நெஞ்சில் நெருப்பு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: December 16, 2022
பார்வையிட்டோர்: 4,107 
 
 

(1978ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

பினாங்கு மலைக்குச் செல்லும் கம்பிவண்டி நிலையத்தில் சொல்லி மாளாத கூட்டம். பழனிச்சாமி ஒரு முடிவிற்கு வந்தவராய் வரிசைப் பிடித்து நின்றவர்களோடு ஒருவரானார்.

வரிசை பாம்பு போல் வளைந்து பக்கத்தில் இருந்த நான்கைந்து வீடுகளையும் கடந்து போய்க் கொண்டிருந்தது. அருகிலிருந்த மரநிழலில் ஒதுங்கினர் கவிதாவும் அவள் அத்தை பார்வதியும்.

“அத்தை, வேண்டாமென்று சொன்னால் மாமா கேட்கிறார்களா? பாருங்கள் எவ்வளவு கூட்டம்…” கவிதா சலித்துக் கொண்டாள்.

“பரவாயில்லைடா கண்ணு. நீதான் நாளைக்குப் பயணமாகிறாயே! இதையும் பார்த்து விட்டுப் போ…” அத்தை அன்போடு தடவிக் கொடுத்தாள் தன் தமையன் மகளை.

சிங்கப்பூருக்குத் திரும்பப் போவதை எண்ணியதும் கவிதா வசந்தத்தின் வசமானாள்.

ஒருவாரமாக அவள் பட்ட துன்பம் ஓயப்போகிறது. மனப்புழுக்கம் மறையப் போகிறது. பிரிவுத்துயர் நீங்கப் போகிறது. நாளை என்பது இக்கணமாக இருக்கக் கூடாதா?

அமுதன் … அமுதன். அமுதன்.

கம்பிவண்டி மலையுச்சியை நோக்கி ஏறிக்கொண் டிருந்தது. கவிதாவின் சிறகுகள் உடைய குதிரைகள் பூட்டிய எண்ணரதம், சிங்கப்பூரை நோக்கி-தோ பாயோவை நோக்கி இறங்கிக் கொண்டிருந்தது.

மலையுச்சியை அடைந்தனர். அந்த வெளிச்சமான பகல் பொழுதிலேயே குளிர் மிகுந்திருந்தது அங்கு. மழை பனி போல் பொழியத் தொடங்கியது குளிர்காற்று கவிதாவின் உடலைத் தழுவி முத்தமிட்டுச் சென்றது. ஒரு வெண்மேகம் அவளை உரசிவிட்டுச்.சென்றது. அவ்வெண்மேகம் அமுதனாக மாறிக் குறும்பு செய்தது. பழனிச்சாமி வளவள என்று அறுத்துக் கொண்டிருந்தார். அத்தையும் தன்கணவனுக்குச் சளைக்கவில்லை. சிட்டுக்குருவிகள் போல் ஆண்கள், பெண் கள், சுற்றுப்பயணிகள். அந்த மலையுச்சி கலகலப்பாய் இருந்தது. ஆனால் அந்தச் சூழ்நிலையிலும் கவிதாவிற்குத் தனிமை…

“வாம்மா, கோயிலில் அர்ச்சனை செய்து விட்டுப் போவோம்…” என்று மாமா கூறியதும் கவிதா கற்பனைத் தேரிலிருந்து பொத்தென்று கீழே விழுந்தாள்.

அந்த மலையுச்சியின் ஒருபுறத்தில் முருகன் கோயில் அழகாக அடக்கமாக இருந்தது. குன்றிருக்கும் இடமெல்லாம் குடியிருக்கும் குமரன் கோயில்! ஐயர் தீபத்தை முகத்தருகே நீட்டினார். அமுதனே தன்னையாளும் தலைவனாய் வர வேண்டுமென வேண்டிக்கொண்டு தீபத்தைக் கண்களில் ஒற்றிக் கொள்ளும் போது அவள் முகத்தில் செம்மை படரலாயிற்று.

அழகிய முகத்தில் தோன்றியிருக்கும் பருக்கள் போல, அவள் அருமையாக வளர்க்கும் ரோஜா பாத்தியில் களை தோன்றியிருந்தது. அவற்றை நீக்கிவிட்டுஅவள் தலைநிமிர்ந்த போது அவன் நின்றுகொண்டிருந்தான். அவளையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டு வேறு நின்றான். இரண்டு நாட்களாக இப்படித்தான் நிற்கிறான், சரியான நேரத்தில். எதிரெதிரே அமைந்துள்ள அடுக்குமாடி வீடு களில் இதுதான் ஒரு வசதி.

முதல் நாளில் கவிதாவுக்கு ஒன்றும் தோன்றவில்லை. ஆனால் இன்று?… அவள் இதயத்தின் மென்மையான மூலையை ஏதோ ஒன்று நெருட ஆரம்பித்தது. கம்பளிப் பூச்சி உடலில் ஊர்ந்தது.

ஒரு வாரத்திற்குப் பிறகு இருவரும் தனிமையில் சந்தித்த போது, அவளால் எதுவுமே பேச முடியவில்லை. அவன் ஏதேதோ சொன்னான். அவள் கண்ணை, மூக்கை, உடலை வர்ணித்துக்கொண்டே போனான். அவளுக்கு வெட்கம் தாங்க முடியவில்லை. “இன்னொரு நாளைக்குப் பார்க்கலாம்…” என்று சொல்லிவிட்டு சிட்டாய்ப் பறந்து விட்டாள். அவனுக்கு ஏமாற்றமாய்ப் போய்விட்டது.

இன்னொரு நாள் மத்தியானத்தில் தன் வீட்டிற்கு வருமாறு சைகை காட்டினான். அவள் தாயார் பகலுணவிற்குப் பின் உறக்கம் போட்டுக் கொண்டிருந்தார். அவனைப் பற்றித்தான் தெரிந்து கொள்ளுவோமே என்ற ஆவலில் அவன் வீட்டையடைந்தாலும், அவன் வீட்டிலுள்ளோர் என்ன நினைப்பார்கள் என்ற தயக்கத்துடன் கதவினருகே நின்று விட்டாள்.

“வா…கவிதா, என்ன தயக்கம்…” அமுதன் அவள் கையைப் பிடித்து உள்ளுக்கிழுத்து கதவைச் சாத்தினான்.

வீடு வெறிச்சோடிக் கிடந்தது. மருந்துக்கு ஒரு பொருள் கூட இல்லை. புதிதாய் வீடு கிடைத்திருக்கும் போலிருக்கிறது. இனிமேல்தான் அவர் பெற்றோர் குடிவர வேண்டும். என்றெண்ணினாள்.

“ஒரு நாற்காலி கூட இல்லையே, உட்காருவதற்கு?…”

“என் கைகள் இருக்கின்றனவே, உன்னைத் தாங்கிக் கொள்ள, அது போதாதா?…” கண்ணைச் சிமிட்டிக் கொண்டே கூறினான் அவன். அவனுள் ஓர்அவலட்சணமான எண்ணம் உருவாகிக் கொண்டிருந்தது.

“உங்கள் பெற்றோர் எங்கு இருக்கிறார்கள்? கூடப் பிறந்தவங்க இருக்காங்களா? எங்கே அவர்களைக்காணோம்!… எப் ..” அவள் தொடர்ந்து பேச வாய்ப்புக் கொடுக்காமல் அவன் வலிய கரம் அவள் வாயைப் பொத்தியது.

“கவிதா, வரலாற்றைத் தெரிந்து கொள்ளும் நேரமா இது?…” என்று கூறியபடி பொறுமை இழந்து அவளை இறுக அணைத்தான். அவன் உடல் நெருப்பாய்ச் சுட்டது. “வேண்டாம்…இதெல்லாம் எனக்குப் பிடிக்காது…”

“கவிதா…”

“விடுங்கள் என்னை…”

அவன் விடுவதாக இல்லை. என்ன மனிதன் இவர்? ஏதாவது ஆசையாகப் பேசுவோம் என்று இல்லாமல். “சே”… வலுக்கட்டாயமாய் அவனைப்பிடித்துத் தள்ளினாள்.

“சரி, சரி…நான் இன்னொரு நாளைக்கு எல்லாரும் இருக்கும் போதே வர்றேன். ம்…ம்… இது சரியில்லை…” என்று கூறி அவனைப் பழித்துக் காண்பித்துவிட்டு திரும்பு கையில், கதவைப் படார் என்று சாத்தினான். அது அவள் முகத்தில் அறைவது போலிருந்தது.

கவிதா வீட்டிற்கு வந்து பத்து நாள்கள் ஆகிவிட்டன. ரோஜாச் செடிக்குத் தண்ணீர் ஊற்றுகிறாள், களைபறிக்கிறாள், நிமிர்ந்து எதிர் வீட்டைப் பார்க்கிறாள். இல்லை…அங்கு அமுதன் இல்லை.

ஆனால், இப்போது அந்த வீடு கலகலப்பாக இருக்கிறது. ஆண்களும் பெண்களும் வருவதும் போவதுமாக இருக்கிறார்கள். ஒரு நாள் பொறுமை இழந்து தன் தாயாரிடமே கேட்டுவிட்டாள்.

“அந்த வீட்டில் புதிதாகக் குடிவந்திருந்தானே ஒரு பிள்ளை, அவன் மனைவி தமிழ்நாட்டிலிருந்து வந்திருக்கிறாள். நல்ல பெண். நான் கூட போய் பார்த்து வந்தேன்…” சம்பந்தமில்லாத கதையைப் போல் பிடிப்பின்றிப் பேசி முடித்தாள் தாய். சம்பந்தப்பட்டவளுக்கு உலகமே இருண்டது.

இடி!…

ஒரே மாதத்தில் பாதி உடம்பாய் மெலிந்து போனாள் கவிதா. அவளுக்கு எதிலுமே பிடிப்பற்றுப் போய்விட்டது. அவளுக்கு இப்போது எல்லாமே பூரணமாக விளங்கியது. அமுதன்—அவன் அவசரம்-அவன் நடவடிக்கை எல்லாமே திட்டமிட்டு நடத்தியவை.

ஒரு தடவை கூட “உங்களுக்குத் திருமணமாகி விட்டதா?…” என்று கேட்டதில்லை அவள். அப்படிக் கேட்க வேண்டுமென்று தோன்றியதில்லை. திருமணமானவர்கள் அந்நியப் பெண்களோடு எப்படி உறவாடுவார்கள்? அவள் தகப்பனார் பிற பெண்களுடன் பேசுவது கூட இல்லை. அப்படித்தான் எல்லாரும் என்று நினைத்துவிட்டாள். பாவம்!

ஒருத்திக்கு உரிமையான பிறகு மற்ற பெண்களை ஏறெடுத்துப் பார்க்குமளவிற்கு – காதல் மொழி பேசுமளவிற்கு-தொட்டு விளையாடுமளவிற்குப் பண்பாடு பாழாகி விட்டதா? கடவுளே, உலகம் எங்கே போய்க் கொண்டிருக்கிறது? நாம் எங்கே போகிறோம்?

நுரைக்குள்ளே கொதிக்கும் பாலாய், கவிதா தன் பெற்றோருக்குத் தெரியாமல் தினசரி குமுறுகிறாள்.

பள்ளிப் படிப்பை முடித்ததும் அவள் வேலைக்குச் செல்ல ஒத்துக் கொள்ளவில்லை கவிதாவின் தந்தை, மகளின் பாதுகாப்பில் அத்துணை கரிசனம், அவருக்கு! வீட்டிற்குள்ளேயே அடைந்து கிடந்து விட்டதால், வெளியுலகத்தின் வண்ணங்களை அவள் அறிய வாய்ப்பில்லாமல் போய் விட்டது.

ஒரு நாள்-

எதிர்பாராத வகையில் அமுதன் முன் நின்றாள் கவிதா, வழியை மறைத்துக் கொண்டு. அவளைப் பார்த்துப் பல மாதங்கள் ஆயின. அவன் அடிவயிற்றில் பட்டாம் பூச்சி பறந்தது. சுற்று முற்றும் கலவரத்துடன் அமுதன் பார்த்துக் கொண்டான். பிறர் பார்த்துவிடப் போகிறார்கள் என்ற அச்சமோ? கவிதா பாதையை விட்டு அசைவதாக இல்லை.

“நான் வீட்டிற்குப் போக வேண்டும்…”

“இப்படி நான் சொன்ன போதெல்லாம் நீங்கள் விடுவதில்லையே. மறந்து போயி விட்டதா?”

“அது…”

“நான் உங்களோடு கொஞ்சம் பேச வேண்டும்…”

“என்ன… எப்போது?…”

“இப்போது… அந்தச் சீனக்கோயிலுக்கு வாருங்கள்…”

“என்ன பேச வேண்டியிருக்கிறது…”

“என் பின்னாலேயே வாருங்கள். வரமறுத்தால், உங்கள் பின்னால் நான் வரவேண்டியிருக்கும். உங்கள் இல்லம் வரை…”

கவிதா வேறு ஒன்றும் பேசத் தேவை இல்லை என்பது போல் விடுவிடு என்று நடந்தாள். அமுதன் மருண்டு மருண்டு பார்த்தபடி அவளைத் தொடர்ந்தான். சீனக் கோயிலை அடைந்து அமுதன்தான் முதலில் பேச்சைத் துவக்கினான்.

“கவிதா, உன்னை அடைய முயன்றேன்; மறுக்கவில்லை. ஆனால் உன்னை வற்புறுத்தவில்லை. என் மீது நீ பழி சுமத்த முடியாது. ஏன்னா, நான் எந்தப் பாவமும் செய்யவில்லை…? அவன் மெதுவாகத் தொடங்கினாலும், முடிக்கும் போது குரலில் உறுதி தொனித்தது.

“கெட்டிக்காரத்தனமாகப் பேசுவதாக நினைப்போ?…”

“கவிதா, நன்றாகச் சிந்தித்துப்பார். நான் எப்போதாவது உன்னைக் காதலிப்பதாகக் கூறி இருக்கிறேனா? கல்யாணம் செய்து கொள்ள உடன்பட்டிருக்கிறேனா? ஒரு போதும் உன்னிடம் போலி உறுதிமொழிகளை நான்கொட்டியதே இல்லை.”

“இதை எல்லாம் நான் கேட்காமலேயே நீங்கள் ஏன் சொல்ல வேண்டும். குற்ற உணர்வுதானே? வேறு என்ன…”

அவன் விக்கித்துப் போனான். கவிதா இப்படி ஒரு வழக்கறிஞர் கேள்வியைக் கேட்டு தன் திருட்டுத்தனத்தை வெளிக் கொணர்வாள் என்று அவன் எதிர்பார்க்கவில்லை.

“உன் உடல்தான் எனக்கு வேண்டும். அதுவும் என் மனைவி வரும்வரைதான் நீ தேவை. இடைக்கால ராணியாக இருந்தால் போதும் என்று அப்போதே சொல்லி இருக்கலாமே? அப்போது இந்த உத்தமக்குணம் என்ன வாயிற்று?…” கவிதா அவனுக்கு மிக அண்மையில் வந்து அழுத்தமாகக் கேட்டாள்.

“அது வந்து…வந்து.. முயன்றேன். முடியவில்லை… அதற்கு வாய்ப்பே இல்லாமல் போய்விட்டது. நீயும் சற்று விழிப்பாய் இருந்…” அவன் முடிக்கவில்லை.

பளார்!…

அவன் தலை சுற்றியது. அவன் கன்னத்தைத் தாக்கியது ஒரு பெண் கரம்தானா? இரும்புக் குண்டு ஒன்று பொறியில் அடித்ததுபோல் கலங்கிப் போனான்.

“பாவி! என்னோடு ஏன் பழகினாய்? ஆசை என்ற விதைகளைத் தூவி காதல் செடியை ஏன வளர்த்தாய்? என் பரிசுத்தமான அன்பு உனக்கு மலிவாகத் தோன்றியதா? வாய்ப்புக் கிடைக்கும் போது அனுபவிப்போம் என்ற அற்பப்புத்திதான் தோன்றியதா? அப்படி ஒரு வேசித்தனம் என் தோற்றத்தில் தெரிகிறதா? நான் ஒரு குடும்பப் பெண்ணாகத் தோன்றவில்லையா? எச்சில் இலையாகத்தான் தோன்றினேனா? சொல். என் முகத்தைப் பார்த்துச் சொல்…”

சீனக்கோயில் மதுரையாய் முழங்கியது. அவளை ஏறிட்டு நோக்கும் சக்திகூட இல்லாமல் ஒரு புழுவாய்க் கூனிக் குறுகி தடுமாறி நடந்தான் அமுதன். கவிதாவின் கண்களை நீர்த் திரையிட்டது.

– 1978, புதிய அலைகள், முதற் பதிப்பு: மார்ச் 1984, தமிழ்ப் புத்தகாலயம், சென்னை.

எழுத்தாளரைப் பற்றிய விவரங்கள் தமிழ் நாட்டில் 1947ஆம் ஆண்டு பிறந்து சிங்கப்பூர் வந்த பொன். சுந்தரராசு, வள்ளுவர் தமிழ்ப் பள்ளியில் கல்வியைத் தொடங்கி, பின்னர் செயிண்ட் ஜார்ஜஸ் தொடக்கப் பள்ளியில் தமது படிப்பைத் தொடர்ந்தார். உமறுப் புலவர் தமிழ் உயர்நிலைப் பள்ளியில் படிப்பை முடித்த பிறகு, தமிழாசிரியர் பணியில் சேர்ந்து முதன்மை ஆசிரியராக உயர்ந்து ஓய்வு பெற்றார். இதற்கிடையே தொலைக் கல்வி வழி சென்னைப் பல்கலைக்கழகத்தில் தமிழ் இலக்கியத்தில் இளங்கலை,…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *