மரகதச் சோலையே மஞ்சம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: January 2, 2022
பார்வையிட்டோர்: 11,598 
 
 

(1980ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அவள் –

பல் முளைக்காமலும், நாவில் சொல் முளைக்காமலும் பிறந்தவள்.

முதற் பருவத்தில் அவள் ஒரு பேதை; மூன்றாம் பருவத்தில் அவள் ஒரு மங்கை; மாமன் மகன் அவளை மாலையிட்டபோது, அவளொரு மங்கல மடந்தை.

அவள் வதனவட்டம் – ஒரு நிலா நிலம்! அவள் வாயிதழ்கள், சேர்ந்து பிறந்த செம்பவளங்கள். அவள் அழகு நெற்றி, ஓர் அகத்திப்பூ. அவள் அடிவயிறு ஓர் ஆலந்தளிர்.

மேலே கனிந்த கனிகள்; கீழே மலர்ந்த மலர்கள் நடுவில் கட்டுண்ட காய்கள், அதற்கும் கீழே, உப்பு நீரால் அடிக்கடி நனையும் ஓர் இலை, இவை அனைத்தும் நன்கமையப் பெற்ற ஓர் அதிசயக் கொடி போன்றவள் அந்தத் தையல் தாமரை.

அவள் ஆடும்போது மயில்; பாடும்போது குயில்; ஓடும்போது மான்; கூடும்போது ஒரு குளிர்நதி; அதுவும், மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி ஓடும் ஒரு மெல்லிய நதி.

அன்றாடம் அவள் திரட்டி வந்த செய்திகள், இனிக்கும் இலக்கியச் செய்திகள். அடிக்கடி அவள் திறந்து படித்த புத்தகம் திருக்குறள். அவள் பறித்துச் சூடிய பூ, கொடிப்பூ. அவள் பாடிவந்த பண், பழம் பஞ்சுரம்.

ஆசையே அவளுக்குத் தோணி. அகத்துறையே அவளுக்குச் சுகத்துறை.

அவனோடு அவள், பலாப்பழத்தின் நெருப்பு நிறச் சுளைகளைப் போன்று நெருங்கி இருக்கவும், வரகின் சின்னஞ்சிறு கதிர்களைப் போன்று சேர்ந்திருக்கவும் தெரிந்தவள்.

அவளுக்கென்று தனிப்பெருமைகள் பல உண்டெனினும் தற்பெருமை மட்டும் அவளிடம் கிடையாது.

ஒருநாள், அந்த ஒருநாளில் அரைநாள்; அந்த அரை நாளை, முறையாக வகுத்துக் கணக்கிடும் மூன்று பொழுதுகளுள் ஒன்றாகிய மாலைப்பொழுது.

பொன்மாலைப் பொழுதில், செங்கதிர் எங்கே இருக்க வேண்டுமோ அங்கே இருந்தது. பறவைகள் எவற்றை நோக்கித் திரும்ப வேண்டுமோ, அவற்றை நோக்கித் திரும்பிக் கொண்டிருந்தன. தென் பொதிகையிலிருந்து தென்றல் எப்போது புறப்படவேண்டுமோ அப்போது புறப்பட்டு, எப்படி அசைய வேண்டுமோ அப்படி அசைந்து, எங்கெங்குப் போக வேண்டுமோ அங்கங்குப் போய்க் கொண்டிருந்தது.

அவனும் அவளும் அவ்வூரிலுள்ள ஒரு பூஞ்சோலை நோக்கிப் புறப்பட்டனர்.

அவன், அவளுக்குத் தலைவன். ஆதலால், அவன் முன்னே சென்றான். அவளோ அவன் பின்னே சென்றாள். உடன் நிகழ்ச்சிப் பொருளுக்கோர் எடுத்துக் காட்டாக இருவரும் நடந்து சென்றனர்.

அவன் ஏறுநடை காட்டினான். அவளோ வேறு நடை காட்டினாள். அவனது வெற்றி நடையைக்காண; ஆங்கே வேங்கை வரிப்புலிகள் இல்லை. அவளது சிங்கார நடையைக் காண அப்போது ஆங்கே, செங்கால் அன்னங்கள் இல்லை.

அவன் நடந்தான்.

அவள் தொடர்ந்தாள்.

சிறிது நேரத்தில் இருவரும் சோலைவந்து சேர்ந்தனர். அந்த எழில்மிகு சோலையில், எப்பக்கம் பார்த் தாலும் மரகதப்பச்சை மரங்கள், நோக்கும் இடமெல்லாம் பூக்கள். அப்பூக்களின் மீது இசைபாடும் ஈக்கள்.

தேமாவின் பக்கத்திலே புளிமா; புளிமாவின் பக்கத்திலே பொரிமலர்ப் புன்னை மரங்கள். அங்குமிங்கும் மாமரங்கள், ஆச்சா என்னும் மராமரங்கள். இலவசமாக மலர்களைத் தரும் இலவ மரங்கள்.

ஒரு புறத்திலே, யாப்பிலக்கணத்தின் குறியீடு மரங்களான கூவிள மரங்களும், கருவிள மரங்களும், பூப்பிலக்கணத்தைப் பச்சைக் கிளிகளுக்குப் பாடஞ் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தன.

மற்றொரு புறத்திலே, பக்குவமடைந்த பாக்கு மரங்கள். சில கொழுத்த மரங்களின் பக்கத்திலே கொடிகள். அந்தக் கொடிகளின் கக்கத்திலே குமரி அரும்புகள்.

அவனும் அவளும், அந்த இலைமலிந்த சோலையில் உறவாடாமல் உரையாடிக் கொண்டே நடந்தனர்.

அவன் நடையில், வல்லினம் வளர்ந்தது.

அவள் நடையில், மெல்லினம் வளர்ந்தது.

அச் சோலையின் இயற்கை எழிலைக் கண்டு, அவன் அடிக்கடி உள்ளம் உவந்தான். அதனைக் கண்ட மங்கை அவனை நோக்கி ‘அத்தான்’ என்றழைத்தாள். “ஏன்?” என்றான் அவன்.

“அறிஞர் அரசஞ்சண்முகனார் பிறந்த ஊர் எது?” என்று அவள் அவனைக் கேட்டாள்.

அதற்கவன், “மதுரைக்குப் பக்கத்திலுள்ள சோழவந்தான் என்னும் சிற்றூர்தான் அவர் பிறந்த ஊர்” என்று சொன்னான்.

“ஒருகாலத்தில் சோழமன்னன் ஒருவன் அங்கு வந்ததனால் அவ்வூருக்குச் சோழவந்தான் என்று பெயர் வந்ததாகவும்; அவ்வூரிலுள்ள சோலைகளின் எழிலைக் கண்டு அச்சோழ மன்னன் உள்ளம் உவந்த காரணத்தால், அவ்வூருக்குச் சோழனுவந்தான் என்று பெயர் வந்ததாகவும்; சோழனுவந்தான் என்பதே பின்னர் சோழவந்தான் ஆயிற்றென்றும் சொல்லுகின்றார்களே, இது சரிதானா” என்று கேட்டாள்.

“சரிதான்” என்றான் அவன்.

அவள் அவனை நோக்கி “சுகத்தை வெறுக்கும் துறவிகள்கூட சோலையை மட்டும் வெறுப்பதில்லை” என்றாள்.

அதற்கவன், “நீ கூறுவது உண்மைதான் என்றாலும், இரக்கத்தின் வடிவமாக விளங்கிய இராமலிங்க அடிகள், நெட்டை மரச்சோலையைவிட, வெட்ட வெளியைத்தான் பெரிதும் விரும்பினாராம்” என்று கூறினான்.

“ஏன்?” என்று கேட்டாள் அந்த ஏந்திழையாள்.

“மலர் நிறைந்த மரங்களும், மரங்கள் செறிந்த சோலைகளும், சோலைகள் நிறைந்த இடங்களும், உள்ளத்தில் சிற்றின்ப உணர்ச்சியைத் தூண்டிவிடும் என்பதால், அவற்றை அவர் விரும்பவில்லையாம்” என்றான் அவன்.

