பரிசுப் பொருள்கள்

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: கல்கி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 7, 2023
பார்வையிட்டோர்: 3,001 
 

(1956ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அன்புக்குரிய சுஜாதா,

கல்யாணம் மற்றுமுள்ள விசேஷங்களுக்கும் போனால் ஏதாவது பரிசுப் பொருள் வாங்க வேண்டியிருக்கிறது. என்ன வாங்கலாம்? என்று என்னை யோசனை கேட்கிறாய்.

விசேஷங்களுக்கு நம்முடைய ஆசிகளுடன் பரிசு அளிப்பதும் அவசியம்தான், வாங்கிக் கொள்பவர்களுக்கு மகிழ்ச்சியாகத்தானிருக்கிறது. கொடுக்கிறவர்களுக்குச் செலவு ஏற்பட்டாலும் கொடுப்பதிலும் ஒரு இன்பம் இல்லையெனச் சொல்ல முடியுமா? பரிசாகக் கொடுக்கும் பொருள் விலை அதிகமாக இருக்க வேண்டு மென்பது அவசியமில்லை. நம்முடைய அன்பளிப்பு என்ற முறையில் சிறிய பொருளாளலும் அதன் விலை மதிப்புக்கு அப்பாற்பட்டதுதான்.

குழந்தைகளுக்குப் பரிசு அளிப்பது பரஸ்பர இன்பம். எங்கள் உறவினர், ஒரு குழந்தைக்கு ஏதாவது விசேஷங்கள் வந்தால் மற்ற குழந்தைகள் பேரில் விளையாட்டுச் சாமான்கள் வாங்கிக் கொடுப்பார். அந்தச் செய்கை குழந்தைகளுக்கு மிகவும் உற்சாகத்தைக் கொடுப்பதைப் பார்த்திருக்கிறேன். குழந்தைகள் தாங்களும் அந்த விசேஷத்தில் முக்கியமானவர்கள் என்று பெருமிதமடைகிறார்கள். ஒவ்வொரு விசேஷத்திலும் அதற்குத்தகுந்தபடி பரிசு அளிப்பது ஒரு கலை. அதிலும் உபயோகப்படும்படியான சாமான்கள் வாங்கிக் கொடுப்பது போற்றத்தக்கது. எங்கள் வீட்டில் பிறந்த ஒரு குழந்தைக்கு ஒரு அம்மாள் விளக்கெண்ணெய் புட்டியைப் பரிசாக அளித்தாள், தேன் புட்டியாக அளித்தால் உபயோகம் மட்டுமல்ல. மனசுக்கும் திருப்தி. புது தம்பதிகளுக்கு அவர்கள் புது குடும்பத்துக்கு ஏற்ற பொருள்களாக வாங்கிக் கொடுத்தால் அவர்கள் பெற்றேர்கள் சந்தோஷப்படுவார்கள். அவர்கள் கொடுத்து அந்தப் பொருள்களே வாங்காமல் இருக்கக் கூடும் அல்லவா?

ஒரு கல்யாணப்பிள்ளை டாக்டருக்குப் படித்துப் பட்டம் பெற்றிருந்தான். மாமனார் புது நர்ஸிங்ஹோமுக்குப் பணம் கொடுத்தார். நல்லதுதான், இதர உறவினர்களும், சிநேகிதர்களும், ஒரு டாக்டருக்கு ஆப்பரேஷனுக்குத் தேவையான கத்தி, கத்திரிக்கோல், இரத்த அழுத்தம் பார்க்கும் கருவி இப்படி அநேகவித வைத்திய உபகரணங்களைப் பரிசாக அளித்திருந்தார்கள், இன்னும் சிலர் இஞ்செக்ஷன் ஊசி, சில பொது மருந்துகள், பஞ்சுப் பொட்டலங்கள் இப்படியாக அளித்திருந்தார்கள். இவைகளை யெல்லாம் அவர்கள் காட்சிப் பொருள்களாகப் பந்தலில் வைத்து விட்டார்கள். கல்யாணப் பெண் கொஞ்சம் ஒல்லியாக இருந்தாள். அதைக் கண்ட என் தோழி ஒருத்தி “மாமனர் பணத்தையும் நோயாளிப் பெண்ணையும் மாப்பிள்ளைக்குக் கொடுத்து விட்டார். இனி அவர்களுக்குக் தேவையான மற்றப் பொருள்களை விவாகத்துக்கு வந்தவர்கள், கொடுத்து விட்டார்கள்” என்று சொல்லிச் சிரித்தாள். அவள் துடுக்காகச் சொன்னாலும், பொதுவாக, கத்தியும் கப்படாவும் திருமணப் பரிசாக அளிப்பது என்னவோ அவ்வளவு ரம்மியமாக இல்லை.

இந்தக் காலத்தில் சிலர் கல்யாணப் பத்திரிகையிலேயே “அன்பளிப்புகள் விலக்கப்பட்டிருக்கிறது” என்று கொட்டை எழுத்தில் அச்சிட்டு விடுகிறார்கள், காரணம் ஏதாவது அன்பளிப்பு கொடுக்க வேண்டும் என்பதற்காகச் சிலர் திருமணத்துக்கே வருவதில்லை. அப்படியே வந்தாலும் தான் அளிக்கும் திருமணப் பரிசு மற்றவர்கள் அளித்ததைவிடச் சிறப்பாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் திருமணத்தில் சந்தோஷமாகக் கலந்து கொள்வதில்லை. நம் வீட்டுக்குக் கல்யாணத்துக்குப் பரிசு வழங்கியவர்களுக்கு நாமும் ஏதாவது திருப்பிக் கொடுக்க வேண்டியிருக்குமே என்ற எண்ணம்.

ஆனாலும் பரிசுகள் கொடுக்கும்போது கொஞ்சம் முன்யோசனை செய்யத்தான் வேண்டும்.

ஒரு கல்யாண தம்பதிகளுக்கு ஒருவர் பட்டினத்தார் பாடலையும், ஞானவாசிஷ்டத்தையும் அனுப்பியிருந்தார். அவைகளைச் சஷ்டி அப்த பூர்த்தி விழாவுக்கு அனுப்பியிருந்தால் பொருத்தமாக இருக்கலாம்!

சிலர், “வட்டியில்லாக் கடன் தானே, நாம் இன்று கொடுத்தால் நாளைக்கு நம் வீட்டு விசேஷங்களுக்கு அவர்கள் கொடுத்து விட்டுப் போகிறார்கள்” என்று கணக்குப் போடுகிறார்கள். அப்படி நினைப்பதற்கில்லை. ஒரு இளம் தம்பதிகள் தங்கள் குழந்தை பிறந்த நாளில் சிநேகிதர்களை அழைத்துச் சிற்றுண்டி விருந்து வைக்கத் தீர்மானித்தார்கள். அவர்கள், “நமக்கு ஆகும் செலவு குறைவு: வருகிறவர்கள் கொடுக்கப் போகும் பரிசுத் தொகை அதிகம்” என்று கணக்குப் போட்டுக் கூட்டி, கழித்து மனசைத் திருப்தி செய்து கொண்டார்கள்.

சிற்றுண்டி விருந்துக்கு இவர்களுக்கு ஐம்பது ரூபாய் செலவு ஆயிற்று. ஆனால் வந்ததெல்லாம் பிஸ்கோத்துப் பொட்டலம், மிட்டாய்ப்பை, சிறு பொம்மைகள் இவைகள்தான், எனவே, அந்தக் கணக்கை ஒதுக்கிவிட்டு நம்மால் இயன்றதைச் சந்தர்ப்பத்துக்கு ஏற்பப் பரிசு கொடுப்பதிலுள்ள இன்பத்தை நாம் ஏன் விடவேண்டும்?

இப்படிக்கு,
பூமாதேவி

– தேவியின் கடிதம், கல்கியில் 1956-இல் தொடங்கிய தொடர்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *