நீல வானத்தின் அழகையெல்லாம் சிறகடிப்பில் அள்ளிச் செல்லும் பறவைகளை ரசித்து தன்னிலை மறந்து நின்றிருந்தான் சிவா.
மொட்டைமாடியில் கொய்யாமர நிழலில் பறவைகளுக்கு இணையாக பறக்க பட்டம் செய்த நாள் முதல் இன்றுவரை பறவைகளுக்கும் மனதிற்குமிடையேயான
உறவுப்பாலத்தில் பயணித்தன சிவாவின் எண்ண ஊர்திகள்.
சிவாவிற்கு பறவைகள் என்றால் உயிர். அவன் வளர்க்காத பறவைகளே
இல்லை எனலாம்.கிளி,மைனா,காதல்பறவைகள்,சிட்டுக்குருவிகள்…என்று பட்டியல் நீளும்.
(தீக்கோழி வளர்க்க போகிறேன் என்று சொன்னபோது மட்டும் அவன் அப்பா தீச்சொற்களால் திட்டியது தனிக்கதை)
பறவைகளின் வாழ்வியல் பற்றி பேசினால் பேசிக்கொண்டே இருப்பான். டிஸ்கவரி சேனலும் நேசனல் ஜியாக்ரபி சேனலும் தவிர வேறு சேனல் அவன் பார்த்ததாக ஞாபகமில்லை.
முள்ளை கூடாக்கி வாழும் காகம்,பனைமர பொந்தில் வசிக்கும் பச்சைக்கிளி,
இரு இலைகளை ஒன்றாக்கி அதன் இடைவெளியில் வசிக்கும் தேன்சிட்டு அனைத்தும் இவனது சிறுவயது தோழர்கள்.
சிவாவிற்கும் பறவைகளுக்கும் இடையேயான உறவைப் பற்றி பேசிக்கொண்டிருந்ததில் கவிதாவை நாம் மறந்துவிட்டோம்.
கவிதா சிவாவுடன் பணிபுரிபவள். இருவரும் சென்னையில் ஒரு புகழ்பெற்ற சாப்ட்வேர் கம்பெனியில் வேலை பார்த்தார்கள்.
சிவாவுக்கு பறவைகளின் மேல் எப்படி காதலோ அதேபோல் கவிதாவிற்கு கவிதைகளின் மீது காதல்.
நிறைய வாசிப்பாள். மரபுக்கவிதை முதல் நேற்றைய நாளிதழில் வெளியான ஹைக்கூ கவிதை வரை ஒன்றுவிடாமல் படித்துவிடுவாள். சிவாவிடம் தான் படித்த கவிதைகள் பற்றி நிறைய பேசுவாள் கவிதா.
சிவாவிற்கு கவிதைகள் பிடிக்கும் ஆனால் கவிதா அளவிற்கல்ல.
மாலை 6.15க்கு அலுவலக பேருந்தில் வீடு திரும்பிக்கொண்டிருக்கையில் கவிதா பேச ஆரம்பித்தாள்.
“சிவா நேத்து ஒரு கவிதை படிச்சேன்,சொல்லவா?
ஜன்னல்வழியே கூடுதிரும்பும் பறவை ஏதேனும் தென்படுகிறதா என்று பார்த்துக்கொண்டே
“ம் சொல்லு கவி” என்றான் சிவா.
“உன் பிரிவைக்கூட
என்னால் தாங்கியிருக்க
முடியும் அழாமல் நீ
பிரிந்திருந்தால்”
எப்படி இருக்குடா?” ஆர்வமுடன் கேட்டாள் கவிதா.
“வாவ்! ரொம்ப நல்லா இருக்கு கவி,யார் எழுதினது?”
“அங்கே பாரேன் தூரத்துல ஒரு மயில் நிக்குது” ஜன்னல் வழியே
கைகாட்டினாள் கவிதா.
“ஆகா இன்னைக்கு நமக்கு அதிர்ஷடம் கவி ஆண் மயில் அதுவும் தோகை விரிச்சு நிக்குது பாரேன்…மயிலோட உயிரியல் பெயர் பாவோ கிறிஸ்டாடஸ்(Pavo cristatus), மயிலோட சிறப்பம்சம் என்னான்னா….” சிவா தொடர்வதற்குள் இடைமறித்த கவிதா,
“போதும்டா உன்னை திருத்தவே முடியாது,என் ஸ்டாப் வந்திடுச்சு நான் கிளம்புறேன் பை” என்றவாறு இறங்கி நடக்க ஆரம்பித்தாள்.
