எஸ்தர்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: கிரைம்
கதைப்பதிவு: December 2, 2016
பார்வையிட்டோர்: 17,326 
 
 

காற்றைக் கிழித்துக்கொண்டு அரிவாள் கீழிறங்கியது. கழுத்தில் பீறிட்ட இரத்தம் கையில் பிசுபிசுக்கையில் தான் தெரிந்தது “காதலின் விலை என்னவென்று..? விலுக்கென ஒரு துள்ளலுடன் எழுந்து சரிவில் பாய்ந்து ஓடத் தொடங்கினான் கேசவன். பாவம் எஸ்தர் எந்தப்பக்கம் ஓடிக்கொண்டிருக்கிறாளோ… சூரிய உதயத்திற்கு முன்னெழுந்து ஓடத் தொடங்கும் ஒரு மானின் வேகத்தோடு உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு கேசவன் ஓடிக்கொண்டிருந்தான். மலையில் ஏறும் போதிருந்த கஸ்டம் இறங்கும் போது இல்லை. ஒரு துள்ளலில் மலையை விட்டு இறங்கியது போலிருந்தது. இரையைக் கண்டு கொண்ட சிங்கத்தைப் போல எஸ்தரின் அப்பா டேவிட் இரத்தம் சொட்டும் அரிவாளோடு மீசை துடிக்க நின்று பார்த்துக் கொண்டிருந்தான்.

“நாளைக்கு மொட்டைப் பாறைக்கு வா… பேசனும்…” என எஸ்தர் சொன்னபோது கேசவனால் நம்பமுடியவில்லை. எத்தனை நாள், எத்தனைமுறை கெஞ்சியிருப்பான். இடைஞ்சல் இல்லாத ஒரு இடத்தில், யாரும் வந்துவிடுவார்களோ எனும் பயமில்லாமல், இயற்கையை இரசித்தபடி எஸ்தருக்கு ஒரு முத்தம் கொடுக்க வேண்டும் என்பது அவனது இலட்சியங்களுள் ஒன்று. முத்தம் கேட்டால் நெற்றியில் மட்டும் தான் தருவாள். பிறந்தநாள் என்றால் கன்னம் வரை அனுமதிப்பாள். அவளே வரச்சொல்லும் போது அவனுக்கு ஜிவ்வென்றிருந்தது. ஆனால் எஸ்தரின் அப்பாவிற்கு தெரியவந்தால் என்னவாகும் என நினைக்கும் போதே கேசவனுக்கு நடுங்கியது. கண்களைச் சுருக்கி செவ்விதழ் சுழித்து கறாராக “வாருவாயா… மாட்டாயா” என எஸ்தர் முறைத்தாள்.

கைகள் கன்னத்தைத் தடவினாலும் “வருவேனென” தலை அனிச்சையாக ஆடியது. விரல்களின் அடையாளம் கன்னத்தில் இன்னும் மாறாமல் இருந்தன.

கால்முட்டப் போட்டிருந்த பட்டுப் பாவாடையை கணுக்கால்கள் தெரிய உயர்த்தியபடி எஸ்தர் கொலுசுகள் குலுங்க மாடிப்படியில் ஏறினாள். அவள் கண்கள் கலங்கியிருந்தன. தூரத்தில் எஸ்தரின் அப்பா வருவது தெரிந்தது. கேசவன் சைக்கிளை எதிர்த்திசையில் வேகமாக மிதிக்கத் தொடங்கினான்.

0000

கேசவனின் குடும்பம் இராமேஸ்வரத்தில் கரையொதுங்கியபோது அவனுக்கு ஆறுவயதாயிருந்தது. அவன் பேசும் தமிழ் தான் இலங்கையின் தமிழென உலகமே நம்பிக்கொண்டிருக்கும் ஊரில் பிறந்தவன். வயல்காணிகளும் , வளவோடு கூடிய வீடும், எடுப்புக்கு எட்டு வேலையாட்களும் என வாழ்ந்தவன். இனப்பிரச்சினை தலை தூக்கிய காலத்தில் கேசவனின் தாயின் பிரச்சினை தாங்க முடியாமல் கடல்மார்க்கமாக வள்ளமேறியிருந்தார் கேசவனின் அப்பா பரமேசுப்பிள்ளை. இயக்கச் செயற்பாடுகளில் முன்னிற்பதும், தோழமையும் அவருக்கான வழியை சற்று இலகுவாகத் திறந்துவிட்டது. இந்தியாவிலிருந்து குடும்பத்தோடு பிரான்ஸ் செல்வது தான் நோக்கம். அப்பெருங்கனவு கனவாகிப் போனதோடு அவர்களை நிரந்தர அகதிகளாக்கியிருந்தது. கேசவனை மட்டுமாவது அனுப்பிவிடலாம் என்ற நம்பிக்கை இன்னும் இருக்கிறது. அவரிட கதைக்கு யாரும் திருப்பி பதில் சொல்றது அவருக்கு பிடிக்காது. தலையில் அடித்து “மண்டேல போட்டுருவன்.. போடா” என அதட்டி அனுப்புவார்.

பள்ளிக்கால நட்பு காதலாகிக் கசிந்துருகிய போது கேசவன் கல்லூரியில் சேர்ந்திருந்தான். கல்லூரி முடித்து வேலையொன்றில் சேர்ந்துகொண்டால் எஸ்தரை கைபிடித்துவிடலாம் என நினைத்தான். அதன் பின்வந்த காலங்களில் தான் எஸ்தரைச் சந்திப்பதில் அவனுக்கு பிரச்சினைகள் தோன்றின. அவனைச் சந்திப்பதற்காகவே ஊருக்கு ஒதுக்குப்புறமான அடிகுழாயில் எஸ்தர் நல்ல தண்ணீர் பிடிக்க வருவாள். அந்நேரத்தில் வேறுயாரும் குழாயடிக்கு வந்துவிட்டால் அந்த சந்திப்பும் தடைபட்டுவிடும்.

கயிறால் பிணைக்கப்பட்ட இரண்டு குடங்களை சைக்கிள் கரியரில் தொங்க விட்டுக்கொண்டு எஸ்தர் வருவாள். கேசவன் அவள் வரும்வரை தன் குடத்தோடு காத்து நிற்பான். அவளுக்கும் சேர்த்து தானே தண்ணீர் அடித்துக் கொடுப்பான். அடிகுழாயில் அடிப்பதற்காக அவன் நுனிக்கால்களை உண்ணி மெலிந்த தேகத்தை காற்றில் பறக்கவிட்டு மீண்டும் கீழிறங்குவதைப் பார்க்கும் போது எஸ்தருக்கு சிரிப்பாகவும் பாவமாகவும் இருக்கும்.

காதலர்கள் என கண்டுபிடிக்கப்படாத வரை நூலகப் புத்தகங்களை கொடுக்கவும் வாங்கவுமென எஸ்தரின் வீட்டுக்கே கேசவன் போய்வருவான். அவனுக்கு வாசிப்பிலெல்லாம் சொல்லிக்கொள்ளும்படி ஆர்வமில்லை. முழுதாக ஒரு புத்தகமும் அவன் வாசித்ததில்லை. ஆனால் அவளைச் சந்திப்பதற்கு அதுதான் இலகுவான வழி. ஆயிரம் பிரச்சினைகளுக்கு மத்தியிலும் காதல் களவிற்கான வழியை மட்டும் காட்டிக்கொண்டேயிருந்தது. வயதும் இளமைத் திணவும் சந்திப்புகளைச் சாத்தியமாக்கின.

ரம்மியமான நட்சத்திரங்களுக்கும் இருளுக்கும் மத்தியிலான குழாயடிச்சந்திப்பு நாளொன்றில் தான் இரவுப்பூச்சிகளின் ஒலியைக் குலைத்தவாறு டேவிட் எங்கிருந்தோ வந்தான். எதுவுமே கேட்டுக்கொள்ளவில்லை. காதோடு விழுந்த அறையிலிருந்து கேசவன் சுதாரித்து எழும்போது எஸ்தரை தூரத்தில் இழுத்துக்கொண்டு செல்வது தெரிந்தது. இரவுப்பூச்சிகள் தலையைச் சுற்றிக்கொண்டு காதுகளுக்குள் சத்தமிடுவது போலிருந்தது. சம்பவத்தை கோர்வைப்படுத்த முயன்றான்.

“அகதிநாய்க்கு அந்தஸ்து கேக்குதா…. ” என்ற டேவிட்டின் இறுதிவார்த்தைகள் மூளைக்குள் உறைந்து கிடந்தன.

“மகன் … இங்க யாரும் எவிடம் எண்டு கேட்டா தயங்காம சொல்லு… அதுக்குப் பிறகு சேட்டை விட மாட்டான்கள்” என சகபாடிகளோடு சண்டை பிடித்து வந்த நாளில் அப்பா சொன்னதை கேசவன் நினைத்துக்கொண்டான். அப்பா அடிக்கடி சொல்லும் மண்டையில் போடுவதைப் பற்றியும் யோசித்தான். இறுதியில் எஸ்தரைக் கல்யாணம் முடித்தே தீருவதென சபதம் எடுத்துக் கொண்டான். இருள், அதற்கு சாட்சி என்பதாய் நிறைந்து கிடந்தது.

000

ஆளரவமற்ற அந்த மலையின் ஒரு சரிவிலிருந்தது மொட்டைப்பாறை. அதைச் சுற்றி ஆடுகள் மேய்ந்துகொண்டிருந்தன. மரங்கள் ஏதுமின்றி காலை வெயிலிற்கே மலை கருகிக்கொண்டிருந்தது. மொட்டைப்பாறை எந்நேரமும் கீழே விழுந்துவிட தயாராக இருப்பதைப் போல் நாற்பத்தைந்து பாகை சாய்வில் நின்றது. அதற்கு எந்த பிடிமானமும் இருக்கவில்லை. பாறையைச் சுற்றியிருந்த செம்மஞ்சள் துணி காற்றின் படபடப்பில் கிழிந்திருந்தது. விளக்கேற்றும் இடங்கள் எண்ணெய் ஊறி கறுப்புத்திட்டாய் இருந்தது. பாறையில் இரு கண்கள் கீறப்பட்டு பெரிய சிவப்புப் பொட்டிட்டிருந்தார்கள். நீதிதவறும் காலத்தில் அது தானாகவே விழுந்து அநீதியாளர்களைத் தண்டிக்கும் என பேசிக்கொண்டார்கள். மேய்சல் ஆடுகள் எந்தப் பயமுமின்றி அதன் மேலேறுவதும் சறுக்குவதுமாய் விளையாடிக்கொண்டிருந்தன.

வரையாட்டின் மதர்ப்போடு தனங்கள் குலுங்க எஸ்தர் மலையில் ஏறிக்கொண்டிருந்தாள். களைப்பு அவளின் நடையில் தெரிந்தது. முக்காடைத் தாண்டி வெயில் முகத்தில் அறைந்தது. கைரேகைகள் எதுவும் தெரிகிறதா என கேசவன் உற்றுப்பார்த்தான். எஸ்தரின் இடதுகண் புருவம் வெடித்து கண் சிவப்பாகியிருந்தது.

பழிதீர்க்க முடியாத பெருங்கோவம் கேசவனின் இடுங்கிய கண்களில் கண்ணீராக வழியத்தொடங்கியது. அவனது மெலிந்த தேகம் குலுங்கிக் குலுங்கி அடங்கியது. கைகள் நடுங்க எஸ்தரை அணைத்தபடி “கவலப்படாத… உன்னைய கல்யாணம் பண்ணி பிரான்ஸ்சுக்கு கூட்டிட்டுப்போயிடுறன்” என்றான்.

அழாதடே கேசவா… நானே அழேல்ல… ஆம்பளை நீயேன் அழுற… அப்பா அடிச்சது உனக்கு வலிக்கா” என சிரிக்க முயன்றாள் எஸ்தர். அழுகை அவளின் மனதை இளக்கியிருந்தது. அவளே கதியென அழும் ஆணின் கண்ணீர் எந்தப் பெண்ணின் உறுதியையும் ஒருமுறை ஆட்டிப்பார்க்கிறது. தலையைக் கோதி மடியில் சாய்த்துக்கொண்டாள்.

மொட்டைப்பாறையின் சிறுநிழல் இருவரையும் அணைத்துக்கொண்டது. அணலும் தகித்தது. தகிப்பு உள்ளிருந்தா வெளியிருந்தா என அறியமாட்டாமல் இருவரின் மூச்சிலும் சூடேறியிருந்தது. மலைச்சரிவில் வெயிலை இரசித்தபடி கிடா ஒன்று மருக்கையை மணம் பிடித்துக்கொண்டு நின்றது.

000

கேசவன் பாறைகளுக்குப் பின்னால் ஒளிந்திருந்தான். பின்னால் எவரும் வரவில்லை என்பதை உறுதிபடுத்திக்கொண்டான். உயிர்ப்பயம் பசியை மறக்கடித்திருந்தது. உதடுகள் காய்ந்து முகம் சொரசொரத்தது. கால் தசைகளில் நாயுருவி ஒட்டிகிடந்தது. உதடுகளை ஈரப்படுத்திக் கொண்டே ஒவ்வொன்றாக உருவி எடுத்தான்.

எஸ்தரை அப்படியே விட்டுவிட்டு ஓடி வந்ததை நினைக்க வெட்கமாயிருந்தது. நாளைக்கு எப்படி முகத்தில் முளிப்பது. பயந்தாங்கொள்ளியை காதலிக்க யாரு விரும்புவா. எஸ்தரிட்ட கேட்டுட்டு “ஓமெண்டு” சொன்னாளென்டால் டேவிட்டுக்கு மண்டேல போடனும் என வாய்விட்டு சொல்லிக்கொண்டான்.

டேவிட்டின் தலை தெரிகிறதா எனப் பார்த்துக் கொண்டு மெதுவாக மலையில் ஊர்ந்து ஏறினான். மொட்டைப்பாறையின் எதிர்ச்சரிவிலிருந்து டேவிட் மேலேறி வருவது தெரிந்தது. எஸ்தரின் முடியைக் கொத்தாகப் பிடித்திருந்தான். திமிறி ஓட முயன்றவளின் முகத்திலேயே அறைந்தான். அவள் கேசவா… கேசவா எனக் கத்துவது மொட்டைப்பாறையில் எதிரொலித்தது. டேவிட்டின் கையிலிருக்கும் அரிவாள் அவனது பயத்தைக் கூட்டியிருந்தது. இதயம் துடிப்பது வெளியில் கேட்டது.

மொட்டைப்பாறையில் இவர்கள் அமர்ந்திருந்த இடத்திற்கு வந்து எதையோ காட்டி காட்டி எஸ்தரை அடித்தான். அவுசாரிப் பய… என்ற வார்த்தை மட்டும் எங்கும் எதிரொலித்தது. எஸ்தர் கீழே கிடந்து நெஞ்சிலும் முகத்திலும் அடித்துக் கொண்டே அழுதுகொண்டிருந்தாள். டேவிட் அவள் முடியைத் திருகி இழுத்து சரிவில் இறங்க முயன்றான். திடீரென எஸ்தர் டேவிடைத் தள்ளிவிட்டுவிட்டு மலையிலிருந்து குதித்தாள். அவளது உடல் லேசாகிப் பறந்தது. கால் மேலாகி தலை கீழ்வந்து உடல் உருண்டது. இனி எவனாலும் சித்திரவதை செய்ய முடியாதென்பதும் கேசவனோடு சேருவதை தடுக்க முடியாதென்பதும் அவளுக்கு மகிழ்ச்சியாயிருந்தது. இறக்க நினைத்து மலையிலிருந்து குதிக்க முடிவெடுத்த அந்த தருணத்தை யோசித்தாள்… ஆட்டுக்குட்டிகள் சிதறியோட அங்கொரு பாறை முளைத்திருந்தது.

எஸ்தர் … எஸ்தர் எனக் கத்தியபடி டேவிட்டை நோக்கி கேசவன் ஓடினான். டேவிட் தடுமாறி எழுந்தான். எதுவும் நடக்காதது போல் அருகில் கிடந்த எஸ்தரின் தாவணியை எடுத்து அரிவாளைத் துடைத்துக் கொண்டே கீழிறங்கினான். வெறிபிடித்தவனைப் போல ஓடிவந்த கேசவன் மேலிருந்து எட்டிப் பார்த்தான்.

கீழே எஸ்தரின் உடல் குப்புறக் கிடந்தது. அதை நோக்கி டேவிட் மீசையைத் தடவியபடியே போய்க்கொண்டிருந்தான். இன்னும் நிறைய மீசைகள் வேட்டியைத் தொடைக்குமேல் கட்டிக்கொண்டு எஸ்தரை சுற்றி நின்றார்கள்.

கேசவன் மொட்டைப்பாறையை தள்ளி டேவிட் மீது விழுத்தப் பார்த்தான். அவனுக்கு டேவிட்டை இப்படிக் கொல்வது எளிதாயிருக்கும். ஆனால் பாறை அசையவேயில்லை. நெம்பித்தள்ள எதையாவது எடுக்கலாமென சுற்றிப் பார்த்தான்…

அங்கே அவனுடைய வெட்டப்பட்ட கழுத்து தனியாகக் கிடக்க இரத்தம் ஒரு பெருங்கோடாக சரிவில் இறங்கிக் காய்ந்திருந்தது. அலறிக்கொண்டே கேசவன் தலைதெறிக்க ஓடினான்.

மொட்டைப்பாறை உருளத்தொடங்கியது

– பிரசுரமான இதழ்: தளவாசல் கலை இலக்கிய சமூக பண்பாட்டுக் காலாண்டிதழ் – யூலை செப்டெம்பர் 2016

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *