கதிரேசன் காலையிலேயே களத்துமேட்டுக்கு கிளம்பிச் சென்றான்.
அவனுக்கு தற்போது இருபத்தியாறு வயது. பி.ஈ படித்து முடித்ததும் ஒருவருடம் சென்னையில் மென் பொறியாளராக வேலை பார்த்தான். ஆனால் அவனுக்கு அந்தப் பரபரப்பான சென்னை நகர வாழ்க்கை பிடிக்கவில்லை. அங்கு வெள்ளந்தியான மக்கள் குறைவு. பொய்யர்களும், ஏமாற்றுக்காரர்களும்தான் மிகவும் அதிகம். அது நரக வாழ்க்கை.
எனவே வேலையை விட்டுவிட்டு சொந்த ஊரான அம்பாசமுத்திரம் திரும்பி வந்து தற்போது உற்சாகமாக விவசாயத்தில் அதிக கவனம் செலுத்துகிறான். அப்பாவுக்கு உதவிக்கொண்டு இப்போது மனம் சந்தோஷமாக இருக்கிறான்.
கதிரேசன் ஆறடி உயரத்தில், மாநிறத்தில் பார்க்க அழகாக இருப்பான். தினமும் உடற்பயிற்சி செய்து உடம்பை கட்டுமஸ்தாக வைத்திருந்தான். ஒழுக்கமானவன். அவனுடைய படிப்புக்கும்; பணத்திற்கும்; குணத்திற்கும்; அழகுக்கும் பலர் அவனுக்குப் பெண் கொடுக்கத் தயாராக இருந்தனர். அவனுடைய அப்பா சண்முகத் தேவருக்கு ஊரில் நல்ல மரியாதை.
களத்துமேட்டில் அவன் இருந்தபோது வானம் இருட்டிக்கொண்டு வந்தது. வீடு போய்ச் சேருவதற்குள் மழையில் நனைந்துவிடக் கூடாதே என்ற நினைப்பில் மேகக்கூட்டத்தை நிமிர்ந்து பார்த்துக்கொண்டே வாய்க்கால் கரையில் வேகமாக நடந்து சாலைமேட்டில் ஏறிவிட்டான். தூரத்து வேத பாடசாலையில் ஒலிக்கும் வேதபாராயண ஒலி பொதிகை மலைக் காற்றில் கலந்து வந்து கொண்டிருந்தது. ரம்மியமான சூழ்நிலை.
கதிரேசன் அப்போதுதான் கவனித்தான்.
அவன் அணிந்திருந்த வெள்ளைநிற சட்டையின் வலதுதோள் பக்கத்தில் காக்கை எச்சமிட்டுருந்தது. அதைப் பார்க்கவே அவனுக்கு அருவருப்பாக இருந்தது.
சின்ன வயசிலிருந்தே கதிரேசனுக்கு காக்கைகளைக் கண்டாலே பிடிக்காது. அவனின் பள்ளிப் பருவத்தில் கிணற்றடியில் உட்கார்ந்து வடையோ முறுக்கோ தின்று கொண்டிருந்தால், முதல் விருந்தாளியாக எதிரில் வந்து உட்காரும் ஒரே பறவை காக்கைதான். அமைதியான மத்யான வேளையில் அதே கிணற்று மேடையில் உட்கார்ந்து வறட் வறட்டென்று கத்துகிற பறவையும் காக்கைதான்.
கிராமங்களில் காக்கைகள் சாம்பல் நிறத்தில் பார்ப்பதற்கு ஹெல்தியாக இருக்கும். ஆனால் சென்னையில் பெரும்பாலானவை அண்டங் காக்கைகள். அவைகள் பார்ப்பதற்கு சோகையாக, சோனியாக இருக்கும். ஒருவேளை அவைகள் அழுக்கான சென்னையின் அழுக்குகளைத் தின்பதால் அப்படித்தான் அசிங்கமாக இருக்கும்போல…
காக்கைகளை விரட்டுவதற்கென்றே இன்றும் கதிரேசன் தன் வீட்டில் நீளமான குச்சிகள் வைத்திருக்கிறான். ஆனாலும் என்ன? விரட்டும்போதுதான் காக்கைகளும் கோரஸாக இன்னும் பேய்க் கத்தல் கத்தும். எத்தனையோ தடவைகள் அவன் காக்கைகளின் இறக்கைகளால் தலையிலும், காது நுனியிலும் அடி வாங்கியிருக்கிறான். அதனால் தெருவில் நடந்து போகிறபோது ஏதாவது ஒரு காக்கை தாழ்வாகப் பறந்து வந்தால் உடனே தோளில் கிடக்கும் துண்டை எடுத்து தலையில் போட்டுக் கொள்வான்.
சில காக்கைகளுக்கு அவனை அடையாளமே தெரியும். அதனால் அவனைப் பார்த்தாலே கூச்சல் போட ஆரம்பித்துவிடும். இப்போதுகூட அவன் எதிரில் ஒரு காக்கை ரொம்பத் தாழ்வாக பறந்து வந்து கொண்டிருந்தது. அதற்கு அவனை அடையாளம் தெரியாதலால் கத்தாமல் அவனைத் தாண்டிச் சென்றது. ‘குருட்டுக் காக்கை’ என்று நினைத்துக்கொண்டான்.
பொதிகை மலை அடிவாரத்தில் அமைந்திருக்கும் கேசவபெருமாள் கோயிலின் கோபுரத்தை நோக்கி கதிரேசன் கன்னத்தில் போட்டுக்கொண்டான். அவன் தீவிரமான பெருமாள் பக்தன். அவனின் நெற்றியில் சன்னமாக ஒற்றை நாமம் எப்போதும் துலங்கிக் கொண்டிருக்கும்.
கதிரேசன் பெருமாளை வழிபடுகிற வைஷ்ணவ குலத்தில் பிறந்தவன் இல்லை. ஆனால் வைஷ்ணவன் போல் தெரிய வேண்டும் என்ற ஆசை அவன் மனதில் இருந்தது. அவனுடைய சின்ன வயதில் அப்பாவுடன் கேசவ பெருமாள் கோயிலுக்குப் போகும் போதெல்லாம் அங்கு விநியோகம் செய்யப்படும் பிரசாதங்களின் அதீத ருசி அவனைக் காந்தம் போல இழுத்தன.
காலையில் போனால் சுடச்சுட தோசைவடை அல்லது பொங்கல்; மத்யானத்தில் புளியோதரை; சாயந்திரம் சுண்டல்; ராத்திரியில் வெதுவெதுப்பான ருசியில் அப்படி ஒரு தயிர்சாதம். பெரிய இடத்துப்பிள்ளை; தவிர சண்முகத் தேவரின் மகன் என்பதால் எல்லாப் பிரசாதங்களும் கதிரேசனுக்கு சற்று அதிகமாகவே தரப்படும். பெருமாள் கோயிலைத் தவிர வேறு கோயில்களில் விதவிதமான பிரசாதங்கள் எதுவும் கிடையாது என்பதால், சின்ன வயசின் இயல்புப்படி கதிரேசன் பெருமாள் கோயிலோடு கோந்து போட்டு ஒட்டின மாதிரி ஒட்டிக்கொண்டு விட்டான்.
அப்போது அந்தச் சின்ன வயதில்தான் கதிரேசனின் மனதில் அழியாக்கோடு ஒன்று கிழிக்கப்பட்டது.
ஒருநாள் கோயில் பட்டாச்சாரியார் குட்டி கதிரேசனின் நெற்றியில் நாமம் ஒன்றைப் போட்டுவிட்டார். “அம்பி கதிரேசா, இப்போ யார் உன்னைப் பார்த்தாலும் பிராமணாளாத்துப் பிள்ளைன்னுதான் நெனைச்சுப்பா…” நாமம் இட்டுவிட்ட பட்டாச்சாரியார் இப்படிச் சொன்னபோது கதிரேசனுக்கு ஏனோ மிகவும் பெருமையாகக்கூட இருந்தது.
அந்தச் சின்ன வயதில் பிராமணாள் வீட்டுப் பிள்ளை; பிராமணாள் அல்லாத வீட்டுப் பிள்ளை என்ற அர்த்தங்களோ, வித்தியாசங்களோ கதிரேசனுக்குத் தெரியாத விஷயங்கள். கொஞ்சம் வயதாகி வித்தியாசங்கள் தெரிய ஆரம்பித்தபோது, அவனுடைய மனதில் விசித்திரமான எண்ணம் ஒன்று யாருக்கும் தெரியாமல் நீறு பூத்த நெருப்பாக வந்து ஒட்டிக்கொண்டது.
தான் ஒரு பிராமணனாகப் பிறக்காமல் போய்விட்டோமே என்ற ரொம்ப ரகசியமான ஆதங்கம் அவனின் அடிமனதில் ஏற்பட்டுவிட்டது. இன்றும் அவனுக்கு அது ஒரு தீராத விசனம்தான். ஆனாலும் என்ன பண்ண முடியும்? அடுத்த ஜென்மத்திலாவது தான் ஒரு பிராமணனாகப் பிறக்க வேண்டும் என்று பெருமாளை அவ்வப்போது வேண்டிக்கொள்வான்.
ஆரம்ப காலத்தில் பெருமாள் பக்தியாக இட்டுக் கொள்ளப்பட்ட நாமம், பிற்பாடு பிராமண அதுவும் வைஷ்ணவ அடையாளமாகப் போட்டுக் கொள்ளப் படலாயிற்று. நெற்றியில் நேர்த்தியாகத் துலங்கும் நாமமும்; காதுகளில் மின்னும் வைரக் கடுக்கன்களும்; அழகான மீசையிலும்; ஆர்மிக்காரன் போல வெட்டப்பட்ட தலை முடியும் கதிரேசனை ஒரு கம்பீரமான சுந்தர புருஷனாக காட்டின.
வீட்டுக்குத் திரும்பிய கதிரேசனுக்கு, பாளையங்கோட்டையில் கூடப் படித்த நரசிம்ம ஐயங்கார் திருமணப் பத்திரிக்கை அழைப்பு வரவேற்றது. அவன் பிராமணன், அதுவும் வைஷ்ணவன் என்பதற்காக அவனின் நட்பை கதிரேசன் கெட்டியாகப் பிடித்து வைத்திருந்தான்.
கல்லிடைக்குறிச்சியையே மொத்தத்திலேயே அவனுக்குப் பிடித்ததற்கு காரணங்கள் இருந்தன. அங்கு பிராமணர்கள் அதிகமாக இருந்தார்கள் என்பது முக்கிய காரணம். இது ஒரு பெரிய காரணமா என்று பலர் முகத்தை சுளித்துக்கொண்டது உண்டு. அதற்கு அவன் ஒன்றும் பண்ண முடியாது. கதிரேசன் என்ற தனிமனித விஷயம் அது… சமூக விஷயம் கிடையாது.
கல்லிடைக்குறிச்சியில் கதிரேசனுக்குப் பிடித்த மற்றொரு விஷயம், தாமிரபரணி ஆறு. மற்ற எந்த ஊரிலும் தாமிரபரணிக்கு இல்லாத அழகு கல்லிடைக்குறிச்சியில் இருக்கும். அந்த ஊரின் அப்பளமும் அவனுக்கு ரொம்பப் பிடிக்கும். க.குறிச்சி அப்பளத்தை சாப்பிட்டவன், வேறு ஊர் அப்பளத்தை தொட்டுக்கூட பார்க்கமாட்டான்.
எண்ணெய் மிதக்கும் வெந்தய குழம்பில் பொரித்த அப்பளங்களைப் போட்டு; குடமிளகாய் உப்பேரியும் செய்து ஒரு பிடி பிடித்தால் தாராளமாக் ஒரு வண்டிச் சோறு உள்ளே போகும்…! அப்படியொரு ருசி உண்டு வெந்தயக் குழம்பில் போடப்படுகிற அப்பளத்திற்கு. அந்த ஊர் அப்பளத்திற்கு அப்படி ஒரு ருசி இருப்பதற்கு காரணம் தாமிரபரணி தண்ணீர்தான்.
நரசிம்ம ஐயங்கார் கல்யாணத்திற்கு, முந்தைய நாள் மதியமே கதிரேசன் கல்லிடை போய்விட்டான்.
அன்று பிற்பகல் தாமிரபரணிக்கு நீந்தச் சென்றான். ஓடும் தண்ணீரை துவம்சம் செய்து விளையாடினான். கண்கள் சிவக்க படித்துறையில் ஏறி நின்று தலையைத் துவட்டிய போதுதான் அவளை முதன் முதலாகப் பார்த்தான். கையில் குடத்துடன் ஒய்யாரமாக நின்றாள்
ஐந்தரையடி உயரத்தில், அழகான தாவணியில் ரெட்டைச் சடையுடன், பலாச்சுளை நிறத்தில் மாலை வெயிலில் அவள் ஜொலித்தாள். பார்ப்பதற்கு மிகவும் யெளவனமாக இருந்தாள்.
அவளைப் பார்த்த உடனே கதிரேசனுக்கு உடம்பு சிலிர்த்தது. அவனுள் திடீரென்று ஒரு விளக்கு எரிந்தது. இவள்தான், இவள்தான்… இவள்தான் என்னவள்…!
அவளையே வைத்த கண் வாங்காது பார்த்தான். அவளும் அவனை ஒருமுறை இயல்பாகப் பார்த்துவிட்டு திரும்பிக்கொண்டாள்.
அன்று இரவு தூக்கம் வராது அவள் நினைவிலேயே புரண்டான்.
மறுநாள், சற்றும் எதிர்பாராமல் நரசிம்ம ஐயங்கார் கல்யாணத்திற்கும் அவள் வந்திருந்தாள். மயில் கழுத்து நிறப் பட்டுப் புடவையில் மிகவும் அம்சமாக இருந்தாள். கதிரேசன் சொக்கிப் போனான். இவனைப் பார்த்ததும், முந்தைய நாள் ஆற்றங்கரையில் பார்த்ததை நினைவுகொண்டு புன்னகைத்தாள். கதிரேசனும் பதிலுக்குப் புன்னகத்தான்.
முகூர்த்தம் முடிந்ததும் சாப்பிட்டுவிட்டு அம்பாசமுத்திரம் கிளம்ப வேண்டியவன், ஊருக்குப் போகாமல் பிற்பகலில் தாமிரபரணிக்கு பரபரப்புடன் ஏதோ ஒரு எதிர்பார்ப்பில் கிளம்பினான்.
அவளும் அங்கு குடத்துடன் வந்தாள். அவன் எதிர்பார்ப்பு பொய்க்கவில்லை.
கதிரேசன் சற்று தைரியத்துடன் அவளுடன் பேச ஆரம்பித்தான். அவளும் அதே ஆர்வத்துடன் பேசினாள். இருவரும் ஆள் இல்லாத ஒரு படித்துறையில் நெடுநேரம் அமர்ந்து பேசினார்கள். அவளைப்பற்றி நிறைய தெரிந்து கொண்டான். தன்னைப்பற்றியும் சொன்னான். அவள் பெயர் சியாமளாவாம்… கதிரேசனுக்கு சியாமளா மீது மலர்ந்த காதல், அவளுக்கும் மலர்ந்தது…
தான் வணங்கும் கேசவப்பெருமாள் அவளை அறிமுகம் செய்து வைத்ததாக உளமார நம்பினான். சீக்கிரமே சியாமளாவைத் திருமணம் செய்துகொண்டு வாழத் துடித்தான். அவளுக்காக எத்தகைய எதிர்ப்பையும் எதிர்கொள்ளத் தயாரானான்.
திடீரென அவனுக்கு தான் அவளைக் காதலுக்காக காதலிக்கிறோமா அல்லது அவளது ஜாதிக்காக அவளைக் காதலிக்கிறோமா என்கிற சந்தேகம் உண்டானது.
கண்டிப்பாக காதலுக்காகத்தான்… அவளின் ஜாதி தனக்கான கூடுதல் சந்தோஷம் மட்டுமே என்று எண்ணிக்கொண்டான்.
காரணம், சியாமளா ஒரு ஐயங்கார்.