கடைசிவரையில் அந்தக் கவிதையை எழுதியது யார் என்று சிவாவிற்கு தெரியாமல் போனது.
————————————————————————–
காலையில் இருந்தே கவிதாவின் முகம் சரியில்லை. உம்மென்றே இருந்தாள்.
இரண்டு மூன்று முறை என்னவென்று கேட்டுப்பார்த்தான் சிவா. பின் அவளாக சொல்லட்டும் என்று தன் பணியில் மூழ்கிப்போனான்.
உணவு இடைவேளையிலும் கவிதா அவனுடன் உணவருந்த வராதது வித்தியாசமாகபட்டது.
“கவி,உன்கிட்ட கொஞ்சம் பேசனும்”
“ம்..சொல்லு சிவா” கிணற்றிலிருந்து வந்ததுபோலிருந்தது கவிதாவின் குரல்.
“என்னாச்சு உனக்கு? ஏன் என்கிட்ட சரியா பேசமாட்டேங்கற?” படபடவென்று கேட்டான் சிவா.
“நத்திங்…கொஞ்சம் தலைவலி அவ்வளவுதான்” சொல்லிவிட்டு விறுவிறுவென்று எழுந்து போகின்ற கவிதாவை ஒன்றும் புரியாமல் பார்த்தபடி நின்றான் சிவா.
மறுநாளிலிருந்து கவிதா அலுவலகம் வரவில்லை. இரண்டு நாட்கள் கழித்து போன் செய்து தனக்கு திருமணம் நிச்சயமான செய்தியை சிவாவிடம் சொல்லிவிட்டு பதிலேதும் கேளாமல் தொலைபேசியின் தொடர்பை துண்டித்தாள் கவிதா.
————————————————————————–
நான்கு மாதம் ஓடிவிட்டது.கவிதா திருமணம் முடிந்து அமெரிக்கா சென்றுவிட்டாள்.
எப்பொழுதாவது அவளிடமிருந்து மின்னஞ்சல் வரும். சிவாவிற்கு பிடிக்குமென்று நிறைய பறவைகள் புகைப்படம் அனுப்புவாள். அவ்வப்போது சில கவிதைகளும்.
ஒரு வருடம் கழித்து தனக்கு குழந்தை பிறந்திருப்பதாக ஒரு மின்னஞ்சல் அனுப்பி இருந்தாள் கவிதா.
நாட்கள் நகர்ந்ததில் மெல்ல குறைய ஆரம்பித்தது மின்னஞ்சல். குழந்தையை கவனிப்பதில் பிஸியாக இருப்பாள் என்றெண்ணி சிவாவும் அவளை தொடர்புகொள்ள வில்லை.
இரண்டு வருடம் கழித்து ஒருநாள் சிவாவின் தொலைபேசி சிணுங்கியது.
“ஹலோ சிவா ஹியர்”
“ஹலோ”… மென்மையாக ஒரு பெண்குரல்…
“நீ…ஹேய் கவி! …கவிதா ரைட்?” சந்தோஷமாய் கேட்டான் சிவா.
“ம்ம்… கவிதாதான் பேசறேன்..நல்லா இருக்கியா சிவா?
“நான் நல்லா இருக்கேன் கவி, நீ எப்போ ஸ்டேட்ஸ்ல இருந்து வந்தே?,இப்போ எங்கே இருக்கே”
“போன மாசம்தான் வந்தேன் சிவா,நீ ப்ரீயா இருந்தா இன்னைக்கு சாயங்காலம் மெரினாவுல சந்திக்கலாமா?”
“ஓ கண்டிப்பா, 5 மணிக்கு மீட் பண்ணலாம் கவி” அவள் அலைபேசி எண்ணை குறித்துக்கொண்டு தொடர்பை துண்டித்தான் சிவா.
ஜன்னல்வழியே எங்கோ உருகும் ஒரு குயிலின் சத்தம் சன்னமாய் கேட்டது.
————————————————————————–
மெரினா.
சரியாக ஐந்து மணிக்கு கடற்கரை வந்துவிட்டான் சிவா.
பத்துநிமிடம் கழித்து வந்தாள் கவிதா. கையில் குழந்தையுடன்..வான் நிற சுடிதார். முடியின் நீளம் குறைந்திருந்தது.நெற்றியில் மிகச்சிறியதாய் ஒரு பொட்டு.
முகத்தில் அழிக்க முடியாத சோகம். கண்கள் தூங்கவில்லை என்பதை கண்ணோர கறுப்புக் கோடு உணர்த்தியது.
“என்னாச்சு கவி? ஏன் இப்படி ஒரு சோகம் உன் முகத்துல? வாட் ஹாப்பண்ட்?” பதட்டத்துடன் கேட்டான் சிவா.
“எல்லாமே முடிஞ்சு போச்சு சிவா. ஆபீஸ் போயிட்டு வர்றேன்னு போனவர் திரும்பவே இல்லை. கார் விபத்துல இறந்துட்டார்..” அதற்குமேல் பேசமுடியாமல் பார்வையை எங்கோ திருப்பி அழுகையை கட்டுப்படுத்த முயன்றாள் கவிதா. சிறிது இடைவெளிவிட்டு தொடர்ந்தாள்..
“ஒண்ணரை வயசு பச்சக் குழந்தைய வச்சுகிட்டு எப்படி வாழப்போறேன்னு தெரியல சிவா”…உதடுகள் துடிதுடிக்க மெல்லிய குரலில் சொன்ன கவிதாவை
பார்க்க முடியாமல் கடல்பார்த்தான் சிவா.
சிறிது நேரம் பேசிவிட்டு பிரிந்துவிட்டார்கள். கடலின் இரைச்சல் சத்தம் கதறி அழுவதாக தோன்றியது சிவாவிற்கு.
————————————————————————–
இரவு 10 மணி.
சிவாவின் மனசு முழுவதும் கவிதாவின் சோகமுகம் நிறைந்திருந்தது.
காதல் பறவைகளின் கூண்டுக்குள் வெறித்திருந்தன சிவாவின் கண்கள்.
அந்தக் கூண்டை சுற்றிவிட்டான் சிவா. சத்தமிட்டு கத்த ஆரம்பித்தன
காதல் பறவைகள் இரண்டும்.
சிவாவின் மனத்திரையில் விரிய ஆரம்பித்தன சில பழைய காட்சிகள்.
1.கவிதா சொல்லட்டும் என்று காத்திருந்து அவள் சொல்லாமல் காலம் நகர்த்திய
காதலை,இனியும் பொறுக்க முடியாது என்று தானே சொல்லிவிட சென்ற அன்றுதான் கவிதாவின் திருமண செய்தி கேள்விப்பட்டான் சிவா.
2.திருமணத்திற்கு முன் எவ்வளவோ முயற்சித்தும் அவனால் கவிதாவிடம் தன் காதலை சொல்ல முடியாமல் போனது.
3. கவிதாவின் திருமணத்தன்று தற்கொலைக்கு முயன்று, முடியாமல் சில நாட்கள் பைத்தியமாய் சுற்றினான் சிவா.
4.அமெரிக்கா சென்றுவிட்ட கவிதாவை இனி சந்திக்கவே முடியாது என்று நினைத்தபோது அலுவல் காரணமாக அமெரிக்கா சென்றுவந்தான் சிவா.
5.தற்செயலாக கவிதாவின் கணவனை சந்தித்தபோதுதான் அந்த எண்ணம் சிவாவின் மனதில் தோன்றியது.
“சிவா சாப்பிட வாப்பா” அம்மாவின் குரல்கேட்டு தன்னிலைக்கு வந்தான் சிவா.
தட்டில் அவனுக்கு பிடித்த புறாக்கறி பரிமாற பட்டிருந்தது.
மொட்டைமாடியின் ஓரத்தில் வைக்கப்பட்டிருந்த கூட்டில் தன் ஜோடியைக் காணாமல் தவித்து,சத்தமிட்டுக்கொண்டிருந்தது ஒரு வெள்ளைப்புறா.