விஜயா

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: December 24, 2021
பார்வையிட்டோர்: 8,837 
 
 

(1970ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

சர்வ சாதாரண குடியானவர்களையே மிகுதியர்கக் கொண்டிருந்த அந்தக் கிராமத்துக்கு, மருத்துவமனை வசதி ஏற்படுத்திக் கொடுத்த மகா நுபாவர்களை எத்துணை பாராட்டினாலும் தகும்.

ஆனால் துரதிர்ஷ்ட வசமாக அந்தத் கிராமத்து மருத்துவமனைக்கு உண்மையான தொண்டு மிக்க ஒரு டாக்டரோ – ஒரு நல்ல தாதியோ வந்தமையவில்லை.

மிக நீண்ட காலமாக நிலவி வந்த இந்தக் குறையினைத் தீர்ப்பதற்காக நேர்த்தியான ஒரு தாதி மட்டும், வரப்பிரசாதம்போல் அந்த அமைதியான குக்கிராமத்துக்குக் கிடைத்தாள்.

சுமார் ஐந்தரையடி உயரம் மிக்க அந்தத் தாதியின் பெயர் வத்சலா. அவள், இன்றைய இளைஞர்களின் மன மோஹன் கனவுகளிலே ஏகாதிபத்தியஞ் செலுத்தக் கூடிய “அப்சரஸ்” என்பது உண்மை தான். என்றாலும், மிக இளம் வயதிலேயே ஏதோ ஒரு மாபெரும் பொருளை இழந்துவிட்ட சோகத்துடனேயே – ஏக்கத்துடனேயே – அவளின் தோற்றமிருந்தது.

ஒருவரிடமும் அதிகமாகக் கதைகள் வைத்துக்கொள்ளாத அந்தத் தாதி, ‘தான் உண்டு; தன் பணி உண்டு’ என்ற மனப்பான்மையோடு செயற்பட்டு வந்தாள்.

எவ்வளவு தான் ஒதுங்கிப் போனாலும் சில சந்தர்ப்பங்களில் கடவுளாகப் பார்த்து நல்ல உள்ளங்களை இணைத்துவிடுகிறான் அல்லவா?

அத்தகைய ஒரு அன்புத் தொடர்பு தாதி வத்சலாவுக்கு ஏற்பட்டது. அப்படிக் கிடைத்தவளோ, இந்துமதி என்ற தோழி. அவள் மிக விரைவிலேயே வத்சலாவின் வாத்சல்யத்திற் குரியவளானாள்.

இந்துமதி வத்சலா குடியிருந்த வீட்டுச் சொந்தக்காரரின் உறவுப் பெண்.

2

அன்று போயா நாள் மாலை. ஒருசில காலங்களே வத்சலா தன்னோடு நெருங்கிப் பழகியபோதும் ஏதோ ஒரு துயரச் செய்தியை வத்சலா தனக்குள்ளேயே புதைத்து வைத்திருப்பதனை இந்துமதியால் புரிந்துகொள்ள முடிந்தது.

பல நாட் கேட்கவேண்டுமென நினைத்திருந்த கேள் வியை அந்த இனிய மாலையிலே கேட்டாள் இந்துமதி.

“அக்கா வத்சலா! உங்கள் வாழ்வில் நேர்ந்த மஹத்தான துக்கச் செய்தியை என்னிடம் எவ்வளவு காலந்தான் மறைத்துவைக்க உத்தேசம்?”

“என்ன இந்து? அப்படி என்ன செய்தியை?”

“அக்கா! நான் உங்கள் உடன் பிறவாத் தங்கையை ஒத்தவள்; நண்பியாய் உள்ளவள். உங்களை ஆட்டிப் படைக்கின்ற அந்தத் துயரச் செய்தியை என்னிடத்தே சொல்லி ஆறுதல் பெற முடியாதா?”

வத்சலா விரக்தியாகச் சிரித்தாள்.

“ஆறுதல்! இந்த ஜென்மத்தில் நான் பெறமுடியாத ஒன்றின் ஞாபகத்தை ஏற்படுத்துகிறாய்”

“ஏன் அக்கா அப்படிச் சொல்கிறீர்கள்? என் வரையில் ஆறுதல் அடைய முடியாத துக்கமென ஒன்றுமே கிடையாதென நான் நம்புகிறேன்.”

“இந்து நீ நம்புவாய்! சாதாரண துயரச் செய்திகளிலிருந்து எவருமே ஆறுதல் பெற முடியும். ஆனால்?”

“சொல்லுங்கள் அக்கா”

ஆறுதலே பெற முடியாத துயரம் என்னைப் புற்று நோய் போற் பற்றியுள்ளதே!

“அக்கா நீங்கள் புதிர் போடுகிறீர்கள். உங்கள் வாழ்வையே வெறிச்சோடிப் போகச் செய்த சேதியை எனக்குச் சொல்லுங்கள்”

“என் அன்பான இந்து! சமாதானமே அடைய முடியாத அந்தச் செய்தியை உன்னிடம் நான் சொல்கிறேன். அதுவே ஒரு சோகக் காவியமடி.”

இந்து ஆவலோடு வத்சலாவைப் பார்த்தாள்.

3

நான் பள்ளியிலே படிக்கின்ற காலத்திலே எத்தனையோ சிநேகிதிகளைப் பெற்றேன். ஆனால், ‘பள்ளிச் சிநேகிதம் பள்ளிப்படலை வரை’ என்ற கூற்றுக்குச் சான்றாகவே அவை அமைந்தன. ஆனால்? அந்த ஒருத்தி!

ஆ! என் இன்பமான விஜயாவே! உன் கதையைத் தானடி. இதோ என் எதிரே இருக்கிற புதியதோழி இந்துவிடம் இன்று சொல்லப்போகிறேன். விஜயா! அது தான் அவள் பெயர்.

அவள் எஸ்.எஸ்.சீ. வகுப்பிலே என்னோடு ஒன்றாகப் படிக்க ஆரம்பித்தாள்.

மேனா மினுக்கித் தன்மைகளை விருத்திசெய்யப் பிரபத்தனிக்கும் மன ஓட்டங்கள் – லேட்டஸ்ட் சினிமாக்காரிகளாகத் தம்மைக் கற்பனை செய்து கொள்ளும் அசட்டுத் தனங்கள் – பாழாய்ப்போன பாடத்திட்டக் கல்வி சப்பல்கள்’ இத்யாதி அம்சங்கள் தானே இந்நாள் மாணவிகளின் பொது லட்சியங்கள்; வாழ்க்கைக் கனவுகள்!

ஆனால், விஜயா இந்த அபத்தப் போக்குகளுக்கு மாறானவள்.

“அடி வத்சலா! இந்த உலகையே அன்புக் கோயிலாக்க வேண்டுமடி. வீரத்துறவி விவேகானந்தரின் விரிந்த கனவுகள் ஈடேற வேண்டுமடி. எமது பெண்கள் அன்னை சாரதாதேவிபோல் தூய்மை பெற வேண்டுமடி. நிவேதிதாவின் பாகுபாடற்ற மனநோக்கை நாம் உருவாக்கிக் கொள்ள வேண்டுமடி. கவியரசி சரோஜினிதேவியின் அஞ்சாமை எம்மாதர்க்கு முதற் தேவையடி!”

இப்படியெல்லாம் விஜயா என்னிடம் ஆரம்பத்திலேயே அலட்டிய பொழுது –

“சரி, சரி. இது அங்கொடைக் கேஸ்தான்” என்று எனக்குள்ளேயே நான் எண்ணிக்கொண்டேன்.

“நவில் தொறும் நூல் நயம்போலும் பயில் தொறும்
பண்புடையாளர் தொடர்பு”

“போகப் போகத் தெரியும் – இந்தப்
பூவின் வாசம் புரியும்”

திடீரென வள்ளுவப் பெருந்தகையின் உயரிய குறள் ஒன்றும், கவிஞர் கண்ணதாஸனின் இனிய திரைப்பாடலின் இரு வரிகளும் நினைவுக்கு வருகின்றன:

படிக்கப் படிக்க நன்னூல் நயம் தருவது போல் பழகப் பழகவே விஜயாவின் நட்பின் நயம் தெரிந்தது.

அந்தச் சுகந்த மலரைப் போகப் போகத்தான் என்னாற் புரிந்து கொள்ள முடிந்தது. நாளடைவில் நாம் நட்புக்கே உதாரணமானவர்களாக ஆகிவிட்டோம்.

“அடியே வத்சலா! நாம் நித்ய கன்னிகளாகவே நிலமிசை வாழ்வமடி”

“எல்லாப் பெண்களுமே தம்மீது ஆதிக்கம் செலுத்தி, தம் காதலைப் பெற வல்ல ஆண்களைச் சந்திக்கும் முன்பு வரை இப்படித்தான் கூறிக்கொள்கிறார்கள்.”

“போடி மண்டு! இந்த விஜயாவைப் பாரேன்; இவள் எப்போதுமே எண்ணித் துணிந்து கருமமாற்றும் திண்ணிய நெஞ்சம் படைத்தவளடி.”

என் விஜயாவை எனக்குத் தெரியாதா? சாட்சாத் கடவுளானவரே வந்து,

“வத்சலா நீ வா என்னோடு” என அழைத்தாலுங்கூட “படைத்தவரே பொறுத்தருள்க. என் விஜயாவைவிட்டு விட்டு உம்மோடு நான் வரவா?” இப்படியான ஒரு பதிலைச் சொல்லிக் கடவுள் முகத்திலேயே கரி பூசியிருப்பேன்.

பள்ளி நேரங்களில் எச்சமயத்திலும் நான் விஜயாவோடுதான் இருப்பேன்.

பள்ளி விடப்போவதனை அறிவிக்கும் ‘மணி’ அடிக்கக் கல்லூரிப் பியூன் எட்வேட் விரைகையில்,

“கர்த்தரே! இந்தப் பாழாய்ப் போகிற எட்வேட்டைச் சாத்தான் பக்கம் சாய்த்து விடுமய்யா” என்று வேண்டிக்கொள்வேன்.

ஒரு நாள் எம் கல்லூரி மாணவிகளும், மாணவர்களுமாக ஒரு நீண்ட ‘சுற்றுலா’ போக முடிவு செய்தோம்.

அந்தச் சந்தர்ப்பத்தில் என் வீட்டாரிடம் பண வசதி மிகக் குறைவாக இருந்தது. ஆனபடியால் இறுதிநேரம் வரைக்கும் எனக்கு ‘சுற்றுலா’வில் கலந்துகொள்ளக்கூடிய சூழ்நிலை இருக்கவில்லை.

ஆனால் என் உயிர்த் தோழியான விஜயா இதனைச் சகிப்பாளா?

தன் வீட்டாருக்குத் தெரியாமல் தன் மென் விரலிடமிருந்து அழகு பெற்றுக்கொண்டிருந்த மோதிரத்தையே நாற்பத்தைந்து ரூபாவிற்கு அடைவு வைத்தாள் அவள்.

நான் நீண்ட பயணங்கள் செய்து பழக்கப்பட்டவள் அல்ல. சிறுவகுப்புகளிலே படிக்கின்றபோது எமது உபாத்தியாயர்கள் ஏதோ ‘சந்திர மண்டலப் பயணம்’ என்பது போற் பரபரப்பை ஏற்படுத்தி விட்டுப் பணத்தையும் மேல்மிச்சமாக வசூலித்து யாழ்ப்பாண நூதனசாலை, கோட்டை, யாழ். சோப் தொழிற்சாலை இவற்றைக் காண்பித்துக் ‘கரடி விட்ட’ அநுபவங்களையே என்னாற் பிரயாண அநுபவங்களாகப் பெறமுடிந்தது.

அன்று காலை –

எங்கள் நீண்ட சுற்றுலா ஆரம்பமானது. ‘சவர்லே’ பஸ் ஒன்றிலே நாம் எம் பயணத்தை ஆரம்பித்தோம். எமது பாதுகாப்புக்கு எமது செலவிலேயே ஆசிரியைகள் இருவரும், ஆசிரியர்கள் இருவரும் உடன் வந்தார்கள்.

“தேவி ஸ்ரீ தேவி – உன்னைத் தேடி அலைகின்றேன்” ஆண் பிள்ளைகள் ஒருவர் மாறி ஒருவர் கழுதைக் குரவில் கத்துகிறார்கள் என்றால் இந்தப் பெண்களுக்கு என்ன வந்தது?

“அழகு ரசிப்பதற்கே அறிவு கொடுப்பதற்கே – இந்த வாழ்க்கை வாழ்வதற்கே”

கூத்து ஆரம்பமாகிவிட்டது. வம்புக் கதைகள் கட்டு மீறிய ஆர்ப்பாட்டங்கள் இவற்றை என்னால் சகிக்கவே முடியவில்லை. விஜயாவைப் பார்த்தேன்; அவள் நயன நகை செய்தாள்.

சுற்றுலா சென்று ஒருமாத காலம் ஆகியிருக்கும்.

4

தற்செயலாக விஜயாவின் கட்டுரைக் கொப்பியைப் புரட்டிக்கொண்டிருந்த நான், அதன் இடையிற் கிடந்த கடிதம் ஒன்றினைப் படிக்க நேர்ந்தது.

“அன்புத் தெய்வமே!

என் வாழ்வில் நான் காதல் புரிய வேண்டிய சந்தர்ப்பம் ஒன்று வருமென நிச்சயமாக எச்சமயத்திலும் நினைத்தது கிடையாது. என் உயிர்த்தோழியான வத்சலாவிடம் கூட ஒரு சந்தர்ப்பத்தில்:

“கல்யாணமே எமது வாழ்வில் வேண்டாமடி
நித்ய கன்னிகளாகவே நிலமிசை வாழ்வமடி”

எனப் புகன்றது என் நினைவில் மலர்கிறது. என் காதல் துரையே! உமது சந்திரிகா வதனம் – பிரேமக் கதைபேசும் கண்கள் – ராஜ கம்பீரம் மிக்க உமது நடை – இவைகள் தானய்யா என்னைக் கொல்லாது கொல்பவை”.

கடிதத்தைத் தொடர என்னால் இயலவில்லை.

அடத் தெய்வமே! என் பிரிய சகியா இப்படி மாறி விட்டாள்? விஜயா இந்த விஷயம்பற்றி என்னிடம் மூச்சுக்கூட விடவில்லையே! கடுஞ்சினத்துடன் அவளிடம் நான் கேட்டேன்.

“வத்சலா! வாழ்க்கை என்பதே அநுபவப் பள்ளி தானே? ஒவ்வொரு அநுபவங்களும் புதுப்புது மாற்றங்களைப் பிறப்பிப்பதில் ஆச்சர்யமொன்று மில்லையே.”

இப்படிச் சொல்லி, தான் தேவிதாஸன் என்பவனைக் காதலிப்பதாகவும், அவனது பிரமாத அழகு தன் ஆத்மாவைக் கைதியாக்கிவிட்டதாகவுஞ் சொன்னாள்.

காலம் கடுகிச் சென்றது.

அன்று என் விஜயா சோக சித்திரமாக இருந்தாள் இடையறாது அழுதமையாற்தான் போலும் வகுப்பில் வந்தும் விக்கித்துக்கொண்டிருந்தாள்.

பத்து மணி குறுகிய இடைவேளை வந்தது. இப்போது நானும் அவளுமே வகுப்பறையில் இருந்தோம். என் கண்மணி என்னைக் கட்டிக்கொண்டு அழுதாள். ஆ! என் னாற் தாங்கமுடியவில்லை. .

“அன்புக்கும் உண்டோ அடைக்குந்தாள்” எனப் பகன்ற வள்ளுவரின் குறளுக்கீடாக எந்தக் கொம்பனால் அநுபவ உண்மையைப் பெய்யமுடியும்?

“விஜயா நீ அழாதே! என் சர்வ தியாகங்களும் உனக்காகவே!”

“என் பிரிய வத்சலா! என் நம்பிக்கைக் கோட்டை இடிந்த தடி. என் காதற் சொப்பனங்கள் கருகிப் போச் சுதடி. தேவிதாஸன் என்னை உதறிவிட்டாரடி.”

ஐயோ! என் இதயம் கொதித்தது. “அட, மடக் கட வுளே! இன்னமும் நீ ஆண்வர்க்கத்தை அழிக்காமல் இருக்கிறாயா?”

“சாதாரண பெண்கள், சாதாரண ஆண்களிடம் ஏமாறுகிறார்கள். அடியே விஜயா! புத்தி சாதுர்யம்மிக்க இலட்சியவாதியான நீயுமா?” என்னாற் பேசமுடியவில்லை. தொண்டை அடைத்தது. நான் அழுதேன்: அவளும் அழுதாள்.

5

விஜயாவையும், தேவிதாஸனையும் இணைத்து விட முயன்ற என் முயற்சிகள் வீணாயின. அவன் பள்ளிக் கூடத்தைவிட்டே – ஊரைவிட்டே போய் விட்டான். கொழும்பிலே தன் சிற்றப்பா வீட்டிலே அவன் தங்கியிருப்பதாக ஒரு இடைக் கேள்வி.

விஜயாவின் பழைய காந்தி – சுறுசுறுப்பு இவையெல்லாம் அவளிடமிருந்து விடைபெற்றுச் சென்றுவிட்டன.

எத்தனை கலகலப்போடு உலவித் திரிந்த என் இன்பக் கண்மணி விஜயா எப்படி மாறிவிட்டாள்.

அன்று மாலை வீடு திரும்பும்போது விஜயா சொன்னாள்:

“அடியே வத்சலா! எனது அப்பாவித் தாயையும் வெளியே முரட்டுப் பேர்வழியாகத் தன்னைக் காட்டிக் கொள்ள முயற்சித்தாலும் உள்ளே பரிசுத்தமான அன்பை என் மீது தேக்கிக் கிடக்கும் என் தந்தையையும், என் ஆருயிரே உன்னையும் நான் கலக்காமலேயே ‘மின்னியதைப் பொன்னென’ நம்பி ஏமாந்து விட்டேனடி.”

“தயங்காதே விஜி! வாழ்க்கையைச் சோலையாக்குவதும், பாலையாக்குவதும் இதயமே. நீ புது வாழ்வைத் தொடங்க வேண்டும். அந்தக் காமுகன் தேவிதாஸன் மட்டும் என் எதிரே இப்போது இருந்திருப்பானேயாகில்…”

“வத்சலா அவரை அப்படிச் சொல்லாதே!”

“விஜி! ‘சிறுமைகண்டு பொங்குவாய்’ என நீ இரு தயத்தில் வைத்துப் பூஜிக்கிறாயே கவி பாரதி அவரே பாடியிருக்கிறார். உலுத்தர்களின் உன்மத்த செயல்களை எல்லாம் பொறுப்பதென்பது சத்யத்துக்குச் சமாதி எழுப்பும் முயற்சியடி. சரி; அது போகட்டும். என் பிராண தோழியே! உன் கடந்த கால அனுபவங்களை மறந்துவிடு. புதிய கனவுகளை நெஞ்சேற்றிப் போதெலாம் களித்திரு”.

விஜயா மௌனமாகச் சென்றாள்.

அடுத்த தினம் நான் பள்ளி போன போது பேரிடி எனக்காகக் காத்துக்கிடந்தது.

“அடி வத்சலா! உன் விஐயா” ‘என்றெக்ஸ்’ அருந்தி விட்டாளடி!”

ஐயோ! வானம் இடிந்தது. வையகம் இருண்டது. ஆழ்கடல் ஆர்த்தது. அகமே எரிந்தது. சாய்ந்தது. உவகை பறந்தது. நிலவு வீழ்ந்தது. நிம்மதி அழிந்தது.

இனி என்ன வாழ்வு? இனி என்ன உலகம்?

விஜயா தற்கொலை செய்து கொண்டாள்.

என்னுயிரோடு கலந்தவள் காலன்பாற் சென்றாள். அ

ழுதேன்; அரற்றினேன்.

அதோ! என் ராஜாத்தி கிடத்தப்பட்டிருக்கிறாள்.

சதா இலக்கியம்…இலக்கியம் எனப் பித்தாய்ப் பிதற்றிக்கொண்டிருக்கும் அவள் இதழ்கள் குவிந்து கிடந்தன.

“நானே பாரதி கண்ட புதுமைப் பெண்” என்ற ஞானச் செருக்கோடு உலவித் திரிந்த இலட்சியத் தாரகையான விஜயாவே! நீ ஏனடி இறந்தாய்? பாலையில் விட்டென்னை ஏனடி பறந்தாய்?

முடிந்தது. எல்லாமே முடிந்தது.

பூ விழிப் பார்வை; புன்னகை வதனம்; காமனுங் கண்டு ஏங்கும் கச்சித வடிவம்; யாவுமே சாவில் நித்ய சாந்தியைக் கண்டது.

6

இது தானடி இந்து, விஜயாவின் கதை. தூய்மைமிக்க அந்தக் காவியக் கன்னி நிச்சயமாகப் புனர் ஜென்மம் எடுப்பாள் எனக் கருதுகிறேன். அந்த இன்பமயமான கைங்கர்யத்தைச் சர்வவல்லமை மிக்க கடவுள் விரைவாகவே புரியட்டும்”

தாதி வத்சலா தன் நீண்ட கதையை முடித்தாள்.

கவல்கின்ற நெஞ்சோடு கதை கேட்ட இந்து,

“வத்சலா! உங்கள் தோழி விஜயா தெய்வ மங்கை அக்கா. அவளின் இழப்பு ஆறுதலே பெற முடியாத இழப்புத்தான்” என்றாள்.

– சௌந்தர்யா பூஜை (இனிய சிறுகதைகள்), முதற் பதிப்பு: ஜூலை 1970, பிரசுரித்தவர்: ஐ.குமாரசாமி, கல்வளை, சண்டிருப்பாய்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *