எதிர் பாராதது

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: கிரைம்
கதைப்பதிவு: June 6, 2019
பார்வையிட்டோர்: 24,224 
 
 

அந்த இருளில் ஒரு பாட்டை பாடிக்கொண்டே வந்த சாமிநாதனை ஒரு கும்பல் கை காட்டி நிறுத்தினர். ஏனுங்க என்ன வேணும்? கேள்வியை கேட்டுவிட்டு, மேட்டில் ஒரு காலும், தரையில் ஒரு காலும் ஊன்றி நின்று கொண்டான்.இங்க இராத்திரிக்கு தங்க வசதி இருக்குமா? கேட்டவர்களை நோட்டமிட்டான் சாமிநாதன்.இரண்டு பெண்கள், ஒரு ஆண் இருந்தனர். பார்த்தாலே படித்துக்கொண்டிருப்பவர்கள் என்று தெரிந்து கொள்ளலாம்.

இந்த ஊர்ல தங்கறதுக்கு வசதி இல்லைங்க, ஒரு பத்து கிலோ மீட்டர், போனீங்கன்னா,அங்க இருக்கற டவுனுல தங்கற வசதி இருக்கு. இன்னும் பத்து கிலோ மீட்டரா? அந்த மூவரில் இருந்து ஒரு பெண் வாய் விட்டு சொன்னாள். ஆமாங்க, நீங்க இவ்வளவு தூரம் எப்படி வந்தீங்க?

அந்த மூவரில் இருந்த ஒரே பையன், நாங்க கோயில் சிற்பங்களை பத்தி ஆராய்ச்சி பண்ண வந்த ஸ்டூடண்ட்ஸ். நாங்க வந்துகிட்டு இருந்த கார் மூணு கிலோ மீட்டர் முன்னால் ரிப்பேர் ஆகி நின்னுடுச்சு. இங்க எங்கியாவது வொர்க்க்ஷாப் இருந்தா மெக்கானிக்கை கூட்டிட்டு போய் சரி பனண்ணிடலாமுன்னு நடந்து வந்துகிட்டே இருக்கோம். நேரம் வேற ஆயிடிச்சு. இனிமேல் எங்கியாவது தங்கிக்கறதுதான் பெட்டர்ன்னு நினைச்சுத்தான் இங்க தங்கிக்க ஏதாவது வசதி இருக்குதான்னு கேட்டோம்.

இவரின் நீண்ட விளக்கத்துக்கு இவன் தலையை சொறிந்து கொண்டு இப்பவே மணி பத்தாயிடுச்சு, இன்மேல் நீங்க நடந்து டவுனுக்கு போய் சேரறது சிரமம் தான். ஓண்ணு செய்வோம், என் வீட்டுக்கு உங்களை கூட்டிட்டு போலாமுன்னா உங்கள மாதிரி டவுனு ஆளுகளுக்கு என் வீட்டு வசதி பத்தாது. அதனால எங்க ஊர்ல பெரிய மனுசர் ஒருத்தர் இருக்காரு, அவர்கிட்ட கூட்டிட்டு போறேன். அவர் வீடு வசதியா இருக்கும் என்ன சொல்றீங்க?

கூட்டத்தில் இருந்த பெண் குழைந்து வந்து அவனிடம் அதை முதல்ல செய்யுங்க மிஸ்டர்..என்று நிறுத்த, இவன் சாமிநாதன் என்று எடுத்துக்கொடுத்தான்.

ஆங்..அதுதான் மிஸ்டர் சாமிநாதன்.

இவன் கூட்டி வந்த ஆட்களை பார்த்த பரமசிவம், கொஞ்சம் யோசித்தவர் போல் காண்பித்து எனக்கு ஒரு பங்களா இருக்கு, ஊருக்கு கொஞ்சம் தள்ளி இருக்கு, அங்க போய் தங்கிக்கறீங்களா?

அவர் சொன்னதே போதும் என்றிருந்தது இவர்களுக்கு. போதுங்க, இன்னைக்கு இராத்திரிக்கு மட்டும்தான், அவர்கள் சொன்னதை காதில் வாங்காதவர் போல் அவர் முன்னே நடக்க ஆரம்பித்தார். இவர்களும் மறு பேச்சு பேசாமல் அவரை பின் தொடர்ந்தனர்.

அவர் காண்பித்த பங்களா அவ்வளவு வெளிச்சம் இல்லாவிட்டாலும் உள்ளே நல்ல

வசதியோடு இருந்தது. கொஞ்சம் குப்பைகள் மட்டும் இருந்தன.அங்கிருந்த ஐந்து அறைகளில் இரண்டை ஆண் பெண் என பிரித்து புகுந்து கொண்டனர்.சாமிநாதன் அந்த இரு அறைகளை எங்கிருந்தோ கொண்டு வந்த விளக்கு மாறால் சுத்தம் செய்துவிட்டு வெளியே நின்றிருந்த பரமசிவத்துடன் சற்று நேரம் பேசிக்கொண்டிருந்து விட்டு, அப்படியே அந்த இருட்டில் நடந்து சென்றனர். இவர்கள் கதவை சாத்திக்கொண்டனர்.

அவ்வளவு தூரம் நடந்து வந்த களைப்பு, இவர்களை அடித்து போட்டாற் போல தூங்க

வைத்தது.விழித்து எழும்போது சூரியன் ஓரளவு மேலெழும்பி விட்டான். கதவை திறந்தவுடன்

வாசலில் சாமிநாதன் உட்கார்ந்திருப்பதை பார்த்தவுடன் இவர்களுக்கு வெட்கமாக போய் விட்டது. சாரி மிஸ்டர் சாமிநாதன், அதுக்கென்ன பரவாயில்லை, புன்னகைத்த சாமிநாதன்

உங்களுக்கு காலைக்கு வேணுங்கற டிபனை வாங்கிட்டு வந்துட்டேன். இங்கியே கிணறு இருக்கு, நல்லா குளிச்சு ரெஸ்ட் எடுங்க. நான் போய் உங்க கார் என்னாச்சுன்னு பாத்துட்டு வந்துடுறேன், சொன்னவனை நன்றியுடன் பார்த்தனர். மூவரும். ரொம்ப நன்றி சார், அந்த பையன் சொன்னதை இவன் காதில் வாங்காமல் நடந்தான்.

எல்லாம் குளித்து உடை மாற்றி வெளியே வந்தவர்கள், அங்கிருந்த சூழ்நிலைகளை பார்த்து ஆச்சர்யப்பட்டனர். சே எவ்வளவு பசுமயா இருக்கு. இந்த பங்களாவை சுத்தி இவ்வளவு மரங்க இருக்கறது எவ்வளவு குளுமையா இருக்கு, சொல்லிக்கொண்டிருந்த பொழுது சாமிநாதன் வேக வேகமாக வருவது தெரிந்தது. வந்தவன் உங்க கார் சரியாகறதுக்கு இரண்டு நாள் ஆகுமாம். அதுனால உங்களுக்கு விருப்பமுன்னா இந்த பங்களாவிலயே இரண்டு நாள் தங்கி ரெஸ்ட் எடுத்துட்டு போலாம், அவர்கள் முகத்தை பார்க்க, அவர்கள் இரண்டு நாளாகுமா? என்ன செய்வது என்று பேசிக்கொண்டவர்கள் சரி இரண்டு நாள் என்ஜாய் பண்ணலாம், முடிவு செய்தவுடன் செல் போனில் தகவல் தெரிவித்து விடலாம் என்று செல்போனை தேடினார்கள், செல் போன் எவருக்கும் கிடைக்காததால் செல் எங்க வச்ச?

ஒரு வேளை காருக்குள்ள வச்சுட்டமோ? சரி உன் செல் எங்கே? அவனும் தன்னுடைய சட்டை பேண்ட் எல்லாம் தேடிப்பார்த்தான். ஹூம் கிடைக்கவேயில்லை. இவர்கள் செல் போனை தேடிக்கொண்டிருப்பதை பார்த்த சாமிநாதன் இந்தாங்க என்னுடைய செல் என்று அவர்களுக்கு கொடுத்தான். அவர்கள் ரொம்ப தேங்க்ஸ் என்று வாங்கியவர்கள் நம்பர் அடித்து பார்க்க அது பேலன்ஸ் இல்லை என்று காட்டியது. ஐயையோ என்று சொல்லி விட்டு. சார்ஜ் போட்டு கொடுத்துடறேன். என்றவன் ஒண்ணு செய்யுங்க உங்க அட்ரெசை சொல்லுங்க, நான் எப்படியாவது தகவல் கொடுத்துடறேன்.

ரொம்ப நன்றிங்க சொல்லிவிட்டு மூவரும் அவரவர் விலாசத்தையும், அவர்களின்

பெற்றோர் எண்ணையும் கொடுத்தனர். சரி நீங்க இங்கேயே இருங்க, நான் போய் செய்தி கொடுத்துட்டு வந்துடறேன் சொல்லி விட்டு வேகமாக நடந்தான்.

இவர் மட்டும் இல்லையின்னா இன்னேரம் நம்ம கதி என்னவாயிருக்கும்? நன்றியுடன் சாமிநாதனை பற்றி பேசிக்கொண்டவர்கள், சரி வாங்க இந்த இடத்தை சுத்தி பார்ப்போம். மெல்ல நடக்க ஆரம்பித்தனர்.அவர்கள் இருக்கும் இடத்திலிருந்து பத்து பதினைந்து வீடுகள் தூரமாக தெரிந்தது. இடைப்பட்ட தூரம் வயல்களும், ஒரு சில இடங்களில் புதர்களாகவும் இருந்தன.

நம்மளை மாதிரி டவுனுக்குள்ள இருக்கறவங்களுக்கு இந்த அமைதியான இடம் ஒரு சொர்க்கமுன்னே சொல்லலாம். சொன்னவர்கள் அந்த காட்டை சுற்றி ஓய்ந்து போனவர்களாய் மீண்டும் அந்த பங்களாவுக்கே வந்து சேர்ந்தனர். மதியம் இரண்டு மணி அளவில் அங்கு வந்த சாமிநாதன் அனைவருக்கும் சாப்பாடு கொண்டு வந்து கொடுத்தான், நான் போய் உங்க வீட்டுல சொன்ன உடனே ஏன் செல்லுல பேசலைன்னு கேட்டாங்க, இந்த மாதிரி தவற விட்டுட்டாங்க அப்படீன்னு சொன்னேன். அவங்க நம்ப மாட்டேனுட்டாங்க, சரி உங்க கிட்டே இருந்து ஒரு லெட்டரை வாங்கிட்டு வந்துடறேன்னு சொல்லிட்டு வந்தேன்.ஹூம் எங்க அப்பா எப்பவுமே இப்படித்தான் எதையுமே நம்ப மாட்டாரு, பெருமையுடன் சொல்லியபடி அந்த பெண், “ஹலோ டாட் வீ ஆர் இன் சேவ்” என்று ஆங்கிலத்தில் எழுதி கையெழுத்தை போட்டவள், டீ நீயும் போடுடீ இல்லையின்னா எங்கப்பா என்னை நம்ப மாட்டாரு. இடி இடி என சிரித்தபடி நீயும் போட்டுடா, என்று அவனையும் போட வைத்தாள்.லெட்டரை வாங்கிக்கொண்டவன் சாப்பிட்டுட்டு ரெஸ்ட் எடுங்க, சாய்ங்காலம் ஆனாலே நரி, காட்டு பன்னி நடமாட்டம் ஆரம்பிச்சிடும். அதுனால அதிகமா வெளியே நடக்காதீங்க, சொல்லிவிட்டு உங்க காரை பாத்து ரெடியாயிடுச்சுன்னா கொண்டு வந்துடறேன், சொல்லி விட்டு வேகமாக சென்றான்.

இவர்களுக்கு போரடித்தது,இருந்தாலும் அப்படியே சென்று படுத்தவர்கள் உறங்கி விட்டனர். மாலை ஆகி மறு நாள் விடியலில்தான் இவர்களுக்கு விழிப்பே வந்தது. அவ்வளவு களைப்பாய் இருந்திருக்கிறோமா? இவர்களுக்கே ஆச்சர்யமாய் இருந்த்தது.

கதவு தட்டப்படும் சத்தம் கேட்டவுடன் கதவை திறந்தவர்கள் வெளியே சாமிநாதன் இவர்களை புன்னகையுடன் பார்த்து “வாலிப பசங்க இப்படியா தூங்குவாங்க” என்று கிண்டல் செய்தவன், இந்தாங்க டிபன் கொண்டாந்திருக்கேன், உங்க கார் இன்னைக்கு ரெடியாயிடும்னு சொல்லியிருக்கான். மதியானம் பரமசிவமே வருவாரு, வரும்போது உங்களுக்கு சாப்பாடு கொண்டு வந்து கொடுப்பாரு. நான் இருந்து உங்க காரை ரெடி பண்ணி கொண்டு வந்துடறேன்.

சொன்னவனை நன்றியுடன் பார்த்தார்கள்.

மதியம் பரமசிவம் தான் சாப்பாடு கொண்டு வந்தார். இன்னைக்கு இராத்திரி உங்களுக்கு சின்ன விருந்து வைக்கிறேன், நாளை காலையில வண்டி ரெடி பண்ணி கையோட எடுத்துட்டு வந்துடறேன்னு சாமிநாதன் சொன்னான். இன்னைக்கு இராத்திரிதான் முடியுமாம். முடிச்சுட்டுத்தான் வருவேன்னு சாமிநாதன் வொர்க்ஷாப்லயே உட்கார்ந்திருக்கான். சொன்னவர் சாப்பிட்டு அப்படியெ உலாத்திட்டு இருங்க, நான் சாயங்காலம் அஞ்சு மணிக்கெல்லாம் வந்துடறேன், கிளம்பி விட்டார்.

ஆறு மணிக்கெல்லாம் பரமசிவமும், சாமிநாதனும் கையில் ஏகப்பட்ட பார்சல்களுடன் இவர்களை காண வந்தனர். மூவருக்கும் அன்று இவர்கள் சார்பாக சிறு விருந்து ஒன்று கொடுத்து நாளை காலை நீங்கள் சென்று விடுவீர்கள், அதற்கப்புறம் உங்களை பார்க்க முடியுமோ என்னவோ தெரியாது. அதனால் இந்த சின்ன விருந்தை நீங்கள் சாப்பிட வேண்டும், என்று உருக்கமாக பேசினார் பரமசிவம்

இரவு நன்றாக சாப்பிட்டு அவர்கள் இருவரும் விடை பெற்று சென்ற பின்னர், நாளை காலையில் கிளம்பி விடலாம், நம்மை கவனித்துக்கொண்ட இவர்களுக்கு ஏதேனும் செய்ய வேண்டும் என்று முடிவு செய்து கொண்டு உறங்க சென்றனர்.

மறு நாள் எழும்போது வழக்கம்போல காலை பத்து மணிக்கு மேல் ஆகி விட்டது.

களைப்புடன் எழுந்து கதவை திறந்து வெளியே வந்தவர்களுக்கு, சாமிநாதனும், பரமசிவமும், அவர்கள் காருடன் காத்துக்கொண்டிருந்தனர். என்ன ஆச்சு இவ்வளவு நேரம் தூங்கிட்டு இருக்கறீங்க. அவர்களின் கேலிப்பேச்சுக்கு இவர்கள் வெட்கப்பட்டுக்கொண்டு, இதோ பத்து நிமிசத்துல ரெடியாயிடுறோம், சொல்லி விட்டு வேகமாக உள்ளே சென்றனர்.

அடுத்த அரை மணி நேரத்தில் அவர்கள் காரில் ஏறி கிளம்பு முன்னர் கண்களில் நீர் வழிய உங்களை மறக்கவே மாட்டோம், என்று சொல்லி விட்டு அவர்கள் கையில் ஏராளமான பணத்தை வைத்தனர்.

இதல்லாம் எதுக்கு? எங்கள் குழந்தைகள் மாதிரிதான் உங்களை கவனிச்சுகிட்டோம், அப்புறம் இந்த பணமெல்லாம் எதுக்கு? வாங்க மறுத்த அவர்களை வற்புறுத்தி கையில் திணித்தார்கள் அவர்கள் மூவரும்.

சாமிநாதன் எப்படி செல்ல வேண்டும் என்று சொன்னதை கவனமுடன் கேட்டுக்கொண்ட அந்த பையன் காரை ஓட்டியபடி “டாடா” காட்டினான்.பின்னால் இருந்த அந்த பெண்களும் இவர்களுக்கு டாடா காட்ட, கார் பறந்தது.

முதலில் ஒரு பெண்ணை வீட்டில் இறக்கி விட்டு விடலாம் என்று அந்த பெண்ணின் வீட்டு வாசலில் கார் நிற்குமுன் அந்த வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்த இவர்கள் மூவரின் பெற்றோர்கள், ஓடி வந்து தங்கள் குழந்தைகளை தடவிப்பார்த்து உங்களுக்கு ஒண்ணுமில்லையே என்று கண்ணீருடன் பார்த்தனர்.

இவர்கள் மூவருக்கும் ஆச்சர்யம் ! எதற்கு இந்த அழுகை? நாங்கள்தான் பத்திரமாக இருக்கிறோம் என்று தகவல் சொல்லி இருந்தோமே, அப்புறம் ஏன் இந்த ஆர்ப்பாட்டம்?

கேட்ட அந்த பையனை ஓங்கி அறைந்த அவனின் அப்பா, ராஸ்கல் உங்களை கடத்தி வச்சிருக்கறதாவும் ஒரு நாளுக்குள்ள ஆளொன்னுக்கு ஒரு லட்சம் ரூபாய் கொடுக்கலியின்னா ஆளை முடிச்சு உங்க கார்லயே வச்சு அனுப்பிச்சுடுவோம்னு மிரட்டுனதுமில்லாம, போலீசுக்கு போனா உங்க குழந்தைங்க உசிரு தங்காது அப்படீன்னு மிரட்டிட்டு சாட்சிக்கு உங்க மூணு பேரோட செல் போன் எல்லாத்தையும் காண்பிச்சுட்டு, உங்க கையெழுத்து போட்ட லெட்டரையும் காண்பிச்சு மூணு லட்ச ரூபாய் நேத்து வாங்கிட்டு போயிட்டானுங்க. சொல்லிவிட்டு “இனிமேல இந்த மாதிரி காரை எடுத்துகிட்டு ஆராய்ச்சி அது இதுன்னு போங்க பாத்துகிடறேன்”, அப்பா இரைந்து கொண்டிருந்தார்.

இவர்கள் மூவரும் திக்பிரமையுடன் நின்று கொண்டிருந்தனர்.

குறிப்பு: மனசு கேட்காமல் அவர்களை எப்படியும் கண்டு பிடிக்க வேண்டும் என்று அந்த பையனும், பெண்களும், மற்றும் அவனது கல்லூரி நண்பர்களும் அந்த பங்களாவை தேடி கண்டு பிடித்து அங்கே சென்ற பொழுது அந்த பங்களா கடந்த நான்கைந்து வருடங்களாக பூட்டி கிடப்பதாகவும், அந்த இடத்தில் பேய் நடமாட்டம் இருப்பதாக கருதி அந்த ஊர் மக்கள் யாரும் செல்வதில்லை என்னும் செய்தியைத்தான் கேட்டனர். அது மட்டுமல்ல, ஒவ்வொரு முறையும் அவர்கள் கொண்டு வந்த உணவில் தூக்க மருந்தையும் கொடுத்து மூன்று நாட்களாக தங்களை தூங்க வைத்திருக்கிறார்கள் என்றும் தெரிந்து கொண்டனர். தெரிந்து என்ன பயன்?

பெயர்: ஸ்ரீ.தாமோதரன் பிறந்த வருடம் 1966, தனியார் மருத்துவமனையின் துணை மருத்துவ கல்லூரியில் நூலகராக பணிபுரிந்து கொண்டிருக்கிறார். “மனித நேயம்” சிறுகதை தொகுப்பு வெளிவந்துள்ளது. தினமலர் வார பத்திரிக்கையில் இரண்டு மூன்று கதைகள் வெளி வந்துள்ளன. “நிலம் விற்பனைக்கு அல்ல” சிறுகதை இளங்கலை ஆங்கில இலக்கிய மாணவியால் ஆராய்ச்சிக்கட்டுரைக்கு எடுத்து கொள்ளப்பட்டது. “மஹாராஸ்டிரா மாநிலப் பாடநூலாக்கம்” மற்றும் “பாடத்திட்ட ஆய்வுக்கழகத்தால்” எனது ‘சிறுவர் சிறுகதை’ ஒன்று ஐந்தாம் வகுப்பு தமிழ்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *