அட்டைப் பெட்டி மர்மம்

0
கதையாசிரியர்:
கதை வகை: மொழிபெயர்ப்பு
கதைத்தொகுப்பு: கிரைம்
கதைப்பதிவு: October 3, 2020
பார்வையிட்டோர்: 32,130 
 
 

முன்னுரை

ஷெர்லாக் ஹோல்ம்ஸ் பற்றித் தெரியாதவர்களுக்கு ஒரு சிறிய அறிமுகம். ஆங்கில எழுத்தாளர் சர் ஆர்தர் கானன் டாயில் தனது கதைகளுக்காக உருவாக்கிய கற்பனைப் பாத்திரம். அவர் ஒரு தனியார் உளவாளியாகச் சித்தரிக்கப்பட்டுள்ளார். அவரது உடன் வேலை செய்பவர் வாட்சன். அவர் ஒரு மருத்துவர். இவர்கள் இருவரும் உண்மையான மனிதர்கள் என்று எண்ணுபவர்கள் கூட இருக்கிறார்கள். ஷெர்லாக் ஹோல்ம்ஸ் தன் கூர்மையான ஆராய்ச்சி அறிவால் ஒரு விஷயத்தை அக்கு வேறு ஆணி வேறாகப் பிரித்து மேய்ந்து விடுவார். சின்னச் சின்ன விஷயங்களையும் உற்று நோக்கும் பண்பு கொண்டவர்.

பத்தொன்பது மற்றும் இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற ஆங்கில எழுத்தாளர் சர் ஆர்தர் கானன் டாயில் என்று சொன்னால் மிகையாகாது. 1893 ஆம் ஆண்டு “The Strand Magazine” என்னும் ஆங்கில இதழில் வெளியான ஒரு சிறுகதை இது. ஒரு பெண்மணியின் வீட்டிற்குத் தபாலில் வந்த மனிதக் காதுகள் பற்றி ஹோல்ம்ஸ் விசாரிப்பது பற்றிய சிறு கதை.

அட்டைப் பெட்டி மர்மம்

எனது நண்பர் ஷெர்லாக் ஹோல்ம்ஸின் குறிப்பிடத்தக்க குணங்களை எடுத்துக்காட்டும்படியான சில வழக்குகளை நான் தேர்வு செய்து கொண்டிருக்கும்போது பரபரப்பு கொஞ்சம் குறைவாகவும் அதே சமயம் அவரது திறமைகளைச் சற்றும் குறைத்து மதிப்பிட்டு விடாதவாறும் பார்த்துக் கொள்ளவும் முடிந்தவரை நான் முயற்சி எடுத்துக் கொண்டேன். இருந்தாலும், எதிர்பாராதவிதமாக குற்றவியலில் பரப்பரப்பைப் பிரித்து எடுப்பது என்பது கிட்டத்தட்ட முற்றிலும் முடியாத காரியம். ஒரு ஆவணப்படுத்துபவர் சிக்கலான சூழலுக்குத் தள்ளப்பட்டு விடுவார். அவரது கூற்றுக்கு வலு சேர்க்கும் விதமான சில விவரங்களை நீக்கி விட்டு வழக்கைப் பற்றி ஒரு தவறான எண்ணத்தை விதைத்து விடலாம். இல்லையேல் விதி வசப்படி விட்டு விட்டு அக்கடா என்று இருக்கலாம். இப்படியான ஒரு சிறு அறிமுகத்தில் வித்தியாசமானது என்று நிரூபிக்கப்பட்ட விசித்திரமான மோசமான சம்பவங்களின் தொடர்ச்சிகள் கொண்ட எனது குறிப்புகளில் நான் கவனம் செலுத்த ஆரம்பிக்கிறேன்.

அனல் பறக்கும் ஆகஸ்ட் மாதத்தில் ஒரு நாள், பேக்கர் தெரு அடுப்பு போல் தகித்துக் கொண்டிருந்தது. தெருவின் அந்தப்புறம் உள்ள மஞ்சள் நிற செங்கல் வைத்துக் கட்டப்பட்ட வீட்டின் மேல் பட்டுத் தெறிக்கும் கதிரொளி கண்களைக் குருடாக்கி விடுவேன் என்று பயமுறுத்திக் கொண்டிருந்தது. பனிக்காலத்தில் பனி மூட்டத்தில் சோகமாகக் காட்சி அளித்த அதே வீடுதான் இது என்றால் நம்பவே முடியாது. எங்களது அறையின் சாளரத் திரை பாதி திறந்திருந்தது. காலைத் தபாலில் வந்த ஒரு கடிதத்தை மீண்டும் மீண்டும் வாசித்துக் கொண்டிருந்தார் ஷெர்லாக் மெத்தை ஆசனத்தில் குறுக்கி அமர்ந்து கொண்டு. என்னைப் பொறுத்தவரையில் நான் இந்தியாவில் பணி புரிந்திருந்ததால் எனக்குக் குளிரை விட வெய்யிலைத் தாக்குப் பிடிப்பதுதான் எளிதாய் இருந்தது. வெப்பமானி 90 காட்டும்போது கூட எனக்கு அவ்வளவு கடினமாக இருந்ததில்லை. ஆனால் காலையில் வந்த செய்தித்தாள் அவ்வளவு ஆர்வம் தருவதாக இருக்கவில்லை. பாராளுமன்றக் கூட்டத்தொடரும் முடிந்து விட்டிருந்தது. எல்லோரும் நகரை விட்டு வெளியேறி இருந்தனர். எனக்கோ அந்தப் புதுக் காட்டிற்குள் மரங்களுக்கு நடுவிலோ தென்கடலின் கரை ஓரத்தில் இருக்கும் கூழாங்கற்களின் மேல் நடந்து செல்லவும்தான் ஏக்கமாய் இருந்தது. ஆனால் வங்கிக் கணக்கில் பணம் எதுவும் இல்லாததால் எனது விடுமுறைப் பயணங்களைத் தள்ளிப் போட வேண்டிய சூழ் நிலையில் இருக்கிறேன். ஆனால் என் நண்பனுக்கோ கிராமங்களின் ரம்மியமான சூழலும் கடற்கரையும் கூட எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தி விடாது. ஐம்பது லட்சம் மக்களுக்கு மத்தியில் நின்று கொண்டு உணர்ச்சி வசப்பட்டுப் பொய் பேசுவதுதான் அவருக்குப் பிடிக்கும். அந்த உணர்ச்சிகளில் மக்களைக் கட்டிப் போட்டு விடுவார். இன்னும் விடை கண்டுபிடிக்காத வழக்குகளின் ஒவ்வொரு வதந்திக்கும் சந்தேகத்திற்கும் சளைக்காமல் பதில் சொல்லிக் கொண்டே இருப்பார். அவருடைய பல திறமைகளில் இயற்கை ரசனை என்பது இல்லவே இல்லை. நகரத்தின் கொலைகாரர்களைக் கண்டுபிடிக்காத நேரத்தில் அவரது ஒரே ஒரு மாற்றுச் சிந்தனை தனது சகோதரனின் கிராமத்து வீட்டிற்குச் செல்வது மட்டும்தான்.

உரையாடலில் நாட்டமில்லாமல் தன் வேலையில் ஹோல்ம்ஸ் மிக கவனமாய் இருந்ததால் அந்த மொக்கையான செய்திகள் கொண்ட செய்தித்தாளைத் தூக்கிக் கடாசி விட்டு எனது நாற்காலியில் சாய்ந்து அமர்ந்து அதீத சிந்தனையில் ஆழ்ந்து விட்டேன். திடீரென்று எனது நண்பர் அழைக்கும் சத்தம் என் சிந்தனையில் கேட்டது.

“நீங்கள் சொன்னது சரிதான், வாட்சன்” என்றார் அவர். “ஒரு வாக்குவாதத்தை முடித்து வைக்க மிகவும் அபத்தமான வழி போல் இருக்கிறது அது”

“அபத்தமாகவா இருக்கிறது” என்று வாய் பிளந்தேன் நான். எனது இதயத்தின் ஆழத்தில் இருக்கும் எண்ணங்களை எப்படி அவர் துல்லியமாக அளந்து விடுகிறார் என்று தோன்றியது. அதனால் நாற்காலியில் இருந்து நிமிர்ந்து உட்கார்ந்து வெறுமனே அவரையே ஆச்சர்யமாய்ப் பார்த்துக் கொண்டிருந்தேன்.

“இதென்ன ஹோல்ம்ஸ்?” என்று நான் கத்தினேன். “என் கற்பனைக்கே அப்பாற்பட்ட விஷயம் இது.”

எனது குழப்பதைக் கண்டு நன்றாக வாய் விட்டுச் சிரித்தார்.

“உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா?” என்றார் அவர். “கொஞ்ச காலத்துக்கு முன் போவின் ஓவியங்கள் என்ற புத்தகத்தில் இருந்து ஒரு பத்தியை நான் உங்களுக்கு வாசித்துக் காட்டியபோது மெய்ப்பொருள் காணத் துடிக்கும் ஒருவர் தனது நண்பரின் எண்ண ஓட்டத்தை அறிந்து சொல்லிய போது அது அந்த ஆசிரியரின் மேதாவித்தனம் என்று சொன்னீர்கள். நானும் எப்பொழுதும் இதையேதான் செய்து கொண்டிருக்கிறேன் என்று சுட்டிக் காட்டியபோதும் நீங்கள் நம்பவில்லை.”

“அப்படியெல்லாம் இல்லையே”

“அநேகமாய் உங்கள் நாக்கால் அல்ல, எனதருமை வாட்சன் அவர்களே, நிச்சயம் உங்கள் புருவங்களால். நீங்கள் உங்கள் செய்தித்தாளைத் தூக்கி வீசி விட்டுச் சிந்தனையில் ஆழ்ந்தபோது நான் மிகவும் மகிழ்ச்சியாக அதை உங்களுக்கு வாசித்துக் காட்டினேன்.

ஆனால் எனக்கு இன்னும் திருப்தியாகவே இல்லை. “நீங்கள் எனக்குப் படித்துக் காண்பித்ததில்” என்றேன் நான். “தான் பார்த்துக் கொண்டிருந்த மனிதனின் செயல்களை வைத்துத்தான் அந்தத் தர்க்கவாதி தனது முடிவை எடுத்தார். என் நினைவு சரியாக இருந்தால், ஒரு கற்களின் குவியலில் அவர் தடுமாறினார், விண்மீன்களைப் பார்த்தார், இப்படியே சென்றது. ஆனால் நான் எனது நாற்காலியில் அமைதியாக அமர்ந்திருந்தேன். அதனால் நான் உங்களுக்கு என்னவிதமான குறிப்புகள் கொடுத்திருக்க முடியும்?”

“நீங்களே உங்களைப் பழித்துக் கொள்கிறீர்கள். மனிதனுக்குக் கொடுக்கப்பட்ட அவயங்கள் எல்லாம் அவனது உணர்ச்சிகளை எடுத்துக் கூறத்தான். உங்களதும் உங்களுக்குச் சேவை செய்யும் சரியான சேவகர்கள்தான்.”

“நீங்கள் எனது எண்ண ஓட்டங்களை எனது அவயங்கள் மூலமாகக் கண்டு கொண்டேன் என்று சொல்ல வருகிறீர்களா?”

“உங்களது அவயங்கள், குறிப்பிடும்படியாகக் கண்கள். சொல்லப் போனால் உங்களுக்கே அதை நினைவு படுத்திப் பார்க்க இயலாது அந்தக் கனவு எப்பொழுது ஆரம்பம் ஆனது என்று.”

“இல்லை, என்னால் முடியாது”

“பின், நான் சொல்கிறேன். நீங்கள் செய்திதாளைத் தூக்கிப் போட்டபின், நான் உங்களைக் கவனிக்க ஆரம்பித்த தருணம் அதுதான். ஒரு அரை நிமிடம் மவுனமாய் இருந்தீர்கள். அதன் பின் உங்கள் கண்கள் புதிதாகச் சட்டமிடப்பட்ட தளபதி கார்டனின் சித்திரத்தில் லயித்தது. உங்களது முகத்தில் ஏற்பட்ட பாவங்களில் இருந்து ஒரு எண்ண ஓட்டம் ஆரம்பித்து விட்டது புரிந்தது. ஆனால் அது ரொம்ப தூரம் பயணப்படவில்லை. உங்கள் புத்தகத்தின் மேல் நின்று கொண்டிருக்கும் ஹென்றி வார்டு பீச்சருடைய சட்டமிடப்படாத சித்திரத்தின் மேல் பளிச்சிட்டது. அதன் பின் நீங்கள் சுவரைப் பார்த்தீர்கள். அதன் பொருளும் தெரிந்ததுதான். அந்தச் சித்திரமும் சட்டமிடப்பட்டிருந்தால் அந்த வெற்றிடத்தில் சரியாகக் கார்டனுடைய சித்திரத்தோடு பொருந்தி இருக்கும் என்று நினைத்தீர்கள்.”

“நீங்கள் என்னை வெகு அற்புதமாக தொடர்ந்திருக்கிறீர்கள்” என்று நான் ஆச்சர்யப்பட்டேன்.

“இதுவரைக்கும் தவறாக நான் சொல்லியிருக்க வாய்ப்பில்லை. இப்பொழுது உங்களது எண்ணங்கள் மறுபடியும் பீச்சரை நோக்கிச் சென்றது. நீங்கள் நிலை குத்திய பார்வையில் சுவரை நோக்கிப் பார்த்துக் கொண்டிருந்தீர்கள் அந்தக் கதாபாத்திரத்தின் ஒவ்வொரு அம்சங்களையும் அலசுவது போல். பின் உங்களது கண்கள் சுருக்கங்களில் இருந்து விடுபட்டன இருந்தும் தொடர்ச்சியாகப் பார்த்துக் கொண்டே இருந்தீர்கள். உங்களது முகமும் யோசனையில் ஆழ்ந்தது போலவே இருந்தது. பீச்சரின் வாழ்வில் நடந்த சம்பவங்களை எண்ணிப் பார்த்துக் கொண்டிருந்தீர்கள். எனக்கு நிச்சயம் தெரியும், வடக்கில் உள்நாட்டுக் கலவரம் ஏற்பட்டபோது அவர் பங்கெடுத்த பணி பற்றி யோசிக்காமல் இருந்திருக்க மாட்டீர்கள் என்று. ஏனெனில் உங்கள் முகத்தில் அப்படியொரு ஆத்மார்த்தமான கோபம், நம் மக்கள் அவ்வளவு கொந்தளிப்பான சூழலிலும் அவரை வரவேற்ற சம்பவம் கண்டு. அதை நீங்கள் வெகு வன்மையாக எடுத்துக் கொண்டிருக்கிறீர்கள். அதனால் பீச்சரை எண்ணும்போது அதை நினைக்காமல் இருந்திருக்க வாய்ப்பு இல்லை. ஒரு சில நொடிகள் உங்கள் முகம் அந்த சித்திரத்தை விட்டு நீங்கும்போது உங்கள் மனம் மீண்டும் உள்நாட்டுக் கலவரத்தை எண்ண ஆரம்பித்து விட்டது. அதன் பின் உங்களது உதடுகள் மடிந்ததைக் கவனித்தேன். உங்கள் கண்கள் ஒளி வீசின. உங்கள் கைகள் இறுகின. அப்பொழுது நீங்கள் கலவரத்தில் இருபுறமும் தங்கள் வீரத்தைப் பறைசாற்றிய தருணங்களைத்தான் நினைத்தீர்கள் என்று உறுதியாக என்னால் சொல்ல முடியும். அதன் பின்னும் உங்கள் முகம் சோகமானது. உங்கள் தலையை நீங்கள் ஆட்டினீர்கள். சோகங்கள் பயங்கரங்கள் வீணடிக்கப்பட்ட உயிர்கள் பற்றியும் நீங்கள் நினைக்க ஆரம்பித்தீர்கள். உங்களது கை தன்னை அறியாமலேயே உங்களது பழைய காயத்தைத் தடவிக் கொடுத்தது. அப்பொழுது உங்கள் இதழ்களில் புன்சிரிப்பு. உங்கள் மனதில் விதை விட்ட சர்வேதேசக் கேள்விகளைச் சமாளிக்கும் முறை பற்றிய உங்களது நம்ப முடியாத பக்கத்தை அது காட்டியது. அது அபத்தமானது என்று இந்த இடத்தில் நான் உங்களுடன் ஒத்துப் போகிறேன். ஆனால் எனது அனுமானங்கள் அனைத்தும் சரிதான் என்பது கண்டு எனக்கு மகிழ்ச்சியே”

“நிச்சயமாக!” என்றேன் நான். “நீங்கள் இவ்வளவு தூரம் விளக்கிய பின் நான் ஒன்றை ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும். நான் முன் போலவே இப்பொழுதும் அதே ஆச்சர்யத்துடனே இருக்கிறேன்”

“அது மிகவும் மேலோட்டமானது, எனதருமை வாட்சன் அவர்களே. நிச்சயம். உங்களை நான் இடைமறித்திருக்கக் கூடாது நீங்கள் அன்றொரு நாள் அவநம்பிக்கை கொண்டபோது. அனால் இப்பொழுது என் கைகளில் இந்த எண்ணங்கள் படிக்கும் சிறு கட்டுரையை விட இன்னொரு விடை காணக் கடினமான சிறு பிரச்சினை இருக்கிறது. செய்தித்தாளில் வந்த செய்தியை நீங்கள் படித்தீர்களா? குறுக்குத் தெரு, கிராய்டனில் வசிக்கும் செல்வி.கஷிங் அவர்களுக்குத் தபாலில் வந்த வினோதமான பொருட்கள் பற்றிய செய்தி பற்றியது”

“இல்லை, நான் எதையும் பார்க்கவில்லை”

“ஆஹ்! அப்படி என்றால் நீங்கள் அதற்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. அதை அப்படியே என்னிடம் தூக்கி எறியுங்கள். இதோ இங்கிருக்கிறது. பொருளாதார பக்கத்தில். நீங்கள்தான் சத்தம் போட்டு வாசிப்பதற்குச் சரியானவர்”

என்னிடமே மீண்டும் எறியப்பட்ட அந்தச் செய்தித்தாளை நான் கைகளில் எடுத்தேன். அவர் சொன்ன பத்தியைப் படித்தேன். அதன் தலைப்பு “ஒரு கோரமான பொட்டலம்” என்று இருந்தது.

“குறுக்குத் தெரு, கிராய்டனில் வசிக்கும் செல்வி.கஷிங் அவர்கள் வினோதமான பழி வாங்கல் முறையாக நடைமுறைக் காலித்தனத்திற்குப் பலியாகி இருக்கிறார் என்றே எண்ண வேண்டி இருக்கிறது, வேறு எதாவது வஞ்சமான காரணம் கண்டுபிடிக்கப்படும் வரை. நேற்று மத்தியானம் இரண்டு மணிக்கு, தாபால்காரர் பழுப்பு நிற காகிதத்தில் மடிக்கப்பட்ட ஒரு சிறு பொட்டலத்தை அவர்களுக்கு ஒப்படைத்தார். அதனுள்ளே ஒரு அட்டைப்பெட்டி இருந்தது. அது முழுவதும் கடல் உப்பினால் நிறைந்திருந்தது. அதைக் கொட்டிப் பார்க்கும்போது இரண்டு மனிதக் காதுகளைக் கண்டு செல்வி.கஷிங் அவர்கள் மிகுந்த அதிர்ச்சி அடைந்து விட்டார். அந்தக் காதுகளும் வெகு சமீபத்தில்தான் வெட்டப்பட்டது போல் இருந்தன. அந்தப் பெட்டி சிப்ப அஞ்சல் மூலம் முந்தைய நாள் காலை பெல்பாஸ்டில் இருந்து அனுப்பப்பட்டிருந்தது. அனுப்பியவர் முகவரி அதில் இல்லை. இந்த விவகாரம் மிகவும் மர்மமாக இருக்கிறது. ஏனெனில் கஷிங் அவர்களுக்கு ஐம்பது வயதாகிறது. கிட்டத்தட்ட தனிமையிலேயே வெகு காலமாக வசித்து வருகிறார்கள். அவர்களுக்கு அஞ்சல் வருவதே அரிது. ஆனால் சில வருடங்களுக்கு முன் பெங்கே என்னும் ஊரில் வசிக்கும் பொழுது தனது வீட்டை மருத்துவ மாணவர்களுக்கு வாடகைக்கு விட்டிருந்தார். அவர்கள் எப்பொழுதும் சத்தமிட்டுக் கொண்டும் ஒழுங்கற்ற நடவடிக்கைகளிலும் ஈடுபட்டதால் அவர்களைக் காலி செய்ய வேண்டிய நிலைமை ஆகி விட்டது. காவல் துறை அவர்கள் மேல் சந்தேகம் கொண்டுள்ளது. கஷிங் அவர்கள் மேல் உள்ள வெறுப்பினால் அவர்களைப் பயமுறுத்த அவர்கள் அறுவைச் சிகிச்சைப் பிரிவின் எச்சங்களை அனுப்பி இருக்க வேண்டும் என்று நினைக்கிறது. அந்தக் கருத்தை வலுப்படுத்தும் விதமாக செல்வி.கஷிங் சொல்வதும் அமைந்திருக்கிறது. அதில் ஒரு மாணவன் வட அயர்லாந்தில் இருந்து ஏறக்குறைய பெல்பாஸ்டில் இருந்து வந்திருக்கலாம் என்று நம்புகிறார்கள். இதற்கிடையில் மிகவும் தீவிரமான புலன் விசாரணையும் ஆரம்பமாகி விட்டது. நமது துறையில் மிகவும் திறமையானவர்களில் ஒருவரான திரு.லெஸ்ட்ராட் என்னும் அதிகாரி இந்த வழக்கில் பொறுப்பேற்று இருக்கிறார்.”

“செய்தித்தாள் புராணம் போதும் என்று நினைக்கிறேன்!” என்றார் ஹோல்ம்ஸ் நான் அதைப் படித்து முடிக்கும் நேரம். “இப்பொழுது திரு.லெஸ்ட்ராட் பற்றிப் பேசுவோம். அவர் இன்று காலை எனக்கு ஒரு செய்தி அனுப்பி இருக்கிறார். அதில் என்ன சொல்லி இருக்கிறார் என்றால். ‘இந்த வழக்கு மிகவும் நமக்கு அறிமுகமானதுதான். இதை நாம் எளிதில் முடித்து விடலாம். ஆனால் சில தடங்கல்கள் இருக்கின்றன. நாம் ஏற்கெனவே பெல்பாஸ்ட் தபால் அலுவலகத்திற்குச் செய்தி அனுப்பி விட்டோம். அன்றைய தேதிக்கு நிறைய சிப்பங்கள் வந்திருக்கின்றன. அதனால் இந்த ஒரு பொட்டலத்தை அவர்களால் அடையாளம் காண முடியவில்லை. அனுப்பியவரின் அடையாளத்தையும் கவனிக்கவில்லை. அந்த அட்டைப் பெட்டி கால் கிலோ எடை கொண்ட பொன்மெழுகுப் புகையிலையால் செய்யப்பட்டது. அதனால் எந்தவிதப் பயனும் இல்லை. மருத்துவ மாணவர்கள் மீதுள்ள சந்தேகம்தான் இன்னும் பொருத்தமானதாக உள்ளது. உங்களுக்கு நேரம் இருந்தால் சில மணி நேரம் இங்கு வந்து செலவிட முடியுமா. நான் நாள் முழுவதும் காவல் நிலையத்திலோ அல்லது வீட்டிலோதான் எப்பொழுதும் இருப்பேன்’ என்று எழுதப்பட்டு இருந்தது.”

“நீங்கள் என்ன சொல்கிறீர்கள், வாட்சன்? இந்தச் சுட்டெரிக்கும் வெய்யிலின் கொடுமையைத் தாண்டி நீங்கள் என்னுடன் கிராய்டன் வந்து உங்கள் ஆவணத்தில் சேர்த்துக் கொள்ள சந்தர்ப்பம் இருக்கும் இந்த வழக்கில் உதவி செய்ய இயலுமா?”
“நான் எதாவது செய்ய வேண்டும் என்றுதான் காத்துக் கொண்டிருக்கிறேன்”
“நன்று. வாடகை வண்டி ஏற்பாடு செய்து விடுங்கள். நான் இன்னும் சில நிமிடங்களில் தயாராகி விடுவேன் உடைகள் மாற்றி விட்டுச் சுருட்டை நிரப்பி விட்டு வந்து விடுகிறேன்.”

நாங்கள் புகை வண்டியில் ஏறி அமர்ந்த கொஞ்ச நேரத்தில் மழை பெய்யத் தொடங்கியது. கிராய்டனில் வெய்யிலின் தாக்கம் நகரத்தில் இருந்த அளவு இல்லை. ஹோல்ம்ஸ் பதில் தந்தி அனுப்பி இருந்தார். லெஸ்ட்ராடும் அதில் பழக்கப்பட்டவர் ஆதலால் அவர் முன்னே வந்து எங்களுக்காக புகை வண்டி நிலையத்தில் காத்துக் கொண்டிருந்தார். எடுப்பான உடை அணிவதிலும் மரநாய் போன்ற தோற்றத்திலும் எப்பொழுதும் போல் இருக்கிறார். ஒரு ஐந்து நிமிட நேர நடைப் பயணத்தில் நாங்கள் குறுக்குத் தெருவிற்குச் சென்று செல்வி.கஷிங் வீட்டை அடைந்து விட்டோம்.

அது மிகவும் நீண்ட இரண்டடுக்குச் செங்கல் மாடிகளால் நிறைந்த தெருவாக இருந்தது. நேர்த்தியாக அழகாக இருந்தது. வெள்ளை நிறக் கற்களால் ஆன படிக்கட்டுகள் ஒவ்வொரு வாசலையும் அலங்கரித்தன. அங்கே சில வீடுகளின் வாசலில் சமையல் ஆடை அணிந்த பெண்கள் பொறணி பேசிக் கொண்டிருந்தனர். பாதி தூரம் சென்ற பிறகு லெஸ்ட்ராட் ஒரு வீட்டை அடைந்து வாசல் கதவைத் தட்டினார். அந்த வீட்டின் கதவை ஒரு வேலைக்காரச் சிறுமி வந்து திறந்தாள். கஷிங் முன்னறையில் அமர்ந்து இருந்தார்கள். அங்கே நுழைய எங்களை அனுமதித்தார்கள். அவரது முகம் மிகவும் அமைதியாக இருந்தது. பெரிய மென்மையான கண்கள். நரைத்த முடி நெற்றியின் இருபுறமும் தொங்கிக் கொண்டிருந்தன. அவரது மடியில் வேலைப்பாடு நிறைந்த நாற்காலி உறை ஒன்றிருந்தது. அவரது அருகில் இருந்த இருக்கையில் உள்ள கூடையில் பல நிறம் கொண்ட பட்டுத் துணிகள் நிறைந்திருந்தன.

“அவைகள் கொல்லைப்புற வீட்டில் இருக்கின்றன. நினைத்தாலே பயமாய் இருக்கிறது.” என்றார் அவர் லெஸ்ட்ராட் உள்ளே செல்லும் போது. “நீங்கள் அதை அப்படியே உங்களுடன் எடுத்துச் சென்றால் மகிழ்ச்சியாக இருக்கும்”

“அப்படியே செய்கிறேன், செல்வி.கஷிங். எனது நண்பர் திரு.ஹோல்ம்ஸ் உங்கள் முன்னிலையில் அதைப் பார்க்க வேண்டும் என்று விரும்பியதால்தான் நான் இங்கேயே விட்டுச் சென்றேன்.”

“ஏன் நான் இருக்க வேண்டும், ஐயா?”

“அவருக்கு எதாவது கேள்விகள் வரலாம்”

“எனக்கு அதைப்பற்றி எதுவுமே தெரியாதபோது என்னிடம் கேட்பதற்கு என்ன இருக்கிறது?”

“நிச்சயம், செல்வி.கஷிங் அவர்களே” என்று அவரைச் சமாதானப் படுத்தும் முயற்சியில் இறங்கினார் ஹோல்ம்ஸ். “உங்களை இந்த வழக்கில் ஏற்கெனவே நிறையத் தொந்திரவு செய்திருப்பார்கள் என்பதில் எனக்கு எந்தவிதச் சந்தேகமும் இல்லை.”

“ஆமாம். நான் ஒரு அமைதியான பேர்வழி. எனது ஓய்வுக் காலத்தை நிம்மதியாகச் செலவிட்டுக் கொண்டிருக்கிறேன். எனது பெயர் செய்தித்தாள்களில் வருவது இதுதான் முதல் தடவை. காவல் துறை நுழைவதும் புதிது. இதெல்லாம் இங்கே வேண்டாம், திரு.லெஸ்ட்ராட். அதை நீங்கள் பார்க்க வேண்டும் என்றால் கொல்லைப்புற வீட்டுக்கு சென்று பாருங்கள்”

அது வீட்டின் பின்னால் அமைந்துள்ள குறுகலான தோட்டத்தின் நடுவில் அமைந்துள்ள ஒரு கொட்டகை. லெஸ்ட்ராட் உள்ளே நுழைந்து அந்த மஞ்சள் நிற அட்டைப்பெட்டியைக் கொண்டு வந்தார். பழுப்பு நிறக் காகிதம் மற்றும் ஒரு கயிறுடன் வந்தார். பாதையின் முடிவில் ஒரு பலகை போடப்பட்டிருந்தது. நாங்கள் அனைவரும் அதில் அமர்ந்து கொண்டோம் ஹோல்ம்ஸ் லெஸ்ட்ராட் கொடுத்த பொருட்கள் அனைத்தையும் ஒவ்வொன்றாக ஆராய்ந்து கொண்டிருக்கும் நேரத்தில்.

“இந்தக் கயிறுதான் மிகவும் ஆர்வமூட்டுவதாக இருக்கிறது” என்றார் வெளிச்சத்தில் பிடித்துக் கொண்டும் முகர்ந்து கொண்டும். “இதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள், லெஸ்ட்ராட்?”

“அது கருக்கப்பட்டிருக்கிறது”

“சரியாகச் சொன்னீர்கள். அது கருக்கப்பட்ட ஒரு கயிறின் துண்டு. நீங்கள் செல்வி.கஷிங் அவர்கள் அந்தப் பெட்டியைக் கத்திரி வைத்துத்தான் திறந்தார்கள் என்று உறுதியாகக் கூறினீர்கள் அல்லவா. இருபுறமும் அதற்கான அடையாளங்கள் இருக்கின்றன. இது மிகவும் முக்கியமானது.”

“எனக்குப் புரியவில்லை”

“இதன் முக்கியத்துவம் என்னவென்றால், இந்த முடிச்சு அப்படியே இருக்கிறது. அது மிகவும் விநோதமானதாக இருக்கிறது.”

“அது மிகவும் நேர்த்தியாக முடிச்சிடப் பட்டிருக்கிறது. அதை நான் ஏற்கெனவே குறிப்பெடுத்து விட்டேன்.” என்றார் லெஸ்ட்ராட் மிகவும் அமைதியாக.

“அப்போ இந்தக் கயிறைப் பற்றிச் சிலாகித்தது போதும்.” என்ற ஹோல்ம்ஸ் புன்னகையோடு “இப்பொழுது இந்தப் பெட்டியின் உறையைப் பார்ப்போம். வினோதமான காபியின் மணத்துடன் கூடிய பழுப்பு நிறக் காகிதம். என்ன? நீங்கள் கவனிக்கவில்லையா? எனக்குத் தெரிந்து அதில் சந்தேகப்பட வேண்டியதே இல்லை. முகவரி மிகவும் கோணல் மாணலாக எழுதப்பட்டிருக்கிறது. ‘செல்வி.கஷிங், குறுக்குத் தெரு, கிராய்டன்’ அகலமான முனை கொண்ட, ஜே-வாக இருக்கலாம், மட்டமான மையினால் எழுதப்பட்டிருக்கிறது. கிராய்டன் என்ற சொல் முதலில் ‘ஐ’ என்று எழுதப்பட்டு ‘ய்’ என்று திருத்தி எழுதப்பட்டிருக்கிறது. அதன் பின் அந்தச் சிப்பம் படிப்பறிவு குறைவாய் உள்ள கிராய்டன் பற்றித் தெரியாத ஒருவரால்-நிச்சயம் ஒரு ஆணின் கையெழுத்து என்பது தெளிவாகத் தெரிகிறது-கையாளப்பட்டிருக்கிறது. இதுவரை நன்றாகப் புரிகிறது. இந்தப் பெட்டி பொன்மெழுகுப் புகையிலையால் தயாரிக்கப்பட்ட கால் கிலோ எடையுள்ள மஞ்சள் நிற அட்டைப்பெட்டி. கீழ் இடது புற முனையில் இரு கைரேகை தவிர வேறெதுவும் குறிப்பிடும்படியாக இல்லை. விலங்குத் தோல்களைப் பதப்படுத்தவும் வேறு பல கடுமையான வணிக நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படும் கல் உப்பினால் இந்தப் பெட்டி நிரப்பட்டிருக்கிறது. அதற்குள்தான் இந்த அவயங்கள் வைக்கப்பட்டிருக்கின்றன”

பேசிக்கொண்டே அந்தக் காதுகளை அவர் வெளியில் எடுத்தார். ஒரு பலகையை அவரது முழங்கால்களுக்கு அருகில் போட்டு அவற்றை மிகவும் கூர்மையாகக் கவனிக்கத் தொடங்கினார். அந்த நேரத்தில் லெஸ்ட்ராடும் நானும் அவருக்கு இருபுறமும் குனிந்து கொண்டு கலவரமாக அந்தக் காதுகளை மாறி மாறிப் பார்த்துக் கொண்டிருந்தோம். ஆனால் ஹோல்ம்ஸ் மிகவும் ஆர்வமாக அதைப் பார்த்துக் கொண்டு யோசித்தவண்ணமே இருந்தார். இறுதியாக அவைகளைத் திரும்பவும் பெட்டியில் வைத்து விட்டு ஆழ்ந்த தியானத்தில் ஆழ்ந்து விட்டார்.

“நீங்கள் நிச்சயம் கவனித்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்” என்று ஒரு வழியாகத் திருவாய் மலர்ந்தார். “அந்தக் காதுகள் ஒரே ஜோடி அல்ல என்று”

“ஆம். நான் கவனித்தேன். அறுவைச் சிகிச்சை அறையில் இருந்த மருத்துவ மாணவர்களின் நையாண்டியாக இது இருந்திருந்தால் அவர்களால் எளிதில் இரு வேறு காதுகளை அனுப்பி இருக்க முடியுமே.”

“மிகச் சரியாகச் சொன்னீர்கள். ஆனால் இது நையாண்டி வேலை இல்லை”

“உறுதியாகச் சொல்கிறீர்களா?”

“அனுமானங்கள் அதற்கு எதிர்மறையாகவே உள்ளன. அறுவைச் சிகிச்சை அறைகளில் உள்ள உடம்பிற்குள் பதனத் திரவங்கள் செலுத்தப்படும். இந்தக் காதுகளில் அப்படியான அறிகுறிகள் ஏதுமில்லை. அவைகள் மிகவும் புதிதானது போலவே இருக்கின்றன. அவைகள் ஒரு மொன்னையான ஆயுதத்தால் வெட்டப்பட்டிருக்கின்றன. மருத்துவ மாணவர்கள் செய்திருந்தால் அப்படி நடந்திருக்க வாய்ப்பில்லை. கார்போலிக் அல்லது சுத்திகரிக்கப்பட்ட சாராயம் இவை போன்ற பதப்படுத்தும் பொருட்களின் பயன்பாடுகள்தான் மருத்துவ மாணவர்களின் அடையாளமாக இருக்க முடியும். நிச்சயம் கல் உப்புகள் அல்ல. நான் மீண்டும் இங்கு வலியுறுத்துகிறேன். இங்கு எதுவும் நையாண்டி வேலை நடக்கவில்லை. ஆனால் நாம் ஒரு தீவிரமான குற்றத்தைப் புலனாய்வு செய்து கொண்டிருக்கிறோம்.”

எனது நண்பர் சொல்லச் சொல்ல என்னுள் ஒரு இனம் புரியாத அச்சம் படரத் தொடங்கியது. சூழ்நிலையின் நிதர்சனமான கனம் அவரது உடம்பை இறுக்கியது. இந்தக் கொடூரமான முன்னுரை ஏதோ ஒரு விவரிக்க இயலாத திகிலை பின் புலத்தில் மறைத்து வைத்திருப்பது போல் தோன்றியது. ஆனால் லெஸ்ட்ராட் அரை நம்பிக்கையுடன் தலை அசைத்தார்.

“நையாண்டிக் கருத்திற்கு எதிர்ப்புகளும் இருக்கின்றன. அதில் சந்தேகமில்லை.” என்றார் அவர். “ஆனால் மற்ற கருத்துக்களுக்கு எதிராக இன்னும் வலிமையான காரணங்கள் இருக்கின்றன. நமக்குத் தெரியும், இந்தப் பெண் பெங்கேவிலும் இங்கேயும் கடந்த இருபது ஆண்டுகளாக மிகவும் அமைதியான மரியாதையான வாழ்க்கை வாழ்ந்திருக்கிறார். இந்தக் காலங்களில் ஒரு நாள் கூட அவர்கள் வீட்டை விட்டு வெளியே சென்றது கிடையாது. அப்படி இருக்கையில் என்ன காரணத்துக்காக ஒரு குற்றவாளி தனது குற்றச் செயலின் சாட்சியங்களை இந்தப் பெண்ணுக்கு அனுப்ப வேண்டும். ஒருவேளை அந்தப் பெண் ஒரு மிகப் பெரும் நடிகையாக இல்லாமல் இருந்தால் நம்மைப் போலவே அவர்களுக்கும் எதுவும் தெரிந்திருக்க வாய்ப்பே இல்லை.”

“அந்தப் பிரச்சினையைத்தான் நாம் தீர்க்க வேண்டும்.” என்று ஹோல்ம்ஸ் பதில் அளித்தார். “என்னைப் பொறுத்தவரை நான் அனுமானித்தது சரி என்ற நோக்கிலேயே நான் பயணிக்கப் போகிறேன், இரட்டைக் கொலை நடந்திருக்கிறது என்று. ஒரு காது ஒரு சிறிய உருவம் கொண்ட அழகான காது குத்திய பெண்ணினுடையது. இன்னொன்று ஒரு ஆணினுடையது. வெய்யிலால் கருத்த நிறம் மங்கிய அதுவும் காது குத்தப்பட்டது. இந்த இருவரும் அநேகமாக இறந்திருக்க வேண்டும். இல்லையேல் அவர்களைப் பற்றிய கதையை நாம் இந்நேரம் கேட்டிருப்போம். இன்று வெள்ளிக்கிழமை. இந்தப் பொட்டலம் வியாழன் காலை அனுப்பப்பட்டது. இந்த பயங்கரம் புதன் அல்லது செவ்வாயன்று அல்லது அதற்கு முன்பாக நடந்திருக்க வேண்டும். அந்த இருவரும் கொலை செய்யப்பட்டிருந்தால் கொலைகாரனைத் தவிர வேறு யார் இந்தப் பொருட்களை செல்வி.கஷிங்கிற்கு அனுப்பி இருக்க முடியும். அதனால் இதை அனுப்பியவன்தான் நாம் தேடும் ஆள் என்று எண்ணிக் கொள்ளலாம். ஆனால் செல்வி.கஷிங்கிற்கு அனுப்ப அவனுக்கு ஏதோ ஒரு வலிமையான காரணம் இருந்திருக்க வேண்டும். அது என்னவாக இருக்கும்? காரியத்தை முடித்தாயிற்று என்று சொல்வதற்காக இருக்கலாம். இல்லையேல் ஒருவேளை அவர்களை நோகடிப்பதற்காகவும் இருக்கலாம். அப்படி இருந்தால் அவர்களுக்கு அவன் யாரென்று நிச்சயம் தெரிந்திருக்கும். அவர்களுக்குத் தெரியுமா? சந்தேகம்தான். அப்படித் தெரிந்திருந்தால் அவர்கள் ஏன் காவல்துறையை அணுக வேண்டும்? அவர்களாகவே காதுகளைப் புதைத்திருக்கலாம். வேறு யாரும் புத்திசாலியாக இருந்திருக்க முடியாது. குற்றவாளியைக் காப்பாற்ற வேண்டுமானால் நிச்சயம் அப்படித்தான் அவர்கள் செய்திருக்க வேண்டும். அப்படிக் காப்பாற்ற விரும்பவில்லை என்றால் குறைந்தபட்சம் அவனது பெயரையாவது கொடுத்திருக்க வேண்டும். இங்கே ஒரு சிறு முடிச்சு உள்ளது. அதை அவிழ்க்க வேண்டும்” அவர் பெரிதாக வேகமான குரலெடுத்துப் பேசிக் கொண்டிருந்தார் தோட்டத்தின் வேலிக்கு மேல் வெறுமனே பார்த்தபடியே. திடீரென்று வேகமாக எழுந்து வீட்டை நோக்கி நடந்தார்.

“எனக்கு செல்வி.கஷிங்கிடம் கேட்பதற்குச் சில கேள்விகள் இருக்கின்றன” என்றார் அவர்.

“அப்படி என்றால் நான் உங்களை இங்கே விட்டுச் செல்ல வேண்டும்.” என்றார் லெஸ்ட்ராட். “ஏனெனில் எனக்கு வேறு ஒரு சிறு வேலை இருக்கிறது. செல்வி.கஷிங்கிடம் கேட்பதற்கு எனக்கு எதுவும் இல்லை என்றே நினைக்கிறேன். நீங்கள் என்னைக் காவல் நிலையத்தில் சந்திக்கலாம்”

“நாங்கள் அப்படியே புகை வண்டி நிலையத்திற்குச் சென்று விடுகிறோம்.” என்று பதில் அளித்தார் ஹோல்ம்ஸ். சில நிமிடங்களில் நாங்கள் இருவரும் அந்த வீட்டின் முன்னறையில் இருந்தோம். எதற்கும் அசைந்து கொடுக்காத அந்தப் பெண்மணி இன்னும் அந்த நாற்காலி உறை செய்வதில் மும்முரமாக இருந்தார். எங்களைப் பார்த்ததும் அதை மடியில் வைத்து விட்டு வெளிப்படையான தேடும் நீல நிறக் கண்களை உருட்டிப் பார்த்தார்.

“எனக்கு இப்பொழுது தெளிவாகி விட்டது” என்றார் அந்தப் பெண். “இது நிச்சயம் தவறுதலாக எனக்கு அனுப்பப்பட்டிருக்கிறது. இதையே நான் பலமுறை அந்த ஸ்காட்லாந்து யார்டில் இருந்து வந்த ஆளிடம் சொல்லி இருக்கிறேன். ஆனால் அவர் வெறுமனே சிரிக்கிறார். எனக்குத் தெரிந்தவரையில் இந்த உலகில் யாரும் எனக்கு எதிரி இல்லை. பின் யார் இப்படி ஒரு தந்திரத்தை எனக்குச் செய்வார்கள்?”

“எனக்கும் அப்படிதான் தோன்றுகிறது, செல்வி.கஷிங்” என்றார் ஹோல்ம்ஸ் அவருக்கு முன் ஒரு ஆசனத்தில் அமர்ந்தபடியே. “நான் என்ன நினைக்கிறேன் என்றால், இது இப்படி இருக்க சாத்தியக் கூறுகள்–” என்று சொல்லி ஒரு இடை வெளி விட்டார். எனக்கு மிகவும் ஆச்சர்யமாக இருந்தது, அவர் அந்தப் பெண்ணை எடை போடும்படியான ஒரே நோக்கத்துடன் பார்த்துக் கொண்டிருப்பதைக் கண்டு. அவரது ஆர்வமான முகத்தைப் பார்க்கும் பொழுது அங்கே ஆச்சர்யமும் திருப்தியும் ஒருசேரக் கண்டேன். அந்தப் பெண் சுற்றிப் பார்த்து விட்டு அவர் அமைதியான காரணத்தைக் கண்டவுடன் அவர்களும் அமைதியாகி விட்டார். நான் மிகவும் அழுத்தமாகப் பார்த்தேன் அந்தப் பெண்ணின் தட்டையான நரைத்த முடி நேர்த்தியான தொப்பி முலாம் பூசிய காது வளையம் அமைதியான முகம் அனைத்தும். எனக்கு அவர் அதிசயித்தது போல் எதுவும் தோன்றவில்லை.

“ஒன்றிரண்டு கேள்விகள் எனக்கு இருக்கின்றன–”

“ஓஹ், கேள்விகள் என்னை மிகவும் களைப்படைய வைக்கின்றன!” என்று பொறுமை இல்லாமல் கத்தினாள் அந்தப் பெண்.

“உங்களுக்கு இரண்டு சகோதரிகள் இருக்கிறார்கள், என்று நினைக்கிறேன்”

“உங்களுக்கு எப்படி இதெல்லாம் தெரியும்?”

“நான் உள்ளே நுழைந்தவுடன் மாடத்தில் உள்ள சித்திரத்தில் மூன்று பெண்களின் புகைப்படத்தைக் கவனித்தேன். அதில் ஒருவர் சந்தேகமேயில்லாமல் நீங்கள்தான். மற்ற இருவரும் உங்கள் முக சாயலில் இருப்பதால் வேறு எந்த உறவு முறையும் இருக்க வாய்ப்பில்லை.”

“ஆம், நீங்கள் சொல்வது சரி. அவர்கள் எனது சகோதரிகள்தான், மேரி மற்றும் சாரா”

“இங்கே எனது கைக்கு அருகில் உள்ள லிவெர்பூலில் எடுக்கப்பட்ட படத்தில் உங்களது தங்கை இருக்கிறார். அவருக்கு அருகில் ஒரு இளைஞன் இருக்கிறான். அவனது சீருடையைப் பார்த்தால் அவன் விமானத்தில் மேற்பார்வையாளராக இருக்க வேண்டும். அவளுக்கு அப்பொழுது திருமணம் ஆகி இருக்கவில்லை என்று நினைக்கிறேன்”

“நீங்கள் மிகவும் வேகமாக கவனிக்கிறீர்கள்”

“அதுதான் என் வேலை”

“பின், நீங்கள் சொல்வது மிகவும் சரி. ஆனால் சில நாட்கள் கழித்து திரு.ப்ரவுனரை அவள் திருமணம் செய்து கொண்டாள். அந்த புகைப்படம் எடுக்கும்போது அவர் தென் அமெரிக்க விமானத்தில் பணி புரிந்து கொண்டிருந்தார். ஆனால் அவருக்கு அவளை நீண்ட நாட்கள் விட்டுச் செல்ல மனம் இல்லை. அதனால் அவர் லிவர்பூல் மற்றும் லண்டன் படகுகளில் ஏறிக் கொண்டார்.”

“ஆஹ், கான்கொரர் என்று நினைக்கிறேன்”

“இல்லை, கடைசியாக நான் கேள்விப்பட்டபோது அது மே தினம். அதன் பின் ஒரு முறை ஜிம் என்னை வந்து பார்த்தார். அது அவரது உறுதி மொழியை உடைப்பதற்கு முன் நடந்தது. அதன் பின் எப்பொழுதும் அவர் கரைக்குத் திரும்பியபின் மட்டுமே குடிப்பார். ஆனாலும் சிறிதே குடித்தாலும் முற்றிலும் பைத்தியம் பிடித்து விடும். ஆம், அவர் குடிக்கும் ஒவ்வொரு தினமும் ஒரு மோசமான நிகழ்வுதான். முதலில் அவர் என்னை விட்டு விட்டார். அதன் பின் சாராவிடம் சண்டை போட்டார். மேரியும் அவருக்கு எழுதுவதை விட்டுவிட்டதால் அவர்களுக்குள் என்ன நடக்கிறது என்பதே தெரியாது.

மனதிற்குள் பூட்டி வைத்திருந்த சோகங்களை எல்லாம் கொட்டி விட்டார் என்பது போலவே தோன்றியது. தனியாக இருக்கும் அனைத்து மனிதர்கள் போலவே செல்வி.கஷிங்கும் முதலில் கூச்ச சுபாவத்துடனே இருந்தார். ஆனால் இப்பொழுது கட்டுப்படுத்த முடியாத அளவு பேச ஆரம்பித்து விட்டார். மேற்பார்வையாளராக இருக்கும் அவரது மச்சினர் பற்றி நிறைய தகவல்கள் சொன்னார். அதன் பின் பேச்சு அவரது வீட்டில் குடி இருந்த பழைய வாடகைக்காரர்கள், மருத்துவ மாணவர்கள், அவர்களது நீண்ட நாள் வாடகை பாக்கிகள், அவர்களது மருத்துவமனைகள் பெயர்கள் பற்றி நீண்டது. ஹோல்ம்ஸ் அனைத்தையும் வெகு ஆர்வமாக கவனித்தார் அவ்வப்போது கேள்விகள் கேட்டுக்கொண்டே.

“உங்களது இரண்டாவது தங்கை, சாரா.” என்றார் ஹோல்ம்ஸ். “நீங்கள் இருவருமே திருமணம் ஆகாதவர்கள் என்பதால் வீடும் சரியாக இல்லை என்று நினைக்கிறேன்”

“ஆஹ்! சாராவின் கோபம் பற்றி உங்களுக்குத் தெரியாது. இல்லை என்றால் இப்படி எல்லாம் கேட்க மாட்டீர்கள். நானும் கிராய்டன் வருமுன் முயற்சி செய்தேன். இரண்டு மாதங்கள் தொடர்ந்து ஒருவழியாகச் சமாளித்தேன். இறுதியில் பிரிய வேண்டியதாகி விட்டது. எனது தங்கையைப் பற்றி நானே தவறாகச் சொல்ல விரும்பவில்லை. ஆனால் அவள் எப்பொழுதும் எல்லாவற்றிலும் தலையிடக் கூடிய ஆள். மேலும் அவளை யாரும் எளிதில் திருப்திப் படுத்திவிட முடியாது. அதுதான் சாரா.”

“உங்களது லிவர்பூல் சொந்தங்களிடம் அவள் சண்டை இட்டாள் என்று சொல்லி இருந்தீர்கள்.”

“ஆம், அவர்கள் மிகவும் பாசமாகத்தான் இருந்தார்கள் ஒரு காலத்தில். அவர்களுடன் இருக்க வேண்டும் என்பதற்காகவே அவர்கள் அருகில் வீடு எடுத்துத் தங்கினாள். ஆனால் இப்பொழுது ஜிம் பிரவுனர் மேல் காட்டுக் கோபத்தில் இருக்கிறாள். இங்கு இருந்த ஆறு மாதங்களும் அவரது குடி பற்றிய பேச்சுகளையே அதிகம் பேசிக் கொண்டிருந்தாள். அவள் அவரது வாழ்க்கையில் தலையிட்டதால் தனது புத்தியைக் காண்பித்து விட்டிருப்பார். அப்படித்தான் பிரச்சினை ஆரம்பித்து இருக்கும்.”

“நன்றி. செல்வி.கஷிங்.” என்றபடியே எழுந்தார். குனிந்து வணக்கம் தெரிவித்தார். “உங்களது தங்கை சாரா புதுத் தெரு, வில்லிங்டன் என்னும் முகவரியில் இருக்கிறார் என்று நீங்கள் சொன்னீர்கள் என்று நினைக்கிறேன். உங்களுக்குச் சம்பந்தமில்லாத ஒரு வழக்கில் இவ்வளவு தொந்தரவு கொடுத்ததற்கு நான் மிகவும் வருந்துகிறேன். நீங்கள் சொன்னது போல் உங்களுக்கு இதில் எந்தவிதச் சம்பந்தமும் இல்லை.”

நாங்கள் வெளியே வந்தவுடன் ஒரு வாடகை வண்டி எங்களைக் கடந்து சென்றது. ஹோல்ம்ஸ் அதை அழைத்தார்.

“வில்லிங்டன் எவ்வளவு தூரம்?” என்று கேட்டார்.

“ஒரு மைல்தான் இருக்கும்”

“மிக்க நன்றி. வாட்சன், ஏறிக் கொள்ளுங்கள். இரும்பு செந்நிறமாக இருக்கும்போதே அடிக்க வேண்டும். அவ்வளவு எளிதாக இந்த வழக்கு இருக்க, ஓரிரண்டு விஷயங்கள் மிகவும் சுவாரசியமாக இருக்கின்றன. போகும் வழியில் எதாவது ஒரு தந்தி அலுவலகத்தில் நில்லுங்கள், ஓட்டுனரே.”

ஹோல்ம்ஸ் ஒரு சிறிய தந்தி அனுப்பினார். அதன் பின் பெரும்பாலும் வண்டியில் சாய்ந்து அமர்ந்து கொண்டார் தொப்பியை மூக்கு வரை சாய்த்து வெய்யில் முகத்தில் படாதவாறு. எங்களது வண்டி ஓட்டுநர் இப்பொழுது நாங்கள் கண்டது போல் இல்லாமல் ஒரு புதுவிதமான வீட்டின் முன் நிறுத்தினார். எனது நண்பர் அவரைக் காத்திருக்குமாறு சொன்னார். அவரது கைகள் கதவில் இருந்தன. கதவு திறந்தவுடன் ஒரு இளைஞன் நன்றாக பளபளக்கும் தொப்பி அணிந்து வாசலில் நின்றிருந்தான்.

“செல்வி.கஷிங் வீட்டில் இருக்கிறார்களா?” என்று கேட்டார்.

“செல்வி.சாரா கஷிங் மிகவும் உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறார்.” என்றான் அவன். “மூளையில் மிகுந்த பாதிப்பு உண்டானதால் நேற்றில் இருந்து துன்பப்படுகிறார். அவரது மருத்துவ ஆலோசகராக இருக்கும் நான் யாரையும் உள்ளே அனுமதிக்க இயலாது. இன்னும் பத்து நாட்கள் கழித்து மீண்டும் வந்து பாருங்கள்” என்று சொல்லி விட்டு அவனது கையுறைகளை அணிந்து கொண்டு கதவைப் பூட்டித் தெருவில் இறங்கி நடக்க ஆரம்பித்து விட்டான்.

“நம்மால் முடியவில்லை என்றால், நிச்சயம் முடியாதுதான்” என்று ஹோல்ம்ஸ் மகிழ்ச்சியாகச் சொன்னார்.

“அவர்கள் இயலாமல் இருந்திருக்கலாம், இல்லையேல் இவ்வளவு தூரம் சொல்லி இருக்க முடியாது”

“அவர்கள் என்னிடம் எதுவும் சொல்ல வேண்டும் என்று நான் விரும்பவில்லை. நான் அவர்களைக் கவனிக்கவே விரும்புகிறேன். இருந்தாலும் எனக்குத் தேவையான எல்லாம் கிடைத்து விட்டது. ஒரு நல்ல விடுதியாகப் பார்த்து நிறுத்துங்கள், ஓட்டுநர். அங்கே மதிய உணவு முடித்து விட்டு நமது நண்பர் திரு.லெஸ்ட்ராடைக் காவல் நிலையத்தில் சந்திக்க வேண்டும்”

நாங்கள் அருமையான சாப்பாடு சாப்பிட்டோம். அப்பொழுது ஹோல்ம்ஸ் வயலின் தவிர்த்து வேறெதுவும் பேசவில்லை. மிகுந்த உற்சாகத்தோடு குறைந்த பட்சம் 500 கினியாக்கள் மதிப்புள்ள ஸ்ட்ராடிவாரியஸ் வயலினைத் தான் ஐம்பத்தைந்து ஷில்லிங் கொடுத்து டாட்டன்ஹாம் நீதிமன்றச் சாலையில் உள்ள யூத ஏலக்கடையில் வாங்கியது பற்றி விலாவாரியாக விவரிக்க ஆரம்பித்தார். அங்கிருந்து பகனினி பற்றிப் பேச்சு சென்றது. க்ளரெட் என்னும் மதுவினைக் குடித்தபடி அந்த மாமனிதன் சொன்ன ஒவ்வொரு துணுக்குகள் பற்றியும் அடுக்கிக் கொண்டே இருந்தார். மத்தியான வேளை வெய்யிலின் தாக்கம் குறைந்து இதமாக இருந்தது நாங்கள் காவல் நிலையம் சென்று சேரும் நேரம். லெஸ்ட்ராட் எங்களுக்காக வாசலிலேயே காத்திருந்தார்.
“உங்களுக்கு ஒரு தந்தி, திரு.ஹோல்ம்ஸ்” என்றார் அவர்.

“ஹா! அதுதான் நமது பதில்.” அதைக் கிழித்து அதில் உள்ள வாசகங்களைப் படித்து முடித்து விட்டுக் கசக்கித் தன் சட்டையில் வைத்துக் கொண்டார். “அது இருக்கட்டும்” என்றார் அவர்.

“நீங்கள் எதுவும் கண்டு பிடித்தீர்களா?”

“நான் எல்லாவற்றையும் கண்டு பிடித்து விட்டேன்”

“என்ன?” லெஸ்ட்ராட் மிகவும் ஆச்சர்யத்தோடு அவரைப் பார்த்தார். “நீங்கள் நக்கல் பண்ணுகிறீர்கள்”

“இதை விட நான் என் வாழ்வில் தீவிரமாக இருந்ததில்லை. ஒரு மிக மோசமான குற்றம் நடத்தப்பட்டிருக்கிறது. அதன் எல்லா விவரங்களும் எனக்குப் புரிந்து விட்டது.”

“அப்போ, அதைச் செய்த குற்றவாளி”

ஹோல்ம்ஸ் எதோ ஒன்றை ஒரு சிறு காகிதத்தில் எழுதி அவரிடம் எறிந்தார்.

“அதுதான் அவன் பெயர்.” என்றார் அவர். “நாளை இரவுக்கு முன் அவரைக் கைது செய்யவும் முடியாது. இந்த வழக்கு சம்பந்தமாக என் பெயரை எங்கேயும் தெரிவிக்க வேண்டாம் என்று நான் கேட்டுக் கொள்கிறேன். எதாவது கொஞ்சமாவது சிரமம் இல்லாத வழக்கில் என் பெயர் வருவது எனக்குப் பிடிக்கவில்லை. வாருங்கள், வாட்சன்.” நாங்கள் இருவரும் வெளியே சென்று விட்டோம். லெஸ்ட்ராட் முகமலர்ச்சியோடு அந்தக் காகிதத்தையே பார்த்துக் கொண்டிருந்தார்.

“இந்த வழக்கு” என்று சொல்ல ஆரம்பித்தார் ஹோல்ம்ஸ் பேக்கர் தெருவில் உள்ள எங்கள் வீட்டிற்குச் சென்று பல சுருட்டுகளுக்கு நடுவில். “‘சிவப்பு நிறத்தில் ஓர் ஆய்வு’, ‘நால்வர் குறியீடு’ என்ற பெயர்களில் நீங்கள் ஆவணப்படுத்தி இருந்த புலனாய்வுகளில் ஒன்றில் விளைவுகளில் இருந்து காரணத்திற்குப் பின்னோக்கிச் செல்ல வேண்டி இருந்தது. இப்பொழுது தேவைப்படும் விவரங்களைக் கேட்டு நான் லெஸ்ட்ராடிற்கு எழுதி இருக்கிறேன். அந்த விவரங்கள் அவருக்கு அந்த மனிதன் கிடைத்த பின்தான் தெரியும். அதை அவர் நிச்சயம் செய்வார் என்று நம்பலாம். ஒரு காளைநாயைப் போல் அவர் மிகவும் உறுதியோடு இருப்பார் அவர் தான் செய்ய வேண்டிய காரியம் என்னவென்று புரிந்தவுடன். அந்தச் சுபாவம்தான் ஸ்காட்லாந்து யார்டில் இவ்வளவு உயரத்தில் கொண்டு வந்து விட்டிருக்கிறது.”

“ஆக உங்கள் வழக்கு இன்னும் முடியவில்லை?” என்று நான் கேட்டேன்.

“முக்கியமான விஷயங்களைப் பொறுத்தவரையில் முடிந்து விட்டது. கலகத்திற்குப் பின்னால் இருக்கும் ஆள் யாரென்று தெரிந்து விட்டது. பாதிக்கப்பட்ட ஒருவர் யாரென்றுதான் தெரியவில்லை. அதேவேளை நீங்களும் அனுமானம் செய்திருப்பீர்கள்தானே”

“லிவெர்பூல் படகில் வேலை செய்யும் ஜிம் பிரவுனர்தான் நீங்கள் சந்தேகப்படும் ஆள் என்று நான் நினைக்கிறேன்”

“ஓஹ்! அது சந்தேகத்திற்கு அப்பாற்பட்டது.”

“ஆனால் என் கண்களுக்குத் துல்லியமாக எதுவும் தெரியவில்லை”

“அதற்கும் மாறாக என் மனதிற்கு இதை விட துல்லியமாக இருந்திருக்காது. முக்கியமான சில விஷயங்களை நான் மீண்டும் சொல்கிறேன். இந்த வழக்கை ஒன்றுமே தெரியாமல்தான் நாம் அணுகினோம். அது எப்பொழுதுமே நமக்கு அனுகூலம்தான். நாம் அனைத்தையும் கவனிக்கவே சென்றோம். அதில் இருந்து நமது முடிவுகளை எடுத்தோம். நாம் முதலில் என்ன பார்த்தோம்? மிகவும் அமைதியான மதிக்கத்தக்க ஒரு பெண்மணி. அவருக்கு எந்தவிதமான மர்மங்களும் தெரிந்திருக்கவில்லை. அதன் பின் ஒரு புகைப்படத்தில் இருந்து அவரது இரண்டு சகோதரிகள் பற்றித் தெரிந்தது. அதில் இருந்து உடனே எனக்குப் புரிந்து விட்டது. அவர்கள் இருவரில் ஒருவருக்குத்தான் அந்தப் பெட்டி என்பது. அதை மெதுவாக நமது ஓய்வு நேரத்தில் ஆராய்ந்து கொள்ளலாம் அல்லது அது பொய்யாகவும் போகலாம். அதன் பின் தோட்டத்திற்குச் சென்றோம். அங்கு மஞ்சள் நிற பெட்டியில் இருந்த ஒரே வித பொருட்களை நாம் பார்த்தோம்.

“அந்தக் கயிறின் தரம் கப்பல்களில் பயன்படுத்தப்படும் தரத்தில் இருந்தது. நமது புலனாய்வில் சாட்டையடி போல் கடல் பற்றிய ஒரு குறிப்பு சட்டென்று வந்தது. அந்த முடிச்சு கப்பல்களில் பயன்படுத்துவது போல் இருந்தது, துறைமுகத்தில் அந்தத் தபால் அனுப்பப்பட்டிருக்கிறது, ஆணின் காது குத்தப்பட்டிருந்தது, அது கடலில் பயணப்படும் மனிதர்களிடம் பிரபலமானது, அதனால் இதில் சம்பந்தப்பட்ட அனைவரும் கடல் பயணம் செய்பவர்கள் என்று புரிந்து விட்டது.

“அந்தப் பொட்டலத்தில் இருந்த முகவரி யாருடையது என்று ஆய்வு செய்யும்போது அது செல்வி.எஸ்.கஷிங் என்று இருந்தது. அதில் மூத்த சகோதரியும் செல்வி.கஷிங்தான். அவர்களது முதல் பெயரின் முதல் எழுத்தும் எஸ்-தான். இருந்தாலும் அது இன்னொரு சகோதரியினுடையதாகவும் இருக்கலாம். அந்த வகையில் இந்த வழக்கை நாம் முற்றிலும் புதிய கோணத்தில் இருந்து ஆரம்பிக்க வேண்டி இருந்தது. அதனால் அவரது வீட்டிற்கு மீண்டும் சென்றேன். தவறுதலாக அவர்களை விசாரிக்க வந்து விட்டோம் என்று நான் அவர்களுக்கு வாக்குறுதி கொடுக்க நினைக்கும் அதே நேரத்தில் சட்டென்று நான் நிறுத்தினேன். ஏனெனில் நான் கண்ட ஒரு விஷயம் என்னை வியப்பில் ஆழ்த்தியது. மேலும் நமது விசாரணை வளையத்தை மிகவும் குறுக்கி விட்டது.”

“ஒரு மருத்துவராக உங்களுக்கு நன்றாகவே தெரிந்திருக்கும், வாட்சன். மனித உடம்பில் உள்ள உறுப்புகளில் காதுகளைப் போல் மாறுபடக் கூடியது வேறெதுவும் இல்லை. ஒவ்வொரு காதும் மற்ற காதுகளில் இருந்து முற்றிலும் மாறுபட்டது. இந்தத் தலைப்பில் கடந்த ஆண்டில் வெளி வந்த மானுடவியல் நாளேட்டில் எனது பேனா இரண்டு கட்டுரைகள் எழுதி இருக்கிறது. அதனால் அந்த பெட்டியில் இருந்த காதுகள் இரண்டையும் ஒரு கைதேர்ந்த வல்லுநர் போல் ஆராய்ந்து அவைகளின் கூறுகளை நுணுக்கமாகக் கவனித்தேன். ஆச்சர்யம் என்னவென்றால் நான் பார்த்த பெண் காது அப்படியே செல்வி.கஷிங் அவர்களுடையது போலவே இருந்தது. அது நிச்சயம் ஒரு தற்செயலானது அல்ல. புறச்செவிச்சோணை அதே போல் சிறுத்து இருந்தது. மேல் காதின் அதே பெரிய வளைவு. உட்புறம் இருந்த குருத்தெலும்பு வளைந்திருந்தது அதே போல். ஒவ்வொரு அம்சங்களும் அந்த இரு காதுகளும் ஒன்றே என்று பறை சாற்றியது.”

“முதலில் அவரது தங்கையின் பெயர் சாரா. சமீப காலம் வரையில் அவளது முகவரியும் இதேதான். அதனால் அந்தத் தவறு எப்படி நடந்தது என்பதும் யாருக்கு அது அனுப்பப்பட்டிருக்கிறது என்பதும் மிகவும் தெளிவாகிறது. அதன் பின் இந்த கப்பல் மேலாளரைப் பற்றி நாம் கேள்விப்பட்டோம் மூன்றாவது சகோதரியின் கணவர். அவரும் சாராவுடன் ஒரு காலத்தில் மிக நெருக்கமாக இருந்ததாகவும் அறிகிறோம். அதன் காரணமாக அவள் ப்ரவுனர்களின் வீட்டுக்கு அருகில் லிவெர்பூலில் சென்று தங்கியதாகவும் அறிகிறோம். ஆனால் அதன் பின் நடந்த சண்டையில் அவர்கள் பிரிந்து விட்டார்கள். இதனால் அவர்களுக்கு நடுவில் எந்தவிதத் தொடர்பும் சில மாதங்களாய் இல்லை. அதனால் சாராவுக்காக அனுப்பப்பட்ட பொட்டலத்தை நிச்சயம் ப்ரவுனர் அவளது பழைய முகவரிக்கே அனுப்பி இருக்க வேண்டும்.

இப்பொழுது அனைத்தும் மிக அருமையாகத் தெளிவு பெறத் தொடங்கி விட்டது. இந்த மேலாளர் இருப்பது நமக்குத் தெரிந்து விட்டது. அவன் மிகவும் உணர்ச்சி வசப்படக்கூடியவன். தன் மனைவிக்கு அருகில் இருக்க வேண்டும் என்பதற்காகவே தனக்குக் கிடைத்த பெரும் பதவியையும் உதறியவன். எப்பொழுதாவது அதிகமாகக் குடிக்கக்கூடியவன். அவனது மனைவி கொல்லப்பட்டு விட்டாள் என்று நாம் நம்புவதற்குக் காரணம் இருக்கிறது. அதே வேளையில் ஒரு ஆணும்-உத்தேசமாக, கடல் பயணம் செய்யும் ஒரு ஆண்-கொல்லப்பட்டிருக்கிறான். பொறாமைதான் நிச்சயம் அந்தக் கொலைக்குக் காரணமாய் இருந்திருக்க வேண்டும். இல்லையேல் அந்தக் கொலைக்கான அத்தாட்சிகளை ஏன் சாராவுக்கு அனுப்பி இருக்க வேண்டும். அவள் லிவெர்பூலில் இருந்த சமயத்தில் அந்தக் கொலை நடப்பதற்கு முன் நிகழ்ந்த சம்பவங்களில் அவளுக்குத் தொடர்பு இருந்திருக்கலாம். நீங்கள் ஒரு விஷயம் கவனித்திருக்கலாம், அந்தப் படகு வரிசை பெல்பாஸ்ட், டப்ளின், வாட்டர்போர்ட் ஊர்களுக்குச் செல்கிறது. ப்ரவுனர் கொலை செய்து விட்டு உடனடியாகப் படகில் ஏறி இருந்தாலும் பெல்பாஸ்டில்தான் முதலில் அந்தப் பொட்டலத்தை அனுப்பி இருக்க முடியும்.

“இரண்டாவது தீர்வும் ஒன்று வெளிப்படையானது. அது நடந்திருக்க வாய்ப்பே இல்லை என்றே நான் நினைத்திருந்தேன். இருந்தாலும் அதைச் சொல்லாமல் இருக்கவும் முடியவில்லை என்னால். காதலில் தோல்வி அடைந்த ஒருவன் இரு பிரவுனர்களையும் கொன்றிருக்கலாம். ஆண் காது திரு.பிரவுனருடையதாக இருந்திருக்கலாம். இந்தக் கருத்திற்கு நிறைய எதிர் வாதங்கள் உண்டு. இருந்தாலும் இதையும் ஒதுக்கி விட முடியாது. அதனால் நான் லிவர்பூல் காவல்துறையில் பணியாற்றும் எனது நண்பன் அல்கருக்கு ஒரு தந்தி அனுப்பினேன். திருமதி.பிரவுனர் வீட்டில் இருக்கிறாரா, திரு.பிரவுனர் மே தினத்தில் ஏறிப் புறப்பட்டு விட்டாரா என்பதை உறுதி செய்யச் சொன்னேன். அதன் பின்னர் சாராவைத் தேடி வில்லிங்டன் சென்றோம்.

“அவர்களது பரம்பரைக் காது எவ்வளவு தூரம் அவளிடம் இருக்கிறது என்பதை அறிய நான் மிகவும் ஆர்வமாய் இருந்தேன். அதே வேளையில் அவளும் எதாவது ஒரு முக்கியமான தடயமும் கொடுக்க வாய்ப்பிருக்கிறது. ஆனால் அவள் கொடுப்பாள் என்ற நம்பிக்கை எனக்கு இருந்ததில்லை. நேற்று அவளுக்கு இந்த விஷயம் எல்லாம் தெரிந்திருக்கும். கிராய்டன் ஊரே இதைப் பற்றித்தான் அலறிக் கொண்டிருந்தது. அவளுக்கு மட்டும்தான் அந்தப் பொட்டலம் யாருக்கு வந்தது என்று தெரியும். அவள் ஞாயப்படி நடக்க வேண்டும் என்று நினைத்திருந்தால் இந்நேரம் காவல் துறையை அணுகி இருக்க வேண்டும். ஆனால் அது நமது கடமையாகவே இருக்கிறது. அதனால்தான் நாம் அங்கு சென்றோம். அந்தப் பொட்டலம் வந்த செய்தி கேட்டு அவளுக்கு மூளைக் காய்ச்சல் வருமளவு வீரியமாய் இருந்திருக்கிறது. பிரச்சினையின் முக்கியத்துவம் முன்னெப்போதையும் விட இப்பொழுது சரியாக அவளுக்குப் புரிந்திருக்கிறது என்பது அதில் இருந்து உறுதியாய் தெரிகிறது. அதே சமயம் அவளிடம் இருந்து பெற வேண்டிய உதவிகளுக்கும் நாம் பொறுமை காத்தாக வேண்டும் என்பதும் நமக்குப் புரிகிறது.

“இருந்தாலும் அவளது உதவி இல்லாமலேதான் நாம் இருக்கிறோம். நமது கேள்விகளுக்கான விடைகள் காவல் துறையில் காத்துக் கொண்டிருந்தன. ஆல்கரை அங்குதான் அனுப்பச் சொல்லி இருந்தேன். எவ்வளவு செய்திகள் கிடைத்தாலும் போதுமானதாக இருந்திருக்காது. திருமதி.பிரவுனரின் வீடும் மூன்று நாட்களாக பூட்டியே இருக்கிறது. அவரது அண்டை வீட்டுக்காரர்கள் தெற்கில் அவரது சொந்த பந்தங்களைப் பார்க்க அவர் சென்றிருக்கிறார் என்று சொல்கிறார்கள். மே தினத்தில்தான் திரு.பிரவுனர் ஏறிச் சென்றிருக்கிறார் என்று துறைமுக அலுவலகங்களில் உறுதிப் படுத்தி இருக்கிறார்கள். அது நாளை இரவுக்குள் தேம்ஸ் வந்து விடும். அவர் வந்தவுடன் அவரை வரவேற்க பருமனான மற்றும் உறுதியான லெஸ்ட்ராட் காத்துக் கொண்டிருப்பார். அதன் பின் கோடிட்ட இடங்கள் எல்லாம் நிரப்பப் பட்டு விடும் என்று நான் நம்புகிறேன்.”

ஷெர்லாக் ஹோல்ம்ஸின் எதிர்பார்ப்புகள் பொய்த்து விடவில்லை. இரண்டு நாள் கழித்து ஒரு கனமான கடிதம் வந்து சேர்ந்தது. அதில் துப்பறிவாளரின் சிறு குறிப்பும் மிக நீண்ட பல பக்கங்கள் கொண்ட அச்சிட்ட கடிதமும் இருந்தன.

“லெஸ்ட்ராட் அனைத்தையும் கண்டு பிடித்து விட்டார்.” என்று ஹோல்ம்ஸ் என்னைப் பார்த்தார். “அவர் சொல்வதை நீங்கள் கேட்டால் உங்களுக்குப் பிடிக்கலாம்?”

“எனதருமை ஹோல்ம்ஸ்:

நமது கோட்பாடுகளைச் சோதனை செய்வதற்கு நாம் வகுத்த திட்டங்களின் படி[நாம் என்று சொன்னது சரிதானே, வாட்சன்?] ஆல்பர்ட் துறைமுகத்திற்கு நேற்றுக் காலை ஆறு மணிக்குச் சென்றிருந்தேன். லிவர்பூல் டப்ளின் மற்றும் லண்டன் நீராவிச் சிப்ப நிறுவனத்திற்குச் சொந்தமான மே தினம் என்ற கப்பலில் ஏறினேன். விசாரித்ததில் ஜேம்ஸ் பிரவுனர் என்ற பெயரில் ஒரு மேலாளர் பணி புரிவது தெரிந்தது. அவர் பணி இடத்தில் மோசமாக நடந்து கொண்டதால் மீகாமன் அவரைப் பணியில் இருந்து தற்காலிகமாக நீக்கி இருக்கிறார் என்பதையும் அறிந்தேன். அவரது அறைக்குச் சென்றபோது அவர் ஒரு பெட்டியின் மேல் கை வைத்துத் அதன் மேல் தன் தலையை வைத்து அமர்ந்திருந்தார். மெதுவாக தன் உடம்பை இங்கும் அங்கும் ஆட்டிக் கொண்டிருந்தார். அவர் நல்ல பருமனான வலிமையான ஆள். நேர்த்தியாக முடியை மழித்திருந்தார். நல்ல கருப்பாக இருந்தார், நமக்கு போலிச் சலவை விஷயத்தில் உதவிய ஆல்ரிட்ஜ் போல. நான் உள்ளே வந்தது தெரிந்ததும் சட்டென அதிர்ந்தான். நான் எனது வாயில் தயாராக ஊதல் வைத்திருந்தேன், தேவை என்றால் ஆற்றில் இருக்கும் காவல் துறை நண்பர்களை அழைக்க வசதியாய். அவர்களும் கூப்பிட்டு தூரத்திலேயே இருந்தார்கள். இருந்தாலும் அவனுக்கு மனது விட்டுப் போய் விட்டதென்று நினைக்கிறேன். அவன் தன் கைகளை மெதுவாக விலங்கிடுமாறு நீட்டினான். நாங்கள் அவனைக் காவல் நிலையத்துக்கு அழைத்து வந்தோம் அவனது பெட்டியுடன், எதாவது தடயங்கள் இருக்கும் என்ற நம்பிக்கையில். மாலுமிகள் பயன்படுத்தும் பெரிய கூர்மையான கத்தி ஒன்று தவிர வேறு ஒன்றும் எங்களுக்குக் கிடைக்கவில்லை துரதிர்ஷ்டவசமாக. இருந்தாலும் எங்களுக்குத் தடயங்கள் தேவைப்படவில்லை. ஏனெனில் அவன் காவல் நிலையம் வந்தவுடன் தனது வாக்குமூலத்தைக் காவல் மேலாளர் முன் சொல்ல வேண்டும் என்று சொன்னான். அவன் சொன்னபடியே வாக்குமூலம் பெறப்பட்டது நமது சுருக்கெழுத்து வல்லுநர் மூலம். அதை மூன்று பிரதி எடுத்து ஒன்றை உங்களுக்கு அனுப்பி இருக்கிறேன் இத்துடன். இந்த விவகாரம் மிகவும் எளிதான ஒன்றுதான் நாம் முன்பே நினைத்தது போல. நீங்கள் இதில் உதவியதற்கு மிகவும் நன்றி. அன்புடன்,

உங்கள் உண்மையுள்ள,

ஜி.லெஸ்ட்ராட்”

“ஹூம்! இந்தப் புலனாய்வே மிகவும் எளிதானது.” என்றார் ஹோல்ம்ஸ். “ஆனால் நம்மை அழைத்த போதே அவருக்கு இது தோன்றி இருக்க வாய்ப்பில்லை. இருந்தாலும், ஜிம் ப்ரவுனர் என்ன சொல்கிறார் என்று நாம் பார்ப்போம். இதுதான் ஆய்வாளர் மாண்ட்காமரி முன் அவன் கொடுத்த வாக்குமூலம் ஷாட்வெல் காவல்நிலையத்தில். வார்த்தைக்கு வார்த்தை இருப்பதால் கொஞ்சம் எளிதாக இருக்கும் நமக்கு”

“எனக்கு எதாவது சொல்ல வேண்டி இருக்கிறதா? ஆம். நிறையவே இருக்கிறது. அதை எல்லாம் சொன்னால்தான் எனக்கு நிம்மதி. நீங்கள் என்னைத் தூக்கிலிடலாம். இல்லையேல் விட்டு விடலாம். எதைப் பற்றியும் எனக்குக் கவலை இல்லை. நான் அந்தக் காரியத்தைச் செய்ததில் இருந்து ஒரு நொடி கூடத் தூங்கவே இல்லை. இனிமேலும் என் உயிர் உள்ளவரை என்னால் உறங்க முடியுமா என்று கூடத் தெரியவில்லை. சில நேரம் அவனது முகம். பல நேரம் அவளது முகம். எதாவது ஒன்று என் முன்னே நிழலாடிக் கொண்டே இருக்கிறது. அவன் முகம் சுருங்கிக் கருப்பாய் இருக்கிறது. அவளது முகத்தில் ஆச்சர்யம் போல் இருக்கிறது. அந்த வெள்ளாடு, அவள் மிகவும் ஆச்சர்யமடைந்திருக்க வேண்டும் அவள் அவனது முகத்தில் காதல் என்று நினைத்திருந்த அந்த மரண ரேகை கண்டு.”

“ஆனால் அது அனைத்தும் சாராவின் தவறுதான். பாதிக்கப்பட்ட ஒரு மனிதனின் சாபத்தால் அவளது நாளங்களில் ஓடும் குருதி நாறிப் போகட்டும். இதையெல்லாம் சொல்வதால் நான் என்னைக் குற்றத்தில் இருந்து விடுவித்துக் கொள்ள நினைக்கிறேன் என்று நீங்கள் எண்ண வேண்டாம். நான் மீண்டும் குடிக்க ஆரம்பித்து விட்டேன் ஒரு விலங்கு போல. இருந்தும் என்னை அவள் மன்னித்திருப்பாள். அவள் என்னிடம் ஒட்டி இருப்பாள் அந்தப் பெண் எங்கள் வாழ்க்கையில் நுழையாமல் இருந்திருந்தால். சாரா என்னைக் காதலித்ததுதான் பிரச்சினையின் ஆனி வேர். அவளது காதல் ஒரு விஷம் போல் மாறும் வரை என்னைக் காதலித்தாள். நான் அவளது உடலையும் மனதையும் தவிர்த்து எனது மனைவியின் காலடித்தடம் பற்றி யோசிக்கிறேன் என்று அவள் நினைத்தாள்.”

“மொத்தம் மூன்று சகோதரிகள் இருந்தார்கள். அதில் மூத்தவர் நல்ல பெண்மணி. இரண்டாவது ஒரு சாத்தான். மூன்றாவது தங்கம். சாராவிற்கு 33 வயது. மேரிக்கு 29 நான் அவளைக் கல்யாணம் செய்து கொள்ளும்போது. எங்கள் வீட்டை நாங்களே கட்டிக் கொண்டு மிகவும் மகிழ்ச்சியாகவே இருந்தோம். எனது மேரி போல் நல்லவள் லிவெர்பூலில் யாரும் கிடையாது. அதன் பின் சாராவை ஒரு வாரம் எங்களுடன் தங்க அழைத்தோம். வாரம் என்பது மாதமாயிற்று. ஒன்றன் பின் ஒன்றாக நடந்து அவள் எங்கள் குடும்பத்தில் ஒருத்தியாகி விட்டாள்.”

“நான் நீல நாடாவில் இருந்தேன் அப்பொழுது. நாங்கள் சிறிது பணம் சேர்த்து வைத்திருந்தோம். எல்லாமே புத்தம் புதிது போல் தோன்றியது. கடவுளே, யார் நினைத்திருப்பார்கள். இப்படியெல்லாம் நடக்கும் என்று.”

“நான் வார இறுதியில் எப்படியும் வீடு வந்து விடுவேன். சில சமயம் சரக்கு இறக்கும் நேரங்களில் கப்பல் நிறுத்தப்பட்டால் எனக்கு ஒரு வாரம் முழுவதும் கிடைக்கும். அந்தச் சமயங்களில்தான் சாரா என் கண்களில் பட்டாள். அவள் உயரமாய் அழகாய் இருந்தாள். கருப்பாய் வேகமானவளாய் இருந்தாள். அவள் தன் தலையை உயர்த்தும் விதமே கர்வமானதாய் இருக்கும். அவள் கண்களில் இருந்து தெறிக்கும் பொறி சிக்கிமுக்கிக் கல்லில் இருந்து தெறிப்பது போலிருக்கும். மேரி இருக்கும்போது நான் அவளை நினைத்தது கூடக் கிடையாது. நான் கடவுளிடம் மண்டியிட்டு மன்னிப்பு கேட்கிறேன்”

“சில சமயம் அவள் என்னுடன் தனியாக இருக்க விரும்பினால் போல் தோன்றியது. சில சமயம் அவள் என்னை எப்படியாவது வெளியில் அழைத்துச் செல்ல முற்பட்டாள். ஆனால் நான் அதற்கெல்லாம் இசைந்து கொடுக்கவில்லை. ஒரு நாள் மாலை நான் விழித்திருந்தேன். என் மனைவி வெளியில் சென்றிருந்தாள். சாரா வீட்டில் இருந்தாள். “மேரி எங்கே?” என்று நான் கேட்டேன். “அவள் சில வேலைகளுக்காக வெளியில் சென்றிருக்கிறாள்.” என்றாள். எனக்கு இருப்புக் கொள்ளவில்லை. இங்குமங்கும் நடந்து கொண்டிருந்தேன். “ஒரு ஐந்து நிமிடம் கூட மேரி இல்லாமல் நிம்மதியாக இருக்க முடியாதா?” என்று கேட்டாள். “இந்தச் சிறு காலத்தில் கூட எங்களது சமூகத்தில் மகிழ்ச்சியாக இல்லாததை நினைத்து நான் வருத்தப்படுகிறேன். சரி போகட்டும் நீ ஒரு சிறுமி.” என்று அன்பாக அவளது தோளில் தட்டினேன். ஆனால் அவள் சட்டென்று என் கைகளைப் பிடித்துக் கொண்டாள். அது ஒரு காய்ச்சல் கண்டது போல் கொதித்தது. நான் அவளது கண்களைப் பார்த்தேன். அனைத்தும் புரிந்தது. அவள் பேசவே தேவை இல்லை. எனக்கும் பேச ஒன்றுமில்லை. நான் முனகிக் கொண்டே என் கைகளை விடுவித்துக் கொண்டேன். பின் அவள் எனதருகில் அமைதியாய் நின்றாள். அதன் பின் எனது தோளைத் தட்டினாள். “உறுதியான வயதான ஜிம்” என்றாள் அவள். பின்னர் கேலியான ஒரு சிரிப்புடன் அந்த இடத்தை விட்டுச் சென்று விட்டாள்.”

“அந்த நொடியில் இருந்து சாரா என்னை முழு மனதாக வெறுக்கத் தொடங்கினாள். ஒரு பெண்ணின் கோபத்திற்கு ஆளானேன். நான் ஒரு முட்டாள் போல-ஒரு அடிமுட்டாள் போல- அதைத் தொடர்ந்து கொண்டிருந்தேன். இவ்வளவு நடந்தும் மேரியிடம் ஒரு வார்த்தை சொல்லவில்லை. ஏனெனில் அவள் வருத்தம் அடைந்து விடுவாள். எப்பவும் போல் காலம் சென்று கொண்டிருந்தது. ஆனால் சில நாட்கள் கழித்து மேரியிடமே சில மாற்றங்கள் தென்பட ஆர்மபித்தன. அவள் எப்பொழுதும் வெகுளியாய் பேதையாய் இருந்தவள். ஆனால் இப்பொழுதெல்லாம் எதற்கெடுத்தாலும் சந்தேகம் விசாரணை. நான் எங்கே சென்றேன், என்ன செய்தேன், எனக்கு வரும் கடிதங்கள் யாரிடம் இருந்து வருகின்றன, என் சட்டைப் பைகளில் என்ன இருக்கின்றன என்பது போன்ற பல்லாயிரக்கணக்கான கேள்விகளால் துளைத்து எடுக்கிறாள். ஒவ்வொரு நாளும் அவளது சந்தேகங்கள் தொடர்ந்து கொண்டே இருந்தன. எரிச்சலூட்டும் விதமாய் மாறிப் போயின. ஒன்றுமே இல்லாத விஷயத்திற்காக ஓயாமல் சண்டை இட்டுக் கொண்டே இருந்தோம். எனக்கு ஒன்றுமே புரியவில்லை. சாராவும் என்னைக் கண்டு கொள்வதில்லை. ஆனால் அவளும் அவள் சகோதரியும் இணை பிரிவதில்லை. எனக்கு இப்பொழுதுதான் புரியத் தொடங்கியது. அவள் என் மனைவியிடம் கோள் மூட்டிக் குளிர் காய்ந்து கொண்டிருக்கிறாள் என்று. ஆனால் நான் குருட்டுப் பூனை போல் இருந்து விட்டேன். முதலிலேயே புரிந்து கொள்ளத் தவறி விட்டேன். அதன் பின் நீல நாடாவை எடுத்தேன். குடிக்கத் தொடங்கினேன். மேரி எப்பொழுதும் போல் இருந்திருந்தால் நான் குடிக்க ஆரம்பித்து இருக்க மாட்டேன் என்று நினைக்கிறேன். அவளும் என்னை வெறுக்க ஆரம்பித்து விட்டாள். எங்களுக்கு நடுவில் இருந்த இடைவெளி மெல்ல மெல்ல அகன்று கொண்டே சென்றது. அதன் பின் அலெக் பேர்பெயின் எங்கள் வாழ்வில் நுழைந்தவுடன் மொத்தமாக இருண்டு விட்டது.”

“முதன் முதலில் அவன் சாராவைப் பார்க்கத்தான் என் வீட்டிற்கு வந்தான். அதன் பின் எங்கள் அனைவரையும் கவர்ந்து விட்டான். அவனுக்குச் செல்லுமிடம் எல்லாமே வெற்றிதான். எங்கு சென்றாலும் நண்பர்கள் குவிந்து விடுவார்கள் அவனுக்கு. அவன் ஒரு அதிரடியான வீறாப்பான ஆள். நல்ல அறிவாளி சுருட்டை முடி. பாதி உலகத்தைச் சுற்றி வந்து விட்டான். அவன் கண்ட அனைத்தையும் பற்றிப் பேச வல்லவன். அவன் ஒரு நல்ல துணை. அதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை. மாலுமிகளுக்கு நடுவில் மிகவும் நயமான பண்புகள் கொண்டவன். அதனால் எங்கள் குடும்பத்தில் உள்ள பிணக்குகளை எளிதில் அடையாளம் கண்டு விட்டான். ஒரு மாதமாய் என் வீட்டுக்கு வந்து போய்க் கொண்டிருந்தான். ஆனால் ஒரு முறையும் அவனது தந்திரமான மென்மையான பேச்சுக்களில் இருந்த அபாயங்களை நான் கவனிக்கத் தவறி விட்டேன். இறுதியில் ஏதோ ஒன்று பொறி தட்ட எனக்குள் ஒரு சிறு சந்தேகம் எழுந்தது. அன்றில் இருந்து எனக்குள் நிம்மதி பறிபோய் விட்டது.”

“அதுவும் ஒரு சின்ன விஷயம்தான். நான் வீட்டின் வரவேற்பறைக்கு எதிர்பாராதவிதமாக வந்து விட்டேன். உள்ளே நுழைந்ததும் என் மனைவியின் முகத்தில் வரவேற்கும்விதமான அறிகுறிகள் தென்பட்டன. ஆனால் உடனே அது ஏமாற்றத்தில் திரும்பியது. அது போதும் எனக்கு. அலெக் பேர்பெயின் காலடி தவிர வேறு யாரையும் அவள் அங்கு எதிர் பார்த்திருக்க முடியாது. நான் அவனை அங்கு பார்த்திருந்தால் நிச்சயம் கொலை செய்திருப்பேன். ஏனெனில் எனக்குக் கோபம் வந்தால் நான் மிருகமாகி விடுவேன். மேரி என் கண்களில் இருந்த மிருகத்தின் ஒளியை உணர்ந்தாள். அவள் வேகமாக ஓடி வந்து என் கைகளைப் பிடித்துக் கொண்டாள். ‘வேண்டாம் ஜிம், வேண்டாம்’ என்று கதறினாள். ‘சாரா எங்கே’ என்று கேட்டேன். ‘சமையலறையில்’ என்றாள். ‘சாரா’ என்று கத்திக் கொண்டே உள்ளே நுழைந்தேன். ‘இந்த பேர்பெயின் இனிமேல் என் வாசலில் நுழையக் கூடாது’ என்றேன். ‘ஏன் கூடாது’ என்று கேட்டாள் அவள். ‘என் கட்டளை இது’. ‘அப்படியா’ என்றாள் அவள். ‘எனது நண்பர்களுக்கு இது ஒத்து வராது என்றால் எனக்கும் தேவை இல்லை’ என்றாள். ‘நீ என்ன வேண்டுமானாலும் செய்து கொள்’ என்றேன் நான். ‘ஆனால் பேர்பெயின் இங்கு வந்தால் அவனது ஒரு காதை நினைவுப் பரிசாக அனுப்பி வைத்து விடுவேன்’ என்றேன். அவள் எனது முகத்தைப் பார்த்து பயந்து விட்டாள் என்று நினைக்கிறேன். அதன் பின் ஒரு வார்த்தையும் பேசவில்லை. அன்று சாயங்காலமே வீட்டைக் காலி செய்து விட்டாள்.”

“அவள் முற்றிலும் கொடூரமானவளா இல்லை எனது மனைவியின் கள்ளத் தொடர்பை ஊக்கப்படுத்தி என்னை அவளுக்கெதிராகத் தூண்டிவிட முயற்சி செய்கிறாளா என்று என்னால் விளங்கிக் கொள்ள இயலவில்லை. அவள் எங்கள் தெருவில் இருந்து இரண்டு தெரு தள்ளி வீடு எடுத்து மாலுமிகளுக்குத் தங்க வாடகை இடம் கொடுத்தாள். பேர்பெயின் அங்கேதான் தங்கினான். மேரியும் அங்கே தன் தங்கை மற்றும் பேர்பெயினுடன் தேநீர் அருந்த அடிக்கடி செல்வாள். எத்துணை முறை செல்வாள் என்று எனக்குத் தெரியாது. ஆனால் ஒரு நாள் நான் அவளைப் பின் தொடர்ந்து சென்றேன். நான் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே நுழைந்தவுடன் பேர்பெயின் பின்பக்க வாசல் வழியாகச் சிட்டாகப் பறந்து விட்டான் ஒரு கோழை போல். இன்னொரு முறை அவனுடன் பார்த்தால் அவளைக் கொன்று விடுவேன் என்று மிரட்டினேன். அவள் அழுதபடியே நடுங்கிக் கொண்டு என் பின்னால் வந்து கொண்டிருந்தாள். அவள் முகம் வெள்ளைத் தாள் போல வெளிறி இருந்தது. எங்களுக்கு நடுவில் காதல் கொஞ்சமும் இல்லை. அவள் என்னை அடியோடு வெறுக்கிறாள் என்றும் என்னைக் கண்டு நடுங்குகிறாள் என்றும் புரிந்தது. அந்த நினைப்பே என்னை மேலும் குடிக்க வைத்தது. அதைக் கண்டு என்னை மேலும் வெறுத்தாள்.”

“சாரா இதற்கு மேல் லிவெர்பூலில் வாழ முடியாது என்று நினைத்து அவளது சகோதரியுடன் கிராய்டனுக்குச் சென்று விட்டாள். அதன் பின்னும் அதே போல்தான் எங்கள் வாழ்க்கை சென்று கொண்டிருந்தது. அதற்கு அடுத்த வாரம் வந்தது. கூடவே துயரமும் தொல்லையும் சேர்ந்தே வந்தது.”

“எப்படி என்றால். ஏழு நாள் பயணமாக மே தினத்தில் நாங்கள் சென்றோம். ஆனால் ஒரு பீப்பாய் கட்டு தளர்ந்து ஒரு தட்டில் மோதி விட்டது. அதனால் பனிரெண்டு மணி நேரம் துறைமுகத்தில் நிறுத்த வேண்டியதாகி விட்டது. நான் கப்பலை விட்டு வீட்டுக்கு வந்தேன் எனது மனைவியை ஆச்சர்யப்படுத்தலாம் என்று எண்ணி. ஒரு வேளை என்னைப் பார்த்து அவள் ஆனந்தப்படலாம். எனது தெருவில் நுழையும்போதே அந்த எண்ணம் என் மனதில் ஓடி கொண்டிருந்தது. அதே வேளை என்னை ஒரு வாடகை வண்டி கடந்து சென்றது. அங்கே அவளேதான் பேர்பெயின் அருகில் அமர்ந்திருந்தாள். இருவரும் பேசிக் கொண்டும் சிரித்துக் கொண்டும் இருந்தார்கள். நான் அவர்களை நடைபாதையில் இருந்தபடி பார்த்துக் கொண்டிருந்தேன்.”

“நான் உறுதியாகச் சொல்கிறேன். அன்றில் இருந்து நான் நானாகவே இல்லை. திரும்பிப் பார்க்கும் போது அது எனக்கு ஒரு மங்கலான கனவு போலவே தெரிந்தது. அதன் பின் இன்னும் அதிகமாகவே குடிக்க ஆரம்பித்து விட்டேன். இரண்டும் சேர்ந்து என் மூளையை ஒரு வழி செய்து விட்டது. என் தலையில் ஏதோ ஒன்று உருத்திக் கொண்டே இருந்தது கப்பலில் பயன்படுத்தும் சம்மட்டி போல். மறு நாள் காலை என் காதுகளில் நயாகராவே சுழன்றடித்துக் கொண்டிருந்தது.”

“குதி கால்கள் கொண்டு வேகமாய் அந்த வண்டியைப் பின் தொடர்ந்தேன். நான் கையில் ஒரு கனமான தடி வைத்திருந்தேன். என் உள்ளங்கை அழுத்திய அழுத்தத்தில் அது அப்படியே சிவப்பாய் மாறி விட்டது. ஓடும் வேளை என் மனம் சிறிது தந்திரமாய் யோசிக்கத் துவங்கியது. அதனால் அவர்கள் பார்வையில் படாதவாறு சிறிது மறைந்து கொண்டேன். அவர்கள் புகை வண்டி நிலையத்தில் இறங்கினார்கள். சீட்டு வாங்கும் இடத்தில் நல்ல கூட்டம். அதனால் அவர்கள் பின் புறம் நின்ற போது கூட அவர்கள் என்னை கவனிக்கவில்லை. அவர்கள் புது பிரைட்டனுக்கு பயணச்சீட்டு வாங்கினார்கள். நானும் அதே இடத்துக்கு வாங்கினேன். ஆனால் அவர்களுக்கு மூன்று பெட்டி தள்ளி நான் ஏறினேன். ஊர் வந்ததும் இறங்கி நடந்தார்கள். நான் அவர்களுக்கு நூறடி தூரத்தில் பின் தொடர்ந்தேன். இறுதியில் அவர்கள் ஒரு படகை வாடகைக்கு எடுத்தார்கள். அன்று மிகவும் வெப்பமாக இருந்ததால் நீருக்குள் குளிர்ச்சியாய் இருக்கும் என்றெண்ணி படகில் செல்ல எண்ணி இருக்கலாம்.”

“அவர்கள் ஒரு லட்டு போல என் கைகளில் அளிக்கப்பட்டது போல் உணர்ந்தேன். சிறிது மூட்டமாய் இருந்தது. சில நூறடி தூரத்திற்கு மேல் பார்க்க முடியவில்லை. நானும் ஒரு படகை வாடகைக்கு எடுத்தேன். அவர்களைப் பின் தொடர ஆரம்பித்தேன். அவர்களது படகை மங்கலாகப் பார்க்க முடிந்தது. எனது படகு சென்ற அதே வேகத்தில் அவர்கள் சென்றார்கள். கரையில் இருந்து கிட்டத்தட்ட ஒரு மைல் தூரம் சென்ற பிறகு அவர்களுக்கு அருகில் சென்றேன். மூட்டம் எங்களைச் சுற்றி ஒரு திரை போட்டிருந்தது. அதற்கு நடுவில் நாங்கள் மூன்று பேரும் இருந்தோம். கடவுளே, அவர்கள் பக்கத்தில் வந்து நின்ற படகில் யார் வந்திருக்கிறார்கள் என்று தெரிந்ததும் அவர்கள் முகங்களில் ஏற்பட்ட உணர்ச்சிகளை என்னால் மறக்கவே முடியாது. அவள் கத்தினாள். அவன் ஒரு பைத்தியம் போல் என்னைத் திட்டினான். ஒரு துடுப்பை எடுத்து என்னை அடிப்பது போல் வீசினான். ஏனெனில் என் கண்களில் எமன் தெரிந்திருப்பான் அவனுக்கு. அதில் இருந்து லாவகமாகத் தப்பித்து என் கையில் இருந்த தடியால் அவனது மண்டையைப் பிளந்தேன். முட்டை போல் அது உடைந்தது. நான் அவளை விட்டிருப்பேன் எனக்குள் அவ்வளவு கோபம் இருந்த போதிலும். ஆனால் அவள் அவனைத் தாங்கிப் பிடித்தாள். அவன் பேர் சொல்லிக் கதறினாள். நான் மீண்டும் தாக்கினேன். அவளும் அவனருகிலேயே விழுந்தாள். ரத்தம் குடித்த காட்டு விலங்கு போல் நான் மாறி விட்டேன். சாராவும் அந்த இடத்தில் இருந்திருந்தால் அவளும் அவர்களுடனே சென்றிருப்பாள். என் கத்தியை நான் எடுத்தேன். ஏற்கெனவே நான் நிறையச் சொல்லி விட்டேன். அவளது தலையீட்டினால் என்ன நடந்து விட்டது என்று அவளுக்குத் தெரியப்படுத்த வேண்டும் என்று நினைக்கும் போது எனக்கு குரூரமான ஒரு மகிழ்ச்சி கிட்டியது. அந்தச் சடலங்களைக் கட்டி அதன் மேல் ஒரு கட்டையை போட்டு மூழ்கும் வரை வேடிக்கை பார்த்தேன். படகின் முதலாளி அவர்கள் மூட்டத்தில் தொலைந்து கடலினுள் சென்றிருக்கலாம் என்று நினைத்துக் கொள்ளட்டும் என்று எண்ணினேன். நான் நன்றாகக் கழுவிச் சுத்தம் செய்து விட்டுக் கரைக்குத் திரும்பினேன் யாருக்கும் ஒரு சிறு சந்தேகமும் எழாதவண்ணம். அன்றிரவு சாராவுக்கு அந்தப் பொட்டலத்தைத் தயார் செய்து மறு நாள் பெல்பாஸ்டில் இருந்து அனுப்பினேன்.”

“உங்களுக்கு அனைத்து உண்மைகளும் சொல்லி விட்டேன். நீங்கள் என்னைத் தூக்கிலிடலாம், இல்லை உங்கள் விருப்பப்படி என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம். இருந்தாலும் நீங்கள் எனக்கு எந்தவிதத் தண்டனையும் கொடுத்து விட முடியாது. ஏனெனில் எனக்கு ஏற்கெனவே தண்டனை கிடைத்து விட்டது. என்னால் கண்களை மூடவே முடியவில்லை. மூடினால் அந்த இருவரின் கண்களும் என்னையே பார்த்துக் கொண்டிருக்கின்றன. நான் அந்தப் பனி மூட்டத்தின் வழியாக அவர்களை நோக்கி வந்த போது என்னை அவர்கள் பார்த்த அதே பார்வையில் என்னையே பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். நான் அவர்களைச் சட்டென்று கொன்று விட்டேன். ஆனால் அவர்கள் என்னை மெல்ல மெல்லச் சாகடிக்கிறார்கள். இன்னொரு நாள் இப்படியே தொடருமானால் நான் விடிவதற்குள் பைத்தியமாகி விடுவேன். இல்லை இறந்து விடுவேன். நீங்கள் என்னைத் தனிமைச் சிறையில் அடைத்து விட மாட்டீர்களே? தயவு செய்து அப்படிச் செய்து விடாதீர்கள். உங்களுக்கு துன்பமான நேரத்தில் நீங்கள் எப்படி நடந்து கொள்வீர்களோ அப்படியே என்னையும் செய்து விடுங்கள்.”

“இதற்கு என்ன பொருள், வாட்சன்?” என்றார் ஹோல்ம்ஸ் மிகவும் தீவிரமாக முகத்தை வைத்துக் கொண்டு அந்தக் காகிதங்களைக் கீழே வைத்தபடியே. “இந்த வன்மம் பயம் துன்பம் கலந்த சுழல்களால் எந்தவிதமான பலன் ஏற்பட்டு விடப் போகிறது? எதோ ஒரு புள்ளியில் அவை முடிவுற வேண்டும். இல்லையேல் நமது அண்டமே குழப்பத்தின் பிடியில் சிக்கி விடும். அதை நினைத்துப் பார்க்கக் கூட இயலவில்லை. ஆனால் என்னதான் இதற்கு முடிவு? இதுதான் மனித உலகம் எப்பொழுதும் எதிர் நோக்கி இருக்கும் விடைக்கு நீண்ட தூரத்தில் சஞ்சரிக்கும் கேள்வி.”

அருஞ்சொற்கள்

மெத்தை ஆசனம் – Sofa

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *