(1994ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
இரவின் அமைதியைக் கொன்றது அந்தக் கூக்குரல். யாரோ கொலை செய்யப்படுவதால் எழுகிற அலறல் போல ஒலித்தது அது. மனிதக்குரல் போல் அல்லாது பயங்காரமாக வீரிடும் ஏதோ ஒரு மிருகத்தின் கதறல் போல அது தொனித்தது. அச்சம் கொண்டு அடித் தொண்டையிலிருந்து கதறியதான அந்த ஒலம் கேட்போருக்கு அச்சம் தந்தது.
அந்தத் தனிவீட்டின் மாடியில் இருட்டினூடே, எழுந்த அந்த நீண்ட கூச்சல், கீழே வீட்டினுள் படுத்துத் தூங்கியவர்களை உலுப்பியது. என்னவோ ஏதோ எனப்பயப்பட வைத்தது.
விழித்தவர்களில் ஒருவர் தட்டுத்தடுமாறி மின் விளக்கின் ஸ்விச்சைக் கண்டுபிடித்து அழுத்தவும், பளிச்சென ஒளி பரவியது. வீட்டில் வெளிச்சம் ஆண்களுக்கும் பெண்களுக்கும் சிறிது தைரியம் கொடுத்தது. ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து, என்னது? ஏது? என்ன சத்தம்? யாரு இப்படி பயங்கரமாய்க் கத்தியது? என்று கேள்விகளைப் பரிமாறிக் கொண்டார்கள்.
“மாடியிலே தான் கேட்டுது. மாமா தானே அங்கே படுத்திருக்காங்க?” என்று ஒரு பெண்குரல் குறிப்பிட்டது.
“ஆமா மாமாவுக்கு என்ன நேர்ந்திருக்கும்?” என்று சந்தேகப்பட்டார் ஒருவர்.
டார்ச் எடுத்துக் கொண்டு மாடிக்குப் போனார். அவர் பின்னாலேயே சிலர் போனார்கள்.
முன்சென்றவர் ஸ்விச்சைப் போடவும், வெடித்துச் சிதறியது வெளிச்சம். ஒளியில் குளித்துக் காட்சி தந்த மனிதர் மீது குவிந்தது அனைவர் பார்வையும்.
அவர் “குறுகுறு என்று உட்கார்ந்திருந்தார். அவர் உடல் இன்னும் நடுங்கிக் கொண்டிருந்தது. அடிபட்ட மிருகத்தின் மிரண்ட பார்வை போல பீதி நிறைந்த கண்களால் அவர் அங்கு வந்தவர்களைப் பார்த்தார்.
“என்ன மாமா, நீங்கதான் அப்படி சத்தம் போட்டீங்களா?”
“என்ன அண்ணாச்சி, என்ன நடந்தது?”
“பூனை கீனை மேலே விழந்ததனாலே பதறி அடிச்சுக் கூப்பாடு போட்டீகளா?”
ஒவ்வொருவர் ஒவ்வொன்று கேட்டனர். அவர்கள் பார்வைகள் அறை நெடுகிலும் துழாவின. ஒன்றுமில்லை. வித்தியாசமாக, விபரீதமாக, எதுவுமே தென்படவில்லை.
மாமா என்று குறிப்பிடப்பட்ட அந்த நபர் பேச்சற்றுப் போனவர் போல, மிரள மிரளப் பார்த்தவாறு உட்கார்நதிருந்தார்.
பலரும், என்னவென்று அறிந்து கொள்ளும் தவிப்பில் ஏதேதோ கேட்க, என்ன சொல்வது என்று விளங்காதவராய் அவர் இருந்தார்.
“ஏதாவது சொப்பனம் கண்டீகளா, மாமா?
“ஊம்ம்” என்ற ஆமோதித்தார் அவர்.
மற்றவர்களின் அறியும் அவா தூண்டப் படவும், “என்ன கனா அண்ணாச்சி?…” “கழுத்தைப் புடிச்சு நெரிக்கிற மாதிரி இருந்துதா மாமா?.” “என்னமா சத்தம் போட்டீங்க! பக்கத்து வீட்டுக்கெல்லாம் கூட கேட்டிருக்கும். அப்படி கத்தும்படி சொப்பனத்திலே என்ன வந்தது மாமா?” என்று பலப்பல கேள்விகள் பிறந்தன.
அவர்களுடைய தொணதொணப்பிலிருந்து தப்புவதற்காக அவர் ஏதாவது. சொல்லியே தீரவேண்டியிருந்தது. “நான் எங்கோ போய்க்கிட்டிருக்கேன். திடீர்னு நாலஞ்சு பேரு வந்து என்னை புடிச்சுக் கிட்டு, அப்படியும் இப்படியும் இழுக்கிறாங்க. இவனைக் கயித்தைக் கட்டி மரத்திலே தொங்கவிடுவோம்கிறான் ஒருத்தன். நீண்ட கத்தியாலே சதக்குனு என் வயித்திலே குத்துறான் இன்னொருத்தன். ஒரு தடியன் என் குரல்வளையைப் பிடிச்சு அழுத்தி. சே, ரொம்ப மோசமான கனவு” – திக்கித்திணறிச் சொன்னார் அவர். இன்னும் பயத்தின் பிடியிலேயே அவர் இருப்பதாகத் தோன்றியது.
“உத்திரத்துக்கு அடியிலே படுத்திருக்கீங்க. அதுதான். உத்திரத்துக்கு நேர்கீழே படுத்துக்கிடந்தால் இப்படித்தான் கண்ட கண்ட சொப்பனம் எல்லாம் வரும்” என்று உறுதியாய்ச் சொன்னார் ஒருவர்.
“வடக்கே தலைவச்சுப் படுத்திருந்தீகளா, மாமா? அப்ப தான் சரியான தூக்கமும் இருக்காது; மோசமான சொப்பனங்களும், தோணும்” என்று அறிவித்தாள் ஓர் அம்மாள்.
மணியைப் பார்த்தார் ஒருவர்.
சரியாகப் பன்னிரெண்டு.
நடுச்சாம நேரம். பேய்கள் உலாவரும் வேளை.
“ஆ அதுதான்” என்று மர்மமாகச் சொல் உதிர்த்தார் ஒரு பெரியவர். இந்த மச்சிலேயே ஒரு பொம்பிளை ஒரு சமயம் தூக்குப் போட்டுச் செத்துப் போனா. அவ ஆவி இங்க தான் சுத்திக் கிட்டுத்திரியுது. அது தான் இவரைத் தொந்தரவு செய்திருக்கும்” என்றார்.
“அப்படித்தான் இருக்கும்” என்று மற்றவர்கள் ஒத்து ஊதினார்கள்.
“இன்னும் நேரம் நிறையக் கிடக்குது. தூக்கத்தைக் கெடுத்து இருப்பானேன்? எல்லாரும் கீழே போய்ப் படுப்போம்” என ஒருவர் நல்ல யோசனை சொன்னார்.
மாமா என்று பலரால் அழைக்கப்பட்ட நபருக்கும் அந்த யோசனை கூறப்பட்டது. அவரும் அதை ஏற்றுக் கொள்ளத் தான் வேண்டியிருந்தது.
அனைவரும் கீழே போனார்கள். வசதியாய்ப் படுத்தார்கள். பயங்கரமாகக் கத்தி அனைவரையும் பதறி எழச் செய்த நபரும், உத்திரத்தின் கீழே வராத ஒரு இடத்தில், கிழக்கும் மேற்குமாய், கிழக்கே தலைவைத்துப் படுத்தார்.
தூக்கம் உரிய வேளையில் ஒவ்வொருவரோடும் உறவு கொண்டது. பயந்து அலறியவரும் தன்னை அறியாமலே தூக்கத்தில் ஆழ்ந்து விட்டதாகத் தோன்றியது.
அவருக்கு நாற்பது வயதுக்குள் இருக்கும். ஆரோக்கியமான வராகத் தான் தென்பட்டார். மனஉளைச்சல் மனிதனைப் படுத்திக் கொண்டிருந்ததோ என்னவோ!
சுவர்க்கடிகாரம் இரண்டு மணி என அடித்துச் சொன்னது.
அந்த அறையில் எல்லாரும் நிம்மதியாய்த் தூங்கிக் கொண்டிருந்தார்கள்.
மீண்டும் அந்த பயங்கர அலறல் வெடித்தது. நெஞ்சின் மீது எதுவோ உட்கார்ந்து கொண்டு, கழுத்தைப் பிடித்து பலமாக அமுக்குவதால் மூச்சுத் திணறி, வேதனையால் சிரமப்பட்டு, ஓங்கிக் குரல் எடுத்துக் கத்த முயன்று, அப்படிக் கதற முடியாமல் திணறித் தவிக்கிற முறையில் அந்தக் குரல் ஒலித்தது.
தூங்கிக் கொண்டிருந்த அனைவரையும் உலுக்கி எழச் செய்தது அது.
யாரோ வேகமாக ஸ்விச்சைப் போட்டார்கள. பாய்ந்து சிந்திய வெளிச்சத்தில், அந்த அப்பாவி மனிதன் நெளிந்து புரண்டு தவிப்பது தெரிந்தது. அவர் முகம் விகாரமாகத் தோன்றியது.
“மாமா மாமா” என்று பதறித் தெறித்தன குரல்கள். “எழுந்திருங்க, முழிச்சிருங்கி என்று துரிதப்படுத்தினார் ஒருவர்.
அந்த ஆசாமி திகைப்புடன் விழித்து எழுந்தார். திருதிருவென விழித்தபடி உட்கார்ந்தார். கால்களை மடக்கி, முழங்கால் மீது முகம் பதித்து, மற்றவர்கள் முகங்களைப் பார்க்க நாணப்படு கிறவர் போல் இருந்தார்.
“திரும்பவும் என்ன மாமா இது?” என்று ஒரு பெண் கேட்டாள்.
“உங்களுக்கு என்ன பண்ணுது? ஏன் இப்படி பதறிப் பதறிக் கத்துறிங்க? என்று ஒருவர் விசாரித்தார்.
“உச்சிப்பட வேளையிலே எங்கேயோ பயந்திருக்கான். அது தான்” என்று ஒரு பெரியவர் சொன்னார்.
பயந்து அலறியவர் எதுவும் சொல்லவில்லை. என்ன சொல்வது என்று புரியாத மவுனநிலையில், “பிடித்து வைத்த பிள்ளையார்” மாதிரி அசையாது உட்கார்ந்திருந்தார்.
ஒவ்வொருவராக அலுத்துச் சலித்து தரையில் சாய்ந்தார்கள். “இன்னும் விடிய நேரம் கிடக்கு தூங்குங்க” என்றார்கள். “விளக்கு எரியட்டும். அணைக்க வேண்டாம்” என்றது ஒரு குரல்.
மாமாவும் உட்கார்ந்து அலுத்துப் போய் படுக்கையில் சரிந்தார். கண்களை விழித்தபடி கிடந்தார். எவ்வளவு நேரம் அப்படி இருக்க முடியும்? கண்கள் தாமாக மூடின. மெது மெதுவாக தூக்கமும் வந்தது.
சுவர்கடிகாரம் மூன்று ஒலிகளை உதறியது. அப்புறம் ஒற்றை ஒலியைச் சிந்தியது. பிறகு நான்கு ஒலிகளைக் கொட்டியது. டிக் – டிக் ஒசை ஓயாது ஒலித்துக் கொண்டிருந்தது.
மீண்டும் அந்தக் கோரமான ஒலி அந்த ஆளின் அடித் தொண்டையிலிருந்து வெளிப்பட்டு, தெளிவு படுத்த முடியாத நீண்ட குரலாகச் சிதறியது. பயம் அதன் அடிநாதமாக இருந்தது.
எல்லாரும் அலறிப்புடைத்து எழுந்தார்கள்.
எல்லா விளக்குகளையும் எரிய விட்டார்கள்.
“என்ன மாமா இது?. உங்க மனசிலே இருக்கிறதைத் தான் சொல்லுங்களேன். யாராவது பயமுறுத்தினாங்களா மாமா?. எங்காவது எதைக் கண்டாவது பயந்தீங்களா?… அய்யோ, இன்னிக்கு என்ன தான் நடந்தது? ஏன் இப்படி பதறிப் பதறி அலறுறிங்க?.
அவர்கள் தெரிந்து கொள்ள விரும்பினார்கள்.
மாமா தனது அமைதியையும் கெடுத்துக் கொண்டு, வீட்டில் உள்ள அனைவரது அமைதியையும் சீர்குலைத்து, என்ன ஏது என்று எதுவும் சொல்லாமல் முரண்டு பிடிப்பதனால் என்ன பிரயோசனம்? அந்தி சந்தியிலே பயந்திருந்தால், பேய் நிசாசு குத்தம் என்று சொன்னால், தகுந்த மந்திரவாதியைப் பார்த்து உரிய நடவடிக்கை எடுக்கணும். உள்ளுக்குள்ளே ஏதாவது கொணக்கிக்கிட்டு இருந்தது. என்றால், டாக்டரைப் பார்த்து நோய்க்கு சிகிச்சை பண்ணணும்….
வீடு கலாமுலாமாயிற்று. ஆள் ஆளுக்கு ஆலோசனைகளை உதறினார்கள்.
“ஒண்ணும் சொல்லாமல் இருந்தால் என்ன தான் அர்த்தம்? பகலிலே என்ன நடந்தது? ராத்திரியிலே இப்படி பதறிப்பதறி அலறும்படியா ஏதோ நடந்துதான் இருக்கணும். சொல்லுங்க, வாய் திறந்து சொல்லுங்க. மனசிலே புதைச்சு வச்சு கஷ்டப் பட்டு, மத்தவங்களையும் கஷ்டப்படுத்தி, இதெல்லாம் எதுக்கு?…”
பேச உரிமை உடையவர்கள் பேசி, தூண்டித் துருவி, துளைத்தெடுத்தார்கள். மனசில் இருப்பதைச் சொல்லி விடுவது நல்லது என்று அவரை உணர வைத்தார்கள்.
திகைத்துப் போய் உட்கார்ந்திருந்த அவர் சிறிது சிறிதாகத் தனது அனுபவத்தைச் சொன்னார். அவருக்கு அதிர்ச்சி ஏற்படுத்திய அனுபவம் அது. விபரீதமான பயங்கர அனுபவம் தான்:
அன்று பிற்பகல் ஒன்றரை மணி இருக்கும், வேலை செய்யும் இடத்திலிருந்து அவர் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார்.
ஆள் நடமாட்டம் அதிகமில்லாத பாதை. அங்கு ஒதுங்கிய ஒர் இடத்தில் தனித்து நின்றது “பொதுக்கழிப்பிடம் – “பப்ளிக் கன்வீனியன்ஸ்”. அவர் அதனுள் புகுந்தார். அந்தச் சமயம் வேக்மாக ஒருவன் உள்ளிருந்து வெளியே ஓடி வந்தான். வாசலில் அடி எடுத்து வைத்திருந்த அவரை இடித்துத் தள்ளி விடுவது போல் முரட்டுத்தன வேகத்தோடு அவன் வெளிப் பட்டான். “மாடு மாதிரி கண்ணு தெரியலே, எதிரே ஆளு வர்றதைப் பார்க்க வேண்டாமா?” என்று அவர் குறைபட்டுக் கொண்டார். ஆனால் அந்தத் தடியன் எதையும் கவனிக்க வில்லை. எதிலிருந்தோ தப்பி ஓடுவது போல, ஒரு பதற்றத்துடன், தாவிப் பாய்ந்து ஓடினான்.
அவர் மறு எட்டு எடுத்து வைப்பதற்குள் இன்னொருவன் வெளிப்பட்டான். அவன் வயிற்றிலிருந்து ரத்தம் பொங்கி வடிந்தது தான் அவர் பார்வையை முதலில் தாக்கியது. அங்கே ஒரு கத்தி செருகப்பட்டிருந்தது. ரத்தம் மேலும் மேலும் குபுகுபுன்னு வந்து கொண்டிருந்தது. அவன் மூச்சு இழுத்து மூச்ச் விடுபவன் போல் வாயைப் பிளந்து பிளந்து மூடினான். எதுவும் சத்தமிடவில்லை. முதலில் ஓடிய தடியன் தான் அவனைக் குத்தியிருக்க வேண்டும். கத்தியால் குத்தி விட்டு அவன் தப்பி ஓடியிருக்கிறான் என்று மாமாவுக்குப் புரிந்தது.
பட்டப்பகலில், ஒரு தெருவில், பப்ளிக் கன்வீனியன்”சுக் கான ஓர் இடத்தில் ஒரு கொலை முயற்சி பளிடும் ரத்தமும் வயிற்றில் செருகிய கத்தியும் இந்த உண்மையை அவர் மூளையில் அறைந்தன. அவர் பதறினார். உள்ளே போகாமல், இயல்பாக எழுந்த தற்காப்பு உணர்வு உந்த வேகமாகத் திரும்பி ஒடலானார். ஒடுவது தவறு; நாம் தான் குற்றம் செய்து விட்டு ஒடுகிறோம் என்று பார்க்கிற யாராவது எண்ண நேரிடும் என உள்ளுணர்வு புலப்படுத்தியது. அதனால் ஓட்டத்தைக் கட்டுப்படுத்தினார். திரும்பித் திரும்பிப் பார்த்த படி வீட்டை நோக்கி வேகமாக நடந்தார். நல்ல வேளை. ரோடில் யாரும் இல்லை. குத்துப்பட்டவன் கொஞ்ச தூரம் நடந்து, தள்ளாடி விழுந்தது தெரிந்தது. அப்புறம் அவர் திரும்பிப் பாராமலே நடந்தார். கடவுளே! யாரும் வராமல் இருக்கணும்; போலீஸ் வராமல் இருக்கட்டும் என்று ம்னசில் பிரார்த்தித்துக் கொண்டே வேகம் வேகமாக நடந்தார். அவர் தவறு செய்யவில்லைதான். இருந்தாலும் போலீஸ் சந்தேகப்படும். விசாரணை, ஸ்டேஷன் என்று இழுத்துப் போகும். வீண்பொல்லாப்பு எதுக்கு? மனசுக்குள் பயம் திக்திக்கென்று அடித்தது. அடித்துக் கொண்டேயிருந்தது. கத்திக்குத்தும், பொங்கி வழியும் ரத்தமும், ஒசையின்றி வாயை வாயைப் பிளந்த அந்த ஆளின் முகத்தோற்றமும் அவர் கண்ணுக்குள்ளேயே நின்றன. மனசில் ஆழப்பதிந்து விட்டன. அந்த பயங்கரம் அடிக்கடி பூச்சாண்டி காட்டியது. அத்துடன் போலீஸ் வந்து தன்னைப் பிடித்து மிரட்டக்கூடும் என்று பயம் வேறு. அதனாலே இதை யாரிடமும் அவர் சொல்லவில்லை; சொல்ல விரும்ப வில்லை. அதுவே மனசைக் குடைந்து கொண்டிருந்தது. தூக்கத்தில் பயங்கரக் கனவாய் வந்து அவரை அலறச் செய்தது…
அவர் சொல்லச் சொல்ல மற்றவர்கள் கிலிபிடித்தவர்களாய் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருந் தார்கள். என்ன சொல்வது என்றே அவர்களுக்கு விளங்க வில்லை.
– அமுதசுரபி 1994
– வல்லிக்கண்ணன் கதைகள், முதற் பதிப்பு: 2000, ராஜராஜன் பதிப்பகம், சென்னை.