிருந்த இரவில் என்னை நோக்கி வரவிருக்கும் துப்பாக்கிக் குண்டை நோக்கி ஓடினேன். அப்போது ஊர் எல்லையில் ஒரு கும்பலால் வழிமறிக்கப்பட்டேன். அவர்களைப் பார்த்தவுடனேயே எனக்குத் தெரிந்து விட்டது அவர்கள் என் இனத்தைச் சார்ந்தவர்கள் இல்லை என்பது. என்னை அவர்கள் விசாரித்தபோது என் உண்மையான பெயரையும் அடையாளத்தையும் தெரிவித்தேன்.

நான் வாழ வேண்டிய காலம் இருந்திருக்கிறது. இரவின் சரிவில் என் மனைவியுடன் கூடியபடி, அவளின் வெம்மையான சருமத்தை முகர்ந்தபடி இருந்திருக்கிறேன். என் பெண்ணை அவள் சிரிக்கும் கண்களை ரசித்தபடி அள்ளியெடுத்துத் தழுவியிருக்கிறேன். வெயிலில் மின்னும் நதியின் சருமத்தைப் பாலத்திலிருந்து பார்த்தபடி மாலைப் பொழுதுகளைக் கடத்தியிருக்கிறேன். ஆனால், இனி நான் இருக்க வேண்டிய உலகம் இதுவல்ல. இந்தத் தீர்மானத்துடனே மரணத்துக்குத் தயாராய் நின்ற பொழுது நான் ஒண்டி நின்ற டீக்கடையின் சுருள் கதவு மெல்ல மேலேநகர்ந்தது. கும்பல் போட்டுக்கொண்டிருந்த சத்தத்தில் அந்த இரும்புக் கதவு மேலெழும்பும் சத்தம் யாருக்கும் கேட்கவில்லை. நான்கடி உயரத்துக்கு இடைவெளியை உருவாக்கி நின்ற கதவின் உள்புறமிருந்து ஒரு நிழல் மனிதன் என் கால்களைப் பற்றி இழுத்தான். நான் தரையில் விழுந்தேன். அடுத்த கணமே அவன் என்னைக் கடைக்குள் உள்ளிழுத்துக்கொண்டு கதவைச் சட்டென்று கீழிறக்கினான். பின்வாசல் வழியாக அவன் என்னை இழுத்துக்கொண்டு ஓடினான், குறுக்குத் தெருக்கள் வழியாக அந்தக் கூட்டத்திற்கும் எங்களுக்கும் இடையில் தொலைவை உருவாக்கியபடி. அந்த இரவு முழுவதும் நாங்கள் ஓடிக்கொண்டேயிருந்தோம். நான் அவனை விட்டுவிடும்படி கெஞ்சினேன். அவன் கேட்கவேயில்லை. பிறகு நடந்ததெல்லாம் முக்கியமல்ல. நான் இன்னும் உயிரோடு இருக்கிறேன். வெறும் உயிரோடு மட்டும்.

தொலைக்காட்சித் திரை மெல்லக் கறுப்பாகி அந்த மனிதனின் தோற்றம் மெல்லக் கரைந்தது. தொலைக் காட்சித் திரையெங்கும் குழந்தை கிறுக்கிய கோடுகள் போலக் கசங்கலான வரிகள் வெளிச்சமாய்ப் பரவின. டேவிட் சற்று நேரம் தொலைக்காட்சித் திரையைப் பார்த்துக்கொண்டிருந்தான். அந்த இருள்திரையிலிருந்து மேலும் எவற்றையோ பெறக் காத்திருப்பவனைப் போல். பிறகு மிகவும் சிரமமான காரியத்தைச் செய்பவனைப் போலத் தொலைக்காட்சியை நிறுத்தினான். கையில் ரிமோட் ஒரு ஆயுதத்தைப் போலக் கனத்தது.

பொழுதின் துல்லியம் கூடிவருவது ஜன்னல்வழி தெளிவாகத் தெரிந்தது. அவன் இருக்கும் அறை அந்த மதிய வெளிச்சத்தில் தகதகவென மின்னியது. சுவர்கள், கண்ணாடிச் சன்னல்கள், கண்ணாடிக் கதவு இவற்றின் விளிம்புகள் அழிந்து ஒளியால் அமைக்கப்பட்ட வெளி போன்று இருந்தது. டேவிட் தன் கைகளைப் பார்த்துக் கொண்டான். அப்பழுக்கற்ற வெண்சருமத்தில் பொன்நிற மயிர்கள் வரிவரியாக நீண்டன. எதையோ தொடுவதைப் போலக் கைகளை அந்தரத்தில் நீட்டினான். அவனுடைய விரல் நுனிகள் வெளிச்சத்தில் மெல்ல நடுங்கின.

