பரத் VS சுசிலா

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: November 30, 2021
பார்வையிட்டோர்: 12,753 
 

கட்டிக்கொண்டிருந்த மேம்பாலத்தில் வெல்டு வைத்து, நெருப்புப் பூக்களை உதிர்த்துக் கொண்டிருந்தார்கள். வெட்டிப் போட்ட மணல் மேடுகளின் மேல் படகுகளாக அசைந்தசைந்து கார்கள் ஊர்ந்தன.

ஓர் ஏராள் அசைவில் பரத்மேல் சரிந்து நிமிர்ந்த சுசிலா, “எத்தனை மணிக்கு வரச் சொன்னார் பரத்…?”

“மணியெல்லாம் சொல்லலை. உடனே வாங்கன்னார். அதனாலதான் உனக்கு பனியன் மாத்தக்கூட அவகாசம் கொடுக்க முடியலை….” என்ற பரத், சாலையின் சிக்கலிலிருந்து மீண்டு, கியர் மாற்றி, உதட்டில் சிகரெட் வைத்துக் கொண்டன். லைட்டர் கிளிக்கிப் பற்ற வைத்த சுசிலா, அப்படியே இந்த மீசையையும் பொசுக்கிடணும்…” என்றாள்

“அதென்ன தப்பு பண்ணிச்சு…?”

“ஹாஸ்டல்ல வெயிட் பண்ணிட்டிருந்தப்போ, கிராஸ் செஞ்ச லாவண்யாகிட்ட என்ன கேட்டீங்க…?”

“நான் ஒண்ணும் தப்பா கேட்டுடலையே சுசி… பெசன்ட் நகர்ல ஒத்தைக் காதுல கடுக்கன் போட்டு, முட்டிகிட்ட கிழிஞ்ச ஜீன்ஸ் போட்டு இருந்த பையனைக் கட்டிப் பிடிச்சிக்கிட்டு யமஹால் போனியே…. அது, உன்னோட பெரியண்ணன் தானே?”ன்னு கேட்டேன்…”

“திமிர்தானே உங்களுக்கு…?”

“இதுல திமிர் என்ன இருக்கு … ? நிஜம்மா அவளோட பெரியண்ணனை நான் பார்த்தது இல்லை. சரி, இதை ஒரு புகாரா உன்கிட்ட இத்தனை அர்ஜெண்ட்டா சொன்ன அவ , என்கிட்ட பதிலுக்கு என்ன கேட்டானு தெரியுமா..?”

“என்ன கேட்டா …?”

“அந்தமாதிரி, நீங்களும் நானும் எப்போ போகலாம்?னு கேட்டா…. ”

“இதுக்குப் பேர்தான் ஹைவோல்டேஜ் புரூடா!”

“இல்லை …. உன் மனசுல பத்து ஓனிக்ஸ் லாரி பொறாமை!”

“ஆமாம்! இவர் பெரிய மன்மத ….”

செல்போன் குறுக்கிட்டு சிணுங்க, பரத் எண் பார்த்து, அவர்தான். “ஹலோ சார். வி ஆர் ஆன் த வே… இன்னும் அஞ்சு நிமிஷத்துல வந்துடுவோம். மண்டபத்துல இருங்க….” என்று வைத்தான். நியான் விளம்பரங்களில் குறைந்த வட்டி, சுலபத் தவணைகளில் கார் வாங்கச் சொன்னார்கள். தவணை கட்ட என்ன வழி என்று சொல்லவில்லை.

“தேவராஜ் எதுக்காக வரச் சொல்லியிருக்கார் பரத்….?”

“தெரியலை…. மற்றவை நேரில்னு சொல்லிட்டாரு…”

“சமீபத்துல கிரானைட் பிஸினஸ்ல அள்ளிக்கிட்டிருக்காரு. இவரோட ஷேர்ஸ் ஆகாசத்துல இருக்கு ஏதோ ஒரு மேகஸின்ல பேட்டி கூடப் பார்த்தேன்…”

“ஆகாசத்துல இருக்கவேண்டிய ஒரு அயிட்டம். இவர் வீட்ல இருக்கிற உபரித் தகவலையும் சேர்த்துக்கோ …”

“அதென்ன …?”

“அந்த ஏஞ்சலுக்கு அபூர்வானு பொருத்தமான பேர் வெச்சதுக்காகவே முதல்ல கைகுலுக்கிடணும் சுசி….”

“அதனாலதான். இப்படி அர்த்த ராத்திரியில் விவரம் கூடக் கேட்டுக்காம புறப்பட்டீங்களா…? எங்க பார்த்தீங்க…?”

“ஃபேஷன் ஷோ…”

“கலந்துக்கிட்டாளா…?”

“காம்ப்பியரிங் செஞ்சா! டாப்ஸ் கழுத்து என்னடா இவ்வளவு அபாயமா இருக்கேன்னு விசாரிச்சு வெச்சேன். ஆனாலும் ஒரு பெரிய சைஸ் ஹேண்ட் மைக்கைக் கையில் பிடிச்சி இருந்ததால், தெரிஞ்சும் தெரியலை…. அந்த அபூர்வாவை யாரோ கடத்திட்டுப் போயிருக்கலாமனு நான் யூகிக்கிறேன்…”

அந்த மெகா சைஸ் கல்யாண மண்டபத்தின் வாசலில் காரை நிறுத்தி இறங்கியபோது, அங்கங்கே உழைப்பாளிகள் தொங்கிக் கொண்டு, சீரியல் விளக்குச் சரங்களைக் கட்டிக் கொண்டிருந்தார்கள். ஓரத்தில், குலை தள்ளிய வாழை மரங்கள் படுத்திருந்தன. லாரியிலிருந்து காய்கறிக் கூடைகள் கைமாற்றி சைடில் மறைந்தன.

உள்ளே நுழைய… ஜிகினா தோரணங்களைத் தூக்கிக் கொண்டு நடந்தார்கள். பிளாஸ்டிக் நாற்காலிகளை வரிசையமைத்துக் கொண்டு இருந்தார்கள். வாசலில் வைப்பதற்கு தெர்மாகோலில் எழுத்துக்கள் வெட்டிக் கொண்டிருந்தவனிடம் யாருக்குக் கல்யாணம்…” என்றான் பரத்.

“என் மகளுக்குத்தான்…” என்று ஓவர்லேப்பில் பதில் சொல்லி, அருகில் வந்து கைகுலுக்கிய தேவராஜ், சஃபாரி அணிந்து மூன்று பேனாக்கள் குத்தியிருந்தார்.

சுசிலாவின் பனியனில் Form convex to concave’ படித்து ஒரு விநாடி அர்த்தம் யோசித்தவர். அது அப்புறம் என்று ஒதுக்கி, “இப்படி வாங்க பரத்…” என்று தள்ளி அழைத்துச் சென்று நாற்காலிகளை இழுத்தார். உட்கார்ந்ததும் வெடவெட ஆசாமி ஒருவர், அந்த நேரத்திலும் டை கட்டி, இரண்டு காகிதக் கோப்பைகளில் காபி எடுத்து வந்து கொடுத்துவிட்டு, நூறு மீட்டர் விலகிச் சென்று நின்று கொண்டார்.

“என்ன சார் பிரச்சனை…?” என்றார் பரத். அவரின் செவ்வக மோதிரத்தில் மொத்தம் எத்தனை வைரக் கற்கள் என்று எண்ண முயன்றபடி.

தேவராஜ், தூரத்தில் உருவாகிக் கொண்டிருக்கும் மணவறை அலங்காரத்தில் பார்வையைப் பதித்து மௌனமாக இருந்தார்.

பரத் காபி குடித்து முடித்து, வித் யுவர் பர்மிஷன்’ சிகரெட் பற்றவைத்துக் கொண்டு, விடிஞ்சா கல்யாணம்… பொண்ணைக் காணலை.. அதானே..?” என்றான்.

“சேச்சே! வீட்ல நிம்மதியா தூங்கிட்டிருக்கா. காலையில் இந்தக் கல்யாணம் நல்லபடியா நடந்து, திட்டமிட்டபடி நாளைக்கு நைட் அவதன் புருஷனோட நியூயார்க் புறப்பட்டுப் போகணும். அதான் என் கவலை !”

“எதுக்குக் கவலை…? விசா வரலையா…? ஏதாச்சும் மாப்பிள்ளைக்கு மொட்டைக் கடுதாசியா…? இல்லை, கெட்ட சொப்பணம் கண்டீங்களா…?”

“அந்த படவா ராஸ்கல், இன்னிக்கு ஜெயில்லேர்ந்து விடுதலையாகியிருக்கான்னு கொஞ்சம் முன்னாடிதான் எனக்குத் தகவல் தெரிஞ்சது….”

“யாரு…? பேரே படவா ராஸ்கலா…?”

“அவன் பேரு ஜெரால்டு! எங்க ஏரியாவுல டூரூவீலர் மெக்கானிக் ஷாப் வெச்சிருந்த ரொடிப் பய… என் பொண்ணு காலேஜுக்குப் போறப்ப வர்றப்ப கலாட்டா பண்ணிட்டிருந்தான். அடிக்கடி தகராறு… லெட்டர் எழுதறது, போன் பண்ணித் தொந்தரவு பண்றதுனு தொல்லை தாங்கமுடியலை….”

“அப்புறம்…?”

“ஒரு தடவை நானே நேர்ல போய் சட்டையைப் பிடிச்சு அடிக்கப் போயிட்டேன். உன் பொண்ணுதான்யா எனக்குப் பொண்டாட்டி னு சவால் விட்டுப் பேசியிருக்கான். கம்ப்ளெயிண்ட் கொடுங்க, ஈவ்டீஸிங் கேஸ்ல உள்ளே தள்ளிடலாம்னு வேண்டிய இன்ஸ்பெக்டர் கூடச் சொன்னாரு . வன்மம் வெச்சு வெளியில் வந்து ஏதாச்சும் பண்ணிட்டா என்ன பண்றதுனு பொறுமையாகப் போனேன். எதேச்சையா, ஒரு அடிதடி கேஸ்ல உள்ளே தள்ளி, ஒரு வருஷம் போட்டுட்டாங்க. நிம்மதி ஆயிடுச்சு..”

“சரி….”

“அந்த படவா ராஸ்கலை நான் சுத்தமா மறந்து போயிட்டேன். அமெரிக்க மாப்பிள்ளை சார்… என் அந்தஸ்துக்குக் குறையாதவங்க…. நாளைக்கு ஒம்போது பத்தரை முகூர்த்தம். மாப்பிள்ளைக்கு லீவு இல்லை . அதனால், நாளைக்கே புறப்படறாங்க…. இப்ப வந்து, அந்தப் பொறுக்கிப் பயலைப் பத்தித் தகவல் சொல்லி பதற வெச்சுட்டாங்க சார்…”

“போன் எதுவும் செஞ்சானா…?”

“இல்லை… இந்தக் கல்யாணத்தை நடக்கவிடாம ஏதாச்சும் கலாட்டா செஞ்சிடுவானோனு எனக்குப் பயம். இதுதான் அவன் போட்டோ…. அவன் இங்கே வந்துடக் கூடாது. எதுவும் நடந்துடக்கூடாது. நீங்க என்ன ஏற்பாடு வேணும்னாலும் செய்யுங்க… எத்தனை லட்சம் செலவானாலும் பரவாயில்லை …. அட்வான்ஸா எவ்வளவு வேணும்…?” தேவராஜ் தலையசைக்க, டை ஆசாமி சின்ன சூட்கேஸோடு ஓடிவந்து திறந்து அவர் பக்கம் நீட்ட… பணம்… மேலும் பணம்! அவசர அவசரமாக அத்தனை ஏற்பாடுகளிலும் இறங்கி, அதிகாலை நான்கு மணிக்கு பாம் ஸ்குவாட் வந்து, மண்டபத்தின் ஒவ்வொரு சதுர சென்டி மீட்டரும் தடவிப் பார்த்தார்கள்.

ஒரே ஒரு நுழைவு வாசல் மட்டும் பயன்படுத்த உத்தரவிடப்பட்டு, அங்கே பிரத்தியேக எலெக்ட்ரானிக் வாசல் நிறுத்தப்பட்டது.

“யாரா இருந்தாலும் இது வழியா நுழைஞ்சுதான் உள்ளே வரணும். கேட்டா, மினிஸ்டர்ஸ்லேர்ந்து பல வி.ஐ.பிஸ் வர்றதால இந்த ஏற்பாடுனு சொல்லுங்க. மக்கள் இப்போ இதுக்கெல்லாம் பழகிட்டதால புரிஞ்சுக்குவாங்க. சூட்கேஸ், பேக் கிஃப்ட் பார்சல் எது எடுத்துட்டு வந்தாலும் ஸ்கேன் செய்யாம அலோ பண்ணாதீங்க.

அங்கங்கே தனது ஏஜென்சி நபர்களை நிறுத்திப் பரபரவென்று உத்தரவுகள் கொடுத்துக் கொண்டிருந்தான் பரத்

சி.சி.டி.வி. காமிராக்கள் எட்டு பொருத்தப்பட்டு, ஒரு அறை கண்ட்ரோல் அறையாக உருமாறி, அங்கே எட்டு மானிட்டர்களிலும் பல ஏரியாக்களின் காட்சிகள் நகர்ந்து கொண்டிருந்தன.

ஏழு மணியிலிருந்து உறவினர்களும், நண்பர்களுமாக வரத் துவங்கி, பார்க்கிங் பகுதியில் கார்களும் ஸ்கூட்டர்களுமாக நிறையத் துவங்கி, அத்தர் போட்ட வித்வான்கள் சந்தனப் பொட்டுகளுடன் இரட்டை நாயனத்தில் வெளுத்துக் கட்டிக் கொண்டிருந்தார்கள்.

கண்ட்ரோல் அறையில் காதுகளில் ஹெட் போன் மாட்டி அமர்ந்திருந்த பரத், உன்னிப்பாக ஒவ்வொரு மானிட்டரையும் நோட்டமிட்டுக் கொண்டிருந்தான்.

ஜெரால்டின் புகைப்படங்கள் பிரதி எடுக்கப்பட்டு, ஸ்டாண்டில் பொருத்தி வைக்கப்பட்டு, பல உதவியாளர்களின் பாக்கெட்டுகளிலும் செருகப்பட்டிருந்தன.

கதவைத் தள்ளி கொண்டு உள்ளே வந்த சுசிலா,

“என்னாச்சு பரத், சிக்கிட்டனா….?” என்று அமர்ந்தாள்.

“இல்லை …. நீ போன விஷயம் என்னாச்சு…?”

“ஜெரால்டோட வீட்டு அட்ரஸ் விசாரிச்சுப் போறதுக்குள்ளே…”

“ஸ்டாப் இட்! மேட்டர் என்ன…?

“அவனோட வயசான அம்மா மட்டும்தான் இருந்தாங்க. நேத்து காலைல ரிலீஸானதும் ஜெரால்டு நோர் வீட்டுக்குத்தான் வந்திருக்கான். எதுவும் பேசலையாம். அவனோட ஃப்ரெண்டு ஒருத்தன் வந்து அபூர்வாவுக்கு நாளைக்கு கல்யாணம் னு தகவல் சொன்னதும், அவனையும் கூட்டிக்கிட்டு வெளியில் போனவன்தான்… இந் நிமிஷம் வரைக்கும் வீடு திரும்பலை.”

“அப்போ கண்டிப்பா வருவான் சுசி. அங்கே….”

“நம்மாளுங்க ரெண்டு பேரை நிறுத்தி வெச்சுட்டேன். அவன் வீட்டுக்குத் திரும்பினா உடனே மடக்கிடுவாங்க. ஆனா, ராத்திரி பூரா வீட்டுக்குத் திரும்பலைன்னா ….”

“ஏதோ பிளான் பண்ணிருப்பான்னுதான் அர்த்தம் வரட்டும்…. அவன் எப்படி வந்தாலும் மடக்கிடலாம். ஒரு சின்ன சந்தேகம் வந்தாலும் ஒரங்கட்டி விசாரிக்கச் சொல்லியிருக்கேன். அறுபது பேர் நம்மாளுங்க இங்கே இருக்காங்க. கொஞ்சம் பேர் சாதாரணமா, கொஞ்சம் பேர் மாறுவேஷத்துல….”

“எந்த அசம்பாவிதமும் நடந்துடாம இந்தக் கல்யாணத்தை நடத்திக் காட்டிடணும் பரத்” என்றால் சுசிலா.

ஒன்பது மணிக்கு மண்டபத்தில் நாற்காலி இல்லாமல் ஓரங்களில் நிற்கத் துவங்கினார்கள். மண்டபத்தின் பார்க்கிங் பகுதியில் இடமில்லாமல் தெரு முழுக்க கார்களை நிறுத்தத் துவங்கினார்கள்.

ஒரு பக்கம் பாண்டு வாத்தியம், இன்னொரு பக்கம் நாதஸ்வரம் என்று சத்தம் நிரப்பி எல்லோரையும் கத்திப் பேச வைத்துக் கொண்டிருக்க, அமெரிக்க மாப்பிள்ளை அய்யர் சொல்லும் மந்திரங்கை உச்சரிக்க சிரமப்பட்டு கடைசி வார்த்தையை மட்டும் சொல்லி அக்னியில் நெய் ஊற்றிக் கொண்டிருந்தான். வயதான உதவி அய்யர் அரிசியில் மஞ்சள் கலந்து அட்சதையாக்கிக் கொண்டிருந்தார்.

கண்ட்ரோல் அறையில் டபிள்சும் மென்று கொண்டிருந்த பரத், மானிட்டர்களை மேய்ந்தபடி, “பட்டுப் புடவைல ஆபூர்வா படு அம்சம்! இல்லையா?” என்றான்.

“இன்னொருத்தன் பொண்டாட்டி பரத்” என்றாள் சுசீலா

“இன்னும் ஆகலையே…. தாலி கட்டற வரைக்கும் சைட் அடிக்கிற உரிமை இருக்கு. அதுக்காக கல்யாணமான பொண்ணுங்களை… ஏய்! இரு! இதோ பாரு….. பாண்டு கும்பல்ல நாலாவதா நிக்கிற ஆளு திருதிருன்ன முழிக்கிறான். ஜெரால்ட் மாதிரியே மூக்கு வந்துட்டேன்.”

பரத் புறப்பட்டுப் போன வேகத்தில் இரண்டே நிமிடங்களில் திரும்பி வந்து, “அவன் இல்லை …. புதுசா சேர்ந்தவனாம். இதான் முதல் கச்சேரி. அந்த டென்ஷன்… சுசி… எல்லோருக்கும் அட்சதை கொடுத்துக்கிட்டிருக்காரே அந்த அய்யர் தாத்தா, அவரோட தாடியை இழுத்துப் பார்த்துட்டு வந்துடறேன், இரு” என்றான். சென்றான்.

திரும்பி வந்து, “யாரைப் பார்த்தலும் சந்தேகம் வருது சுசி. இத்தனை செக்யூரிட்டி அரேன்ஜ்மெண்ட்ஸ் தாண்டி அந்த படவா ராஸ்கல் வருவான்னு எனக்கு நம்பிக்கை இல்லை” என்றான்.

முகூர்த்த நேரம் நெருங்கிக் கொண்டிருந்தது.

அபூவர்வா அழைத்துவரப்பட்டு மணவறையில் அமர்ந்ததும் மாப்பிள்ளை சைடில் புன்னகைத்தான்.

நியூஸ்பிரிண்ட் காகித ரோல்கள் உருட்டி, இலைகள் போட்டு முதல் பந்திக்கு பரிமாறிக் கொண்டிருந்தார்கள்.

தேவராஜின் நிறுவன ஊழியர்கள் அச்சடித்து வாழ்த்து மடல்களை (வலது மூலையில் சாக்லேட் இணைப்பு ) இப்போதே விநியோகித்துக் கொண்டிருக்க….

தட்டில் வைத்து வந்த மாங்கல்யத்தை முதல் வரிசை பெரிய மனிதர்கள் மட்டும் ஆசீர்வதித்து அனுப்ப… சாப்பிடாமல் திரும்பிப் போகும் ஜனங்களுக்கு கொடுக்க தாம்பூலப் பைகளை தயாராக வைத்துக் கொண்டு ரிசப்ஷன் கும்பல் காத்திருக்க….

அய்யர் உள் கையில் ரோமன் எண்கள் கொண்ட வாட்சில் நேரம் பார்த்துக் கொண்டு தலையை ஆட்டியபடி தேவராஜிடன் ஒரு மொன் ஆமோதிப்பு பெற்றுக் கொண்டு, “சகல வாத்தியம்!” என்றார்.

தட்டிலிருந்து தாலியை எடுத்து நீட்டி, மந்திரம் சொல்லி, அமெரிக்க மாப்பிள்ளை வாங்குவதற்கு முன்பாக திடீரென்று தாலியைப் பிடுங்கி அவசரமாக அபூர்வாவின் கழுத்தில் கட்டிவிட்டார் தாடி வைத்த வயதான உதவி அய்யர்!

அத்தனை பேரு உறைந்து போய்… வாத்தியங்கள் நின்று போய்…. தாடியை உருவிப் போட்டான் ஜெரால்ட்.

“அடப்பாவி! நீ சுப்புணி அனுப்பி வெச்ச ஆளில்லையா?” என்றார் பெரிய அய்யர்.

ஜெரால்ட் மைக்கை எடுத்துக் கொண்டு, “எல்லாரும் என்னை மன்னிக்கணும். நானும் அபூர்வாவவும் உயிருக்குயிரா காதலிக்கிறோம். போலீஸுக்குப் பணம் கொடுத்து என் மேல் பொய் கேஸ் பேட்டு உள்ளே அனுப்பினார் இவளோட அப்பா. இந்தக் கல்யாண ஏற்பாடுகளுக்கு ஒத்துழைக்கிற மாதிரி நடிச்ச அபூர்வா ஜெயில்ல என்னை சந்திச்சுப் பேசினா. ரெண்டு பேரும் சேர்ந்து போட்ட திட்டம்தான் இது. இது மணமகளோட முழு சம்மதத்தோட உங்க எல்லோரட ஆசீர்வாதத்தோட நடந்திருக்கிற கல்யாணம்தான்” என்றான்.

அபூர்வா எழுந்து அப்பாவைப் பார்த்து, “என்னை மன்னிச்சிடுங்கப்பா. அவர் சொல்றது எல்லாம் உண்மைதான்” என்றாள்.

பல பெரிய மனிதர்கள் ரொம்ப நேரம் பேசி சமானதானப்படுத்திய பிறகு அவர்களை வேறு திசையில் பார்த்துக் கொண்டு ஆசீர்வதித்தார் தேவராஜ்.

காரில் மூன்லைட் டிடெக்டிவ் ஏஜென்சி நோக்கி வந்து கொண்டு இருந்த பரத்திடம் சுசிலா, “ச்சே! தேவராஜ் நாக்கைப் பிடுங்கிக்கிற மாதிரி எத்தனை கேள்விகள் கேட்டார். நூறு தடவை ஸாரி சொல்லி வழிஞ்சிங்களே… ரொம்ப அவமானம் பரத் ” என்றாள்.

“பரவாயில்லை சுசி… என் கவனத்துக்கு வந்தும் இந்தக் கல்யாணத்தை நடத்த அனுமதிச்சேன்னு உண்மையைச் சொன்னா நம்ம மேல கேஸே போட்டுடுவாரே…”

“என்ன சொல்றீங்க?”

“அந்த அய்யர் காதுல பிரஸ் டைப் கடுக்கனைப் பார்த்ததுமே எனக்குச் சந்தேகம். தனியா கூட்டிட்டுப் போய் விசாரிச்சேன். எல்லாம் சொல்லி கால்ல விழுந்துட்டான். அலங்காரத்தில் இருந்த அபூர்வாவை சந்திச்சும் எல்லாம் உண்மைன்னு உறுதிப் படுத்திக்கிட்டேன். நமக்கு ஒரு கேஸ் தோற்கறதை விட ஒரு நிஜமான காதல் தோற்கறது கொடுமை சுசி. அங்கேயே ரெண்டு பேரையும் ஆசீர்வாதம் பண்ணிட்டேன்.”

“ச்சே! என்கிட்ட கூட சொல்லாம்….”

“அபூர்வாவை அணைச்சு ஆசீர்வாதம் செஞ்சதைக் கூடத்தான் சொல்லலை.”

“ஏய்…?”

அவள் அவன் புஜத்தில் குத்தியதில் கார் கோணலாக ஓடி அவசரமாக சமாளித்து நேரானது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *