பூனைக்குட்டிகள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: November 4, 2023
பார்வையிட்டோர்: 4,522 
 
 

(2014ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

“எத்தனை தடவை சொல்லி இருக்கிறேன், இதை வெளியே வைக்காதே என” என இத்தாலிய மொழியில் சீறிக்கொண்டே சாரா உள்ளே வந்தாள்.

வெளியே வைக்காதே என அவள் சொல்லியது, எனது வீட்டில் இருக்கும் அழகான மெது மெதுவென இருக்கும் மெத்தை வைத்த சாய்வு நாற்காலி. உள்ளே வரும்பொழுதே கோபக்கனலுடன் வருபவளுக்கு விளக்கம் சொன்னாலும் புரியாது என்பதால், அவளுக்குப் பிடித்த ஏலம் தட்டிப் போட்ட தேநீர் கொடுத்து ஆசுவாசப்படுத்தினேன்.

சாரா வார இறுதிகளில் வருவாள், மாலை அதிக பட்சம் 8 மணி வரை பேசிக்கொண்டிருப்பாள், பின் அவளது வீட்டிற்குப் போய்விடுவாள். கொஞ்சம்

பழமைவாத கத்தோலிக்க குடும்பத்தில் இருந்து வந்தவள் என்பதால், ஹாலிவுட் படங்களில் நடப்பதை எல்லாம் எதிர்பார்க்க முடியாது. சாரா தோழிக்கும் காதலிக்கும் இடையில் ஊசலாடும் ஓர் உறவில் இருப்பவள். எனக்கு அவளைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பது விருப்பம். சில வாரங்களுக்கு முன் நடந்த கீழ்கண்ட உரையாடலுக்குப்பின்னர் அவளுக்கும் அப்படித்தானா என்பது தெரியாது.

“கார்த்தி, உனக்கு பூனை பிடிக்குமா நாய் பிடிக்குமா”

“தூரத்தில் இருந்து பார்க்க, எல்லா விலங்குகளையும் பிடிக்கும்”

“நாய், பூனைகளைப் பிடிக்காத மனிதர்கள் கூட இருப்பாங்களா, பெரிய வீட்டில், பத்து பதினைந்து பூனைகள், நான்கைந்து நாய்கள், சிலப் பறவைகள் என அன்பு நிறைந்த உலகில் வாழ வேண்டும்”

“சாரா, மனிதர்களே சாப்பாட்டிற்கு அல்லாடும் நாட்டில் இருந்து வந்தவன் நான், என்னுடைய அக்கறை எல்லாம் மனிதர்கள் மேல் மட்டுமே … வீட்டிற்குள் விலங்குகளை வைத்து சோறு போட்டு வளர்க்கும் அளவிற்கு மனமும் பொருளாதாரமும் இடம் கொடுக்காது”

நாய்களையோ விலங்குகளையோ கண்டால், அடித்து விரட்டும் கொடுமைக்காரன் கிடையாது நான். ஆனாலும் என் கட்டுப்பாட்டு பகுதியில் மனிதர்களுக்கு மட்டுமே இடம் என்ற உறுதியில் இருப்பவன்.

எனது விடுதி வளாகத்தில் சுற்றிக்கொண்டிருக்கும் ஒரு பூனைக்கு, சமைத்து மிஞ்சிய மீன் வருவல்களைப் நான் போடுவதை

“இவை எல்லாம் கொடுத்தால், பூனையின் வயிறு கெட்டுவிடும்., பூனைக்கு என்று சிறப்பு உணவுகள் கடைகளில் கிடைக்கும்” என ஒரு நாள் கடிந்து கொண்டாள்.

அடுத்த வாரமும் சாரா வரும்பொழுது, மெத்தை வைத்த சாய்வு நாற்காலி வெளியில்தான் இருந்தது. அவள் “கார்த்தீஈஈஈஈ” எனக் கத்தியதில் மகிழ்ச்சி தெறித்தது.

பூனையும் அதனுடன் சில பூனைக்குட்டிகளும் அந்த நாற்காலியில் சுகமாக உறங்கிக்கொண்டிருந்தன. தனது ஐபோனை எடுத்து சுற்றி வளைத்து புகைப்படங்களாக எடுத்துக் கொண்டாள்.

சில மாதங்களுக்கு முன்னர், தேநீர் சிந்தியதால், காய வைக்க வெளியே வைத்த நாற்காலியில், குளிருக்கு இதமாக, மெத்தையின் கதகதப்பில் தாய்ப்பூனை தூங்கிக் கொண்டிருந்தது பார்க்கையில் அவ்வளவு அழகாக இருந்தது. அதனால் ஒவ்வொரு இரவும் பத்து மணிக்குப் பிறகு நாற்காலியை வெளியே வைத்துவிடுவேன்.

என்னுடைய நேரம், சாரா வரும்பொழுது பூனை இருக்காது, நாற்காலி மட்டும் இருக்கும், அவள் கோபம் அடைவாள். அதோடு மட்டுமல்லாமல், இந்த பூனையையும் சில வாரங்களாக ஆளைக் காணவில்லை, இருந்த போதிலும் ஒவ்வொரு இரவும் நாற்காலியை மறக்காமல் வைத்துவிடுவேன். பூனையார் காணாமல் போன காரணம் இன்று விளங்கிவிட்டது. உங்களுக்கு சொன்னதைப்போல, சாராவிற்கும் நாற்காலி வைக்கும் காரணத்தை சொல்லிவிட்டேன். சாராவை இத்தனை மகிழ்ச்சியாக நான் பார்த்ததே இல்லை.

சொல்ல மறந்துவிட்டேன், சாரா இன்றிரவு என்னுடைய அறையில் தான் தங்கப் போகின்றாளாம்.

– வினையூக்கி சிறுகதைகள், முதற் பதிப்பு: 2014, மின்னூல் வெளியீடு:http://FreeTamilEbooks.com, வினையூக்கி செல்வகுமார், சுவீடன்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *