எச்சரிக்கை (இது உங்களுக்கும் நடக்கலாம்)

1
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: கிரைம்
கதைப்பதிவு: November 16, 2015
பார்வையிட்டோர்: 19,249 
 
 

மதிய நேரம் பெரு மூச்சு விட்டுக் கொண்டிருந்தது… மழைக்கு பின்னால் வரும், வெயில் அதிகப்படியான வெப்பத்தை சுரந்து கொண்டிருந்த நேரம்…அனல் காற்று, அணத்திக் கொண்டு வருவதும் போவதுமாய் இருந்தது. தூரத்தில் பேச்சுகளற்ற, ம்ம் ….ம்ம் …..ம்” என்ற இரைச்சல் வெற்றிடமெங்கும் நிறைந்து இரைந்து கிடந்தது. கண்ணில் பட்ட மரங்களெல்லாம் சிற்பமாகி நின்றன…மரக்கிளைகளில், இலைகளில் மினுங்கிக் கொண்டிருந்த சூரிய ஒளி, எங்கெங்கோ பட்டு, சிவக்குமாரின் கண்களையும் உரசிக் கொண்டிருந்தது…..

கையில் பிரம்புடன் அந்த பள்ளியின் வராண்டாவில் நடந்து கொண்டிருந்த சிவக்குமார், ஏதோ சிந்தனையோடு தோற்றமளித்தான். ஒன்றாம் வகுப்பிலிருந்து, ஐந்தாம் வகுப்பு வரை, வரிசையாக இருந்த ஒவ்வொரு வகுப்பையும் நோட்டம் விட்டபடியே நடந்து கொண்டிருந்தான். அந்தந்த வகுப்பிற்கான ஆசிரியர்கள் பாடம் நடத்திக் கொண்டிருக்க, பிள்ளைகள், பாடம் கவனிப்பதும்,வகுப்புகளுக்கே உண்டான சலசலப்புகளுடனும் காலத்தை நகர்த்திக் கொண்டிருந்தார்கள். பள்ளி வளாகத்தை தாண்டி கண்ணில் ஒரு மனிதனும் அகப்படவில்லை. அனைவருமே வயிறு என்னும் மாயப் பள்ளத்தாக்கில் ஒளிந்து கொள்ள, அவரவர்க்கான வேலைகளில் ஏதாவதொன்றில் மூழ்கி கிடப்பார்கள் என்று நினைத்தபடியே நடந்து கொண்டிருந்தான், தலைமை ஆசிரியரான சிவக்குமார். இத்தனை சிறுவயதில், தலைமை ஆசிரியர் ஆனது, அதுவும் தான் படித்த அதே பள்ளியில் பொறுப்பேற்றது இன்னும் பெருமையான விஷயமாக ஊரெல்லாம் ஒரு பேச்சிருப்பது உள்ளூர மகிழ்வையே தந்து கொண்டிருந்தது….

நடந்து கொண்டே கண்களை கூராக்கி, ” யார் அது…? ” என்று முணங்கியபடியே உற்றுப் பார்த்தான் சிவக்குமார். பள்ளியை ஒட்டிய ஒற்றையடிப் பாதையின் சுற்று வட்டத்தில் யாரோ ஒருவர் நடந்து போவது தெரிந்தது…..

‘யார்…… ரூ………, யார்….. இது….?’

மனிதனுக்கே உண்டான ஆர்வம், இன்னும் கண்களில் அகலமாக்கியது.

“இந்தூர்க்குள்ள, இந்த நேரத்துல, இப்பிடி டிப் டாப்பா டிரஸ் பண்ணிட்டு போறது யாருப்பா?”

சிவக்குமாரின் மனம் யோசிக்க யோசிக்க அந்த டிப் டாப் ஆள், அந்த மரத்தினடியே இருந்த பாதையில் இறங்கி மறைந்து போனான். அதற்கு மேல் பாதை, பள்ளியில் இருந்து பார்க்கும் போது தெரியாது….தெரியவில்லை. அந்த ஆள் பற்றிய யோசனையிலேயே மீண்டும் வராண்டாவில் நடக்கத் தொடங்கினான் சிவக்குமார்.

“கொஞ்ச நேரம் கண் அசர விடறான…?உசுர எடுக்கறான்யா….. வாக்கிங் போறவன் சாயந்திரம் வீட்டுக்கு போய் போக வேண்டியது தானே?’ என்று மனதுக்குள் முணங்கிக் கொண்டே இரண்டாம் வகுப்பு ஆசிரியர் பாடம் பாடம் எடுத்துக் கொண்டிருந்தார்.

ஒரு கதவுக்கு நேராக சிவக்குமார் வரும் போது, அது வரை கேட்டுக் கொண்டிருந்த பிள்ளைகளின் சலசலப்பு, இரைச்சல் சட்டென்று நின்றது. அந்த கதவை தாண்டி சுவரின் மறைவில் நடக்கும் போது, மீண்டும் சலலப்பு கேட்கத் துவங்கியது. இப்படியே, ரிமோட்டில் சேன்னல் மாற்றுவது போல, சட் சட்.. என்று வரிசையாக இருந்த ஐந்து வகுப்பு கதவுகளிலிருந்தும் சத்தம் வெளி வருவதும், உள் வாங்குவதுமாக, அந்த மதிய நேரம் சிவக்குமாரின் காலடிகளால் புதைந்து கொண்டிருந்தது….தூரத்தில் பசி கொண்ட காகம் ஒன்றின் அடிக்குரல் அந்த மதிய நேரத்தை, கொத்திக் கொண்டிருந்தது……

“என்னாச்சு பைத்தியக்காரனுக்கு, இந்த வாரமே மத்தியானத்துக்கு மேல சும்மா, பெரிய கவிஞர் மாதிரி நடந்துகிட்டே கிடக்கான்”
ஒன்றாம் வகுப்பு டீச்சரும் மூன்றாம் வகுப்பு டீச்சரும் இடைவேளையில் பேசிக் கொண்டார்கள்….

“என்னாச்சு, நான் ஏன் இப்பிடி நடக்கறேன்”
சிவக்குமாரின் எண்ணங்களும் இந்த வாரம் முழுவதும் இந்த நடையையே தூக்கி சுமந்து கொண்டிருந்தது.

“சரியா மதியம் இரண்டு மணிக்கு மேல அந்த டிப் டாப் ஆசாமி இந்த வழியா போறான்…”

“கடந்த நாலு நாளா போயிட்டிருக்கான்………. யார் அவன்?”

“அவன் யாரா இந்தா என்ன? எங்க போன என்னன்னு விட முடியல…”

சராசரி மனித மனம், அலைபாய்கிறது.. டிப் டாப் ஆளின் முகம் சரியாக தெரிவதில்லை .. ஒவ்வொரு நாளும் , அவன் அந்த மரத்தினை நெருங்கும் போதுதான் அவனைப் பார்க்க முடிகிறது. டைமிங் மிஸ் ஆகி கொண்டே செல்ல இன்று எப்படியாவது பார்த்து விட வேண்டும் என்று நினைத்துக் கொண்டு, அந்த ஒற்றையடிப் பாதையையே பார்த்துக் கொண்டு நின்றான் சிவக்குமார்.

வெள்ளை சாயத்தை கொதிக்க வைத்து ஊற்றியது போல் அந்த மதிய வேளை வழிந்து கொண்டிருந்தது. பள்ளியின் வளாகத்தில் உள்ள செடியில் காலையில் பூத்த ரோஜா, கறுத்துக் கிடந்தது..

மனதிற்குள் அவன், நன்றாக தெரிந்தவன்தான் என்றும், சட்டென ஞாபகத்திற்கு வரவில்லை என்றும் ஒரு கண்ணாமூச்சி, ஆட்டம் காட்ட காட்ட, அந்த டிப் டாப் ஆள், அதே பாதையில், அதே வேகத்தில் நடக்க,ஞாபக கிணறு, சட்டென தூசு தட்டி, நீர் இறைத்துக் கொட்டியது….

டே….. என்பதற்குள்,…………………………….. அவன் மறைந்து விட்டான்….

” இந்த வெங்காயமா?…….. ….. இங்கெங்க சுத்திகிட்டு திரியறான்…!?…….” என்று முணங்கியபடியே தனது அறைக்குள் சென்றான் சிவக்குமார்.

அறைக்குள் செல்லும் போதே ஏதோ, சொத்தென்று விழுந்த சத்தம் கேட்டது…..

“என்னடா…..? என்னமோ சத்தம்” என்று யோசித்தபடியே, உள்ளே சென்ற சிவக்குமாரின் கண்களில், விழுந்து கிடந்த சாக்பீஸ் பெட்டி தெரிந்தது….

உற்று நோக்கி குனித்து எடுக்க முயற்சிக்க, உய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்………………………….என்று ஒரு சுழற்காற்று மேலிருந்து கீழ் நோக்கி, பள்ளி கட்டிடத்தையே ஒரு அசை அசைத்துப் போனது போல் போனது….
” ஒ…..காத்து” என்று முணங்கியபடியே எடுத்த சாக்பீஸ் பெட்டியை எப்போதும் வைக்கும் இடத்தில் வைத்தான்.

மாலையில் பிரியாணி அரிசி வாங்க, கடைக்கு சென்றான் சிவக்குமார். எதிர்ப்பட்ட பிரபுவிடம், ‘என்ன அண்ணே, வெற்றி வந்திருப்பான் போல….., கதை எழுதறேன், கதை எழுதறேன்னு இன்னும் காடு மேடெல்லாம் சுத்திகிட்டு திரியறான் போல….., ம்ம்ம்…….காலைல வந்து பாக்கறேன்னு சொல்லுங்க’ என்றபடி பிரபுவின் பதிலுக்கு காத்திராமல், வந்த வேலையை கவனிக்க சென்று விட்டான்….

இன்று சனிக்கிழமை .. பள்ளிக்கு விடுமுறை…பள்ளியே மயானம் போல் இருந்ததென்றால், பள்ளிக்கு பின்னால் இருக்கும் மயானம்….!?

நினைக்கவே, சவப்பெட்டிகளாக கண்களில் தெரிவது போலொரு கற்பனையை, கடவுளின் பெயரால் விரட்டி விட்டு, தன் அறைக்குள் அமர்ந்திருந்தான் சிவக்குமார்….அலுவலக பணி கொஞ்சம் இருப்பதால் அவன் மட்டுமே, வந்திருந்தான்……..

ஏதோ ஒரு காகம், தன் இயல்புக்கு மீறி, கத்திக் கொண்டு, சிறகடித்து பறப்பது, ஜன்னல் வழியாக நன்றாக தெரிந்தது….., மனதுக்குள் ஒருவித அலையடிப்பு நிகழ்ந்து கொண்டேயிருந்தது…., சட்டென அறை புழுக்கமானது போல் தோன்றியது. மூச்சு விடவே சிரமமாக இருக்க, மெல்ல எழுந்து வெளியே வந்தான்…. சிவக்குமார். அந்த டிப் டாப் ஆள் சற்று தூரத்தில் நடந்து போய்க் கொண்டிருந்தான்….

கண்கள் சிரிக்க, ” டே வெற்றி….. டேய்…… மாப்ள….” என்று கத்திக் கொண்டே வாசல் வரை சென்றான். அதற்குள் அவன் அந்த மரத்தினடியில் சென்று கீழே சென்ற பாதையில் சென்று விட, இனி கூப்பிட்டு பிரயோஜனம் இல்லை என்று முடிவெடுத்து செல் போனை எடுத்து, வெற்றியின் நம்பரை டயல் செய்தான்…

ரிங் சத்தம் ….. ‘ம்ம்ம்…….ம்ம்ம்……..’ என்று சிவக்குமாரின் காதின் வழியே அதிர்வை ஏற்ப்படுத்தியது. அறையி ன் உள்ளே சாக்பீஸ் பெட்டி கீழே விழுந்த சத்தம் திடுக்கென அவனை திரும்பி பார்க்க வைத்தது….ரிங் போய்க் கொண்டேயிருந்தது….. அறையின் முன்னால் பள்ளி வளாகத்திற்குள் இருந்த கொய்யா மரத்திலிருந்து ஒரு கொய்யாப்பழம் சொத்தென்று விழுந்து பிய்ந்தது .. சற்று , காற்று கூட தான் இருப்பதாக காட்டிக் கொண்டி……..

” என்னடா மச்சான்.. போனெல்லாம் பண்ணிருக்க… மழை வருமா?”
வெற்றி மறுமுனையிலிருந்து ஒலி அலைகளாக வந்து சேர்ந்தான்….

மறுபடியும் விழுந்த சாக்பீஸ் பெட்டி, விழுந்த கொய்யாப்பழம், பலமாக வீசும் காற்று, எல்லாமே சிவக்குமாரின் மனதுக்குள் பல மின்னல்களை வெட்டிக் கொண்டிருப்பினும், சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டே போனில் பதில் பேசத் தொடங்கினான்….

“அடி வெங்காயம்…… ஊருக்கு வரத் தெரியுது…. காடு மேடெல்லாம் சுத்தத் தெரியுது… ஒரு எட்டு வந்து என்ன பாக்க தெரியல…? இல்ல….! எல்லாம் அப்பிடித்தாண்டா….., பெரிய ரைட்டர் ஆகிட்டல்ல ; நான் வெறும் ஹெட் மாஸ்டர்தான …..அதும் எலிமெண்டரி ஸ்கூல் ஹெட் மாஸ்டரு…..”

” என்ன வெண்ணை…. உளறிக்கிட்டு இருக்க…… சனிக்கிழமை லீவுங்கவும், சரக்க போட்டுட்டு உக்காந்திருக்கியா…..ம்ம்ம்….

“டேய்….. டேய்…. கதை உடாத…..”

“என்னடா பேசற….அங்க வந்த உன்னப் பாக்க வராம இருப்பனா….?.. நான் மைசூர்ல இருக்கேண்டா… ஒரு டிஸ்கசன்னுக்கு வந்தேன்”

“பொய் சொல்லாத மாப்ள…. இப்பதான் நீ நம்ம ஸ்கூல் வழியா கீழ இறங்கி போறத பார்த்தான்… என்ன, அந்த ரோஸி வீட்டுக்குத்தான போய்ட்ருக்க..! இன்னும் அவ கூட கனெக்சன் இருக்கு போல….!”

“ஏண்டா உன் புத்தி இப்பிடி போகுது…? நீ போனை கட் பண்ணு.. நான் இங்கிருந்து லேன்ட் லைன்ல கூப்டறேன்…”

சற்று மௌனமான சிவக்குமார்….,
“அப்போ, நைட் உங்க மாமாட்ட கேட்டேன், அவரு ஒன்னும் சொல்லல..”

“வழக்கம் போல, நீயே கேள்வி கேட்டு, நீயே பதிலா சொல்லிட்டு வந்திருப்ப…. அவரு பேசற வரைக்கும் நீ நின்றுக்க மாட்டியேடா…”

“சரி, இரு, நான் உங்க மாமா வீட்டுல வந்து பாக்கறேன், ரோஸி, கொஞ்சம் பாலிசா திரியறா.. உன்ன நம்பரக்கு இல்ல”

போன் லைன் கட்டாகி, மீண்டும் ரிங் அடித்தது… மைசூரின் கோட் நம்பருடன், ஏதோ ஒரு லேன்ட் லைன் நம்பர் கண் சிமிட்டியது….

ஆன் செய்தான் சிவக்குமார்.

“இப்ப நம்பறியா வாத்தியாரே” என்றான் வெற்றி….

” அட ஆமா…, அப்போ இங்க போனது யார்டா மாப்ள?…… உன்ன மாதிரியே இருந்தாண்டா…!”

மதியம் தன் முகமூடியை கிழித்துக் கொண்டிருந்தது வெள்ளை ரத்தம் வழிய…….

அன்றிரவு சிவக்குமாரால் தூங்க முடியவில்லை. வெற்றியின் முகம் தனக்கு தெரியாதா? அவனின் உடல்மொழி, நடை, தலைமுடி , தனக்கு தெரியாதா? அவனைப் போலவே வேறு யாரோவா ? அல்லது தனது கற்பனையா?

-அந்த பள்ளி, நகர்ந்து நகர்ந்து, ஒரு சவப் பெட்டியாக மாறி, மயானம் முழுக்க இருக்கும் கல்லறைகளை தோண்டிக் கொண்டிருக்கும் விரல்களை
ஆணிகளாக்கி தானாகவே அடித்துக் கொண்டிருந்தது…..-

திக்கென்று எழுந்து அமர்ந்தான் சிவக்குமார்…..

ஒ…… ஆ….. வென கத்திக் கொண்டு, அமர்ந்திருந்த சவப்பெட்டியிலிருந்து எழுந்து ஓடினான்… ஓடியவன் நிலை தடுமாறி கீழே விழுந்து எழுந்தான்…

எழும் போது, தன் வீட்டில் படுத்திருந்தான். தன் அருகே கல்லறைகளின் வரிசை….. வீடு முழுக்க யாரோ மூச்சு விடும் சத்தம் ஊர்ந்து கொண்டிருந்தது.. படுக்கையில் ஏதோ அழுந்த, திடும்மென எழுந்து அமர்ந்தான் …….

” அட கனவு…” என்று, தான் படுத்திருந்த படுக்கைய திரும்பி பார்க்க, வெற்றி சிரித்துக் கொண்டு படுத்திருக்கிறான்”

ஆ…..ஆ……….ஆஆஆஆஆஅ……….. வென கத்தியபடி, மூச்சிரைக்க, உடல் வியர்க்க தூக்கத்திலிருந்து எழுந்து அமர்ந்தான் சிவக்குமார்….

“கடவுளே…… என்ன கனவு இது!?……..”
எது கனவு என்பதிலேயே அவனுக்கு குழப்பம் இருந்தது…

இரண்டு நாட்களாக, இரண்டாம் வகுப்பு டீச்சர் அஞ்சனா பள்ளிக்கு வரவில்லை.. உடம்பு சரியில்லையாம்.. ஒரு எட்டு போய் பார்த்து விட்டு வந்து விடலாம் என்று அஞ்சனாவின் வீட்டிற்க்கு சென்றான் சிவக்குமார்.

அஞ்சனாவின் அப்பா அம்மா, தம்பி மூவரும் முன் அறையில் அமர்ந்திருக்க, சிவக்குமாரைக் கண்டதும், நலம் விசாரித்து, உள் அறைக்கு அழைத்துக் கொண்டு சென்றார்கள். உள்ளே, கட்டிலில் பேயறைந்தது போல் படுத்திருந்தாள் அஞ்சனா….

” என்னாச்சு, டாக்டர பாத்தீங்களா?” என்றபடியே சிவக்குமார், அருகினில் செல்ல, கண்கள் மூடி படுத்திருந்த அஞ்சனா சட்டென எழுந்து அமர்ந்தாள் .. அவளின் உடல் நடுங்கியது. கண்கள் விரிய விரிய மூச்சிரைக்க பயந்து நடுங்கினாள்…..

” என்ன?…. என்னாச்சு..? என்னாச்சு அஞ்சு….. ஏன் இப்படி பயப்படற…?”

ஒன்றும் புரியாமல் அவளைப் பிடித்து அடக்கி, அமைதிப்படுத்த, அதற்குள் அம்மா அப்பா தம்பி மூவரும் வந்து திருநீறு பூசி, பைபிளை காட்டி, தர்காவில் மந்திரித்த தண்ணீரை தெளித்து அமைதிப்படுத்தினார்கள்….

“இது என்ன புது கதை” என்பது போல் சிவக்குமார் பார்க்க,

“ஆமா சார், இது ஏதோ காத்து கோளாறு தான்” என்று பயந்த முகத்தில் நம்பிக்கையாக கூறினாள் அம்மா…

“என்னமா பேசறீங்க, பேய் புடிச்சிருக்குன்னு சொல்ல வரீங்களா?” கொஞ்சம் பதட்டத்துடன்தான் கேட்டான் சிவக்குமார்.

வெளியே அடிக்கும் சில் காற்று, ஜன்னல் சந்துகளின் வழியே புகுந்து, இன்னும் கொஞ்சம் நடுக்கத்தை அதிகப்படியாக்கும் முயற்சியாய் வீடெங்கும் நகர்ந்து கொண்டிருந்தது….. ஏனோ, இப்போது அந்த வீட்டை பார்க்கவே, அவன் கனவில் வந்த கல்லறைகள், மெல்ல மெல்ல முளைப்பதாகவே தோன்றியது…..

” ஆமா சார், தினமும் வீட்டுக்குள்ள யாரோ நடமாடறாங்க சார்…. தூங்கும் போது, தலை மேட்டுல நிக்கறதும், காலுக்கடியில உக்காந்திருக்கறதும் , போர்வை போத்தி விடறதும், சுத்தற பேன்ல தொங்கறதும் ,சுவத்துல போஸ்டர் மாதிரி சிரிக்கறதும், ரெம்ப தொந்தரவு சார்…”

அந்த அம்மா சொல்ல சொல்ல, காட்சிகளாக விரிந்தது சிவக்குமாரின் கற்பனை.. உடல் புல்லரிக்கத் துவங்கியது…..

“முதல்ல நானும் நம்பல… பொண்ண பாடாப் படுத்திருக்கு சார்…. ஒரு நாள் நானே பார்த்தேன். என் பொண்ணு தூங்கிட்டு இருக்கா.. பேன் சுவிட்சை போடறதும் ஆப் பண்றதுமா. ஏதோ சத்தம் வருதேன்னு பொண்ணு ரூம்குள்ள போனா… சுவிட்சை போட்டு போட்டு விளையாடிகிட்டு இருக்கு சார்…..”

நா வறண்டது சிவக்குமாருக்கு … தண்ணீரை எடுத்துக் குடித்தான் ….

“கண்ணால பார்த்தேன்…. பாக்க பாக்க, காணாம போய்டுச்சு….”

சிவக்குமார் பார்த்துக் கொண்டேயிருந்தான்….

“இந்த ஊரே சரியில்லை சார்…. இந்த ஊருக்கு வந்த இந்த ஒரு வருசத்துல எத்தன பிரச்சனை?…. இப்போ இது வேற; பேசாம, என்கூருக்கே மாத்தல் வாங்கி குடுத்துருங்க சார்.. நாங்க போய்யறோம்..” என்று அம்மா பேசிக் கொண்டிருக்கும் போதே, அப்பா மெல்லமாக கிசுகிசுத்தார்…..

“ஸ்ஸ்……….. சத்தம் போடாதீங்க … வந்தாச்சு …!” என்று ஜாடை காட்டினார்.

“என்னது….. வந்தாச்சா…? யா ரூ……?” சிவக்குமார் அமைதியாக அலறினான்….

“அதுதான்… சத்தம் போடாம வாங்க….” என்று சிவக்குமாரை அழைத்துக் கொண்டு, மூவரும் பீரோ சந்தில் பொய் ஒளிந்து கொள்ள, அது, அஞ்சனாவின் முன்னால் நின்று அவளையே பார்த்துக் கொண்டிருந்தது… ஒரு ஆள் நிற்பது போலவே, பின் தோற்றம்…..

சிவக்குமாரின் உடல் நடுங்குவது, பீரோவில் எதிரொலித்தது…..

“கொள்ளைல போறவன், எவன்னு தெரியல… பைபிளை, திருநீரை, தர்கா தண்ணீரைத் தாண்டி வர்ரான்னா.., எவ்ளோ அழுத்தம்…!”,முணங்கினாள் அம்மா…. அஞ்சனாவின் தம்பி வியர்வை மழையில் நனைந்தான்…..சிவக்குமாருக்கு கத்திக் கொண்டே ஓட வேண்டும் போல் தோன்றியது.

அஞ்சனாவையே பார்த்துக் கொண்டு நின்ற அந்த உருவம், சத்தம் வராமல் சிரித்துக் கொண்டே அஞ்சனாவின் முகத்தினருகே சென்றது….ஏதோ உள்ளுணர்வு தீண்ட, திடுக்கென விழித்த அஞ்சனாவின் கண்ணில், அகல விரிந்த முகத்துடன் அந்த உருவம் சட்டென திரும்பி மறைந்தது.

அது திரும்புவதற்கும் மின்சாரம் போவதற்கும் சரியாக இருக்க,

ஐயோ ஐயோ எனக் கத்திக் கொண்டே, அறையில் அலறியடித்து விழுந்து, எழுந்து, புரண்டு, நடந்து, ஓடி கதவின் கைப்படியை பற்றிக் கொண்டு உள் பக்கம் திறப்பதற்கு பதிலாக, வெளிப் பக்கம் தள்ளிக் கொண்டு நின்றான் சிவக்குமார். கதவைத் திறக்க நடுங்கிக் கொண்டே முயற்சித்துக் கொண்டிருந்த சிவக்குமாரின் அருகே சட்டென, பற்ற வைத்த மெழுகுவர்த்தியோடு அஞ்சனாவின் அம்மா நிற்க, அவளின் முகம் மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் வேற வண்ணத்தில் தெரிய அதுவும் மிரட்டியது அவனை …..ஆஅ….. ஆ வென கத்திக் கொண்டு திறக்காத கதவு வழியே வெளியே செல்ல முயற்சிக்கும் போது, தலை முட்டி, உடல் முட்டி கீழே விழுந்து, புரண்டு கொண்டிருக்க அஞ்சனாவின் அப்பாவும் தம்பியும் ஓடி வந்து சிவக்குமாரை பிடித்து ஆசுவாசப் படுத்தினார்கள்….அஞ்சானாவின் அம்மா, தன் முகத்தையே கண்ணாடியில் தெரிந்த மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் பார்த்து கத்த, ஒரு வழியாக நால்வரும் மாறி மாறி சமாதானப் படுத்தி அமைதியானார்கள்…

” என்ன சார் நடக்குது உங்க வீடல.. அய்யோ……. மனுஷன் மாறியே நிக்குதே..?!” என்று புலம்பிய சிவக்குமார், சட்டென நினைவு வந்தவனாய், நடுங்கியபடியே அருகில் இருந்த சோபாவில் அமர்ந்து யோசித்தான் ….

மின்சாரம் போன நொடிகளுக்கு சற்று முன்னால் அது திரும்பியது…..
“ஆம்.. அந்த முகம்… அந்த முகம்……….”-யோசித்தான்.. யோசித்தான்…. “அது அது …. ஆம்… அது,…… அய்யோ…. அது ம்ம்ம்……. அது..!? வெற்றியின் முகம்…. ஆம்.. அது வெற்றியே தான்… வெற்றியே தான்…..”!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!.

மனம் முழுக்க பேய்களின் துர்நாற்றம். கல்லறைகளின் நகர்தல். அணத்திக் கொண்டிருக்கும் அனல் காற்று. தட்டுத் தடுமாறி செல் போனை எடுத்து வெற்றிக்கு டயல் செய்தான்….

மறுமுனையில் ஆன் செய்த வெற்றி,
“சொல்லு மச்சான்….” என்று தூக்க கலக்கத்தில் பேசினான்.

“என்னத்த சொல்றது…!” திக்கி திணறினான் சிவக்குமார்.

“என்னாச்சுடா..?” அதட்டலாக கேட்டான் வெற்றி…..

” நீ உயிரோட இருக்கியா .. இல்ல செத்திட்டியாடா..?” என்றான் சிவக்குமார்.. நிஜமாகவே கேட்டான்….

“என்னாச்சுடா..? ஏன் உன் குரல் இப்பிடி நடுங்குது?” குழப்பத்தோடு கேட்டான் வெற்றி…..

சரி விடு… ஒண்ணு பண்ணு… நீ கிளம்பி இங்க வா.. சிக்கிரம் வா.. ரெம்ப முக்கியமான மேட்டர் …நாளைக்கு நீ இங்க இருக்கணும்…. ” என்று கட்டளையிடும் தொனியில் கூறினான் சிவக்குமார்…

போன மின்சாரம் வந்து விட அனைவரின் முகமும் வியர்த்து பேய்களுக்கு ஒப்பனை செய்தது போலவே இருந்தது, தெரிந்தது….

மறு நாள் இரவு….

உளவியல் படித்துக் கொண்டிருக்கும் இருவரின் நண்பனான வெள்ளைப் பாண்டியும் சிவக்குமாரோடு காத்துக் கொண்டிருக்க, சற்று நேரத்தில் காரில் வந்து இறங்கினான் வெற்றி….

சிவக்குமாரைப் பார்த்ததும் , வழக்கமான புன்னைகையை காட்டினான் வெற்றி….

அஞ்சனாவின் வீட்டுக்குள் பார்த்த அந்த உருவத்தின் முகம் நினைவுக்கு வர, கண்கள் அகன்று, நடுங்கியபடியே பின்னால் நகர்ந்தான் சிவக்குமார்….

“ஹாய் வெள்ளை , எப்பிடி இருக்க? இவனுக்கு ஏதோ பைத்தியம் புடிச்சிருச்சு போல… என்னென்னமோ உளர்றான். ஏதாவது ட்ரீட்மென்ட் குடுப்பா……”என்று நிலைமை தெரியாமல் கிண்டலடித்த வெற்றியை, கண்களாலே ஜாடை செய்து வீட்டிற்க்கு அழைத்து சென்றான் வெள்ளை…

“என்னை மாதிரியே ஒரு பேயா!?….. வாட் வெள்ளை…. ? இந்த பைத்தியகாரந்தான் உளர்ரானா, சைக்காலஜி படிச்சவன் நீயுமா நம்பற?” என்று கடிந்து கொண்டான் வெற்றி. சிவக்குமார் பேயறைந்தது போலவே வெறித்துக் கொண்டிருந்தான்.

அப்பொழுதே அஞ்சனாவின் வீட்டுக் கதவைத் தட்டினார்கள்… கதவைத் திறந்த அம்மா, எதிரே நின்றிருந்த வெற்றியைக் கண்டதும், அலறிக் கொண்டு, முன்னால் பார்த்தபடியே, பின்னால் ஓட, அதற்குள் வெள்ளை, வெற்றியைத் தாண்டி உள்ளே ஓடி வந்து, அந்த அம்மாவை நெருங்கி தோளைப் பற்றி குலுக்கி, வெற்றி வந்த விஷயத்தை சொன்னான்….அம்மா, பயந்து தடுமாறி, நிதானித்து ஒரு வழியாக அவனை வரவேற்றாள்… பெரு மூச்சு விட்ட படியே வீட்டை ஒரு முறை சுற்றிப் பார்த்துக் கொண்டாள்… ஒரு வாரமாக இரவு, பகல் என சட் சட்டென வீட்டுக்குள் நடமாடிக் கொண்டிருந்த உருவத்தின் உடல் இப்போது உயிரோடு சோபாவில் உட்கார்ந்திருந்தது என்றே நம்பினாள்…அன்று இரவு பல வித கேள்விகளுடனும் பதில்களுடனும் அந்த உருவத்திற்காக காத்துக் கொண்டிருந்தார்கள்.

” பேய் இல்லையென்று சொல்வதெல்லாம் பொய்…. பலவீனமானவர்கள் பேயை அழைப்பார்கள். வாய்ப்பு கிடைக்கும் சமயத்தில் அவர்களை நோக்கி பேய் கண்டிப்பாக வந்தே தீரும். இங்கு பேய் என்பது ஆவி அல்லது ஆத்மா. கடவுளை நம்புகிறீர்கள் என்றால், பேயையும் நம்பித்தான் ஆக வேண்டும். ஆத்மாக்களுக்கு அழிவில்லை. தான் உயிரோடு இருக்கும் போது செய்ய ஆசைப்பட்டவைகளை இறந்த பின் வேறு ஒரு உடல் வழியே நிறைவேற்றிக் கொள்ளத்தான் பெரும்பாலான ஆத்மாக்கள் முயற்சிக்கின்றன…ஆனால் ஆத்மாக்களுக்கு ஞாபகங்கள் மிக மிக குறைவு. மிக ஆழமாய் பதிந்த விசயங்களை மட்டுமே, ஆத்மாக்கள் தங்கள் நினைவுகளில் இருந்து தேடி எடுத்துக் கொண்டு, அதை நோக்கி தன் சக்தி முழுவதையும் திரட்டுகின்றன….”

வெள்ளைப் பாண்டி சொல்ல சொல்ல, சிவக்குமார் சோபாவில் இன்னும் ஒட்டி, சுவரோடு அழுந்த அமர்ந்தான். அஞ்சனாவின் அப்பா, திறந்திருந்த ஜன்னல் திரையை இழுத்து மூடி விட்டார்…

” சரிடா…. ஆவி, பேய், பூதமெல்லாம் இருக்கட்டும்.. ஆனா என்னைய பாத்தீங்க, நான்தான் பேயா சுத்தறேன்னு சொல்றீங்களே, அது தான் குழப்பமா இருக்கு’ என்றான் வெற்றி குழப்பத்துடன்…

அப்போது அவர்கள் அமர்ந்திருந்த அறை சற்று சூடானதை அனைவருமே உணர்ந்தார்கள்…சட்டென அனைவரின் பேச்சும் தடை பட்டது. அவர்களுடன் இன்னும் ஒருவர் இருப்பதாக தோன்றிய உணர்வுகள் அனைவரையும் உலுக்கின. வெற்றியும் சற்று பிரமிப்போடு பயப்படத் தொடங்கினான்..மனதுக்குள் குழப்பம் வேர் விடத் தொடங்கியது. பள்ளியையும், இந்த வீட்டையும் சுற்றிக் கொண்டிருக்கும் ஒரு உருவம், அதுவும் தன்னைப் போலவே…! யாராக இருக்கும்..? வெற்றியின் மனம் வியர்க்கத் துவங்கியது…

கதவை யாரோ ஓங்கி உதைத்தது போல உணர்ந்தார்கள். இப்போது அறையின் சூடு தணிந்தது. ஏதேதோ புத்தகங்களை பேக்கில் இருந்து எடுத்துப் புரட்டிக் கொண்டிருந்த வெள்ளை, “வெற்றி மாதிரியே உருவம் கொண்ட ஒருவனின் ஆவிதான் இப்படி அலைந்து கொண்டிருக்கிறது என்பது எனது ஊகம்” என்றான்.

“வெற்றி மாதிரி இருக்கலாம்…. ஆனா வெற்றி மாதிரியே எப்பிடிடா பிஹெவ் பண்ணுவான்?…… வெற்றி லெப்ட் கேண்ட் பழக்கம் உள்ளவன்…. அந்த பேயும் லெப்ட் கேண்ட்- னா எப்டிடா….? நடக்கறது பாக்கறது எல்லாம் அப்பிடியே இவன மாதிரி… ! இத என்னனு சொல்லுவா?” என்று வெற்றியை காட்டி பேசினான் சிவக்குமார். அஞ்சனாவின் தம்பி, அவனின் அம்மாவின் கைகளை பிடித்துக் கொண்டு அவர்கள் பேசிக் கொண்டிருப்பதை பார்த்துக் கொண்டிருந்தான்…வெற்றியும் குழப்பத்தின் உச்சிக்கே சென்று கொண்டிருந்தான்….

“ஒண்ணும் புரியலடா….. எனக்கென்னமோ நீங்க எல்லாருமே மொத்தமா கற்பனை பண்ணிக்கறீங்களோன்னு தோணுது…. கொஞ்சம் சயிண்டிபிக்கா யோசிக்கலாமே” என்றான் வெற்றி…

” சரி கொஞ்சம் பொறுமையா இரு, எப்படியும் நைட் அவன் வருவான்; நீயே பாரு.. அப்போ, இது எந்தளவுக்கு நிஜம்னு நீயே புரிஞ்சுக்குவ” என்றான் சிவக்குமார் ஆழமாக…

ஒவ்வொருவரும், ஏதேதோ சொல்லி, குழம்பி அப்படியே கண் அசந்தார்கள்….

சட்டென சுவர் கடிகாரத்தின் இரு முற்களும் “படீர் ….படீர்”…. என உடைய, திடுக்கென விழித்தான் வெள்ளை…. விழித்த வெள்ளையின் கண்களில் கட்டிலில் படுத்திருந்த அஞ்சனாவும், அஞ்சனாவை பார்த்தபடியே நிற்கும் வெற்றியைப் போல உருவம் கொண்ட “அது”வும் பளிச் சென்று தெரிந்தார்கள். இடது கையால் தலை கோதிக் கொண்டது உருவம். சற்று முன்னால், பின்னால் நடந்தது.. அப்படியே வெற்றியின் நடை. கண்களை மூடி தூங்குபவன் போல பாவனை செய்து, ஒவ்வொருவராக மெல்ல தட்டி எழுப்பினான்…ஓவ்வொருவராய் கண்ணைத் திறந்து, நடுங்கி கொண்டே பார்க்க, வெற்றியையும் எழுப்பினான் வெள்ளை. வெற்றி சட்டென திடுக்கிட்டு கண் விழித்தான்.

” அங்க பாரு, அங்க பாரு… வந்தாச்சு…” என்று ஜாடையில், கிசுகிசுப்பில், மற்றவர்கள் சொல்ல, வெற்றி பரபரக்க பார்த்தான். அவனின் உடல் நடுங்கியது,.. முகம் வியர்த்திருந்தது…அங்கே அந்த உருவத்தைக் காணவில்லை . அஞ்சனா மட்டும் படுத்திருந்தாள். அனைவருக்குமே அதிர்ச்சி நடுக்கமாய் வெளிப்பட்டது.

வெள்ளை, வெற்றியையும் அஞ்சனாவின் முன்னால் அமர்ந்திருந்து சட்டென காணாமல் போன அந்த உருவத்தையும் மாற்றி மாற்றி மனதுக்குள் ஓட்டிப் பார்த்தான். ஏதோ மனதுக்குள் புலப்படத் தொடங்கியது. புதிர்களின் ஜன்னலில், சின்ன கீறல் விழுவதை உணர முடிந்தது . இன்னும் உடல் நடுங்கி அமர்ந்திருக்கும் வெற்றியின் முகம் நிறைய முடிச்சுகளை அவிழ்ப்பதாக தோன்றியது …

சிவக்குமாரிடம்,” எப்போதெல்லாம் வெற்றியைப் பார்த்தாய்” என்று கேட்டு, நேரத்தை குறித்துக் கொண்டான் வெள்ளை. அஞ்சனாவின் அம்மாவிடமும் அதே கேள்வியைக் கேட்டு, குறித்துக் கொண்டான். குறித்த நேரங்களின் பட்டியலை வெற்றியிடம் காட்டி, இந்த நேரங்களிலெல்லாம் நீ என்ன செய்து கொண்டிருந்தாய்’ என்று மெல்லிய குரலில் கேட்டான்.

வெற்றி கண்களில் கூராக்கி , புருவம் சுருக்கி யோசித்தான்.

“நான் சொல்லட்டுமா?” என்று கேட்ட வெள்ளை, மீண்டும் தொடர்ந்தான்.
“எஸ்….. நீ தூங்கிட்டு இருந்திருக்க” என்று எல்லாம் புரிந்தவனாய், வெள்ளை தொடர்ந்து பேசத் தொடங்கினான்.

“எனக்கு தெரிஞ்சு போச்சு…… ஆவியா சுத்தறது கண்டிப்பா வெற்றிதான்” என்ற வெள்ளையை சட்டென குறுக்கிட்டு “ஆமாமா இதே டிரஸ் தான் ஆவியும் போட்ருந்துச்சு என்றாள் அம்மா பயந்தபடியே……

” என்னடா சொல்ற…?” என்றார்கள் வெற்றியும் சிவக்குமாரும், அதிர்ந்தபடியே …..

“எஸ்டா….. செத்தவங்களோட ஆத்மா மட்டும்தான் வெளிய சுத்தும்னு இல்ல. உயிரோட இருக்கறவங்க ஆத்மா கூட, தன் எண்ண அலைகளை வெளி அலைகளா மாத்தி , வெளிய சுத்தும். இன்னும் சிம்பிளா சொல்லனும்னா…… ம்ம்ம்….. நம்ம கனவுல எங்கயோ பறக்கற மாதிரி இருக்கும்.. திடீர்னு ஒரு உதறு உதறி விழிப்பு ஏற்பட்டதும், உடம்பு சில்லுனு ஆகி பதறி எந்திரிப்போம்.. கவனிச்சிருக்கீங்களா….? அப்போ, எண்ணங்கள் வெளிய போயிட்டு திரும்ப உள்ள வருதுன்னு அர்த்தம்…”
………………………………………….!

“பள்ளிகூடத்து மேல வெற்றிக்கு தீராக் காதல்னு நமக்கு எப்பவுமே தெரியும். எப்போ இங்க வந்தாலும் ஒரு தடவையாது பள்ளிக் கூடத்த போய் பாக்காம வர மாடான்ல… ஆக, அவனோட ஆழ்மனசுல இருந்த ஆசையை நோக்கி அவனோட எண்ண அலைகள் சுழன்று தீவிரமாகி அவன் கனவு காண்கிற அந்த பள்ளிக் கூடத்துக்கே போயிருக்கு …, இதுல ரெண்டு வகை இருக்கு….. ஒண்ணு, பிடிச்ச இடமோ, ஆளோ, பொருளோ.. கனவுக்குள்ள வரது…ரெண்டாவது, பிடிச்ச இடத்துக்கோ, பொருளை நோக்கியோ, ஆளை நோக்கியோ தன் கனவே போறது… வெற்றிக்கு நடந்தது இரண்டாவது. தனக்கு பிடிச்ச பள்ளி கூடத்துக்கு தன் கனவு மூலமா தன் எண்ண அலைகளை அலை வடிவத்துல அனுப்பி சிவக்குமாரின் எண்ண அலைகளின் வேண்டுதலுக்கிணங்கி உருவமா தன்னை வெளிக்காட்டிருக்கான் ”

” கொஞ்சம் குழப்பமா இருக்கே” என்றான் சிவக்குமார்.

“வெரி சிம்பிள்…. இப்பதான் உன்ன நினைச்சேன், நீ வந்திட்ட….உனக்கு போன் பண்ணனும்னு நினைச்சேன்… நீயே போன் பண்ணிட்ட….,கதவு தட்ற சத்தம் கேட்டதும் ஒரு வேளை நீயாத்தான் இருப்பேன்னு நினைச்கிட்டே கதவ திறந்தேன்… அட நீ தான்…! ”
“இப்படி எத்தனையோ தடவ இந்த மாதிரி நடந்திருக்குல்ல.. ? ம்ம்ம்ம்ம் ………….எல்லார் வாழ்க்கையிலும் ஒரு தடவையாது இந்த மாதிரி நடந்திருக்கும்..இல்லையா…! அப்படி, நாம எத்தனையோ தடவ அதிசயமா பார்த்த சிம்பிள் வைப்ரேசன்தான். தான் வரப் போறத, டெலிபதி மூலமா( அதாவது ஆழமா நம்பி ஒரு இடத்துல இருக்கற ஒருத்தர் இன்னொரு இடத்துல இருக்கற ஒருத்தருக்கு நினைச்ச விஷயத்தை பாஸ் பண்றது) வெற்றி, சிவக்குமாருக்கு சொல்ல ,சிவக்குமார், தன்னோட வெளி உணர்வை தாண்டி, உள்ளுணர்வுக்கு மட்டுமே தெரிஞ்ச அறிவால, வெற்றியை வரவேற்று காத்திருக்க, தன்னோட எண்ண அலைகளை காத்துல சுழலவிட்டு வந்து, ஏற்கனவே தயாராக இருந்த சிவக்குமாரோட மூளைக்குள்ள விழுந்து, அவன் கண்ணுல பிம்பமாக உருவகப் படுத்தப்பட்டிருக்கிறான். இது அவுங்க ரெண்டு பேருக்குமே தெரியாமலே நடந்திருக்கு.”

………………………………………………………………….!………………..?

” ஓ…. அதுனாலதான் ஏதோ மனசு உந்தி தள்ள, என்னன்னு புரியாம வழக்கத்துக்கு மாறா, வராண்டால நடந்திட்டிருந்தேனா…!” என்றும் டெலிபதி கண்ணாமூச்சி ஆடுவதாகவும் புரிந்து கொண்டு பார்த்தான் சிவக்குமார்.

வெள்ளை தொடர்ந்தான்.

டெலிபதில சம்பாந்தப் படற ரெண்டு பேருமே அவுங்களுக்கு தெரியாம இன்னொருத்தர நினைக்கறாங்கங்கறதுதான் உண்மை. அப்பிடித்தான் இங்க வரப் போறத ஆழமா நினைச்ச வெற்றியைப் பத்தி சிவக்குமாரோட ஆழ்மனசு புரிஞ்சு, அவனை வரவேற்கத்தான், தனக்கே ஏன்னு தெரியாம ஏதோ குழப்பத்துல இருக்கற மாதிரி வராண்டால நடந்திருக்கான்.

…………………………………………………………………!

“அதே மாதிரிதான் இங்கையும். கண்டிப்பா ஆவி வருங்கற நம்ம எல்லாரோட நம்பிக்கையும் ஆவியை கண்ணுல தெரியும்படி செஞ்சிருக்கு… உண்மை என்னனா நம்மை சுத்தி ஏராளமான ஆத்மாக்கள் நம்ம கவனம் பெறாமலே கடந்து போயிட்டிருக்கு அப்டீங்கறது தான்….”

மழை பெய்து ஓய்ந்தது போல் இருந்தது.. தலை கிறுகிறுத்தது வெற்றிக்கு…

” ஆம் சரிதான், தன்னை இங்கு பார்த்ததாக சிவக்குமார் சொல்லும் நேரங்களிலெல்லாம், தாம் தூங்கிக் கொண்டுதான் இருந்திருக்கிறோம்” என்பதை நினைவூட்டிக் கொண்டான் வெற்றி.

” சரி, பள்ளிக்கூடம் பிடித்த இடம்… அங்கு மனம் அலைகிறது.. ஆனால் சம்பந்தமே இல்லாத இந்த வீட்டிற்குள் ஏன் வர வேண்டும், வந்து ஏன் மிரட்ட வேண்டும்…? கேட்டான் சிவக்குமார்…

இது வெற்றி சொல்ல வேண்டிய பதில் என்ற வெள்ளை….”பள்ளிக்கூடம் போனது உனக்கு நினைவில் இருக்கிறதா?” என்று கேட்டான்.

வெள்ளை, ஒரு ஆராய்ச்சியாளன் போல தோன்றினான். கிலி பிடித்து அமர்ந்திருந்தான் சிவக்குமார். ” உயிரோட இருக்கும் போதே உயிர் வெளிய போகுமா?” அவன் மனம் பந்தாய் உருண்டது…

இல்லை… எதுவுமே இல்லை… என்றான், நன்றாக யோசித்தும் திரும்ப கிடைக்காத நினைவுகளை தேடிய வெற்றி.

சற்று யோசித்த வெள்ளை, “சரி வெற்றி…… இப்போ மறுபடியும் படுத்து தூங்கு. ஆழமா பள்ளிகூடத்தை நினைச்சுக்கோ. உன் எண்ண அலைகள் பள்ளிக்கூடத்தை சுத்தும்….. பின்னாலேயே உன் ஆழ் மனசால தேடிட்டு போ…. அதாவது உன்னையே நீ பாலோ பண்ணு…. ட்ரை பண்ணு, கண்டிப்பா முடியும்…. நாம தூங்கறத நாமலே பாக்கற மாதிரி…. அப்போ நீ எங்கெல்லாம் போற, என்னெல்லாம் பண்றேன்னு தெரிஞ்சிடும்.” என்றபடியே அவனை தூங்க வைத்தார்கள்.. சற்று நேரத்தில் தூங்கி போனான் வெற்றி…

“ஏம்பா… உயிர் உயிரோட இருக்கும் போதே வெளிய போகுமாப்பா?” பயந்து கொண்டே கேட்டாள் அம்மா…

“ஆமாம்மா…… அறிவியல் பூர்வமாவே நிரூபிச்சிருக்காங்க. கோமால இருந்த ஒருத்தர் வேறொரு ஊர்ல நடந்து போறத பார்த்தது…….தூங்கிட்டு இருக்கற மனைவி பக்கம் வந்து கணவன் நிக்கற மாதிரி ஒரு பிரமை மனைவிக்கு ஏற்பட்ட பத்தாவது நிமிஷம், கணவன் இறந்திட்ட செய்தி கிடைச்சது…….நாளைக்கு நடக்க போற கொலையா இன்னைக்கே கனவுல பாத்து, அதை தடுத்து நிறுத்தியது……. இந்த மாதிரி நிறைய அமானுஷ்யங்கள் நம்மை மீறி தினமும் ஏதாவது ஒரு இடத்துல நடந்துட்டுதான் இருக்கு. சரி, இதுக்கும் கடவுளுக்கும் சாத்தானுக்கும் சம்பந்தம் இருக்கான்னு கேட்டா, அறிவியலே திணறிட்டுதான் இருக்கு”

வெள்ளை பேச பேசவே, அனைவரின் கவனமும் அஞ்சனாவின் கட்டில் மீது போனது. அஞ்சனாவின் அருகே ஒரு காலை மடக்கி அமர்ந்து அஞ்சனாவையே பார்த்துக் கொண்டிருந்தான் வெற்றி.

மறுபடியும் முகங்களில் கலவரத்துடன், தூங்கிக் கொண்டிருந்த வெற்றியை வேக வேகமாய் எழுப்ப, திடுக்கென்று திடுக்கிட்டு எழுந்தான் வெற்றி. அஞ்சனாவின் முன்னால் இருந்த வெற்றி காணாமல் போனான்.

அவனுக்கு மூச்சிரைத்தது….
அனைவரும் ஆர்வமாகி பார்த்தார்கள்…..

“பள்ளிக்கூடம் வரை போனது ஞாபகம் இருக்குடா…. அதுக்கப்புறம் எதுவுமே ஞாபகத்துக்கு வரமாட்டேங்குது…” என்றான் வெற்றி, வியர்த்த முகத்துடன்….

“நல்ல யோசி வெற்றி… அங்கிருந்து இங்க எப்பிடி வந்த..? ஏன் வந்த…..? கொஞ்சம் யோசி…” அனைவருமே அவரவின் ஆர்வத்தின் அளவில் கேட்டார்கள்….எத்தனை யோசித்தும், தன்னால் புரிய முடியவில்லை என்று கூறினான் வெற்றி. அவனுக்கு தலை வலித்தது… மற்றவர்களுக்கும்தான்……வெள்ளை யோசித்தபடியே, ஏதோ புத்தகத்தை புரட்டினான்.

அறையெங்கும் ஒரு வித சூடு மெல்ல பரவிக் கொண்டிருந்தது….புரட்டிய புத்தகத்தை அப்பிடியே நிறுத்திவிட்டு கலவரத்துடன் பார்த்தான் வெள்ளை… அனைவரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டார்கள்… அனல் காற்று வீடு முழுவதும் தவழ்ந்து கொண்டிருப்பதை உணர முடிந்தது. இவர்களுடன் வேறு ஒரு உணர்வு அமர்ந்திருப்பதை ஒவ்வொருவரும் புரிந்து கொண்டார்கள். ஏதோ அடித்தொண்டையில் அணத்தும் ஈனக்குரல் மனதுக்குள் கேட்டது. சிவக்குமார் அறை முழுக்க கண்களாலேயே நகர்ந்தான். ஒவ்வொருவரின் இதயத் துடிப்பும் மற்றவர்க்கு கேட்டது. வெள்ளை கொஞ்சம் குழம்பினான். மனதுக்குள் பள்ளிக்கும் இந்த வீட்டிற்குமான “வழியை” மறந்திருந்தான். எத்தனை யோசித்தும் எதுவும் விளங்கவில்லை. பனி மூட்டங்களை விலக்கிக் கொண்டு ஒரு சவப் பெட்டி ஊர்ந்து வருவதாக அவனின் கற்பனை, தீ கொளுத்திக் கொண்டிருந்தது…

அவர்கள் அஞ்சனாவையே பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

“எனக்கு நல்லா ஞாபகம் இருக்கு.. நான் சொல்லட்டா…?” என்று அஞ்சனாவின் அருகே வெந்து போன உருவத்துடன் ஒருவன் அமர்ந்து கொண்டு பேசுவதை அவர்களால் உணர முடிந்தது. கண்களில் புலப்படாத ஒன்றின் குரலை உள் வாங்க முடிந்தது. அதிர்ந்து பார்த்துக் கொண்டிருந்தார்கள்..என்ன செய்வதென்று புரியவில்லை. திடும்மென வெள்ளியின் மூலையில் எல்லாம் மறந்த நினைவுகள் மேலோங்கியது. வெற்றி அர்த்தத்தோடு செய்வதறியாமல் அஞ்சனாவையே பார்த்துக் கொண்டிருந்தான். உடல் நடுங்க, உயிர் ஒடுங்க அஞ்சனாவின் அப்பாவும் அம்மாவும் தம்பியும் சுவரோரம் சாய்ந்து நிற்க………..

அங்கே ஒரு பேரு மூச்சு அணத்த துவங்கியது. வெளியே, வீட்டையே தூக்கி போக வந்தது போல அலை மோதிக் கொண்டிருந்தது ஒரு பெருங்காற்று. அறை எங்கும் உஷ்ணம் துளி துளியாய் சொட்டத் துவங்கியது……

ஆம்…….பலமுறை காதலை சொல்லியும் ஏற்றுக் கொள்ளாத அஞ்சானாவின், கண் முன்னாலேயே பள்ளியை ஒட்டிய மரத்தினடியில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து தற்கொலை செய்து கொண்ட அனீஸ், பள்ளியையே ஆவியாக சுற்றிக் கொண்டு திரிவதும், வெந்து போன முகத்தோடு, அஞ்சனாவின் முன்னால் போய் நிற்க மனம் ஒத்துக் கொள்ளாததால், மனம் வெதும்பி, அழுதும் அரட்டியும் திரிய , பள்ளி மீது கொண்டிருக்கும் காதலால், தூக்கத்தில் உடலை விட்டு வெளியேறி சுத்திக் கொண்டிருக்கும் வெற்றியின் உயிருக்குள் புகுந்து, வெற்றியின் உருவத்தோடு அஞ்சனாவின் முன் தோன்றிக் கொண்டிருப்பதையும், எப்படியும் வெள்ளை கண்டு பிடித்து விடுவான். அதுவரை வெள்ளையின் ஆத்மா வெளியேறாமல் இருப்பதாக.

உயிரையே உயிர் பிடிக்கும் சூட்சுமம் ஆரம்பித்து விட்டது. இனி மெல்ல அது பரவும்…..

குறிப்பு: வெற்றியும் அனீசும் நெருங்கிய நண்பர்கள்.

எச்சரிக்கை: இது உங்களுக்கும் நடக்கலாம்.

Print Friendly, PDF & Email

1 thought on “எச்சரிக்கை (இது உங்களுக்கும் நடக்கலாம்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *