குளு குளு காலை, விடிந்த களைப்பில் வானம் மப்பும் மந்தாரமுமாய் இருந்தது. சோம்பி கிடந்த அந்த பச்சை புல்வெளியில் இருந்த புல்கள் கூட தன் தலையில் கீரீடமாய் நின்றிருந்த பனி துளிகளை சட்டென உதறி விட்டு என் மீது அவர்கள் கால் படாதா என்னும் ஏக்கத்தில் பார்த்து கொண்டிருந்தது.
புல்வெளியின் ஏக்கம் தெரிந்தோ என்னவோ அந்த இளம்பெண்கள் கூட்டம் காலை உடற்பயிற்சிக்காக அந்த புல் தரையின் மீது உள்ளங்காலால் உரசி கொஞ்சம் அழுத்தமாய் உரசி சென்றனர்.
பாவிப்புல்லுக்கு அதே சொர்க்கமாய் தெரிந்திருக்க வேண்டும், தன்னை அமுக்கி அந்த சுகத்தை உள் வாங்கி பின் நிமிர்ந்து நின்றது.
அதற்கு பின் அதற்கே வெட்கம் வந்து எட்டி பார்க்கும் அளவுக்கு அந்த பெண்கள் கூட்டம் உடைகளை மாற்றி கொண்டு உடற்பயிற்சிகளை செய்ய ஆரம்பித்து விட்டனர். அதாவது கையை காலை வீசியும் குதித்தும்.
நல்ல வேளை அந்த பக்கம் இளம் காளைகள் வரவில்லை. அல்லது வர விடுவதில்லை. காரணம் அந்த மைதானம் முழுக்க இந்த நகரின் மிக மிக பணக்காரரான அமிர்தாவுக்கு சொந்தமானது.
அப்படியானால் அந்த இளம்பெண்கள்..!
இளம் பெண்கள் என்று சொல்லி விட்டதால் அமிர்தாவுக்கு அவர்கள் மகளாகவோ, உறவுகளாகவோ, இருக்கலாம் என்று நீங்கள் நினைத்தால் அது தப்பு கணக்கு.
அவரை பொறுத்தவரை “செண்டிமென்டில்” நம்பிக்கை இல்லை. இந்த பெண்கள் அனைவருமே அவர் நிறுவனத்தில் பணி புரிபவர்கள்தான். வருடத்திற்கு நான்கு முறை ஊட்டியில் இருக்கும் தன்னுடைய பங்களா தோட்டம், எஸ்டேட், இத்யாதி இத்யாதி இவைகள் இருக்குமிடத்துக்கு அவர்களை வர சொல்லி வாழ்க்கையை அனுபவிக்க ஒரு சில நாட்கள் அனுமதி தருவார்.
இதனால் அவருக்கு என்ன லாபம் ? என்று நீங்கள் கேட்டால் ஒன்று நீங்கள் அப்பாவியாக இருக்க வேண்டும், அல்லது அமிர்தாவை மிக மிக நல்ல மனிதன் என்று நினைக்கவேண்டும்.
முதலிலேயே உங்கள் எண்ணத்தை முறியடிக்கும்படி அவர் சற்று தொலைவில், அதாவது அந்த மைதானத்திலிருந்து ஆயிரம் அடிகளாவது தள்ளி இருக்கும் பங்களாவின் மேல் தளத்தில் திறந்த வெளி அறையில் அரை குறை ஆடையுடன் சோபா ஒன்றில் உட்கார்ந்து தன் பைனாகுலரில் இவர்கள் யாரும் பார்க்கவில்லை என்னும் தைரியத்தில் செய்து கொண்டிருந்த உடற்பயிற்சிகளை (எல்லாமும்தான்) பார்த்து கொண்டிருந்தார்.
இப்பொழுது அவரை பற்றிய எண்ணங்களை நீங்கள் மாற்றி கொண்டிருக்கலாம். அதே நேரத்தில் அந்த பெண்கள் கூட்டமும் பரபரப்பு மிகுந்த சென்னையில் ஆடி ஓடி கசங்கி வேலை செய்து நிறுவனத்துக்கு உழைத்து கொட்டி சம்பாரித்து கொடுத்து (அமிர்தாவிற்குத்தான்) களைப்பில் இப்படி ஒரு சுகமான உல்லாச பயணத்தை ஏற்பாடு செய்து கொடுத்த தங்கள் முதலாளியை மனதுக்குள் பாராட்டியபடி அனுபவித்து செல்வார்கள்.
உங்களுக்கு சந்தேகம் வரலாம், இப்படியெல்லாம் மேல்நாட்டு நிறுவனங்களின் முதலாளிகளுக்குத்தான் தோன்றும் என்று நினைத்தால் அது நியாயமாகத்தான் இருக்கும். காரணம் அமிர்தாவும் நீண்ட காலம் அயல்நாட்டில் தொழில் முனைவோராக கோலோச்சி கொண்டிருந்தவர்தான். இரண்டு மூன்று வருடங்களாக இந்தியாவில் அதுவும் சென்னையில் கிளை ஒன்றை நிறுவி அதற்கு இவரே நேரடி பார்வையின் கீழ் கொண்டு வந்து நடத்தி கொண்டிருக்கிறார்.
அவரை பொறுத்தவரை இதற்கான செலவு என்பது கொசுவுக்கு மருந்தடித்தது போலத்தான். கொட்டி கிடக்கும் செல்வத்தை செலவு செய்து பார்க்கவேண்டும் என்ற எண்ணத்தில் இப்படி ஒரு ஏற்பாட்டை செய்து அழகு பார்க்கிறார்.
இவர்களுடன் ஒரு நாள் நேரிடையாக கலந்து உணவருந்துவார். அப்பொழுது மட்டுமே அந்த பெண்களுக்கு அவர் காட்சி தருவார், மற்றபடி அவர்களின் எந்த வித உல்லாச நடவடிக்கைகளிலும் தலையிட மாட்டார். தன்னையும் வெளி காட்டி கொள்ள மாட்டார்.
வெள்ளிக்கிழமை மாலை அவர்களை பங்களாவில் விருந்தினர் பகுதியில் இறக்கி விட்டு செல்லும் பேருந்து மறுபடி திங்கள் இரவுதான் அங்கு வந்து நிற்கும். அவர்களை சென்னைக்கு மீண்டும் அழைத்து செல்ல.
செவ்வாய் அவர்கள் அனுபவித்த இந்த பயணத்தை எண்ணி இரசிக்க ஒரு நாள் விடுமுறை, புதனன்று பணிக்கு வந்தால் போதும். இப்படியாக மிக மிக மகிழ்ச்சியாக இந்த கிளை நிறுவனத்தை கவனித்து கொண்டு வந்தார்.
பைனாகுலரின் அவர்கள் அங்க சேஷ்டைகளை மகிழ்ச்சியாக இரசித்து கொண்டிருந்தவருக்கு சட்டென முகம் சுருங்கியது. காரணம் அந்த இளம்பெண்கள் கூட்டத்தில் ஒரு பெண் அக்கம் பக்கம் பார்த்து விட்டு சற்று மறைவான இடம் நோக்கி நகர்ந்து போவதை பார்த்து விட்டதால்.
ஒரு வேளை.! பாத்ரூம்..இல்லையே அவர்களுக்கு தெரியும் இந்த பக்கம் வந்தால் இருக்கும் என்று. ஏனென்றால் கிளம்பும்போதே அங்கிருந்த பணியாளர்கள் சொல்லித்தான் அனுப்புவார்கள். இல்லையென்றால் யாரவது ஒரு பெண் இவர்களுடன் வருவாள்.
ஏதோ சந்தேகம், அந்த பெண் எங்கே போகிறாள்? பைனாகுலரில் அந்த பெண்ணை பின் தொடர்கிறார். ஆனால் இரண்டு நிமிடத்தில் அங்கிருந்த புதர் காடுகளுக்குள் மறைந்து போய் விட்டாள்.
காத்திருந்தார், அந்த பெண் வெளியே வந்துதானே ஆக வேண்டும். பார்க்கலாம். ஐந்து, பத்து நிமிடங்கள் ஆகி மணி கணக்கிலும் ஆகி விட்டது. அந்த பெண் திரும்ப அந்த வழியாக வரவில்லை.
தன் முன் நின்றிருந்த பெண் பணியாளர்களை உற்று பார்த்தபடி இருந்தார். அவங்க எல்லாம் வந்துட்டாங்களா?
எல்லாம் வந்துட்டாங்க. குளிச்சு டிபன் சாப்பிட்டுட்டு இருக்காங்க. எல்லோரும் அஞ்சு கிலோ மீட்டர் தள்ளி இருக்கற “ஹெலன் பால்ஸ்சுக்கு” கிளம்பனுமின்னு சொல்லிகிட்டிருந்தாங்க.
மொத்தம் எத்தனை பேரு இருக்காங்க.
பதினைஞ்சு பேர் இருக்காங்க.
அத்தனை பேரும் இருக்காங்களா?
இருக்காங்களே, அந்த பெண்ணுக்கு குழப்பம், முதலாளி ஏன் இப்படி விசாரிக்கிறார். என்ன நடந்தது. அவர்கள் பதினைந்து பேர்தானே திரும்ப வந்தார்கள்…?
மனதுக்குள் யோசித்தாள். அவள் அவர்களுக்கு டிபன் சாப்பிட வைத்த தட்டுக்கள்,ம்..பதினைந்து, பதினைந்திலும் ஆட்கள் உட்கார்ந்திருந்தது போல்தான் இருந்தது. தைரியமாக சொல்லி விடலாம் என்று பதினைந்து பேரும் என்று அழுத்தி சொன்னாள்.
அந்த பெண் எங்கு போனாள்? என் கண்ணில் இருந்து எப்படி தப்பித்தாள்? மறுபடி இவர்களுடன் சேர்ந்து வந்ததாக சொல்கிறாளே இந்த பணியாளி.
அவருக்கு ஒரே குழப்பமாகி விட்டது. இதுவரை அவர் கண்ணில் இப்படி ஒரு நிகழ்ச்சி படவில்லை. இப்பொழுது பட்டு விட்டது. யார் அந்த பெண்?
சரி நீ போ, அந்த பெண்ணை அனுப்பியவர் அடுத்து என்ன செய்யலாம் என்று யோசித்தார். நம்பிக்கையான பணியாள் வேலப்பனை அழைத்தார்.
சொல்லுங்க, நெஞ்சை நிமிர்த்தி நின்றான்.ஏதோ முக்கியமான காரியம், அதுதான் முதலாளி நம்மை கூப்பிட்டிருக்கிறார், அவன் அவரின் எண்ணங்களை படித்தவன்.
வந்த கூட்டத்துல ஒரு ஆள் மட்டும் எங்கியோ போய்ட்டு வருது, யாருக்கும் உடனே புரியாது, அவர் பேசுவது, வேலப்பனை தவிர.
எப்படி சொல்றீங்க?
காலையில விலகி போனமாதிரி தெரிஞ்சுது, கடைசி வரை கண்ணுல படலை.
ஆள் யாருன்னு பார்க்க முடிஞ்சுதா?
இல்லை, சரியா முகம் தெரியலை, கிளைமேட் வேற லேசா இருட்டு கட்டியிருந்துச்சு,
சரி நான் பார்த்துக்கறேன்,
ஜாக்கிரதை, அவங்களை பத்திரமா நாளைக்கு இராத்திரி அனுப்பனும், ஏதாவது ஏடா கூடமா ஆயிட போவுது.
கண்டு பிடிச்சுட்டா..!
தப்பா இருந்தா எங்கிட்ட வராதே, முடிச்சுடு.
சரிங்க, தலையாட்டி அங்கிருந்து நகர்ந்தான்.
அந்த பெண்களை நீர் வீழ்ச்சிக்கு அழைத்து செல்ல பேருந்து வந்து நின்றது. இவர்களுடன் இரண்டு பெண் பணியாளர்கள் ஏறிக்கொண்டனர். அவர்களுடன் அங்கு வந்த வேலப்பனும் ஏறினான்.
வேலப்பன் செல்வாக்கானவன், கூட இருந்த பணியாளர்களுக்கும், அந்த பேருந்தின் ஓட்டுநருக்கும் தெரியும்.
ஆனால் வேலப்பன் இந்த மாதிரி விஷயங்களுக்கெல்லாம் வரமாட்டானே, அவர்களுக்குள் குழப்பம்.
பேருந்து நிற்கும் இடத்திலிருந்து அருவியை அடைய “அரை பர்லாங்” காட்டு வழியாக செல்ல வேண்டும். இவர்களைப்போல நிறைய பேர் வந்திருந்தனர். இவர்களும் அவர்களுடன் கலக்க அந்த இடம் கலகலப்பாக, குதித்து ஆர்ப்பாடமாய் அனுபவிக்க ஆரம்பித்தனர்.
வேலப்பன், பேருந்தை விட்டு இறங்கினான். நிதானமாய் காட்டுக்குள் நுழைந்து அருவியை நோக்கி நடக்க ஆரம்பித்தான்.
அலுத்து களைத்து பேருந்துவில் வந்து ஏறி உட்கார்ந்த பின்னாலும், வண்டி கிளம்பவில்லை. இரு பெண் பணியாளர்களும், இவர்களுடனே வந்து விட்டனர். ஆனால் வேலப்பனை மட்டும் காணவில்லை.
அவன் வந்தால் வண்டி எடுக்கலாம். அரை மணி நேரம் ஒரு மணி நேரமாகியது, வேலப்பனை மட்டும் காணவில்லை. போலாம், போலாம், அந்த பெண்கள் நச்சரிக்க வேறு வழியின்றி வேலப்பன் இல்லாமல் பேருந்து கிளம்பியது.
என்னவானான் வேலப்பன்? அமிர்தாவுக்கு குழப்பமாகி விட்டது. நல்லவன், தான் சொல்வதை தட்டாமல் செய்தவன், அவனுக்கு என்னவாயிற்று? மனம் குழம்ப குழம்ப என்ன செய்யலாம், போலீசில் தகவல் சொல்லிவிடலாமா?
போலீஸ் அவன் எதற்கு அங்கு போனான்? கேள்வி கேட்டு விட்டால் ! அவர்களின் பாதுகாப்புக்கு என்று சொல்லி விடலாம்., ஆனால் மேற்கொண்டு ஏதாவது சிக்கல்கள் வந்து விட்டால்..!
என்னோட சிஸ்டர் ரொம்ப தைரியமான பொண்ணு, எந்த பிரச்சினையும் சமாளிச்சு வெளிவந்துடுவா, அப்படிப்பட்டவ திடீருன்னு இப்படி ஒரு முடிவு எடுத்ததை என்னால நம்ப முடியலை.
பிரபாகர் சொல்வதை கூர்ந்து கேட்டு கொண்டிருந்தான் கதிர். உடன் படித்தவனுக்கு இப்படி ஒரு சோகம் கேட்டு விசாரிக்க வந்திருந்தான்.
எப்படி நடந்துச்சு? நல்ல வேலையில இருக்கான்னு சொல்லுவியே.
ஆமா..அவ இந்த வேலையில ஜாயின் பண்ணி இரண்டு வருஷம்தான் ஆச்சு. நல்ல சம்பளம், அதுமட்டுமில்லாம இவளுக்கு நல்ல திறமை இருந்துச்சு. அடிக்கடி நிர்வாகம் இவளை பாராட்டிகிட்டே இருப்பதை சொல்லிகிட்டே இருப்பா.
அவ கூட வேலை செஞ்சவங்க கிட்டே விசாரிச்சியா.
அது என்னமோ தெரியலை, அவ கூட இருந்தவங்க யாரும் இப்ப இங்கில்லை. ஒண்ணு வேற ஊருக்கு மாத்தலாகி போயிடறாங்க, இல்லாட்டி வேலைய விட்டே நின்னுட்டாங்க. போன்ல அவங்களை காண்டாக்ட் பண்ணி கேட்டாலும் சரியா பதில் சொல்ல மாட்டேங்கறாங்க.
மெடிக்கல் ரிப்போர்ட் என்ன சொல்லுது?
அளவுக்கதிகமா தூக்க மாத்திரை எடுத்துருக்கா, உடம்புல அங்கங்க காயம் இருந்திருக்கு, இது எப்படி ஆச்சுன்னு யாருக்கும் தெரியலை. இதை பத்தி அவ எங்ககிட்டே சொன்னதுமில்லை. அதுதான் எனக்கும் புரியலை. அந்த காயம் எப்ப ஆச்சு? எப்படி ஆச்சுன்னு.
மத்தபடி வேற எந்த…
நோ..நோ..அவளை பொருத்தவரைக்கும் தைரியமான பொண்ணு, எதையும் நேரிடையாவே செய்யறவே. அப்படிப்பட்டவ..இப்படி.
பெங்களூர் பரபரப்பான சாலை ஒன்றில்,
எதிரிலிருக்கும் பெண்ணை உற்று பார்த்தான். நல்ல இளமையாக இருந்தாள். முகம் கொஞ்சம் சோம்பலாய் இருப்பதாக பட்டது.
“டயர்டா” இருக்கற மாதிரி இருக்கு, வேணா வாங்க “காபிட்ரியா” போயிடலாம்.
வேண்டாம் என்று சொல்ல நினைத்தவள் பணி செய்து வந்த களைப்பில் சரி என்று சொன்னாள். இவளின் அப்பாயிண்ட்மெண்டுக் காக இரண்டு நாட்களாக காத்திருக்கிறான். இன்றுதான் சரி மாலை ஆறு மணிக்கு காத்திருங்கள் என்று சொல்லியிருந்தாள்.
இருவரும் மெளனமாய் காப்பியை உறிஞ்சிக்கொண்டிருந்தனர். ஆனாலும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து சில பல சந்தேகங்களுடன்.
சட்டென்று மெளனத்தை கலைத்தாள். சொல்லுங்க, என்னைய பார்க்கணும்னு சொன்னீங்க? நீங்க யாருன்னும் எனக்கு தெரியலை.
சாரி, என்னோட பேரு கதிரவன், எனக்கு சில இன்பர்மேசன் வேணும்?
இன்பர்மேசனா? எங்கிட்டயா?
உங்களுக்கு சியாமளான்னு யாரையாவது தெரியுமா?
சியாமளா அப்படி யாரும் ஞாபகம் இல்லையே
சென்னையில உங்களோட வேலை செஞ்சிருக்காங்க, ஒரு முறை நீங்க எல்லாம் ஊட்டி டூருக்கு கூட போயிருக்கீங்க.
அடடே ஆமா, மா, ஞாபகம் வந்திடுச்சு, இரண்டு வருஷம் ஆச்சு, ஆனா அவங்க கூட எனக்கு பழக்கம் இல்லை.
அப்புறம் எப்படி டக்குன்னு ஞாபகம் வந்துச்சு.
அது வந்து டூருக்கு போகும்போது அவங்க “டிரக்கிங்” போனப்ப மயங்கி விழுந்தாங்க, அப்பத்தான் எல்லாரும் பேசிகிட்டிருந்தாங்க, சியாமளா மயக்கமாயிட்டான்னு
நீங்க எத்தனை முறை அந்த கம்பெனியில இருக்கறப்ப அந்த மாதிரி டூர் போயிருக்கீங்க.
எல்லாருக்கும் ஒரு முறைதான் சான்ஸ் தருவாங்க. நான் அந்த முறை போனதோட சரி.அதுக்கப்புறம் ஒரு வருசம் இருந்தேன், அங்க “டீம் பாஸ்” டார்ச்சர் கொடுத்தார். ரிசைன் பண்ணிட்டு இப்ப பெங்களூர் வந்துட்டேன்.
ஏன் “லேடீசை மட்டும்” டூருக்கு கூப்பிட்டுட்டு போறாங்க.
அது எனக்கு தெரியாது, பொதுவா கல்யாணம் ஆகியிருக்க கூடாது, இரண்டாவது வெளியூருல இருந்து இங்க தங்கி வேலை செய்யற பொண்ணுங்களைத்தான் கூப்பிட்டு போவாங்க. அதுக்கு ஒரு காரணமும் சொன்னாங்க. உள்ளுருல இருக்கற பொண்ணுங்க “பேரண்ட்சோட” இருக்கறதுனால கொஞ்சம் மகிழ்ச்சியா வேலை செய்யறவங்க. வெளியூருல இருந்த வேலை செய்யறவங்களுக்கு ஒரு மகிழ்ச்சியான சூழலை கொடுக்கணும் அப்படீன்னு கம்பெனி நினைக்குது. “ஜெண்ட்ஸ” இதுவரைக்கும் கூப்பிட்டு போனதா நான் அங்கிருந்த வரைக்கும் தெரியலை.இப்ப எப்படீன்னு தெரியாது.
உங்க முதலாளி அதாவது டைரக்டர்..
அவர் ஒரு முறை எங்களோட டிபன் சாப்பிட வருவாரு. மத்தபடி நாங்க என்ன வேணா சாப்பிட்டு எப்படி வேணா இருந்துக்கலாம், அந்தளவுக்கு பூரண சுதந்திரம் கொடுப்பாங்க. ஒரே ஒரு கண்டிசன் வெளிய போய் எந்த வித கலாட்டா, பண்ண கூடாது. அவ்வளவுதான்
பெரிய அளவுக்கு இந்த பெண்ணிடம் விவரங்கள் கிடைக்கவில்லை.
சுற்றுலா முடிந்து பெண்களை கூட்டி செல்ல பேருந்து வந்து விட்டது.
பதினைந்து பெண்களுக்கும் மனசே இல்லை, பின்னே சும்மாவா, அவர்கள் அனுபவித்த வசதிகள், போய் வந்த இடங்கள், இரவு முழுக்க ஆட்டம், பாட்டம் எல்லாம் முடிவுக்கு வந்து இதோ இப்பொழுது கிளம்பி சென்னை போய் சேர்ந்த பின்னால் வழக்கம் போல் நசுங்கி போன வாழ்க்கை வாழ்ந்தாக வேண்டும்.
ஒவ்வொருவராக அழைத்து அவர்களுக்கு நிர்வாக அதிகாரி ஒருவர் நினைவு பரிசாக பொருள் ஒன்றை வழங்கினார். அமிர்தா வழக்கம்போல் வெளியே வரவில்லை என்றாலும் நடப்பவைகளை திரையில் பார்த்து கொண்டிருந்தார்.
பரிசு வாங்கும்போது ஒவ்வொரு பெண்ணின் முகத்தை பார்த்து இவள் அவளோ? அன்று மறைந்து வந்தவள் யார்? இந்த கேள்வி மனதை குடைந்து கொண்டே இருந்தது.
வேலப்பன் என்னவானான்? இது வேறு மனதுக்குள் சஞ்சலத்தையே கொடுத்து கொண்டிருந்தது.
சரி கிளம்பலாம் என்று இங்கிருந்தே அங்குள்ளவர்களுக்கு சமிக்ஞை கொடுக்க நினைக்கும் பொழுது ஒருவன் இவர் அருகில் வந்து காதோரமாய் ஏதோ சொன்னான்.
சட்டென இவர் அவர்களை “இன்றொரு நாள் இருந்து நாளை கிளம்பலாம்” என்று சொல்லி விடு.
தகவல் அவர்களை அடைவதற்குள் இவர் எழுந்து நேரடியாக அங்கேயே சென்றார்.
அந்த பெண்கள் அனைவருக்கும் குழப்பம், ஏன் ஒரு நாள் இங்கு தங்க சொல்கிறார்கள் என்று. இருந்தாலும் மனதுக்குள் ஒரு மகிழ்ச்சியும் இருந்தது, ஊட்டியின் குளுமையை இன்னொரு நாள் அனுபவிக்கலாம் அல்லவா.
யார் நமக்கு நியூஸ் சொன்னது ?
முக்கியமான இடத்துல இருந்து சார், அனேகமா வழியில எங்க வேணா வண்டியை நிறுத்தி சோதனை போடறதுக்கு இருக்காங்க. ஆளுங்களை கூட கூட்டிட்டு போய் உடம்பு முழுக்க சோதனை பண்ணறதுக்கு கூட தயாராய் இருக்காங்கலாம்.
பதட்டமானார் அமிர்தா? எப்படி இவர்களுக்கு சந்தேகம் வந்தது. இதுவரை நன்றாகத்தானே சென்று கொண்டிருந்தது. நம்ம கம்பெனி செய்வது,பெரிய புரட்சி என்றுதான் காண்பித்து கொண்டிருந்தோம்.
சென்னையில போன வருசம் இங்க வந்த பொண்ணு தற்கொலை பண்ணிகிச்சாம். அது உடம்புல காயம் எப்படின்னு சந்தேகம் வந்துருக்கு.
அமிர்தா யோசித்தார், யார் அந்த பெண்? ஓ ஆமாம், மயக்கமாய் விழுந்து விட்டாள் என்று மருத்துவமனைக்கு கூட்டி போன பொண்ணா?
சே..இப்படி ஒரு சிக்கலா !
கதிர் கோயமுத்தூர் வந்திருந்தான். இந்த மூன்று வருடங்களாக இந்த கம்பெனியில் இருந்து சுற்றுலா சென்று வந்த பெண்களின் முகவரிகளை கண்டு பிடித்து அலைந்து இந்த பெண்ணை கண்டு பிடித்து இதோ வீட்டு அழைப்பு மணியை அழுத்தி கொண்டிருந்தான்.
கதவை திறந்த பெண்ணுக்கு இருபத்தி ஐந்து அல்லது எட்டுக்குள் இருக்கலாம். சாதாரண பேண்டும் சர்ட்டும் அணிந்திருந்தாள். சரளமான ஆங்கிலம்..எஸ்..நீங்கதான் போன் பண்ணுனதா?
யெஸ்..என் பேர் கதிர், சென்னையில இருக்கேன், எனக்கு நீங்க முன்னாடி வேலை செஞ்ச கம்பெனியை பத்தி ஒரு சில தகவல்கள் மட்டும் தேவை.
சொல்லுங்க என்ன தகவல்..
நீங்க அங்க வேலை செஞ்சது…?
மூணு வருசத்துக்கு முன்னாடி, “முதல் பேட்ஜ்”, அப்பத்தான் கம்பெனி இந்த ஒரு திட்டத்தை ஆரம்பிச்சது.
எப்படி?
அதாவது வெளியூருல இருந்து அங்க வந்து தங்கி வேலை செய்யறவங்க, வயசு இருபத்தி அஞ்சுக்குள்ள இருக்கணும், கல்யாணம் ஆகியிருக்க கூடாது, இப்படீன்னு.
ஏன் இப்படி ஒரு கட்டுப்பாடு?
அது தெரியலை, ஆனா வெளியூருல இருந்து தங்கி வேலை செய்யற எங்களுக்கு இது நல்ல “எண்டெயிர்ட்மெண்டா” இருந்துச்சு.
எப்படி எல்லாரும் ஒண்ணா கிளம்புவீங்களா?
முத நாள் இராத்திரியே கம்பெனி கெஸ்ட் ஹவுஸ்ல நாங்க எல்லாம் வந்து தங்கிடணும், விடிய காலையில பஸ் கிளம்பும்,
வழியில எங்கயும் நிக்காது, நேரா “எம்.டி” யோட வீட்டுல போய்தான் நிக்கும் அங்க எல்லாத்தையும் இறங்க வச்சு ரெஸ்ட் எடுக்க சொல்லுவாங்க. பத்து மணிக்கு மேல எங்களை வெளிய கூட்டிட்டு போவாங்க.
அதே மாதிரி அவர் வீட்டில இருந்து விடிய காலையில கிளம்பி சென்னையில கம்பெனியிலதான் வந்து நிக்கும். மதியம் வரைக்கும் எல்லாத்தையும் தங்க வச்சு அதுக்கப்புறம்தான் எல்லாத்தையும் அவங்கவங்க ரூமுக்கு அனுப்புவாங்க.
சென்னையில எங்கிருந்தாலும் அவங்களை அங்கயே கொண்டு போய் விட்டுடுவாங்க.
ஆனா முக்கியமான கண்டிசன் என்னன்னா ஒரு முறை போனவங்க மறுபடி கூப்பிடமாட்டாங்க.
ஏதோ ஒரு தவறு இந்த சுற்றுலா திட்டத்தில் நடக்கிறது என்பது மட்டும் மனதுக்கு பட்டது.
செல்போன் கிண் கிணிக்க..எடுத்து பார்த்தான், ராஷிகா அழைத்தாள். ” நீங்க சந்தேகப்பட்டது சரிதான்” நான் இப்ப கம்பெனி கெஸ்ட் ஹவுஸ் ல இருந்து பேசறேன். இன்னைக்கு கிளம்பறதை தள்ளி வச்சுட்டாங்க.
உன் மேல சந்தேகம் வரலையில்லை.
வந்துருச்சுன்னு நினைக்கிறேன். பயமாத்தான் இருக்கு.
கவலைப்படாதே, உன்னை கண்கானிச்சுட்டு நம்ம ஆள் இருக்காங்க.
அந்த வேலப்பன் என்ன சொல்றான்?
வாயை திறக்க மாட்டேங்கறான்.
ஏதாவது ஒரு க்ளூ கிடைச்சா போதும், கையும் களவுமா புடிச்சிடலாம்.
சரி நான் வைக்கிறேன், யாரோ வர்ற மாதிரி இருக்கு, நான் “டாய்லெட்” ரூமுல இருந்து பேசறேன்.
இவன் போனில் பேசுவதை கேட்டு கொண்டிருந்தவள், என்னாச்சு சார், ஏதாவது சந்தேகப்படறீங்களா? நீங்க போலீசா?
தலையசைத்தவன் உங்களுக்கு இந்த ட்ரிப்’ல சந்தேகம் வர்ற மாதிரி ஏதாவது இருக்குதா?
அந்த பெண் யோசித்து நின்றாள், இராத்தி நாங்க கிளம்பறதுக்கு முன்னாடி கம்பெனி கெஸ்ட் ஹவுஸ்ல, படுக்க போறதுக்கு முன்னாடி குடிக்கறதுக்கு “ட்ரிங்க்ஸ்” கொடுத்தாங்க
அப்புறம் படுத்தவங்கதான், காலையில நாலு மணிக்கு டாண்ணு எழுப்புவாங்க. அதுக்கு பின்னாடி குளிச்சு ரெடியாகி வெளியே வரும்போது வண்டி தயாராய் இருக்கும், அதுல ஏறி உட்காருவோம், சொல்லிக்கொண்டே போனவள்..ம்..எனக்கு வேற மாதிரி எதுவும் கண்ணுக்கு தெரியலை.
ரொம்ப நன்றி, கிளம்பியவன் தனது காரை ஊட்டியை நோக்கி திருப்பினான்.
செல்லும்போது அவனுக்கு அழைப்பு ஒன்று ‘செல்போனில்’ வர அதை காரை ஓட்டியபடியே காதில் வைத்தான்.
நிஜமாவா…! அந்த நியூஸ் கண்பார்ம் பண்ணிகிட்டியா, ஓ,கே, ரொம்ப தேங்க்ஸ்..முகம் பிரகாசமானது.இதோ வந்துவிட்டேன். காவல்துறைக்கு ஒரு தகவல் கொடுத்தான் அமிர்தாவின் பங்களாவில் இருந்து டூரிஸ்ட் பஸ் எடுத்துட்டாங்களா? அதைய தரோவா செக் பண்ணனும், அதுல இருக்கற ஆளுங்க முதக்கொண்டு எல்லாத்தையும் புரிஞ்சுதா?
அமிர்தா மறு நாள் காணாமல் போயிருந்தார். அவருக்கு யாரோ தகவல் கொடுத்திருக்க வேண்டும்.
அன்று இரவே அந்த பேருந்தை “அக்கு வேறாய்” “ஆணி வேறாய்” பிரித்து கிட்டத்தட்ட கோடிக்கணக்கின் மதிப்பில் போதை மருந்துகள் எடுக்கப்பட்டது.
அந்த இளம் பெண்களையும் அழைத்து பரிசோதனை செய்ததில் அவர்களின் கைப்பை, மற்றும் தோல் பைகளுக்குள் ஏகப்பட்ட போதை பவுடர்கள் எடுக்கப்பட்டன.
ஆனால் அவர்களுக்கு இதைப்பற்றி ஒன்றுமே தெரியவில்லை.
பிரபாகரிடம் கதிர் சொல்லி கொண்டிருந்தான். சாரி பிரபாகர், உன் சிஸ்டர் நம்மளை எதுக்கு டூருக்கு கூட்டிட்டு வந்திருக்காங்க அப்படீங்கறதை கண்டு பிடிச்சுட்டாங்க. அதனால அவங்களை ‘ட்ரக்கிங்’ போறபோது மயக்கம் வர்றமாதிரி மருந்தை கொடுத்து ஏற்பாடு பண்ணிட்டு அவங்களை கூட்டிட்டு போயி…
அவங்களை மிரட்டி எடுத்து வச்ச வீடியோவ காட்டி…
ஐ.ஆம் சாரி… அவன் தோளை ஆதரவாய் பற்றி வருத்தம் தெரிவித்தான் கதிர்.
ராஷிகாவை கை குலுக்கி பாராட்டினான் கதிர். ரொம்ப தேங்க்ஸ், இவ்வளவு ரிஸ்க் எடுத்து எனக்காக இந்த கம்பெனியில வேலை செஞ்சாலும் இந்த விஷயத்தை கண்டு பிடிக்க உதவி பண்ணியிருக்கீங்க..
பரவாயில்லை சார், எனக்கும் இந்த டூர் விஷயமே ஒரு “இயற்கையான செயலா”வே தெரியாம இருந்துச்சு. ஏன்னா யார்கிட்டேயும் சொல்ல கூடாது, ஆண்களே கூடாது, அப்படீ, இப்படீன்னு சொல்லும்போதே மனசுக்குள்ள ஒரு உறுத்தல், அதுவுமில்லாமல் அவங்க சொல்றவங்க வேண்டாமுன்னாலும் இந்த டூருல போயாகணும், இப்படி எல்லாம் போட்டா சந்தேகம் வரத்தான செய்யும்.
உங்களுக்கு எப்படி சார் இந்த டூரு மேல டவுட் வந்துச்சு.
முதல்ல ஏதோவொண்ணு நடக்குதுன்னு மனசுக்குள்ள பட்டுச்சு, ஆனா என்னன்னு தேடிகிட்டிருக்கறப்ப.. யூ.கே,வுல என் நண்பங்கிட்ட இந்த முதலாளிய பத்தி விசாரிக்க சொல்லியிருந்தேன். ஏண்ணா இவர் ரொம்ப நாளா அங்கதான் இருந்திருக்காரு.
அப்பத்தான் அவனுக்கு கிடைச்ச நியூஸ சொன்னான், இவர் மேல கோர்ட்டுல போதை மருந்து கடத்தல் விஷயமா கேஸ் நடந்திருக்கு, அதுல இவர் மேல குற்றம் இல்லைன்னு தப்பிச்சு வெளிய வந்துட்டாரு. அப்புறமா இந்தியாவுல வந்து செட்டிலாயிட்டாருன்னு.
அப்ப அவர்கிட்ட இருந்த சரக்கெல்லாம் சென்னை வரைக்கும் கொண்டு வந்துட்டாரு. அதைய அவரோட சொந்த இடத்துக்கு மெல்ல மெல்ல கொண்டு வந்துடணும்,
அதுக்காக இப்படி ஒரு சுற்றுலா திட்டத்தை செயல்படுத்த ஆரம்பிச்சாங்க. யாருக்கும் சந்தேகம் வராதபடி கம்பெனியில வேலை செய்யறவங்களை பொறுக்கி எடுத்து அவங்களை “பகடைக்காயாக்கி” சரக்கை நகர்த்திட்டு போக ஆரம்பிச்சாங்க.
சார் உண்மைய சொல்லுங்க, நீங்க போலீஸ்தானே…
மெளனமாய் சிரித்து நகர்ந்தான் கதிர்.