அவனுக்கு செப்டம்பர் 11ஆம் தேதியின் ஞாபகம் வந்தது. அந்தத் தௌ¢ளத்தெளிவான கலிஃபோர்னியக் காலையில் அவன் அலுவலகம் செல்லக் கிளம்புவதற்கு ஆயத்தங்களை மேற்கொண்டிருந்தான். கையில் காலை உணவுடன் தொலைக்காட்சி முன்னால் வந்து உட்கார்ந்தவன் கண்ணில்பட்டது அமெரிக்கா அண்டர் அட்டாக் என்ற வாசகம். சிவப்பு நிறத்தில் கொட்டை எழுத்துகளில் திரையின் அடிப்பகுதியில். திரையில் கட்டடம் பற்றி எரிந்துகொண்டிருந்தது. திரும்பத் திரும்ப விமானம் கட்டடத்தை மோதும் காட்சி ஓடிக்கொண்டேயிருந்தது. அன்று அலுவலகத்தில் வழக்கம் போலவே வேலை நடந்தது. யாரும் நடந்தவற்றைப் பற்றி எதுவும் பேசிக்கொள்ளவில்லை. ஏதோ ஒரு இறுக்கம் கூடியிருந்தது, அதைவிட மேலாக வேறொன்றும் பதற்றங்கள் இருக்கவில்லை. மத்தியானம் அலுவலகப் பணி குறித்த கூட்டங்கள் நடக்கும் கூடங்களில் ஒன்றில் ஒரு பத்து பேர் கையில் பைபிளுடன் மேசையைச் சுற்றி உட்கார்ந்து பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்தார்கள். ஒவ்வொருவரும் கடவுளை நாத் தழுதழுக்க வேண்டிக்கொண்டார்கள், இறந்தவர்களின் ஆத்மாவுக்காக. எல்லாருடைய பாவங்களும் தீர்வுற வேண்டுமென்பதாய். சிலர் கன்னங்களில் நீர் வழிந்தது. அவர்கள் எல்லோரும் டேவிட்கூட வேலை பார்ப்பவர்கள் தான். ராஜர், டோனி, மரியா, கெல்லி. டேவிட் சிறிது நேரம் அங்கே உட்கார்ந்திருந்தான். அவனைப் பார்த்த டோனி ‘டேவிட் உன் வேதனையையும் பகிர்ந்துகொள். இந்தச் சமயத்தில் பிரார்த்தனைதான் நமக்கும் நம் நாட்டுக்கும் வலுவைக் கொடுக்கும். நம் துக்கங்களை ஏற்றுக்கொள்ளும் கர்த்தரிடம் நாம் நம் மனித குலத்தின் குற்றங்களுக்காகப் பாவமன்னிப்புக் கோருவோம். இறந்தவர்களும் நம் நாட்டினரும் இதைத்தான் நம்மிடம் எதிர்பார்க்கிறார்கள்’ என்றான். அவன் குரலில் இருந்த ஏதோ ஒன்றை டேவிட் மனப்பூர்வமாக வெறுத்தான். அவனுக்குக் குமட்டிக்கொண்டு வந்தது. அவன் பேச முடியாமல் இருப்பதைப் பார்த்த ராஜர், ‘நம் பிதாவே டேவிட்டுக்காக நான் பிரார்த்திக்கிறேன். இன்று அவன் நம்மிடம் இருப்பதற்காக நான் நன்றி கூறுகிறேன்’ என்று டேவிட்டை வலுவாக அணைத்தபடி பிரார்த்தித்தான்.

அந்தத் தினம் அவன் மறக்க முடியாத தினமாக மாறிவிட்டது. அன்று மாலைதான் அவன் லிஸாவைப் பார்த்தான். வேலை முடித்துவிட்டு வீட்டுக்குப் போக முடியாமல் பாரில் அவன் அமர்ந்திருந்தான். அது ஒரு மிகச் சிறிய பார். பார்களில் வழக்கமாக இருக்கும் அகன்ற தொலைக்காட்சித் திரையோ அதில் எப்போதும் ஓடும் விளையாட்டுக் காட்சிகளோ கிடையாது. அந்தச் சிறிய பாரில் எப்பொழுதாவது ஜாஸ் இசைக் கலைஞர்கள் வந்து இசைப்பது உண்டு. புகழ்பெற்ற கலைஞர்கள் இல்லை, யாரும் கேள்விப்பட்டிராத கலைஞர்கள். டேவிட்டுக்கு அன்று அங்கேதான் போக முடியும் என்று தோன்றியது. மெல்லிய இருளில் டேவிட் மைல்ஸின் ஜாஸ் இசையை ஒரு எதிரொலிபோலக் கேட்டுக்கொண்டிருந்தபோது லிஸா அங்கு வந்ததைப் பார்த்தான். அந்த இருண்ட அறையிலும் அவளிருக்கும் இடத்தில் ஒரு பிரகாசம் ஏற்பட்டிருந்ததை டேவிட் கவனித்தான். அவள் அவனிருந்த மேசையிலிருந்து இரண்டு மேசை தள்ளி அமர்ந்திருந்தாள் தனியாக. தன்னையறியாமல் அவளை அடிக்கடி பார்த்தான் டேவிட். எதுவும் பேசுவதற்கு இல்லாமலும் அதே சமயத்தில் எல்லாமே பேசக்கூடியவளாகவும் அவள் இருந்தாள். ஆப்கானிஸ்தானில் அமெரிக்கப் படைகள் தாலிபானுடன் போரைத் தொடங்கிய அன்று லிஸா அவனுடன் சேர்ந்து வாழத்தொடங்கினாள். ஜியார்ஜ் புஷ் சதாம் ஹ§சைனுக்கு 24 மணி நேரம் கெடுவிதித்த நாளன்று டேவிட் அவளைக் கல்யாணம் செய்து கொண்டான்.

ஒரு நாள் போர்ச் செய்திகளை இண்டர் நெட்டில் தேடிக்கொண்டிருந்த பொழுது அவன் அந்த இணையதளத்திற்குப் போக நேர்ந்தது. அங்கேதான் அவன் முதன்முதலாக ஒரு மனிதன் கொலை செய்யப்படுவதைக் கொலைசெய்தவர்கள் எடுத்த வீடியோ காட்சியாகப் பார்த்தான். அந்தக் காட்சியிலிருந்து அவனால் கண்களை எடுக்க முடியவில்லை. அந்தக் காட்சிக் கோப்பைத் தன் கணினியில் ஏன் சேமித்து வைக்கத் தோன்றிற்று என்று பலமுறை யோசித்தும் அவனால் தெளிவான பதிலை அடைய முடியவில்லை. அக்காட்சியில் கொல்லப்படுபவன் ஒரு நாற்காலியில் உட்கார்ந்திருக்கிறான். நான்கு பேர் அவனைச் சுற்றி ஆயுதங்களுடன் நிற்கிறார்கள். கண்கள் மட்டும் வெளியில் தெரியும்படி விட்டுவிட்டு முகத்தைக் கோணிப்பையால் மூடிக் கட்டியிருக்கிறார்கள். கொல்லப்படுபவனின் முகத்தில் எதையும் நம்ப முடியாத தன்மை, நடப்பவற்றைச் சந்தேகக் கண்ணோடு பார்க்கும் தன்மை. கொலைகாரர்கள் அவனை மீண்டும் மீண்டும் எதையோ சொல்லச் சொல்லிக் கேட்கிறார்கள். அவன் பதிலளிப்பது தெளிவாகக் கேட்கவில்லை. ஆனால், அவன் எதையோ மறுப்பதுபோல இருந்தது. திடீரென காமிராக் கோணம் அவன் முகத்திற்கு வெகு அருகில் போகிறது. வாள் ஒன்று திரையின் நடுவில் எழும்புகிறது. அதைப் பிடித்திருக்கும் ஒரு கரத்தின் மணிக்கட்டுவரை தெரிகிறது. பிடித்திருப்பது யாரென்று தெரியவில்லை. அடுத்த கணத்தில் ஒரே வீச்சில் நாற்காலியில் அமர்ந்திருப்பவனின் கழுத்து வெட்டப்பட்டு தலை முழுவதுமாகக் கழுத்திலிருந்து பிரிந்துவிடாமல் அவன் மார்புமேல் ஊசலாடுகிறது. உரத்த கோஷங்கள் கேட்க, ஒரு நியாயத் தீர்ப்பு உணர்ச்சிகரமாக வழங்கப்படுவது போல யாரோ ஒருவன் ஓங்கிய குரலுடன் பேசுகிறான். பேச்சின் சில பாகங்களில் கோஷங்கள் உயர்கின்றன.

டேவிட் இந்தக் காட்சியை மீண்டும் மீண்டும் கணினியில் பார்த்தான். தன் கணினியில் சேமித்து வைத்துக் கொண்டதால் அவனுக்குத் தோன்றும்போதெல்லாம் இதைப் பார்க்க முடிந்தது. ஒவ்வொரு முறையும் அதைப் பார்த்த பிறகு அவனுக்குக் குடலைக் கரிக்கும். ஓவென்று கழிப்பறையில் வாந்தியெடுப்பான். இருந்தாலும் இந்தக் காட்சியை அவனால் பார்க்காமல் இருக்க முடியவில்லை. ஒருநாள் வெறுப்பில் கணினியை எட்டி உதைத்தான். அடுத்த கணமே அது சேதமடைந்து விட்டதோ எனப் பயந்து அதை அள்ளியெடுத்துக் கொண்டான். இந்தச் சமயத்தில்தான் அவன் முன்னால் பிணங்கள் தோன்ற ஆரம்பித்தன. லிஸாவுடனான அவனுடைய வாழ்வு வேறு கதிக்குப் போகத் தொடங்கியது. அவன் கவனமெல்லாம் போர்ச் செய்திகளைத் தொலைக்காட்சியிலும் கணினியிலும் பார்ப்பதிலேயே போனது. லிஸா இரவில் படுக்கப்போன பிறகு வெகுநேரம் விழித்திருப்பான். சில சமயம் தொலைக்காட்சி முன்பே சோபாவில் அயர்ந்து உறங்கிவிடுவான். அவர்கள் கூடுவதும் குறைந்துகொண்டே வந்தது. ஒரு நாள் அவளைப் புணர்ந்த பிறகு தான் ஒரு ரத்தக் குளத்தில் நிர்வாணமாகப் படுத்திருப்பதாக அவன் உணர்ந்தான்.

லிஸா அவனுக்குள் நிகழும் மாற்றங்களைச் சற்றேனும் கவனித்திருக்க வேண்டும். அவன் என்றுமே கலகலப்பாக இருந்தவனல்ல. அவர்களிருவருக்குமிடையில் மௌனங்கள் உரையாடல்களுக்குப் பதிலாக பல நாள் நிகழ்ந்திருக்கின்றன. ஆனால், அவனுக்குள் சில காலமாக இருந்து வரும் கொதிப்பு அவளை ஏதோ விதத்தில் தீண்டியிருக்க வேண்டும். சட்டென அவளும் சுருங்கிப்போனது டேவிட்டுக்கும் தெரியும். ஆனால், கையை நீட்டி அவள் கூந்தலைக் கோதிவிடக்கூட முடியாத இயலாமை அவனை வரித்திருந்தது.

ஒரு நாள் மாலை பூங்காவில் கால்நடையாக இருவரும் போனபோது புல்வெளியில் சிறுமிகள் கால் பந்தாட்டம் ஆடிக்கொண்டிருந்ததைப் பார்த்த லிஸா அங்கே நின்றாள். டேவிட் அவள் நின்றதை அறியாது தனக்குள் மூழ்கித் தொடர்ந்து நடந்துகொண்டிருந்தான். சட்டென இளமாலைக் காற்று எழுந்து லேசாகக் குளிர் எடுத்தபோது நினைவுக்கு வந்தவனாய்க் குனிந்த தலையை நிமிர்த்தியபோதே அவள் கூட வராததைக் கவனித்தான். திரும்பிப் பார்த்தபொழுது தூரத்தில் லிஸா அவனையே பார்த்தபடி நின்றிருந்தாள்.

டேவிட் தான் ஒரு மனநல நிபுணரைக் கலந்தாலோ சிக்க வேண்டுமோ என்று எண்ணினான். ஆனால், எதுவும் தன்னால் உருவாக்கப்படாதபொழுது தான் ஏன் எதற்கும் பொறுப்பேற்க வேண்டும் என்ற பிடி வாதமே அவனுக்குள் மேலோங்கியிருந்தது. டேவிட்டின் அப்பா வியட்நாம் போரில் பங்குகொண்டவர். அந்தப் போர் முடிவுக்குவந்த பிறகு, அவரால் குடும்பத்துடன் வாழ முடியவில்லை. போர் முடிந்த சில மாதங்களுக்கு அவர் கண்களில் ஒரு தொலைவு இருந்ததை டேவிட் கவனித்திருக்கிறான். ஆனால், அவர் போரைப் பற்றி ஒரு முறைகூடப் பேசியதில்லை. விவாகரத்துப் பெற்ற பிறகு சில முறை டேவிட்டைத் தேடி வந்திருக்கிறார். ஆனால் போருக்கு முன்னால் இருந்த அப்பா திரும்பி வரவேயில்லை.

தொலைக்காட்சியில் டேவிட் பார்த்த காட்சிகள் எந்த நிலையத்திலிருந்து ஒளிபரப்பப்பட்டன என்று தெளிவாகத் தெரியவில்லை. அந்தச் சேனலை டேவிட் பார்த்ததே கிடையாது. மீண்டும் மீண்டும் அந்த சேனலுக்குப் போய்ப்பார்த்தான். அங்கே ஒன்றுமே இல்லை. தான் உண்மையாகவே அதைப் பார்த்தோமா என்று சந்தேகம் வந்தது அவனுக்கு. அந்த மனிதனின் முகம் தெள்ளத்தெளிவாக மனதில் தோன்றியது. கண்களை மூடிக்கொண்டான்.

அவன் கேட்ட சொற்களும் வரிசை குலையாமல் மனதில் ஓடிக்கொண்டேயிருந்தன. இத்தனை தெளிவை அவனால் எப்படிக் கற்பனை செய்திருக்க முடியும்? அவன் பெருமூச்சு விட்டபடி கண்களைத் திறந்தான். ஜன்னலுக்கு வெளியே புல்வெளியில் நிழலாடியது. ஒரு குரல் கேட்பது போல இருந்தது. டேவிட் ஜன்னலுக்கு அருகில் சென்றபோது புல்வெளியின் நடுவில் ஒரு சிறுமி அமர்ந்திருப்பதைப் பார்த்தான். வெளிச்சத்தை உறிஞ்சிக் குடித்த புல் ஒவ்வொன்றும் ஒரு இலைபோலவும் அதன் நடுவில் பூத்த மலர்போலவும் அவள் இருந்தாள். முழங்காலிட்டு அமர்ந்திருந்தவளின் கன்னங்கரேல் கூந்தல் காற்றில் லேசாக அலைந்து கொண்டிருந்தது. அவன் ஜன்னலைத் திறந்தான். கண்களைத் திறந்து அவனைப் பார்த்தபடியே அமர்ந்திருந்தாள். அவள் எந்நேரமும் அலறக்கூடும் என்று நினைத்தான். ஆனால், அவள் ஒரு சிறிய புன்னகையுடன் அவனையே பார்த்துக்கொண்டிருந்தது அவனுக்கு ஆசுவாசத்தை அளித்தது.

அவனுக்கு வெளியில் செல்ல வேண்டும் என்ற அழுத்தம் கூடியது. வாசலுக்கு வந்தான். வெளிவாசல் புல்வெளியில் செர்ரி மலர்கள் மரத்தில் ஒளிப்பூக்களாக ஒளிர்ந்தன. வானத்தில் வாத்துக் கூட்டமொன்று பறந்து கொண்டிருந்தது. அந்த அற்புதமான மதிய ஒளிப்பொழுதைத் துண்டிக்கும் இருள் துணுக்குகளைச் சேகரித்துக்கொண்டபடி வீடுகள் வரிசையாக நின்றன. அவன் உள்ளுக்குள் நிறையும் இருளுக்கும் வெளியில் பொழியும் ஒளிக்கும் எந்தத் தொடர்பும் இல்லாதது போலிருந்தது. தான் இருப்பது எங்கே என்ற கேள்வி எழுந்தது.

அவனை யாரோ அழைப்பது போலிருந்தது. தெரு நடுவில் வயதான ஒரு பெண்மணி நின்றாள்.

மிகுந்த பதற்றத்துடன் அவனை அழைத்தாள்.

“பக்கத்தில்தான் என் வீடு. என் மகனைக் காரிலிருந்து வீட்டுக்குள் தூக்கிச்செல்ல வேண்டும். உதவ முடியுமா?”

கையை அடுத்த தெரு நோக்கிக் காண்பித்தாள். அவள் ஆடைகள் கசங்கியிருந்தன. முகத்தில் வியர்வை அரும்பியிருந்தது.

“என் மகன்! அமெரிக்க மரின். ஒன்றரை வருடமாக ஈராக்கில் . . . கிருத்துமஸ¨க்கு விடுப்பில் இங்கு வருவதாக இருந்தான். இரு மாதம் முன்பு அவன் ரோந்து சென்ற பொழுது பாக்தாத்தில் ஒரு கார் குண்டுவெடிப்பில் . . .”

அவள் பேச முடியாது நிறுத்தினாள். வெயிலில் அவளுடைய கண் இரப்பைகள் பளபளத்தன.

“இங்கே ராணுவ மருத்துவமனையில்தான் சிகிச்சை அளித்துவந்தார்கள். நான்தான் அவனை வீட்டிலேயே வைத்துக்கொள்ளலாமெனக் கெஞ்சி அழைத்து வந்துவிட்டேன். ஆனால், அவனை வீட்டுக்குள் எப்படிக் கொண்டு போவதென்பதை யோசிக்காமல் முட்டாள்தனம் செய்துவிட்டேன்.”

அடுத்த தெருவில்தான் அவள் வீடு. காருக்கு வெளியே ஒரு சக்கர வண்டி நின்றிருந்தது. இருபது வயதுக்குள்தான் இருக்க வேண்டும். அவள் அவனைக் காரிலிருந்து இறக்க முயன்றிருக்க வேண்டும். அவனுடைய உடல் கார் இருக்கைக்கும் கார்க் கதவுக்கும் இடையில் சிக்கிக்கொண்டிருந்தது. அந்தப் பையனின் முகத்தில் வெறுப்பு மண்டிக்கிடந்தது. அவன் அம்மாவைப் பார்த்துக் கத்தினான்.

“எதற்காக என்னை இப்படித் துன்புறுத்துகிறாய். நான் உன்னைக் கேட்டேனா வீட்டுக்கு அழைத்துப்போ என. என்னைப் பார் . . . கிழடே . . . உன் மூளையில் குப்பைதான் இருக்கிறது.”

அவன் அம்மா. . . “கண்ணா கண்ணா. . . இதோ இந்த நண்பர் இப்போது எனக்கு உதவி செய்வார். நீ கவலைப்படாதே” என்று அவனருகே பதற்றத்துடன் சென்றாள். அவள் முகம் சிவந்திருந்தது. டேவிட் காருக்குள் குனிந்து கைகளை அந்த இளைஞனின் முதுகுக்கும் இடுப்புக்கும் அடியில் நுழைத்து மெல்லத் தூக்கினான். அவன் அம்மா அவனுடைய தோள்களைப் பற்றிக்கொண்டாள். அந்த உடலைத் தூக்கிச் சக்கர வண்டி அருகே திரும்பிய பொழுது டேவிட்டின் கரங்கள் கனம் தாங்க முடியாமல் ஒரு கணம் சட்டெனக் கீழே தாழ்ந்தன. டேவிட்டுக்கு மூச்சு வாங்கியது. தன் ஆரோக்கி யத்தின் மீது அதிகம் கவனம் செலுத்தாதவன் அவன். அவன் கைகளில் அந்த இளைஞனின் உடல் வழுக்க, முதுகைச் சரித்துத் தன் தொடைகளின் மீது அவனை ஏந்திக்கொண்டான். அவன் மேல் அந்த இளைஞனின் கனம் இறங்கியது. டேவிட்டால் அடுத்த அடி எடுத்து வைக்க முடியவில்லை. நரம்புகளும் தசைகளும் விண் விண்ணென்று தெறிக்க கண்ணில் இருள் சூழும்போல இருந்தது. இந்தக் கனத்தை வெகுநாளுக்குத் தன்னால் இழக்க முடியாது என்று நினைத்தான் டேவிட். அவன் கால்களுக்குக் கீழே கறுக்கும் பூமி மெல்ல உள்வாங்கிக் கொண்டிருந்தது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *