எல்லா சாலைகளும் குற்றங்களை நோக்கி

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: கிரைம்
கதைப்பதிவு: December 5, 2023
பார்வையிட்டோர்: 4,612 
 
 

(1998ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 11-12 | அத்தியாயம் 13-14 | அத்தியாயம் 15-16

அத்தியாயம்-13

“ஹலோ ராம்ச்சந்திரனா?”

“சொல்லுங்க சிவ சிதம்பரம்…” 

“என் மகன் கிருஷ்ணகுமார் இன்னிக்கி வீடு திரும்பி வந்துட்டான்”. 

“அப்படியா… வெரிகுட்… நல்லசேதிதான்”.

”நம்ம மார்னிங் ஸ்டார் குரூப்தான் ஊட்டியில கண்டுபிடிச்சி அழைச்சிட்டு வந்தாங்க.” 

“நான் சொல்லலை. ரொம்ப ஈஸியா கொண்டு வந்து சேர்த்திடுவாங்கன்னு…” 

“கொஞ்ச முரண்டு பண்ணித்தான் வந்திருக்கான்.” 

“சட்டுப்புட்டுன்னு நல்ல பொண்ணாப் பாத்து கல்யாணத்தை முடிச்சிடுங்க…” 

“நல்லபடியா இருக்கணுமே. சும்மா கல்யாணத்தைப் பண்ணி வச்சிட்டு இவன் பாட்டுக்கு இப்ப இருக்கிற மாதிரியே பொறுப்பில்லாம திரிஞ்சா…” 

“இவனைவிட மோசமா திரிஞ்ச பசங்களை யெல்லாம் நான் பாத்திருக்கேன் சிவசிதம்பரம்… கல்யாண மானா தானா அடங்கிவிடுவான்.” 

“எனக்கென்னமோ நம்பிக்கையில்லை. நான் தகப்பன் என்கிற முறையில் என்னுடைய கடமையை செய்திடறேன். அதுக்கு மேல் அவன் தலையெழுத்து…” 

“கிருஷ்ணகுமார் இருக்கானா வெளியில் போயிருக்கானா?” 

“வெளியில போயிருக்கான்.” 

“நீங்க வீட்ல இருந்துதானே பேசறீங்க?”

“ஆமா…” 

“நான் ரெண்டு மூணு நாள் கழிச்சி வீட்டுக்கு வரேன்,” 

“ராமச்சந்திரன். அன்னிக்கிக் குடுத்தோமே ஒரு விளம்பரம்… கிருஷ்ணகுமார் காணாமல் போயிட்டதைப் பத்தி” 

“ஆமா….” 

“இப்ப இன்னொரு விளம்பரம் குடுக்கணும்…”

“மேட்டர் சொல்லுங்க எழுதிக்கறேன்…’ 

‘”சரி” 

“காணாமல் போன என் மகன் கிருஷ்ணகுமார்” 

“உம்…” 

“கடவுள் கிருபையால் நல்லபடியாய்…” 

“வீடு வந்து சேர்ந்துவிட்டான்…” 

”உம்…” 

“என்பதை…’ 

“உம்…” 

“இதன் மூலம்” 

“இதன் மூலம்…”

“உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும்…”

”உம்…” 

“தெரிவித்துக் கொள்கிறேன்…” 

“தெரிவித்துக் கொள்கிறேன்…” 

“அவ்வளவுதான் மேட்டர்… அன்னிக்குக் குடுத்த அதே பேப்பர் எல்லாத்திலும் இந்த விளம்பரத்தை குடுத்திடுங்க…” 

“இந்தத் தடவை போட்டோ வேண்டாம்?” 

“மேட்டரை இப்பவே அனுப்பிடறேன். ஆனா நாளைக்கு பேப்பர்ல வரமுடியாது – புதன்கிழமை தான் வரும்…” 

“அதைப்பத்தி பரவாயில்லை…” 

“நான் வெள்ளிக்கிழமை உங்கவீட்டுக்கு வரேன்…” 

“வாங்க…”

“வச்சிரட்டுமா.” 

“தேங்ஸ்.” 

சிவசிதம்பரம் ரிசீவரை வைத்தார். பக்கத்தில் அமர்ந்திருந்த அவரின் மனைவி கேட்டாள்: 

“என்ன சொல்றார்?” 

“எனக்கென்னவோ புதுசா ஒரு சந்தேகம் வருது.”

“என்ன சந்தேகம்?” 

“நம்ம குமாருக்கு யாரும் செய்வினை மாதிரி எதுவும் வச்சிட்டாங்களோன்னு…”

“எதையாவது உளறாதே.” 

“இல்லைங்க. அவன் ஆளே என்னவோ போல் இருக்கான்… உடம்பு முகம் எல்லாம் முரட்டுத்தனமா மாறிப் போயிருக்கு. நடை உடை பாவணை எதுவுமே சரி யில்லை…”

“நான் கேக்கறேன் – என்னிக்குத்தான் சரியா இருந்தான்?”

“நீங்க சரியா அவனைப் பாக்கலைன்னு நெனைக்கிறேன். நம்ம குமார் போலவே இல்லை…” 

“பணத்தையும் எடுத்துக்கிட்டு ஓடிப்போனவன் குமார்தானே?” 

மேற்கொண்டு என்ன சொல்வதென்று தெரியாத சிவசிதம்பரத்தின் மனைவி மௌனமாகிவிட்டாள். அப்போது தோட்டத்தில் ஹோண்டா வந்து நிற்கும் ஒலி கேட்டது. கரிகாலன் வேகமாக உள்ளே நுழைந்தவன் சிவ சிதம்பரத்தைப் பார்த்ததும் விரைந்து மாடிக்குப் போய் விட்டான். கணவன் மனைவி இருவரையும் சேர்ந்தாற்போல எதிர்நோக்க அவனுக்கு சிறிது அவகாசம் தேவைப்பட்டது. அறையில் சிறிது நேரம் வெறுமே உட்கார்ந்திருந்தான். பின் எழுந்து இணைக்கப்பட்டிருந்த பாத்ரூம் போய் முகத்தைக் கழுவித் துடைத்து கொண்டான். வாசனைத் திரவியம் எடுத்து ஸ்ப்ரேபண்ணிக்கொண்டான். திட்டமிட்டிருக்கும் உத்திகளை நினைவுபடுத்திக்கொண்டு கீழே இறங்கிவந்து ஒரு சோபாவில் அமர்ந்தான். 

“அம்மா, எனக்கு ஒரு காப்பி தாங்களேன்,” என்றான். 

”இதோ எடுத்திட்டு வரேன்.” – அந்த அம்மாள் எழுந்து போனாள். 

”அப்பா, நான் வேற பிசினெஸ் ஏதாவது புதுசா ஆரம்பிக்கலாம்னு இருக்கேன்” என்றான். 

“என்ன பிசினெஸ்?” சிவசிதம்பரம் கேட்டார்.

“ஏதாவது எலெக்ட்ரானிக்ஸ் கம்ப்யூட்டர் – இந்த மாதிரி..” 

“ஏன் நம் ஷிப்பிங் ஏஜென்ஸி உனக்கு வேண்டாமா?”

“வேண்டாம்ப்பா.. அந்த லோல் எல்லாம் என்னால் படமுடியாது… அதெல்லாம் வருஷம் பூரா ரெஸ்ட்டே இல்லாத ஒரே டென்ஷனான பிசினெஸ்… எனக்கு பணமும் சம்பாரிக்கணும். ஆனா அதுக்காக வாழ்க்கையையே பணம் சம்பாரிச்சுக்கறதுக்கே ஒதுக்க முடியாது – நல்லா லைஃப்பை என்ஜாய் பண்ணவும் வேணும்… அதான் என் பாலிஸி. அதான் என்னோட பிலாசபி…!” 

“நீ என்ன பிசினெஸ் ஆரம்பிக்கணும்னு சொன்னாலும் நான் ஆரம்பிச்சித்தரேன். அதைப்பத்தி எனக்கொண்ணும் ஆட்சேபணையில்லை. ஆனா ஆரம்பிச்சுக்குடுக்கற பிசினெஸ்ஸை நீ உட்கார்ந்து ஒழுங்கா கவனிச்சுக்கணும்… விளையாட்டுத்தனமெல்லாம் இருந்திடக்கூடாது.” 

“இல்லைப்பா…நான் நெஜமான சீரியஸாத்தான் கேக்கறேன்…” 

“தென் ஓகே… நான் ஆரம்பிச்சுத்தரேன்… எப்ப ஆரம்பிக்கலாம்னு இருக்கே?”

“அடுத்த ரெண்டு மாதத்தில்.” 

“முதல்ல நல்லா ப்ளான் பண்ணிக்க.”

“எனக்கு முதல்ல வேண்டியது உங்களோட சம்மதம் தான்… அதுக்கு அப்புறம்தான் ப்ளானிங்…”

”உன் நல்வாழ்க்கைக்கு எல்லாவிதத்திலும் உனக்கு நான் உதவ முடியும் குமார். அதுக்குத் தகுந்தபடி நீயும் நடந்துக்கணும்.” 

“நடந்துக்கற ஐடியாவிலதானே திரும்பியே வந்திருக்கேன் ஃபாதர்,” 

”சந்தோஷம்.” 

“இது வரைக்கும் நான் உங்ககிட்டேயோ வேறயார் கிட்டேயோ நம்ம குடும்பத்தோட டோட்டல் ஐவேஜி என்னன்னு கூடக் கேட்டுத் தெரிஞ்சுக்கிட்டது கிடையாது. அதெல்லாம் இன்னிக்கித் தெரிஞ்சிக்கலாம்னு நெனைக்கிறேன்…” அப்போது சிவசிதம்பரத்தின் மனைவி அவனுக்கு காப்பி எடுத்து வந்து தந்தாள். கரிகாலன் காப்பியை வாங்கி உறிஞ்சினான். 

சிவசிதம்பரம் சொன்னார், ‘உனக்கு என்ன விபரம் தெரியணுமோ-கேளு; சொல்றேன்…” 

”ஒன் மினிட். காப்பியைக் குடிச்சி முடிச்சிடறேன்…” கரிகாலன் சொன்னான். 

அப்போது தோட்டத்தில் கார் வந்து நிற்கும் சப்தம் கேட்டது. இரண்டு ஆண்கள் வேகமாக இறங்கி உள்ளே வந்தார்கள். சிவசிதம்பரம் எழுந்து நின்று அவர்களை வரவேற்றார். 

“கிருஷ்ணகுமார் வந்திட்டான்னு கேள்விப்பட்டோம். அதான் வந்து பாத்திட்டுப் போயிரலாம்னு வந்தோம்,” வந்தவர்கள் சொன்னார்கள். 

கரிகாலனுக்கு எரிச்சலும் ஆத்திரமும் நெருப்பாக மூண்டன… வெறுப்புடன் எழுந்து வேகமாய் படிகளில் ஏறி அறைக்குப் போய்விட்டான்… 

பாம்பின் சீற்றம் போல உஷ்ணமாகவும் விரைவாகவும் மூச்சுக் காற்று அவனிடம் இருந்து வெளிப்பட்டது. பல்லைக்கடித்தான். கோபத்தில் குமுறினான். பண விஷயம் பேச ஆரம்பித்ததும் பல்லை இளித்துக் கொண்டு எவனோ வந்து விட்டான். கிருஷ்ணகுமாரைப் பார்க்கவந்தார்களாம்… அவர்களை கரிகாலன் மனதுக்குள் கெட்ட வார்த்தைகளால் திட்டினான். பணத்தைச் சுருட்டிக் கொண்டு எப்போதுடா பறப்போம் என்றிருந்தது. 

அப்போது சிவசிதம்பரத்தின் மனைவியும் மாடி அறைக்குள் வந்தாள். 

“என்ன குமார்; சட்டுனு இப்படி கிளம்பி வந்திட்டே பாவம் எவ்வளவு ஆசையா உன்னைப் பாக்கறதுக்காக வந்தாங்க…” 

”யார் வரச்சொன்னது அவங்களை… நாந்தான் சொல்லியிருக்கேனே – நாலைஞ்சி நாளைக்கு யாரும் என்னைப் பாக்கறதுக்குன்னு சொல்லிட்டு வந்து தொந்தரவு பண்ணக்கூடாதுன்னு…” 

“சும்மா ஒரு நிமிஷம் இருந்து ரெண்டு மூணு வார்த்தையாவது பேசிட்டு கிளம்பி வந்திருக்கலாமே”. 

“காம்ப்ளெக்ஸ்ம்மா காம்ப்ளெக்ஸ்! கொஞ்ச நாளைக்கு யாரையும் என்னாலே ஃபேஸ் பண்ணமுடியாது. உண்மையைச் சொன்னா உங்களையே என்னால ஃபேஸ் பண்ண முடியலை. அவ்வளவு கில்ட்டியா ஃபீல் பண்றேன். போதுமா?” 

“அம்மாகிட்டேல்லாம் உனக்கு வேண்டியதில்லை அந்த கில்ட்டி ஃபீலிங்…”

கரிகாலன் இப்படியொரு மென்மையான வெளிப்பாட்டை எதிர்பார்க்கவே இல்லை. அந்தப் பெண்மணியை அப்படியே அள்ளிக் கொள்ளலாம் போலிருந்தது. மிகச் சிறிய குழந்தைப் பருவத்திலேயே இறந்துபோன தன்னுடைய அம்மாவை நினைத்துக்கொண்டான். இவளை அம்மாவாக அடைந்த கிருஷ்ணகுமார் அதிர்ஷ்டசாலிதான். இவளையும் கல்கத்தாவுக்கு இழுத்துக் கொண்டு போய்விட்டால் என்ன வென்று தோன்றியது. உலகுக்கு அம்மாவாகத் தோற்றப் படுத்திக்கொண்டு மனைவியாக வரித்துக் கொள்ளக்கூட கரிகாலனின் மனம் தயாராக இருந்தது! அந்தப் பெண்மணி வயதானவளாக தெரியாமல் கனிந்த கனியாகத்தான் தெரிந்தாள்! அவனுக்குப் பிடித்தமான பசு போன்ற சாயலையும் கிருஷ்ணகுமாரின் அம்மா கொண்டிருந்தாள். சரஸ்வதி கரிகாலனை ஈர்த்தது கூட இந்தப்பசுமை குணத்தால்தான்… 

சுழலத் துவங்கிய உணர்வுச் சுழலை மனத்துள் சட்டென கரிகாலன் கலைத்துக் கொண்டான். இந்த உணர்வுப் பெருகல்கள் வேறொரு பிரயோஜனம் இல்லாத சாலைக்குச் செலுத்திவிடும். பெரும் நஷ்டத்தில், ஆழ்த்திவிடும்… அப்போதைய யதார்த்தமான தேவை கொள்ளைகளை நோக்கிப் போகிற குற்ற வழிப்பாதைகள் தாம்… 

“உங்ககிட்டே கூட கில்ட்டி ஃபீலிங் எதுவும் இல்லாமே நான் இருக்கணும்னா நீங்கதான் எனக்கு அதுக்கும் உதவி பண்ணியாகணும்”- கரிகாலன் சொன்னான். 

“என்ன உதவி வேணுமோ- கேள். செய்றேன்.”

”கொஞ்ச நாளைக்கி நான் என்ன பேசினாலும் எப்படி நடந்துகிட்டாலும் என்னை எதுவுமே சொல்லாதீங்க…” 

“சரி சொல்லலை.” 

“நீங்க போங்க. நான் கொஞ்சம் தனியா இருந்து ரெஸ்ட் எடுத்துக்கறேன்…” 

“குளிப்பியே?” 

“அப்புறமா குளிக்கிறேன்.” 

“ஏழரை மணிக்குச் சாப்பிட வந்திரு.” 

“எட்டு மணிக்கு வரேன்…” 

அந்த அம்மாள் கீழே இறங்கிப் போனதும் காத்திருந்தவன் போல கரிகாலன் அறைக் கதவைச் சாத்தித் தாளிட்டுக் கொண்டு படுக்கையில் விழுந்தான்… முடிந்தால் நாளை இரவே காரியத்தை முடித்துவிட்டு புதன்கிழமை காலை இங்கிருந்து பறந்து விடவேண்டும். ஒருவேளை நாளை முடியாமல் போகிற பட்சத்தில் புதன்கிழமை இரவு எப்படியும் நிகழ்த்திவிட்டு வியாழக்கிழமை காலை கிளம்பி விட வேண்டும் என்ற தீர்மானத்தில் கரிகாலன் குற்றம் புரிய வந்த வன்மத்துடன் விழித்தபடியே படுக்கையில் கிடந்தான். 

அத்தியாயம்-14

கரிகாலன் சாப்பிடுவதற்காக கீழே இறங்கி வந்த போது மணி எட்டரை ஆகிவிட்டிருந்தது. சிவசிதம்பரம் சாப்பிட்டுவிட்டு அவருடைய அறைக்குப் போய் விட்டிருந்தார், “மேல வந்து பாத்தேன். நீ தூங்கிட்டு இருந்தே” சிவசிதம்பரத்தின் மனைவி சொன்னாள். கரிகாலன், “லேசா கண் அசந்திட்டேன்,” என்றான். 

“நேத்து நைட் பஸ்ல தூங்கினியா?”

“பஸ்ல தூங்க முடியுமா?” 

கரிகாலனுக்கு நல்ல பசி. மளமளவென்று சாப்பிட்டான். 

“அதுல பாருங்கம்மா. கொஞ்சநேரம் கண்அசந்து தூங்கிப்போனப்பகூட ஒரு மோசமான கனவு…” என்றான் மனோ திட்டத்துடன். 

“என்ன கனவு?” 

”உங்க நகையெல்லாம் திருட்டுப் போகிற மாதிரி… சில சமயத்ல என்னோட கனவு பலிச்சிரும்மா! தயவு பண்ணி நகைங்க எல்லாத்தையும் பேங்க் லாக்கர்ல கொண்டு போய் வச்சிடுங்க…”

“சில விசேஷங்களுக்குப் போய் வர வேண்டியிருக்கு. போய் வந்ததும் கொண்டு போய் வச்சிரலாம்…” 

“பாருங்கம்மா; இத்தனை வருஷத்ல மொத்தம் நீங்க எவ்வளவு நகை வச்சிருக்கீங்கன்னே தெரியாது எனக்கு…” 

“அந்த மாதிரியான பொறுப்பெல்லாம் இன்னும் உனக்கு வரலையே குமார்,” 

“இப்ப கொஞ்சம் பொறுப்பு வந்திருக்கிற மாதிரி எனக்கே தெரியுதும்மா… இப்ப சொல்லுங்க. மொத்தம் எத்தனை பவுன் நகை வச்சிருக்கீங்க நீங்க…?” 

“என்ன – கிட்டத்தட்ட அறுபது பவுன் நகை இருக்கும்…”

“வைரங்களைச் சேர்த்தா சொல்றீங்க?”

“வைரங்களைச் சேர்க்கலை.” 

“வைர நகைகள் எவ்வளவு மதிப்புக்கு வச்சிருக்கீங்க…?” 

“அது ஒரு நாலு லட்ச ரூபாய்க்கு இருக்கும்.” 

“இவ்வளவு நகைகளைப் போய் பயப்படாமே வீட்ல வச்சிருக்கீங்க…”

“எல்லாம் பத்திரமா காட்ரேஜ் லாக்கர்லே பூஜை ரூமுக்குள்ளே தானே இருக்கு…” 

“எனக்கென்னமோ பாதுகாப்பானதா தோணலை…!”

“பகவான் அப்படியெல்லாம் நம்மைச் சோதிச்சிட மாட்டார்.”

“பகவான் தானே என்னை வீட்டை விட்டு ஓடவச்சார்!”

“அதான் நீ திரும்பி வந்துட்டியே…”

“சொல்றதைச் சொல்லிட்டேன்… அப்புறம் உங்க இஷ்டம்…”

கரிகாலன் சாப்பிட்டு முடித்து கைகளை அலம்பிக் கொண்டான். 

“அப்பா தூங்கப் போயாச்சா?” 

“ஆமா…” 

“பிசினெஸ் விஷயமா பேச ஆரம்பிச்சேன் வந்திட்டானுங்க இடைஞ்சலா…” 

“நாளைக்கு சாய்ந்தரம் ஃப்ரியா இருப்பார் பேசேன்.” 

“சரிம்மா நான் போய் தூங்கறேன். பயங்கர டயர்டா இருக்கு…” 

கரிகாலன் படியேறி மாடிக்குப் போனான். அந்த அம்மாளின் நகை எவ்வளவு எங்கே இருக்கிறது என்பது தெரிந்துவிட்டது… தன்னுடைய ப்ரீஃப்கேஸைத் திறந்தான். எந்த பீரோவையும் அறையையும் இலகுவாகத் திறக்கிற சன்னமான உபகரணங்களை ஒவ்வொன்றாக எடுத்துப் பார்த்துக்கொண்டான். நகைகளின் உலகம் அவனுள் திறந்து கொண்டுவிட்டது. இனி கரன்சி நோட்டுக்களின் உலகம் மர்மம் நீங்கி பிரகாசம் பெற்றாக வேண்டும்… இரண்டு உலகையும் திறந்து அள்ளிவிட்டால் – இந்தத் தற்காலிகக் குடியேற்றம் முற்றுப்பெறும்… தூங்காமலேயே அறைக்குள் சுற்றிச்சுற்றி வந்து கொண்டிருந்த கரிகாலன் பால்கனியில் நின்று கீழே கவனித்தான். கேட் பூட்டப்பட்டு வெளியில் செக்யூரிட்டி ஆள் ஸ்டூல் போட்டு மிகவும் திடகாத்திரத்துடன் உட்கார்ந்து காவலில் இருந்தான். அவிழ்த்து விடப்பட்டிருந்த நாய் தோட்டத்தில் அலைந்து கொண்டிருந்தது. கரிகாலன் மணியைப் பார்த்தான். பன்னிரெண்டு, மெதுவாக, சப்தம் எழுப்பாமல் மாடிப்படிகளில் இறங்கினான். ஹாலில் நிசப்தமாகச் சில நிமிடங்கள் நின்று கொண்டிருந்தான். பூஜை அறைக் கதவை நோக்கி நடந்தான். கதவு பூட்டப்பட்டு சாவி எடுக்கப்பட்டிருந்தது. திண்டுக்கல் பெட்டி பூட்டு … சப்பையான தகடு ஒன்றையும் சிறிய கம்பியையும் இணைத்து பூட்டுக்குள் திருகி பிடியை வன்மையாகச் சுழற்றினான். பூட்டு புஷ்பமாக இயங்கியது! கதவைத் திறந்து உள்ளே நுழைந்து சாத்திக் கொண்டான். பீரோ உயர்ந்த நிழலாய் நின்றது. 

எல்லாக் கடவுள்களும் இருளில் இருந்தார்கள். பிரயத்தனமே இல்லாமல் பீரோவையும் லாக்கரையும் திறந்து சிகரெட் லைட்டரை எரியவிட்டுக் கவனித்தான். பீரோவின் லாக்கர் அறை கோவிலின் கர்ப்ப கிருஹம்போல் சன்னமாய் ஒளிர்ந்தது. சிறுசிறு அழகிய பெட்டிகளில் விதவிதமான நகைகள் பத்திரப்படுத்தப்பட்டிருந்தன. ஒரு தந்தப் பெட்டியில் மெலிதான பட்டுக் காகிதத்தில் சிறுசிறு வைரங்கள் சுடர்விட்டன… கரிகாலனுக்கு மிக திருப்தியான உணவு சாப்பிட்டாற் போலிருந்தது… எல்லாவற்றையும் அப்படியே இருந்த இடத்தில் வைத்தான். என்றைக்குக் காலை கிளம்புகிறோமோ அதற்கு முந்தின இரவு இவற்றையெல்லாம் வழித்தெடுத்து மூட்டை கட்டிக் கொள்ளலாம் என்ற எண்ணத்துடன் பீரோவை உபகரணங்களால் பூட்டி பூஜை அறையின் கதவையும் பூட்டினான். சற்று முன் எந்த விகற்பமும் இல்லாதிருந்த சூழலில் வித்தியாசம் சிவசிதம்பரத்தின் அறையில் தெரிந்த விளக்கு வெளிச்சத்தில் வந்திருந்தது. கரிகாலன் எச்சரிக்கை உணர்வுடன் அப்படியே நின்றான். அபாயகாரமான எந்தச் சத்தமும் இல்லை. கரிகாலனுக்கு விசித்திரமாக இருந்தது. இந்த நேரத்தில் சிவசிதம்பரம் திடீரென்று விளக்கை எரியவிட்டுக் கொண்டு என்ன பண்ணுகிறார். மெதுவாக சுவரை நோக்கி நடந்து சாத்தப்பட்டிருந்த ஜன்னல் நிலையில் ஓசை எழுப்பாமல் ஏறி நின்று வெண்டிலேட்டர் வழியாகப் பார்த்தான். சிவ சிதம்பரத்துடன் அந்த வீட்டின் சமையல் பொறுப்பில் இருக்கும் பெண்மணி படுத்திருந்தாள். கரிகாலனுக்கு ஆச்சர்யமாகப் போய்விட்டது. பாலுணர்வுக் குற்றங்கள்…! அற்புதமான மனைவியை அடைந்திருக்கும் மனுஷனுக்கு இப்படி ஒரு பெண்ணாக இருப்பதைத் தவிர வேறு எதுவாக விகசிக்காத பெண்ணும் வேண்டியிருக்கிறாள். நடக்கட்டும் நடக்கட்டும் என்று முணங்கிவிட்டு மாடி அறைக்குச் சென்றான். இரவில் சிவசிதம்பரத்தின் மனைவி தனியாக வேறொரு அறையில் தூங்குவாள் என்ற விஷயமே அவனுக்கு சோகமானதாகத் தெரிந்தது. அந்தப் பயல் கிருஷ்ணகுமார் இந்தக் கண்றாவிகளைப் பார்த்துத்தான் ஓடிப்போனானோ என்னவோ… கரிகாலன் பிடரியில் கைகளைக் கோத்தபடி இனிமை கலந்த ஆயாசத்துடன் படுக்கையில் சாய்ந்தான். பணம் எவ்வளவு இருக்கிறது; எங்கே இருக்கிறது என்ற தகவலும் தெரிந்து விட்டால் விஷயம் முடிந்துவிடும். செவ்வாய் இரவு அல்லது புதன் இரவு விஷயம் முடிக்கப்பட்டும் ஆக வேண்டும். வேலை முடிந்து முதலில் நேராக சரஸ்வதியின் வீட்டுக்குப் போய் வைரக்கற்களை அவளிடம் சேர்ப்பித்து பத்திரப்படுத்தி விடவேண்டும். வைரங்களில் செல்வத்திற்குப் பங்கு கிடையாது… ஒவ்வொரு விநாடியும் ஆபத்தை எதிர்நோக்கி நிற்கும் கரிகாலனுக்குத்தான் வைரங்கள்… என்ற நினைவுகளோடும் கனவுகளோடும் கரிகாலன் தூங்கிப் போனான்.

– தொடரும்…

– எல்லா சாலைகளும் குற்றங்களை நோக்கி (நாவல்), முதற் பதிப்பு: 1998, கலைஞன் பதிப்பகம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *