தொடர்ந்து மூன்று நாள் மழை !
ஊர் முழுக்க மழைவெள்ளத்தால் மூழ்கின அந்த மாலை வேளையில் மாதவன் தனது ஸ்கூட்டரை மீட்க முயன்று தளர்ந்து போனான். அவனை மழையின் தாக்குதலிருந்து காப்பாற்றினாள் தேவதை போல் அவனருகே வந்த வசந்தா!
அருகிலுள்ள தனது இல்லத்திற்கு மாதவனை அழைத்துச் சென்றாள் வசந்தா. ஆடை மாற்றி வசந்தா வருவதற்குள், வரவேற்பற¨யில் அமர்ந்திருந்த மாதவனின் மனதில் தான் எத்தனை கேள்விகள்! “அழகிய வீட்டில் இவள் தனிமையிலா? என்னை ஏற்கனவே இவளுக்கு தெரியுமா? என்ன தான் மனதமிருந்தாலும் இவ்வளவு தைரியுமா? என் மீது இத்தனை கரிசனமா? எனது நெஞ்சார்ந்த நன்றிகளை எப்படிச் சொல்வேன்…” – ஆனால் அத்தனை கேள்விகளையும் தனது மனதிற்குள்ளையே பூட்டி வைத்தான், மாதவன்.
புன்னகையுடன் ஓடி வந்த வசந்தா, மாதவனுக்கு தலை துவட்ட துண்டும் குடிக்க சூடான தேநீரும் கொடுத்தாள்.
மாதவன், “நன்றி…” என்று சொல்லி பேச ஆரம்பித்த சில நொடிகளில் வசந்தா ஒரு ஊமையென்ற உண்மையை அறிந்தான். அவனின் மனது கனத்தது.
பொறியியல் வல்லுனர், வசந்தா, மேற்படிப்பிற்காக அடுத்த நாள் விடியற்காலை லண்டனுக்கு செல்லும் செய்தியை மாதவனுக்கு அவளின் அழகிய எழுத்துக்கள் சொன்னது. மழை நின்றதும் மாதவனை அழைத்துச் செல்ல அவனின் தந்தை கார் எடுத்து வந்தார். தந்தையை அறிமுகப்படுத்தினான், மாதவன். புன்னகை வணக்கமிட்டு காலில் விழுந்து வணங்கினாள் வசந்தி.
மாதவனுக்கும் வசந்திக்கும் ஏற்பட்ட ஏதோ சொல்ல முடியாதொரு உணர்வுகளின் பதட்டத்தில் இருவரும் தங்களின் தொலைபேசி எண்களையோ விலாசங்களையோ பரிமாறிக்கொள்ள மறந்து விட்டார்கள்.
வருடங்கள் பல கடந்து சென்றாலும் இன்றும் மழையைக் காணும்போதெல்லாம் இருவரின் கண்ணீரிலும் அந்த சந்திப்பின் நினைவுகள் புன்னகைக்கிறது!
– என் சுரேஷ் [nsureshchennai@gmail.com] (நவம்பர் 2007)