“அப்படி என்றால், கோடையிலே இளைப்பாற்றிக் கொள்ளும் வகை கிடைத்த குளிர்தருவே! தருகிழலே!” என்று, ஏன் அவர் சோலையின் சிறப்பை இவ்வாறு பாராட்டிப்பாட வேண்டும்” என்று கேட்டாள்.

அதற்கவன், “தான் விரும்பாத ஒன்றைப் பிறர் விரும்பலாம், பிறர் விரும்புவதால், அதைப் பற்றிப் பாடலாம்! இதில் தவறில்லை! பாரசீகத்துப் பெருங் கவிஞன் உமர்கையாம் என்டவர் மது அருந்தியதே இல்லையாம்! அப்படி இருந்தும் அவர் மதுவைப் பற்றிப் பாடவில்லையா?” என்றான் அவன்.

அந்தக் கொடியிடையாள், ஆங்கோர் கொடியில் பெரிய காய்கள் தொங்கிக் கொண்டிருப்பதைக் கண்டு மனிதன் மட்டுந்தான் தினையளவுத் துன்பத்தையும் பனையளவுத் துன்பமாகக் கருதுகின்றான். ஆனால், எந்தக் கொடியும், தன் காய்களின் சுமையைப் பெருஞ் சுமையாகக் கருதுவதில்லை” என்று கூறிக்கொண்டே, அக்கொடியின் மடியிலிருந்த ஓர் அரும்பைப் பறித்து அதனை அவனிடம் காட்டி, அத்தான் இதன் பெயரென்ன? என்று கேட்டாள்.

“உன் பெயர் தான் இதன் பெயர்” என்றான்.

“அப்படி என்றால், இந்தப் பேரரும்பின் பெயரென்ன பிச்சியா?” என்று கேட்டாள்.

“ஆமாம், கோபத்தில் உன் முகம் எப்படிச் சிவக்குமோ அப்படி, மழைநாளில் இதுவும் சிவந்து விடும்” என்றான் அவன்.

“அப்படியா, கோபத்தைப் போல் சிவப்பதனால், இம்மலருக்கு நாம் கோபம், என்று பெயரிட்டால் என்ன?” என்று கேட்டாள்.

“இடலாம். ஆனால், இதே பெயர் ஒருவகைப் பூச்சிக்கும் இருப்பதால், கோபம் என்பதை மாற்றித், ‘தீபம்’ என்று இதற்குப் பெயரிடலாம்,” என்றான் அவன்.

“தீபமா!…தீபம் சுட்டுவிடுமே?” என்றாள் அவள்.

“தொட்டால்தானே!” என்றான் அவன்.

அப்போது, குயில் ஒன்று கூவியது. அந்த இளவேனிற் குயிலின் இன்னிசை விருந்தை இருவரும் ஒன்றாக உண்டனர்.

“வயிற்றுக்கு வேண்டிய உணவை யார் வேண்டுமானாலும் தந்துவிடலாம். ஆனால், செவிக்கு வேண்டிய உணவை, உலகில் ஒருசிலரால் மட்டுந்தான் தரமுடியும்” என்று கூறினாள் அவள்.

“ஆமாம்! அந்த நாளில், திருச்செந்தூர் சண்முக வடிவு; திருநெல்வேலி ரெங்கம்மாள்; திருவிடைமருதூர் பவானி, தஞ்சாவூர் சாரதாம்பாள், பந்தநல்லூர்ராஜாயி, பழனி அஞ்சுகம், கோயம்புத்தூர் தாய், சேலம் கோதாவரி முதலியோர் தம் இனிய குரலால் மக்களை மகிழ்வித்து வந்தனர். அவர்களுள் சேலம் கோதாவரி என்பவள், புகழ் பெற்ற பாடகியாக மட்டுமில்லாமல் சிறந்த கொடைவள்ளலாகவும் விளங்கியவள். அவள் தன் வாழ்நாளில் சம்பாதித்த செல்வத்தையெல்லாம் பல நற் செயல்களுக்கே பயன்படுத்தி வந்தாள். குறிப் பாக, சென்னையில் உள்ள பாலரக்ஷணை சங்கத்திற்கு ஐயாயிரம்ரூபாயும், அன்னதான சமாஜத்திற்கு ஆயிரம்ரூபாயும், பச்சையப்பன் கல்லூரிக்கு நாலாயிரம் ரூபாயும், சேலம் சிவன் கோவில் தேருக்கு நாலாயிரம் ரூபாயும், பக்தர்கள் தங்குவதற்காகச் சேலத்தில் ஒரு பெரிய வீட்டையும் வழங்குமாறு தன் உயிலில் அவள் எழுதிவைத்திருக்கிறாள்” என்று சொன்னான் அவன்.

“இவ்வளவு நன்மைகள் செய்த அவளை இந்த நாடு முற்றிலும் மறந்து விட்டதே” என்றாள், அவள்.

“ஆறாண்டுகட்கு முன் இருந்த பேரறிஞர்களையே மறந்து போய்விட்டநாடு, அறுபத்தேழு ஆண்டுகளுக்கு முன் இருந்த அவளையா இந்நாடு நினைவில் வைத்திருக்கப் போகிறது” என்றான் அவன்.

“சேலம் கோதாவரியை நம் நாடு மறந்துவிட்டாலும் நாம் மறந்துவிடவில்லை” என்றாள் அவள்.

“கனவுகளை நாம் மறந்து போகலாம். ஆனால் நம்முடைய கண்களை நாம் மறந்து விடமுடியாது?” என்றான் அவன்.

“நீங்கள் மிகவும் நன்றாகப் பேசுகிறீர்கள்” என்றாள் அவள்.

“இதற்கெல்லாம் நீ தானே காரணம்” என்றான் அவன்.

அவள் சிரித்தாள். அந்தச் சிரிப்பில், வெண் முல்லைகள் வெளியே தலைகாட்டின.

“கொல்லையிலும் முல்லை; உன் கூந்தலிலும் முல்லை; உன் கோவை இதழ்களிலும் முல்லை” என்றான் அவன்.

நான்கு திசைகளுக்கும் நடுவிலே நின்று கொண்டிருந்தவள், அவன் குறிப்பிட்ட மூவிடத்து முல்லைகளையும் கேட்டுமகிழ்ந்து, இருவிழிகளால் ஒருமுறை அவனை இச்சையோடு நோக்கினாள்.

அப்போது அவனுக்கு ஆசைப்பசி அதிகரித்தது. அந்தக் கருங்குயிலின் ஓசைப்பசி ஓயவில்லை. அதனால் அது, தன் குறடுவாய் திறந்து கூவிக்கொண்டே இருந்தது.

சிறிய கல்லொன்றை எடுத்து, அந்தக் கருங்குயிலின் மீது அவள் விட்டெறிந்தாள். அந்த வரிக்குயில் பளிசசென்று பறந்து சென்றது.

“சொல்லால் அடித்தால் ஓடாதென்று, ஒருகல்லால் அடித்ததும், அந்தப் பாட்டுப்பறவை பறந்துபோய் விட்டது பார்த்தீர்களா?” என்றாள் அவள்.

“கல்லால் அடிக்காமல், நீ கற்கண்டால் அடித்தாலும், அந்தக் குயில் பறந்துதான் போயிருக்கும். ஏனென்றால் கல்லும், கற்கண்டும் அதற்கு ஒன்றுதான்” என்றான் அவன்.

அவன் நடந்தான். அவளும் நடந்தாள்.

ஒரு நெல்லி மரத்தின் இலைப்பந்தலின்கீழ் இருவரும் சிறிதுநேரம் நின்றனர்.

நெல்லி இலையை உற்றுப் பார்த்த அவள் அவனை நோக்கி ‘சிற்றிலை நெல்லி’ என்று சங்கப் புலவர்கள் மிகவும் சரியாகத்தான் பாடியிருக்கின்றனர், என்றாள் அவள்.

“எள்ளின் இலையைவிட, விடதாரிஇலை மிகச் சிறியது. எல்லா இலைகளையும் விட வாழை இலைதான் மிகப் பெரியது. எனவேதான், வாழை இலையை “அகலிலைவாழை” என்று கூறினர் என்றான் அவன்!.

“ஆமாம்! குயில் நெல்லிக் கனியே உண்ணும் என்கிறார்களே; இது உண்மையா?” என்று கேட்டாள்.

“உண்மைதான், ஆனால், மற்றக் கனிகளைவிட மாங்கனியைத்தான் குயில் மிகவும் விரும்பி உண்ணும். மகாவித்வான் மீனாட்சிசுந்தரம்பிள்ளை அவர்களும் மாங்கனியைத் மிகவும் விரும்பி உண்பாராம்” என்று கூறினான் அவன்.

“அப்படி என்றால் இனிமேல் நீங்களும் மாங்கனியை அடிக்கடி உண்ணுங்கள் அத்தான்” என்றாள் அவள்.

“ஏன்?” என்று கேட்டான் அவன்.

“அவரைப்போல் நீங்களும் மகாவித்வானாகி விடலாமல்லவா?” என்று சிரித்துக் கொண்டே சொன்னாள் அவள்.

“மாங்கனியை உண்பதனால் மகாவித்வானாகவோ, தாடி வைத்துக் கொள்வதனால் தந்தை பெரியாராகவோ, ஆகிவிடமுடியாது பெண்ணே” என்றான் அவன்.

“அதிருக்கட்டும், பூங்குயிலை நாம் மாங்குயில் என்று அழைக்கிறோமே? இதற்கென்ன காரணம்?” என்று அவள் அவனைக் கேட்டாள்.

அவன் அவளை நோக்கி, “பலாமரத்தின் நிழலில் படுத்துறங்கிட வேங்கைப்புலி விரும்புவதுபோல, பனை மடலில் கூடுகட்டிட, அன்றில் பறவை ஆசைப்படுவது போல, கருங்குயில் பெரும்பாலும் மாமரத்திலேயே தங்கி இருந்திட விரும்புவதால், நாம் அதனை மாங்குயில் என்று அழைக்கின்றோம். இதனை அறிந்தே, பாவேந்தர். பாரதிதாசன் அவர்களும், ‘மாங்குயில் கூவிடும் பூஞ்சோலை’ என்று பாடியுள்ளார். ‘ரூபச்சித்திர மாமரக்குயிலே’ என்று மற்றொரு புலவரும் பாடியிருக்கிறார். குயில்கள் மாமரத்தில் தங்குவதால் நாம் அதனை மாங்குயில் என்றல்லவா அழைக்கிறோம். ஆனால் வட மொழியாளர்களோ, குயில் தங்குவதற்கு இடந்தரும் மாமரத்தைக் கோகில விருட்சம் என்று அழைக்கின்றனர்” என்றான் அவன்.

அவள், அவனது தமிழறிவைப் பாராட்டினாள்.

அவன், அவளது தனியழகைப் பாராட்டினான்.

வழியில் இருவரும் ஒரு மரத்தடியில் நின்றனர். அவள் அவனை நோக்கி, “இது என்ன மரம், அசோக மரந்தானே?” என்று கேட்டாள்.

“இது அசோக மரமல்ல, ஆச்சாமரம். தாய் வயிற் றிலிருந்து சோகமின்றிப் பிறந்த சக்கரவர்த்தி அசோகன், அசோகமரத்தின் நிழலில்தான் அடிக்கடி உலவுவானாம். அவன் வளர்த்து வந்த அசோக மரங்களை, ஒருநாள் அரண்மனைப் பெண்கள் வெட்டி வீழ்த்தி விட்டார்களாம். அதனை அறிந்த அசோகன், உடனே அவர்களை வெட்டி வீழ்த்தும்படி கட்டளையிட்டானாம்” என்று அவன் அவளிடம் கூறினான்.

அதனைக் கேட்ட அவள் “அவ்வளவு கொடியவனா அவன்! அப்படிப்பட்டவனை நம்நாடு நல்லவன் என்று பாராட்டுகிறதே!” என்றாள் அவள்.

“அவன் செய்த தீமைகளைவிட நாட்டுக்கு அவன் செய்த நன்மைகள் அதிகம். அதனால் அவனை உலகமே பாராட்டுகிறது” என்றான் அவன்.

“அப்படியா! அதிருக்கட்டும், அவன் புன்னை மரங்களையும் தென்னை மரங்களையும் வளர்க்கச் சொல்லாமல் அத்திமரங்களையும், ஆலமரங்களையும் வைத்து, வளர்க்கச் சொன்னான் என்கிறார்களே, அது ஏன்?” என்று அவனைக் கேட்டாள்.

“ஒரு காலத்தில் நம் நாட்டுப் பெண்களுக்குப் பால்வற்றிப் போனாலும் போகலாம் எனக் கருதிப், பால்வரும் மரங்களாகிய அத்திமரங்களையும் ஆலமரங்களையும் அவன் வளர்க்கச் சொல்லியிருக்கலாம் என நான் எண்ணுகிறேன்” என்றான் அவன்.

“நீங்கள் பெண்ணினத்தையே பழிக்கிறீர்கள்” என்றாள் அவள்.

“நான் அவர்களைப் பழிக்கவுமில்லை, வேண்டாமென்று கழிக்கவுமில்லை” என்று கூறிக் கொண்டே அவன் நடந்தான். அவளும் நடந்தாள்.

“சீர்காழி அருணாசலக் கவிராயரைப் பற்றி நீ கேள்விப்பட்டிருக்கிறாயா?” என்று அவன் அவளைக் கேட்டான்.

“நான் கேள்விப்பட்டிருக்கிறேன்” அவருடைய இராம நாடகக் கீர்த்தனைகளையும் நான் படித்திருக்கிறேன்” என்றாள்.

அப்போது அவன் அவளை நோக்கி, “அருணாசலக் கவிராயருக்கு, அசோகனைப் பற்றித் தெரியுமோ, தெரியாதோ, ஆனால் அசோக மரத்தைப் பற்றிய செய்திகள் அவருக்கு அதிகமாகத் தெரியும். அக் கவிராயர், மணலி சின்னையா முதலியார் வீட்டில் கம்பராமாயணச் சொற்பொழிவு செய்து கொண்டிருந்த போது, ஒருநாள் அம் முதலியார் கவிராயரை நோக்கி “இன்று தமிழிலும், வடமொழியிலும் வல்லவரான பூம்பாவைக் குழந்தை முதலியார் இவ்விடம் வருகைதர இருப்பதால் தங்கள் சொற்பொழிவை இன்று நிறுத்தி வைத்தால் நலமாக இருக்கும்” என்றாராம். அதனைக் கேட்ட கவிராயர் “அப்படிப்பட்ட மகாவித்வானுக்கு முன்பாகத்தான் அவசியம் பிரசங்கிக்க வேண்டும்” என்று கூறி-அன்று கம்பராமாயணம் சுந்தரகாண்டத்தில் பொழிலிருந்த படலத்தில் – அசோக விருட்சம் இவ்விதமாக உற்பத்தியாயிற்றென்றும், அது, நெருங்கிய பசுமையாகிய இலைகளை உடைய தென்றும், காலை, மாலை முதலிய எந்த வேளையிலும் தன்னிழல் தன்னைக் காத்து நிற்குமென்றும், அந் நிழலின் கண் வந்தவர்களுடைய சோகத்தைத் தீர்ப் பதனால் அதற்கு ‘அசோகம்’ என்று பெயர் வந்த தென்றும், பெண்கள் உதைத்தால் அது மலருமென்றும், அம்மலர் மன்மத பாணத்தில் ஒன்றென்றும், அது மன்மதனால் காமங்கொண்டவர்களுடைய கண்ணிற் பயன்படுத்தப்படுவதென்றும், அதுபோய் அவர் களுக்கு வெப்பத்தை விளைவிப்பதென்றும், அதன் நிறம் அக்கினி போல்வதென்றும், அதன் தளிர் காய்கனி களின் குணம் இன்னதின்னதென்றும், அம்மரம் இக் காலத்தில் இல்லை என்றும், காணக்கிடைக்காத அவ்வசோகமென்று வேறொரு மரத்தை வழங்கு கிறார்கள் என்றும், அசோக மரத்தின் கன்றுகளை இராவணன் ஒரு தீவிலிருந்து எடுப்பித்து வந்து, காட்டி வனமாக வளர்ப்பித்தான் என்றும், அவ்வனத் திலேதான் சீதை சிறையிலிருந்தாள் என்றும் கூறினாராம்.” இவ்விளக்கத்தைக் கேட்ட் குழந்தை முதலியார் வியப்புற்று நானிதுவரையில் இப்படிப் பிரசங்கித்தவர்களைக் கண்டதும், கேட்டதும் இல்லை என்று வியந்து கூறினாராம்,” என்று சொல்லிக் கொண்டே நடந்தான். அவளும் நடந்தாள். நடந்து செல்லும்போது அவள் சொல்லிக்கொண்டு வந்த கதையைக் கேட்டான். அதற்குப் பின்னர் அவளிடம் ஒரு கனியைக் கேட்டான். கேட்டவுடனே அவள், தன் வலக்கரத்தை அவனிடம் நீட்டினாள்.

“நான் உன்னிடம் கனியைக் கேட்டால் நீயோ உன் கரத்தை நீட்டுகிறாயே?” என்றான்.

“அன்றொரு நாள், ‘நீங்கள் தானே என் இடக்கரத்தை இன்சுவைக் கரும்பென்றும், வலக்கரத்தை வாழைப்பழம் என்றும் வர்ணித்தீர்கள். அதனால் தான் நீங்கள் கனியைக் கேட்டவுடன் நான் என் கரத்தை. நீட்டினேன்” என்றாள்.

அவன் சிரித்தான்.

அவளும் சிரித்தாள்.

“பூவோ நல்லபூ-தொடுக்க முடியாது
முள்ளோ நல்லமுள்-எடுக்க முடியாது
அழைப்போ நல்ல அழைப்பு – போக முடியாது அது என்ன?” என்று அவன் அவளைக் கேட்டான்.

“அது எனக்குத் தெரியவில்லை” என்றாள் அவள்.

“தெரியாத ஒன்றை எனக்குத் தெரியவில்லை என்று, எளிதில் யாரும் ஒப்புக் கொள்வதில்லை. ஆனால் நீயோ, உடனே ஒப்புக் கொண்டுட்விடாய். இந்த நல்ல பண்பு வரவர நம்நாட்டில் வற்றிக்கொண்டேவருகிறது. உனக்கு உடனே புலப்படவில்லை என்றாலும், “உழைத்துப்பார், பின் அடுத்துக் கேள்” என்று கூறினான்.

அவள் சிறிதுநேரம் சிந்தித்தாள். அந்தப் புதிருக்கு விடை அப்போதும் அவளுக்குப் புலப்படவில்லை. பிறகு அவனை நோக்கி “இதற்கு விடை எனக்குத் தெரியவில்லை. நீங்களே சொல்லுங்கள் அத்தான்” என்றாள்.

உடனே அவன் “கொக்கரக்கோ” என்று கூவிக் காட்டினான்.

அவள் சிரித்துக் கொண்டே “சேவல்தானே அது?” என்று கேட்டாள்.

“ஆம்” என்றான் அவன்.

“அத்தான் கோழியை ஞானியோடு ஒப்பிடுகின்றார்களே அது ஏன்?” என்று கேட்டாள்.

“ஞானி, முதலில் தன்னை அறிந்து கொண்டு, தான் அறிந்தவற்றைப் பின்னர் இத்தரணிக்கு அறிவிக்கின்றான். அதுபோலவே, கோழியும் முதலில் தான் விழித்தெழுந்து பின்னர் இத்தரணியில் உறங்குவோரையும் விழித்தெழச் செய்கிறது. எனவேதான் கோழியை ஞானியோடு ஒப்பிடுகின்றனர்” என்று கூறினான்.

மண்படாமல், கடல் நீரில் கண்படும் சூரியனை அவள் அப்போது உற்று நோக்கினாள். தீச்சினம் தணிந்த சூரியனை அவனும் உற்று நோக்கினான்.

“பெட்டைக் கோழி முட்டையிடுவது போல் இந்தச் சூரியனும், எப்போதோ ஒரு காலத்தில் ஒரு முட்டையிட்டதாம். அந்த முட்டைதான் இந்த உலகம் என்று பழங்காலத்தில் வாழ்ந்த பர்மிய மக்கள் நம்பி வந்தார்களாம்” என்று அவளிடம் கூறினான்,

“அப்படி என்றால், அவர்களுக்கு இது ‘கோழிச் சூரியன்’, நமக்கெல்லாம் இது ‘ஆழிச் சூரியன்'” என்று அவள் கூறினாள்.

உடனே அவன் அவளை நோக்கி, “சற்றுமுன் அங்கே அந்தக் குயில் பாடியது. இப்போது இங்கே இந்தக்குயில் பாடட்டுமே” என்றான்.

சிலப்பதிகாரத்தில், காடுகாண் காதையில் வரும் சில அடிகளை, அவள் இனிய பண்கலந்து பாடினாள். அவன் அதனைக் கேட்டு மகிழ்ந்தான். ஒன்று இரண்டு மூன்று முறை அவளைப் புகழ்ந்தான்.

சிலப்பதிகாரத்தில் நூற்று மூன்று பண்களைப் பற்றிய செய்திகள் காணப்படுவதாக அவள் அவனுக்கு நினைவூட்டினாள்.

நமக்குத் திருமணமாகி இன்றோடு நூற்றுமூன்று நாட்கள் ஆகின்றன என்னும் மங்கலச் செய்தியை அவன் அவளுக்கு நினைவூட்டினான்.

அச்செய்தியைக் கேட்டதும் அவள் உள்ளம் தைத்திங்கள் தடாகத்து நீர்போல் குளிர்ந்தது. மணந்த நாளன்று வீங்கிய அவளுடைய தோள்கள் மறுபடியும் வீங்கின.

அவன் அவளுடைய தோள்களைத் தொட்டான். அப்போது அவள், நெல்லின் முனையளவு தூரம் ஒரு காலைத்தூக்கி நிலத்தில் வைத்தாள். அப்போது அவனுடைய ஆசையோ, வில்லின் முனையளவு தூரம் விரிந்து சென்றது.

பிறகு அவளுடைய மனக்குறி கண்டு அவன் நகக்குறி வைத்தான்.

தகுதியற்ற இடத்திலிருந்து மவுனமாக விலகிச் செல்லும் ஓர் அறிஞனைப் போல அவளது ஆடையும், நாணமும் அவளைவிட்டு விலகின.

ஆலமரம் உறங்கிக் கொண்டிருந்தது. அடிமரத்தில் வண்டுகள் உறங்கிக் கொண்டிருந்தன. அவன் மடியில் அவள் உறங்கிக் கொண்டிருந்தாள்.

பராசர முனிவருக்கும் மச்சகந்திக்கும் சிறிய படகொன்று, படுக்கை அறையாகப் பயன்பட்டது போல, ஆதிக்கும் பகவனுக்கும் இலுப்பைத் தோப்பொன்று இன்பவிடுதியாக இருந்ததுபோல, அவனுக்கும் அவளுக்கும் அந்த மரகதச்சோலையே அப்போது மஞ்சமாகப் பயன்பட்டது.

– எச்சில் இரவு, முதற் பதிப்பு: ஜனவரி 1980, சுரதா பதிப்பகம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *