தொழிலதிபர் செந்தில் பழி வாங்க முடிவு செய்து விட்டார். சுகாதார மற்றும் சுற்று சூழல் பாதுகாப்பு துறை மந்திரி பெருமாளை, ஒரேயடியாக உலகை விட்டு ஒழித்து கட்டுவது என்று.
“யாரிடம் வேலை காட்டுகிறான், அயோக்கியன்” புகைந்தார்.
“பணிக்கர், நீ என்ன பண்ணுவியோ, எப்படி பண்ணுவியோ தெரியாது. எவ்வளவு செலவானாலும் பரவாயில்லே! பெருமாளை போட்டுத்தள்ளனும், ஏற்பாடு பண்ணு!”. பணிக்கர், செந்திலின் அடியாள். அவரது அந்தரங்க காரியதரிசியும் கூட.
“ஐயா! அது அவ்வளவு சுலபமான காரியமில்லே! அமைச்சரை நாம நெருங்கவே முடியாது. ”
“இதோ பாரு பணிக்கர், அவனால எனக்கு ஏகப்பட்ட நஷ்டம். இதுவரை நான் அவனுக்கு ஐந்து கோடி அழுதிருக்கிறேன். இவ்வளவு நாள் நான் பாத்துக்கிறேன், நான் பாத்துக்கிறேன்னு சொல்லிட்டு, இன்னிக்கு கைய விரிச்சுட்டான், ராஸ்கல்” செந்தில் பொருமினார்.
“இருக்கட்டும் ஐயா! கொஞ்சம் பொறுமையா யோசிப்போம்!”
“அதெப்படி சும்மா இருக்கிறது! அவன் போட்ட ஆர்டர்னாலே, இன்னிக்கு நம்ம தொழிற்சாலையை இழுத்து மூடி சீல் வெச்சுட்டாங்க. எனக்கு ஐநூறு கோடி இழப்பு.. இதுக்கு அவனை தீர்த்து கட்டினால் தான் எனக்கு மனசு ஆறும்”
“ஐயா! மேல் கோர்ட் எதுக்கு இருக்கு! அப்பீல் பண்ணுவோம்! கேசை உடைப்போம். பெருமாளை கொலை பண்ணி என்ன லாபம்?”
“என்ன பணிக்கர், புரியாத மாதிரி பேசறே! அதெல்லாம் நடக்கற காரியமில்லை. நம்ம பாக்டரிலேருந்து வரும் நச்சுப் புகையினாலே இந்த பக்க மக்களுக்கு கான்சர் நோய், சாவு அப்படின்னு அரசாங்கம் முடிவு எடுத்திடுச்சு. பெருமாளை தீர்த்து கட்டிட்டு வேறொரு அமைச்சர் மூலமாகத்தான் இந்த பாக்டரியை திறக்கணும். சும்மா வளவளன்னு எனக்கு அட்வைஸ் பண்ணாதே! எனக்கு தெரியும். நீ எப்படி பெருமாளை ஒழிக்கபோறோம்னு மட்டும் யோசி.”
“அதைத்தான் ஐயா நானும் சொல்ல வரேன். ஏற்கெனவே இரண்டு முறை பெருமாளை போட்டுத்தள்ள, அவரது எதிராளிங்க முயற்சி பண்ணியிருக்காங்க. ரெண்டு தடவையும் அது நடக்கவில்லை. அதனாலே, பெருமாள் ரொம்ப அலெர்ட். எப்பவும் அவரை சுத்தி பத்து தடியாட்கள். கிட்டே நெருங்க முடியாது”
“இதோ பாரு பணிக்கர், எனக்கு இருக்குற கோபத்திலே நானே அவனை சுட்டுத்தள்ளிடலாமான்னு இருக்கு. உனக்கு பத்து நாள் டைம். அதுக்குள்ளே பெருமாளை க்ளோஸ் பண்றே. இல்லே, உனக்கு உங்க வீட்டிலே திதி கொடுக்க வேண்டியிருக்கும்.”. கோபத்தோடு தொழிலதிபர் செந்தில் வெளியேறினார். சோர்ந்து போய் உட்கார்ந்தார் பணிக்கர். என்ன பண்ணலாம்?
***
முகுந்தன், ஒரு கை தேர்ந்த ஹிப்னாடிஸ்ட். ஒரு 35 வயது. ஒரு தனியார் மன மருத்துவ மனையில் பணி.
குடி, சிகரெட் பழக்கத்திற்கு அடிமையானவர்கள், தற்கொலை முயற்சி பண்ணியவர்கள், மனச்சிதைவுக்கு ஆளானவர்கள் போன்றோருக்கு ஹிப்னாசிஸ் முறையில் ஆலோசனை, தீர்வு காண்பது அவன் வேலை.
அன்று அவன் ஒரு பத்து சமூக ஆர்வலர் மற்றும் மன நோயாளிகளுக்கு ஒரு விழிப்புணர்வு வகுப்பு எடுதுக்கொண்டிருந்தான்.
“ஹிப்னாசிஸ் அப்படின்னா என்ன டாக்டர்?”
“ஹிப்னாசிஸ்னா லத்தின் மொழிலே தூக்கம்னு அர்த்தம். நான் உங்கள் மூளையை கட்டுப்படுத்தி ஒரு அரை மயக்க நிலைக்கு கொண்டு செல்வேன்.
அப்போ, உங்கள் அடி மனசில் இருக்கும் எண்ணங்கள், பழைய நினைவுகள் வெளியே வரும். எனது கேள்விகளுக்கு நீங்கள் உண்மையா பதில் சொல்ல, நான் உங்கள் பிரச்சனை என்னன்னு கண்டுபிடித்து, நீங்க என்ன பன்னனும்னுங்கறதை நான் சொல்வேன். அந்த நிலையிலேயே, உங்க மனசு அதை முழுசா வாங்கி செயல்படுத்தும்.”
“அதெப்படி?” ஒரு நோயாளி
“இப்போ, உங்களுக்கு சிகரெட்டு பழக்கம் இருக்குன்னு வெச்சுக்குங்க. அதை விட முடியல்லே. நான் என்ன பண்ணுவேன், உங்களை ஹிப்னாசிஸ் மூலமா உங்க சின்ன வயசுக்கு, பழக்கத்துக்கு அடிமையான ஆரம்ப நிலைக்கு கொண்டு போயிடுவேன்.”
“அது எனக்கு தெரியுமா?”
“நிச்சயமா! நான் உங்களை, அந்த கால நினைவுகளை பற்றி கேட்டால், துல்லியமா,சிகரேட் பிடிக்க ஆரம்பித்த காரணம், அப்போ உங்களோட இருந்த உங்க நண்பர் பெயர், அவரோட அப்போ பாத்த சினிமா முதற்கொண்டு எல்லாம் சொல்வீங்க. ஏன்னா, உங்க அடி மனசில் அது ஆழமா புதைஞ்சிருக்கும்.”
“அப்படியா!”
“அப்போ, அந்த அரை மயக்க சமயத்திலே, நான் உங்களுக்கு சிகரெட் பிடிக்கறதாலே ஏற்படற கெடுதல் பற்றி சொல்வேன். இந்த வயசிலே, அது ஏன் வேண்டாம் என்பதையும் சொல்வேன். நீங்க கேட்டுப்பீங்க!. மனசிலே வாங்கிப்பீங்க. விழிப்பு வந்ததும், அந்த நினைவாலே, சிகரெட் பிடிக்கற வழக்கத்தை விட்டுடுவீங்க”
முகுந்தன் தொடர்ந்தான். “சுருக்கமா சொல்ல போனா, உங்க மைண்டை நான் கண்ட்ரோல் பண்ணுவேன். உங்க நன்மைக்காக!”
“ஆச்சரியமா இருக்கே!”
“இதிலே ஆச்சரியப் பட ஒண்ணுமில்லே. சின்ன குளவிகிட்டேயே இந்த மூளை சலவை திறமை இருக்கச்சே, நம்ம கிட்ட இருக்க கூடாதா?”
“நம்பவே முடியலியே?”
முகுந்தன் சிரித்தான். “நம்பித்தான் ஆகணும். இதோ இந்த படத்தை பாருங்க”
படத்தை திரையில் காட்டினான்.
“இந்த சிலந்தி கோஸ்டா ரிகா என்கிற இடத்திலே தன் பாட்டுக்கு சிவனேன்னு வலை பின்னிக்கிட்டு, ஈ, எறும்பு தின்னுகிட்டு இருக்கும். திடிர்னு எங்கேந்தோ ஒரு குளவி இங்கே வரும். மாட்டிக்க இல்லே. சிலந்திய ஒரு வழி பண்ண. மைன்ட் கண்ட்ரோல் செய்ய.
நேரே வந்து, சிலந்தியை கொட்டிவிட்டு, அதன் வயிற்றில் தனது முட்டையை இட்டுவிட்டு பறந்து போயிடும். விழித்த சிலந்தி தன் பாட்டுக்கு, தனது வேலைய தொடரும்.
கொஞ்ச நாள் கழித்து, முட்டையை உடைத்து கொண்டு வெளியே வரும் குளவிப் புழு, சிலந்தியின் வயிற்றின் மேலேயே உட்கார்ந்து சிலந்தியின் ரத்தத்தை குடித்து வளரும்.
புழு, கூட்டு புழு பருவம் வரும்போது, சிலந்தியின் வயிற்றில் ஒரு திரவத்தை குத்திவிடும். பாவம் சிலந்தி, அவ்வளவுதான், கிறுக்கு பிடித்தாற்போல், வழக்கமான ஆறு கோண வலைக்கு பதிலா, இரண்டு கோண வலை பின்ன ஆரம்பித்து விடும், ஒரு கூடு மாதிரி. அப்புறம், மந்திரிச்சு விட்டா மாதிரி நடுவிலே போய் உக்காந்துடும்.
புழு, சிலந்தியை கொன்று, முழுவதும் உறிஞ்சி விட்டு, அடர்த்தியான, இரண்டு அடுக்கு வலையில், மழைக்கு பாதுகாப்பா, கூட்டுப் புழுவா அமர்க்களமா அமர்ந்து விடும். உழைத்தது யாரோ! அனுபவிப்பது யாரோ? கொஞ்சம் முதலாளித்துவம் போல இல்லே?
கூட்டை விட்டு வெளியே வரும்போது ஒரு குளவியாக. கொஞ்ச நாள் கழித்து இது இன்னொரு பாவப்பட்ட சிலந்தியை தேடும். இது மாதிரி, இந்த உலகத்திலே நிறைய மைன்ட் கண்ட்ரோல் விஷயங்கள் நடந்து கிட்டு தான் இருக்கு“- முகுந்தன் முடித்தான்
“அப்போ, நீங்க சொன்னா, நான் கொலை கூட பண்ணிடுவேனா? அப்படி யெல்லாம் கூட நடக்குமா என்ன?”
“நடக்கும். உங்களுக்கு அந்த கொலை செய்ய ஓரளவு உடன்பாடு இருந்தால், நான் உங்களை அந்த கொலை செய்ய தூண்ட முடியும்!”
அந்த நேரத்தில், அலைபேசி அழைத்தது.
“நான் ஏற்கெனவே சொல்லியிருக்கேன்! இங்கே வரும்போது அலைபேசியை அனைச்சிட்டு தான் வரணுமென்று.”- முகுந்தன்
“சார்! அது உங்க மொபைல்”
“ஓ! சாரி, ஒரு நிமிஷம்!” – முகுந்தன் வழிந்தான்.
“ஹலோ! நான் முகுந்தன், நீங்க யாரு?”
“நான் செந்தில் கெமிக்கல் அண்ட் பெஸ்டிசைட் கம்பனிலேருந்து முதலாளியின் செகரட்டரி பணிக்கர் பேசறேன். உங்களை உடனடியா பாக்கணும், வர முடியுமா?”
“என்னையா? நான் எதுக்கு? ஒண்ணும் புரியலியே?”
“நேரே வாங்க சொல்றேன்! நாலு மணிக்கு கார் அனுப்பறேன். கட்டாயம் வரணும். முதலாளி ஐயா காத்துகிட்டு இருப்பார்”
“சரி வரேன்”
***
மாலை 5 மணி. தொழிலதிபர் செந்தில் அறை. செந்தில், பணிக்கர், முகுந்தன் அமர்ந்திருந்தனர்.
“நான் நேரே விஷயத்திற்கு வரேன் முகுந்தன். எங்களுக்காக நீங்க ஒருத்தரை ஹிப்னடைஸ் பண்ணனும்.” – பணிக்கர்
“யாரை?”- முகுந்தன் குழப்பமாக
“சுகாதார அமைச்சர் பெருமாளின் கார் டிரைவரை”
“எதுக்கு?”
“சொல்றேன். நாங்க சொல்றபடி நீங்க செய்தீங்கன்னாக்க உங்களுக்கு 50 லட்சம் தரோம்.”
“சார், நீங்க என்ன சொல்றீங்கன்னே புரியலே?”
“நாங்க அமைச்சர் பெருமாளை தீர்த்து கட்டணும். அவரது டிரைவரை நீங்க வசிய படுத்தி, அவர் மூலமா ஒரு பெரிய கார் விபத்து நிகழ வைக்கணும். அதில் பெருமாள் இறக்கணும். யாருக்கும் எந்த பிரச்னையும் இல்லை”
“அப்போ டிரைவர்?”
“அவரையும் சேர்த்து தான். அது அவரோட தலைஎழுத்து”
அதிர்ந்தான் முகுந்தன்.
“சாரி, மன்னிக்கணும், என்னாலே முடியாது”
“இங்கே பாருங்க முகுந்தன், உங்களுக்கு ஒரு ப்ராப்ளமும் வராது. அதை நாங்க பார்த்துக்கிறோம். சின்ன வேலை. பெத்த லாபம்”
“வேண்டாம். என்ன விட்டுடுங்க. ப்ளீஸ்!” முகுந்தனுக்கு வியர்த்தது.
“நாலு நாள் டைம் தறோம். யோசிச்சு முடிவெடுங்க.”
***
முகுந்தனுக்கு அலைபேசியில் அழைப்பு.
“நான் பணிக்கர் பேசறேன். உங்க பையன் இப்போ எங்க கஸ்டடியில். எங்க பேச்சை நீங்க கேக்கலைன்னா, உங்க பையனை நீங்க பார்ட் பார்ட்டா தான் பாக்க முடியும்.”
“நான் போலிசுக்கு போனா?”
“ஒண்ணும் பண்ண முடியாது. உங்க பையனை மட்டுமல்ல, உங்க குடும்பத்தையே சீரழிச்சிடுவோம். பேசாம, இப்ப உடனே இங்கே வரீங்க. ஒப்புக்கறீங்க. 25 லட்சமும், உங்க பையனையும் சேர்த்து அழைச்சிகிட்டு போறீங்க. பாலன்ஸ், காரியம் முடிஞ்ச பிறகு உங்க வீடு தேடி வரும். நினச்சி பாருங்க, ரொம்ப சின்ன வேலை, உங்களுக்கு ஒரு தொந்தரவும் இருக்காது”
முகுந்தன் யோசித்தான். “வரேன்! வரேன்! என் பையனை ஒண்ணும் பண்ணிடாதீங்க”
***
செந்தில் வீடு
செந்திலும், முகுந்தும் தனியாக. பணிக்கரை காணோம்.
“ஐயா ! நீங்க சொல்றபடி செய்யறேன். அந்த டிரைவரை எனக்கு காமியுங்க. நான் அவனை மெஸ்மெரைஸ் பண்ணனும்.”
“வெரி குட். நானே ஏற்பாடு பண்றேன் . நான் நாளைக்கு அமைச்சரை அரசு ஆணை விஷயமா பாக்கணும். அப்போ, அந்த டிரைவரை உன்னை பாக்க சொல்றேன்.” –செந்தில். “இந்தா உன் அட்வான்ஸ். உன் பையன் வீடு தேடி வந்துடுவான். இதோ பாரு செந்தில், ஏதாவது குழப்பம் ஆச்சு, முதல்லே உன்னை ஒழிச்சிடுவேன்!”
“ஏன் ஐயா, சந்தேகமா இருக்கா?வேண்டாட்டி என்ன விட்டுருங்களேன்!”
“அது முடியாது!. உனக்கு எங்க விஷயமெல்லாம் தெரியும். இனிமே உன்னை விட முடியாது. நீ செஞ்சிதான் ஆகணும். ”
“அப்ப சரி. என்னால நிச்சயம் முடியும் ஐயா! இப்பவே உங்களுக்கு நான் நிருபிக்கட்டுமா?”
“ம்.. சரி! நான் என்ன பண்ணனும்”
“அப்படியே என்ன பாருங்க!”
தன் கையிலிருந்த ஒரு சங்கலி கொத்தை அவர் முன் ஆட்டினான். அவர் கண் சொக்கியது. அவனுக்கு வசியமானார்.
அவர் விழித்தவுடன், அவரிடம் “ ஐயா! நீங்க லயோலா கல்லூரிலே தானே படித்தீங்க!”
“ஆமா!”
“அப்போ, சிநேகா என்கிற பெண்ணை காதலித்தீங்க தானே?”
“ஆமா!”
“அப்புறம் அந்த பெண்ணை கை விட்டுட்டீங்க தானே?”
“ஆமா! ஆச்சரியமா இருக்கே?”
“அது எப்படி உனக்கு தெரியும் ? நம்பவே முடியலியே”
“பத்து வருஷம் முன்னாடி, உங்க தொழிற்சாலை யூனியன் தலைவர் தனபாலை, ஆள் வெச்சி சாகடீச்சீங்க. சரியா?”
“ஆச்சரியமா இருக்கே. ரொம்ப ரகசியமாச்சே! எப்படி இதெல்லாம் சொல்றே?”
“நீங்க தான், இது எல்லாம் கொஞ்ச நேரம் முன்னாடி என் கிட்டே சொன்னீங்க, நீங்க என் வசத்திலே இருக்கும்போது. அடி மனசிலிருந்து , என் கேள்விகளுக்கு பதில் சொல்லும்போது..”
“போதும்பா! சூப்பர் முகுந்தன் ! எனக்கு நம்பிக்கை வந்துடுத்து. உன்னாலே அமைச்சருக்கு சாவு நிச்சயம்” – சிரித்தார் செந்தில்.
“சரியா சொன்னீங்க ஐயா, சாவு நிச்சயம். ” முகுந்தன் எழுந்தான். “ஐயா! அப்ப நான் கிளம்பட்டுமா?”
“சரி! போயிட்டு வா”
***
அடுத்த நாள்
தினசரி பத்திரிகைகளில் பரபரப்பான செய்தி. தலைப்பு செய்தி.
“நேற்றிரவு, சென்னை அருகே நடந்த ஒரு கோர விபத்தில், தொழிலதிபர் செந்தில் பரிதாபகமாக உயிரிழந்தார்.
சுகாதார துறை அமைச்சரை பார்க்க, தனது பென்ஸ் காரை தானே ஒட்டிக் கொண்டு சென்ற போது, தொழிலதிபர் செந்தில், நின்று கொண்டிருந்த லாரி மீது மோதியதால், இந்த விபத்து நேர்ந்தது. ஏன் டிரைவர் இல்லாமல், செந்தில் தானே காரை ஒட்டி சென்றார் என தெரியவில்லை.
செந்தில் கெமிக்கல்ஸ் ஆலையை அரசு மூடியதால் ஏற்பட்ட நஷ்டத்தினால், மன உளைச்சல் காரணமாக, தற்கொலைக்கு செந்தில் உந்த பட்டிருக்கலாம் என நம்ப தகுந்த வட்டாரங்களில் பேசப்படுகிறது. போலீஸ் விசாரணை தீவிரமாக நடக்கிறது.”
***
முகுந்தன் இப்போ தமிழ் நாட்டிலேயே இல்லே. செந்திலை ஹிப்னாசிஸ் முறையை பயன்படுத்தி தற்கொலை செய்து கொள்ள தூண்டியது அவனுக்கு வருத்தமேயில்லை.
பழி வாங்கிய திருப்தி அவனுக்கு.*
தொழிலதிபர் செந்தில் மேல் முகுந்தனுக்கு ஏற்கெனவே கொஞ்சம் சந்தேகம் இருந்தது. அந்த சந்தேகம், அவனது வசியத்தில், செந்தில் சொன்ன பதிலில், ஊர்ஜிதமானது.
செந்திலால் இறந்த யூனியன் தலைவர் தனபால், முகுந்தனின் தந்தை.
***
நன்றி: கூகிள், விக்கிபீடியா
ஆசிரியர் பின் குறிப்பு: அமெரிக்காவில் ராபர்ட் கென்னடி,மறைந்த ஜனாதிபதி ஜான் கென்னடியின் தம்பி. இவர் ஒரு செனெட்டர். இவரும், கொலை செய்யப் பட்டார். இவரை கொன்ற சிர்ஹான் சிர்ஹான் என்னும் கொலையாளி, ‘நான் கென்னடியை சுடலை. கொலை செய்யலை. ஹிப்னாசிஸ் மூலமா என்னை யாரோ தூண்டி விட்டாங்க’ அப்படின்னு சொன்னாராம். சர்ச்சை இன்னிக்கும் ஓடிகிட்டு தான் இருக்கு. ….
இதையும் கேளுங்க :
“A trained psychiatric professional can put someone under hypnosis and tell him to commit a certain act very easily”. –
“I can hypnotize a man — without his knowledge or consent — into committing treason against the United States,” boasted Dr. George Estabrooks in the early 1940s.
வலையில் படித்தது.
http://t2.gstatic.com/images?q=tbn:ANd9GcR96GUj5o1qrf4WGeDIR-JOVpI0BZXgFmEG4Dp79eZUI3f0rwKxwQ