வேதாவும் மயிலிறகும்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: January 9, 2023
பார்வையிட்டோர்: 6,066 
 
 

கஸ்தூரி ரங்கன் லைப்ரரி. திருவல்லிக்கேணியின் அந்தக் காலத்திய பிரபல நூலகம். தேரடித் தெருவில் இருந்து நல்லதம்பி முதலி தெரு போகும் வழியில் கார்னரில் இருந்தது. (இப்போது இருக்கிறதா தெரியாது)

என் படிக்கும் பழக்கத்துக்குத் தீனி போட்ட நூலகம். காலையில் ஏழு மணிக்கெல்லாம் திறந்துவிடும். அப்போது ஒரு புத்தகம் எடுப்பேன். அதைத் தேர்வுக்குப் படிப்பது போல வீட்டில், கல்லூரி போகும் போது பஸ்ஸில், கல்லூரி மதிய உணவு வேளை, மாலை வீடு திரும்புகையில் என்று படித்து முடித்து, மாலை ஆறரை மணியளவில் அது மீண்டும் திறக்கும்போது சென்று கொடுத்து வேறு புக் வாங்கி வருவேன். அதை இரவு முழுவதும் படித்து மறுநாள் காலையில் திருப்பிவிடுவேன்.

அப்படிப்பட்ட ஒரு சுபயோக சுபதினத்தில்தான் அவளை அந்த நூலகத்தில் பார்த்தேன். சுஜாதா நாவல்களைப் புரட்டித் தள்ளிப் பார்க்கையில் திடீரென்று ஷெல்ஃபுக்கு அந்தப் பக்கம் அழகாகத் தெரிந்தாள் . வைணவ அழகைப் பற்றி ஒரு காவியமே பாடலாம். அவள் மைவிழிகள் படபடவென்றுத் துடித்தன. (நான் என்ன வில்லனா?)

“சாரி, பயப்படுத்திட்டேனா உன்ன?” என்று கேட்டேன். “இல்லை” என்றும் மீண்டும் படபடத்தாள்.

“ஒங்கள நான் அடிக்கடி பாப்பேன் இந்த லைப்ரரில. ரொம்ப நெறய படிப்பேள் போலருக்கே!”

“ம்ம்ம் ஆமாம்”

இப்படித்தான் எங்கள் நட்பு ஆரம்பித்தது. அவள் பெயர் வேதவல்லி என்று பிற்பாடு தெரிந்து கொண்டேன். லைப்ரரிக்குள்ளேயே மெல்லிய குரலில் பேசிக்கொள்வோம். எப்போதோ ஒரிரு முறை புத்தகம் எடுக்கைல்யில் விரல்கள் உரசிக்கொண்டதாக ஞாபகம். பீச் ரோடு அருகில் ஸ்கூல். அவள் வீடு லைப்ரரி அருகில். என்னைப் பற்றி தினமும் கொஞ்சம் கொஞ்சமாக கேட்டு அறிந்துகொண்டாள். நான் சுஜாதவின் பரம ரசிகன் என்று அவளிடம் பெருமை பேசுவேன். மேலும் நான் படிக்கும் படித்த ஆங்கிலப் புத்தகங்கள் எல்லாம் பற்றியும் டிஸ்கஸ் செய்வேன். ஒரு நாள் திடீரென்று என் பிறந்தநாள் பற்றிக் கேட்டாள். ஆகஸ்டு பதினெட்டு என்று சொன்னேன். (அதற்கு இரண்டு வாரங்கள் இருந்தது என்று நினைவு)

என் பிறந்த நாளன்று என் கையில் ஒரு சிறிய பார்ஸல் தந்தாள். பிரித்துப் பார்த்தால் சுஜாதாவின் கரையெல்லாம் செண்பகப்பூ. எனக்கு மிகவும் பிடித்த நாவல்.

“இதெல்லாம் எதுக்கு?”

“என்னோட பரிசு. என் பேரு எழுதி டேட் போட்டு சைன் கூட பண்ணிருக்கேன்” என்றாள் குழந்தை போல.

பிரித்துப் பார்த்தேன்.

“டு வெங்கட். ஃப்ரம் வேதா” என்று எழுதி கையெழுத்து இட்டிருந்தாள். நான் அன்று லைப்ரரியில் இருந்து போகும் போது நாலு இங்கிலீஷ் நாவல் எடுத்துச் சென்றேன்.

அடுத்த இரண்டு மூன்று நாட்கள் அந்தப் புத்தகங்களில் பிஸி. கரையெல்லாம் செண்பகப்பூ எனக்காக காத்திருந்து சோர்ந்தது. நாலு நாள் கழித்து லைப்ரரி சென்றபோது அவளைப் பார்த்தேன். சிரித்தேன்.

“படிச்சியா”

இல்லையென்று சொன்னால் வருந்துவாளே என்று “ம்ம்ம் படிச்சேன். செம்ம… அதுவும் அந்த சினேகலதா கேரக்டர்…” என்று ஆரம்பித்து பேசிக்கொண்டே இருந்தேன். அவளுக்கு என் பேச்சு அன்று ரசிக்கவில்லை என்று மட்டும் புரிந்தது. ஆனால் ஏன் என்றுதான் புரியவில்லை.

அப்புறம் அவள் லைப்ரரி வருவதைத் தவிர்த்தாள். நாளடைவில் நின்றே விட்டாள்.

அப்புறம் நான் தில்லி, லக்னோ கான்பூர் என்றெல்லாம் சுற்றி சென்னை வந்து சேர்ந்தது என் நட்பு வட்டத்தில் உள்ள பலருக்குத் தெரிந்து இருக்கும்.

ஒரு நவராத்திரிக்கு வீடு ஒழிக்கும் போது ஒரு பெட்டியில் திடீரென்று கரையெல்லாம் செண்பகப்பூ! வேதா மனமெல்லாம் நிறைத்தாள். படபடக்கும் நெஞ்சோடு திறந்தேன்.. முதல் பக்கம் “டு வெங்கட். ஃப்ரம் வேதா” என்று சிரித்தது. என்னோவோ தோன்ற பக்கங்களைப் புரட்டினேன். முப்பத்தி இரண்டாம் பக்கத்தில் ஒரு சிறிய மயிலிறகு! அதோடு ஒரு காகிதத் தாள் இரண்டாக மடிந்து.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *