ரூப் தேரா மஸ்தானா

4
கதையாசிரியர்:
தின/வார இதழ்: கல்கி
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: September 7, 2017
பார்வையிட்டோர்: 23,244 
 

“வாட்? அதெல்லாம் முடியாதுடா. நீ என்ன ஏதாவது திருட்டுத்தனம் பண்றியா?” என்று பதறினான் அந்த வங்கி ஊழியன்.

“இல்லைடா. எல்லாம் என் ·ப்ரெண்டுக்காகத்தாண்டா” என்று என்னைக் காண்பித்தான் அசோக்.

ரொம்ப நேர வற்புறுத்தலுக்குப் பிறகு “ஓகே. பெயரை வைத்து கம்ப்யூட்டா¢ல் அவளது அட்ரஸைக் கண்டுபிடித்துத் தருகிறேன். ஆனா என்னை மாட்டி விட்றாதீங்க” என்று வங்கிக்கு உள்ளே சென்றான்.

நான் தேடும் அந்த அட்ரஸ¤க்கு சொந்தக்காரி என் காதலி. எங்கள் காதலுக்கு வயது 12 மணி நேரம். நேற்று இரவு நடந்த சந்திப்பால் என் காதலியாகி விட்டாள்.

ஹலோ! ‘சந்திப்பு’ என்றவுடன் கன்னா பின்னாவென்று கற்பனை பண்ண வேண்டாம். முழு ·ப்ளாஷ் பேக்கையும் கேளுங்கள்.

நேற்று இரவு 9 மணி. புதிய வேலையில் சேர்ந்து ஆறு மாதமாகப் பழகிப் போயிருந்தது ஊட்டி. குளிருடன் வாக்கிங் போய்க்கொண்டிருந்தேன். லேக் ரோட்டிலிருந்து மேலே ஏறிய சிறிய தெருவில் இருந்த அந்த ஏ.டி.எம்.மை அடைந்தேன்.

கண்ணாடியில் படர்ந்திருந்த பனியைக் கையால் லேசாகத் துடைத்துவிட்டு உள்ளே பார்த்தேன். ஏ.டி.எம்.மில் பணம் எடுக்க முயற்சிக்கும் ஒரு பெண் அந்தப் புறமாகத் திரும்பி நின்றிருந்தாள். சிறிது நேரத்தில் ஏதோ உதவி தேவைப்படுபவள் போல திரும்பி என்னைப் பார்த்தாள்.

என் கண்கள் ஐஸில் வைத்தது போல ஒரு நிமிஷம் உறைந்தன. இப்படி ஒரு அழகா? ஆகா! ஐஸ்வர்யா ராயெல்லாம் இவளிடம் ஆலோசனை கேட்க வேண்டும்.

அவள் கண்களின் குறிப்பறிந்து கதவைத் திறந்து உள்ளே சென்றேன். ‘ட்ரான்ஸாக்ஷன் டைம்டு அவுட்’ என்ற வார்த்தைகள் காண்பிக்கப்பட்டு அவளது ஏடிஎம் கார்ட் வெளியே தள்ளப்பட்டுக் கொண்டேயிருந்தது.

அவள் கண்களில் ஏமாற்றம் கலந்த ஒரு சோகம். பார்க்கப் பாவமாயிருந்தது. உடனே அவளை அப்படியே அணைத்து ஆறுதல் சொல்லவேண்டும் போலத் தோன்றியது. இப்போது என் கார்டை உபயோகித்தேன். சிறிது நேரத்தில் பணம் கிடைத்தது. அவள் கண்கள் வெள்ளைக் காக்கையைக் கண்டது போல ஆச்சரியப்பட்டன.

“இப்ப போட்டுப் பாருங்க” என்றேன்.

ராஜேந்திர குமாரின் கதையில் வருவது போல ‘ஙே’ என்று விழித்தாள். தமிழ் தெரியாதோ? சேட்டு வீட்டுப் பெண்ணாக இருக்கும்.

விரலைக் காண்பித்துப் புரிய வைத்தேன். கார்டை உபயோகித்த அவளுக்கும் உடனே பணம் கிடைத்துவிட்டது. அவளது சிரிப்பில் சூர்யா கையால் ஒரு கோடி வாங்கிய பெண்ணின் சந்தோஷம் தெரிந்தது. அய்யோ! பளீரென்ற அந்த முத்துப் பற்களின் வெளிச்சத்தில் என் கண் கொஞ்சம் கூசியது.

“தேங்க் யூ” என்று சொன்ன அந்த மயிலிறகுக் குரல் அதன்பின் பல நாட்கள் என் கனவுகளில் ஒலிக்கப் போகிறது என்பதை அப்போதே கண்டுபிடித்து விட்டேன். வெளியே போக எத்தனித்தவள் மீண்டும் உதவி தேவைப்படுபவள் போலத் திரும்பினாள்.

“என்ன ஆச்சு?”

கதவைக் காண்பித்தது அவளது பிஞ்சு வெண்டைக்காய் விரல். திறந்து பார்த்தேன். திறக்க முடியவில்லை. ஸ்விட்சை அழுத்தினேன். கார்டை அழுத்தி முயற்சி செய்தேன். ம்ஹூம்… அசைவேனா என்றது கதவு. பலம் கொண்ட மட்டும் இழுத்துப் பார்த்தேன். கைதான் வலித்தது.

சொல்லிவைத்தாற்போல வெளியே “ஜோ”வென்று மழை பொழிய ஆரம்பித்தது. இந்த மழையில் யாரும் வரமாட்டார்கள் என்பது நிதர்சனமானது. தவிர அந்தத் தெருவிற்கு ஒரு பக்கம்தான் வழி. மறு பக்கம் ஒரு எஸ்டேட்தான் இருக்கிறது. எனவே ஆள் நடமாட்டம் எப்போதுமே இருக்காது.

நான் அவளைப் பார்த்தேன். அவளும் என்னைப் பார்த்தாள். அவள் பார்வையில் ஒரு மானின் மிரட்சி. நானும் கலவரப்பட்டது போலக் காண்பித்தாலும் என் கண்களுக்கு சந்தோஷத்தை மறைக்கத் தெரியவில்லை.

ஊட்டி குளிர். ஏ.டி.எம்.மில் தனியாக நானும், அவளும் மட்டும். சுற்றிலும் யாரும் நெருங்கமுடியாத அளவுக்கு பலமாக மழை. என் மனதுக்குள் ஒளித்து வைத்திருந்த சந்தோஷத்தை அவள் எப்படித்தான் கண்டுபிடித்தாளோ? அவள் கண்களில் பயத்துடன் ஒரு மூலையில் பல்லியாக ஒட்டி நின்றாள்.

இருந்தாலும் நான் நல்லவன் என்பதை நிரூபிக்க வெளியில் பார்த்தேன். பலம் கொண்ட மட்டும் “ஹெல்ப்” என்று நான் கத்திய குரல் அந்த மழைத்தண்ணீரைப் போல எங்கோ காணாமல் போனது. எங்கே போனார் வாட்ச்மேன்? மழைக்கு எங்காவது ஒதுங்கி நிற்கிறாரோ?

எனக்குக் கோபம் வந்துவிட்டது. நாம் ஒன்றுமே செய்யாவிட்டாலும் இந்தப் பெண்களுக்கு மட்டும் எப்படி சந்தேகம் வருகிறது? போகட்டும். எதற்காக நடிக்க வேண்டும்? உண்மையிலேயே நன்றாகப் பார்ப்போம் என்ற நினைப்புடன் அவளை என் கண்களால் அடிப்பது போல பார்த்தேன்.

தனது பர்ஸில் ஏதோ தேடினாள். செல் ·போனைத் தேடுகிறாள் என்று புரிந்தது. உடனே என்னிடம் ஹிந்தியில் கேட்டாள்:

“ஜரா மொபைல் தோ”

நான் கோபத்தில் இருந்ததால் தருவதற்கு மனம் வரவில்லை.

“நோ பேலன்ஸ்” என்றேன்.

கிட்டத்தட்ட இருபது நிமிடங்கள் ஆளுக்கொரு மூலையைக் குத்தகைக்கு எடுத்துக் கொண்டு பேசாமல் இருந்தோம். மழையின் தீவிரம் குறைந்தபோதிலும் இன்னும் நிற்கவில்லை. கலவரம் படிந்த கண்களுடன் இருந்த அவளைப் பார்க்கப் பாவமாக இருந்தது.

“ஹலோ! ஐ ஆம் வாசு. வாட் இஸ் யுவர் நேம்?” என்றேன்.

பதில் இல்லை. இன்னும் பயமோ?

பிறகு அவளை சிரிக்க வைக்க நினைத்து, ஏ.டி.எம். இயந்திரத்தைப் பார்த்து அமிதாப் பச்சனின் குரலில் “கம்ப்யூட்டர் ஜீ” என்று அடித் தொண்டையில் மிமிக்ரி செய்தேன். அவள் கண்களில் லேசாக மகிழ்ச்சி.

“யூ லைக் ரஜினிகாந்த்?” என்றேன்.

அவளால் சிரிப்பை அடக்க முடியவில்லை. சிரித்தே விட்டாள். அப்பாடா! ஒரு வழியாக சிரிக்க வைத்துவிட்டேன்.

“யூ நோ ஏக் துஜே கே லியே மூவி? இதே மாதிரி லி·ப்டில் மாட்டிக்குவாங்க தெரியுமா?”

“ம்…”

“மேரே ஜீவன் சாத்தி ப்யார் கியே ஜா…” என்ற கமல் பாட்டுப் பாடினேன்.

“ஹெல்ப் கரோ. முஜே பாஹர் ஜானா ஹை” என்று சீரியஸாகப் பேசினாள்.

“புரியலை. எனக்கு ஹிந்தியில சினிமாப் பாட்டு மட்டும்தான் தெரியும்”

ச்சே! அப்பா 5 வருடத்திற்கு முன்னாலேயே ஓயாமல் சொன்னார், “ஹிந்தி படி” என்று. அதைப் படிக்காமல் போனது எவ்வளவு தவறு என்று இப்போதுதான் உணர்கிறேன். அவள் பேசுவது எதுவும் புரியவில்லை. ஆனால் வெளியே போக முடியவில்லையே என்ற கலவரம் மட்டும் அவள் கண்ணில் தெரிந்தது.

அவளை சந்தோஷப்படுத்த மொபைல் ·போனில் எம்.பி.3 ஆல்பத்தை ஆன் செய்தேன். தூம் படத்தைக் கிளிக் செய்து “தூம் மச்சாலே தூம் மச்சாலே தூ” பாட்டிற்கு டான்ஸ் ஆடினேன். பிறகு அவளைக் கண்களால் ரசித்துக் கொண்டே “ரூப் தேரா மஸ்தானா” பாடினேன். சிரித்தாள்.

அதன் பிறகு பாதி சைகையிலும், பாதி ஆங்கிலத்திலும் அருகருகில் உட்கார்ந்து கொண்டு பல ஜோக்குகளைப் பா¢மாறிக் கொண்டோம்.

“ஐ லைக் யூ வாசு”, என்றாள் அவள் புன்னகையுடன்.

“நாம் க்யா?” என்று எனக்குத் தெரிந்த ஹிந்தியில் கேட்டேன்.

“சோனா ஷர்மா”

மழை முழுவதுமாக விட்டிருந்தது. முதன்முறையாக மழையோடு நான் கோபித்துக் கொண்டேன். நாங்கள் உள்ளே நுழைந்து கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் ஆகியிருந்தது.

தூரத்துச் சாலையில் வாகன விளக்குகள் தெரிய ஆரம்பித்தன. அதில் ஒரு வண்டியில் ஏ.டி.எம். வாட்ச் மேன் வந்தே விட்டார். எங்களைக் காப்பாற்றுவதாக நினைத்து நாங்கள் ஒரு மணி நேரமாகக் குடியிருந்த வீட்டின் கதவை சாவியால் திறந்து விட்டார்.

“இந்தக் கதவு அடிக்கடி இப்பிடித்தாங்க ஆகுது” என்றார்.

நான் ஏனோ அவரை முறைத்தேன். என் சோனா என்னை விட்டுப் பிரியப் போகிறாள். நாங்கள் வெளியே வந்த அடுத்த நிமிடம் ஒரு பெண்மணியும், சிறுமியும் எங்களை நோக்கி வந்தனர். அவர்கள் சோனாவின் அம்மாவும், தங்கையும் என்பதை அந்த ஜாடையும், நிறமுமே சொன்னது.

மூவரும் ஏதோ ஹிந்தியில் பேசிவிட்டு, உடனே என்னை விட்டு தூரமாகப் பயணித்தார்கள்.

திடீரென்று சோனா மறுபடி ஓடி வந்தாள். என்னிடம் வந்து ஏதோ சொல்லிவிட்டு மின்னலாக மறைந்தாள். அந்த வார்த்தைகள் எனக்குப் புரியாவிட்டாலும் உடனே ஏடிஎம் ரசீதின் பின்னால் அந்த வார்த்தைகளைத் தமிழில் எழுதிவைத்துக் கொண்டேன்.

ஹிந்தி தெரிந்த என் நண்பன் அசோக்கை அந்தக் குளிர் இரவிலேயே சந்தித்தேன்.

“நெஜம்மாவே அவ இதைத்தான் சொன்னாளா?” என்றான்.

“ஆமாடா. அப்புறம் நான் எப்பிடி எழுதுவேன்? எனக்கு ஹிந்தி தெரியுமா?”

“டே மச்சான். ‘மே தும்ஸே ப்யார் கர்த்தா ஹ¥ம்’னு சொல்லியிருக்காடா”

“டே மொக்க போடாத. தமிழ்ல சொல்லு”

“அவ உன்னை லவ் பண்றாளாம்டா”

“நெஜம்மாவா?”

என் கால்கள் பனியில் மிதந்து கொண்டிருந்தன. அந்த நிமிடத்திலிருந்து சோனா என் முழு நேரக் காதலியாகி விட்டாள்.

அவளது அட்ரஸைத்தான் இப்போது அசோக் தன் ·ப்ரண்ட் மூலம் எனக்கு வாங்கித் தந்திருக்கிறான். எண்.19, விகாஸ் நிலையம், ரேஸ் வியூ ரோடு என்ற அந்த அட்ரஸை அடைந்தோம். அங்கு ஒரு வயதான அம்மாளைத்தான் பார்த்தோம்.

“அவுங்களா? வீட்டைக் காலி பண்ணி ஒரு வருஷம் ஆச்சு. எங்கே போனாங்கன்னு தெரியாது. கார்டன் க·பே பக்கம் ஏதோ சின்ன சப்பாத்தி ரெஸ்டாரன்ட் வெச்சிருக்கிறதா சொன்னாங்க.”

அலைந்து திரிந்து அரை நாள் கழித்து அந்த சப்பாத்தி பார்க்கை கண்டுபிடித்தோம். ஆனால் அங்கே சோனா இல்லை. சப்பாத்திதான் இருந்தது. அசோக் நன்றாக சாப்பிட்டான். அந்த ரெஸ்டாரண்டை இரண்டு நாளாக வேறோருவர் நடத்திக் கொண்டிருந்தார்.

“நீங்க கேக்கற பொண்ணு மும்பையில காலேஜ் படிக்கிறா. லீவுக்கு மட்டும் இங்க வருவா. அவுங்க வீடு மாறி பெங்களூர் போறதாகச் சொன்னாங்க. அங்கதான் அவங்க சொந்த வீடு இருக்கு.”

அவ்வளவுதானா? என் ஒரு நாள் காதல் கதைக்கு “முற்றும்” போட்டுவிட வேண்டியதுதானா? அன்று இரவெல்லாம் தூக்கத்தில் என் சோனா ‘தேரே மேரே பீச் மே’ பாடினாள்.

அடுத்த மூன்று நாட்கள் நான் என்ன வேலை செய்கிறேன் என்று கூட எனக்கு ஞாபகம் இல்லை. லேக் ஏரியாவைச் சுற்றும் குதிரையைப் போல ஊட்டியையே சுற்றினேன். எந்த இடத்துக்கு வழி கேட்டாலும் என்னால் இப்போது சொல்ல முடியும்.

ஸ்டோன் ஹவுஸ் ஹில், கோயில் மேடு, செயின்ட் மோ¢ஸ் ஹில்ஸ் என்று எல்லா இடத்திலும் அலைந்தேன். வெங்கடேஸ்வரா கோவிலில் முதன்முறையாக சாமி கும்பிட்டேன், சோனா கிடைக்கவேண்டும் என்று. அது மட்டுமல்ல. குன்னூருக்கும், தொட்டபெட்டாவுக்கும் கூட போய் வந்தேன்.

அதற்குப் பின் ஒரு நாள் இரவில் திடீரென்று முடிவெடுத்தேன், பெங்களூர் போவதென்று. அசோக்கிடம் சொல்லவில்லை. நடுக்கும் குளிரில் ஸ்வெட்டரை அணிந்து கொண்டு புறப்பட்டேன். பணம் தேவைப்பட்டது. என் ரூமுக்குப் பக்கத்திலிருந்த ஏடிஎம்மில் பணம் எடுக்கச் சென்றவன் பணம் எடுக்காமல் வெளியே வந்தேன்.

சோனாவை சந்தித்த பழைய ஏடிஎம்மை நோக்கி நடந்தேன். ‘பெங்களூர்க்குப் போகும் ஐடியா செண்டிமென்டலாக ஒர்க் அவுட் ஆகும்’ என்று நம்பி அந்த ஏடிஎம்மைத் தேர்ந்தெடுத்தேன்.
அன்று போலவே இரவு 9 மணி. ஆள் நடமாட்டமில்லாத அந்தத் தெருவின் ஏடிஎம்மில் நுழைந்து அதே போல சோனா நிற்கிறாளா என்று உள்ளே எட்டிப் பார்த்தேன். ஏடிஎம் அனாதையாக இருந்தது. உள்ளே சென்ற போது சோனாவின் பெர்·ப்யூம் வாசனை இன்னும் அங்கேயே இருப்பது போல தோன்றியது.

கார்டை உள்ளே தள்ளி பணத்திற்காகக் காத்திருந்த சமயத்தில் சோனா அமர்ந்திருந்த மூலையை என்னையுமறியாமல் என் கண்கள் நோட்டமிட்டன. காதில் ஏதோ ஹிந்திப் பாட்டு கேட்டுக் கொண்டேயிருந்தது. பணத்தை எடுத்துக் கொண்டு வெளியே வந்தேன்.

வெளியில் வந்தவுடன் எதிரில் நான் கண்ட அந்தக் காட்சியை நம்புவதற்கு சற்று சிரமமாக இருந்தது. குட்டி சோனாவைப் போல இருந்த தன் தங்கையை அழைத்துக்கொண்டு சோனா புன்னகையுடன் எதிரில் நடந்து வந்து கொண்டிருந்தாள்.

அதே நேரத்தில் எங்கிருந்தோ வந்த அந்த ஏடிஎம் நைட் வாட்ச்மேன் சொன்னார்: “சார் உங்க பேருதான் வாசுவா? இந்தப் பொண்ணு தினமும் நைட் ஒன்பது மணிக்கு இங்க வந்து உங்க பேரைச் சொல்லி என்னமோ இந்தியில கேக்குது. ஒன்னுமே புரியல. நல்ல வேளை சாமி. இப்பவாவது வந்தீங்களே” என்று புலம்பி விட்டு நகர்ந்தார்.

சோனா என் எதிரில் மிக அருகில் வந்து புன்னகையுடன் நின்றாள். அண்ணலும் நோக்கினேன். அவளும் நோக்கினாள். என்ன பேசுவதென்றே தெரியவில்லை.

ஒருவழியாகக் கஷ்டப்பட்டு, அசோக் சொல்லித் தந்திருந்த அந்த ஹிந்தி வார்த்தைகளைத் தட்டுத் தடுமாறி சொன்னேன்:
“மே பீ… தும்ஸே… ப்யார் கர்த்தா ஹூம்”.

– 10.03.2013

Print Friendly, PDF & Email

4 thoughts on “ரூப் தேரா மஸ்தானா

  1. ட்ரீம்ஸ் வேர்ல்ட் ஐ எண்ஜோயிங் தி ஸ்டோரி … வொந்டெர்புல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *